என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • திருப்பரங்குன்றம் மலை தீபத்தூணில் தீபம் ஏற்ற உத்தரவிடப்பட்டதால் அக்கம்பக்கத்து ஊர்களில் இருந்து ஏராளமானவர்கள் அங்கு வந்தனர்.
    • திருப்பரங்குன்றம் விவகாரத்தில் உத்தரவை அமல்படுத்தாதது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.

    மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோவில் சார்பில் ஆண்டுதோறும் கார்த்திகை தீப திருவிழா அன்று, மலையில் தீபம் ஏற்றப்பட்டு வருகிறது.

    உச்சிப்பிள்ளையார் கோவில் பகுதியில் தீபம் ஏற்றப்படும் நிலையில், இதுதொடர்பாக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த ஐகோர்ட் மதுரைக்கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் இந்த ஆண்டு ஏற்றப்பட வேண்டும் என உத்தரவிட்டார்.

    அந்த உத்தரவு நேற்று முன்தினம் நிறைவேற்றப்படவில்லை. உச்சிப்பிள்ளையார் கோவில் அருகேதான் தீபம் ஏற்றப்பட்டது. இதுதொடர்பாக உடனடியாக அதே நீதிபதியிடம் முறையீடு செய்யப்பட்டது. மத்திய படை பாதுகாப்புடன் மனுதாரர் ராம.ரவிக்குமார் உள்ளிட்டோர் சென்று தீபம் ஏற்ற உத்தரவிடப்பட்டது. ஆனால் நேற்று முன்தினம் இரவில், திருப்பரங்குன்றம் மலைக்கு செல்ல யாருக்கும் போலீசார் அனுமதி அளிக்காததால், அந்த உத்தரவு நிறைவேற்றப்படவில்லை.

    நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் உத்தரவை ரத்து செய்யவேண்டும் என ஐகோர்ட் மதுரைக்கிளை டிவிஷன் பெஞ்சில் மேல்முறையீடு செய்யப்பட்டு இருந்த நிலையில், அதை நேற்று அவசர வழக்காக விசாரித்த நீதிபதிகள் ஜெயச்சந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

    இந்த நிலையில் தனது உத்தரவை நிறைவேற்றாதது ஏன்? என்பது குறித்து விசாரிக்க ஐகோர்ட் மதுரைக்கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், இந்த விவகாரத்தை நேற்று மாலை மீண்டும் எடுத்தார். அப்போது தமிழக அரசு சார்பில் மூத்த வக்கீல் ஜோதி ஆஜராகி வாதிட்டார்.

    திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றும் விவகாரம் குறித்த ஐகோர்ட் மதுரைக்கிளையின் தீர்ப்புக்கு எதிராக அரசு தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்ய உள்ளது. எனவே அதுவரை உரிய அவகாசம் வழங்க வேண்டும் என வாதாடினார்.

    அதற்கு நீதிபதி, இந்த விவகாரம் தொடர்பாக பதில் அளிக்க கோவில் செயல் அலுவலர் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆஜராகும்படி உத்தரவிட்டு இருந்தேன். அவர் இப்போது வரை எந்த பதிலும் அளிக்கவில்லை என அதிருப்தி தெரிவித்தார்.

    மேலும் நீதிபதி கூறுகையில், இந்த கோர்ட்டு பிறப்பித்த உத்தரவை செயல்படுத்துவதில் மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் லோகநாதன் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே அவர் உடனடியாக காணொலியில் ஆஜராக வேண்டும் என்றார்.

    அதன்படி மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் லோகநாதன் நீதிபதி முன்பு காணொலியில் ஆஜர் ஆனார்.

    அவரிடம் நீதிபதி, "திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற மனுதாரர் உள்ளிட்டவர்களுக்கு உத்தரவிட்டு இருந்தேன். அவர்களுடன் மத்திய பாதுகாப்பு படையினரும் அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனால் அவர்களை தீபம் ஏற்ற அனுமதிக்க மறுத்தது ஏன்?" என கேள்வி எழுப்பினார்.

    அதற்கு போலீஸ் கமிஷனர், "திருப்பரங்குன்றம் மலையை சுற்றிலும் பகலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தோம். அந்த நேரத்தில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்படுகிறது என்று மதுரை மாவட்ட கலெக்டர் உத்தரவை அனுப்பி இருந்தார். அதை அமல்படுத்தும் வகையிலும், சட்டம்-ஒழுங்கு பிரச்சினையை தவிர்க்கும் வகையிலும் திருப்பரங்குன்றம் மலை மீது ஏறுவதற்கு யாரையும் அனுமதிக்கவில்லை" என்றார்.

    இதைக்கேட்ட நீதிபதி, திருப்பரங்குன்றம் மலை சுற்றுப்பகுதியில் மதுரை மாவட்ட கலெக்டர் அமல்படுத்தி உள்ள 144 உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. மேலும் இந்த கோர்ட்டு பிறப்பித்த உத்தரவை செயல்படுத்தும் வகையில் இன்று (அதாவது நேற்று) இரவு 7 மணிக்குள் ராம ரவிக்குமார் உள்ளிட்ட 10 பேர் குழுவினரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றுவதற்கு உரிய வசதிகளை மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் செய்து தர வேண்டும்.

    தீபம் ஏற்றிய பின்பு, கோர்ட்டின் உத்தரவு முறையாக அமல்படுத்தப்பட்டது தொடர்பான அறிக்கையை மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் இன்று நேரில் ஆஜராகி கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.

    ஐகோர்ட் மதுரைக்கிளை இவ்வாறு உத்தரவிட்டதும் திருப்பரங்குன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    திருப்பரங்குன்றம் மலையில் இரவு 7 மணிக்குள் தீபத்தூணில் தீபம் ஏற்ற உத்தரவிடப்பட்டதால் அக்கம்பக்கத்து ஊர்களில் இருந்து ஏராளமானவர்கள் அங்கு வந்தனர்.

    இதற்கிடையே ஐகோர்ட் மதுரைக்கிளையின் உத்தரவு நகலுடன் வக்கீல்கள், மனுதாரர் ராம.ரவிக்குமார் உள்ளிட்டோர் வந்தனர். ஆனால், போலீசார், மலைக்கான படிப்பாதையை குறுக்காக மறித்து போலீஸ் வாகனத்தை கொண்டு சென்று நிறுத்தினர். இரும்பு தடுப்புகளையும் ஏற்படுத்தினர். யாரையும் முன்னேறிச் செல்ல அனுமதிக்கவில்லை.

    இதையடுத்து 2-வது நாளாக நேற்று தீபம் ஏற்ற போலீசார் அனுமதி மறுத்தனர்.

    இதற்கிடையே ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவை ரத்து செய்யக்கோரி மதுரை மாவட்ட கலெக்டர் பிரவீன்குமார் சார்பில் வக்கீல் சபரீஷ் சுப்ரமணியன் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.

    இந்நிலையில் திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பான வழக்கு ஐகோர்ட் மதுரைக்கிளையில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன்,

    நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக அரசு மற்றும் காவல்துறை செயல்படுவதாக தெரிவித்த மனுதாரர், மத்திய உள்துறை அமைச்சகத்தை இணைக்க அனுமதிக்குமாறு கோரிக்கை விடுத்தார்.

    மனு மீதான கோரிக்கையை விரிவாக்க வேண்டாம் என நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    திருப்பரங்குன்றம் விவகாரத்தில் உத்தரவை அமல்படுத்தாதது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டார். என்ன நடந்தது என்பது குறித்து CISF அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் விசாரணையை செவ்வாய்க்கிழமைக்கு ஒத்திவைத்தார்.

    சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளதால் விசாரணை செவ்வாய்க்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது.

    • திராவிட மாடல் அரசு வேகமாக செயல்பட்டு முதலீடுகளை கொண்டு வந்து கொண்டிருக்கிறது.
    • எலெக்ட்ரானிக்ஸ் துறையின் தலைநகரம் தமிழ்நாடு என்ற நிலையை உருவாக்கி இருக்கிறோம்.

    காஞ்சிபுரம்:

    அமெரிக்காவை தலைமையகமாக கொண்ட கார்னிங் இண்டர்நேஷனல் நிறுவனம் பார்ச்சூன் 500 நிறுவனங்களில் ஒன்றாகும். செல்போன்கள், மடிக்கணினிகள் மற்றும் கைக் கணினிகளில் பயன்படுத்தப்படும் வலுவூட்டப்பட்ட 'கார்னிங் கொரில்லா கண்ணாடி உற்பத்தி மேற்கொள்ளும் நிறுவனம் ஆகும். ஆப்டிமஸ் இன்பிராகாம் நிறுவனம், இந்தியாவில் செல்போன் உபரி பொருள்கள் மற்றும் மடிக்கணினி உற்பத்தியில் அனுபவம் வாய்ந்த நிறுவனம் ஆகும்.

    பாரத் இன்னோவேட்டிவ் கண்ணாடி டெக்னாலஜீஸ் நிறுவனம், கார்னிங் இண்டர்நேஷனல் கார்ப்பரேஷன் மற்றும் ஆப்டிமஸ் இன்பிராகாம் லிமிடெட் ஆகிய நிறுவனங்களின் கூட்டு நிறுவனமாகும்.

    இந்நிறுவனம் காஞ்சிபுரம் மாவட்டம் சிப்காட் பிள்ளைப்பாக்கம் தொழிற்பூங்காவில் ரூ.1003 கோடி முதலீட்டில் 840 பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் வகையில் நவீன தொழில் நுட்பத்துடன் முன்-கவர் கண்ணாடி உற்பத்தி ஆலை அமைந்துள்ளது. இத்திட்டத்தில் உருவாக்கப்படும் பொருட்கள் நாட்டிலேயே முதன் முறையாக உயர் தொழில் நுட்பத்தில் உற்பத்தி செய்யப்பட்டதாக இருக்கும்.

    இந்த திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கடந்த 2024-ம் ஆண்டு ஜனவரி மாதம் மேற்கொள்ளப்பட்டு அதே ஆண்டு ஜூன் மாதம் இத்திட்டத்திற்கு அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது. அடிக்கல் நாட்டி வைத்த 17 மாதங்களில் இத்திட்டத்தின் உற்பத்தியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்துள்ளார். தமிழ்நாட்டில் நிலவும் வணிகம் புரிதலுக்கான சூழலமைப்பு சிறப்பு உள்ளதற்கு இது சிறந்த சான்றாகும்.

    நிகழ்ச்சியில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

    * திராவிட மாடல் அரசு வேகமாக செயல்பட்டு முதலீடுகளை கொண்டு வந்து கொண்டிருக்கிறது.

    * ஆயிரத்துக்கும் அதிகமான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டு 80 சதவீதம் நிறைவேற்றப்பட்டது.

    * எலெக்ட்ரானிக்ஸ் பொருட்கள் ஏற்றுமதியில் 41 சதவீதம் பங்களிப்புடன் தமிழ்நாடு முதலிடம்.

    * எலெக்ட்ரானிக்ஸ் துறையின் தலைநகரம் தமிழ்நாடு என்ற நிலையை உருவாக்கி இருக்கிறோம்.

    * செமி கண்டக்டர் உற்பத்தி, வடிவமைப்பு துறைகளிலும் தமிழக அரசு கவனம் செலுத்தி வருகிறது.

    * தொலைநோக்கு சிந்தனையுடன் கொள்கைகளை உருவாக்கி தி.மு.க. அரசு செயல்பட்டு வருகிறது.

    * முதலீட்டாளர்களுக்கு எப்போதும் முழு ஒத்துழைப்பை தந்து தி.மு.க. அரசு உறுதுணையாக இருக்கும் என்றார்.

    இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் தா.மோ.அன் பரசன், டி.ஆர்.பி.ராஜா, தலைமை செயலாளர் முருகானந்தம், தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அரசு செயலாளர் அருண் ராய், தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் செயல் இயக்குனர் அலர்மேல்மங்கை, கார்னிங் நிறுவனத்தின் துணைத் தலைவர் மற்றும் பொது மேலாளர் ஆன்ட்ரூ பெக், கரர்னிங் நிறுவனத் தின் சர்வதேச துணைத் தலைவர் மற்றும் பொது மேலாளர் கோகன் டோரான், ஆப்டிமஸ் இன் பிராகாம், நிறுவனத்தின் தலைவர் அசோக்குமார் குப்தா, கார்னிங் இந்தியா நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர், சுதிர் பிள்ளை, கார்னிங் நிறுவனத்தின் வணிக இயக்குனர் ஜோய் லீ, கார்னிங் கொரில்லா கண்ணாடி ஆசியா நிறுவனத்தின் சர்வதேச தலைவர் ஜூம் எஸ்.கிம், பிக்டெக் நிறுவனத்தின் திட்டத் தலைவர் டாக்டர் ரவி கட்டாரே மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    முன்னதாக ஸ்ரீபெரும்புதூர் வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமையில் தி.மு.க.வினர் மேளதாளம் முழங்க சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

    • முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 9ம் ஆண்டு நினைவு நாள் இன்று.
    • ஜெயலலிதா அவர்களின் நினைவுகளைப் போற்றி வணங்குகிறோம்.

    முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவு நாளை ஒட்டி தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.

    அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவுத:-

    தமிழக முன்னாள் முதலமைச்சர், செல்வி ஜெ. ஜெயலலிதா அவர்கள் நினைவு தினம் இன்று.

    சிறந்த தேசியவாதியாகத் திகழ்ந்தவர். தமிழக மக்கள் நலனுக்காகவும், சமூக நலனுக்காகவும், எண்ணற்ற நலத்திட்டங்களைச் செயல்படுத்தியவர். அவர்தம் நினைவுகளைப் போற்றி வணங்குகிறோம்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • தங்கம் விலை கிராமுக்கு 20 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.12,000-க்கு விற்பனையாகிறது.
    • வெள்ளி விலை சற்று குறைந்துள்ளது.

    சென்னை:

    தங்கம் விலை ஒரு நாள் ஏறுவதும், மறுநாள் இறங்குவதுமான நிலையிலேயே நீடித்து வருகிறது. கடந்த வாரமும் இதே நிலை நீடித்தாலும், வார இறுதிநாளான கடந்த 29-ந்தேதி ஒரு சவரன் 95 ஆயிரத்து 840 ரூபாய்க்கு விற்பனையானது. இதனை தொடர்ந்து கடந்த திங்கட்கிழமை தங்கம் சவரனுக்கு 720 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.96,560 ஆயிரத்துக்கு விற்பனையானது. அதன் பின்னர் விலை குறைவதும், ஏறுவதுமாக இருந்து வருகிறது.

    இந்த நிலையில், இன்று தங்கம் விலை சற்று குறைந்துள்ளது. கிராமுக்கு 20 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.12,000-க்கும் சவரனுக்கு 160 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.96,000 ஆயிரத்துக்கும் விற்பனையாகிறது.

    வெள்ளி விலையும் சற்று குறைந்துள்ளது. கிராமுக்கு 4 ரூபாய் குறைந்து ஒரு கிராம் வெள்ளி 196 ரூபாய்க்கும் கிலோவுக்கு 4 ரூபாய் குறைந்து பார் வெள்ளி 1 லட்சத்து 96 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    04-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.96,160

    03-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.96,480

    02-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.96,320

    01-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.96,560

    30-11-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.94,840

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    04-12-2025- ஒரு கிராம் ரூ.200

    03-12-2025- ஒரு கிராம் ரூ.201

    02-12-2025- ஒரு கிராம் ரூ.196

    01-12-2025- ஒரு கிராம் ரூ.196

    30-11-2025- ஒரு கிராம் ரூ.192

    • மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
    • சுற்றுலா பயணிகள் பரிசல் பயணம் செய்து காவிரி ஆற்றின் அழகை ரசித்தனர்.

    ஒகேனக்கல்:

    கர்நாடகா காவிரி கரையோரங்களில் பெய்த மழையின் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறைவதும் அதிகரிப்பதுமாக இருந்து வருகிறது.

    இந்த நிலையில் தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து நேற்று 6 ஆயிரம் கனஅடியாக வந்தது.

    இதையடுத்து காவிரி நீர்பிடிப்பு பகுதியில் மழை குறைந்தது. இதனால் இன்று காலை 8 மணி நிலவரப்படி நீர்வரத்து 5 ஆயிரம் கன அடியாக குறைந்து வந்தது.

    இதனால் மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

    இதனால் சுற்றுலா பயணிகள் பரிசல் பயணம் செய்து காவிரி ஆற்றின் அழகை ரசித்தனர்.

    மேலும் அவர்கள் தொங்கு பாலத்தில் நின்று காவிரி ஆற்றில் பாறைகளுக்கு நடுவே விழும் தண்ணீரை ஆர்வமுடன் ரசித்து மகிழ்ந்தனர். பின்னர் மெயின் அருவியில் குளித்தும், பெண்கள் ஆற்றில் குளித்தும் மகிழ்ந்தனர்.

    சுற்றுலா பயணிகள் மீன் சாப்பாடு வாங்கி கொண்டு பூங்காவில் அமர்ந்து சாப்பிட்டு மகிழ்ந்தனர்.

    நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    • ஆழ்வார்களும் நாயன்மார்களும் வளர்த்தது தான் இந்த தமிழ்... அண்ணா வளர்த்தது தமிழ் அல்ல.
    • உங்கள் முதலமைச்சர் எத்தனை முருகன் கோவில்களுக்கு சென்று இருக்கிறார் என்று சொல்ல முடியுமா?

    சென்னை:

    முன்னாள் கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள வலைத்தள பதிவில் கூறியிருப்பதாவது:-

    தமிழக சட்ட அமைச்சர் ரகுபதியின் வார்த்தைகளை நான் வன்மையாக கண்டிக்கிறேன். தமிழ் வேறு இந்து மதம் வேறு.. தமிழர்கள் வேறு இந்துக்கள் வேறு என்ற பொருள்பட வேற்றுமையை விதைத்து கொண்டிருக்கிறார்.

    ஆழ்வார்களும் நாயன்மார்களும் வளர்த்தது தான் இந்த தமிழ்... அண்ணா வளர்த்தது தமிழ் அல்ல. ஆண்டாள் வளர்த்தது தான் தமிழ்.. தமிழையும் இந்து மதத்தையும் ஆன்மீகத்தையும் பிரித்துப் பார்க்க முடியாது. இப்படி தொடர்ந்து பிரித்து ஆளும் கொள்கையை மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

    உங்கள் முதலமைச்சர் எத்தனை முருகன் கோவில்களுக்கு சென்று இருக்கிறார் என்று சொல்ல முடியுமா? ஏன் முருகன் திருவிழாக்களுக்கு கூட வாழ்த்து சொல்வதில்லை. அரசியல் லாபத்திற்காக முருகனையும் இந்து மதத்தையும் பிரிக்கும் இந்த சூழ்ச்சியை தமிழக மக்கள் ஒரு நாளும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

    பா.ஜ.க. தமிழகத்தை இந்துத்துவ பரிசோதனை களமாக மாற்றுகிறது என்று ஒரு பொய்யான குற்றச்சாட்டை சொல்கிறார்! உண்மை என்ன என்றால் இந்துக்களுக்கு தமிழகத்தை ஒரு சோதனைக்களமாக வேதனைக்களமாக தி.மு.க. மாற்றிக் கொண்டிருக்கிறது. 2026-ல் தி.மு.க. பெறப்போகும் தோல்விக்கு பின்பு அவர்கள் சந்திக்கும் காலம் வேதனை காலமாக இருக்கும் என்பது உறுதி.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    • எந்த அரசியல் தேவை என்பதை மக்கள் முடிவு செய்வார்கள்.
    • மதுரைக்கு தேவை மெட்ரோ ரெயில், எம்ய்ஸ், புதிய தொழில் வாய்ப்புகள்.

    சென்னை:

    திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவது தொடர்பாக கடந்த 2 நாட்களாக நடைபெறும் சம்பவம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    மாமதுரைக்குத் தேவை வளர்ச்சி அரசியலா அல்லது ……….. அரசியலா?

    மக்கள் முடிவு செய்வார்கள்.

    மெட்ரோ இரயில்,

    #AIIMS,

    புதிய தொழிற்சாலைகள் & வேலைவாய்ப்புகள்!

    - இவைதான் மாமதுரையின் வளர்ச்சிக்காக அங்கு வாழும் மக்கள் கேட்பது! என்று கூறியுள்ளார். 

    • நூற்றாண்டு கனவு நோக்கி நம் இயக்கம் பீடுநடை போடுவதற்கு அடித்தளமிட்ட தன்னிகரற்ற ஆளுமை...
    • இன்று வரையிலும், இனியும் எனது ஒவ்வொரு செயலுக்கு பின்னால் இருக்கும் எனது அரசியல் வேத நிலையம்.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்களின் இதயத் துடிப்பில் அன்றும், இன்றும், என்றும் வாழும் எங்கள் இதயதெய்வம்,

    "மக்களால் நான்; மக்களுக்காவே நான்" என்ற தவவாழ்விற்கே தன்னை அர்ப்பணித்து, உலகெங்கும் உள்ள தமிழர்கள் வாழ்வெல்லாம் மலர வேண்டும் என்ற உன்னத நோக்கத்தோடு ஒவ்வொரு திட்டத்தையும் தாயுள்ளத்தோடு பார்த்து பார்த்து அளித்த நம் ஒப்பற்ற தலைவி,

    நூற்றாண்டு கனவு நோக்கி நம் இயக்கம் பீடுநடை போடுவதற்கு அடித்தளமிட்ட தன்னிகரற்ற ஆளுமை,

    இன்று வரையிலும், இனியும் எனது ஒவ்வொரு செயலுக்கு பின்னால் இருக்கும் எனது அரசியல் வேத நிலையம்,

    மாண்புமிகு இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களை, அவர்தம் 9-ம் ஆண்டு நினைவு நாளில் போற்றி வணங்குகிறேன்.

    தமிழ்நாட்டைப் பிடித்துள்ள தீயசக்தி திமுக குடும்ப ஆட்சியை வீழ்த்தி, "அமைதி, வளம், வளர்ச்சி" என்று மாண்புமிகு அம்மா அவர்கள் காட்டிய வழியில் தமிழ்நாட்டை செலுத்தும் மக்களுக்கான நல்லாட்சியை, அ.தி.மு.க. தலைமையில் 2026 சட்டமன்றத் தேர்தல் வாயிலாக நிறுவி, மாண்புமிகு அம்மா அவர்களின் பொற்பாதங்களில் சமர்ப்பிப்பதே, மாண்புமிகு அம்மா அவர்களுக்கு நாம் செலுத்தும் உண்மையான புகழஞ்சலி! என்று கூறியுள்ளார். 



    • ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் உள்பட 500 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • ஐகோர்ட் மதுரைக்கிளை உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளது.

    திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற ஐகோர்ட் மதுரைக்கிளை உத்தரவிட்டும், 2-வது நாளாக நேற்றும் தடை விதிக்கப்பட்டது.

    இதையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் உள்பட 500 பேர் கைது செய்யப்பட்டனர்.

    ஐகோர்ட் மதுரைக்கிளை உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளது.

    இந்நிலையில் திருப்பரங்குன்றத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது தொடர்பாக 2 குழுவாக பிரித்து போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    திருப்பரங்குன்றத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட 93 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்து அமைப்பினர் 20 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    சட்டவிரோதமாக கூடுதல், பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல் உள்ளிட்ட 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    • முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 9-ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
    • அ.தி.மு.க. தொண்டர்கள், பொதுமக்கள் என பலரும் ஜெயலலிதாவின் நினைவி இடத்தில் அஞ்சலி செலுத்துகின்றனர்.

    சென்னை:

    முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 9-ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி அ.தி.மு.க. தொண்டர்கள், பொதுமக்கள் என பலரும் ஜெயலலிதாவின் நினைவி இடத்தில் அஞ்சலி செலுத்துகின்றனர்.

    இந்த நிலையில், த.வெ.க. நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் மற்றும் கொங்கு மண்டல அமைப்பு செயலாளர் செங்கோட்டையன் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    மக்களால் நான், மக்களுக்காகவே நான் என்று வாழ்ந்து, நாட்டு மக்கள் எல்லோரும் எல்லா வளமும் பெற வேண்டும் என்று தன்னை அர்ப்பணித்து கொண்டு தவவாழ்வு வாழ்ந்த இதய தெய்வம், புரட்சித்தலைவி அம்மா அவர்களின் நினைவு நாளில் அவர்களின் தியாகங்களையும், பெரும் புகழையும் போற்றி வணங்குகிறேன் என்று கூறியுள்ளார்.


    • சென்னையில் இருந்து புறப்படும் 32 விமானங்களின் சேவை முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
    • பிற இடங்களில் இருந்து சென்னை வரும் 33 விமானங்களின் சேவையும் ரத்து.

    நாட்டின் மிகப்பெரிய விமான நிறுவனமான இண்டிகோ நேற்று 3-வது நாளாக திட்டமிட்டபடி விமானங்களை இயக்குவதில் சிக்கல்களை எதிர்கொண்டது.

    மும்பை, டெல்லி, பெங்களூரு, சென்னை உள்ளிட்ட விமான நிலையங்களில் 550-க்கும் மேற்பட்ட விமானங்களை இண்டிகோ நிறுவனம் ரத்து செய்தது. இதனால் 3-வது நாளாக பயணிகள் கடும் அவதிக்கு உள்ளானார்கள்.

    தேவையான விமான பணியாளர்களை அமர்த்துவதில் ஏற்பட்ட சிக்கல் மற்றும் விமான போக்குவரத்து அட்டவணைகளில் ஏற்பட்ட மாற்றங்கள் அந்த விமான நிறுவனத்தின் செயல்பாடுகளை பாதித்தது.

    இந்த நிலையில், 4-வது நாளாக இன்று சென்னையில் 65 இண்டிகோ விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து புறப்படும் 32 விமானங்களின் சேவை முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

    பிற இடங்களில் இருந்து சென்னை வரும் 33 விமானங்களின் சேவை என நேற்று இரவு 8 மணி முதல் தற்போது வரை 65 விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். 

    • எழும்பூரில் இருந்து புறப்பட்டு கொல்லம் செல்லும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயில் தாம்பரத்தில் இருந்து இரவு 8.20 மணிக்கு புறப்பட்டு கொல்லம் செல்லும்.
    • சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட்டு மும்பை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் சென்னை கடற்கரையில் இருந்து காலை 6.45 மணிக்கு புறப்பட்டு மும்பை செல்லும்.

    சென்னை:

    தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் சீரமைப்பு பணி நடைபெறுவதால் ஏற்கனவே, தாம்பரம், கடற்கரை ரெயில் நிலையங்களில் இருந்து சில எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில்கள் மேலும் 10 நாட்கள் அதாவது இன்று முதல் வருகிற 14-ந்தேதி வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-

    * தஞ்சாவூரில் இருந்து புறப்பட்டு சென்னை எழும்பூர் வரும் உழவன் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்.16866), கொல்லத்தில் இருந்து புறப்பட்டு சென்னை எழும்பூர் வரும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயில் (20636), ராமேசுவரத்தில் இருந்து புறப்பட்டு சென்னை எழும்பூர் வரும் சேது எக்ஸ்பிரஸ் ரெயில் (22662), ராமேசுவரத்தில் இருந்து புறப்பட்டு எழும்பூர் வரும் எக்ஸ்பிரஸ் ரெயில் (16752) இன்று (வெள்ளிக்கிழமை) முதல் வருகிற 14-ந்தேதி வரையில் தாம்பரம் ரெயில் நிலையத்தில் நிறுத்தப்படும்.

    * சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட்டு தஞ்சாவூர் செல்லும் உழவன் எக்ஸ்பிரஸ் ரெயில் (16865) நாளை (சனிக்கிழமை) முதல் வரும் 15-ந்தேதி வரையில் தாம்பரத்தில் இருந்து இரவு 11 மணிக்கு புறப்பட்டு தஞ்சாவூர் செல்லும்.

    * எழும்பூரில் இருந்து புறப்பட்டு கொல்லம் செல்லும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயில் (20635), மேற்கண்ட தேதியில் தாம்பரத்தில் இருந்து இரவு 8.20 மணிக்கு புறப்பட்டு கொல்லம் செல்லும்.

    * சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட்டு ராமேசுவரம் செல்லும் சேது எக்ஸ்பிரஸ் ரெயில் (22661), மேற்கண்ட தேதியில் தாம்பரத்தில் இருந்து மாலை 6.20 மணிக்கு புறப்பட்டு ராமேசுவரம் செல்லும்.

    * சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட்டு ராமேசுவரம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (16751), மேற்கண்ட தேதியில் தாம்பரத்தில் இருந்து இரவு 7.42 மணிக்கு புறப்பட்டு ராமேசுவரம் செல்லும்.

    * சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட்டு மும்பை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (22158), மேற்கண்ட தேதிகளில் சென்னை கடற்கரையில் இருந்து காலை 6.45 மணிக்கு புறப்பட்டு மும்பை செல்லும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×