என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    20 ஆண்டுகால கோரிக்கை ஏற்பு: தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம் - முதலமைச்சர் உத்தரவு
    X

    20 ஆண்டுகால கோரிக்கை ஏற்பு: தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம் - முதலமைச்சர் உத்தரவு

    • பங்களிப்புத் தொகை பணியாளர்களின் ஊதியத்திற்கேற்ப ஒவ்வொரு ஆண்டும் மேலும் உயரும்.
    • தமிழ்நாடு அரசு ஆண்டுதோறும் சுமார் 11 ஆயிரம் கோடி ரூபாய் அரசின் பங்களிப்பாக வழங்க வேண்டும்.

    சென்னை:

    தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலனில் முழுமையான அக்கறையுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசின் சார்பில், பல்வேறு கோரிக்கைகள் பல்லாயிரம் கோடி ரூபாய் செலவில் நிறைவேற்றப்பட்டு இருந்தாலும் அரசு அலுவலர்கள் ஓய்வு பெறும் நாளன்று எவ்வளவு ஓய்வூதியம் பெறுவோம் என்று அறியாமல் ஓய்வு பெறும் நிலை கடந்த 20 ஆண்டுகளாக இருப்பதாகவும், இதனை அகற்றி பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வேண்டுமென்றும் அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்கள் தொடர்ந்து கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றன.

    அவர்களின் இந்த நீண்டகாலக் கோரிக்கைகள் என்பது ஒவ்வொரு அரசு அலுவலர் மற்றும் ஆசிரியர் குடும்பத்தினரின் வாழ்க்கையுடனும் அவர்களின் எதிர்காலத்துடனும் தொடர்பு உடையது என்பதை உணர்ந்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான இந்த அரசு, இவற்றின் மீது முழுக்கவனம் செலுத்தியதுடன், இந்த கோரிக்கைகளைப் பரிசீலனை செய்து, அரசு அலுவலர்களுக்கு முறையான ஓய்வூதியத்தை வழங்குவது குறித்து, தகுந்த பரிந்துரைகளை வழங்கிட அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் ககன்தீப்சிங் பேடி தலைமையில் ஒரு குழுவை அரசு அமைத்து, அந்தக் குழுவின் அறிக்கையையும் பெற்று உள்ளது.

    அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலன் காப்பதில் உண்மையான அக்கறை கொண்ட இந்த அரசு, அந்த அறிக்கையை முழுமையாக ஆராய்ந்து, தமிழ்நாடு அரசு தற்போது சந்தித்து வரும் நிதிச் சூழலில், அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவு செய்வதற்கான வழிமுறைகள் குறித்து நிதி அமைச்சர், தலைமைச் செயலாளர் மற்றும் நிதித்துறைச் செயலாளர் உள்ளிட்ட உயர் அலுவலர்களிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.

    அந்த ஆலோசனையின்போது, பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர், நிதித்துறை அமைச்சர் மற்றும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ஆகியோரிடம் அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் அளித்த முக்கியக்கோரிக்கைகள் பற்றியும் விவாதிக்கப்பட்டது.

    அரசு அலுவலர்களின் நலன் மற்றும் எதிர்பார்ப்புகள், மாநிலத்தின் நிதிநிலை, எதிர்காலத்தில் அனைத்து அரசு அலுவலர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு எவ்வித தடைகளுமின்றி முறையாக ஊதியமும், ஓய்வூதியமும் கிடைக்கச் செய்யவேண்டிய பொறுப்பு போன்ற பல அம்சங்களை சீர்தூக்கிப் பார்த்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்குக் கிடைத்து வந்த ஓய்வூதியம் மற்றும் பல்வேறு பலன்களைத் தொடர்ந்து அளிக்கக்கூடிய புதிய திட்டமாக "தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம்'' என்ற புதிய திட்டம் செயல்படுத்தப்படும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார்.

    இந்தப் புதிய தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் மாநில அரசு அலுவலர்கள் பெற்ற கடைசி மாத ஊதி யத்தில் 50 சதவீதம் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியமாக வழங்கப்படும். இவ்வாறு 50 சதவீதத்திற்கு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் வழங்குவதற்கு, பணியாளர்களின் 10 சதவீத பங்களிப்போடு, ஓய்வூதிய நிதியத்திற்குத் தேவைப்படும் கூடுதல் நிதி முழுவதையும் தமிழ்நாடு அரசே ஏற்கும்.

    50 சதவீதம் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்களுக்கு ஆண்டுதோறும் ஆறு மாதத்திற்கு ஒருமுறை அரசு அலுவலர்களுக்கு வழங்கப்படுவதற்கு இணையான அகவிலைப்படி உயர்வு அளிக்கப்படும்.

    ஓய்வூதியதாரர் இறந்து விட்டால் அவர் ஏற்கெனவே பரிந்துரைத்த குடும்ப உறுப்பினர்களுக்கு அவர் பெற்று வந்த ஓய்வூதியத்தில் 60 சதவீதம் குடும்ப ஓய்வூதியமாக வழங்கப்படும்.

    அரசு அலுவலர்கள் ஓய்வு பெறும்போதும், பணிக்காலத்தில் இறக்க நேரிடும் போதும், அவரவரின் பணிக் காலத்திற்கேற்ப 25 லட்சம் ரூபாய்க்கு மிகாமல் பணிக்கொடை வழங்கப்படும்.

    புதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்பட்டபின், ஓய்வூதியம் பெறுவதற்கான தகுதிப் பணிக்காலத்தை நிறைவு செய்யாமல் பணி ஓய்வு பெறும் அனைத்து அலுவலர்களுக்கும் குறைந்தபட்ச ஓய்வூதியம் வழங்கப்படும்.

    பங்களிப்புடன் கூடிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் பணியில் சேர்ந்து, புதிய தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் செயல்படுத்தப்படுவதற்கு முன்னர் இடைப்பட்ட காலத்தில் ஓய்வூதியம் இன்றி பணி ஓய்வு பெற்றவர்களுக்கு சிறப்பு கருணை ஓய்வூதியம் வழங்கப்படும்.

    இந்த திட்டத்தை அறிமுகப்படுத்துவதால், ஓய்வூதிய நிதியத்திற்கு கூடுதலாக தமிழ்நாடு அரசு 13 ஆயிரம் கோடி ரூபாய் அளிக்க வேண்டும். இது மட்டுமல்லாமல், தமிழ்நாடு அரசு ஆண்டுதோறும் சுமார் 11 ஆயிரம் கோடி ரூபாய் அரசின் பங்களிப்பாக வழங்க வேண்டும்.

    இந்தப் பங்களிப்புத் தொகை பணியாளர்களின் ஊதியத்திற்கேற்ப ஒவ்வொரு ஆண்டும் மேலும் உயரும். தற்போது தமிழ்நாடு அரசு சந்தித்துத் வரும் கடுமையான நிதிச்சூழலிலும், அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலன்களைக் காத்திடும் பொருட்டு, மேற்கூறிய செலவினங்களை தமிழ்நாடு அரசே முழுமையாக ஏற்றிடும்.

    அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலனையும் அவர்களின் குடும்பத்தின் எதிர்காலத்தையும் மனதில் கொண்டு, தொலைநோக்குப் பார்வையுடனும் நடைமுறை சாத்தியங்களுடனும் கூடிய வகை யில், அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் இருபது ஆண்டு கால கோரிக்கையை நிறைவேற்றி, பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு இணையான ஓய்வூதியத்தையும், பணப் பயன்களையும் பெற வழிவகுக்கும் வகையில் செயல்படுத்தப்பட உள்ள இந்த உறுதியளிக்கப்பட்ட திட்டத்தினை, அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஒருமனதாக வரவேற்று, அதனைச் செயல்படுத்து வதற்கான முழு ஒத்துழைப்பையும் நல்குமாறு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    Next Story
    ×