என் மலர்
உள்ளூர் செய்திகள்
- மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு ரூ.100 கோடி மதிப்பில் வங்கி கடன் இணைப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
- பெண்களுக்கு கல்வி பொருளாதார சுதந்திரம் அவசியம். உயர்கல்வி பயில புதுமைப்பெண் திட்டம் செயல்படுத்தி வருகிறது.
ஈரோடு:
ஈரோட்டில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழ்நாடு முழுவதும் இன்று மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.2,504 கோடி மதிப்பில் வங்கி கடன் இணைப்பு விழா நடத்த முதலமைச்சர் உத்தரவிட்டிருந்தார். அதன்படி இன்று ஈரோடு மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு ரூ.100 கோடி மதிப்பில் வங்கி கடன் இணைப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நான் ஒவ்வொரு முறையும் ஈரோடு வரும்போது எல்லாம் எனது தாய் வீட்டிற்கு வருவது போன்ற உணர்வு ஏற்படுகிறது. என்னை உங்களின் மகனாக, சகோதரனாக, பேரனாக இப்பகுதி மக்கள் கொண்டாடி வருகின்றனர்.
இது மட்டும் இன்றி பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் பிறந்த மண் இது. ஈரோடு மண் திராவிட இயக்கத்தின் தொட்டில் ஆகும். பெண்களின் முன்னேற்றம் தான் திராவிட மாடல் அரசின் நோக்கமாகும். ஏனென்றால் ஒரு குடும்பத்தில் ஒரு பெண் படித்தால் அந்த குடும்பத்தின் பொருளாதாரம் உயரும். மகளிர் சுய உதவிக்குழுக்கள் தயாரிக்கும் பொருட்களை தான் நான் பெரும்பாலும் பயன்படுத்துகிறேன். நான் மட்டும் இன்றி எனது தந்தையும் அவர்கள் தயாரிக்கும் பொருட்களை தான் பயன்படுத்துகிறோம். ஏனென்றால் அவர்களின் தயாரிப்பு அவ்வளவு தரமாக இருக்கும். திராவிட அரசின் பிராண்ட் அம்பாசிஸ்டராக மகளிர் சுய குழுக்கள் உள்ளனர்.
2016-ம் ஆண்டு முதல் ஒன்றிய அரசுக்கு ரூ.6 லட்சம் கோடி வரியாக செலுத்துகிறோம். ஆனால் 2.5 லட்சம் கோடி ரூபாய் மட்டுமே தமிழ்நாட்டிற்கு திருப்பி வழங்குகிறது. 1 ரூபாய் கொடுத்தால் 29 பைசா மட்டுமே ஒன்றிய அரசு திருப்பி தருகிறது. இத்தகைய பொருளாதார சூழலில் தான் தமிழ்நாட்டில் சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்.
திராவிட மாடல் அரசின் திட்டங்களை செயல்படுத்துவதில் மகளிர் குழு பங்களிப்பு மிகப்பெரும் உதவியாக உள்ளது. காலை உணவு திட்டம், சுகாதாரம், கல்வி ஆகிய திட்டங்களில் மகளிர் குழு பங்களிப்பு பேருதவியாக உள்ளது. பெண்களின் முன்னேற்றம் தான் திராவிட மாடல் அரசின் முன்னேற்றம், நோக்கம் என்ற அடிப்படையில் இந்த அரசு செயல்பட்டு வருகிறது.

பெண்களுக்கு கல்வி பொருளாதார சுதந்திரம் அவசியம். உயர்கல்வி பயில புதுமைப்பெண் திட்டம் செயல்படுத்தி வருகிறது. 1 கோடியே 16 லட்சம் மகளிருக்கு உரிமைத்தொகை வழங்கப்படுகிறது. கட்டணமில்லா பேருந்து பயணம் மூலம் ரூ.12 ஆயிரம் ஒவ்வொரு பெண்களுக்கும் மாதம் மிச்சமாகிறது. தமிழ்நாடு முழுவதும் இந்த அரசு பொறுப்பேற்ற பின் மகளிர் குழுவை சேர்ந்த 12 லட்சத்து 25 ஆயிரத்து 803 பேருக்கு ரூ.69 ஆயிரத்து 584 கோடி வங்கி கடன் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதில் 2023-24-ம் ஆண்டில் மட்டும் ரூ.30 ஆயிரம் கோடி வங்கி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இதுவரை ரூ.25 ஆயிரம் கோடி வழங்கப்பட்டது. விரைவில் இலக்கை முடிப்போம். நான் தற்போது நிகழ்ச்சியை முடித்து கொண்டு நேரடியாக கோவையில் இருந்து மும்பை செல்கிறேன். விளையாட்டுத்துறை மேம்பாட்டு சார்பில் சிறப்பாக செயல்பட்டதற்காக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு துறைக்கு இன்று விருது வழங்க உள்ளனர். அதற்காக செல்கிறேன். உங்கள் அனைவர் ஆசீர்வாதத்துடன் செல்கிறேன் நன்றி.
இவ்வாறு அவர் கூறினார்.
- காட்டு யானைகள் உணவு, தண்ணீர் தேடி அடிக்கடி சாலையை கடந்து செல்வது வழக்கமான ஒன்று.
- மினி லாரியில் இருந்த தார்பாயை தனது துதிக்கையால் கீழே இழுத்து போட்டு சேதாரம் செய்தது.
தாளவாடி:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இதில் ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. ஆசனூர் வனச்சரகத்தில் ஏராளமான காட்டு யானைகள் வசித்து வருகின்றன. இந்த காட்டு யானைகள் உணவு, தண்ணீர் தேடி அடிக்கடி சாலையை கடந்து செல்வது வழக்கமான ஒன்று.
சத்தியமங்கலத்தில் இருந்து மைசூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று மாலை வனப்பகுதியில் இருந்து வெளியேரிய ஒற்றை காட்டுயானை கரும்பு லாரி வருகிறதா என சாலையில் உலா வந்தது. அப்போது அங்கு பழுதாகி நின்ற மினி லாரியின் உள்ளே காய்கறி உள்ளதா என தேடியது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மினி லாரியில் ஏதும் இல்லாதால் மினி லாரியில் இருந்த தார்பாயை தனது துதிக்கையால் கீழே இழுத்து போட்டு சேதாரம் செய்தது. சுமார் 30 நிமிடம் வாகனங்கள வழிமறித்த ஒற்றையானை பின்னர் வனப்பகுதியில் சென்றது. கடந்த சில நாட்களாக காட்டு யானை கூட்டம் வாகனங்களை வழிமறித்து வருவது குறிப்பிடத்தக்கது.
- பொது சிவில் சட்டம் கொண்டு வந்ததற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
- உத்தரகாண்ட் மாநிலத்தில் பொது சிவில் சட்டம் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது.
சென்னை:
பொது சிவில் சட்டத்தை மத்தியில் ஆளும் பா.ஜனதா அரசு அனைத்து மாநிலங்களிலும் நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது.
நாட்டிலேயே உத்தரகாண்ட் மாநிலத்தில் இந்த சட்டம் முதன்முதலாக கொண்டு வரப்பட்டுள்ளது. அம்மாநில சட்டசபையில் பொது சிவில் சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டு உள்ளது.
பொது சிவில் சட்டம் கொண்டு வந்ததற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இந்த நிலையில் கார்த்தி சிதம்பரம் எம்.பி. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவு வெளியிட்டு உள்ளார். அதில் கூறியிருப்ப தாவது:-
உத்தரகாண்ட் மாநிலத்தில் பொது சிவில் சட்டம் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது. இதன்மூலம் 'இந்துத்துவா' பரிசோதனை கூடமாக உத்தரகாண்ட் உருவாக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
- இறுதிப்போட்டிக்கு சென்னை மற்றும் தூத்துக்குடி அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
- பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் குழு பாராட்டி சான்றிதழ் மற்றும் பரிசு கோப்பையை வழங்கியது.
தமிழக அரசின் பள்ளி கல்வித்துறை சார்பில், மாவட்டந்தோறும் குடியரசு தினத்தையொட்டி 14 வயதுக்குட்பட்டோருக்கான குழு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்த ஆண்டு குடியரசு தினத்தையொட்டி, கடந்த மாதம் குழு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன.
இதில் மண்டல மற்றும் மாவட்ட அளவில் வெற்றிபெற்ற மாணவர்கள் புதுக்கோட்டையில் நடந்த மாநில அளவிலான போட்டிகளில் கலந்துகொண்டனர். இதில் பேட்மிண்டன், டென்னிஸ், கோகோ, கபடி, எறிபந்து, கூடைப்பந்து உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன.
3 நாட்கள் நடைபெற்ற இந்த விளையாட்டு போட்டிகளில் 38 மாவட்ட அணிகள் பங்கேற்று அசத்தின. இறுதிப்போட்டிக்கு சென்னை மற்றும் தூத்துக்குடி அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் தூத்துக்குடி முதலிடத்தை பிடித்தது. சென்னை 2-ம் இடம் பிடித்தது.
சென்னை அணியில் இடம்பிடித்த புழுதிவாக்கத்தை சேர்ந்த வியாசா வித்யாலயா மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு படிக்கும் மாணவன் ஆ.ஜோன்ஸ்ராஜ் எறிபந்து (த்ரோபால்) விளையாட்டில் அசத்தினார். இதுதவிர அந்த பள்ளி மாணவர்கள் 12 பேர் சென்னை அணியில் இடம்பிடித்தனர்.
மாணவர் ஜோன்ஸ் ராஜ், கராத்தே மற்றும் ஜூடோ போன்ற வீர கலைகளில் பயிற்சி பெற்று சர்வதேச மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்று பதக்கங்கள் குவித்தவர் ஆவார். வெற்றிபெற்ற தூத்துக்குடி மற்றும் சென்னை அணிகளில் இடம்பெற்ற மாணவ-மாணவிகளுக்கு, பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் குழு பாராட்டி சான்றிதழ் மற்றும் பரிசு கோப்பையை வழங்கியது.
- வடகிழக்கு பருவமழை காலத்தின்போது தமிழகத்தில் பூண்டு விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டது.
- இன்னும் 15 நாட்களுக்கு பூண்டு விலை குறையாது.
நாகர்கோவில்:
தமிழ்நாட்டில் நீலகிரி, மதுரை, திண்டுக்கல் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பூண்டு பயிரிடப்பட்டு வருகிறது. குறிப்பாக, நீலகிரியில் விளைவிக்கப்படும் மலைப்பூண்டு அதிக காரத்தன்மை கொண்டதாலும், அளவில் சற்று பெரியது என்பதாலும் இல்லத்தரசிகள் அதிகம் விரும்புவார்கள்.
இதுபோக, தமிழகத்தின் தேவைக்கு ஆந்திரா, கர்நாடகா, குஜராத், மத்திய பிரதேசம் உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் பூண்டு விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. வடகிழக்கு பருவமழை காலத்தின்போது தமிழகத்தில் பூண்டு விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டது. உற்பத்தி குறைந்த தால், அதன் விலையும் கிலோவுக்கு ரூ.150 அதிகரித்து, ரூ.350 வரை விற்பனை செய்யப் பட்டது. தற்போது வெளி மாநிலங்களில் இருந்து வரும் பூண்டின் வரத்தும் குறைந்துள்ளதால், அதன் விலை மேலும் அதிக ரித்துள்ளது. அந்த வகையில் நாகர்கோவில் கோட்டார் மார்க்கெட்டில் நேற்று ஒரு கிலோ பூண்டு ரூ.420 வரை விற்பனை செய்யப்பட்டது. அதாவது சிறிய பூண்டு கிலோ ரூ.250-க்கும், நடுத்தர பூண்டு கிலோ ரூ.350-க்கும், பெரிய பூண்டு கிலோ ரூ.420-க்கும் விற்பனையானது. இதனால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
அதே சமயம் நாகர்கோவிலில் உள்ள சில்லரை விற்பனை கடைகளில் ஒரு கிலோ பூண்டு ரூ.450-க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்னும் 15 நாட்களுக்கு பூண்டு விலை குறையாது என்றும், அதன்பிறகு புதுப்பூண்டு வெளி மாநிலங்களில் இருந்து வர தொடங்கியதும் அதன் விலை குறையதட தொடங்கும் என்றும் வியாபாரிகள் தெரிவித்தனர். இதே போல சீரகம் ரூ.480, மல்லி-ரூ.99, மிளகு ரூ.660, கடலை பருப்பு ரூ.72 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் காய்கறி வரத்து சீராக இருப்பதால் காய்கறிகள் விலை கூடவோ குறையவோ இல்லை.
- தஞ்சை பெரிய கோவில் உலக பிரசித்தி பெற்றது.
- சித்திரை திருவிழா 18 நாட்கள் நடைபெறும்.
தஞ்சாவூா்:
தஞ்சை பெரிய கோவில் உலக பிரசித்தி பெற்றது. கட்டிடக்கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக திகழ்வதுடன் உலக பாரம்பரிய சின்னமாகவும் விளங்கி வருகிறது. பெரிய கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள், சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
ஆண்டு தோறும் பெரிய கோவிலில் சித்திரை திருவிழா, சதயவிழா, ஆஷாட நவராத்திரி விழா உள்ளிட்ட பல்வேறு விழாக்கள் கொண்டாடப்பட்டு வருகின்றன. இதில் சித்திரை திருவிழா பிரசித்தி பெற்றது. ஆண்டு தோறும் சித்திரை மாதத்தில் சித்திரை திருவிழா 18 நாட்கள் நடைபெறும்.
அதன்படி இந்த ஆண்டு சித்திரை திருவிழாவுக்கான பந்தக்கால் முகூர்த்தம் இன்று காலை நடைபெற்றது. இதையொட்டி பெரியநாயகி அம்மன் சன்னதி வளாகத்தில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
அதன் பின்னர் பந்தக்காலுக்கு பால், தயிர், மஞ்சள் மற்றும் வாசனை திரவியங்களை கொண்டு அபிசேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து தமிழில் தேவாரம், திருமுறைகள் பாடி பந்தக்கால் நடப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
இதில் அரண்மனை தேவஸ்தான உதவி ஆணையர் கவிதா, செயல் அலுவலர்கள் மாதவன், மணிகண்டன் மற்றும் சிவாச்சாரியார்கள், பக்தர்கள் கலந்து கொண்டனர். சித்திரை திருவிழாவுக்கான கொடியேற்றம் ஏப்ரல் மாதம் 6-ந்தேதி ஏற்றப்படுகிறது. அன்றிலிருந்து தொடர்ந்து 18 நாட்கள் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும்.
ஏப்ரல் 18-ந் தேதி பஞ்சமூர்த்தி புறப்பாடு நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் ஏப்ரல் 20-ந் தேதி நடைபெறுகிறது. 23-ந் தேதி கொடி இறக்கத்துடன் சித்திரை திருவிழா நிறைவுபெறும்.
- நதிகளில் ரப்பர் படகில் சென்றவாறு, நீர் மூழ்கி வீரர்கள் ஆழமான பகுதிகளிலும் தேடி வருகிறார்கள்.
- சைதை துரைசாமியின் உறவினர்களும் விபத்து நடந்த பகுதிக்கு சென்றிருக்கிறார்கள்.
சென்னை:
சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி (வயது 45). தனது உதவியாளரான திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவிலை சேர்ந்த கோபிநாத் (35) என்பவருடன் இமாச்சலபிரதேசத்தில் உள்ள லடாக் பகுதிக்கு சுற்றுலா சென்றார்.
அவர்கள், சென்னை திரும்புவதற்காக கடந்த ஞாயிற்றுக்கிழமை மதியம் சிம்லா விமான நிலையத்துக்கு காரில் புறப்பட்டு வந்தபோது பாறை ஒன்று உருண்டு வந்து மோதியது. இதனால் கார், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, 200 அடி பள்ளதாக்கு பகுதியில் விழுந்ததோடு, அருகில் ஓடிக்கொண்டிருந்த சட்லஜ் நதிக்குள் கார் பாய்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் கார் டிரைவர் தஞ்ஜின் காருக்குள் 'சீட் பெல்ட்' அணிந்தபடி இறந்து கிடந்தார். படுகாயத்துடன் பள்ளத்தாக்கு பகுதியில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த கோபிநாத் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
காரில் பயணித்த சைதை துரைசாமியின் மகன் வெற்றியை காணவில்லை. அவரை கண்டுபிடிக்க தேடுதல் பணி தீவிரப்படுத்தப்பட்டது. தேசிய பேரிடர் மீட்பு குழுவினர், ராணுவம், இந்திய, திபெத்திய எல்லை பாதுகாப்பு படையினருடன், உள்ளூர் மக்களும் இந்த பணியில் தொடர்ந்து ஈடுபட்டு உள்ளனர்.
இன்று (வியாழக்கிழமை) 5-வது நாளாக தேடுதல் பணி தொடர்ந்தது. வெற்றி பயன்படுத்திய செல்போன் நேற்று கண்டுபிடிக்கப்பட்டது. அந்த போன் கண்டெடுக்கப்பட்ட பகுதிகளில் இருக்கும் பாறை இடுக்குகளில் தேடுதல் பணி இன்று துரிதப்படுத்தப்பட்டது.
நதிகளில் ரப்பர் படகில் சென்றவாறு, நீர் மூழ்கி வீரர்கள் ஆழமான பகுதிகளிலும் தேடி வருகிறார்கள். இதுமட்டுமல்லாமல், டிரோன் உதவியுடனும் தேடுதல் பணி நடக்கிறது. விபத்து நடந்த பகுதிகளில் பனிப்பொழிவு அதிகமாக இருக்கிறது. இதனால் தேடுதல் பணியில் அடிக்கடி தொய்வு ஏற்பட்டது.
இன்று (வியாழக்கிழமை) தேடுதல் பணியில் இந்திய கடற்படையை சேர்ந்த நீச்சல் வீரர்கள் களம் இறங்கி உள்ளனர். விபத்துக்குள்ளான பகுதிக்கு வந்த அவர்கள் அந்த நதி அணை பகுதியில் ஆழமாக சென்று தேடுதல் பணியில் ஈடுபட இருக்கின்றனர். ஆனால் அந்த பணி மிகமிக சவாலாக இருப்பதாக பேரிடர் மீட்புக்குழுவினர் தெரிவித்து உள்ளனர்.
இதற்கிடையே சைதை துரைசாமியின் உறவினர்களும் விபத்து நடந்த பகுதிக்கு சென்றிருக்கிறார்கள். மீட்புக் குழுவினருடன் சேர்ந்து அவர்களும் வெற்றியை தேடி வருகிறார்கள்.
அவர்கள் அந்த பகுதியில் உள்ள மலைவாழ் மக்களிடம் பேசி உதவி கேட்டுள்ளனர். மலைவாழ் மக்கள் உதவியுடனும் இன்று தொடர்ந்து தேடுதல் நடந்து வருகிறது.
- இந்தியா இன்று பல்வேறு வகைகளில் உலகளவில் முன்னேறி வருகிறது.
- உண்மையான மக்கள் செல்வாக்கு உள்ள இயக்கம் எது?
ஓசூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் வருகிற 11-ந் தேதி , அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில், மாற்று கட்சியினர் அ.தி.மு.க வில் இணையும் விழா நடைபெறுகிறது.
இதில் கலந்து கொள்ள வரும் எடப்பாடி பழனிசாமிக்கு கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட அதிமுக சார்பில், சிறப்பான வரவேற்பு அளிப்பது குறித்த ஆலோசனைக் கூட்டம், ஓசூரில் நேற்று நடைபெற்றது.
இதில், கட்சியின் துணை பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி எம்.எல்.ஏ. கலந்து கொண்டு ஆலோசனைகள் வழங்கி சிறப்புரையாற்றினார். கூட்டத்தில், துணைப் பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி எம்எல்ஏ பேசியதாவது:-
இந்திய திருநாட்டின் பாராளுமன்ற தேர்தலை உலகமே எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. ஏனென்று சொன்னால் இந்தியா இன்று பல்வேறு வகைகளில் உலகளவில் முன்னேறி வருகிறது. இந்த சூழலில் இந்தியாவில் அடுத்த பிரதமர் யார் வரவுள்ளார் ? என உலக தலைவர்கள் எல்லோரும் எதிர்பார்த்து கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில், தமிழகத்தை பொறுத்த வரையில் யார் உண்மையான மக்கள் செல்வாக்கு உள்ள தலைவர், உண்மையான மக்கள் செல்வாக்கு உள்ள இயக்கம் எது ? என்பதை தெளிவுபடுத்துகிற தேர்தலாக, இந்த தேர்தல் உள்ளது.
சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு, நாம் எதிர்நோக்குகின்ற பாராளுமன்ற பொது தேர்தல், இந்த பொதுத் தேர்தலில் இந்திய அளவில் பல கட்சிகள் கூட்டணி அமைத்து இந்தியா கூட்டணி என்ற பெயரில் ஒரு பக்கம் நிற்கிறது. அதுபோல தேசிய ஜனநாயக கூட்டணி என்ற பெயரில் ஒரு கூட்டணி ஒரு பக்கமும், இந்த இரண்டு கூட்டணிகளையும் தவிர்த்து தமிழகத்தின் நலனில் அக்கறை உள்ள தலைவர்களை பிரதமராக தேர்ந்தெடுக்கக்கூடிய வாய்ப்பினை தாருங்கள், என்று பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலை மையில் நாம் ஒரு மெகா கூட்டணி அமைத்து மக்களை சந்திக்க உள்ளோம், இவ்வாறு அவர் கூட்டத்தில் பேசினார்.
- நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை நிர்வாகிகளான இடும்பாவனம் கார்த்திக், தென்னகம் விஷ்ணு ஆகிய இருவரும் என்.ஐ.ஏ. அலுவலகத்தில் இன்று ஆஜரானார்கள்.
- பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்களை என்.ஐ.ஏ. அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள்.
சென்னை:
நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் வீடுகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் கடந்த 2-ந் தேதி அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
திருச்சியில் உள்ள நாம் தமிழர் கட்சி நிர்வாகியான சாட்டை துரைமுருகன் வீடு உள்பட 5 இடங்களில் இந்த சோதனை நடைபெற்றது. இந்த சோதனையின்போது நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் பயன்படுத்திய 8 செல்போன்கள், 30-க்கும் மேற்பட்ட ஆவணங்கள் 10 சிம்கார்டுகள், 4 பென் டிரைவ் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன.
இவைகளை ஆய்வு செய்த என்.ஐ.ஏ. அதிகாரிகள் பூந்தமல்லியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் ஒப்படைத்துள்ளனர்.
இதற்கிடையே சென்னை புரசைவாக்கத்தில் உள்ள என்.ஐ.ஏ. அலுவலகத்தில் நாம் தமிழர் கட்சி நிர்வாகியான சாட்டை துரைமுருகன் மற்றும் 2 நிர்வாகிகள் ஆஜரானார்கள். அவர்களிடம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை நிர்வாகிகளான இடும்பாவனம் கார்த்திக், தென்னகம் விஷ்ணு ஆகிய இருவரும் என்.ஐ.ஏ. அலுவலகத்தில் இன்று ஆஜரானார்கள். அவர்களிடமும் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. ஓமலூரில் போடப்பட்ட ஒரு வழக்கு தொடர்பாகவே என்.ஐ.ஏ. அதிகாரிகள் இந்த சோதனை மற்றும் விசாரணையில் ஈடுபட்டிருப்பது தெரிய வந்துள்ளது.
நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளிடம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் 2-வது நாளாக விசாரணை நடத்தி பல்வேறு தகவல்களை திரட்டி உள்ளனர்.
பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்களை என்.ஐ.ஏ. அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள். யார்-யாருடன் அவர்கள் செல்போனில் பேசியுள்ளனர் என்பது பற்றி என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.
இதன் முடிவில் மேலும் பல தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- சென்னையில் பல கோடி ரூபாய் செலவழித்து உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தியபோதே, ஸ்பெயின் நாட்டின் முதலீட்டாளர்களையும் அழைத்திருக்கலாமே.
- ஸ்பெயின் சென்று ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டது ஏன் என்பதை முதலமைச்சர்தான் விளக்க வேண்டும்.
சென்னை:
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தொழில் முதலீட்டை ஈர்ப்பதற்கான அரசு முறைப்பயணமாக 27.1.2024 அன்று ஸ்பெயினுக்குச் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கு நடந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொண்டதாகவும், ஸ்பெயின் நாட்டின் முன்னணித் தொழில் நிறுவனங்களின் நிர்வாகிகளை தனித்தனியே நேரில் சந்தித்துப் பேசியதாகவும், இதையடுத்து பல தொழில் நிறுவனங்கள் தமிழ் நாட்டில் தொழில் தொடங்க முன்வந்துள்ளதாகவும், பல நிறுவனங்களின் பெயரைக் குறிப்பிட்டு நேற்று பேட்டி அளித்துள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஸ்பெயின் பயணத்தினால் தமிழகத்திற்கு மூன்று நிறுவனங்கள் மூலம் 3,440 கோடி ரூபாய் முதலீட்டிற்கான உடன்பாடுகள் ஏற்பட்டு உள்ளதாகத் தெரிவித்து உள்ளார். மேலும், பல நிறுவனங்கள் எதிர்காலத்தில் தமிழ் நாட்டில் முதலீடுகள் செய்வதற்கு வாய்ப்புகள் உள்ளன என்றும் தெரிவித்துள்ளார்.
இருபது நாட்களுக்கு முன்பு, சென்னையில் பல கோடி ரூபாய் செலவழித்து உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தியபோதே, ஸ்பெயின் நாட்டின் முதலீட்டாளர்களையும் அழைத்திருக்கலாமே. ஆனால் 20 நாட்கள்கூட முடியாத நிலையில், மீண்டும் முதலமைச்சர் ஸ்பெயினுக்கு சுற்றுப்பயணம் செய்து முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்துகொண்டது முதலீட்டை ஈர்க்கவா? அல்லது முதலீடு செய்யவா? என்ற சந்தேகம் மக்களிடையே எழுந்து உள்ளது. இதை முதலமைச்சர் தான் விளக்க வேண்டும்.
மேலும், தற்போது உடன்பாடு ஏற்பட்டுள்ள 3 நிறுவனங்களில், 2 நிறுவனங்களின் அலுவலகங்கள் சென்னை மற்றும் பெருந்துறையில் உள்ளதாகக் கூறப்படும் நிலையில், ஸ்பெயின் சென்று ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டது ஏன் என்பதை முதலமைச்சர்தான் விளக்க வேண்டும்.
எனவே, தி.மு.க. அரசின் முதலமைச்சர் ஆட்சிப் பொறுப்பேற்ற இந்த 32 மாதங்களில் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்தது குறித்து முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு எந்தவித நடவடிக்கைகளும் மேற்கொள்ளாத நிலையில், போராட்ட நடவடிக்கைகளை தொடர்ந்து முன் எடுத்து செல்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
- வருகிற 26-ந்தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தினை நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.
சென்னை:
தமிழ்நாடு அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சி பணியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர்கள் அமிர்த குமார், பீட்டர் அந்தோணிசாமி, கே.கணேசன் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு அரசில் பணிபுரிந்து வரும் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சி பணியாளர்களின் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவது உள்பட 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டன.
அதன் பிறகும் கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழ்நாடு அரசு எந்தவித நடவடிக்கைகளும் மேற்கொள்ளாத நிலையில் போராட்ட நடவடிக்கைகளை தொடர்ந்து முன் எடுத்து செல்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
காணொலி வாயிலாக நடைபெற்ற கூட்டத்தில் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அதில் வருகிற 15-ந்தேதி ஒருநாள் அடையாள வேலைநிறுத்த போராட்டம் நடத்துவது, அதே நாளில் வட்டக் கிளைகளில் காலை 10 மணிக்கு தொடங்கி கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டது.
மேலும் வருகிற 26-ந் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தினை நடத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டது.
இந்த 2 போராட்டங்களையும் மிகவும் வலுவாக நடத்திடும் வகையில் நாளை (வெள்ளிக்கிழமை) கூட்டமைப்பின் சார்பில் மாவட்ட மையங்களில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டத்தினை நடத்துவது எனவும், வருகிற 12-ந்தேதி முதல் 14-ந்தேதி வரை 3 நாட்கள் தலைமை செயலகம் உள்ளிட்ட அனைத்து அரசு அலுவலங்கள், பள்ளி, கல்லூரிகள் மற்றும் உள்ளாட்சி அலுவலகங்களில் 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற மறுத்து வரும் அரசின் நிலைப்பாடு குறித்து விரிவான பிரசாரங்கள் மேற்கொள்வது எனவும் தீர்மானிக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அதில் கூறி உள்ளனர்.
- தீபாவளி பண்டிகை அன்று பட்டாசு வெடிக்கக் கூடாது என்று கிறிஸ்தவ மிஷினரிதான் முதலில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு என அண்ணாமலை பேச்சு.
- சுற்றுச்சூழல் ஆர்வலர் பியுஷ் மனுஷ் சேலம் நீதிமன்றத்தில் அண்ணாமலைக்கு எதிராக புகார் மனு தாக்கல் செய்திருந்தார்.
இரு மதத்தினரிடையே வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசிய வழக்கில், தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை மீதான வழக்கை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.
கடந்த 2022-ம் ஆண்டு தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்திருந்தார். அப்போது தீபாவளி பண்டிகை அன்று பட்டாசு வெடிக்கக் கூடாது என்று கிறிஸ்தவ மிஷினரிதான் முதலில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து என்று குறிப்பிட்டிருந்தார்.
அண்ணாமலையின் பேச்சு இரு மதத்தினரிடையே வெறுப்புணர்வை தூண்டும் வகையில் இருப்பதாக சேலத்தை சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் பியுஷ் மனுஷ் சேலம் நீதிமன்றத்தில் அண்ணாமலைக்கு எதிராக புகார் மனு தாக்கல் செய்திருந்தார்.
இது தொடர்பாக நேரில் ஆஜராக நீதிமன்றம் அண்ணாமலைக்கு சம்மன் அனுப்பியிருந்தது. இந்த சம்மனுக்கு எதிராகவும், தனது மீதான புகாரை ரத்து செய்ய வேண்டும் எனக் கூறியும் அண்ணாமலை சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் தனது பேச்சு தவறாக எடுத்துக் கொள்ளப்பட்டது எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், அண்ணாமலை தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்ததோடு, அவர் மீதான வழக்கை ரத்து செய்ய மறுத்துவிட்டது. மேலும், சேலம் நீதிமன்றம் சட்டத்திற்கு உட்பட்டு மனுவை விசாரிக்கலாம் எனவும் உத்தரவிட்டார்.






