என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • அரசியல் மாற்றத்திற்காக குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
    • மக்களின் ஏகோபித்த அபிமானமும், அன்பும் பெற்ற முதன்மையான ஒரு மக்கள்சக்தியால் தான் சாத்தியப்படுத்த முடியும்.

    நடிகர் விஜய் தனது மக்கள் இயக்கத்தின் மூலம் அரசியல் கட்சிகளுக்கு இணையாக பல்வேறு மக்கள் நலப்பணிகளை செய்து வந்தார். இந்நிலையில் இன்று தனது கட்சியின் பெயரை வெளிட்டார். அதில் கூறியிருப்பதவாது:

    தற்போதைய அரசியல் சூழல் பற்றி நீங்கள் அனைவரும் அறிந்ததே. நிர்வாக சீர்கேடுகள் மற்றும் "ஊழல் மலிந்த அரசியல் கலாச்சாரம்" ஒருபுறம் என்றால், நம் மக்களை சாதி மத பேதங்கள் வாயிலாக பிளவுபடுத்த துடிக்கும் "பிளவுவாத அரசியல் கலாச்சாரம்" மறுபுறம், என்று இருபுறமும் நம் ஒற்றுமைக்கும் முன்னேற்றத்திற்குமான முட்டுக்கட்டைகள் நிறைந்துள்ளன.

    ஒரு தன்னலமற்ற, வெளிப்படையான, சாதிமத பேதமற்ற, தொலைநோக்கு சிந்தனை உடைய, லஞ்ச- ஊழலற்ற திறமையான நிர்வாகதிற்கு வழிவகுக்ககூடிய அடிப்படை அரசியல் மாற்றத்திற்காக குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பது நிதர்சனமான உண்மை. மிக முக்கியமாக, அத்தகைய அரசியல், நம் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு, தமிழ் நாட்டின் மாநில உரிமைகள் சார்ந்து, இந்த மண்ணுக்கேற்ற "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" (பிறப்பால் அனைவரும் சமம்) என்கிற சமத்துவ கொள்கைபற்று உடையதாகவும் இருக்க வேண்டும். அத்தகைய அடிப்படை அரசியல் மாற்றத்தை மக்களின் ஏகோபித்த அபிமானமும், அன்பும் பெற்ற முதன்மையான ஒரு மக்கள்சக்தியால் தான் சாத்தியப்படுத்த முடியும்.

    • கோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.
    • பாதுகாப்பு பணியில் 800-க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டனர்.

    திருவிடைமருதூர்:

    தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே திருபுவனத்தில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான அறம் வளர்த்த நாயகி அம்பாள் சமேத கம்பகரேஸ்வரர் கோவில் உள்ளது.

    இக்கோவில் சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கோவிலாகும். இங்கு சரபேஸ்வரருக்கு தனி சன்னதியில் அருள்பாலிப்பது தனிச்சிறப்பாகும். பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு அதற்கான திருப்பணிகள் நடைபெற்று வந்தன. தற்போது பணிகள் முடிவடைந்த நிலையில் இன்று காலை கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    முன்னதாக யாகசாலை பூஜைக்காக கோவில் வளாகத்தில் 51 குண்டங்கள் அமைக்கப்பட்டு தருமபுர ஆதீனம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் முன்னிலையில் 100-க்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க கடந்த மாதம் (ஜனவரி) 29-ந்தேதி யாகசாலை பூஜைகள் தொடங்கியது. யாகசாலையில் புனிதநீர் அடங்கிய கடங்கள் வைக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்று வந்தன.

    தொடர்ந்து, இன்று அதிகாலை 8-ம் கால யாகசாலை பூஜை நடைபெற்று, மகா பூர்ணாஹூதி நடைபெற்று, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர், புனிதநீர் அடங்கிய கடங்கள் மங்கள வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு கோவில் கோபுரத்தை வந்தடைந்தது.

    பின்னர், தருமபுரம் ஆதீனம் 27-வது நட்சத்திர குருமணிகள் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்தர் பரமாச்சாரியார் சுவாமிகள் முன்னிலையில் கோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. விழாவில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி. குடும்பத்துடன் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். இதில் மதுரை ஆதீனம், செங்கோல் ஆதீனம், சூரியனார் கோயில் ஆதீனம், வேளாக்குறிச்சி ஆதீனம் உள்ளிட்ட சைவ ஆதீனங்க குருமகாசந்நிதானங்கள், ஆதீன தம்பிரான் சுவாமிகள் உள்பட பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பாதுகாப்பு பணியில் 800-க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டனர்.

    • தமிழகத்தில் பாஜக-வின் அடுத்தடுத்த நகர்வுகளுக்கு நான் தடையாக இருப்பதால் என்.ஐ.ஏ. இந்த சோதனையை நடத்தியுள்ளது.
    • விடுதலைப்புலிகள் அமைப்பு எங்கு இருக்கிறது? அவர்களுக்கு நாங்கள் எப்படி பணம் வசூலிக்க முடியும்?.

    தமிழகத்தில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளின் வீடுகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் இன்று காலை சோதனை நடத்தினர். இதனைத் தொடர்ந்து அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியதாவது:-

    தமிழகத்தில் பாஜக-வின் அடுத்தடுத்த நகர்வுகளுக்கு நான் தடையாக இருப்பதால் என்.ஐ.ஏ. இந்த சோதனையை நடத்தியுள்ளது. தேர்தல் சமயத்தில் என்னையும் கட்சியையும் முடக்க பா.ஜனதா திட்டமிட்டிருக்கிறது.

    விடுதலைப்புலிகள் அமைப்பு எங்கு இருக்கிறது? அவர்களுக்கு நாங்கள் எப்படி பணம் வசூலிக்க முடியும்?. என்.ஐ.ஏ. அதிகாரிகள் என்னிடம்தான் விசாரணை செய்திருக்க வேண்டும். பிப்ரவரி 5-ந்தேதி விசாரணைக்கு ஆஜராகும்படி கட்சி நிர்வாகிகளுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அப்போது தானும் நேரில் சென்று ஆஜராக இருக்கிறேன்.

    இவ்வாறு தெரிவித்துள்ளார்.

    நாம் தமிழர் கட்சியினர் விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் பற்றியும், அந்த இயக்கத்தை பற்றியும் பெருமைப்பட பேசி வருகிறார்கள். விடுதலைப்புலிகள் இயக்கம் இந்தியாவில் தடைசெய்யப்பட்ட இயக்கமாகவே நீடித்து வருகிறது.

    இதுபோன்ற சூழலில் இலங்கை போரின்போது தப்பி ஓடிய விடுதலைப்புலிகள் இயக்கத்தை சேர்ந்த பலர் வெளிநாடுகளிலும், வெளியிடங்களிலும் தலைமறைவாகவே இருந்து வருகிறார்கள். இதுபோன்ற நபர்கள் யார்-யாருடன் தொடர்பில் உள்ளார்கள்? அவர்களுக்கு நிதி உதவி செய்பவர்கள் யார்-யார்? என்பது பற்றி என்.ஐ.ஏ. அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

    இதன் அடிப்படையிலேயே நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளின் வீடுகளில் என்.ஐ.ஏ. அதிகாரகள் சோதனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

    தமிழகத்தில் தடைசெய்யப்பட்ட அமைப்பினருடன் தொடர்புடையவர்களை பிடித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்காக தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் அவ்வப்போது அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். அந்த வகையில்தான் தற்போது நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளின் வீடுகளில் சோதனை நடத்தியுள்ளனர்.

    • எட்டயபுரம் பகுதிகளிலும் திடீர் மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
    • ஒரு மாதத்தில் பெரும்பாலான இடங்களில் அறுவடைக்கு தயாராகிவிடும் சூழல் இருந்து வருகிறது.

    நெல்லை:

    நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் நேற்று அதிகாலை முதல் திடீரென கனமழை பெய்தது. இதன் காரணமாக வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது. 3 மாவட்டங்களிலும் இன்று காலை வரையிலும் ஒரு சில இடங்களில் பரவலாக மழை பெய்தது.

    நெல்லை, பாளை ஆகிய இடங்களில் விட்டு, விட்டு சாரல் மழை பெய்தது. அதிகபட்சமாக நெல்லையில் 13 மில்லி மீட்டர் பதிவாகியது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியை ஒட்டி அமைந்துள்ள மணிமுத்தாறு பகுதியில் 3 மில்லி மீட்டர் மழை பெய்தது .

    118 அடி கொள்ளளவு கொண்ட அந்த அணையில் தற்போது 116 அடி நீர் இருப்பு உள்ளது. பிரதான பாபநாசம் அணையில் 135 அடி நீர் இருப்பு இருக்கிறது. சேர்வலாறு அணை நீர்மட்டம் 148 அடியாக உள்ளது. இதன் காரணமாக நெல்லை மாவட்டத்தில் சுமார் 30 ஆயிரம் ஏக்கர் அளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

    ஒரு சில இடங்களில் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு ஆரம்ப கட்ட நிலையிலேயே விவசாயிகள் நல் நடவு செய்தனர். இதன் காரணமாக அவை கதிர் உண்டாகும் நிலையில் உள்ளது. அவை இன்னும் ஒரு மாதத்தில் பெரும்பாலான இடங்களில் அறுவடைக்கு தயாராகிவிடும் சூழல் இருந்து வருகிறது.

    தூத்துக்குடி மாவட்டத்தை பொறுத்த வரை நேற்று அதிகாலையில் பெரும்பாலான இடங்களில் இடி-மின்னலுடன் கனமழை பெய்தது. மாலை முதல் இரவு வரையிலும் கயத்தாறு மற்றும் கழுகு மலை உள்ளிட்ட இடங்களில் பலத்த மழையும் பெய்தது. அதிகபட்சமாக கடம்பூரில் 44 மில்லி மீட்டரும், கழுகு மலையில் 42 மில்லிமீட்டரும் மழை பெய்தது.

    இதேபோல் திருச்செந்தூர், சாத்தான் குளம் பகுதிகளில் லேசான சாரல் மழை பெய்தது. ஸ்ரீவைகுண்டம், கோவில்பட்டி பகுதிகளில் சற்று பலத்த மழை பெய்தது. கோவில்பட்டியில் 20 மில்லி மீட்டர் மழை பதிவாகியது. எட்டயபுரம் பகுதிகளிலும் திடீர் மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    தென்காசி மாவட்டத்தை பொருத்தவரை சிவகிரி பகுதியில் மட்டும் லேசான சாரல் மழை பெய்தது.

    மாவட்டம் முழுவதும் பெரும்பாலான இடங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சமூக ஊடகங்களால் ஏற்பட்ட அழுத்தம் காரணமாக போலீசார் அவசர கதியில் செயல்பட்டுள்ளனர்.
    • பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகார் தொடர்பாக இன்னும் விசாரணை நடைபெற்று வருகிறது என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    சென்னை:

    சென்னை திருவான்மியூர் சவுத் அவென்யூ பகுதியில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் பல்லாவரம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. இ.கருணாநிதியின் மகன் ஆண்ட்ரோ மதிவாணன் வீட்டில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 18 வயது இளம்பெண் மாத சம்பளம் அடிப்படையில் வீட்டு வேலைக்கு சேர்ந்தார்.

    ஆனால் அந்த பெண்ணுக்கு பேசியபடி சம்பளம் கொடுக்காமல் கணவன், மனைவி இருவரும் சேர்ந்து கட்டாயப்படுத்தி வேலை வாங்கியதுடன், அவரை அடித்து துன்புறுத்தி கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது.

    இதுகுறித்த புகாரின்பேரில் திருவான்மியூர் அனைத்து மகளிர் போலீசார் ஆண்ட்ரோ மதிவாணன், அவருடைய மனைவி மெர்லினா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதைத்தொடர்ந்து தலைமறைவான அவர்களை ஆந்திராவில் கைது செய்த போலீசார் புழல் சிறையில் அடைத்தனர்.

    இந்தநிலையில் ஆண்ட்ரோ மதிவாணன், மெர்லினா ஆகியோர் ஜாமீன் கோரி சென்னை முதன்மை செசன்ஸ் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

    இந்த வழக்கின் விசாரணை சென்னை முதன்மை செசன்ஸ் கோர்ட்டில் இன்று நடைபெற்றது.

    மனுதாரர்கள் தரப்பில், சமூக ஊடகங்களால் ஏற்பட்ட அழுத்தம் காரணமாக போலீசார் அவசர கதியில் செயல்பட்டுள்ளனர். குற்றம்சாட்டப்பட்டவர்கள் பக்கம் பெரிய நபர்கள் இருந்திருந்தால் எப்படி இருவரும் கைது செய்யப்பட்டிருப்பார்கள்? இந்த விவகாரத்தில் எஸ்.சி., எஸ்.டி. சட்டப்பிரிவு தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.

    பாதிக்கப்பட்ட பெண் தரப்பில், குற்றம்சாட்டப்பட்டவர்களின் பின்புலத்தில் முக்கிய நபர்கள் இருக்கின்றனர். இருவரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தால் உண்மைகள் தெரிய வரும் என்று விவாதிக்கப்பட்டது. போக்சோ பிரிவிலும் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டது.

    பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகார் தொடர்பாக இன்னும் விசாரணை நடைபெற்று வருகிறது என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    இந்நிலையில் தி.மு.க. எம்.எல்.ஏ.வின் மகன் மற்றும் மருமகள் ஜாமின் மனு மீதான உத்தரவை பிப். 6-ந்தேதிக்கு தள்ளி வைத்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.

    • முறைப்படி பதிவு செய்து கட்சி நடத்தும் நாங்கள் எல்லா விஷயங்களையும் அனுமதி பெற்றே செய்து வருகிறோம்.
    • நாட்டை கொள்ளையடித்தவர்களே பயப்படாமல் இருக்கும் போது நாங்கள் ஏன் பயப்பட வேண்டும்.

    சென்னை:

    நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளின் வீடுகளில் என்.ஐ.ஏ. சோதனை நடத்தப்பட்டு வருவதற்கு அந்த கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக சீமான் 'மாலை மலர்' நிருபர் கூறியதாவது:-

    மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா அரசு தங்களுக்கு எதிரான கருத்துக்களை கொண்டவர்கள் மீது மத்திய அமைப்புகளை ஏவிவிட்டு விசாரணை நடத்துவது புதிது அல்ல. அந்த வகையில் பாரதிய ஜனதா அரசுக்கு எதிராக பல்வேறு கருத்துக்களை பரப்பி வரும் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளின் வீடுகளுக்கு தேசிய புலனாய்வு அமைப்பை ஏவி விட்டுள்ளனர்.

    முறைப்படி பதிவு செய்து கட்சி நடத்தும் நாங்கள் எல்லா விஷயங்களையும் அனுமதி பெற்றே செய்து வருகிறோம். சட்ட விரோதமாக பணம் வருவதாக கூறியே இந்த சோதனை நடந்து வருவதாக தகவல்கள் வந்துள்ளன. இதுபோன்ற பொய்யான விஷயங்களை கூறி எங்களை மிரட்ட வேண்டும் என்கிற எண்ணத்திலேயே என்.ஐ.ஏ. சோதனை நடைபெற்றுள்ளது.

    இதுபோன்ற அச்சுறுத்தல்களுக்கெல்லாம் நாங்கள் அஞ்சமாட்டோம். பாரதிய ஜனதா கட்சி தொடர்ச்சியாக மேற்கொண்டு வரும் தமிழர் விரோத நடவடிக்கையில் இதுவும் ஒன்று என்றே கருத வேண்டியுள்ளது.


    பாராளுமன்றத் தேர்தல் நேரத்தில் அரசியல் பழி வாங்கும் நடவடிக்கையாகவே இந்த சோதனையை பார்க்கிறோம்.

    நாங்கள் சரியான திசையில் பயணிப்பது இதன் மூலம் உறுதியாகி உள்ளது.

    எங்கள் கட்சி பிள்ளைகளை தொந்தரவு செய்வதன் மூலமாக அவர்களின் அரசியல் பணிகளை முடக்கிப் போட்டுவிடலாம் என்று நினைத்தால் அது ஒருபோதும் நடக்காது. ஏதாவது தகவல்கள் வேண்டும் என்றால் என்னிடமே கேட்கலாம்.

    நேரடியாக என்னை அழைத்து விசாரணை நடத்த வேண்டியதுதானே? அதில் என்ன தயக்கம் என்றும் தெரியவில்லை. இதுபோன்ற சோதனைகளால் நாம் தமிழர் கட்சியினரின் செயல்பாடுகளை தடுத்து நிறுத்தி விடலாம் என்று நினைத்தால் அது பாரதிய ஜனதா கட்சி போடும் தப்புக்கணக்காகவே அமையும். நாட்டை கொள்ளையடித்தவர்களே பயப்படாமல் இருக்கும் போது நாங்கள் ஏன் பயப்பட வேண்டும்.

    இவ்வாறு சீமான் கூறினார்.

    • பையில் பணத்துடன் கூடிய மணி பர்ஸ், செல்போன் மற்றும் சில ஆவணங்கள் இருந்தது.
    • பள்ளி மாணவனின் நேர்மையை அவரது ஆசிரியர்களும், மாணவர்களும் பாராட்டினர்.

    நிலக்கோட்டை:

    திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே உள்ள மிளகாய்பட்டியைச் சேர்ந்த ராமர் மகன் பொன்ஜனகன் (வயது 17).இவர் நிலக்கோட்டை அருகே உள்ள சிலுக்குவார்பட்டி அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார்.

    இந்நிலையில் மாணவன் பொன்ஜனகன் மாலையில் டியூசன் முடித்து விட்டு நிலக்கோட்டை நால்ரோடு அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையில் ஒரு பணப்பை கிடந்தது. அந்த பையில் பணத்துடன் கூடிய மணி பர்ஸ், செல்போன் மற்றும் சில ஆவணங்கள் இருந்தது. இதை பார்த்த மாணவன் அதனை நிலக்கோட்டை நால் ரோட்டில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரிடம் ஒப்படைத்தார்.

    உடனடியாக பள்ளி மாணவனை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அருண் பிரசாந்திடம் இது குறித்து போலீசார் தெரிவித்தனர். மாணவனின் இந்த செயலை பாராட்டிய நிலகோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அருண் பிரசாத் பாராட்டி பரிசுகள் வழங்கினார்.

    பள்ளி மாணவனின் நேர்மையை அவரது ஆசிரியர்களும், மாணவர்களும் பாராட்டினர். மேலும் தவற விட்ட பணப்பை மற்றும் செல்போன் யாருடையது என்று விசாரணை நடத்தியதில் துரைசாமி என்பவருக்கு சொந்தமானது என தெரியவரவே அவரிடம் போலீசார் ஒப்படைத்தனர். அவரும் பள்ளி மாணவனின் செயலுக்கு பாராட்டு தெரிவித்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தி.மு.க. அரசு பொறுப்பேற்ற பின் தான்தோன்றி கல்யாண வெங்கடரமண சாமி கோவிலின் உபகோயிலாக இணைக்கப்பட்டது.
    • கோவிலை பழுது பார்த்து புனரமைக்க இந்து அறநிலையத்துறை சார்பில் ரூ.5 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.

    கரூர்:

    கரூர் மாவட்டம் மண்மங்கலம் திரு முக்கூடலூரில் அகஸ்தீஸ்வரர் சாமி கோவில் உள்ளது. ஆயிரம் ஆண்டுகள் பழமையான இக்கோவிலில் அகஸ்தீஸ்வரர், இறைவி, அஞ்சனாச்சியம்மன் ஆகியோர் வீற்றிருக்கின்றனர்.

    நிதி வசதி இல்லாத இக்கோவில் தி.மு.க. அரசு பொறுப்பேற்ற பின் தான்தோன்றி கல்யாண வெங்கடரமண சாமி கோவிலின் உபகோயிலாக இணைக்கப்பட்டது.

    இக்கோவிலின் அகஸ்தீஸ்வரர் மணலால் பிடிக்கப்பட்டவர் எனவும், இங்கு அகத்திய முனிவர் வழிபட்டுள்ளார் எனவும் கூறப்படுகிறது.இக்கோவிலின் மதில் சுவர்கள் பல ஆண்டுகளுக்கு முன்பு அமராவதி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் முழுவதும் சேதம் அடைந்தது. சோழ மன்னர்கள் ராஜராஜ சோழன் மற்றும் ராஜேந்திர சோழன் தொடர்பாக கல்வெட்டுகள் இக்கோவிலில் காணப்படுகிறது .திருக்கோயில் உள்ள பழமையான கல்வெட்டுகள் படி எடுக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு உள்ளது. ஆயிரம் ஆண்டுகள் பழமையான இக்கோவிலை பழுது பார்த்து புனரமைக்க இந்து அறநிலையத்துறை சார்பில் ரூ.5 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.

    இந்த நிதி மூலம் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது திருப்பணிகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்று அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

    இதனைத் தொடர்ந்து மூலவர் சன்னதி, அர்த்த மண்டபம், மகா மண்டபம், அம்பாள் சன்னதி, மடப் பள்ளி, ராஜகோபுரம் ஆகியவற்றில் புனரமைப்பு பணிகளும், சோபனா மண்டபம், வசந்த மண்டபம், அபிஷேக மண்டபம், சுப்பிரமணியர் சன்னதி ஆகியவற்றில் மீள கட்டுதல் பணிகளும், உப சந்நிதிகளில் வர்ணம் பூசும் பணிகளும், மேற்கு வடக்கு கிழக்கு மதில் சுவர்கள் பழுது பார்த்து புதுப்பித்தல் பணியும் நடைபெற உள்ளது.

    இந்த பணிகள் அனைத்தும் 24 மாதங்களுக்குள் நடத்தி முடிக்க அமைச்சர் சேகர்பாபு உத்தரவிட்டார்.

    அடிக்கல் நாட்டு விழாவிற்கு பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்களை புனரமைத்து பாதுகாத்திடும் வகையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

    2022-23-ம் நிதி ஆண்டில் 113 கோயில்கள் ரூ.154.90 கோடி மதிப்பீட்டிலும், 2023-24 நிதி ஆண்டில் 84 திருக்கோயில்கள் ரூ.149.95 கோடி மதிப்பீட்டிலும் பணிகள் நடைபெற்று உள்ளது. இந்த அரசு பொறுப்பேற்ற 2 ஆண்டுகளுக்கு பின் திருப்பணி களுக்கு மானியமாக ரூ.200 கோடி தமிழக அரசு வழங்கி உள்ளது.

    இதுவரை ஆயிரம் ஆண்டுகள் பழமையான 12 கோயில்கள் திருப்பணிகள் முடிக்கப்பட்டு குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது. நேற்று மட்டும் 13 திருக்கோவில்களுக்கு குடமுழுக்கு நடத்தப்பட்டது. மேலும் வரலாற்றில் படித்த ராஜ ராஜ சோழனின் ஆட்சிக் காலத்தில் கோவிலுக்கான திருப்பணிகள் நடைபெற்றது போல தற்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியிலும் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றது.

    இவ்வாறு அவர் பெருமிதத்துடன் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. அல்லது பா.ஜ.க. கூட்டணியில் இணைவது குறித்து தே.மு.தி.க. ஆலோசனை நடத்தி வருகிறது.
    • விஜயகாந்த் இல்லாமல் தே.மு.தி.க. சந்திக்கும் முதல் தேர்தல் இதுவாகும்.

    சென்னை:

    நெருங்கும் பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக கூட்டணி தொடர்பாக மறைமுக பேச்சுவார்த்தையை தே.மு.தி.க. தொடங்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. அல்லது பா.ஜ.க. கூட்டணியில் இணைவது குறித்து தே.மு.தி.க. ஆலோசனை நடத்தி வருகிறது.

    கள்ளக்குறிச்சி, விருதுநகர் உள்பட 4 மக்களவை தொகுதிகள், ஒரு மாநிலங்களவை எம்.பி. பதவியை கேட்டுப்பெற தே.மு.தி.க. திட்டமிட்டுள்ளது.

    விஜயகாந்த் இல்லாமல் தே.மு.தி.க. சந்திக்கும் முதல் தேர்தல் இதுவாகும். மாநில கட்சி அங்கீகாரத்தை மீண்டும் பெறும் முனைப்பில் வலுவான கூட்டணியில் இணைய தே.மு.தி.க. திட்டமிட்டுள்ளது.

    பேச்சுவார்த்தை நிறைவு பெற்ற பின் கூட்டணி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தே.மு.தி.க. தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அறம் வளர்த்த நாயகி அம்பாள் சமேத கம்பகரேஸ்வரர் கோவில்.
    • கோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    திருவிடைமருதூர்:

    தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே திருபுவனத்தில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான அறம் வளர்த்த நாயகி அம்பாள் சமேத கம்பகரேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கோவிலாகும். இங்கு சரபேஸ்வரருக்கு தனி சன்னதியில் அருள்பாலிப்பது தனிச்சிறப்பாகும். பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு அதற்கான திருப்பணிகள் நடைபெற்று வந்தன. தற்போது பணிகள் முடிவடைந்த நிலையில் இன்று காலை கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    முன்னதாக யாகசாலை பூஜைக்காக கோவில் வளாகத்தில் 51 குண்டங்கள் அமைக்கப்பட்டு தருமபுர ஆதீனம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் முன்னிலையில் 100-க்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க கடந்த மாதம் (ஜனவரி) 29-ந்தேதி யாகசாலை பூஜைகள் தொடங்கியது. யாகசாலையில் புனிதநீர் அடங்கிய கடங்கள் வைக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்று வந்தன.

    தொடர்ந்து, இன்று அதிகாலை 8-ம் கால யாகசாலை பூஜை நடைபெற்று, மகா பூர்ணாஹூதி நடைபெற்று, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர், புனிதநீர் அடங்கிய கடங்கள் மங்கள வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு கோவில் கோபுரத்தை வந்தடைந்தது. பின்னர், தருமபுரம் ஆதீனம் 27-வது நட்சத்திர குருமணிகள் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்தர் பரமாச்சாரியார் சுவாமிகள் முன்னிலையில் கோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    • சரணடைந்த பாதிரியார் ராபின்சனை போலீசார் காவல் எடுத்து விசாரணை மேற்கொண்டனர்.
    • இரணியல் போலீசார் ரமேஷ்பாபுவை ரகசிய இடத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.

    நாகர்கோவில்:

    திங்கள் சந்தை அருகே மைலோடு மடத்துவிளை பகுதியை சேர்ந்தவர் சேவியர் குமார் (வயது 42). இவர் கன்னியாகுமரி அரசு போக்குவரத்து கழக பணிமனையில் மெக்கானிக்காக பணியாற்றி வந்தார். நாம் தமிழர் கட்சியின் தக்கலை ஒன்றிய தலைவராகவும் பதவி வகித்தார். சேவியர் குமாருக்கும், மைலோடு ஆலய பங்குபேரவை தரப்பிற்கும் இடையே ஏற்பட்ட தகராறில் கடந்த 20-ந்தேதி ஆலய வளாகத்தில் உள்ள பாதிரியார் இல்லத்தில் கொலை செய்யப்பட்டார்.

    இது தொடர்பாக இரணியல் போலீசார் பாதிரியார் ராபின்சன் முன்னாள் தி.மு.க. ஒன்றிய செயலாளர் ரமேஷ் பாபு உள்பட 15 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். 3 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். பாதிரியார் ராபின்சன் திருச்செந்தூர் கோர்ட்டிலும், ரமேஷ்பாபு நாகப்பட்டினம் கோர்ட்டி லும் சரணடைந்தனர்.

    சரணடைந்த பாதிரியார் ராபின்சனை போலீசார் காவல் எடுத்து விசாரணை மேற்கொண்டனர். அவரிடம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் நேரில் விசாரணை மேற்கொண்டார்.

    விசாரணைக்கு பிறகு அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு பாளையங்கோட்டை ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

    இந்த நிலையில் ரமேஷ்பாபுவை காவல் எடுத்து விசாரிக்க இரணியல் போலீசார் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இதையடுத்து ரமேஷ் பாபு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 2 நாள் காவலில் விசாரிக்க அனுமதி அளிக்கப்பட்டது.

    இரணியல் போலீசார் ரமேஷ்பாபுவை ரகசிய இடத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு உள்ளனர். ரமேஷ் பாபுவிடம் கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணைக்கு பிறகு மீண்டும் ரமேஷ் பாபுவை கோர்ட்டில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.

    இந்த வழக்கில் தலைமறைவாகியுள்ள மற்றவர்களை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். சென்னை திருவனந்தபுரத்திற்கு தனிப்படை போலீசார் விரைந்துள்ளனர்.

    • வந்தே பாரத் ரெயில் 4 மணி நேரத்தில் சென்றடைகிறது.
    • புதிய பாதை அமைக்க வேண்டிய தேவை ஏற்படுகிறது.

    சென்னை:

    ரெயில்களின் வேகத்தை படிப்படியாக அதிகரித்து பயண நேரத்தை குறைக்கும் முயற்சியில் ரெயில்வே துறை ஈடுபட்டு வருகிறது. தற்போது அதிவேகமாக இயக்கப்படும் வந்தே பாரத் ரெயிலில் பயணம் செய்பவர்கள் குறைந்த நேரத்தில் தாங்கள் செல்ல வேண்டிய பகுதிகளுக்கு சென்றடைகிறார்கள்.

    சென்னை-பெங்களூரு-மைசூரு வழித்தடத்தில் ரெயில்களின் வேகத்தை அதிகரிக்க தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை தரம் உயர்த்த தெற்கு ரெயில்வே திட்டமிட்டுள்ளது.

    சென்னையில் இருந்து பெங்களூருவுக்கு 200 கி.மீ. வேகத்தில் ரெயில்களை இயக்குவதற்கு தண்டவாளங்களை தரம் உயர்த்தவும், சில வழித்தடங்களில் புதிய பாதை அமைக்க வேண்டிய தேவையும் ஏற்படுகிறது.

    ரெயில்களை அதிவேகத்தில் இயக்குவதற்கு தண்டவாளம் கட்டமைப்பு வலுவாக இருக்க வேண்டும். அதனால் அதனை உறுதிப் படுத்தவும் மற்றும் தொழில் நுட்பம் சார்ந்த பணிகளை மேற்கொள்ளவும் ரெயில்வே திட்டமிட்டு உள்ளது.

    சென்னை-பெங்களூரு இடையேயான 360 கி.மீ. தூரத்தை 4 மணி நேரத்திற்கும் குறைவாக பயணிக்க இந்த வேகம் உதவும் என்று ஆய்வு செய்யப்பட்டுள்ளது.


    தற்போது வந்தே பாரத் ரெயில் 4 மணி நேரத்தில் சென்றடைகிறது. அதைவிட பயண நேரம் குறையும் வகையில் 200 கி.மீ. வேகத்தில் இயக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

    அதிவேகத்தில் ரெயில்களை இயக்குவதற்கான அடிப்படையான பணிகளை செய்வதற்கு திட்ட அறிக்கை தயாரிக்கப்படுகிறது. இது மார்ச் மாதத்தில் தயார் ஆகிவிடும் என்று தெற்கு ரெயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் தெரிவித்தார்.

    அவர் மேலும் கூறுகையில், "200 கி.மீ. வேகத்தில் ரெயில்களை இயக்க அறிமுகம் செய்வதற்கு முன்பாக ஏற்கனவே உள்ள தண்டவாளத்தில் செமி அதிவேக ரெயில்களை இயக்கி சோதனை செய்யப்படவும் திட்டமிடப்பட்டுள்ளது.

    ஏற்கனவே உள்ள வழித் தடத்தை குறைவாகவோ அல்லது கூடுதலாக நாங்கள் பயன்படுத்தலாம். சில வழித் தடங்களில் அல்லது ரெயில் நிலையங்களில் புதிய பாதை அமைக்கலாம். மற்றப்படி ஏற்கனவே உள்ள தண்டவாளங்களை மேம்படுத்தி ரெயில்களை இயக்க ஆலோசித்து வருகிறோம்" என்றார்.

    ×