search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    உலகம் உள்ளளவும் உங்கள் புகழும் நிலைத்து இருக்கும்... மோடியை வாழ்த்திய குஷ்புவின் 92 வயது மாமியார்
    X

    உலகம் உள்ளளவும் உங்கள் புகழும் நிலைத்து இருக்கும்... மோடியை வாழ்த்திய குஷ்புவின் 92 வயது மாமியார்

    • குஷ்பு தனது மாமியாருடன் விளையாட்டரங்கம் வந்திருந்தார்.
    • மோடியின் நெற்றியில் குங்குமம் வைத்து தலையில் கை வைத்து ஆசி வழங்கினார்.

    சென்னை:

    அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டு நாளை மறுநாள் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதையொட்டி நாடு முழுவதும் அயோத்தி ராமர் கோவிலுடன் தொடர்புடைய கோவில்களுக்கு பிரதமர் மோடி சென்று வருகிறார்.

    இதற்காக 11 நாள் கடுமையான விரதமும் இருந்து வருகிறார். இது ஆன்மீக உணர்வுடையவர்கள் மத்தியில் மோடி மீது மரியாதையை ஏற்படுத்தி உள்ளது.

    பா.ஜனதா தேசிய செயற்குழு உறுப்பினர் நடிகை குஷ்புவின் மாமியார் தெய்வானை சிதம்பரம் பிள்ளை (கணவர் சுந்தர்.சி.யின் அம்மா).

    92 வயதாகும் தெய்வானை குஷ்புவுடன் வசித்து வருகிறார். அவர் ராம பக்தையும் ஆவார். அயோத்தியில் ராமர் கோவில் கட்டியதற்காக பிரதமர் மோடியை சந்தித்து பாராட்ட வேண்டும். வாய்ப்பு கிடைக்குமா? என்று மருமகள் குஷ்புவிடம் அடிக்கடி கேட்டுள்ளார்.

    கடந்த சில தினங்களுக்கு முன்பு குருவாயூரில் நடிகர் சுரேஷ்கோபி மகள் திருமணத்துக்கு மோடி சென்றிருந்தார். அங்கு மோடியை சந்தித்த குஷ்பு தனது மாமியாரின் ஆசை பற்றி தெரிவித்துள்ளார்.

    நேற்று மோடி சென்னை வந்ததால் குஷ்பு முன் கூட்டியே பிரதமர் அலுவலகத்துக்கு மின்னஞ்சல் அனுப்பி அனுமதி கேட்டு உள்ளார்.

    நேரு விளையாட்டரங்கில் சந்திப்பதற்கு அனுமதி வழங்கி இருக்கிறார்கள். இதற்காக குஷ்பு தனது மாமியாருடன் விளையாட்டரங்கம் வந்திருந்தார். கேலோ இந்தியா விளையாட்டு போட்டியை தொடங்கி வைத்த பிறகு அங்கிருந்த பசுமை அறையில் வைத்து தெய்வானையை சந்தித்து உள்ளார்.

    இந்த சந்திப்பின்போது 'மோடியை பார்த்து ஆனந்த கண்ணீர் வடித்த தெய்வானை அவரது கைகளை பற்றியபடி ராமர் கோவில் கட்டிய உங்களை கடவுள் மாதிரி பார்க்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

    அதை கேட்ட மோடி பெரியவர்கள் நீங்கள் அப்படி எல்லாம் சொல்லக்கூடாது. நான் சாதாரண மனிதன். ராமர் கோவில் கட்ட கிடைத்த வாய்ப்பை பாக்கியமாக கருதுகிறேன் என்றார்.

    அதை கேட்ட தெய்வானை இந்த உலகம் உள்ளளவும் உங்கள் புகழும் நிலைத்து இருக்கும் என்று வாழ்த்து தெரிவித்துள்ளார். அதற்கு மோடியும் நன்றி தெரிவித்துள்ளார்.

    அப்போது தங்கள் குலதெய்வம் கோவில் குங்குமத்தை கையில் வைத்திருந்த தெய்வானை அதை சொல்லி நீங்கள் வாங்குவீர்களா? என்று கேட்டுள்ளார்.

    அதை கேட்டதும் உங்களை போன்றவர்களின் ஆசிதான் எனக்கு தேவை என்றவர் அவரையே தனது நெற்றியில் வைக்கும்படி கேட்டுக்கொண்டார். உடனே மகிழ்ச்சியுடன் மோடியின் நெற்றியில் குங்குமம் வைத்து தலையில் கை வைத்து ஆசி வழங்கினார்.

    5 நிமிடங்களுக்கு மேல் நீடித்த இந்த சந்திப்பின்போது தெய்வானை தமிழில் பேசியதை குஷ்பு இந்தியில் மொழி பெயர்த்து மோடிக்கு தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×