என் மலர்
உள்ளூர் செய்திகள்
- சென்னையில் பல கோடி ரூபாய் செலவழித்து உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தியபோதே, ஸ்பெயின் நாட்டின் முதலீட்டாளர்களையும் அழைத்திருக்கலாமே.
- ஸ்பெயின் சென்று ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டது ஏன் என்பதை முதலமைச்சர்தான் விளக்க வேண்டும்.
சென்னை:
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தொழில் முதலீட்டை ஈர்ப்பதற்கான அரசு முறைப்பயணமாக 27.1.2024 அன்று ஸ்பெயினுக்குச் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கு நடந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொண்டதாகவும், ஸ்பெயின் நாட்டின் முன்னணித் தொழில் நிறுவனங்களின் நிர்வாகிகளை தனித்தனியே நேரில் சந்தித்துப் பேசியதாகவும், இதையடுத்து பல தொழில் நிறுவனங்கள் தமிழ் நாட்டில் தொழில் தொடங்க முன்வந்துள்ளதாகவும், பல நிறுவனங்களின் பெயரைக் குறிப்பிட்டு நேற்று பேட்டி அளித்துள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஸ்பெயின் பயணத்தினால் தமிழகத்திற்கு மூன்று நிறுவனங்கள் மூலம் 3,440 கோடி ரூபாய் முதலீட்டிற்கான உடன்பாடுகள் ஏற்பட்டு உள்ளதாகத் தெரிவித்து உள்ளார். மேலும், பல நிறுவனங்கள் எதிர்காலத்தில் தமிழ் நாட்டில் முதலீடுகள் செய்வதற்கு வாய்ப்புகள் உள்ளன என்றும் தெரிவித்துள்ளார்.
இருபது நாட்களுக்கு முன்பு, சென்னையில் பல கோடி ரூபாய் செலவழித்து உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தியபோதே, ஸ்பெயின் நாட்டின் முதலீட்டாளர்களையும் அழைத்திருக்கலாமே. ஆனால் 20 நாட்கள்கூட முடியாத நிலையில், மீண்டும் முதலமைச்சர் ஸ்பெயினுக்கு சுற்றுப்பயணம் செய்து முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்துகொண்டது முதலீட்டை ஈர்க்கவா? அல்லது முதலீடு செய்யவா? என்ற சந்தேகம் மக்களிடையே எழுந்து உள்ளது. இதை முதலமைச்சர் தான் விளக்க வேண்டும்.
மேலும், தற்போது உடன்பாடு ஏற்பட்டுள்ள 3 நிறுவனங்களில், 2 நிறுவனங்களின் அலுவலகங்கள் சென்னை மற்றும் பெருந்துறையில் உள்ளதாகக் கூறப்படும் நிலையில், ஸ்பெயின் சென்று ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டது ஏன் என்பதை முதலமைச்சர்தான் விளக்க வேண்டும்.
எனவே, தி.மு.க. அரசின் முதலமைச்சர் ஆட்சிப் பொறுப்பேற்ற இந்த 32 மாதங்களில் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்தது குறித்து முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு எந்தவித நடவடிக்கைகளும் மேற்கொள்ளாத நிலையில், போராட்ட நடவடிக்கைகளை தொடர்ந்து முன் எடுத்து செல்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
- வருகிற 26-ந்தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தினை நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.
சென்னை:
தமிழ்நாடு அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சி பணியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர்கள் அமிர்த குமார், பீட்டர் அந்தோணிசாமி, கே.கணேசன் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு அரசில் பணிபுரிந்து வரும் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சி பணியாளர்களின் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவது உள்பட 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டன.
அதன் பிறகும் கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழ்நாடு அரசு எந்தவித நடவடிக்கைகளும் மேற்கொள்ளாத நிலையில் போராட்ட நடவடிக்கைகளை தொடர்ந்து முன் எடுத்து செல்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
காணொலி வாயிலாக நடைபெற்ற கூட்டத்தில் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அதில் வருகிற 15-ந்தேதி ஒருநாள் அடையாள வேலைநிறுத்த போராட்டம் நடத்துவது, அதே நாளில் வட்டக் கிளைகளில் காலை 10 மணிக்கு தொடங்கி கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டது.
மேலும் வருகிற 26-ந் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தினை நடத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டது.
இந்த 2 போராட்டங்களையும் மிகவும் வலுவாக நடத்திடும் வகையில் நாளை (வெள்ளிக்கிழமை) கூட்டமைப்பின் சார்பில் மாவட்ட மையங்களில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டத்தினை நடத்துவது எனவும், வருகிற 12-ந்தேதி முதல் 14-ந்தேதி வரை 3 நாட்கள் தலைமை செயலகம் உள்ளிட்ட அனைத்து அரசு அலுவலங்கள், பள்ளி, கல்லூரிகள் மற்றும் உள்ளாட்சி அலுவலகங்களில் 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற மறுத்து வரும் அரசின் நிலைப்பாடு குறித்து விரிவான பிரசாரங்கள் மேற்கொள்வது எனவும் தீர்மானிக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அதில் கூறி உள்ளனர்.
- தீபாவளி பண்டிகை அன்று பட்டாசு வெடிக்கக் கூடாது என்று கிறிஸ்தவ மிஷினரிதான் முதலில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு என அண்ணாமலை பேச்சு.
- சுற்றுச்சூழல் ஆர்வலர் பியுஷ் மனுஷ் சேலம் நீதிமன்றத்தில் அண்ணாமலைக்கு எதிராக புகார் மனு தாக்கல் செய்திருந்தார்.
இரு மதத்தினரிடையே வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசிய வழக்கில், தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை மீதான வழக்கை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.
கடந்த 2022-ம் ஆண்டு தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்திருந்தார். அப்போது தீபாவளி பண்டிகை அன்று பட்டாசு வெடிக்கக் கூடாது என்று கிறிஸ்தவ மிஷினரிதான் முதலில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து என்று குறிப்பிட்டிருந்தார்.
அண்ணாமலையின் பேச்சு இரு மதத்தினரிடையே வெறுப்புணர்வை தூண்டும் வகையில் இருப்பதாக சேலத்தை சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் பியுஷ் மனுஷ் சேலம் நீதிமன்றத்தில் அண்ணாமலைக்கு எதிராக புகார் மனு தாக்கல் செய்திருந்தார்.
இது தொடர்பாக நேரில் ஆஜராக நீதிமன்றம் அண்ணாமலைக்கு சம்மன் அனுப்பியிருந்தது. இந்த சம்மனுக்கு எதிராகவும், தனது மீதான புகாரை ரத்து செய்ய வேண்டும் எனக் கூறியும் அண்ணாமலை சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் தனது பேச்சு தவறாக எடுத்துக் கொள்ளப்பட்டது எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், அண்ணாமலை தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்ததோடு, அவர் மீதான வழக்கை ரத்து செய்ய மறுத்துவிட்டது. மேலும், சேலம் நீதிமன்றம் சட்டத்திற்கு உட்பட்டு மனுவை விசாரிக்கலாம் எனவும் உத்தரவிட்டார்.
- என்.ஐ.ஏ. அதிகாரிகள் மாவோயிஸ்ட்டு வழக்கு ஒன்று தொடர்பாக சோதனை நடத்தி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
- ஆந்திர மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட முகில் சந்திரா கொரட்டூர் பகுதியில் வசித்து வருகிறார்.
சென்னை:
சென்னை கொரட்டூர் ரெட்டேரி கேனல் ரோடு பகுதியில் வசித்து வருபவர் முகில் சந்திரா. குறும்பட இயக்குனரான இவரது வீட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் இன்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
ஐதராபாத்தில் இருந்து வந்திருந்த என்.ஐ.ஏ. அதிகாரிகள் மாவோயிஸ்ட்டு வழக்கு ஒன்று தொடர்பாக சோதனை நடத்தி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆந்திர மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட இவர் கொரட்டூர் பகுதியில் வசித்து வருகிறார். இதையடுத்து அங்கு பதிவு செய்யப்பட்ட ஒரு வழக்கு தொடர்பாகவே என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த சோதனையின்போது முகில் சந்திரா பயன்படுத்திய செல்போன் மற்றும் ஆவணங்களை போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள். இந்த சோதனை முடிவில்தான் என்னென்ன ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன என்பது பற்றி விவரங்கள் வெளிவரும் என்று என்.ஐ.ஏ. அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
- தவக் காலம் வருகிற 14-ந்தேதி முதல் தொடங்குகிறது.
- கிறிஸ்தவர்கள் உபவாசம் இருந்து ஜெபிப்பார்கள்.
சென்னை:
கிறிஸ்தவர்களின் தவக் காலம் வருகிற 14-ந்தேதி முதல் தொடங்குகிறது. இயேசு வனாந்தரத்தில் நோன்பு இருந்த 40 நாட்களை நினைவு கூர்ந்து கிறிஸ்தவர்கள் உபவாசம் இருந்து ஜெபிப்பார்கள். இந்த காலத்தை தவக் காலம், தபசு காலம், இலையுதிர் காலம் என்று கூறுவது உண்டு.
40 நாட்கள் கிறிஸ்தவர் கள் நோன்பு இருந்து தம்மை தாமே வெறுத்து தங்களுக்கு பிடித்த காரியங்களை தவிர்த்து ஆண்டவனை தியானிப்பார்கள். உண்ணும் உணவு, உடைகள் போன்ற அலங்காரங்களை தவிர்த்து பிறருக்கு உதவி செய்து ஆன்மீக வலிமையை இக்காலக் கட்டத்தில் பெறுவார்கள்.
தவக்காலத்தின் முதல் நாளான சாம்பல் புதன்கிழமை அனுசரிக்கப்படுகிறது. இது யூதர்களின் பாரம்பரியம். காலப்போக்கில் அனைத்து திருச்சபைகளும் `சாம்பல் புதன்' நாளை பின்பற்றி வருகிறார்கள்.
குறிப்பாக கத்தோலிக்க திருச்சபை மக்கள் ஓலையினால் ஆன சிலுவையை எரித்து அதன் சாம்பலை நெற்றியில் பூசிக் கொள்வது வழக்கம். தவக்காலத்தின் தொடக்க நாளான சாம்பல் புதன் கிழமை வருகிற 14-ந்தேதி அனுசரிக்கப்படுகிறது. அன்றைய தினம் கிறிஸ்தவ ஆலயங்களில் காலையிலும் மாலையிலும் சிறப்பு ஆராதனை நடைபெறும்.
அதனைதொடர்ந்து 6 வெள்ளிக்கிழமைகள் சிறப்பு வழிபாடு நடைபெறும். இயேசு உபவாசம் இருந்த தபசுக் காலத்தில் கிறிஸ்தவர்கள் கஷ்ட நாட்களாக கருதி அனைத்து வழிபாடுகளிலும் எளிமையாக பங்கேற்பார்கள். ஏழைகளுக்கு உதவி செய்யும் தியாக நாட்களாக இவை பின்பற்றப்படுகிறது.
இதைத்தொடர்ந்து புனித வாரம் கடைபிடிக்கப்படுகிறது. இயேசு சிலுவையில் அறைந்து கொல்லப்படும் அந்த நாட்களை நினைவு கூர்ந்து புனிதவாரம் அனுசரிக்கப்படுகிறது. பெரிய வியாழன், புனித வெள்ளியை தொடர்ந்து இயேசு உயிர்த்தெழுந்த ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படுகிறது. மார்ச் மாதம் 31-ந்தேதி ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.
- படகுகள் மீது தாக்குதல் நடத்தி மீன்பிடிக்க விடாமல் விரட்டியடித்தனர்.
- 19 மீனவர்கள் மீது எல்லை தாண்டி மீன்பிடித்ததாக வழக்கு பதிவு செய்தனர்.
ராமேசுவரம்:
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் இருந்து நேற்று காலை 450-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 3,500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அனுமதி பெற்று கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். நள்ளிரவில் அவர்கள் கச்சத்தீவு-நெடுந்தீவுக்கு இடையேயான இந்திய கடல் எல்லை பகுதியில் வலைகளை விரித்து மீன்பிடித்து கொண்டிருந்தனர்.
அப்போது இலங்கை ராணுவத்துக்கு சொந்தமான ஒன்று ராமேசுவரம் மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த பகுதியை நோக்கி மின்னல் வேகத்தில் வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த மீனவர்கள் இலங்கை கடற்படையினரின் தாக்குதலுக்கு பயந்து கடலில் விரித்திருந்த வலைகளை சுருட்டிக்கொண்டு அங்கிருந்து புறப்பட ஆயத்தமாகினர்.
இருந்தபோதிலும் இலங்கை கடற்படையினர் மீனவர்களின் படகுகளை சுற்றி வளைத்தனர். மேலும் படகுகள் மீது தாக்குதல் நடத்தி மீன்பிடிக்க விடாமல் விரட்டியடித்தனர். இதில், ராமேசுவரத்தை சேர்ந்த ரீகன், சசிக்குமார் ஆகியோருக்கு சொந்தமான இரண்டு விசைப்படகை சிறைபிடித்தனர்.
ஜான்சன், மெட்டன், அந்தோணி டிஸ்மர், முனியசாமி, ஜேசுராஜா, சேகர், முனிய சாமி, கிளவர்சன், பிரசாந்த், பிரபாகரன், செல்வராஜ், முனியசாமி, செல்வதாமஸ், ஆரோக்கியம், ஆஸ்வார்ட் உள்ளிட்ட 19 பேரை கைது செய்தனர். மேலும் மீனவர்கள் பிடித்து வைத்திருந்த விலை உயர்ந்த மீன்களையும் இலங்கை கடற்படையினர் அபகரித்துக் கொண்டனர்.
பின்னர் அவர்கள் காங் கேசம் துறைமுகத்திற்கு அழைத்து செல்லப்பட்டு இலங்கை நீரியல்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். மேலும் மீனவர்களின் இரண்டு விசைப்படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டது. 19 மீனவர்கள் மீது எல்லை தாண்டி மீன்பிடித்ததாக வழக்கு பதிவு செய்தனர். விசாரணைக்கு பின் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க உள்ளதாக இலங்கை அதிகாரிகள் தெரிவித்தனர்.
ராமேசுவரம் மீனவர்களுடன் முதல் முறையாக ஒடிசா மாநிலத்தை சேர்ந்த இரண்டு மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது. ஓட்டல் தொழில் முதல் விவசாய பணிகள் வரை வெளி மாநிலத்தவர் கள் தமிழகத்தில் தஞ்சம் அடைந்திருந்த நிலையில் தற்போது தற்போது மீன்பிடி தொழிலிலும் கால்தடம் பதித்துள்ளனர். ஒடிசாவை சேர்ந்தவர்கள் ராமேசுவரம் பகுதியில் தங்கி நமது மீனவர்களுடன் கடலுக்கு சென்று வருகிறார்கள்.
சமீப காலமாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படும் மீனவர்கள் நெடுந்தீவு பகுதியில் தடை செய்யப்பட்ட இரட்டை மடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடிப்பதாகவும், இதனால் இலங்கை மீனவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவதாகவும் இலங்கை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனை தமிழ்நாடு அரசு கட்டுப்படுத்த வேண்டும் என இலங்கை மீனவ சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த 3-ந்தேதி ராமேசுவரத்தில் இருந்து கடலுக்கு சென்ற 23 மீனவர்களை 2 விசைப்படகுகளுடன் இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்த நிலையில், இன்று மீண்டும் 19 பேர் கைதாகி இருப்பது சக மீனவர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. அதே போல் நேற்று முன்தினம் இலங்கையில் உள்ள யாழ்ப் பாணம் சிறையில் இருந்து ராமேசுவரம் மீனவர்கள் 6 பேர் விடுதலையானது குறிப்பிடத்தக்கது
- இறந்தவர்கள் உடல் ஊட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது.
- போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.
ஊட்டி:
கேரள மாநிலத்தை சேர்ந்தவர் பிரிட்ஜோ ஜேக்கப் மேத்யூ. இவர் நீலகிரி மாவட்டம் லவ்டேல் அடுத்த காந்தி நகரில் கடந்த 6 மாதங்களாக புதிதாக வீடு கட்டி வருகிறார்.
தற்போது அங்கு தடுப்பு சுவர் கட்டும் பணி நடக்கிறது. இதற்காக அருகே உள்ள நகராட்சி கழிப்பறையையொட்டி 30 அடிக்கு மண்ணை வெட்டி எடுத்தனர். இதனால் கழிப்பறை அந்தரத்தில் தொங்கிய நிலையில் இருந்தது. ஆனால் இதனை யாரும் பொருட்படுத்தவிலை.
நேற்று இங்கு பெண்கள் உள்பட 17 தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டனர். காலையில் பணியாளர்கள் அனைவரும் பணி நடந்த இடத்தின் அருகிலேயே அமர்ந்து டீ குடித்தனர்.
அப்போது அந்தரத்தில் தொங்கி கொண்டிருந்த கழிப்பறையின் ஒரு பகுதி சரிந்து விழுந்தது. அத்துடன் மண்சரிவும் ஏற்பட்டது. இதை பார்த்த தொழிலாளர்கள் அலறி அடித்து ஓடினர்.
இருந்த போதிலும் 12 தொழிலாளர்கள் மண்ணுக்குள் புதைந்தனர். தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர், அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து மண்ணுக்குள் புதைந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
இதில் மேல்காந்தி நகரை சேர்ந்த சகீலா (வயது30), பாக்கியலட்சுமி(42), சங்கீதா(35), ராதா(38), மேல் தலையாட்டு மந்துவை சேர்ந்த உமா(35), முத்து லட்சுமி ஆகிய 6 பேர் பிணமாகவே மீட்கப்பட்டனர்.வண்ணாரப்பேட் டையை சேர்ந்த நந்தகுமார்(25), கவுதம்(24), மகேஷ்(23), தாமஸ் (25), ஜெயந்தி (55), சாந்தி (45) ஆகிய 6 பேர் காயத்துடன் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இறந்தவர்கள் உடல் ஊட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு இறந்தவர்கள் மற்றும் காயம் அடைந்தவர்களின் உறவினர்கள் திரண்டனர். இறந்தவர்களின் உடல்களை பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர்.
இந்த சம்பவத்தில் உரிய நடவடிக்கை எடுக்க கோரி சம்பவ இடத்தில் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீஸ் சூப்பிரண்டு சுந்தர வடிவேல் பேச்சு வார்த்தை நடத்தினார். ஆனால் பொதுமக்கள் போலீஸ் சூப்பிரண்டு காரை மறித்து வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.
இதனால் போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.
இந்த சம்பவம் குறித்து ஊட்டி லவ்டேல் போலீசார் கட்டி உரிமையாளர் பிரிட்ஜோ ஜேக்கப் மேத்யூ, ஒப்பந்ததாரர் பிரகாஷ், மேற்பார்வையாளர்கள் ஜாகீர் அகமது, ஆனந்தராஜ் ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அவர்களை 4 பேரையும் கைது செய்தனர். தொடர்ந்து அவர்கள் 4 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
அப்போது அவர்கள் 4 பேரையும் வருகிற 21-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து 4 பேரும் ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.
இதற்கிடையே ஊட்டி அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டிருந்த இறந்தவர்களின் உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு அவர்களது உறவி னர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்ப ட்டது.
ஆனால் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனாலும் தொடர்ந்து நள்ளிரவு வரை போராட்டம் நீடித்தது.
இதையடுத்து நள்ளிரவில் ஊட்டி தாலுகா அலுவலகத்தில், ஆர்.டி.ஓ. மகராஜ், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சவுந்தர்ராஜன், தாசில்தார் சரவணன் ஆகியோர் இறந்தவர்களின் உறவினர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர்.
பேச்சுவார்த்தையின் முடிவில் உறவினர்கள், இறந்த 6 பேரின் உடலை வாங்கி கொள்வதாக தெரிவித்தனர். இதனால் போராட்டம் கைவிடப்பட்டது. இன்று காலை இறந்த 6 பேரின் உடல்களும் அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.
இதற்கிடையே இங்கு கட்டப்பட்டு வரும் கட்டிடம் மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்த அளவை மீறி கட்டப்பட்டுள்ளதும், அதிக சதுர அடியில் கட்டப்பட்டுள்ளதும் போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து அந்த கட்டிடத்துக்கு சீல் வைக்கப்பட்டது.
- தங்கம் விலை நேற்று சவரனுக்கு 160 ரூபாய் உயர்ந்து 46 ஆயிரத்து 800 ரூபாய்க்கு விற்பனை ஆனது.
- வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை.
சென்னை:
தங்கம் விலையில் கடந்த சில வாரங்களாக ஏற்றத்தாழ்வு இருந்து வந்த நிலையில், நேற்று சவரனுக்கு 160 ரூபாய் உயர்ந்து 46 ஆயிரத்து 800 ரூபாய்க்கு விற்பனை ஆனது.
இந்நிலையில் இன்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து 46 ஆயிரத்து 720 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து 5 ஆயிரத்து 840 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை. சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 76 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 1 கிலோ பார் வெள்ளி ரூ.76,000-க்கு விற்பனையாகிறது.
- வழக்கமாக அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனைக்கு வரும்போது துணை ராணுவப் படையினரை பாதுகாப்பிற்காக அழைத்து வருவது வழக்கம்.
- செந்தில் பாலாஜி தாய், தந்தையிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரூர்:
சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14-ந்தேதி அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். அவரது ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், தற்போது அமைச்சர் செந்தில் பாலாஜி புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
கரூர் மாவட்டம் மண்மங்களத்தை அடுத்த ராமேஸ்வரப்பட்டியில் அமைச்சர் செந்தில்பாலாஜியின் வீடு உள்ளது. இந்த வீட்டில் அவரது தாய், தந்தையர் வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று காலை 7.30 மணியளவில் அங்கு கேரளா பதிவு எண் கொண்ட காரில் வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் 5 பேர் வந்தனர்.
அமைச்சர் செந்தில்பாலாஜியின் வீட்டுக்குள் சென்ற அவர்கள் சோதனையில் ஈடுபட்டனர். ஏற்கனவே இந்த வீட்டில் பல முறை வருமான வரித்துறை, அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனைகள் நடைபெற்ற நிலையில் மீண்டும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வழக்கமாக அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனைக்கு வரும்போது துணை ராணுவப் படையினரை பாதுகாப்பிற்காக அழைத்து வருவது வழக்கம். அல்லது உள்ளூர் போலீசாருக்கு தகவல் தெரிவிப்பது வழக்கம்.
ஆனால், பாதுகாப்பிற்காக துணை ராணுவப்படை வீரர்கள் இல்லாமல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், அங்கு வசிக்கும் அவரது தாய், தந்தையிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
போக்குவரத்துக் கழகத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கின் விசாரணை முடியும் வரை, சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கு தொ டர்பான அமலாக்கத்துறையின் விசாரணையை தள்ளிவைக்கக்கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கில் தீர்ப்பை வரும் 15-ந்தேதிக்கு நீதிபதி அல்லி ஒத்திவைத்தார். இந்த சூழலில் அமலாக்கத்துறை சோதனை நடைபெறுவது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- பாராளுமன்ற தேர்தலில் கட்சி கூட்டணி வைப்பது குறித்து முடிவெடுக்க தலைவர் கிருஷ்ணசாமிக்கு அதிகாரம் கொடுத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
- தேர்தலில் 2 அல்லது 3 இடங்களை கேட்க திட்டமிட்டுள்ளோம்.
குனியமுத்தூர்:
டாக்டர் கிருஷ்ணசாமி தலைமையில் புதிய தமிழகம் கட்சி செயல்பட்டு வருகிறது.
இந்த கட்சி கடந்த சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. - பா.ஜ.க. அங்கம் வகித்த கூட்டணியில் இடம் பெற்று இருந்தது. தற்போது அந்த கூட்டணி உடைந்து ள்ளது. இதன் காரணமாக டாக்டர் கிருஷ்ணசாமி, எந்த அணியுடன் கூட்டணி சேரப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.
இந்நிலையில் புதிய தமிழகம் கட்சியின் அரசியல் உயர்மட்ட குழு கூட்டம் கோவை குனியமுத்தூரில் உள்ள டாக்டர் கிருஷ்ணசாமி இல்லத்தில் நடந்தது. பாராளுமன்ற தேர்தலில் கட்சி கூட்டணி வைப்பது குறித்து முடிவெடுக்க தலைவர் கிருஷ்ணசாமிக்கு அதிகாரம் கொடுத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதைத்தொடர்ந்து டாக்டர் கிருஷ்ணசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
இந்த ஆண்டு நடக்க உள்ள பாராளுமன்ற தேர்தல் மிக முக்கியமான காலக்கட்டத்தில் நடக்கிறது. எனவே வலுவான கூட்டணியில் இடம்பெற திட்டமிட்டுள்ளோம். அது எண்ணிக்கை மற்றும் கொள்கை அடிப்படையில் வெற்றி பெறும் கூட்டணியாக இருக்க வேண்டும். தேர்தலில் 2 அல்லது 3 இடங்களை கேட்க திட்டமிட்டுள்ளோம்.
2019-ல் அ.தி.மு.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அமைக்கப்பட்டது. அதில் நாங்கள் இடம்பெற்றோம். தற்போது தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி என்பது இல்லை. புதிய அரசியல் சூழல் நிலவுகிறது.
புதிய தமிழகம் கட்சி சுதந்திரமாக செயல்பட நினைக்கிறது. பாரதிய ஜனதா- அ.தி.மு.க. கூட் டணி என்பது காலம் கடந்துவிட்டது. எந்த கட்சியுடன் கூட்டணி என்பது குறித்து நாங்கள் இதுவரை முடிவுக்கு வரவில்லை.
தமிழகத்தில் தற்போது 3 அணிகள் உள்ளன. நாங்கள் வெற்றிக்கூட்டணியில் இடம்பெறுவோம். பாராளுமன்றத்தில் எங்களது குரல் ஒலிக்க வேண்டும். அதுதான் எங்களின் நோக்கம் ஆகும். இம்முறை நாங்கள் மக்களவையிலும், மாநிலங்களவையிலும் இடம்பெற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- அனைத்து கட்சிகளையும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரவணைத்து தான் செல்கிறார்.
- தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்தையும் ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறோம்.
மதுரை:
மதுரையில் தி.மு.க. சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவின் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கலந்து கொண்டு மனுக்களை பெற்ற கனிமொழி எம்.பி. நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மதுரையில் இன்று நடைபெற்ற கருத்து கேட்பு கூட்டத்தில் தென் மாவட்டங்களில் தொழில் வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில் சிறு, குறு தொழி ல்களை ஊக்கப்படுத்த வேண்டும் என அதிகளவில் மனு வழங்கியுள்ளனர். பிரதமர் மோடி 3 முறை தமிழகம் வருகை தந்தும் சென்னை மற்றும் தென் மாவட்ட வெள்ள சேதங்களுக்காக நிவாரண நிதி 1 ரூபாய் கூட தரவில்லை. முதலமைச்சரின் நிவாரண நிதியில் இருந்தே பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
மதுரை, விருதுநகர் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் உள்ள பெரும்பாலான தொகுதிகள் கூட்டணி கட்சிகளுக்காக ஒதுக்கப்பட்ட போதிலும் எந்தவித பாரபட்சமும் காட்டப்படவில்லை. அனைத்து கட்சிகளையும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரவணைத்து தான் செல்கிறார்.
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தேர்தல் அறிக்கையில் கூறியுள்ள அறிவிப்புகளை நிறைவேற்றவில்லை என்ற குற்றச்சாட்டு ஏற்புடையது அல்ல. தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்தையும் ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறோம். தென் மாநிலங்களுக்கு மத்திய அரசு வழங்கி வரும் நிதியை ஒவ்வொரு ஆண்டும் குறைத்துக்கொண்டே வருகிறது. குறிப்பாக ரெயில்வே திட்டங்களுக்கான நிதியை ஒதுக்குவதில் மத்திய அரசு பாரபட்சம் காட்டுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- விண்ணப்பதாரர்களின் வீடுகளில் தண்ணீர் தேங்கி வெள்ளத்தால் உண்மையில் பாதிக்கப்பட்டிருந்ததா? என்பதையும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
- தகுதியான விண்ணப்பதாரர்கள் பட்டியலை 4 மாவட்ட கலெக்டர்களும் அரசுக்கு அனுப்பி வைத்து உள்ளனர்.
சென்னை:
மிச்சாங் புயலால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கடந்த டிசம்பர் மாதம் கனமழை பெய்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.
வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தமிழக அரசு சார்பில் ரூ.6 ஆயிரம் நிவாரண உதவி நியாய விலைக்கடை மூலம் வழங்கப்பட்டது.
இதில் சென்னை மாவட்டத்தில் மட்டும் 13.72 லட்சம் பேருக்கு ரூ.6 ஆயிரம் வழங்கப்பட்டது. சர்க்கரை கார்டு, எந்த பொருளும் வாங்க முடியாத கார்டுதாரர்கள், வருமான வரி செலுத்துபவர்கள், அரசு ஊழியர்கள், வெளியூரில் இருந்து இங்கு தங்கி வேலை செய்வோருக்கு பாதிப்பு ஏற்பட்டால் அவர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி அந்தந்த பகுதியில் உள்ள ரேஷன் கடைக்கு சென்று பொதுமக்கள் விண்ணப்பம் எழுதி கொடுத்திருந்தனர். ரேஷன் கார்டு இல்லாதவர்களும் எழுதி கொடுத்தால் அவர்களது விண்ணப்பமும் நிவாரணம் வழங்க பரிசீலிக்கப்படும் என்று அரசு அறிவித்து இருந்தது.
அதனை தொடர்ந்து 5.5 லட்சம் பேர் ரூ.6 ஆயிரம் கேட்டு விண்ணப்பித்து இருந்தனர். இதில் ரேஷன் கார்டு இணைத்து 2 லட்சத்து ஆயிரம் பேரும், ரேஷன் கார்டு இல்லாமல் 3 லட்சத்து 5 ஆயிரம் பேரும் மனு கொடுத்து இருந்தனர்.
இந்த விண்ணப்பங்கள் தமிழ்நாடு மின் ஆளுமை முகமைக்கு அனுப்பி வைக்கப்பட்டு பரிசீலிக்கப்பட்டு வந்தது.
அது மட்டுமின்றி அந்தந்த வார்டு வருவாய், சுகாதாரம், பொறியியல் உள்ளிட்ட துறைகளை சேர்ந்த அதிகாரிகளும் வீடு வீடாக சென்று கள ஆய்வு செய்து வந்தனர்.
விண்ணப்பதாரர்களின் வீடுகளில் தண்ணீர் தேங்கி வெள்ளத்தால் உண்மையில் பாதிக்கப்பட்டிருந்ததா? என்பதையும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
அதே போல் ரேஷன் கார்டு இல்லாதவர்களின் விண்ணப்பங்களுடன் ஆதார் மற்றும் முகவரி சான்றுக்கான வாடகை ஒப்பந்தம், கியாஸ் பில், வங்கி கணக்கு புத்தகம், ஓட்டுனர் உரிமம் போன்ற ஆவணங்களும் சரிபார்க்கப்பட்டு வந்தது.
இதில் தகுதியான நபர்களை கண்டறிந்து கணக்கெடுக்கப்பட்டு வந்தது. ஆய்வு நடத்திய அதிகாரிகள் தகுதியான விண்ணப்பதாரர்களை வீட்டின் முன்பு போட்டோவும் எடுத்து பதிவு செய்தனர்.
இந்த பணிகள் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் கடந்த 2 மாதங்களாக நடைபெற்று வந்தது. இப்போது இந்த கள ஆய்வு அனைத்தும் நிறைவடைந்துவிட்டது.
தகுதியான விண்ணப்பதாரர்கள் பட்டியலை 4 மாவட்ட கலெக்டர்களும் அரசுக்கு அனுப்பி வைத்து உள்ளனர். இந்த பட்டியலில் சுமார் 5 லட்சம் பேர் இடம் பெற்றுள்ளதாக தெரிகிறது.
எனவே விரைவில் 5 லட்சம் பேருக்கு ரூ.6 ஆயிரம் பணம் கிடைக்க உள்ளது. முதலமைச்சரின் அனுமதி பெற்று நிதித்துறையில் இருந்து பணம் ஒதுக்கப்பட்டதும் ரூ.6 ஆயிரம் பெறுவதற்கான முறையான அறிவிப்பை தமிழக அரசு வெளியிடும் என்று அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.






