என் மலர்
உள்ளூர் செய்திகள்
- ராமர் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தது.
- சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாரதனை நடத்தப்பட்டது.
நெல்லை:
ராமஜென்ம பூமியான அயோத்தியில் பால ராமர் கோவில் கட்டி முடிக்கப்பட்டு இன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி உள்ளிட்ட முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள், சினிமா பிரபலங்கள், தொழிலதிபர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இதனையொட்டி அயோத்தி நகரம் முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள ராமர் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தது. நெல்லை மாவட்டத்தில் உள்ள ராமர் கோவில்களிலும் இன்று சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேகங்கள் நடந்தது. அதன் ஒரு பகுதியாக சுத்தமல்லி விலக்கு வ.உ.சி. நகரில் உள்ள ஸ்ரீ ஜெய் மாருதி ஞான தர்ம பீடத்தில் சிறப்பு அபிஷேக தீபாராதனையுடன் நாம ஜெபம் நடைபெற்றது. மேலச்சேவல் நவநீதகிருஷ்ணன் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது.
மேலும் குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள், பெண்களுக்கு கோலப் போட்டி நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
பிரசித்தி பெற்ற வரலாற்று சிறப்புமிக்க கோவில்களில் ஒன்றான நெல்லையை அடுத்த அருகன்குளம் காட்டு ராமர் கோவிலில் இன்று அதிகாலை முதல் சிறப்பு பூஜைகள் நடந்து வருகிறது. அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக அழைப்பிதழ் மற்றும் கோவில் புகைப்படத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.
தொடர்ந்து கோவிலில் அமைக்கப்பட்டுள்ள யாக சாலையில் சிறப்பு ஹோமம் நடத்தப்பட்டு சீதா பிராட்டி சமேத ஸ்ரீ ராமபிரான், லட்சுமணர் மற்றும் ஆஞ்சநேய சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.
பின்னர் பால், தயிர், மஞ்சள், இளநீர் உள்ளிட்ட 16 வகையான அபிஷேக திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகமும் செய்யப்பட்டது. சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாரதனை நடத்தப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
- ஊருக்குள் வந்த சிறுத்தை எங்கு சென்றது என்று தெரியவில்லை
- சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்க தானியங்கி கேமராக்கள் பொருத்தி கண்காணிக்கப்படும்.
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 10 வனச்சரகங்கள் உள்ளன. இதில் யானை, மான், புலி, சிறுத்தை, கரடி, காட்டெருமை உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன.
இதில் புலி, சிறுத்தை அவ்வப்போது வனப்பகுதியை விட்டு வெளியேறி கிராமத்துக்குள் புகுந்து கால்நடைகளை வேட்டையாடி வருவது தொடர்கதையாகி வருகிறது.
இந்நிலையில் சத்தியமங்கலம் வனச்சரகத்திற்கு உட்பட்ட அரியப்பம்பாளையம் பகுதியில் நேற்று இரவு 9 மணி அளவில் டீக்கடையின் முன்பு ஒருவர் நின்று கொண்டிருந்தார். தற்போது வனப்பகுதியை விட்டு வெளியேறி வந்த ஒரு சிறுத்தை அந்த நபர் கண்முன்னே பாய்ந்து ஓடியதை நேரில் பார்த்தார்.

இதை பார்த்து அந்த நபர் அலறி கூச்சலிட்டார். இதையடுத்து அப்பகுதியில் மக்கள் திரண்டு வந்து பார்த்தனர். அப்போது சிறுத்தை சென்ற கால் தடம் அங்கு பதிவாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து அங்கு பதிவாகி இருந்த கால் தடயங்களை சேகரித்து ஆய்வு செய்தனர். அது சிறுத்தை கால் தடம் தான் என்பதை அவர்கள் உறுதி செய்தனர்.
ஆனால் நேற்று இரவு ஊருக்குள் வந்த சிறுத்தை எங்கு சென்றது என்று தெரியவில்லை. இதனையடுத்து அரியப்பம்பாளையம் பகுதி பொதுமக்கள் மிகுந்த கவனத்துடனும் இரவு நேரங்களில் தேவையில்லாமல் வெளியே செல்ல வேண்டாம் எனவும் வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்க தானியங்கி கேமராக்கள் பொருத்தி கண்காணிக்கப்படும். தேவைப்பட்டால் கூண்டு வைத்து பிடிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.
- சிவன் மற்றும் பெருமாள் கோவில் ஒரே வளாகத்தில் அமைய பெற்று உள்ள கோவில் ஆகும்.
- கோவிலில் ஆண்டுதோறும் பல்வேறு விழாக்கள் நடைபெறுவது வழக்கம்.
பவானி:
பவானி நகரில் மிகவும் பிரசித்தி பெற்ற சங்கமேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. வேதநாயகி உடனமர் சங்கமேஸ்வரர் மற்றும் ஸ்ரீதேவி பூதேவி உடனமர் ஆதிகேசவ பெருமாள் ஆகிய சிவன் மற்றும் பெருமாள் கோவில் ஒரே வளாகத்தில் அமைய பெற்று உள்ள கோவில் ஆகும்.
இந்த கோவிலில் ஆண்டுதோறும் பல்வேறு விழாக்கள் நடைபெறுவது வழக்கம். கோவில் பின்பகுதியில் உள்ள இரட்டை விநாயகர் சன்னதி படித்துறையில் காவேரி, பவானி மற்றும் கண்ணுக்கு புலப்படாத அமுத நதி என 3 நதிகள் சங்கமிப்பதால் முக்கூடல் சங்கமம், தென்னகத்தின் காசி, பரிகார ஸ்தலம் என பல பெயர் பெற்று விளங்கி வருகிறது.
இந்த கோவிலுக்கு தினசரி உள்ளூர் வெளியூர் வெளிமாநில பக்தர்கள் என பல வருகை தந்து தங்கள் குடும்பத்தில் இறந்த முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம், எள்ளும் தண்ணியும் விடுதல், திருமண தடை தோஷம் நீக்குதல், செவ்வாய் தோஷம் நீக்குதல், ராகு கேது பரிகார தோஷம் நீக்குதல் உட்பட பல்வேறு பரிகார பூஜைகள் செய்து சாமி வழிபாடு மேற்கொண்டு சென்று வருகின்றனர்.
அதேபோல் பரிகார பூஜையில் கலந்து கொள்ளும் பக்தர்கள் தாங்கள் அணிந்து கொண்ட பழைய துணிகளை காவிரி ஆற்றில் கழற்றி விட்டு செல்வது பல ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அந்த துணிகளை சங்கமேஸ்வரர் கோவில் நிர்வாகத்தின் மூலம் ஏலம் விடப்பட்டு ஏலதாரர்கள் அதை சுத்தம் செய்வது வழக்கமாக உள்ளது.

தற்போது காவிரி ஆற்றில் இருந்து குடிநீர் தேவைக்காக மட்டும் தினசரி 500 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படும் நிலையில் காவிரி ஆறு பார்க்கும் இடமெல்லாம் பாறைகளாக காட்சியளிக்கிறது. இந்நிலையில் பக்தர்கள் விடும் துணிகள் ஆங்காங்கே காவிரி ஆற்றின் பாறைகள் உட்பட படித்துறைகள் என பல்வேறு இடங்களில் கிடப்பதை நாம் பார்க்க முடிகிறது.
துணிகளை அப்புறபடுத்த ஏலம் எடுத்தவர்கள் அவர்களுக்கு என்ன தேவை என்பதை அறிந்து அந்த துணிகளை மட்டும் எடுத்துக் கொள்வதாகவும், மீதமுள்ள துணிகளை ஆங்காங்கே விட்டு விடுவதாகவும் பக்தர்கள் பலரும் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.
இதனால் பார்க்கும் இடமெல்லாம் பழைய துணிகளாகவும், குவிந்து கிடக்கும் குப்பைகளும், பார்க்கவே முகம் சுளிக்கும் வகையில் கூடுதுறை கோவில் பின்பகுதி அமைந்துள்ளது என பக்தர்கள் பலரும் வேதனையுடன் தெரிவித்து கொண்டனர்.
இதனால் சங்கமேஸ்வரர் கோவில் நிர்வாகத்தினர் உரிய நடவடிக்கை எடுத்து இனிவரும் காலங்களில் பக்தர்கள் அந்த துணிகளை ஆற்றில் விடுவதை தடுத்தோ அல்லது துணிகள் தண்ணீர் ஓடும் இடங்களில் போட வலியுறுத்தி பக்தர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி காவிரி ஆற்றையும், சங்கமேஸ்வரர் கோவில் படித்துறை பகுதிகளையும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பக்தர்கள் பலரும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
- இளமையும், சுறுசுறுப்பும் கொண்டவர் உதயநிதி.
- பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்புகளை எளிதில் எதிர்கொள்ளும் அளவுக்கு உதயநிதியின் பேச்சு அமைந்து உள்ளதாக தெரிவித்தார்.
தி.மு.க. இளைஞரணியின் 2-வது மாநில மாநாடு சேலத்தில் நேற்று பிரமாண்டமாக நடைபெற்றது.
இளைஞரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்சி பொறுப்புக்கு வந்த பிறகு நடத்திய மாநாடு என்பதால் இந்த மாநாடு கூடுதல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
சுமார் 5 லட்சம் பேர் திரண்ட இந்த மாநாடு அமைச்சர் உதயநிதியின் திறமையை வெளிப்படுத்தும் மாநாடாக அமைந்தது. இந்த மாநாட்டுக்கு பிறகு அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவி கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இது வதந்தி என்று மாநாட்டுக்கு முன்பே முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெளிவுப்படுத்தி இருந்தார்.
ஆனாலும் இளைஞரணி மாநாட்டில் பங்கேற்றவர்கள் அனைவரும் அமைச்சர் உதயநிதியின் பேச்சையும், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேச்சையும் கூர்ந்து கவனித்தனர். மாநாட்டின் முகப்பில் வைக்கப்பட்டிருந்த தலைவர்களது கட்அவுட்டுகளில் பெரியார், அண்ணா, கருணாநிதி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரிசையில் உதயநிதி ஸ்டாலின் படமும் இடம்பெற்றிருந்தது.
இந்த கூட்டத்தில் பங்கேற்ற இளைஞரணியினர் மட்டுமின்றி கட்சியின் மூத்த நிர்வாகிகள் அனைவரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அடுத்த படியாக அடுத்த தலைவராக உதயநிதியை புகழ்ந்தனர். இளமையும், சுறுசுறுப்பும் கொண்டவர் உதயநிதி ஸ்டாலின், இந்துத்துவா அரசியலை எதிர்கொள்ள துணிவுமிக்க தலைவராக உதயநிதி ஸ்டாலின் செயல்படுகிறார். இப்படிப்பட்ட தலைவர்தான் தேவை என்று புகழ்ந்தனர். சேலம் மாவட்ட இளைஞரணி உறுப்பினர் ஆர்.செல்வராஜ் கூறுகையில், உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி விரைவில் கிடைக்கும் என்று நம்புவதாக தனது ஆசையை வெளிப்படுத்தினார்.
இதேபோல் பெரும்பாக்கத்தை சேர்ந்த டி.ஆர்.முருகேசன் என்பவரும் உதயநிதியின் அரசியல் திறமையை வெளிப்படுத்தி புகழ்ந்தார். பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்புகளை எளிதில் எதிர்கொள்ளும் அளவுக்கு உதயநிதியின் பேச்சு அமைந்து உள்ளதாக தெரிவித்தார்.
தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் திண்டுக்கல் லியோனி பேசுகையில், அரசியலில் மறைந்த தலைவர் கலைஞர் காட்டிய வழியில் நடந்தோம். அதனை தொடர்ந்து தளபதி மு.க. ஸ்டாலினை ஏற்றுக் கொண் டோம். இப்போது உதய நிதியை துணை முதல்வராக்க விரும்புகிறோம்.
உதயநிதியின் வருகையால் தி.மு.க. இளைஞரணி புத்துணர்ச்சி பெற்றுள்ளது என்றும் கருத்து தெரிவித்தார்.
கடந்த பாராளுமன்ற தேர்தலின்போது உதயநிதி பிரசாரம் செய்ததை விட இப்போது அவரது பிரசாரம் இந்திய அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் என்றும் அவரது உழைப்புக்கு கண்டிப்பாக அங்கீகாரம் கிடைக்கும் என்றும் நிர்வாகிகள் கருத்து தெரிவித்தனர்.
மாநாட்டில் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இந்த மாநாடு தி.மு.க.வுக்கு ஒரு புத்துணர்ச்சியை கொடுத்துள்ளது. அவ்வளவு சிறப்பாக மாநாட்டை நடத்தி காட்டியிருக்கிறீர்கள். உங்கள் உழைப்புக்கு உரிய பலன் வந்து சேரும் என்று பெருமையுடன் கூறினார்.
மாநாட்டில் அமைச்சர் உதயநிதியை போல் அவரது மகனான இன்பநிதியும் வெள்ளை நிற டிசர்ட் அணிந்து பங்கேற்றிருந்தார். அவரது வருகையும் மாநாட்டில் உன்னிப்பாக கவனிக்கப்பட்டது.
- வனப்பகுதியில் இருந்து அடிக்கடி வெளியேறும் யானைகளால் பயிர்கள் அதிக அளவில் சேதமாகி வருகின்றன.
- அட்டகாசம் செய்து வரும் யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும்.
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையை ஒட்டி 15 ஏக்கர் பரப்பளவில் பொதுப்பணித் துறைக்கு சொந்தமான பூங்கா உள்ளது. வனப்பகுதியை ஒட்டி பூங்கா அமைந்துள்ளது. இதனால் வனப்பகுதியை விட்டு வெளியேறும் யானைகள் இந்த சாலையை கடந்து செல்வது வழக்கம்.
நேற்று முன்தினம் இரவு வனப் பகுதியை விட்டு வெளியேறிய இரு காட்டு யானைகள் பண்ணாரி சாலை வந்து அங்கிருந்து பவானிசாகர் பகுதிக்கு வந்தது. சிறிது நேரத்தில் பவானிசாகர் பூங்கா தடுப்பு கேட், கம்பி வேலியை இடித்து சேதப்படுத்தியது. சத்தம் கேட்டு வந்த பூங்கா ஊழியர்கள் யானைகள் இருப்பதை கண்டு அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.
பின்னர் ஊழியர்கள் இதுகுறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் அப்பகுதி மக்கள் பட்டாசு வெடித்து யானைகளை விரட்டினர். மீன் பண்ணை வழியாக மீண்டும் வனப்பகுதிக்குள் யானைகள் சென்றன.
வனப்பகுதியில் இருந்து அடிக்கடி வெளியேறும் யானைகளால் பயிர்கள் அதிக அளவில் சேதமாகி வருகின்றன. வனத்துறை சார்பில் வெட்டப்பட்ட யானை தடுப்பு அகழிகள், ஆழமாக இல்லாததால் மண் மூடி கிடக்கிறது. வனத்தை ஒட்டி உள்ள காராச்சிக் கொரை பகுதியில் யானை தடுப்பு அகழிகள் வெட்டவில்லை. இதனால் யானைகள் சுலபமாக ஊருக்குள் புகுந்து விடுகிறது. அட்டகாசம் செய்து வரும் யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- பாராளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது.
- கழக உடன் பிறப்புகள் முழு ஒத்துழைப்பு நல்கிடக் கேட்டுக்கொள்கிறேன்.
சென்னை:
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதை முன்னிட்டு, அ.தி.மு.க.வின் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக கீழ்க்கண்டவாறு தொகுதிப் பங்கீட்டுக் குழு, தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு, தேர்தல் பிரச்சாரக் குழு, தேர்தல் விளம்பரக் குழு ஆகிய குழுக்கள் அமைக்கப்படுகின்றன.
அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக கழகத்தின் சார்பில் கீழ்க்கண்டவாறு குழு அமைக்கப்படுகிறது.
இதில் எம்.எல்.ஏ.க்கள் கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சி. சீனிவாசன், பி. தங்கமணி, எஸ்.பி. வேலுமணி, பா. பென்ஜமின் இடம் பெற்றுள்ளனர்.
அ.தி.மு.க. சார்பில் தேர்தல் அறிக்கை தயார் செய்வதற்கு கீழ்க்கண்டவாறு குழு அமைக்கப்படுகிறது.
இதில், இரா. விசுவநாதன், சி.பொன்னையன், பொள்ளாச்சி வி. ஜெயராமன், டி. ஜெயக்குமார், சி.வி. சண்முகம், செ. செம்மலை பா. வளர்மதி, ஓ.எஸ். மணியன், ஆர்.பி. உதயகுமார், வைகைச்செல்வன் இடம் பெற்றுள்ளனர்.
அ.தி.மு.க. சார்பில் தேர்தல் பிரச்சாரப் பணிகளை மேற்கொள்வதற்காக கீழ்க்கண்டவாறு குழு அமைக்கப்படுகிறது.
இதில், டாக்டர் மு. தம்பிதுரை, கே.ஏ. செங்கோட்டையன், என். தளவாய்சுந்தரம், செல்லூர் கே. ராஜூ, ப. தனபால், கே.பி. அன்பழகன், ஆர்.காமராஜ், எஸ். கோகுல இந்திரா, உடுமலை கே. ராதாகிருஷ்ணன், என்.ஆர். சிவபதி இடம் பெற்றுள்ளனர்.
அ.தி.மு.க. சார்பில் தேர்தல் சம்பந்தமான விளம்பரப் பணிகளை மேற்கொள்வதற்காக கீழ்க்கண்டவாறு குழு அமைக்கப்படுகிறது.
இதில், டாக்டர் சி. விஜய பாஸ்கர், கடம்பூர் சி. ராஜூ, கே.டி. ராஜேந்திரபாலாஜி, அக்ரி எஸ்.எஸ். கிருஷ்ண மூர்த்தி, டாக்டர் பி. வேணு கோபால், டாக்டர் வி.பி.பி. பரமசிவம், ஐ.எஸ். இன்பதுரை, எஸ். அப்துல் ரஹீம், வி.வி.ஆர். ராஜ் சத்யன், வி.எம். ராஜலெட்சுமி இடம் பெற்றுள்ளனர்.
இவர்களுக்கு, கழக உடன் பிறப்புகள் முழு ஒத்துழைப்பு நல்கிடக் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறி உள்ளார்.
- திருப்பூர் மாநகரில் அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில் போலீசார் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
- மத்திய போலீஸ் படையின் ஒரு பிரிவான விரைவு அதிரடிப்படை போலீசார் திருப்பூரில் முகாமிட்டுள்ளனர்.
திருப்பூர்:
அயோத்தியில் புதியதாக கட்டப்பட்டுள்ள ராமர் கோவில் கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க தமிழகம் முழுவதும் போலீசார் உஷார் படுத்தப்பட்டனர். திருப்பூர் மாநகரில் அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில் போலீசார் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுப ட்டனர்.
இந்நிலையில் மத்திய போலீஸ் படையின் ஒரு பிரிவான விரைவு அதிரடிப்படை போலீசார் திருப்பூரில் முகாமிட்டுள்ளனர். இந்த படைக்கு 1 துணை கமிஷனர், 2 இன்ஸ்பெக்டர்கள், 4 சப்-இன்ஸ்பெக்டர்கள், 5 சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட 33 பேர் வருகை தந்துள்ளனர்.
இந்த விரைவு அதிரடி படையினர் திருப்பூரில் பதட்டமான பகுதிகளான காங்கேயம் ரோடு, தாராபுரம் ரோடு மற்றும் மக்கள் அதிகம் கூடும் பஸ் நிலையம், ரெயில் நிலையம், குமரன் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் துப்பாக்கிகளுடன் சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
- தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் மற்றும் மாநகராட்சி நிர்வாகத்திடம் தொடர்ந்து முறையிட்டு வந்துள்ளனர்.
- மத்திய பாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சோபா ஜென்சி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட ஆவுடையார்புரம் பகுதியில் 100 குடும்பங்கள் 4 தலைமுறையாக வாழ்ந்து வருகின்றனர்.
அவர்களின் பல கோடி மதிப்புள்ள நிலத்தை சிலர் அபகரிப்பு முயற்சி செய்து வருவதாக அப்பகுதி பொது மக்கள் புகார் கூறி வருகின்றனர்.
இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் மற்றும் மாநகராட்சி நிர்வாகத்திடம் தொடர்ந்து முறையிட்டு வந்துள்ளனர்.
இந்நிலையில், ஆவுடையார்புரம் பகுதியில் மது போதையில் வீட்டை அடித்து நொறுக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி அப்பகுதி பொதுமக்கள் மத்திய பாகம் போலீஸ் நிலையத்தை நேற்று இரவு முற்றுகையிட்டனர்.
அப்போது தூத்துக்குடி மாநகர மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணை செயலாளர் வக்கீல் செல்வகுமார் கூறுகையில், இப்பகுதியில் 3 நபர்கள் மது அருந்தி கொண்டு இருந்தனர்.
அதை பொதுமக்கள் தட்டிக்கேட்டனர். அதற்கு அவர்களின் வீட்டை அந்த 3 பேரும் அடித்து நொறுக்கி சேதப்படுத்தியுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது இதுகுறித்து போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததை தொடர்ந்து இன்று போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டுள்ளோம் என்றார்.
இதுகுறித்து மத்திய பாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சோபா ஜென்சி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- 3.14 கோடி பெண் வாக்காளர்கள். 3.03 கோடி ஆண் வாக்காளர்கள். 8294 பேர் மூன்றாம் பாலினத்தவர்கள்.
- 5 லட்சத்து 26 ஆயிரத்து 265 பேர் முதல் தலைமுறை வாக்காளர்கள்.
இந்திய பாராளுமன்ற மக்களவை தேர்தல் விரைவில் வரவிருக்கும் நிலையில் தமிழ்நாட்டில் பாராளுமன்ற தேர்தலுக்கான இறுதி வாக்காளரக்ள் பட்டியலை தலைமை தேர்தல் அதிகார சத்யபிரதா சாகு இன்று வெளியிட்டார்.
அதன்படி தமிழகத்தில் 6 கோடியே 18 லட்சத்து 90 ஆயிரத்து 348 வாக்காளர்கள் உள்ளனர். இவற்றில் 3.14 கோடி பெண் வாக்காளர்கள். 3.03 கோடி ஆண் வாக்காளர்கள். 8294 பேர் மூன்றாம் பாலினத்தவர்கள். 5 லட்சத்து 26 ஆயிரத்து 265 பேர் முதல் தலைமுறை வாக்காளர்கள். புதிதாக 13 லட்சம் பேர் வாக்காளர் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளனர்.
69 சதவீதம் பேர் வாக்காளர் அட்டையும் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர். இன்று முதல் வாக்களார் பட்டியலில் பெயர் சேர்க்கலாம் என சத்ய பிரதா சாகு தெரிவித்துள்ளார்.
- திருச்சியை அடுத்த சிறுகனூரில் வருகிற 26-ந்தேதி மாலை 4 மணிக்கு இந்த பிரமாண்டமான மாநாடு நடைபெற உள்ளது.
- சுமார் 5 லட்சம் தொண்டர்களை திரட்டும் வகையில் மாநாட்டு பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.
சென்னை:
விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தேர்தல் அரசியல் வெள்ளி விழா, கட்சி தலைவர் திருமாவளவனின் மணி விழா, இந்தியா கூட்டணி தேர்தல் வெற்றி, கால்கோல் விழா ஆகியவற்றை ஒன்றிணைத்து 'வெல்லும் ஜனநாயக மாநாடு' என்ற தலைப்பில் மாநாடு ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.
திருச்சியை அடுத்த சிறுகனூரில் வருகிற 26-ந்தேதி மாலை 4 மணிக்கு இந்த பிரமாண்டமான மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டிற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி. தலைமை தாங்குகிறார்.
இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, கம்யூனிஸ்டு தலைவர்கள் சீதாராம் யெச்சூரி, ராஜா, தீபங்கர் பட்டாச்சார்யா மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர்.
இந்த மாநாடு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த மாநாடாக அமைவதால் இதனை எழுச்சியுடன் நடத்த அனைத்து ஏற்பாடுகளையும் திருமாவளவன் செய்து வருகிறார். சுமார் 5 லட்சம் தொண்டர்களை திரட்டும் வகையில் மாநாட்டு பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் விடுதலை சிறுத்தை நிர்வாகிகள், தொண்டர்கள் திரள்கிறார்கள்.
மாநாட்டையொட்டி சமத்துவச் சுடர் ஓட்டம் தொடங்கி வைக்கப்படுகிறது. சென்னை அசோக்நகர் அம்பேத்கர் திடலில் நாளை (செவ்வாய்க் கிழமை) காலை 9 மணிக்கு திருமாவளவன் சுடர் ஓட்டத்தை தொடங்கி வைக்கிறார். சமத்துவ வழக்கறிஞர்கள் சங்கம் மற்றும் வழக்கறிஞர் அணி சார்பில் நடக்கும் சுடர் ஓட்டத்திற்கு வழக்கறிஞர் சங்க மாநில செயலாளர் த.பார்வேந்தன் தலைமை தாங்குகிறார். 4 நாட்கள் சுடர் ஓட்டம் ஓடி மாநாட்டு பந்தலில் அதனை திருமாவளவன் பெற்றுக் கொள்கிறார்.
இதனை வழக்கறிஞர்கள் பார்த்திபன், வேல்முருகன், காசி, சொக்கலிங்கம், உதயகுமார், சத்தியமூர்த்தி, கராத்தே பாண்டியன், தினேஷ், திலீபன், செஞ்சுடர் ராமதாஸ், பிரபுவளவன், செல்வகுமார், சரிதா, அன் பழகன், முருகையன், ரத்தினவேல், மணிமாறன், சுப்பிரமணியன் ஆகியோர் ஒருங்கிணைத்துள்ளனர்.
- ஒரு சில கட்சித் தலைவர்கள் சாதிவாரி கணக்கெடுப்பு வேண்டாம் என்று சொல்கிறார்கள்.
- வருகிற அமைச்சரவை கூட்டத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து தமிழக அரசு முடிவு எடுக்க வேண்டும்.
தருமபுரி:
பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் தருமபுரி மாவட்டத்திற்கு வருகை தந்தார். அப்போது அவர் நல்லானூரில் நிருபர்களை சந்தித்து கூறியதாவது:-
அயோத்தியில் நடைபெற இருக்கும் ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவிற்கு அழைப்பு வந்துள்ளது. ஆனால் மக்கள் கூட்டம் அதிகம் இருக்கும் என்பதாலும் இதர வேலைகள் இருப்பதால், கலந்து கொள்ள முடியவில்லை. பிறகு ஒரு நாளில் அயோத்தி ராமர் கோவிலுக்கு செல்லவுள்ளேன் என்றார்.
திராவிட மாடல் ஆட்சி என்று சொல்பவர்கள் சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக நடத்த வேண்டும். ஏன் கணக்கெடுப்பு நடத்த தயங்குகிறார்கள் என்று தெரியவில்லை.

பீகாரில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி, 94 லட்சம் குடும்பங்களை கண்டறிந்து, அவர்களுக்கு அரசு ரூ.2 லட்சம் உதவி செய்வதாக அறிவித்து உள்ளார்கள்.
இதனால் தான் சாதிவாரி கணக்கெடுப்பு தமிழகத்தில் நடத்த வேண்டும் என வலியுறுத்தி வருகிறோம். ஆனால் ஒரு சில கட்சித் தலைவர்கள் சாதிவாரி கணக்கெடுப்பு வேண்டாம் என்று சொல்கிறார்கள். அவர்களுக்கு இந்த சாதிவாரி கணக்கெடுப்பு குறித்த புரிதல் இல்லை.
வருகிற அமைச்சரவை கூட்டத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து தமிழக அரசு முடிவு எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- ராமபிரானின் வலது கால் பாதம் இருப்பதாக கூறி முன்னோர்கள் காலத்தில் இருந்து பொதுமக்கள் வழிபட்டு வருகின்றனர்.
- திரளான பக்தர்கள் சென்று ராமர் பாதம் இருக்கும் பகுதியில் சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர்.
தென்காசி:
உத்தரபிரதேச மாநிலத்தில் ராம ஜென்ம பூமியான அயோத்தியில் ராமர் கோவில் பிரமாண்டமான முறையில் கட்டப்பட்டுள்ளது.
கலையும், பாரம்பரியமும் கொண்ட இந்த கோவிலின் கும்பாபிஷேகம் மற்றும் பால ராமர் சிலை பிரதிஷ்டை ஆகியவை இன்று நடக்கிறது.
இதனைத்தொடர்ந்து நாடு முழுவதும் இந்து கோவில்களில் சிறப்பு வழிபாடுகள், பூஜைகள் ஆகியவை நடக்கிறது.
அதன் ஒரு பகுதியாக தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள பூலாங்குளம் பகுதியில் சிறிய மலை குன்றின் மீது ராமபிரானின் வலது கால் பாதம் இருப்பதாக கூறி முன்னோர்கள் காலத்தில் இருந்து பொதுமக்கள் வழிபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் பாதம் இருக்கும் பகுதியில் இருந்து சிறிது தூரத்தில் ராமர் சீதையை தேடி செல்லும் பொழுது தாகத்திற்கு தண்ணீர் அருந்தியாக நம்பப்பட்டு வரும் சுனை ஒன்றும் உள்ளது. சுனையில் எப்பொழுதும் தண்ணீர் வற்றாமல் நிரம்பியிருப்பதால் காட்டுப்பாதையில் அவ்வழியே செல்லும் பாதசாரிகள் மற்றும் விவசாய பணிகளை மேற்கொள்ளும் விவசாயிகளின் குடிநீர் தேவையை அந்த சுனை பல ஆண்டுகளாக நிறைவேற்றி வருகிறது.
அயோத்தி ராமர் கோவில் பிரதிஷ்டையை முன்னிட்டு இந்த சுனையில் இன்று பூலாங்குளம் கிராமத்தை சேர்ந்த ஜெகநாதன் தலைமையிலான ஆண்கள், பெண்கள், சிறு குழந்தைகள் என திரளான பக்தர்கள் சென்று ராமர் பாதம் இருக்கும் பகுதியில் சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர்.
பின்னர் சுனைநீரிலும் சிறப்பு பூஜைகள் செய்து கலந்து கொண்ட பக்தர்கள் அனைவரும் சுனை நீரை பருகி ராமபிரானை வழிபட்டனர்.






