என் மலர்
உள்ளூர் செய்திகள்
- 7ம் தேதி முதல் 20ம் தேதி வரை தமிழகம் முழுவதும் அதிமுக தேர்தல் அறிக்கை குழு பயணம் மேற்கொள்கிறது.
- அதிமுக குழு 10 மண்டலங்களாகப் பிரித்து, 20ம் தேதி வரை சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது.
அதிமுக தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு வரும் 7ம் தேதி முதல் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது.
அதன்படி, 7ம் தேதி முதல் 20ம் தேதி வரை தமிழகம் முழுவதும் அதிமுக தேர்தல் அறிக்கை குழு பயணம் மேற்கொள்கிறது.
அதிமுக குழு 10 மண்டலங்களாகப் பிரித்து, 20ம் தேதி வரை சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது.
பல தரப்பட்ட மக்களின் எதிர்பார்ப்புகள் குறித்த தரவுகளை நிர்வாகிகள் கொடுக்க வேண்டும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அதிமுக தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் விரிவாக தெரிவித்துள்ளது.
- சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் மாநில நிர்வாகிகள், மூத்த தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
- நிர்வாகிகளின் கருத்துக்களின் அடிப்படையில் கிரீஷ்சோடங்கர் தனது அறிக்கையை டெல்லி தலைமையிடம் அளிப்பார் என்று கூறப்படுகிறது.
சென்னை:
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலை சந்திக்க அனைத்து அரசியல் கட்சிகளும் தயாராகி வரும் நிலையில் காங்கிரசுக்குள் விசுவரூபம் எடுத்து உள்ள உட்கட்சி பிரச்சனையும், தி.மு.க.வுடனான கூட்டணி விவகாரங்களும் பெரும்பரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
தி.மு.க. கூட்டணியில் இந்த முறை அதிக தொகுதிகள் வேண்டும். அமைச்சரவையில் இடம் வேண்டும். அடுத்து வரப்போகும் உள்ளாட்சி தேர்தலில் குறிப்பிட்ட சதவீதம் ஒதுக்க வேண்டும் என்று காங்கிரஸ் எதிர்பார்க்கிறது.
இந்த கோரிக்கைகளுக்கு தி.மு.க.விடம் இருந்து உடனடியாக பதிலையும் எதிர்பார்க்கிறது. இது பற்றி கடந்த மாதம் 20-ந்தேதிக்குள் முடிவெடுக்கும்படி காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரீஷ்சோடங்கர் தி.மு.க.விடம் வேண்டுகோள் வைத்தார்.
ஆனால் தி.மு.க. தரப்பில் உடனடியாக பேச்சுவார்த்தை குழு அமைக்க வாய்ப்பில்லை என்றும் தேர்தல் தேதி அறிவிக்கட்டும் என்றும் கூறி விட்டனர்.
வழக்கமாக தி.மு.க. பேசும் போது பேசிக்கொள்ளலாம் என்றுதான் காங்கிரசும் காத்திருக்கும். ஆனால் இந்த முறை விஜய் கட்சி என்ற புதிய வாய்ப்பும் இருப்பதால் அதை பயன்படுத்தி தி.மு.க.வுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறார்கள்.
கூட்டணி விவகாரத்தில் காங்கிரசுக்குள்ளும் இரு வேறு கருத்துக்கள் நிலவுகின்றன. விஜய் கட்சியுடன் கூட்டணி அமைக்கலாம். அது மக்கள் மத்தியில் எதிர்பார்க்கப்படும் கூட்டணியாக இருக்கும். காங்கிரசும் வளர்ச்சி அடைய வாய்ப்பு உண்டு என்கிறார்கள் ஒரு தரப்பினர்.
ஆனால் தேர்தல் அனுபவம் இல்லாத கட்சியுடன் கூட்டணி அமைத்து விஷப்பரீட்சைக்கு தயாராக வேண்டுமா? தி.மு.க. வெற்றிக் கூட்டணி. எனவே அதில் தொடரலாம். கூடுதல் சீட் போன்ற விவகாரங்களை பேசி முடிவு செய்யலாம் என்கிறார்கள் மற்றொரு தரப்பினர்.
இந்த முறை காங்கிரசுக்கு தி.மு.க. 30 தொகுதிகள் வரை ஒதுக்கலாம் என்றும் இது தொடர்பாக தி.மு.க. தலைமையுடன் காங்கிரஸ் தலைவர் கார்கே பேசி உறுதி செய்வார் என்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.
இதற்கிடையில் கரூர் எம்.பி. ஜோதிமணி, ஒரு சிலரின் சுயநலத்திற்காக தமிழக காங்கிரஸ் கொஞ்சம் கொஞ்சமாக அழிவு பாதையில் சென்று கொண்டிருப்பதாக கடுமையாக விமர்சித்தது கட்சிக்குள் புதிய புயலை கிளப்பி இருக்கிறது. ஜோதிமணியின் கருத்துக்கு மற்றொரு எம்.பி.யான மாணிக்கம் தாகூரும் ஆதரவு தெரிவித்து உள்ளார்.
தி.மு.க.வுடன்தான் கூட்டணி தொடர வேண்டும் என்றும் த.வெ.க.வுடன் செல்ல வேண்டும் என்றும் காங்கிரசில் இரு பிரிவாக இருப்பதன் வெளிப்பாடு தான் இந்த புதுப்பிரச்சனைக்கு காரணம் என்கிறார்கள்.
ஜோதிமணியின் விமர்சனத்தை பார்த்து ஆச்சரியப்பட்ட மாநில தலைவர் செல்வப்பெருந்தகை ஒரு மாநில தலைவர் என்ன செய்ய வேண்டுமோ அதை செய்து வருகிறேன் என்றார்.
ஜோதிமணியின் புகாருக்கான பின்னணி காரணம் பற்றி காங்கிரஸ் நிர்வாகிகளிடம் கேட்ட போது, திண்டுக்கல் மாவட்டத்துக்கு உட்பட்ட வேடசந்தூர், ஒட்டப்பிடாரம், பழனி ஆகிய 3 தொகுதிகளை உள்ளடக்கியது ஒரு கட்சி மாவட்டம். இந்த மாவட்டத்தின் தலைவராக ஜோதிமணியின் ஆதரவாளர்தான் நியமிக்கப்பட்டார். தற்போது அந்த மாவட்ட தலைவர் ஜோதிமணிக்கு எதிராக திரும்பி இருக்கிறார்.
அவர் ஜோதிமணி பற்றி தரக்குறைவாக விமர்சித்தது தொடர்பாக அவர் மீது விசாரணை நடத்தி நடவடிக்கைக்காக டெல்லி தலைமைக்கு அனுப்பப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் பி.எல்.ஓ.1 படிவம் ஜோதி மணிக்கு குறிப்பிட்ட நாளுக்குள் சென்று சேரவில்லை. இதனால் பி.எல்.ஓ. 2 நியமிக்க தன்னால் முடியவில்லை என்று குற்றம் சாட்டி உள்ளார்.
வெளிச்சத்துக்கு வந்தது இந்த காரணங்களாக இருந்தாலும் சந்தர்ப்ப சூழ்நிலைகளை சாதகமாக்கி மாநில தலைமைக்கு எதிராக அணி திரள்வதாகவே கூறப்படுகிறது.
இந்த பரபரப்பான சூழ்நிலையில் காங்கிரஸ் மேலிட பொறுப்பாளரும், பேச்சுவார்த்தை குழுவின் தலைவருமான கிரீஷ் சோடங்கர் 2 நாள் பயணமாக இன்று சென்னை வந்தார்.
சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் மாநில நிர்வாகிகள், மூத்த தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையின் போது நிர்வாகிகளை தனித்தனியாக அழைத்து ஒவ்வொருவரிடமும் கருத்துக்கள் கேட்டறிந்தார்.
கட்சிக்குள் எழுந்துள்ள இந்த பிரச்சனைகளுக்கு காரணம் என்ன என்பது பற்றியும் அவர்களிடம் கேட்டறிந்தார்.
தொடர்ந்து இன்று மாலை வரை பல தரப்பு நிர்வாகிகளுடனும் ஆலோசனை நடத்துகிறார்.
நாளை (ஞாயிறு) மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்குமார் மற்றும் அகில இந்திய செயலாளர்களுடன் ஆலோசனை நடத்துகிறார்.
நிர்வாகிகளின் கருத்துக்களின் அடிப்படையில் கிரீஷ்சோடங்கர் தனது அறிக்கையை டெல்லி தலைமையிடம் அளிப்பார் என்று கூறப்படுகிறது.
- 20 ஆண்டுகாலக் கோரிக்கையை நிறைவேற்றம்.
- நம்பி வாக்களித்த மக்களுக்கு, கழக அரசு எப்போதுமே உண்மையாக இருக்கும்.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம்: 20 ஆண்டுகாலக் கோரிக்கையை நிறைவேற்றிய #DravidianModel அரசு!
நம்பி வாக்களித்த மக்களுக்கு, கழக அரசு எப்போதுமே உண்மையாக இருக்கும் என மீண்டுமொருமுறை செய்து காட்டியுள்ளோம்! அரசு ஊழியர்களுக்கு மிகப் பெரும் புத்தாண்டு, பொங்கல் பரிசாக #TAPS அறிவிப்பினை வெளியிட்டுள்ளோம்.
திராவிட மாடல் நல்லாட்சிதான் தொடரும்! தலைநிமிர்ந்து வரும் தமிழ்நாட்டின் நிதிநிலை சீரடையச் சீரடைய அனைத்துத் தரப்பினரின் கோரிக்கைகளும் நீங்கள் கேட்காமலே நிறைவேறும்!
இவ்வாறு அவர் கூறினார்.
- கடந்த முறை வாக்காளர் சிறப்பு திருத்த முகாம் முதல் 15 நாட்கள் முறையாக நடைபெற்றது.
- எம்.ஜி.ஆர். மற்றும் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆகியோரது பிறந்த நாள் விழாக்களை சிறப்பாக கொண்டாட வேண்டும்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கட்சியின் பொருளாளரும், முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது.
இன்றும் நாளையும் நடைபெற உள்ள வாக்காளர் சிறப்பு திருத்த முகாமில் விடுபட்ட வாக்காளர்களையும், புதிய வாக்காளர்களையும் சேர்க்க நிர்வாகிகள் உதவ வேண்டும். பெயர் திருத்தம் செய்ய விரும்பும் வாக்காளர் உள்பட வீடு தோறும் சென்று தங்கள் பகுதியில் வாக்காளர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை நிவர்த்தி செய்து அவர்களின் பெயரை பட்டியலில் சேர்க்க வேண்டும்.
கடந்த முறை வாக்காளர் சிறப்பு திருத்த முகாம் முதல் 15 நாட்கள் முறையாக நடைபெற்றது. அதன்பிறகு மிகப்பெரிய குளறுபடி ஏற்பட்டுள்ளது. எனவே 6,7,8 வாக்காளர் விண்ணப்ப படிவங்களில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் செய்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
100 நாள் வேலைத்திட்டம் 125 நாட்களாக உயர்த்தப்படும் என பிரதமர் மோடி அறிவித்து உள்ளார். அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோளின் படிதான் பிரதமர் மோடி இந்த அறிவிப்பை வெளியிட்டு உள்ளார். மீண்டும் எடப்பாடி பழனிசாமி தலைமையில் 2026-ல் நல்லாட்சி மலர்கின்றபோது 150 நாட்களாக உயர்த்தப்படும்.
ஆனால் 100 நாள் வேலை திட்டத்தையே நிறுத்தி விடுவார்கள் என தி.மு.க.வினர் பொய் பிரசாரம் செய்து வருகின்றனர். இதனை பொதுமக்கள் நம்ப வேண்டாம்.
தேர்தலின் போது கள்ள ஓட்டு போடுவதில் தி.மு.க.வினர் வல்லவர்கள். அவர்கள் ஒவ்வொரு பூத்துகளின் மூலம் பி.எல்.ஓ.க்களை கொண்டு 300 வாக்குகளை சேர்த்து உள்ளனர். அதனை நீக்க வேண்டுமென மாவட்ட கலெக்டரிடம் புகார் அளிக்கப்பட உள்ளது. அ.தி.மு.க. பூத் ஏஜெண்டுகள் நம்பிக்கைக்கு உள்ளவர்களாக பொறுப்புடன் செயல்பட வேண்டும்.
விண்ணை முட்டும் அளவு உயர்ந்துள்ள தி.மு.க. ஆட்சியின் விலைவாசி உயர்வு பட்டியலை கட்சியினர் துண்டு பிரசுரங்களாக பிரசுரித்து மக்களுக்கு வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
கட்சியின் நிறுவனர் எம்.ஜி.ஆர். மற்றும் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆகியோரது பிறந்த நாள் விழாக்களை சிறப்பாக கொண்டாட வேண்டும். பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நிலையில் கட்சியினர் பல்வேறு போட்டிகளை நடத்தி பரிசுகள் வழங்கி உற்சாகப்படுத்த வேண்டும் என்றார்.
- ராஜஸ்தானை சேர்ந்த நீர் பாதுகாப்பு நிபுணர் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர் ராஜேந்திர சிங் ஆணையராக நியமிக்கப்படுகிறார்.
- ராஜஸ்தானில் வறண்ட நீரோடைகளையும் ஆறுகளையும் ராஜேந்திர சிங் மீட்டெடுத்துள்ளார்.
மதுரை:
தாமிரபரணி ஆற்றை தூய்மைப்படுத்தக் கோரி தூத்துக்குடி சேர்ந்த காமராஜ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், பி.புகழேந்தி அமர்வு கடந்த 2024-ம் ஆண்டு மார்ச் 11-ந் தேதி பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தது.
இந்த உத்தரவுகளை நிறைவேற்றாததால் நெல்லை மாநகராட்சி ஆணையர் ரூபேஷ்குமார், பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் மதனசுதாகர் உள்பட 12 பேர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக்கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதனை விசாரித்த நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், புகழேந்தி அமர்வு, "தாமிரபரணி ஆற்றை தூய்மைப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்குமாறு பல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு ஓராண்டுக்கு ஆண்டுக்கு மேலாகியும் நதியை தூய்மைப்படுத்தும் பணிகள் திருப்தியளிக்கவில்லை. நதியை தூய்மைப்படுத்துவது தொடர்பான உறுதியான திட்டம் குறித்து நீதிமன்றத்தில் இதுவரை தாக்கல் செய்யப்படவில்லை.
இதனால் தாமிரபரணி ஆற்றின் நிலையை விரிவாக ஆய்வு செய்து பொருத்தமான சீரமைப்பு நடவடிக்கைகளை பரிந்துரை செய்வதற்காக ராஜஸ்தானை சேர்ந்த நீர் பாதுகாப்பு நிபுணர் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர் ராஜேந்திர சிங் ஆணையராக நியமிக்கப்படுகிறார்.
ராஜஸ்தானில் வறண்ட நீரோடைகளையும் ஆறுகளையும் ராஜேந்திர சிங் மீட்டெடுத்துள்ளார். அவருக்கு உள்ள நேரடி அனுபவத்தின் மூலம் அவரால் தாமிரபரணியை தூய்மைப்படுத்த சாத்தியமான மற்றும் செயல்படுத்தக்கூடிய ஒரு திட்டத்தை முன்வைக்க முடியும் என்று நம்புகிறோம். அவரிடமிருந்து வெளிவரும் பரிந்துரைகள் தீவிரமாக எடுக்கப்பட்டு தாமிரபரணி ஆறு அதன் தூய்மையான நிலையை மீண்டும் பெறுவதற்காக முழுமையாகச் செயல்படுத்தப்படும். இப்பணிக்கு திண்டுக்கல்லைச் சேர்ந்த பாலாஜி ரங்கராமானுஜத்தின் உதவியை பெற ராஜேந்திர சிங்குக்கு அனுமதி வழங்கப்படுகிறது. இவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் மற்றும் அனைத்து துறை அதிகாரிகளும் முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும்" என உத்தரவிட்டுள்ளனர்.
- தமிழ்நாட்டின் வரலாற்று ஆளுமைகளுக்கு விஜய் தொடர்ந்து மரியாதை செலுத்தி வருகிறார்.
- கட்சியின் கொள்கை மற்றும் தமிழ் அடையாளத்தை முன்னிறுத்தும் முயற்சியாகப் பார்க்கப்படுகிறது.
ஆங்கிலேயர்களுக்கு எதிராக ஆயுதம் ஏந்திப் போராடிய முதல் இந்தியப் பெண் அரசி. இவரது பிறந்தநாள் (ஜனவரி 3) ஆண்டுதோறும் அரசு விழாவாகக் கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், வீரமங்கை வேலுநாச்சியாரின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அதன்படி, தமிழக வெற்றிக் கழக தலைமை அலுவலகத்தில் உள்ள வீரமங்கை வேலுநாச்சியார் சிலைக்கு விஜய் மரியாதை செலுத்தினார்.
தமிழக வெற்றிக் கழகத்தை (TVK) தொடங்கிய பிறகு, தமிழ்நாட்டின் வரலாற்று ஆளுமைகளுக்கு விஜய் தொடர்ந்து மரியாதை செலுத்தி வருகிறார். இது அவரது கட்சியின் கொள்கை மற்றும் தமிழ் அடையாளத்தை முன்னிறுத்தும் முயற்சியாகப் பார்க்கப்படுகிறது.
காமராஜர், அம்பேத்கர், பெரியார் போன்ற தலைவர்களுக்குப் பிறகு, விடுதலைப் போராட்ட வீராங்கனையான வேலுநாச்சியாருக்கு விஜய் மரியாதை செலுத்தியது, அவர் பெண்ணுரிமை மற்றும் வீர வரலாற்றிற்கு அளிக்கும் முக்கியத்துவத்தைக் காட்டுகிறது.
இதுதொடர்பாக விஜய் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-
விடுதலைப் போராட்டத்தில் ஆங்கிலேயர்களை எதிர்த்து ஆயுதம் ஏந்திப் போராடி, தாய் மண்ணை மீட்ட முதல் இந்தியப் பெண் போராளி! சமூக சமய நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாகத் திகழ்ந்த எழுச்சிக் கனல்! எம் கொள்கைத் தலைவர், வீரமங்கை ராணி வேலு நாச்சியார் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, சென்னையில் கழகத்தின் தலைமை நிலையச் செயலகத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன்.
தமிழ் மண்ணுக்குப் பெருமை சேர்த்த வீரமங்கை ராணி வேலு நாச்சியார் அவர்களின் வழியில், மக்கள் விரோத ஆட்சியாளர்களை விரட்டி, மக்கள் விரும்பும் மக்களாட்சியை அமைக்க உறுதியேற்போம்!
இவ்வாறு கூறினார்.
- பங்களிப்புத் தொகை பணியாளர்களின் ஊதியத்திற்கேற்ப ஒவ்வொரு ஆண்டும் மேலும் உயரும்.
- தமிழ்நாடு அரசு ஆண்டுதோறும் சுமார் 11 ஆயிரம் கோடி ரூபாய் அரசின் பங்களிப்பாக வழங்க வேண்டும்.
சென்னை:
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலனில் முழுமையான அக்கறையுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசின் சார்பில், பல்வேறு கோரிக்கைகள் பல்லாயிரம் கோடி ரூபாய் செலவில் நிறைவேற்றப்பட்டு இருந்தாலும் அரசு அலுவலர்கள் ஓய்வு பெறும் நாளன்று எவ்வளவு ஓய்வூதியம் பெறுவோம் என்று அறியாமல் ஓய்வு பெறும் நிலை கடந்த 20 ஆண்டுகளாக இருப்பதாகவும், இதனை அகற்றி பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வேண்டுமென்றும் அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்கள் தொடர்ந்து கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றன.
அவர்களின் இந்த நீண்டகாலக் கோரிக்கைகள் என்பது ஒவ்வொரு அரசு அலுவலர் மற்றும் ஆசிரியர் குடும்பத்தினரின் வாழ்க்கையுடனும் அவர்களின் எதிர்காலத்துடனும் தொடர்பு உடையது என்பதை உணர்ந்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான இந்த அரசு, இவற்றின் மீது முழுக்கவனம் செலுத்தியதுடன், இந்த கோரிக்கைகளைப் பரிசீலனை செய்து, அரசு அலுவலர்களுக்கு முறையான ஓய்வூதியத்தை வழங்குவது குறித்து, தகுந்த பரிந்துரைகளை வழங்கிட அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் ககன்தீப்சிங் பேடி தலைமையில் ஒரு குழுவை அரசு அமைத்து, அந்தக் குழுவின் அறிக்கையையும் பெற்று உள்ளது.
அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலன் காப்பதில் உண்மையான அக்கறை கொண்ட இந்த அரசு, அந்த அறிக்கையை முழுமையாக ஆராய்ந்து, தமிழ்நாடு அரசு தற்போது சந்தித்து வரும் நிதிச் சூழலில், அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவு செய்வதற்கான வழிமுறைகள் குறித்து நிதி அமைச்சர், தலைமைச் செயலாளர் மற்றும் நிதித்துறைச் செயலாளர் உள்ளிட்ட உயர் அலுவலர்களிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
அந்த ஆலோசனையின்போது, பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர், நிதித்துறை அமைச்சர் மற்றும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ஆகியோரிடம் அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் அளித்த முக்கியக்கோரிக்கைகள் பற்றியும் விவாதிக்கப்பட்டது.
அரசு அலுவலர்களின் நலன் மற்றும் எதிர்பார்ப்புகள், மாநிலத்தின் நிதிநிலை, எதிர்காலத்தில் அனைத்து அரசு அலுவலர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு எவ்வித தடைகளுமின்றி முறையாக ஊதியமும், ஓய்வூதியமும் கிடைக்கச் செய்யவேண்டிய பொறுப்பு போன்ற பல அம்சங்களை சீர்தூக்கிப் பார்த்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்குக் கிடைத்து வந்த ஓய்வூதியம் மற்றும் பல்வேறு பலன்களைத் தொடர்ந்து அளிக்கக்கூடிய புதிய திட்டமாக "தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம்'' என்ற புதிய திட்டம் செயல்படுத்தப்படும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார்.
இந்தப் புதிய தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் மாநில அரசு அலுவலர்கள் பெற்ற கடைசி மாத ஊதி யத்தில் 50 சதவீதம் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியமாக வழங்கப்படும். இவ்வாறு 50 சதவீதத்திற்கு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் வழங்குவதற்கு, பணியாளர்களின் 10 சதவீத பங்களிப்போடு, ஓய்வூதிய நிதியத்திற்குத் தேவைப்படும் கூடுதல் நிதி முழுவதையும் தமிழ்நாடு அரசே ஏற்கும்.
50 சதவீதம் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்களுக்கு ஆண்டுதோறும் ஆறு மாதத்திற்கு ஒருமுறை அரசு அலுவலர்களுக்கு வழங்கப்படுவதற்கு இணையான அகவிலைப்படி உயர்வு அளிக்கப்படும்.
ஓய்வூதியதாரர் இறந்து விட்டால் அவர் ஏற்கெனவே பரிந்துரைத்த குடும்ப உறுப்பினர்களுக்கு அவர் பெற்று வந்த ஓய்வூதியத்தில் 60 சதவீதம் குடும்ப ஓய்வூதியமாக வழங்கப்படும்.
அரசு அலுவலர்கள் ஓய்வு பெறும்போதும், பணிக்காலத்தில் இறக்க நேரிடும் போதும், அவரவரின் பணிக் காலத்திற்கேற்ப 25 லட்சம் ரூபாய்க்கு மிகாமல் பணிக்கொடை வழங்கப்படும்.
புதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்பட்டபின், ஓய்வூதியம் பெறுவதற்கான தகுதிப் பணிக்காலத்தை நிறைவு செய்யாமல் பணி ஓய்வு பெறும் அனைத்து அலுவலர்களுக்கும் குறைந்தபட்ச ஓய்வூதியம் வழங்கப்படும்.
பங்களிப்புடன் கூடிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் பணியில் சேர்ந்து, புதிய தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் செயல்படுத்தப்படுவதற்கு முன்னர் இடைப்பட்ட காலத்தில் ஓய்வூதியம் இன்றி பணி ஓய்வு பெற்றவர்களுக்கு சிறப்பு கருணை ஓய்வூதியம் வழங்கப்படும்.
இந்த திட்டத்தை அறிமுகப்படுத்துவதால், ஓய்வூதிய நிதியத்திற்கு கூடுதலாக தமிழ்நாடு அரசு 13 ஆயிரம் கோடி ரூபாய் அளிக்க வேண்டும். இது மட்டுமல்லாமல், தமிழ்நாடு அரசு ஆண்டுதோறும் சுமார் 11 ஆயிரம் கோடி ரூபாய் அரசின் பங்களிப்பாக வழங்க வேண்டும்.
இந்தப் பங்களிப்புத் தொகை பணியாளர்களின் ஊதியத்திற்கேற்ப ஒவ்வொரு ஆண்டும் மேலும் உயரும். தற்போது தமிழ்நாடு அரசு சந்தித்துத் வரும் கடுமையான நிதிச்சூழலிலும், அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலன்களைக் காத்திடும் பொருட்டு, மேற்கூறிய செலவினங்களை தமிழ்நாடு அரசே முழுமையாக ஏற்றிடும்.
அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலனையும் அவர்களின் குடும்பத்தின் எதிர்காலத்தையும் மனதில் கொண்டு, தொலைநோக்குப் பார்வையுடனும் நடைமுறை சாத்தியங்களுடனும் கூடிய வகை யில், அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் இருபது ஆண்டு கால கோரிக்கையை நிறைவேற்றி, பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு இணையான ஓய்வூதியத்தையும், பணப் பயன்களையும் பெற வழிவகுக்கும் வகையில் செயல்படுத்தப்பட உள்ள இந்த உறுதியளிக்கப்பட்ட திட்டத்தினை, அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஒருமனதாக வரவேற்று, அதனைச் செயல்படுத்து வதற்கான முழு ஒத்துழைப்பையும் நல்குமாறு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
- தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
- அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
சென்னை:
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தெற்கு கேரள கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
நாளை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
5-ந்தேதி முதல் 9-ந்தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 29-30° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23-24° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 29-30° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23-24° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
இன்று முதல் 7-ந்தேதி வரை தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதி, தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
- அண்ணாமலை தனிக்கட்சி தொடங்கினால் சிறுபான்மை மக்களிடம் வரவேற்பு பெற முடியுமா? என்பதற்கு 43 சதவீதம் பேர் ஆதரவு அளித்துள்ளனர்.
- அ.தி.மு.க.-த.வெ.க. தனித்தனியாக கூட்டணி அமைத்தால் மும்முனை போட்டி ஏற்படும்.
சென்னை:
தமிழக சட்டசபை தேர்தல் தொடர்பாக லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்கள் மாநில அளவில் கள ஆய்வு நடத்தி இறுதி முடிவுகளை இன்று வெளியிட்டனர்.
இதுகுறித்து அதன் ஒருங்கிணைப்பாளர் திருநாவுக்கரசு நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
இந்திய அரசியல் ஜனநாயக யுக்திகள் சார்பில் 61-வது கள ஆய்வு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இந்த கள ஆய்வில் வருகிற சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு மீண்டும் முதலமைச்சராக வாய்ப்பு யாருக்கு இருக்கிறது என்ற கேள்விகளுக்கு 55 சதவீதம் பேர் "முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்" என்று பதில் அளித்துள்ளனர்.
தி.மு.க. அரசு கடந்த 4½ ஆண்டுகளில் வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ள தா? என்பதற்கு 25 சதவீதம் பேர் மட்டுமே ஆதரவு தெரிவித்து உள்ளனர். 47 சதவீதம் பேர் நிறைவேற்றவில்லை என்று தெரிவித்துள்ளனர்.
விஜய்யின் த.வெ.க. எந்த கட்சியின் வாக்குகளை அதிகம் பிரிக்கும் என்பதற்கு தி.மு.க. முதல் இடத்திலும், விடுதலை சிறுத்தைகள் 2-வது இடத்திலும், அ.தி.மு.க. 3-வது இடத்திலும் உள்ளன.
அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி உருவானதால் பொதுமக்கள் மத்தியில் வரவேற்பு உள்ளதா? என்ற கேள்விக்கு, 41 சதவீதம் பேர் வரவேற்பு இல்லை என்று கருத்து தெரிவித்துள்ளனர்.
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்ற பிறகு கட்சி வளர்ச்சி அடையவில்லை என்று 60 சதவீதம் பேர் கருத்து தெரிவித்து உள்ளனர்.
விஜய்யின் அரசியல் நிலைப்பாடு எப்படி இருக்கிறது என்ற கேள்விக்கு 53 சதவீதம் பேர் மோசமாக இருப்பதாக தெரிவித்து உள்ளனர். நன்றாக இருப்பதாக 22 சதவீதம் பேர் கூறியுள்ளனர்.
தமிழகத்தில் இளம் வாக்காளர்களை கவரக் கூடியவர்களில் விஜய் முதலிடம் பிடித்துள்ளார். அண்ணாமலை 2-வது இடத்தில் உள்ளார்.

அண்ணாமலை தனிக்கட்சி தொடங்கினால் சிறுபான்மை மக்களிடம் வரவேற்பு பெற முடியுமா? என்பதற்கு 43 சதவீதம் பேர் ஆதரவு அளித்துள்ளனர்.
விஜய்யின் சுற்றுப் பயணம் அரசியலில் தாக்கத்தை எற்படுத்தும் என்று 41 சதவீதம் பேரும், ஓரளவுக்கு ஏற்படுத்தும் என்று 27 சதவீதம் பேரும், இல்லை என்று 24 சதவீதம் பேரும் கருத்து கூறி உள்ளனர்.
தி.மு.க., அ.தி.மு.க.வுக்கு மாற்று கட்சியாக த.வெ.க. உள்ளதா? என்பதற்கு இல்லை என்று 44 சதவீதம் பேர் கருத்து தெரிவித்து உள்ளனர்.
எம்.ஜி.ஆருக்கு நிகரான தலைவராக விஜய்யை மக்கள் பார்க்கிறார்களா? என்பதற்கு இல்லை என்று 50 சதவீதம் பேர் கருத்து தெரிவித்து உள்ளனர்.
சீமான் வருகிற சட்டசபை தேர்தலில் எம்.எல். ஏ.வாக வேண்டும் என்று 69 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்த தேர்தலில் 4 முனைப் போட்டி உருவாக வாய்ப்புள்ளது. இதனால் வாக்குகள் சிதறும். இது தி.மு.க. கூட்டணிக்கு சாதகமாக அமையும் என்பது தவறு.
தி.மு.க., அ.தி.மு.க., த.வெ.க. ஆகிய 3 கட்சிகளில் தி.மு.க. வலுவான கூட்டணியாக காணப்படுகிறது.

அ.தி.மு.க.-த.வெ.க. தனித்தனியாக கூட்டணி அமைத்தால் மும்முனை போட்டி ஏற்படும். சீமான் 4-வது இடத்தையே பிடிப்பார்.
த.வெ.க. வலுவான கூட்டணி அமைத்தால் 2-வது இடத்தை பிடிக்க அ.தி.மு.க. கடுமையாக போராடும்.
தமிழகத்தில் வருகிற சட்டசபை தேர்தலில் 76 சதவீதம் வாக்குகள் பதிவானால் கூட்டணி ஆட்சி ஏற்படும். இந்த சதவீதம் மாறினால் வெற்றி வாய்ப்புகளும் மாறும். இந்த தேர்தலில் எந்த கட்சி அல்லது எந்த கூட்டணி தலைமையில் ஆட்சி அமையும் என்பதில் தி.மு.க. முதலிடத்தில் உள்ளது.
தி.மு.க. கூட்டணி 30.62 சதவீதம் ஓட்டுகளை பெற்று ஆட்சியை பிடிக்க வாய்ப்பு உள்ளது. அ.தி.மு.க. கூட்டணி 26.39 சதவீதமும், த.வெ.க.வுக்கு 21.07 சதவீதமும் வாக்குகள் கிடைக்கும். நாம் தமிழர் கட்சிக்கு 7.50 சதவீதம் வாக்குகள் கிடைக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- 50 சதவீத ஓய்வூதியத்தை அறிவித்த முதலமைச்சருக்கு நன்றி.
- 23 ஆண்டு கால போராட்டத்திற்கு முடிவு கிடைத்துள்ளது.
சென்னை தலைமை செயலகத்தில் அமைச்சர்கள், உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஓய்வூதியம் தொடர்பாக புதிய அறிவிப்பை வெளியிட்டார்.
இதையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்த அரசு ஊழியர் சங்கத்தினர் அவருக்கு நன்றி தெரிவித்தனர். முதலமைச்சருக்கு இனிப்பு ஊட்டி நன்றியை தெரிவித்தனர்.
இந்நிலையில் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
* 50 சதவீத ஓய்வூதியத்தை அறிவித்த முதலமைச்சருக்கு நன்றி.
* நாங்கள் எதிர்பார்த்தபடி ஓய்வூதியத்தை அறிவித்துள்ளார் முதலமைச்சர்.
* 48 ஆயிரம் பேருக்கு கருணை ஊதியம் அறிவித்திருப்பதை ஜாக்டோ ஜியோ வரவேற்கிறது.
* 23 ஆண்டு கால போராட்டத்திற்கு முடிவு கிடைத்துள்ளது.
* எங்களது அனைத்து கோரிக்கைகளையும் முதலமைச்சர் நிறைவேற்றுவார்.
* வரும் 6-ந்தேதி முதல் நடக்க இருந்த காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் ரத்து செய்வதாக அறிவித்தது.
- கடைசி மாத ஊதியத்தில் 50 விழுக்காடு உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதியமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- முதலமைச்சருக்கு இனிப்பு ஊட்டி அரசு ஊழியர் சங்கத்தினர் நன்றியை தெரிவித்தனர்.
சென்னை தலைமை செயலகத்தில் அமைச்சர்கள், உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஓய்வூதியம் தொடர்பாக புதிய அறிவிப்பை வெளியிட்டார்.
புதிய ஓய்வூதிய திட்டத்தில், 10 ஆண்டுகள் பணியாற்றி இருந்தால் ஓய்வூதியம், உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத்துக்கு முன்னர் ஓய்வு பெற்றவர்களுக்கு சிறப்பு கருணை ஓய்வூதியம், கடைசி மாத ஊதியத்தில் 50 விழுக்காடு உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதியமாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்த அரசு ஊழியர் சங்கத்தினர் அவருக்கு நன்றி தெரிவித்தனர். முதலமைச்சருக்கு இனிப்பு ஊட்டி நன்றியை தெரிவித்தனர்.
- தன்னுடைய கோரிக்கை அனைத்து ஊடகங்களிலும் ஒளிபரப்பாக வேண்டும்.
- திருப்பூர் கோவில் வழி பகுதியில் தங்கி பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வருவதும் தெரியவந்தது.
திருப்பூர்:
திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட தாராபுரம் ரோடு கோவில்வழி அருகே 40 அடி உயரத்தில் பி.எஸ்.என்.எல்., டவர் உள்ளது. இன்று காலை 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் டவர் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டார். டவர் மீது ஏறிய நபர் தேசியக்கொடி மற்றும் அ.தி.மு.க., கொடியை டவர் மீது கட்டி சிஸ்டம் சரியில்லை, அரசியல் மாற்றம் வர வேண்டும் என வலியுறு த்தினார்.
இதனைப்பார்த்து அப்பகுதி பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்ததுடன், இது குறித்து போலீசார் மற்றும் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவல் கிடைத்ததும் நல்லூர் போலீசார் மற்றும் திருப்பூர் தெற்கு தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
அங்கு டவரின் உச்சியில் நின்று போராடி கொண்டிருந்தவரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது அந்த நபர் மேலே இருந்தவாறு பட்டாசுகளையும் பற்ற வைத்து கீழே வீசினார். தொடர்ந்து அவரிடம் நிதானமாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
தன்னுடைய கோரிக்கை அனைத்து ஊடகங்களிலும் ஒளிபரப்பாக வேண்டும். அ.தி.மு.க., தலைமைக்கு எனது கோரிக்கைகள் சென்று அவர்கள் நிறைவேற்ற முன்வர வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.
பின்னர் நிதானமாக பேசிய போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினர் அவரை தானாகவே கீழே இறங்கச்செய்தனர். கீழே இறங்கி வந்தவரிடம் விசாரணை மேற்கொண்ட போது அவர் மதுரை வாடிப்பட்டியை சேர்ந்த மூக்கையா (வயது 42) என்பதும் , திருப்பூர் கோவில் வழி பகுதியில் தங்கி பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வருவதும் தெரியவந்தது.
தொடர்ந்து அவரை விசாரணைக்காக நல்லூர் போலீசார் அழைத்துச் சென்றனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து வேடிக்கை பார்க்க நூற்றுக்கணக்கான மக்கள் சம்பவ இடத்தில் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மூக்கையா கடந்த ஆண்டு ஜனவரி மாதம் இதே போல் தாராபுரம் சாலையில் உள்ள வேறொரு டவரில் மேலே ஏறி இது போன்ற பரபரப்பை ஏற்படுத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.






