என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதாசாகு கடிதம் எழுதியிருந்தார்.
    • இணை தேர்தல் அதிகாரிகளாக ஸ்ரீகாந்த் மற்றும் அரவிந்தன் நியமனம்.

    பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்திற்கு கூடுதல் தேர்தல் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

    அதன்படி, கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரியாக சங்கர்லால் குமாவத் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    இணை தேர்தல் அதிகாரிகளாக ஸ்ரீகாந்த் மற்றும் அரவிந்தன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    முன்னதாக, கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரிகளை நியமனம் செய்ய வேண்டும் என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதாசாகு கடிதம் எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மோப்ப நாய் மற்றும் மெட்டல் டிடெக்டர் மூலம் பள்ளிகளில் சோதனை.
    • மிரட்டல் விடுத்த கும்பலை கூண்டோடு பிடிக்க அறிவுறுத்தல்.

    சென்னையில் தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த விவகாரத்தில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக தகவல் வௌியாகியுள்ளது.

    முன்னதாக, பள்ளிகளுக்கு அனுப்பிய மிரட்டல் இமெயிலில், 2 பயங்கரமான வெடிகுண்டு வெடிக்க

    உள்ளதாகவும், உடனடியாக குழந்தைகளை அப்புறப்படுத்துங்கள். இது காமெடியல்ல எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

    மோப்ப நாய் மற்றும் மெட்டல் டிடெக்டர் மூலம் பள்ளிகளில் சோதனை நடத்தப்பட்டுள்ளது.

    வெடிகுண்டு மிரட்டல் தொடர்பாக காவல்துறை ஆணையருடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தொலைபேசி வாயிலாக பேசினார்.

    அப்போது மிரட்டல் விடுத்த கும்பலை கூண்டோடு பிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    • அண்ணா நினைவிடம் புதுப்பிக்கும் பணியும் இப்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
    • மதுரவாயல்-துறைமுகம் ஈரடுக்கு மேம்பாலத்தை கட்டி முடிக்க வேண்டும் என அரசு உறுதியாக உள்ளது.

    சென்னை:

    சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர் எ.வ.வேலு நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    சென்னை மெரினா கடற்கரை அண்ணா நினைவிட வளாகத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு நினைவிடம் அமைக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.

    இந்த கட்டுமானப் பணி கள் 97 சதவீதம் முடிவடைந்துவிட்டது. கருணாநிதி நினைவிடத்துடன் சேர்த்து அண்ணா நினைவிடமும் புதுப்பிக்க வேண்டும் என முதலமைச்சர் உத்தரவிட்டதன் அடிப்படையில், அண்ணா நினைவிடம் புதுப்பிக்கும் பணியும் இப்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    ஒரு வாரத்திற்குள் அனைத்து பணிகளும் முடிவடையும். அதன்பின் முதலமைச்சருடன் கலந்தாலோசித்து தேதி பெற்று நினைவிடம் திறக்கப்படும்.

    மதுரவாயல்-துறை முகம் ஈரடுக்கு மேம்பாலம் கட்டுமானத்திற்கு ஆரம்ப கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. மதுரவாயல்-துறைமுகம் ஈரடுக்கு பாலம் கட்ட ஏற்கனவே மத்திய அரசிற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தரப்பில் அழுத்தம் கொடுக்கப்பட்டு, பணிகள் தொடங்கப்பட்டது. மதுரவாயல்-துறைமுகம் ஈரடுக்கு மேம்பாலத்தை கட்டி முடிக்க வேண்டும் என அரசு உறுதியாக உள்ளது.

    அண்ணா மேம்பாலம் புனரமைக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. அண்ணா மேம்பாலத்திற்கு கூடுதல் சிறப்பு சேர்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் பூங்கா, வாகன நிறுத்துமிடம் உள்ளிட்டவை அமைக்கப்பட்டு வருகிறது.

    ஓரிரு மாதங்களில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அண்ணா மேம்பாலத்தை திறந்து வைப்பார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நிர்வாகிகளை சந்திப்பதற்காக நேற்று மதுரையில் இருந்து கார் மூலமாக நெல்லை வந்தடைந்தார்.
    • கங்கணாங்குளத்தில் ஒரு மண்டபத்தில் தொண்டர்களுடன் சந்தித்து பேசும் நிகழ்ச்சி இருந்தது.

    நெல்லை:

    முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தனது அணியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை நேரடியாக சந்தித்து வருகிறார்.

    அதன்படி நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நிர்வாகிகளை சந்திப்பதற்காக நேற்று மதுரையில் இருந்து கார் மூலமாக நெல்லை வந்தடைந்தார்.

    பின்னர் மாலையில் தென்காசி மாவட்டம் இலஞ்சியில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்று தொண்டர்களிடையே ஓ.பன்னீர்செல்வம் பேசினார். அதன்பின்னர் நெல்லை சந்திப்பு பகுதியில் தனியார் ஓட்டலில் இரவில் தங்கினார்.

    தொடர்ந்து இன்று காலை 10 மணிக்கு நெல்லை மாவட்டம் அம்பை தொகுதிக்கு உட்பட்ட சேரன்மகாதேவி யூனியன் கங்கணாங்குளத்தில் ஒரு மண்டபத்தில் தொண்டர்களுடன் சந்தித்து பேசும் நிகழ்ச்சி இருந்தது. இதற்காக அவர் இன்று காலை புறப்பட்டு கொண்டிருந்தபோது திடீரென அவருக்கு தலைசுற்றல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    இதனால் அவர் கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் ஓய்வெடுத்தார். இதனால் கங்கணாங்குளத்தில் ஓ.பி.எஸ் அணியை சேர்ந்த வைத்தியலிங்கம் எம்.எல்.ஏ. தலைமையில் மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. முன்னிலையில் தொண்டர்களை சந்திக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கிடையே தலை சுற்றல் காரணமாக ஓய்வெடுத்த ஓ.பன்னீர்செல்வத்தை டாக்டர்கள் பரிசோதித்தனர்.

    அதனை தொடர்ந்து அவர் மேற்கொண்டு தொண்டர்களை சந்திக்காமல் அந்த நிகழ்ச்சியை ரத்து செய்துவிட்டு சென்னை புறப்படுவதாக உள்ளதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கோபாலபுரம், அண்ணா நகர், சாந்தோம், ஜெ.ஜெ. நகரில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு மிரட்டல் வந்துள்ளது.
    • வெடிகுண்டு மிரட்டல் வந்த பள்ளிகளில் மோப்ப நாய் உதவியுடன் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

    சென்னை:

    சென்னையில் உள்ள 4 தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. கோபாலபுரம், அண்ணா நகர், சாந்தோம், ஜெ.ஜெ. நகரில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு இ-மெயில் மூலம் மிரட்டல் வந்துள்ளது.

    வெடிகுண்டு மிரட்டல் வந்த பள்ளிகளில் மோப்ப நாய் உதவியுடன் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

    சென்னையில் 4 தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக சென்னை மாநகர காவல் துறை கூறுகையில்,

    பொதுமக்கள் யாரும் பதற்றப்பட வேண்டாம் என்றும் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் உதவியுடன் தீவிர சோதனை நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளனர்.

    வெடிகுண்டு மிரட்டல் செய்தியால் குழந்தைகளை அழைத்து செல்ல பள்ளிகளில் குவிந்து வரும் பெற்றோர்களால் பரபரப்பு ஏற்பட்டது.

    இந்நிலையில் தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது ஒரே ஒரு நபர் தான் என்பது தெரிய வந்துள்ளது. அடையாளம் தெரியாக அந்த நபர் குறித்து போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

    மெயில் அனுப்பப்பட்ட ஐபி முகவரியை வைத்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அ.தி.மு.க.வை பொறுத்தவரைக்கும் மக்களுக்காக பாடுபடுகின்ற கட்சி.
    • நம்முடைய உரிமைகளை பாதுகாக்க பிரிந்து விட்டோம்.

    சேலம்:

    நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் இன்று அ.தி.மு.க. சார்பில் திருச்செங்கோடு, பரமத்திவேலூர், குமாரபாளையம் ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகளை சேர்ந்த அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகளுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    இந்த கூட்டத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பல்வேறு ஆலோசனைகள் வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-

    இந்த ஆலோசனை கூட்டத்தின் நோக்கம் எதிரிகளை வேரோடும், கூண்டோடும் உங்களது திறமையால் அறிவு கூர்மையால் வீழ்த்த வேண்டும் என்பதே நோக்கம் ஆகும். நான் தகவல் தொழில் நுட்ப பிரிவு கூட்டத்தில் கலந்து கொள்வது இதுதான் முதல் முறையாகும்.

    இன்றைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டும் என்றே திட்டமிட்டு அ.தி.மு.க. மீது வீண் பழி சுமத்திக்கொண்டு இருக்கிறார். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் நம்முடைய ஐ.டி. விங் நிர்வாகிகள் உண்மை செய்தியை மக்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டும்.

    தி.மு.க. அரசு நம்முடைய திட்டங்களை ஸ்டிக்கர் ஒட்டி செயல்படுத்துகிறது. தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு இந்த மாவட்டத்தில் ஒரு துரும்பை கூட கிள்ளிபோடவில்லை. இங்கு என் முன் அமர்ந்து இருக்கக்கூடிய இளைஞர்கள் தான் வருங்கால இந்தியாவை ஆளக்கூடிய சிப்பாய்கள். தமிழ்நாட்டை ஆள பிறந்தவர்கள். உங்கள் உள்ளத்தில் திறமை புதைந்து கிடக்கிறது. அதை வெளிப்படுத்துங்கள். இந்த தேர்தலின் மூலமாக. வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. செய்த சாதனைகள் இந்த தி.மு.க. ஆட்சியில் மக்கள் பட்ட துன்பங்களை மக்களிடத்தில் நேரடியாக வலைதளங்கள் மூலமாக கொண்டு சேர்ப்பது உங்களின் தலையாய கடமை.

    விஞ்ஞான உலகத்தில் எதிரிகளை எப்படி வீழ்த்துவது என்பதை வலைதளம் மூலம் மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். 40 சதவீத இளைஞர்கள் தற்போது சமூக வலைதளத்தை பயன்படுத்துகின்றனர். எனவே வலைதளங்களில் கருத்துக்களை பதிவிடுவது முக்கியம் ஆட்சியாளர்கள் பணத்தை நம்பியுள்ளனர். ஆனால் நாம் மக்களை நம்பி கட்சி நடத்துகிறோம்.

    அ.தி.மு.க. ஜனநாயக கட்சி., தி.மு.க. ஒரு வாரிசு அரசியல். தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைவிற்கு பிறகு அவருடைய மகன் மு.க.ஸ்டாலின் ஏதோ தில்லுமுள்ளு செய்து ஆட்சிக்கு வந்துள்ளார். இதையடுத்து அவரது மகன் உதயநிதி ஸ்டாலினை விளையாட்டு துறை அமைச்சராக்கி அவரை முன்னிலை படுத்திக்கொண்டு இருக்கிறார்கள். தி.மு.க. கட்சிக்காக உழைத்தவர்கள் பல ஆண்டு காலமாக அந்த கட்சியில் உயர் பதவிகள் பெற்று பல ஆண்டுகாலமாக கட்சியில் இருக்கிற மூத்த அமைச்சர்களை பின்னுக்கு தள்ளி இருக்கிறார்கள்.

    அ.தி.மு.க.வை பொறுத்தவரைக்கும் மக்களுக்காக பாடுபடுகின்ற கட்சி. பாராளுமன்ற தேர்தல் தேதி இந்த மாத இறுதி அல்லது அடுத்த மாதம் முதல் வாரத்தில் அறிவிக்கப்படலாம். மக்களுடைய குரல்களை பாராளுமன்றத்தில் வெளிப்படுத்துவது நம்முடைய எம்.பி.க்கள்.

    இன்றைக்கு கூட்டணி என்று வந்து விட்டால் தேசிய அளவில் இருக்கின்ற கட்சிகளோடு கூட்டணி வைத்துவிட்டால் தேசிய அளவில் பார்வை சென்று விடுகிறது. நம்முடைய மாநிலத்தின் பிரச்சனையை காதுகொடுத்து கேட்பது கிடையாது. அதனால் பாதிக்கப்படுவது நாம். ஆகவே தான் தமிழ்நாட்டின் மக்களுடைய உரிமைகளை பாதுகாக்க, தமிழ்நாட்டு மக்களுக்கு தேவையான திட்டங்களை கொண்டு வர, நிதியை பெற்று வர, புயல், வெள்ளம், வறட்சி போன்ற காலங்களில் தமிழ்நாட்டு மக்கள் படுகின்ற துன்பங்களை யார் நிவர்த்தி செய்கிறார்களோ அவர்களுக்கு நாம் மத்தியில் பிரச்சனைகள் அடிப்படையில் ஆதரவு கொடுப்போம்.

    ஓட்டு போட்ட மக்கள் தமிழ்நாடு, வேட்பாளர்களை தேர்ந்தெடுப்பது தமிழ்நாட்டு மக்கள். ஆகவே நாட்டு மக்கள் பிரச்சனைகள் வருகிற போது அவர்களுடைய பிரச்சனைகளை எடுத்துச் சொன்னால் அவர்கள் காது கொடுத்து கேட்பது கிடையாது. ஆகவே தான் நாங்கள் தனியாக பிரிந்து விட்டோம். நம்முடைய உரிமைகளை பாதுகாக்க பிரிந்து விட்டோம்.

    காரில் இருந்து ஒவ்வொரு டயர் கழண்டு ஓடுவது போல் இந்தியா கூட்டணியில் இருந்து ஒவ்வொரு கட்சியாக பிரிந்து செல்கிறது. கடந்த முறை ராகுல் பிரதமர் வேட்பாளர் என்று ஸ்டாலின் அறிவித்தார். தற்போது இந்தியா கூட்டணி அறிவித்தார் அவர் ஒரு ராசியானவர்.

    அ.தி.மு.க.வை பொறுத்த வரைக்கும் பொறுத்து இருந்து பாருங்கள் அ.தி.மு.க. தலைமையில் சிறப்பான கூட்டணி அமைக்கப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • குழு தனது பயணத்தை கடந்த 5-ந்தேதி தொடங்கிய நிலையில் மண்டல வாரியாக சென்று 10-ந்தேதி வரை கருத்துக்களை கேட்டு வருகின்றனர்.
    • நேருஜி கலையரங்கில் பிரமாண்ட ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கருத்து கேட்பு கூட்ட நிகழ்ச்சியில் அந்த குழுவினர் பங்கேற்கின்றனர்.

    நெல்லை:

    பாராளுமன்ற தேர்தல் நெருங்குவதையொட்டி தமிழகத்தில் அரசியல் கட்சிகளின் தேர்தல் பணிகள் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. பிரதான கட்சிகளான அ.தி.மு.க., தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இது ஒருபுறம் இருக்க பொதுமக்கள், தொழிலதிபர்கள், மீனவர்கள், தொழில் முனைவோர் என பலதரப்பட்டவர்களிடமும் கருத்துக்களை கேட்டு அதன் அடிப்படையில் அவர்களின் தேவைகளை அறிந்து அதனை வருகிற பாராளுமன்ற தேர்தலின்போது வாக்குறுதி களாக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கும் வண்ணம் தி.மு.க., அ.தி.மு.க. சார்பில் குழுக்கள் அமைக்கப்பட்டு கருத்துகள் கேட்கப்படுகிறது.

    அதன்படி அ.தி.மு.க. சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு ஒன்றை அக்கட்சியின் பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். அந்த குழுவில் முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விசுவநாதன், பொன்னையன், பொள்ளாச்சி ஜெயராமன், ஜெயக்குமார், சி.வி.சண்முகம், செம்மலை, வளர்மதி, ஓ.எஸ்.மணியன், உதயகுமார், வைகைச்செல்வன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். அவர்கள் மண்டல வாரியாக பிரிக்கப்பட்டுள்ள அ.தி.மு.க. பிரிவு மாவட்டங்களில் நேரடியாக சென்று பல்வேறு தரப்பினரிடமும் கருத்துக்களை கேட்டு வருகின்றனர்.

    இந்த குழு தனது பயணத்தை கடந்த 5-ந்தேதி தொடங்கிய நிலையில் மண்டல வாரியாக சென்று 10-ந்தேதி வரை கருத்துக்களை கேட்டு வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்து மக்களிடம் கருத்து கேட்பதற்காக நெல்லை மண்டலத்தில் அந்த குழுவினர் இன்று மாலை சுற்றுப்பயணம் மேற்கொள்கின்றனர்.

    இதற்காக இன்று மதியம் சென்னையில் இருந்து மதுரைக்கு வரும் அந்த குழு அங்கிருந்து கார் மூலமாக நெல்லை வருகிறது. நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா தலைமையில் பாளை நேருஜி கலையரங்கில் பிரமாண்ட ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கருத்து கேட்பு கூட்ட நிகழ்ச்சியில் அந்த குழுவினர் பங்கேற்கின்றனர்.

    இந்த கூட்டத்தில் நெல்லை, தென்காசி, குமரி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள், தொழிலதிபர்கள், மீனவர்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை தெரிவிக்கின்றனர்.

    • கே.ஆர்.பி., அணை கட்டி முடிக்கப்பட்டு, 1957-ம் ஆண்டு அணை திறக்கப்பட்டது.
    • அணை நீர்மட்டம் கடந்தாண்டு ஜூன் மாதம் முதல் நேற்று வரை, 248 நாட்களாக தொடர்ந்து, 50 அடிக்கு மேல் அணையில் தண்ணீர் இருப்பு இருந்தது.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி அடுத்த பெரியமுத்துார் அருகே, பெண்ணை ஆற்றின் குறுக்கில், கே.ஆர்.பி., அணை கட்டி முடிக்கப்பட்டு, 1957-ம் ஆண்டு அணை திறக்கப்பட்டது. இதன் மூலம் நேரடியாக, 9,012 ஏக்கர் விவசாய நிலங்களும், மறைமுகமாக, 40,000 ஏக்கர் நிலங்களும் பாசன வசதி பெற்று வருகின்றன. அணை கட்டி முடித்து, 66 ஆண்டுகளில் கடந்த, 2017ல் அணையின் பிரதான ஒரு ஷட்டர் உடைந்ததால் முதல்முறையாக இந்த அணை அந்த ஆண்டில் நிரம்பவில்லை. புதிய ஷட்டர் மாற்றும் பணியால் அடுத்த 3 ஆண்டுகளும் அணை நிரம்பியது குறிப்பிடத்தக்கது.

    ஆனால், 63 ஆண்டுகளும், இந்த அணை நிரம்பி, எப்போதும் ஆற்றில் தண்ணீர் ஓடுவதால், இந்த அணையை, இம்மாவட்ட மக்கள் வரப்பிரசாதமாக கருதுகின்றனர்.

    இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த ஆண்டின் இறுதியில், 4 மாதங்கள் பரவலாக மழை பெய்ததால், கே.ஆர்.பி., அணைக்கு தொடர்ந்து நீர்வந்து கொண்டிருக்கிறது.

    அணை நீர்மட்டம் கடந்தாண்டு ஜூன் மாதம் முதல் நேற்று வரை, 248 நாட்களாக தொடர்ந்து, 50 அடிக்கு மேல் அணையில் தண்ணீர் இருப்பு இருந்தது.

    கடந்த, 2 மாதங்களாக மழை இல்லாததால், 248 நாட்களுக்கு பிறகு நேற்று, அணை நீர்மட்டம் மொத்த உயரமான, 52 அடியில், 49.95 அடியாக குறைந்தது. அணைக்கு, 132 கன அடிநீர் வந்து கொண்டிருந்த நிலையில் அணையில் இருந்து வாய்காலில் 192 கன அடிநீர் திறக்கப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு ரூ.100 கோடி மதிப்பில் வங்கி கடன் இணைப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • பெண்களுக்கு கல்வி பொருளாதார சுதந்திரம் அவசியம். உயர்கல்வி பயில புதுமைப்பெண் திட்டம் செயல்படுத்தி வருகிறது.

    ஈரோடு:

    ஈரோட்டில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழ்நாடு முழுவதும் இன்று மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.2,504 கோடி மதிப்பில் வங்கி கடன் இணைப்பு விழா நடத்த முதலமைச்சர் உத்தரவிட்டிருந்தார். அதன்படி இன்று ஈரோடு மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு ரூ.100 கோடி மதிப்பில் வங்கி கடன் இணைப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நான் ஒவ்வொரு முறையும் ஈரோடு வரும்போது எல்லாம் எனது தாய் வீட்டிற்கு வருவது போன்ற உணர்வு ஏற்படுகிறது. என்னை உங்களின் மகனாக, சகோதரனாக, பேரனாக இப்பகுதி மக்கள் கொண்டாடி வருகின்றனர்.

    இது மட்டும் இன்றி பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் பிறந்த மண் இது. ஈரோடு மண் திராவிட இயக்கத்தின் தொட்டில் ஆகும். பெண்களின் முன்னேற்றம் தான் திராவிட மாடல் அரசின் நோக்கமாகும். ஏனென்றால் ஒரு குடும்பத்தில் ஒரு பெண் படித்தால் அந்த குடும்பத்தின் பொருளாதாரம் உயரும். மகளிர் சுய உதவிக்குழுக்கள் தயாரிக்கும் பொருட்களை தான் நான் பெரும்பாலும் பயன்படுத்துகிறேன். நான் மட்டும் இன்றி எனது தந்தையும் அவர்கள் தயாரிக்கும் பொருட்களை தான் பயன்படுத்துகிறோம். ஏனென்றால் அவர்களின் தயாரிப்பு அவ்வளவு தரமாக இருக்கும். திராவிட அரசின் பிராண்ட் அம்பாசிஸ்டராக மகளிர் சுய குழுக்கள் உள்ளனர்.

    2016-ம் ஆண்டு முதல் ஒன்றிய அரசுக்கு ரூ.6 லட்சம் கோடி வரியாக செலுத்துகிறோம். ஆனால் 2.5 லட்சம் கோடி ரூபாய் மட்டுமே தமிழ்நாட்டிற்கு திருப்பி வழங்குகிறது. 1 ரூபாய் கொடுத்தால் 29 பைசா மட்டுமே ஒன்றிய அரசு திருப்பி தருகிறது. இத்தகைய பொருளாதார சூழலில் தான் தமிழ்நாட்டில் சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்.

    திராவிட மாடல் அரசின் திட்டங்களை செயல்படுத்துவதில் மகளிர் குழு பங்களிப்பு மிகப்பெரும் உதவியாக உள்ளது. காலை உணவு திட்டம், சுகாதாரம், கல்வி ஆகிய திட்டங்களில் மகளிர் குழு பங்களிப்பு பேருதவியாக உள்ளது. பெண்களின் முன்னேற்றம் தான் திராவிட மாடல் அரசின் முன்னேற்றம், நோக்கம் என்ற அடிப்படையில் இந்த அரசு செயல்பட்டு வருகிறது.


    பெண்களுக்கு கல்வி பொருளாதார சுதந்திரம் அவசியம். உயர்கல்வி பயில புதுமைப்பெண் திட்டம் செயல்படுத்தி வருகிறது. 1 கோடியே 16 லட்சம் மகளிருக்கு உரிமைத்தொகை வழங்கப்படுகிறது. கட்டணமில்லா பேருந்து பயணம் மூலம் ரூ.12 ஆயிரம் ஒவ்வொரு பெண்களுக்கும் மாதம் மிச்சமாகிறது. தமிழ்நாடு முழுவதும் இந்த அரசு பொறுப்பேற்ற பின் மகளிர் குழுவை சேர்ந்த 12 லட்சத்து 25 ஆயிரத்து 803 பேருக்கு ரூ.69 ஆயிரத்து 584 கோடி வங்கி கடன் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

    இதில் 2023-24-ம் ஆண்டில் மட்டும் ரூ.30 ஆயிரம் கோடி வங்கி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இதுவரை ரூ.25 ஆயிரம் கோடி வழங்கப்பட்டது. விரைவில் இலக்கை முடிப்போம். நான் தற்போது நிகழ்ச்சியை முடித்து கொண்டு நேரடியாக கோவையில் இருந்து மும்பை செல்கிறேன். விளையாட்டுத்துறை மேம்பாட்டு சார்பில் சிறப்பாக செயல்பட்டதற்காக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு துறைக்கு இன்று விருது வழங்க உள்ளனர். அதற்காக செல்கிறேன். உங்கள் அனைவர் ஆசீர்வாதத்துடன் செல்கிறேன் நன்றி.

    இவ்வாறு அவர் கூறினார். 

    • காட்டு யானைகள் உணவு, தண்ணீர் தேடி அடிக்கடி சாலையை கடந்து செல்வது வழக்கமான ஒன்று.
    • மினி லாரியில் இருந்த தார்பாயை தனது துதிக்கையால் கீழே இழுத்து போட்டு சேதாரம் செய்தது.

    தாளவாடி:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இதில் ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. ஆசனூர் வனச்சரகத்தில் ஏராளமான காட்டு யானைகள் வசித்து வருகின்றன. இந்த காட்டு யானைகள் உணவு, தண்ணீர் தேடி அடிக்கடி சாலையை கடந்து செல்வது வழக்கமான ஒன்று.

    சத்தியமங்கலத்தில் இருந்து மைசூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று மாலை வனப்பகுதியில் இருந்து வெளியேரிய ஒற்றை காட்டுயானை கரும்பு லாரி வருகிறதா என சாலையில் உலா வந்தது. அப்போது அங்கு பழுதாகி நின்ற மினி லாரியின் உள்ளே காய்கறி உள்ளதா என தேடியது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    மினி லாரியில் ஏதும் இல்லாதால் மினி லாரியில் இருந்த தார்பாயை தனது துதிக்கையால் கீழே இழுத்து போட்டு சேதாரம் செய்தது. சுமார் 30 நிமிடம் வாகனங்கள வழிமறித்த ஒற்றையானை பின்னர் வனப்பகுதியில் சென்றது. கடந்த சில நாட்களாக காட்டு யானை கூட்டம் வாகனங்களை வழிமறித்து வருவது குறிப்பிடத்தக்கது. 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பொது சிவில் சட்டம் கொண்டு வந்ததற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
    • உத்தரகாண்ட் மாநிலத்தில் பொது சிவில் சட்டம் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது.

    சென்னை:

    பொது சிவில் சட்டத்தை மத்தியில் ஆளும் பா.ஜனதா அரசு அனைத்து மாநிலங்களிலும் நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது.

    நாட்டிலேயே உத்தரகாண்ட் மாநிலத்தில் இந்த சட்டம் முதன்முதலாக கொண்டு வரப்பட்டுள்ளது. அம்மாநில சட்டசபையில் பொது சிவில் சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டு உள்ளது.

    பொது சிவில் சட்டம் கொண்டு வந்ததற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

    இந்த நிலையில் கார்த்தி சிதம்பரம் எம்.பி. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவு வெளியிட்டு உள்ளார். அதில் கூறியிருப்ப தாவது:-

    உத்தரகாண்ட் மாநிலத்தில் பொது சிவில் சட்டம் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது. இதன்மூலம் 'இந்துத்துவா' பரிசோதனை கூடமாக உத்தரகாண்ட் உருவாக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

    • இறுதிப்போட்டிக்கு சென்னை மற்றும் தூத்துக்குடி அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
    • பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் குழு பாராட்டி சான்றிதழ் மற்றும் பரிசு கோப்பையை வழங்கியது.

    தமிழக அரசின் பள்ளி கல்வித்துறை சார்பில், மாவட்டந்தோறும் குடியரசு தினத்தையொட்டி 14 வயதுக்குட்பட்டோருக்கான குழு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

    இந்த ஆண்டு குடியரசு தினத்தையொட்டி, கடந்த மாதம் குழு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன.

    இதில் மண்டல மற்றும் மாவட்ட அளவில் வெற்றிபெற்ற மாணவர்கள் புதுக்கோட்டையில் நடந்த மாநில அளவிலான போட்டிகளில் கலந்துகொண்டனர். இதில் பேட்மிண்டன், டென்னிஸ், கோகோ, கபடி, எறிபந்து, கூடைப்பந்து உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன.

    3 நாட்கள் நடைபெற்ற இந்த விளையாட்டு போட்டிகளில் 38 மாவட்ட அணிகள் பங்கேற்று அசத்தின. இறுதிப்போட்டிக்கு சென்னை மற்றும் தூத்துக்குடி அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் தூத்துக்குடி முதலிடத்தை பிடித்தது. சென்னை 2-ம் இடம் பிடித்தது.

    சென்னை அணியில் இடம்பிடித்த புழுதிவாக்கத்தை சேர்ந்த வியாசா வித்யாலயா மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு படிக்கும் மாணவன் ஆ.ஜோன்ஸ்ராஜ் எறிபந்து (த்ரோபால்) விளையாட்டில் அசத்தினார். இதுதவிர அந்த பள்ளி மாணவர்கள் 12 பேர் சென்னை அணியில் இடம்பிடித்தனர்.

    மாணவர் ஜோன்ஸ் ராஜ், கராத்தே மற்றும் ஜூடோ போன்ற வீர கலைகளில் பயிற்சி பெற்று சர்வதேச மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்று பதக்கங்கள் குவித்தவர் ஆவார். வெற்றிபெற்ற தூத்துக்குடி மற்றும் சென்னை அணிகளில் இடம்பெற்ற மாணவ-மாணவிகளுக்கு, பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் குழு பாராட்டி சான்றிதழ் மற்றும் பரிசு கோப்பையை வழங்கியது.

    ×