என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • உள் தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
    • நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

    சென்னை :

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு கேரளா பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். உள் தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

    நாளை வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தென்தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

    26-ந்தேதி மற்றும் 27-ந்தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

    28 மற்றும் 29-ந்தேதிகளில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

    30-ந்தேதி கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். உள் தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

    இதனிடையே இன்று முதல் 28-ந்தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2-3° செல்சியஸ் இயல்பை விட குறைவாக இருக்கக்கூடும்.

    உறைபனி எச்சரிக்கை:

    24 மற்றும் 25-ந்தேதிகளில் தமிழகத்தின் நீலகிரி மாவட்டம் மற்றும் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் (திண்டுக்கல் மாவட்டம்) ஓரிரு இடங்களில் இரவு / அதிகாலை வேளையில் உறைபனி ஏற்பட வாய்ப்புள்ளது.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 29° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 29° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    மீனவர்களுக்கான எச்சரிக்கை:

    இன்று முதல் 27ந்தேதி வரை தென்தமிழக கடலோரப்பகுதிகள், தெற்கு அந்தமான் கடல் பகுதிகள், தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு அரபிக்கடலின் மேற்கு பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். 

    • பா.ஜ.க. அரசை கண்டித்து அனைத்து கட்சி சார்பில் கொட்டாரம் சந்திப்பில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் சிலை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ், தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட அனைத்து கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    அண்ணல் காந்தியடிகள் பெயரை நீக்கி 100 நாள் வேலைத்திட்டத்தை ஒழிக்கும் சட்டத்தை கொண்டு வந்த மத்திய பா.ஜ.க. அரசையும், ஒத்து ஊதும் அ.தி.மு.க.வையும் கண்டித்து மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் மாநிலம் முழுவதும் 400 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தை சீர்குலைக்கும் நோக்கத்தோடு, மகாத்மா காந்தி பெயரை மாற்றிய மத்திய பா.ஜ.க. அரசை கண்டித்து அனைத்து கட்சி சார்பில் இன்று கன்னியாகுமரி மாவட்டம் கொட்டாரம் சந்திப்பில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் சிலை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

     

    இந்த ஆர்ப்பாட்டத்தில் கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் எம்பி கலந்து கொண்டு கண்டன குரல் எழுப்பினார்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ், தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட அனைத்து கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • வழக்கு சென்னை சைதாப்பேட்டை 17-வது குற்றவியல் கோர்ட்டில் நீதிபதி செந்தில் குமார் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
    • டி.ஆர்.பாலு, அண்ணாமலை இருவரும் நேரில் ஆஜராகவில்லை.

    சென்னை:

    பா.ஜ.க. மாநில தலைவராக இருந்த போது அண்ணாமலை, 'தி.மு.க. பைல்ஸ்' என்ற பெயரில் தி.மு.க. அமைச்சர்கள் பலரின் சொத்து விவரங்களை கடந்த 2023-ம் ஆண்டு ஏப்ரல் 14-ந்தேதி செய்தியாளர்களை சந்தித்து வெளியிட்டார்.

    அதில், தி.மு.க. பொருளாளரும், எம்பி.யுமான டி.ஆர்.பாலு, அவரது மகனும் அமைச்சருமான டி.ஆர்.பி ராஜா மற்றும் அவரின் குடும்பத்தாருக்கு 21 நிறுவனங்கள் சொந்தமாக உள்ளதாக தெரிவித்து இருந்தார்.

    மேலும் டி.ஆர்.பாலு மற்றும் அவரின் குடும்பத்தினருக்கு 10 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு சொத்துக்கள் இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

    இது தன்னுடைய பெயருக்கும் மற்றும் தன்னுடைய குடும்பத்தினருக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் இருப்பதாக கூறி டி.ஆர்.பாலு சென்னை சைதாப்பேட்டை கோர்ட்டில் அண்ணாமலை மீது அவதூறு வழக்கு தொடர்ந்து இருந்தார்.

    இந்த வழக்கில் டி.ஆர்.பாலுவின் 21 நிறுவனங்கள், சொத்துக்கள் தொடர்பாக அண்ணாமலை தரப்பில் குறுக்கு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது.

    இந்நிலையில் இந்த வழக்கு சென்னை சைதாப்பேட்டை 17-வது குற்றவியல் கோர்ட்டில் நீதிபதி செந்தில் குமார் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, டி.ஆர்.பாலு, அண்ணாமலை இருவரும் நேரில் ஆஜராகவில்லை.

    இதையடுத்து இரு தரப்பிலும் ஆஜராகி இருந்த வக்கீல்கள் குறுக்கு விசாரணையை வேறு தேதிக்கு தள்ளி வைக்க நீதிபதியிடம் கோரிக்கை வைத்தனர்.

    இதைத் தொடர்ந்து உத்தரவிட்ட நீதிபதி, குறுக்கு விசாரணையை ஜனவரி 20-ந்தேதிக்கு தள்ளி வைத்தார்.

    • எங்கள் வீட்டு பிள்ளைக்கு பெண் பார்க்கும் மேட்ரிமோனியல் வேலையை யாரும் பார்க்க வேண்டாம்.
    • ஆண்டிபட்டி தொகுதியில் கண்டிப்பாக அ.ம.மு.க. போட்டியிட்டு வெற்றி பெறும்.

    ஆண்டிபட்டி:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் எம்.ஜி.ஆர். நினைவு தினத்தை முன்னிட்டு அவரது சிலைக்கு அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது,

    தேசிய ஜனநாயக கூட்டணியில் அ.ம.மு.க.வுக்கு 6 இடங்கள் ஒதுக்கீடு செய்து போட்டியிட போவதாக வெளியாகும் செய்தி உண்மையானதல்ல. நான் ஏற்கனவே கூட்டணி குறித்து பிப்.24ம் தேதிக்கு பிறகு அறிவிப்பதாக தெரிவித்துள்ளேன். கடந்த 8 ஆண்டுகளாக பல்வேறு வெற்றி, தோல்விகளை இந்த இயக்கம் சந்தித்துள்ளது. கடந்த தேர்தலில் யார் ஆட்சிக்கு வரக்கூடாது என முடிவு செய்து களப்பணி ஆற்றினோம். அதேபோல் வருகிற தேர்தலிலும் அ.ம.மு.க. அங்கம் வகிக்கும் கூட்டணியே மாபெரும் வெற்றி பெறும்.

    இதை நான் விளையாட்டுக்காக சொல்லவில்லை. 234 தொகுதிகளிலும் போட்டியிடும் அளவுக்கு நிர்வாகிகள் தயாராக உள்ளனர். வாக்கு வங்கி அதிகரித்துள்ளது. எங்கள் வீட்டு பிள்ளைக்கு பெண் பார்க்கும் மேட்ரிமோனியல் வேலையை யாரும் பார்க்க வேண்டாம்.

    நான் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுடன் 23 வயதில் இருந்து அரசியல் பாடம் கற்றவன். எனவே தேர்தலில் யாருடன் கூட்டணி வைத்து வெற்றி வியூகம் வகுக்க வேண்டும் என தெரியும். திருவிழா போல ஒரே மாதத்தில் மறந்து முடிவதில்லை. ஒரு கட்சி தேர்தலுக்குப் பிறகும் களத்தில் நிற்க வேண்டும். அதனை மனதில் வைத்து எங்கள் பயணம் தொடரும். லட்சியம், கொள்ளைக்காக உருவாக்கப்பட்ட இயக்கமாகும். ஆண்டிபட்டி தொகுதியில் கண்டிப்பாக அ.ம.மு.க. போட்டியிட்டு வெற்றி பெறும் என்றார். 

    • அன்புமணி பா.ம.க.வில் இல்லை. அவரை ஏற்கனவே பா.ம.க.வில் இருந்து நீக்கிவிட்டேன்.
    • 29-ந் தேதி நடைபெறும் பொதுக்குழு செல்லாது என அறிவிக்க அன்புமணிக்கு உரிமை இல்லை.

    திண்டிவனம்:

    விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே உள்ள தைலாபுரம் தோட்டத்தில் பெரியாரின் 52-ம் ஆண்டு நினைவு நாளையொட்டி அவரது உருவச்சிலைக்கு பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    பின்னர் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    எனது தரப்பு நடத்தும் பொதுக்குழு செல்லாது என அன்புமணி தரப்பினர் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளனர். அவர்கள் பொய்யர்கள், புரட்டர்கள். எது வேணாலும் சொல்வார்கள். அதை பற்றி எல்லாம் கவலைப்படுவதில்லை. 99 சதவீதம் மக்கள் என் பக்கம் தான் உள்ளார்கள். அன்புமணி பா.ம.க.வில் இல்லை. அவரை ஏற்கனவே பா.ம.க.வில் இருந்து நீக்கிவிட்டேன். அவர் எது வேணாலும் பொய்களை சொல்லுவார். 29-ந் தேதி நடைபெறும் பொதுக்குழு செல்லாது என அறிவிக்க அன்புமணிக்கு உரிமை இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அ.தி.மு.க. என்பது பூமாலை அல்ல, கோபுரம். அதில் இருந்து உதிர்ந்த செங்கல் வைத்திலிங்கம்.
    • 100 நாள் வேலை திட்டத்தில் மகாத்மா காந்தி பெயரை மாற்றக்கூடாது என்பதுதான் அ.தி.மு.க.வின் நிலைப்பாடு.

    அ.தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி இருக்கும் வரை இணைப்பு சாத்தியமில்லை என ஓ.பன்னீர்செல்வம் கருத்து தெரிவித்து இருந்தார்.

    இந்நிலையில் சென்னை மெரினாவில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * ஓ.பன்னீர்செல்வம் கருத்துக்கு எடப்பாடி பழனிசாமி விரைவில் பதில் அளிப்பார்.

    * டி.டி.வி. தினகரனை கூட்டணியில் சேர்ப்பது குறித்து எடப்பாடி பழனிசாமி முடிவு செய்வார்.

    * அ.தி.மு.க. என்பது பூமாலை அல்ல, கோபுரம். அதில் இருந்து உதிர்ந்த செங்கல் வைத்திலிங்கம்.

    * 100 நாள் வேலை திட்டத்தில் மகாத்மா காந்தி பெயரை மாற்றக்கூடாது என்பதுதான் அ.தி.மு.க.வின் நிலைப்பாடு.

    * 100 நாள் வேலை திட்டம் ஏற்கனவே இருந்த நிலையில் தொடர்ந்தால் மக்களுக்கு நல்லதுதான்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மேடவாக்கத்தில் மத்திய அரசை கண்டித்து தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • கண்டன ஆர்ப்பாட்டத்தில் கி.வீரமணி, வைகோ, திருமாவளவன் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.

    அண்ணல் காந்தியடிகள் பெயரை நீக்கி 100 நாள் வேலைத்திட்டத்தை ஒழிக்கும் சட்டத்தை கொண்டு வந்த மத்திய பா.ஜ.க. அரசையும், ஒத்து ஊதும் அ.தி.மு.க.வையும் கண்டித்து மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் மாநிலம் முழுவதும் 400 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    சென்னை மேடவாக்கத்தில் மத்திய அரசை கண்டித்து தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    100 நாள் வேலை திட்டத்தை ஒழிக்கும் சட்டத்தை கொண்டு வந்த மத்திய அரசை கண்டித்தும், விபி-ஜி ராம் ஜி சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    கண்டன ஆர்ப்பாட்டத்தில் கி.வீரமணி, வைகோ, திருமாவளவன் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.

    ஆர்ப்பாட்டத்தில், 100 நாள் வேலை இனி இல்லை என முழக்கமிட்டனர். மத்திய அரசின் சட்டத்தை அ.தி.மு.க. ஆதரிப்பதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

    • மக்களுக்கு சில விழிப்புணர்வுகளை வழங்கி புத்தாண்டு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
    • வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் அபிநயாவை பாராட்டி வருகின்றனர்.

    சென்னை:

    தமிழ்நாடு அரசு பேருந்துகளில் பயணிக்கும் மக்களுக்காக பல்வேறு வசதிகளை தமிழ்நாடு அரசு செய்து வருகிறது. இருப்பினும் சில்லரை, பேருந்து நிறுத்தத்தில் நிறுத்தாதது உள்ளிட்ட பல பிரச்சனைகளை மக்கள் சந்திக்க நேர்கிறது. இதனிடையே, தற்போது மக்களின் பயன்பாட்டிற்காக மின்சார பேருந்து பல வழித்தடங்களில் இயக்கப்படுகிறது. இதில் பயணிகளுக்கான ஆலோசனைகளை ஒலிபெருக்கி மூலம் தெரிவிக்கப்படுகிறது.

    இந்த நிலையில், ஒரு சிறிய செயல், ஒரு பெரிய மாற்றம் என்ற தலைப்பில் சென்னை மாநகர போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள வீடியோவில்,

    பெரும்பாக்கம்- பிராட்வே வழித்தடத்தில் இயக்கப்படும் 102P மின்சார பேருந்தின் நடத்துனரான அபிநயா என்பவர், பயணத்தின் போது மக்களுக்கு சில விழிப்புணர்வுகளை வழங்கி புத்தாண்டு வாழ்த்துத் தெரிவித்துள்ளார். இந்த வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் அபிநயாவை பாராட்டி வருகின்றனர். 



    • எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் கருப்பு நிற உடை அணிந்து எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அ.தி.மு.க.வினர் மரியாதை செலுத்தினர்.
    • பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க.வினர் உறுதிமொழி எடுத்தனர்.

    மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 38-வது நினைவுநாளையொட்டி அவரது நினைவிடத்தில் அ.தி.மு.க.வினர் மரியாதை செலுத்தினர்.

    எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் கருப்பு நிற உடை அணிந்து எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அ.தி.மு.க.வினர் மரியாதை செலுத்தினர். அவரைத்தொடர்ந்து மூத்த நிர்வாகிகள், அமைச்சர்கள் மரியாதை செலுத்தினார்.

    இதையடுத்து பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நினைவிடத்தில் அ.தி.மு.க.வினர் உறுதிமொழி எடுத்தனர்.

    • தமிழ்நாட்டின் பகுத்தறிவுப் பாதைக்கு வித்திட்ட சுடரொளி.
    • திராவிட இயக்கத்தின் அறிவொளி தந்தைப் பெரியார் நினைவு நாள் இன்று.

    தந்தை பெரியாரின் 52-வது நினைவுநாளையொட்டி அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    ஆதிக்கத்தின் அனைத்து வடிவங்களையும் சுட்டெரித்த பேரொளி,

    தமிழ்நாட்டின் பகுத்தறிவுப் பாதைக்கு வித்திட்ட சுடரொளி,

    திராவிட இயக்கத்தின் அறிவொளி தந்தைப் பெரியார் அவர்களின் நினைவு நாளான இன்று,

    மனிதம் போற்றும் உன்னதக் கோட்பாடாம் திராவிடத்தின் உயரிய விழுமியங்களோடு, சமூகநீதிப் பாதையில் தொடர்ந்து பயணிக்க உறுதியேற்போம்!

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • அண்ணா சாலையில் உள்ள பெரியாரின் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
    • பெரியார் சிலைக்கு அருகே வைக்கப்பட்டிருந்த படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

    தந்தை பெரியாரின் 52-வது நினைவுநாளை முன்னிட்டு அவரது திருவுருவச் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

    சென்னை அண்ணா சாலையில் உள்ள பெரியாரின் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். பெரியார் சிலைக்கு அருகே வைக்கப்பட்டிருந்த படத்திற்கு அவர் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

    தந்தை பெரியாரின் நினைவுநாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    வளைந்து நின்ற முதுகுகள் தலைநிமிர்ந்து தன்மானம் காக்க, தன்னையே இந்த மண்ணுக்குத் தந்த தந்தை பெரியாருக்குப் புகழ் வணக்கம்!

    தமிழர்கள் தலைகுனியாமல் - ஆதிக்கத்துக்கு அடிபணியாமல் - பகுத்தறிவுச் சிந்தனையோடு சக மனிதரை நேசித்துச் சமத்துவத்தைப் பேணுவதே, இனமானமே பெரிதென அவர் உழைத்த உழைப்புக்கு நாம் செலுத்தும் நன்றி!

    பெரியார் எனும் பெருஞ்சூரியனைத் திருடவும் முடியாமல் தின்று செரிக்கவும் முடியாமல் திண்டாடும் பகைவர் கூட்டத்தின் வஞ்சக எண்ணங்களை வீழ்த்திட ஒற்றுமை உணர்வோடு #ஓரணியில்_தமிழ்நாடு நின்றால், என்றும் வெற்றி நமதே!

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • அந்தக் கூட்டத்தில் எடுக்கப்படும் எந்த முடிவும் பா.ம.க.வைக் கட்டுப்படுத்தாது.
    • கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தவே சிலர் இது போன்ற அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றனர்.

    அரியலூர்:

    அரியலூரில் பா.ம.க. வழக்கறிஞர் பாலு நிருபர்களிடம் கூறியதாவது:-

    கட்சி ஒழுங்கு நடவடிக்கையை மீறிய ஜி.கே.மணிக்கு விளக்கம் கேட்டு கடந்த 18-ந்தேதி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதற்கு ஒரு வார கால அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது. அவர் அளிக்கும் விளக்கத்தின் அடிப்படையில் ஒழுங்கு நடவடிக்கைக் குழு உரிய முடிவை அறிவிக்கும்.

    சேலத்தில் வரும் 29-ந் தேதி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள கூட்டம் பா.ம.க.வின் அதிகாரப்பூர்வ பொதுக்குழு, செயற்குழு கூட்டம் அல்ல. கட்சியின் விதிகளின்படி, பொதுக்குழுவைக் கூட்டுவதற்கான அதிகாரம் தலைவர் அன்புமணி ராமதாசுக்கு மட்டுமே உள்ளது.

    எனவே, அந்தக் கூட்டத்தில் எடுக்கப்படும் எந்த முடிவும் பா.ம.க.வைக் கட்டுப்படுத்தாது. இது தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளோம். அடுத்த ஆண்டு ஆகஸ்டு 26-ந்தேதி வரை அன்புமணி ராமதாஸ் தான் கட்சியின் தலைவர்.

    கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தவே சிலர் இது போன்ற அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றனர். இதனை நாங்கள் சட்டப்படி எதிர்கொள்வோம். தி.நகரில் உள்ள அலுவலகமே கட்சியின் தலைமை அலுவலகம், சின்னமும் எங்களிடமே உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×