என் மலர்
உள்ளூர் செய்திகள்
- மண்டபத்தில் உற்சவருக்கு பால், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம் அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது.
- 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
திருவள்ளூர்:
திருத்தணி முருகன் கோயிலில் இன்று தை கிருத்திகை விழா நடைபெற்றது. இதில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் காவடி எடுத்து வந்து பிரார்த்தனைகளை நிறைவேற்றினர்.
தைகிருத்திகை விழாவையொட்டி அதிகாலை 4:30 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மூலவருக்கு தங்ககீரிடம், தங்கவேல் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடந்தது. காலை, 9:30 மணிக்கு காவடி மண்டபத்தில் உற்சவருக்கு பால், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம் அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது.
பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்றி பொது வழியில் 4 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து மூலவரை தரிசித்தனர். 100 ரூபாய் கட்டண தரிசனத்தில் 2 மணி நேரம் வரை வரிசையில் சென்று தரிசனம் செய்தனர். திருத்தணி துணை போலீஸ் சூப்பிரண்டு விக்னேஷ் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
- முதற்கட்டமாக இன்று 100 புதிய பேருந்துகளைத் முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.
- எஞ்சியுள்ள பேருந்துகள் அடுத்த இரண்டு மாதங்களில் பயன்பாட்டிற்குக் கொண்டுவரப்படும்.
சென்னை பல்லவன் இல்லத்தில் இருந்து ரூ.37.98 கோடி மதிப்பிலான 100 புதிய BS6 ரக பேருந்துகளின் இயக்கத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் சிவசங்கர், சேகர்பாபு, மேயர் பிரியா, துறையின் செயலாளர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
அதிகரித்து வரும் போக்குவரத்துத் தேவைக்கேற்ப புதிதாக 1,000 பேருந்துகள் கொள்முதல் செய்யப்படும் எனக் கடந்த 19.10.2022 அன்று சட்டப்பேரவையில் 110-விதியின்கீழ் அறிவித்தேன்.
அதன்படி, ரூ.634.99 கோடி மதிப்பீட்டில் புதிதாக 1,666 BSVI பேருந்துகளைக் கொள்முதல் செய்து இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன் முதற்கட்டமாக இன்று 100 புதிய பேருந்துகளைத் தொடங்கி வைத்தேன்.
எஞ்சியுள்ள பேருந்துகள் அடுத்த இரண்டு மாதங்களில் பயன்பாட்டிற்குக் கொண்டுவரப்படும்.
பொதுமக்கள் தங்கள் வீட்டின் சொந்த வாகனங்களில் பயணிப்பதைப் போன்று பொதுப் போக்குவரத்துகளைத் தூய்மையாகப் பராமரிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- குஷ்பு தனது மாமியாருடன் விளையாட்டரங்கம் வந்திருந்தார்.
- மோடியின் நெற்றியில் குங்குமம் வைத்து தலையில் கை வைத்து ஆசி வழங்கினார்.
சென்னை:
அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டு நாளை மறுநாள் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதையொட்டி நாடு முழுவதும் அயோத்தி ராமர் கோவிலுடன் தொடர்புடைய கோவில்களுக்கு பிரதமர் மோடி சென்று வருகிறார்.
இதற்காக 11 நாள் கடுமையான விரதமும் இருந்து வருகிறார். இது ஆன்மீக உணர்வுடையவர்கள் மத்தியில் மோடி மீது மரியாதையை ஏற்படுத்தி உள்ளது.
பா.ஜனதா தேசிய செயற்குழு உறுப்பினர் நடிகை குஷ்புவின் மாமியார் தெய்வானை சிதம்பரம் பிள்ளை (கணவர் சுந்தர்.சி.யின் அம்மா).
92 வயதாகும் தெய்வானை குஷ்புவுடன் வசித்து வருகிறார். அவர் ராம பக்தையும் ஆவார். அயோத்தியில் ராமர் கோவில் கட்டியதற்காக பிரதமர் மோடியை சந்தித்து பாராட்ட வேண்டும். வாய்ப்பு கிடைக்குமா? என்று மருமகள் குஷ்புவிடம் அடிக்கடி கேட்டுள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு குருவாயூரில் நடிகர் சுரேஷ்கோபி மகள் திருமணத்துக்கு மோடி சென்றிருந்தார். அங்கு மோடியை சந்தித்த குஷ்பு தனது மாமியாரின் ஆசை பற்றி தெரிவித்துள்ளார்.
நேற்று மோடி சென்னை வந்ததால் குஷ்பு முன் கூட்டியே பிரதமர் அலுவலகத்துக்கு மின்னஞ்சல் அனுப்பி அனுமதி கேட்டு உள்ளார்.
நேரு விளையாட்டரங்கில் சந்திப்பதற்கு அனுமதி வழங்கி இருக்கிறார்கள். இதற்காக குஷ்பு தனது மாமியாருடன் விளையாட்டரங்கம் வந்திருந்தார். கேலோ இந்தியா விளையாட்டு போட்டியை தொடங்கி வைத்த பிறகு அங்கிருந்த பசுமை அறையில் வைத்து தெய்வானையை சந்தித்து உள்ளார்.
இந்த சந்திப்பின்போது 'மோடியை பார்த்து ஆனந்த கண்ணீர் வடித்த தெய்வானை அவரது கைகளை பற்றியபடி ராமர் கோவில் கட்டிய உங்களை கடவுள் மாதிரி பார்க்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
அதை கேட்ட மோடி பெரியவர்கள் நீங்கள் அப்படி எல்லாம் சொல்லக்கூடாது. நான் சாதாரண மனிதன். ராமர் கோவில் கட்ட கிடைத்த வாய்ப்பை பாக்கியமாக கருதுகிறேன் என்றார்.
அதை கேட்ட தெய்வானை இந்த உலகம் உள்ளளவும் உங்கள் புகழும் நிலைத்து இருக்கும் என்று வாழ்த்து தெரிவித்துள்ளார். அதற்கு மோடியும் நன்றி தெரிவித்துள்ளார்.
அப்போது தங்கள் குலதெய்வம் கோவில் குங்குமத்தை கையில் வைத்திருந்த தெய்வானை அதை சொல்லி நீங்கள் வாங்குவீர்களா? என்று கேட்டுள்ளார்.
அதை கேட்டதும் உங்களை போன்றவர்களின் ஆசிதான் எனக்கு தேவை என்றவர் அவரையே தனது நெற்றியில் வைக்கும்படி கேட்டுக்கொண்டார். உடனே மகிழ்ச்சியுடன் மோடியின் நெற்றியில் குங்குமம் வைத்து தலையில் கை வைத்து ஆசி வழங்கினார்.
5 நிமிடங்களுக்கு மேல் நீடித்த இந்த சந்திப்பின்போது தெய்வானை தமிழில் பேசியதை குஷ்பு இந்தியில் மொழி பெயர்த்து மோடிக்கு தெரிவித்துள்ளார்.
- அதேபோல் ஸ்டாலினும் நான் வாரிசு அரசியல் செய்யமாட்டேன் என்று கூறினார்.
- 2022-ம் ஆண்டு அமைச்சர் பட்டியலில் இடம் பிடித்து அமைச்சர் வரிசையில் 10-வது இடம் உதயநிதி ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டுள்ளது.
மதுரை:
முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆரின் 107-வது பிறந்த நாள் பொதுக்கூட்டம், மதுரை மாநகர் மாவட்டம் மதுரை மேற்கு தொகுதி கழத்தின் சார்பில், பரவையில் நடைபெற்றது.
கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், அமைப்புச் செயலாளருமான செல்லூர் ராஜூ கலந்து கொண்டு பேசியதாவது:-
எம்.ஜி.ஆர். பாட்டாளி மக்களுக்காக, உழைக்கும் மக்களுக்காக கட்சியை தொடங்கினார். எடப்பாடி யார் இன்றைக்கு கட்சியை சிறப்பாக நடத்தி வருகிறார். அதிக உறுப்பினர்கள் கொண்ட கட்சிகளில் உலக அளவில் 7-வது இடத்திலும், இந்திய அளவில் 3-வது இடத்திலும், தமிழகத்தில் முதன்மையாக கழகத்தை உருவாக்கியுள்ளார்.
தி.மு.க. ஒன்றும் சங்கர மடம் அல்ல என கருணாநிதி கூறினார். ஆனால் ஸ்டாலினை துணை முதலமைச்சர் மற்றும் செயல் தலைவராக நியமித்தார். அதேபோல் ஸ்டாலினும் நான் வாரிசு அரசியல் செய்யமாட்டேன் என்று கூறினார்.
ஸ்டாலின் வளர்ச்சி அடைய 50 ஆண்டுகள் ஆனது. ஆனால் அவரது மகன் உதயநிதி 5 ஆண்டுகளில் அசுர வளர்ச்சியை எட்டியுள்ளார். 2019 ஆண்டில் மாநில இளைஞர் அணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட்டது, 2021-ம் ஆண்டு சட்டமன்ற உறுப்பினரானார். 2022-ம் ஆண்டு அமைச்சர் பட்டியலில் இடம் பிடித்து அமைச்சர் வரிசையில் 10-வது இடம் உதயநிதி ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டுள்ளது.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க.விற்கு 3 சதவீதம் தான் வித்தியாசம். தற்போது தி.மு.க.விற்கு அரசு ஊழியர்கள் எதிர்ப்பு, சிறு பான்மை மக்களிடத்தில் அ.தி.மு.க. வரவேற்பு ஆகியவற்றால் பாராளுமன்றத் தேர்தலில் மகத்தான வெற்றியை அ.தி.மு.க. பெறும். பா.ஜ.க. கனவு பகல் கனவாக தான் போகும்.
புலியைப் பார்த்து பூனை சூடு போட்டு கொண்ட கதையாக, கருணாநிதி நூற்றாண்டு விழாவை ஸ்டாலின் திரைத் துறை மூலம் கொண்டாடினர். அதில் ரஜினி, கமல் உள்ளிட்ட உச்ச நட்சத்திரங்கள் பங்கேற்றபோதும் வெறும் ஆயிரம் பேர் தான் அதில் பங்கேற்றனர். இதில் பேசிய உச்சநடிகர் எம்.ஜி.ஆர். வளர்ச்சிக்கு கருணாநிதியின் எழுத்து ஆற்றல் உதவியதாக என்று கூறுகிறார்.
1971-ம் ஆண்டு ஒரு விழாவில் முரசொலி மாறன் பேசும்போது நாங்கள் கடன் வாங்கி இருந்தோம், வட்டி கட்ட முடியவில்லை அப்போது எங்களை காப்பாற்ற எங்கள் தங்கம் படத்தில் புரட்சித் தலைவரும், அம்மாவும் இலவசமாக நடித்துக் கொடுத்தனர். மீண்டும் எங்களுக்கு வாழ்வு கொடுத்தவர் 8-வது வள்ளல் எம்.ஜி.ஆர். என்று கூறினார்.
அதனை தொடர்ந்து கருணாநிதி பேசும்பொழுது அவர் 8-வது வள்ளல் மட்டுமல்ல, திராவிட கர்ணன் என்று பாராட்டி எனக்கு வாழ்வு தந்தவர் புரட்சி தலைவர் என பேசினார். அப்போது முரசொலி கூட வந்தது என்பதை அங்கு பேசிய நடிகர் புரிந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- பீட்டர் தொடர்புடைய சில இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டது.
- இன்று 2-வது நாளாக அவரது வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடந்து வருகிறது
சென்னை:
பிரபல கட்டுமான நிறுவனத்தின் அதிபராக உள்ளவர் பீட்டர். இவர் சென்னை கோட்டூர்புரத்தில் வசித்து வருகிறார்.
முறைகேடாக பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையினர் அவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அதன் அடிப்படையில் பீட்டர் வீட்டில் நேற்று காலையில் இருந்து அமலாக்கத்துறை சோதனை நடந்தது. பீட்டர் தொடர்புடைய சில இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டது. சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்து எதுவும் அமலாக்கத்துறை தெரிவிக்கவில்லை.
இந்த நிலையில் இன்று 2-வது நாளாக அவரது வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடந்து வருகிறது. சோதனையில் 10-க்கும் மேற்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் ஈடுபட்டனர்.
தொழில் அதிபர் பீட்டர் தொடர்பான இடங்களில் சோதனை நடத்தியதில் சில முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. அதனை பற்றிய விவரங்களை அமலாக்கத்துறை வெளியிடவில்லை.
இந்த சோதனையின்போது மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு பாதுகாப்பாக இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- 16 வகையான மங்கல பொருட்களால் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றது.
- பக்தர்கள் மிதவை தேரினை வடம் பிடித்து இழுக்க, தெப்பத்தினை மூன்று முறை சுற்றி வந்து சுவாமி பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்.
திருப்பரங்குன்றம்:
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தெப்பத் திருவிழா கடந்த 12-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவினை முன்னிட்டு தினமும் சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் காலையில் தங்க சப்பரத்திலும், மாலையில் தங்க மயில் வாகனம், அன்னவாகனம், வெள்ளி பூத வாகனம், பச்சைக் குதிரை வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்கள்.
விழாவின் ஒன்பதாம் நாள் நிகழ்ச்சியாக தை கார்த்திகையை முன்னிட்டு இன்று காலை ஜி.எஸ்.டி. சாலையில் உள்ள தெப்பத்தில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் எழுந்தருளினார். அங்கு சுவாமிகள் முன்னிலையில் தெப்பம் முட்டுத்தள்ளுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
முன்னதாக உற்சவர் சன்னதியில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானை அம்மனுக்கு பால், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 16 வகையான மங்கல பொருட்களால் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று சிறப்பு தீபாரா தனைகள் நடைபெற்றது. தொடர்ந்து 16 கால் மண்டபம் அருகே உள்ள தேரில் சுப்பிரமணியசுவாமி தெய் வானையுடன் எழுந்தருளினார்.
அங்கு கொட்டும் மழையில் பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுக்க தேர் கீழ ரதவீதி, மேல ரதவீதி, பெரிய ரதவீதிகள் வழியாக வலம் வந்தது. தொடர்ந்து இன்று இரவு சுப்ரமணிய சுவாமி தெய்வானையுடன் தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி தருகிறார்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நாளை தெப்பத் திருவிழா நடைபெறுகிறது. விழாவினை முன்னிட்டு காலை 10 மணி அளவில் ஜி.எஸ்.டி. சாலையில் உள்ள தெப்பத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருக்கும் தெப்ப தேரில் சுப்ரமணிய சுவாமி தெய்வானையுடன் எழுந்தருளுகிறார். அங்கு பக்தர்கள் மிதவை தேரினை வடம் பிடித்து இழுக்க, தெப்பத்தினை மூன்று முறை சுற்றி வந்து சுவாமி பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்.
இதேபோல இரவு மின்னொளியிலும் தெப்ப மிதவைத்தேரில் சுவாமி எழுந்தருள மூன்று முறை சுற்றி வந்து பக்தர்களுக்கு காட்சி தருகிறார். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் துணை ஆணையர் சுரேஷ் தலைமையில் கோவில் பணியாளர்கள் செய்துள்ளனர்.
- புறநகர் பகுதிகளான பல்வேறு கிராமங்களில் இருந்து பூக்கள் விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறது.
- பரவலாக பெய்த மழை மற்றும் கடும் பனிப்பொழிவு காரணமாக பூக்களின் வரத்தும் குறைந்து காணப்பட்டது.
திண்டுக்கல்:
திண்டுக்கல் அண்ணா வணிக வளாகத்தில் ஒருங்கிணைந்த பூ மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இங்கு திண்டுக்கல் புறநகர் பகுதிகளான பல்வேறு கிராமங்களில் இருந்து பூக்கள் விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறது.
பின்னர் இங்கிருந்து வியாபாரிகள் அதனை வாங்கிச்சென்று விற்பனை செய்து வருகின்றனர். கடந்த மாதம் மார்கழி என்பதால் எந்தவித திருமணம் உள்ளிட்ட விஷேச நிகழ்ச்சிகளும் நடைபெறவில்லை. மேலும் பரவலாக பெய்த மழை மற்றும் கடும் பனிப்பொழிவு காரணமாக பூக்களின் வரத்தும் குறைந்து காணப்பட்டது.
இந்நிலையில் ஒரு மாதத்திற்கு பின்பு நாளை தை மாதத்தின் முதல் வளர்பிறை முகூர்த்த நாள் வருகிறது. நாளை திருமணம் உள்ளிட்ட பல்வேறு விஷேச நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளநிலையில் பூக்களின் தேவை அதிகரித்துள்ளது.
திண்டுக்கல் பூ மார்க்கெட்டில் இன்று 30 கிலோ மல்லிகை மட்டுமே விற்பனைக்கு வந்தது. இதனால் ஒரு கிலோ மல்லிகை ரூ.4000-க்கு விற்பனையானது. இதேபோல் முல்லைப்பூ ரூ.1800, ஜாதிப்பூ ரூ.1300, காக்கரட்டான் ரூ.1300, சம்பங்கி ரூ.300, அரளி ரூ.150, செவ்வந்தி ரூ.200, செண்டுமல்லி ரூ.70, கோழிக்கொண்டை ரூ.130, பட்டன்ரோஸ் ரூ.200, பன்னீர்ரோஸ் ரூ.150 என விற்பனையானது.
வழக்கமாக மார்க்கெட்டுக்கு வரும் பூக்களில் பாதிஅளவு கூட இன்று விற்பனைக்கு வராததால் விலை கடுமையாக உயர்ந்துள்ளது என்று வியாபாரிகள் தெரிவித்தனர். அடுத்தடுத்து முகூர்த்த நாட்கள் வர உள்ள நிலையில் பூக்களின் விலையேற்றம் சாமானிய மக்களை அதிர்ச்சி அடைய வைத்தள்ளது.
- விபத்தில் பலத்த காயமடைந்து தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு சிறப்பு சிசிச்சை அளிக்க அறிவுறுத்தி உள்ளேன்.
- உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா ஐம்பதாயிரம் ரூபாயும் வழங்கிட உத்தரவிட்டுள்ளேன்.
சென்னை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தூத்துக்குடி மாவட்டம், மூணாவயல் கிராமத்திலிருந்து நான்கு சக்கர வாகனத்தில் வேளாங்கண்ணிக்கு குடும்ப நிகழ்ச்சிக்காக செல்லும் வழியில், தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், சேதுபாவாசத்திரம், மனோரா அருகில் இன்று அதிகாலையில் எதிர்பாராதவிதமாக நிகழ்ந்த விபத்தில் பாக்கியராஜ் (62), ஞானம்மாள் (60), ராணி (40), சின்னபாண்டி (40) ஆகிய நால்வரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த செய்தியை கேட்டு வேதனை அடைந்தேன்.
இந்த விபத்தில் பலத்த காயமடைந்து தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு சிறப்பு சிசிச்சை அளிக்க அறிவுறுத்தி உள்ளேன்.
இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா ஐம்பதாயிரம் ரூபாயும், லேசான காயமடைந்தவர்களுக்கு தலா இருபத்தைந்தாயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.
- ஆசிர் பெற்ற பிரதமர் யானை பாகனிடம் யானை குறித்து விவரங்களை கேட்டறிந்தார்.
- வாஞ்சையுடன் யானையை தடவி கொடுத்து தனது அன்பை வெளிப்படுத்தினார்.
திருச்சி:
ஸ்ரீரங்கத்தில் சாமி தரிசனம் செய்ய வந்த பிரதமர் நரேந்திர மோடி, கோவில் யானை ஆண்டாளிடம் ஆசிர் பெற்றார். யானை நிறுத்தப்பட்டிருந்த 4 கால் மண்டபத்திற்கு வந்த பிரதமர் மோடி, ஆண்டாள் யானைக்கு பழங்கள் வழங்கினார். பின்னர் யானையிடம் ஆசிர் பெற்ற அவர், யானை பாகனிடம் யானை குறித்து விவரங்களை கேட்டறிந்தார். அப்போது யானைக்கு 44 வயதாவது குறித்தும், அதன் சிறப்பம்சங்கள் குறித்தும் பாகன் எடுத்து கூறினார். மேலும் ஆண்டாள் யானை ஸ்ரீரங்கம் நவராத்திரி உற்சவத்தின் போது மவுத் ஆர்கன் வாசிக்கும் என்ற தகவலை கூறினார்.
இதனை கேட்டு ஆச்சர்யமடைந்த பிரதமர் நரேந்திர மோடி வாசிக்க வைக்குமாறு கேட்டார். உடனே பாகன் யானை துதிக்கையில் மவுத் ஆர்கன் கொடுக்க, ஆண்டாள் வாசித்து காண்பித்தது. இதனை ரசித்த மோடி வாஞ்சையுடன் யானையை தடவி கொடுத்து தனது அன்பை வெளிப்படுத்தினார். இந்த ஆண்டாள் யானையானது, குட்டியாக காரமடை கோவிலில் இருக்கும் போது ரஜினிகாந்த நடித்த தம்பிக்கு எந்த ஊர் என்ற படத்தில் ரஜினிக்கு ஆசீர்வாதம் செய்யும் காட்சியில் வரும் என்பது குறிப்பிடத்தக்கது.
- ஸ்ரீரங்கம் கோவிலில் மூலவர், கருடாழ்வார் சன்னதிகளில் சாமி தரிசனம் செய்தார்.
- கம்ப ராமாயண அரங்கேற்ற மண்டபத்தில் தமிழில் பாடப்பட்ட கம்ப ராமாயணத்தை மனமுருகி கேட்டு, பிரதமர் மோடி ரசித்தார்.
திருச்சி:
ஆன்மிக சுற்றுப்பயணமாக 3 நாள் தமிழகம் வந்துள்ள பிரதமர் மோடி நேற்று சென்னை நேரு விளையாட்டு அரங்கத்தில் "கேலோ இந்தியா" போட்டியை தொடங்கி வைத்தார்.
இன்று திருச்சி சென்ற பிரதமர் மோடி ஸ்ரீரங்கம் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அங்கு அவருக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. ஸ்ரீரங்கம் கோவிலில் மூலவர், கருடாழ்வார் சன்னதிகளில் சாமி தரிசனம் செய்தார்.
கம்ப ராமாயண அரங்கேற்ற மண்டபத்தில் தமிழில் பாடப்பட்ட கம்ப ராமாயணத்தை மனமுருகி கேட்டு, பிரதமர் மோடி ரசித்தார்.
இதையடுத்து ஸ்ரீரங்கம் கோவிலில் தரிசனத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி, திருச்சியில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் ராமேஸ்வரம் புறப்பட்டார். ஹெலிபேட் தளத்தில் பிரதமர் மோடியை, அண்ணாமலை உள்பட பலர் வழியனுப்பி வைத்தனர்.
இதைத்தொடர்ந்து ராமேஸ்வரம் பேய்க்கரும்பு அருகே 2 மணிக்கு வந்து இறங்குகிறார். அங்கிருந்து சாலை மார்க்கமாக செல்லும் பிரதமர் மோடி 2.10 மணிக்கு ராமகிருஷ்ணா மடத்திற்கு வருகிறார்.
பின்னர் 2.45 மணிக்கு ராமநாத சுவாமி கோவிலுக்கு செல்லும் மோடி, புனித தீர்த்தங்களில் நீராடி, பின் சாமி தரிசனம் செய்கிறார்.
* 3.30 முதல் 6.00 மணி வரை நடைபெறும் ராமாயண கதாபாத்திர நிகழ்ச்சியை கண்டு களிக்கிறார்.
* 6.00 முதல் 6.30 மணி வரை கோவிலின் முக்கிய நிர்வாகிகளை பிரதமர் சந்திக்கிறார்.
* 7.25 மணிக்கு ராமகிருஷ்ண மடம் செல்லும் பிரதமர் அங்கு இரவு தங்குகிறார்.
- ராமநாத சுவாமி கோவிலுக்கு கடந்த 2 நாட்களில் பல்வேறு வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர்.
- 50-க்கும் மேற்பட்ட விடுதிகளில் தங்கியிருந்த அவர்கள் இன்று காலி செய்த நிலையில் எங்கு செல்வது என்று தெரியாமல் ஒரே இடத்தில் குவிந்துள்ளனர்.
ராமேசுவரம்:
பிரதமர் மோடி 2 நாள் ஆன்மீக பயணமாக இன்று பிற்பகல் ராமேசுவரம் வருகை தருகிறார். இதையொட்டி போக்குவரத்தில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக ராமநாதபுரத்தில் இருந்து இன்று மதியம் 12 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை பொது போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.
அதேபோல் நாளை காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை ராமேசுவரத்தில் அனைத்து விதமான போக்குவரத்துக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்த 2 நாட்களும் ராமேசுவரத்தில் கனரக வாகனங்களுக்கு அனுமதியில்லை. 3,400 போலீசாருடன் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையே ராமேசுவரம் ராமநாத சுவாமி கோவிலுக்கு கடந்த 2 நாட்களில் பல்வேறு வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர். அவர்களில் ராஜஸ்தானை சேர்ந்த 1,200 பக்தர்கள் ஆன்மீக சுற்றுலாவாக நேற்று முன்தினம் சிறப்பு ரெயில் மூலம் மதுரை வந்து, அங்கிருந்து பேருந்துகளில் ராமேசுவரம் வந்தனர்.
இன்று அவர்கள் மீண்டும் மதுரைக்கு திரும்பவேண்டிய நிலையில், பிரதமர் மோடி வருகையால் போக்குவரத்து தடைபட்டுள்ளதால் தவித்து வருகிறார்கள். 50-க்கும் மேற்பட்ட விடுதிகளில் தங்கியிருந்த அவர்கள் இன்று காலி செய்த நிலையில் எங்கு செல்வது என்று தெரியாமல் ஒரே இடத்தில் குவிந்துள்ளனர்.
பிரதமர் மோடி பிற்பகலில் ராமேசுவரம் வந்தபிறகு மாலை 4 மணிக்கு மேல் போக்குவரத்து சரிசெய்யப்பட்டு, ராஜஸ்தான் மாநில பக்தர்கள் பத்திரமாக மதுரைக்கு பேருந்துகளில் அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று சுற்றுலா நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- சட்ட போராட்டம் மேலும் தொடரும் என்று ஓ.பன்னீர்செல்வத்தின் நெருங்கிய ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.
- சிவில் கோர்ட்டிலும் ஓ.பன்னீர் செல்வத்துக்கு சாதகமான தீர்ப்பு கிடைக்க சாத்தியமில்லை.
சென்னை:
அ.தி.மு.க. எடப்பாடி பழனிசாமியின் கைகளுக்கு சென்ற பிறகு அதை கைப்பற்ற ஓ.பன்னீர் செல்வம் மேற்கொண்ட சட்ட போராட்டங்கள் எதுவும் வெற்றி பெறவில்லை.
கடைசியாக, எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடத்தப்பட்ட பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். ஆனால் தீர்மானங்களுக்கு தடை விதிக்க ஐேகார்ட்டு மறுத்துவிட்டது.
இதை எதிர்த்து ஓ.பி.எஸ். தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்து இருந்தனர். இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் தீபாங்கர் தத்தா ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.
மனுவை விசாரித்த நீதிபதிகள் சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பில் தலையிட முடியாது என்று கூறினர். இதையடுத்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களையும் தள்ளுபடி செய்தனர்.
இது ஓ.பன்னீர்செல்வத்துக்கு மிகப்பெரிய பின்னடைவாகவே கருதப்படுகிறது. சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பால் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் மிகவும் சோர்ந்து போய் இருக்கிறார்கள்.
இதற்கிடையில் சட்ட போராட்டம் மேலும் தொடரும் என்று ஓ.பன்னீர்செல் வத்தின் நெருங்கிய ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.
சிவில் கோர்ட்டில் மட்டும் ஒரு வழக்கு நிலுவையில் இருக்கிறது. அந்த வழக்கையும் விரைந்து விசாரித்து முடிக்கும்படி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
எந்த பிடிமானமும் இல்லாத நிலையில் ஓ.பன்னீர்செல்வத்தின் அடுத்த கட்ட அரசியல் பயணம் எப்படி இருக்கும் என்று அரசியல் தளத்தில் பரபரப்பாக விவாதிக்கப்படுகிறது.
இதுபற்றி அரசியல் விமர்சகரான தராசு ஷ்யாம் கூறியதாவது:-
இனியும் ஒ.பன்னீர்செல்வத்தின் சட்டப் போராட்டம் என்பது நிறைவேறாத கனவை போன்றது.
விசாரணை நீதிமன்றம் கட்சியின் நிலைமையையும் பார்க்கும். அதை பார்க்கும் போது பொதுக்குழுவில் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்ட எடப்பாடி பழனிசாமியின் தலைமையின் கீழ் கட்சி இருப்பது மறுக்க முடியாத உண்மை. எனவே சிவில் கோர்ட்டிலும் ஓ.பன்னீர் செல்வத்துக்கு சாதகமான தீர்ப்பு கிடைக்க சாத்தியமில்லை.
கடந்த பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்பு அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் தனிச் சின்னமாக பரிசு பெட்டி சின்னத்தை கேட்டு பெற்றார். அதே போல் ஓ.பன்னீர்செல்வமும் தன் தரப்பு வேட்பாளர்களுக்கு தனி சின்னங்களை தேடுவதே சிறப்பாக இருக்கும்.
அவரது ஆதரவாளர்களையும் தக்க வைத்துக் கொள்ள முடியும் என்றார்.






