search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பெண்கள் பொருளாதாரத்தில் மேம்பாடு அடைய வேண்டும் என்பதே திராவிட மாடல் அரசின் நோக்கம்- உதயநிதி
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    பெண்கள் பொருளாதாரத்தில் மேம்பாடு அடைய வேண்டும் என்பதே திராவிட மாடல் அரசின் நோக்கம்- உதயநிதி

    • மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு ரூ.100 கோடி மதிப்பில் வங்கி கடன் இணைப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • பெண்களுக்கு கல்வி பொருளாதார சுதந்திரம் அவசியம். உயர்கல்வி பயில புதுமைப்பெண் திட்டம் செயல்படுத்தி வருகிறது.

    ஈரோடு:

    ஈரோட்டில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழ்நாடு முழுவதும் இன்று மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.2,504 கோடி மதிப்பில் வங்கி கடன் இணைப்பு விழா நடத்த முதலமைச்சர் உத்தரவிட்டிருந்தார். அதன்படி இன்று ஈரோடு மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு ரூ.100 கோடி மதிப்பில் வங்கி கடன் இணைப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நான் ஒவ்வொரு முறையும் ஈரோடு வரும்போது எல்லாம் எனது தாய் வீட்டிற்கு வருவது போன்ற உணர்வு ஏற்படுகிறது. என்னை உங்களின் மகனாக, சகோதரனாக, பேரனாக இப்பகுதி மக்கள் கொண்டாடி வருகின்றனர்.

    இது மட்டும் இன்றி பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் பிறந்த மண் இது. ஈரோடு மண் திராவிட இயக்கத்தின் தொட்டில் ஆகும். பெண்களின் முன்னேற்றம் தான் திராவிட மாடல் அரசின் நோக்கமாகும். ஏனென்றால் ஒரு குடும்பத்தில் ஒரு பெண் படித்தால் அந்த குடும்பத்தின் பொருளாதாரம் உயரும். மகளிர் சுய உதவிக்குழுக்கள் தயாரிக்கும் பொருட்களை தான் நான் பெரும்பாலும் பயன்படுத்துகிறேன். நான் மட்டும் இன்றி எனது தந்தையும் அவர்கள் தயாரிக்கும் பொருட்களை தான் பயன்படுத்துகிறோம். ஏனென்றால் அவர்களின் தயாரிப்பு அவ்வளவு தரமாக இருக்கும். திராவிட அரசின் பிராண்ட் அம்பாசிஸ்டராக மகளிர் சுய குழுக்கள் உள்ளனர்.

    2016-ம் ஆண்டு முதல் ஒன்றிய அரசுக்கு ரூ.6 லட்சம் கோடி வரியாக செலுத்துகிறோம். ஆனால் 2.5 லட்சம் கோடி ரூபாய் மட்டுமே தமிழ்நாட்டிற்கு திருப்பி வழங்குகிறது. 1 ரூபாய் கொடுத்தால் 29 பைசா மட்டுமே ஒன்றிய அரசு திருப்பி தருகிறது. இத்தகைய பொருளாதார சூழலில் தான் தமிழ்நாட்டில் சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்.

    திராவிட மாடல் அரசின் திட்டங்களை செயல்படுத்துவதில் மகளிர் குழு பங்களிப்பு மிகப்பெரும் உதவியாக உள்ளது. காலை உணவு திட்டம், சுகாதாரம், கல்வி ஆகிய திட்டங்களில் மகளிர் குழு பங்களிப்பு பேருதவியாக உள்ளது. பெண்களின் முன்னேற்றம் தான் திராவிட மாடல் அரசின் முன்னேற்றம், நோக்கம் என்ற அடிப்படையில் இந்த அரசு செயல்பட்டு வருகிறது.


    பெண்களுக்கு கல்வி பொருளாதார சுதந்திரம் அவசியம். உயர்கல்வி பயில புதுமைப்பெண் திட்டம் செயல்படுத்தி வருகிறது. 1 கோடியே 16 லட்சம் மகளிருக்கு உரிமைத்தொகை வழங்கப்படுகிறது. கட்டணமில்லா பேருந்து பயணம் மூலம் ரூ.12 ஆயிரம் ஒவ்வொரு பெண்களுக்கும் மாதம் மிச்சமாகிறது. தமிழ்நாடு முழுவதும் இந்த அரசு பொறுப்பேற்ற பின் மகளிர் குழுவை சேர்ந்த 12 லட்சத்து 25 ஆயிரத்து 803 பேருக்கு ரூ.69 ஆயிரத்து 584 கோடி வங்கி கடன் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

    இதில் 2023-24-ம் ஆண்டில் மட்டும் ரூ.30 ஆயிரம் கோடி வங்கி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இதுவரை ரூ.25 ஆயிரம் கோடி வழங்கப்பட்டது. விரைவில் இலக்கை முடிப்போம். நான் தற்போது நிகழ்ச்சியை முடித்து கொண்டு நேரடியாக கோவையில் இருந்து மும்பை செல்கிறேன். விளையாட்டுத்துறை மேம்பாட்டு சார்பில் சிறப்பாக செயல்பட்டதற்காக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு துறைக்கு இன்று விருது வழங்க உள்ளனர். அதற்காக செல்கிறேன். உங்கள் அனைவர் ஆசீர்வாதத்துடன் செல்கிறேன் நன்றி.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×