என் மலர்
நீங்கள் தேடியது "Bandhakal Planting Festival"
- தஞ்சை பெரிய கோவில் உலக பிரசித்தி பெற்றது.
- சித்திரை திருவிழா 18 நாட்கள் நடைபெறும்.
தஞ்சாவூா்:
தஞ்சை பெரிய கோவில் உலக பிரசித்தி பெற்றது. கட்டிடக்கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக திகழ்வதுடன் உலக பாரம்பரிய சின்னமாகவும் விளங்கி வருகிறது. பெரிய கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள், சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
ஆண்டு தோறும் பெரிய கோவிலில் சித்திரை திருவிழா, சதயவிழா, ஆஷாட நவராத்திரி விழா உள்ளிட்ட பல்வேறு விழாக்கள் கொண்டாடப்பட்டு வருகின்றன. இதில் சித்திரை திருவிழா பிரசித்தி பெற்றது. ஆண்டு தோறும் சித்திரை மாதத்தில் சித்திரை திருவிழா 18 நாட்கள் நடைபெறும்.
அதன்படி இந்த ஆண்டு சித்திரை திருவிழாவுக்கான பந்தக்கால் முகூர்த்தம் இன்று காலை நடைபெற்றது. இதையொட்டி பெரியநாயகி அம்மன் சன்னதி வளாகத்தில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
அதன் பின்னர் பந்தக்காலுக்கு பால், தயிர், மஞ்சள் மற்றும் வாசனை திரவியங்களை கொண்டு அபிசேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து தமிழில் தேவாரம், திருமுறைகள் பாடி பந்தக்கால் நடப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
இதில் அரண்மனை தேவஸ்தான உதவி ஆணையர் கவிதா, செயல் அலுவலர்கள் மாதவன், மணிகண்டன் மற்றும் சிவாச்சாரியார்கள், பக்தர்கள் கலந்து கொண்டனர். சித்திரை திருவிழாவுக்கான கொடியேற்றம் ஏப்ரல் மாதம் 6-ந்தேதி ஏற்றப்படுகிறது. அன்றிலிருந்து தொடர்ந்து 18 நாட்கள் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும்.
ஏப்ரல் 18-ந் தேதி பஞ்சமூர்த்தி புறப்பாடு நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் ஏப்ரல் 20-ந் தேதி நடைபெறுகிறது. 23-ந் தேதி கொடி இறக்கத்துடன் சித்திரை திருவிழா நிறைவுபெறும்.
- ஆழித்தேரோட்டம் உலக பிரசித்தி பெற்றது.
- ஆசியாவிலேயே மிகப்பெரிய தேர் என்ற பெருமை மிக்கது.
திருவாரூர்:
திருவாரூரில் பிரசித்தி பெற்ற தியாகராஜர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் பஞ்சபூத தலங்களில் பூமிக்குரிய தலமாகவும், சர்வ தோஷ பரிகார தலமாகவும் விளங்குகிறது. சைவ சமயத்தின் தலைமை பீடமாகவும் திகழ்கிறது.
மேலும், பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோவிலின் ஆழித்தேரோட்டம் உலக பிரசித்தி பெற்றது. ஆசியாவிலேயே மிகப்பெரிய தேர் என்ற பெருமை மிக்கது. ஒவ்வொரு ஆண்டும் பங்குனி உத்திர திருவிழாவின் முக்கிய நிகழ்வாக ஆழித்தேரோட்டம் நடைபெறுவது வழக்கம்.
அதன்படி, இந்த ஆண்டுக்கான பங்குனி உத்திர தேரோட்டம் வருகிற ஏப்ரல் மாதம் 7-ந்தேதி (ஆயில்ய நட்சத்திரத்தன்று) நடைபெற உள்ளது. இந்த நிலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) பங்குனி உத்திர திருவிழாவிற்கான பந்தக்கால் நடும் நிகழ்ச்சி நடந்தது.
முன்னதாக கோவிலில் உள்ள ருண விமோசனர் சன்னதியின் அருகில் உள்ள கல் தூணிற்கு மஞ்சள், பால், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்று, தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
தொடர்ந்து, சிவவாத்தியங்கள் முழங்க திருஞானசம்பந்தர் புறப்பாடு நடைபெற்று, தேரடியில் உள்ள ஆழித்தேர் அருகில் வைக்கப்பட்ட 5 பனஞ் சப்பைகளுக்கு பால், பன்னீர், மஞ்சள் உள்ளிட்ட திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, மலர் மாலை மற்றும் மாவிலை அணிவிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
பின்னர், பூஜை செய்யப்பட்ட பனஞ் சப்பைகள் விநாயகர், முருகன், அம்பாள், சண்டிகேஸ்வரர் தேர்களுக்கு எடுத்து செல்லப்பட்டது. அதிக உயரமுள்ள பனஞ்சப்பை ஆழித்தேர் எனப்படும் தியாகராஜர் தேரில் வைக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.






