என் மலர்
உள்ளூர் செய்திகள்
- தமிழகத்தின் புதுக்கோட்டையைச் சேர்ந்த 22 மீனவர்கள் கைது மற்றும் 3 மீன்பிடி படகுகள் பறிமுதல் செய்யப்பட்டதை உங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறோம்.
- கைதிகளை முன் கூட்டியே திருப்பி அனுப்பவும், அவர்களின் மீன்பிடி படகை விடுவிக்கவும் தாங்கள் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.
சென்னை:
மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கருக்கு தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை எழுதி இருக்கும் கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தின் புதுக்கோட்டையைச் சேர்ந்த 22 மீனவர்கள் கைது மற்றும் 3 மீன்பிடி படகுகள் பறிமுதல் செய்யப்பட்டதை உங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறோம். கைதிகளை முன் கூட்டியே திருப்பி அனுப்பவும், அவர்களின் மீன்பிடி படகை விடுவிக்கவும் தாங்கள் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
- திருவெறும்பூர் டிஎஸ்பி அறிவழகன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
- விழாவிற்கான ஏற்பாடுகளை கிராம பட்டையாதார்கள் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.
ராம்ஜிநகர்:
திருச்சி மணிகண்டம் அருகே உள்ள அளுந்தூர் கிராமம் தானா முளைத்த முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு வருடம் தோறும் நடைபெறுவது வழக்கம். அதே போன்று இந்த வருடமும் 700 காளைகள் 350 மாடுபிடி வீரர்கள் பங்குபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடைபெற்றது.
நிகழ்ச்சியில் ஸ்ரீரங்கம் தொகுதி பழனியாண்டி எம்.எல்.ஏ கலந்து கொண்டார். இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் பிடிபடாத காளைகளுக்கும், காளைகளை அடக்கிய வீரர்களுக்கும் சைக்கிள், மின்விசிறி, பாத்திரங்கள் ரொக்க பரிசு போன்றவை வழங்கப்பட்டன. மாடுகளை அடக்க முற்பட்ட திண்டுக்கல் பூபதி ராஜா (25) குஜிலியம்பட்டியை சேர்ந்த தங்கவேல் (25) பாகனூர் கிராமத்தைச் சேர்ந்த கனகராஜ் (35) கோடாங்கி பட்டியைச் சேர்ந்த சின்னு (35) விராலிமலையை சேர்ந்த விஜயகுமார் (27) ஆகியோர் காயமடைந்தனர். அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் விராலிமலை தொகுதி எம்.எல்.ஏ விஜயபாஸ்கர், ஊராட்சி மன்ற தலைவர்கள் அளுந்தூர் எமல்டா லில்லி கிரேசி ஆரோக்கியசாமி, நாகமங்கலம் வெள்ளைச்சாமி, நாவலூர் குட்டப்பட்டு ஜார்ஜ் பெர்னாண்டஸ், தி.மு.க. நிர்வாகிகள் யாகபுடையான் பட்டி ஆரோக்கியசாமி, மலைப்பட்டி சந்திரன் மற்றும் மணிகண்டம் தெற்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் முத்து கருப்பன், தொழிலதிபர் மங்கதேவன் பட்டி கணேஷ் கருப்பையா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
திருவெறும்பூர் டிஎஸ்பி அறிவழகன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை கிராம பட்டையாதார்கள் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் பதவி விலக வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
- 10 நாட்களில் தமிழகத்தில் அதிக அளவில் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
சென்னை:
தமிழகத்தில் போதைப்பொருட்கள் நடமாட்டம் அதிகரித்து இருப்பதாகவும், டெல்லியில் இருந்து போதைப்பொருட்களை வெளிநாடுகளுக்கு கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள தி.மு.க. அயலக அணி முன்னாள் நிர்வாகியான ஜாபர் சாதிக்கின் தொடர்பு பற்றியும் கவர்னரை சந்தித்து புகார் அளிக்கப் போவதாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியிருந்தார். இதன்படி கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் கவர்னர் ஆர்.என்.ரவியை எடப்பாடி பழனிசாமி இன்று காலை 11 மணியளவில் நேரில் சந்தித்து புகார் அளித்தார்.
இந்த சந்திப்பின் போது முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, திண்டுக்கல் சீனிவாசன், டி.ஜெயக்குமார், சி.வி.சண்முகம் எம்.பி. ஆகியோர் உடன் இருந்தனர்.
எடப்பாடி பழனிசாமி, கவர்னர் ஆர்.என்.ரவிக்கு பொன்னாடை அணிவித்து பூங்கொத்து கொடுத்தார். பின்னர் போதைப்பொருட்கள் நடமாட்டம் குறித்த பட்டியல் அடங்கிய புகார் மனுவை அளித்தார்.
கவர்னர் ஆர்.என்.ரவியிடம் சி.வி.சண்முகம் போதைப்பொருட்களின் நடமாட்டம் பற்றியும், டெல்லியில் கைதான ஜாபர் சாதிக் பற்றியும் விளக்கி கூறினார்.
கவர்னரை சந்தித்து விட்டு வெளியில் வந்த எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் போதைப்பொருள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. தி.மு.க. அயலக அணி நிர்வாகியான ஜாபர் சாதிக் டெல்லி போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு பல தகவல்களை வெளியிட்டு உள்ளார்.
3 ஆண்டுகளில் அவர் 45 முறை போதைப்பொருட்களை கடத்தி இருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

ஜாபர் சாதிக் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு சம்பாதித்த பணத்தை சினிமா தயாரிப்புக்கு பயன்படுத்தி இருப்பதாகவும் தி.மு.க. நிர்வாகிகளுக்கு வழங்கி இருப்பதாகவும் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் கூறியுள்ளனர்.
முதலமைச்சர் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் இயக்கிய சினிமா படத்தை ஜாபர் சாதிக் தயாரித்து உள்ளார். முதலமைச்சர், உதயநிதியை சந்தித்து நிதி அளித்திருப்பதும் தெரிய வந்துள்ளது. எனவே இதில் தொடர்புடைய குற்றவாளிகள் அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும். அது தொடர்பாக உரிய சட்ட நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று கோரி கவர்னரை சந்தித்து மனு அளித்துள்ளோம்.
இப்படி போதைப்பொருள் மூலமாக சம்பாதித்த பணத்தை வருகிற பாராளுமன்றத் தேர்தலில் தி.மு.க.வினர் பயன்படுத்த முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
எனவே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் பதவி விலக வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
கே:- போதைப்பொருள் விவகாரத்தில் தி.மு.க.வை களங்கப்படுத்த முயற்சிகள் நடப்பதாக அமைச்சர் ரகுபதி கூறியிருக்கிறாரே?
ப:- போதைப்பொருள் கடத்தலில் இருந்து மக்களை திசை திருப்ப தி.மு.க.வினர் நாடகத்தை அரங்கேற்றி வருகிறார்கள். இந்த விவகாரத்தில் உரிய முறையில் விசாரணை நடத்தப்பட வேண்டும். இல்லையென்றால் இளைஞர்கள் சீரழிந்து விடுவார்கள்.
10 நாட்களில் தமிழகத்தில் அதிக அளவில் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. போதைப்பொருள் கடத்தலில் தி.மு.க. நிர்வாகிக்கு தொடர்பு இருப்பதால் அது பற்றி அதிகாரிகள் வெளியில் தெரிவித்துள்ளனர். தங்கள் மீது குற்றமில்லை. மடியில் கனமில்லை என்றால் ஏன் பயப்படுகிறார்கள். போதைப்பொருட்கள் கடத்தல் விவகாரத்தால் தி.மு.க.வினர் நடுங்கிப் போய் உள்ளனர். பதற்றத்தில் இருக்கிறார்கள். தவறு செய்யவில்லை நாங்கள் நிரபராதி என்றால் சட்டப்படி சந்திக்க வேண்டியது தானே.
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
- சுமார் இரண்டு மணி நேரமாக அலசி ஆராய்ந்தபோது குப்பையில் தங்க காப்பை தூய்மை பணியாளர் மணிவேல் கண்டுடெடுத்தார்.
- மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் கருணை உள்ளத்தோடு கண்டுபிடித்து கொடுத்த சம்பவம் அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது.
சேலம்:
சேலம் சூரமங்கலம் உழவர் சந்தை அருகில் உள்ள சினிமா தியேட்டர் வளாகத்தில் குப்பைகளை அகற்றும் பணி நடைபெற்றது. குப்பைகள் அனைத்தும் அகற்றப்பட்டு குப்பை சேகரிக்கும் இடத்தில் ஊழியர்கள் வாகனத்தில் கொண்டு சென்றனர்.
அப்போது சூரமங்கலம் மாநகராட்சிக்கு உட்பட்ட மேஸ்திரி குமரேசனை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு ஒருவர் பேசினர். அப்போது உழவர் சந்தை அருகில் உள்ள தியேட்டரில் படம் பார்க்க வந்தபோது தனது குழந்தையின் கையில் இருந்த தங்க காப்பு கீழே விழுந்து விட்டதாகவும் தியேட்டரில் எங்கும் தேடி பார்த்து கிடைக்கவில்லை.
எனவே அங்கு வரும் குப்பையில் உள்ளதா? என்று பார்க்குமாறு கூறினார். இதனையடுத்து குப்பை எடுத்து செல்லப்பட்ட வண்டியை ஓரங்கட்டிய மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் உடனடியாக வண்டியில் இருந்த குப்பைகளை தரம் பிரிக்க தொடங்கினர். சுமார் இரண்டு மணி நேரமாக அலசி ஆராய்ந்தபோது குப்பையில் தங்க காப்பை தூய்மை பணியாளர் மணிவேல் கண்டுடெடுத்தார். இதனையடுத்து சம்பந்தப்பட்டவர்களுக்கு காணாமல் போன தங்க காப்பு கிடைத்துவிட்டதாக தகவல் தரப்பட்டது.
இதையடுத்து அவர்கள் நேரடியாக தியேட்டருக்கு வந்து தங்க காப்பை பெற்றுச் மகிழ்ச்சியுடன் சென்றனர். தியேட்டரில் தவறவிட்ட தங்க காப்பை குப்பைக்கு சென்ற போது மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் கருணை உள்ளத்தோடு கண்டுபிடித்து கொடுத்த சம்பவம் அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது.
- கூட்டத்தில் வேட்பாளர்கள் பெயர் பட்டியல் பரிசீலிக்கப்படுகிறது.
- பா.ஜனதா நிச்சயம் வெற்றி பெறும் என்று நம்பும் 10 தொகுதிகளின் பட்டியல் இறுதி செய்யப்படுகிறது.
சென்னை:
தமிழக பா.ஜனதா தேர்தல் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நாளை காலையில் கட்சி தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நடைபெறுகிறது. கூட்டத்துக்கு மாநில தலைவர் அண்ணாமலை தலைமை தாங்குகிறார். குழு உறுப்பினர்களான மத்திய மந்திரி எல்.முருகன், வானதி சீனிவாசன், பொன். ராதா கிருஷ்ணன், எச்.ராஜா, முருகானந்தம் உள்ளிட்டோர் பங்கேற்கிறார்கள்.
இந்த கூட்டத்தில் வேட்பாளர்கள் பெயர் பட்டியல் பரிசீலிக்கப்படுகிறது. பா.ஜனதா நிச்சயம் வெற்றி பெறும் என்று நம்பும் 10 தொகுதிகளின் பட்டியல் இறுதி செய்யப்படுகிறது.
கூடவே மற்ற தொகுதிகளுக்கான பெயர் பட்டியலும் தயார் செய்யப்படுகிறது. இந்த பட்டியலுடன் அண்ணாமலை நாளை கூட்டம் முடிந்ததும் டெல்லி செல்கிறார். அங்கு மேலிட தலைவர்களுடன் ஆலோசனை நடத்துகிறார். மத்திய தேர்தல் குழு இறுதி செய்த பிறகு அகில இந்தியா அளவில் வெளியிடப்படும் 2-வது வேட்பாளர் பட்டியலில் தமிழகத்தில் இருந்தும் 10 தொகுதிகள் இடம்பெறலாம் என்று கட்சி வட்டாரங்களில் கூறப்படுகிறது.
- கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழகத்தில் உள்ள மணல் குவாரிகளில் முறைகேடு நடந்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.
- அமலாக்கத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிகிறது.
சென்னை:
சென்னையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று 10 இடங்களில் சோதனை நடத்தினர். ரேசன் கடைகளுக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்களை சப்ளை செய்யும் அரசு ஒப்பந்ததாரர் செல்வராஜ் என்பவரது வீடு, வேப்பேரியில் உள்ள தொழில் அதிபர் இரானி உள்பட பலரது வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது.
போயஸ்கார்டனில் வசித்து வரும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளரான ஆதவ் அர்ஜூன் வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
மற்ற இடங்களில் நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனை நிறைவு பெற்றுள்ள நிலையில் போயஸ் கார்டன் கஸ்தூரி ரங்கன் சாலையில் உள்ள ஆதவ் அர்ஜூன் வீட்டில் மட்டும் 2-வது நாளாக சோதனை நடைபெற்று வருகிறது. அமலாக்கத்துறை அதிகாரிகள் நடத்திய இந்த சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழகத்தில் உள்ள மணல் குவாரிகளில் முறைகேடு நடந்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. ரூ.4,730 கோடி அளவுக்கு இதில் முறைகேடு மற்றும் சட்ட விரோத பணபரிமாற்றம் நடைபெற்றிருப்பதும் தெரிய வந்திருந்தது.
இதில் தொடர்புடைய மணல் ஒப்பந்ததாரர்கள் சிலரது வீடுகளிலும் நேற்று அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தியுள்ளனர்.
இந்த சோதனையிலும் பல்வேறு ஆவணங்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றி உள்ளனர்.
- எண்ணிக்கை அல்ல, எண்ணம்தான் முக்கியம் என்பதை உணர்ந்தவர்கள் நம் கூட்டணிக் கட்சித் தலைவர்கள்.
- பத்தாண்டு கால பா.ஜ.க. ஆட்சி இந்தியாவைப் பாழ்படுத்தியதை மக்கள் உணர்ந்துள்ளார்கள். அதனை மேலும் ஆழமாக மனதில் விதையுங்கள்.
சென்னை:
தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
10 ஆண்டு காலத்துக்கு முன்னால் கொடுத்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றாமல் ஆட்சி முடியப் போகும் நிலையில் மாநிலம் மாநிலமாகச் சென்று திட்டங்களைத் தொடங்கி வைத்துக் கொண்டு இருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. அவரது அவசரகாலப் பதற்றமானது அவர் முகத்தில் இருக்கும் பயத்தைக் காட்டுகிறது.
'மீண்டும் மோடி' என்று அவரது ஆதரவாளர்கள் எவ்வளவு கூச்சல் எழுப்பினாலும், 'வேண்டாம் மோடி' என்ற முழக்கமே இந்தியா முழுமைக்கும் இன்று எதிரொலித்துக் கொண்டு இருக்கிறது.
பா.ஜ.க.வை வீழ்த்தியாக வேண்டும் என்ற அரசியல் நோக்கம் 'இந்தியா' கூட்டணிக் கட்சிகளால் மக்கள் மனதில் விதைக்கப்பட்டு விட்டது. பா.ஜ.க.வுக்கு எதிரான வாக்குகள் சிதறி விடக்கூடாது என்ற நோக்கத்துடன் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பல்வேறு மாநிலங்களில் கூட்டணிப் பேச்சுவார்த்தையையும் தொடங்கி நடத்தி வருகிறார்கள்.
சில மாநிலங்களில் பேச்சுவார்த்தைகள் முடிவுற்று, தொகுதிப் பங்கீடுகள் செய்யப்பட்டும் விட்டன. சில மாநிலங்களில் நடைபெற்று வருகின்றன. சில நாட்களில் அவையும் நல்ல படியாக நடைபெறும் எனத் தெரிகிறது.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை தி.மு.க. தலைமையிலான 'இந்தியா' கூட்டணியில் தொகுதிப் பங்கீடு நேற்றைய தினத்துடன் மிகச்சிறப்பாக முடிவுற்றது என்பதை மனமகிழ்ச்சியுடன் அறிவிக்கிறேன். அகில இந்திய காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்தியக் கம்யூனிஸ்ட், ம.தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி ஆகிய கட்சிகளுக்குத் தொகுதிகள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன.
இந்தத் தேர்தலில் அருமை நண்பர் கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யமும் நம் அணியில் இணைந்துள்ளது. அவரையும் வரவேற்று உள்ளோம்.
இந்த அணிக்காகத் தமிழ்நாடு முழுவதும் பரப்புரை பயணம் செய்ய இருப்பதாக நண்பர் கமல் அறிவித்துள்ளார். 2025 மாநிலங்களவையில் அவரது கட்சியின் குரல் ஒலிக்க இருக்கிறது.
நாங்கள் கொடுத்தோம், பெற்றார்கள் என்பதாக இல்லாமல், 'அனைவரும் ஒத்த சிந்தனையுடன் அமர்ந்து பேசித் தொகுதிகளைப் பகிர்ந்து கொண்டோம்' என்பதுதான் உண்மையாகும். அனைத்துத் தலைவர்களும், ஊடகங்களில் அளித்த பேட்டிகளில் இதனை வெளிப்படையாகவே சொல்லி இருக்கிறார்கள்.
எண்ணிக்கை அல்ல, எண்ணம்தான் முக்கியம் என்பதை உணர்ந்தவர்கள் நம் கூட்டணிக் கட்சித் தலைவர்கள். பாசிச பா.ஜ.க.வை வீழ்த்த வேண்டும் என்ற ஒற்றை நோக்கம் மட்டுமே கொண்ட தலைவர்கள் இவர்கள். இந்த ஒற்றுமை உணர்வு தான் 2019-ம் ஆண்டு முதல் தமிழ்நாட்டில் அனைத்து வெற்றிகளுக்கும் காரணமாக அமைந்துள்ளது.
2019 பாராளுமன்றத் தேர்தல், இடைத்தேர்தல்கள், 2021 சட்டமன்றத் தேர்தல், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்கள், ஊரக உள்ளாட்சித் தேர்தல்கள் ஆகிய அனைத்தையும் இக்கூட்டணி மூலமாகத்தான் வென்று காட்டினோம். ஒன்றுபட்ட இலக்கும், ஒற்றுமைச் சிந்தனையும் கொண்டவர்களாக நம் கூட்டணி இயக்கத் தலைவர்களும், முன்னணியினரும், தொண்டர்களும் இருப்பதால்தான் இத்தகைய தொடர் வெற்றியை நாம் பெற்றோம்.
தேர்தலுக்குத் தேர்தல் கூட்டணி மாறும் என்பதை மாற்றி, இலக்கு ஒன்றாக இருந்தால் கூட்டணியும் மாறாது என்பதையும் நாம் நிரூபித்து வருகிறோம். இதனைத்தான் 'இந்தியா' கூட்டணியின் தொடக்கக் கூட்டத்தில் நான் வலியுறுத்திச் சொன்னேன். பா.ஜ.க.வுக்கு எதிரான கட்சிகள் அனைத்தையும் ஒன்று சேர்க்க வேண்டும், அந்தக் கட்சிகள் தங்களுக்குள் இருக்கும் மற்ற வேறுபாடுகளை மறந்து ஒன்று சேரவும் வேண்டும் என்று வலியுறுத்தினேன். அதுதான் இன்று மாபெரும் கூட்டணியாக மலர்ந்து உள்ளது.
தி.மு.க. தலைமையிலான இக்கூட்டணியின் வெற்றிக்கு கழக உடன்பிறப்புகள் அயராது பாடுபட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். புதுவை உள்ளிட்ட தமிழ்நாட்டின் 40 தொகுதிகளிலும், 'வேட்பாளர் மு.க. ஸ்டாலின்' என்பதை மனதில் வைத்து அனைவரும் பணியாற்ற வேண்டும்.
அனைத்துத் தொகுதியிலும் நானே போட்டியிடுகிறேன் என்பதை உள்ளத்தில் தாங்கி அனைத்து உடன் பிறப்புகளும் பணியாற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
நாற்பதுக்கு நாற்பது என்ற அளவில் வென்றால் தான் நாம் நினைக்கும் அரசியல் மாற்றமானது ஒன்றிய அரசில் நடக்கும். மாநிலங்களை மதிக்கும் ஒன்றிய அரசை அமைக்க வேண்டுமானால் நாம் இங்கு நாற்பதுக்கு நாற்பது வென்றாக வேண்டும். வெற்றி ஒன்றே உங்களது நோக்கமாக இருக்கட்டும்.
பத்தாண்டு கால பா.ஜ.க. ஆட்சி இந்தியாவைப் பாழ்படுத்தியதை மக்கள் உணர்ந்துள்ளார்கள். அதனை மேலும் ஆழமாக மனதில் விதையுங்கள். மூன்றாண்டு கால திராவிட மாடல் ஆட்சி தமிழ்நாட்டுக்கு உருவாக்கிக் கொடுத்துள்ள ஏற்றத்தை மக்களுக்கு நினைவூட்டுங்கள். இந்தியா முழுமைக்குமான கூட்டாட்சி அமைய வேண்டிய அரசியல் தேவையை உணர்த்துங்கள்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- 2022-ம் ஆண்டு ஜனவரி மாத இறுதியில் அக்கினிக் கலச சின்னம் எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் அங்கிருந்து அகற்றப்பட்டது.
- அண்மையில் கூட விதிகளுக்கு மாறாக சிலைகள் அமைக்கப்பட்டன. அவற்றையெல்லாம் மாவட்ட நிர்வாகம் கைக்கட்டி வேடிக்கைப் பார்க்கிறது.
சென்னை:
பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
திருவண்ணாமலை அடுத்த நாயுடு மங்கலம் கூட்டு சாலையில், 1989-ம் ஆண்டு அக்னி கலச சின்னம் வன்னியர் சங்கத்தால் அமைக்கப்பட்டு, அதை நான் திறந்து வைத்து கொடியேற்றினேன். அது ஒரு குறிப்பிட்ட பிரிவினரின் புனித அடையாளமாக போற்றப்பட்டு வந்தது. அதனால் யாருக்கும், எந்த வித பாதிப்பும் ஏற்பட வில்லை. சில ஆண்டுகளுக்கு முன் அப்பகுதியில் சாலை மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப் பட்ட போது, அக்கினிக் கலச சின்னத்தை தற்காலிகமாக அகற்றலாம் என்றும், பணிகள் நிறைவடைந்த பிறகு அங்கு அச்சின்னத்தை மீண்டும் அமைக்கலாம் என்றும் மாவட்ட நிர்வாகத் தின் சார்பில் யோசனை தெரிவிக்கப்பட்டது. அதற்கு பா.ம.க. மற்றும் வன்னியர் சங்க நிர்வாகிகள் ஒப்புக் கொண்ட நிலையில், அங்கிருந்து தற்காலிகமாக எடுக்கப்பட்ட சின்னம், பின்னர் மாவட்ட நிர்வாகத் தால் மீண்டும் வைக்கப்பட்டது.
அதன்பின் 2022-ம் ஆண்டு ஜனவரி மாத இறுதியில் அக்கினிக் கலச சின்னம் எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் அங்கிருந்து அகற்றப்பட்டது. அதைக் கண்டித்து பா.ம.க. சார்பில் கடுமையான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
அதைத் தொடர்ந்து பா.ம.க. நிர்வாகிகளுடன் பேச்சு நடத்திய மாவட்ட நிர்வாகம், அகற்றப்பட்ட அக்கினிக் கலச சின்னத்தை மீண்டும் அதே இடத்தில் அமைக்க அனுமதிப்பதாக தெரிவித்தது.
அதை செய்ய மாவட்ட நிர்வாகம் தவறிவிட்ட நிலையில், பா.ம.க.வினரும், வன்னியர் சங்கத்தினரும் புதிதாக அமைக்கப்பட்ட அக்கினிக்கலச சின்னத்தை நாயுடு மங்கலம் கூட்டு சாலையில் இன்று அதிகாலையில் அமைத்தனர்.
உடனடியாக அங்கு விரைந்து சென்ற காவல் துறையினர், அக்கினிக் கலச சின்னத்தை வலுக்கட்டாயமாக அகற்றி உள்ளனர். அதுமட்டுமின்றி பா.ம.க. வினரையும் கைது செய்து காவலில் வைத்துள்ளனர்.
திருவண்ணாமலை, நாயுடுமங்கலம் உள்ளிட்ட இடங்களில் தொடங்கி மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் போக்குவரத்துக்கு இடையூறாக பல சிலைகளும், சின்னங்களும் உள்ளன. அண்மையில் கூட விதிகளுக்கு மாறாக சிலைகள் அமைக்கப்பட்டன. அவற்றையெல்லாம் மாவட்ட நிர்வாகம் கைக்கட்டி வேடிக்கைப் பார்க்கிறது. ஆனால், யாருக்கும் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாத அக்கினிக் கலச சின்னத்தை மட்டும் திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் மீண்டும், மீண்டும் அகற்றுகிறது என்றால், மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் வன்னியர் சமுதாயத்திற்கு எதிராக செயல்படுகின்றன என்பதை புரிந்து கொள்ள முடியும்.
அக்கினிக் கலசம் அகற்றப்பட்ட விவகாரத்தில் பா.ம.க. கடந்த இரு ஆண்டுகளுக்கும் மேலாக பொறுமையுடனும், பொறுப்புடனும் செயல்பட்டு வருகிறது. அதை பலவீனமாக மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் கருதினால் அவர்களுக்கு எவ்வாறு பாடம் புகட்ட வேண்டும் என்பது எங்களுக்குத் தெரியும். எனவே, வன்னிய மக்களின் உணர்வுகளை மதித்து, நாயுடுமங்கலம் கூட்டு சாலையில் அக்கினிக் கலச சின்னத்தை மீண்டும் அமைக்க தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் அனுமதி அளிக்க வேண்டும். இல்லாவிட்டால் மக்களைத் திரட்டி மாபெரும் போராட்டத்தை பா.ம.க. நடத்தும் என்று எச்சரிக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- கருத்து கேட்பு முடிவடைந்த நிலையில், தேர்தல் அறிக்கையில் இடம்பெற வேண்டிய முக்கிய அம்சங்கள் இப்போது தொகுக்கப்பட்டு வருகிறது.
- பெண்கள், விவசாயிகள், நெசவாளர்கள், மீனவர்கள், மாணவ-மாணவியருக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது.
சென்னை:
பாராளுமன்றத் தேர்தலையொட்டி தி.மு.க.வில் தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்காக கனிமொழி எம்.பி. தலைமையில் குழு அமைக்கப்பட்டிருந்தது.
இந்த குழுவில் டி.கே.எஸ். இளங்கோவன், ஏ.கே.எஸ்.விஜயன், அமைச்சர்கள் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், டி.ஆர்.பி.ராஜா, சென்னை மேயர் பிரியா உள்பட 11 பேர் இடம் பெற்றிருந்தனர்.
தி.மு.க. தேர்தல் அறிக்கையில் இடம் பெற வேண்டிய அம்சங்கள் தொடர்பாக கருத்துக்களை பெற மாவட்டம் வாரியாக பிப்ரவரி 5-ந்தேதி முதல் இக்குழுவினர் சென்று பொதுமக்களிடம் கருத்துக்கள் கேட்டனர். விவசாயிகள், நெசவாளர்கள், தொழிற்சங்கத்தினர் என பல்வேறு தரப்பினரையும் சந்தித்து பரிந்துரைகளை பெற்றனர்.
அந்தந்த மாவட்டச் செயலாளர்களும், அமைச்சர்களும், கனிமொழி எம்.பி. குழுவினரிடம் மனுக்களை கொடுத்தனர். மொத்தம் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மனுக்கள் குவிந்தது. இ-மெயில் மூலமும் ஏராளமான கருத்துக்கள் பெறப்பட்டிருந்தது.
கடந்த மாதத்துடன் கருத்து கேட்பு முடிவடைந்த நிலையில், தேர்தல் அறிக்கையில் இடம்பெற வேண்டிய முக்கிய அம்சங்கள் இப்போது தொகுக்கப்பட்டு வருகிறது.
இந்த தேர்தல் அறிக்கையில் பெண்கள், விவசாயிகள், நெசவாளர்கள், மீனவர்கள், மாணவ-மாணவியருக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது. தற்போது இந்த பணிகள் முடிவுறும் தருவாயில் உள்ளது.
தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள அம்சங்கள் சரியாக உள்ளதா? என்பதை குழுவினர் தற்போது பார்வையிட்டு வருவதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வைக்கும் ஓரிரு நாளில் இதை அனுப்ப உள்ளதாகவும் குழுவில் இடம் பெற்றவர்கள் தெரிவித்தனர்.
இதில் திருத்தங்கள் அனைத்தும் முடிந்ததும் அடுத்த வாரம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தி.மு.க. தேர்தல் அறிக்கையை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- மாசி அமாவாசையையொட்டி மயான கொள்ளை நிகழ்ச்சி நடந்தது.
- பக்தர்கள் ஆக்ரோஷத்துடன் ஊர்வலமாக வந்தனர்.
சேலம்:
சேலத்தில் மாசி அமாவாசையையொட்டி மயான கொள்ளை நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி ஆடு, கோழிகளை கடித்தபடி பக்தர்கள் ஆக்ரோஷத்துடன் ஊர்வலமாக வந்தனர்.
ஒவ்வொரு ஆண்டும் மகா சிவராத்திரி விழாவிற்கு அடுத்து வரும் மாசி அமாவாசை அன்று நடக்கும் மயான கொள்ளை நிகழ்ச்சி சேலத்தில் மிகவும் பிரபலமானது. பல 100 ஆண்டுகளாக இந்த மயான கொள்ளை நிகழ்ச்சி நடந்து வருகிறது.
அதன்படி மாசி மாத அமாவாசையான இன்று சேலம் மாநகரில் பல்வேறு இடங்களில் மயான கொள்ளை நிகழ்ச்சி நடைபெற்றது.
குறிப்பாக சேலம் டவுன் தேர்வீதி, ஜான்சன்பேட்டை, வின்சென்ட், கிச்சிப்பாளையம் நாராயண நகர் ஏரிக்கரை மற்றும் ஆண்டிப்பட்டியில் உள்ள அங்காளம்மன் கோவில்கள் உள்பட பல்வேறு அங்காளம்மன், பெரியாண்டிச்சி அம்மன் கோவில்களில் மயான கொள்ளை நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த கோவில்களில் இருந்து சாமி சிலைகளை அலங்கரித்து பக்தர்கள் மேளதாளங்களுடன் ஆங்காங்கே உள்ள சுடுகாட்டிற்கு ஊர்வலமாக எடுத்து சென்றனர். சாமி சிலைகளுக்கு முன்னால் பக்தர்கள் காளி, அங்காள பரமேஸ்வரி உள்பட பல்வேறு அம்மன்கள் வேடம் அணிந்து ஆடியவாறு சென்றனர். அப்போது, வழிநெடுக திரளான பக்தர்கள் நின்று தங்களின் நேர்த்திக்கடனை செலுத்தி, சாமியாடியவாறு வந்தவர்களிடம் ஆடு, கோழிகளையும், முட்டைகளையும் கொடுத்து வேண்டிக்கொண்டனர்.

மேலும் ஆட்டுகுட்டிகளை வாங்கிய பக்தர்கள், அதை தங்கள் கழுத்து மேல் தூக்கி போட்டு ஆடியதோடு, ஆட்டின் குரல்வளையை கடித்து ரத்தம் குடித்ததையும் காண முடிந்தது. இது ஒருபுறம் இருக்க, சில பக்தர்கள் கோழியை வாயில் கவ்வியபடி அதன் ரத்தத்தை குடித்தவாறு ஆடிக்கொண்டு சுடுகாட்டை நோக்கி சென்றனர்.
மேலும், சில பக்தர்கள் சுடுகாட்டின் புதைக்குழியில் கிடந்த இறந்த மனிதர்களின் மண்டை ஓடு மற்றும் எலும்புகள் ஆகியவற்றுடன் ஆடு, கோழிகளை வாயில் கவ்வியபடி ஆக்ரோஷத்துடன் ஊர்வலமாக சென்றனர்.
இந்த காட்சிகள் சாலையில் நின்றிருந்த பொதுமக்களை மெய்சிலிர்க்க வைத்தது. சேலம் ஜான்சன்பேட்டை பிள்ளையார் நகர் பகுதியில் உள்ள காக்காயன் சுடுகாட்டில் நேற்று மயான கொள்ளை நிகழ்ச்சியை யொட்டி ஏராளமான பொதுமக்கள் திரண்டிருந்தனர்.
அப்போது பல்வேறு இடங்களில் இருந்து ஆக்ரோஷத்துடன் சாமியாடி வந்த பக்தர்கள் அங்கு கூடியிருந்த பொதுமக்களுக்கு விபூதி கொடுத்து ஆசி வழங்கினர். மேலும், தீராத நோய்கள் குணமாகவும், திருமண தடை நீங்கவும், குழந்தை பாக்கியம் வேண்டியும் தரையில் படுத்திருந்த பக்தர்கள் மீது சாமி வேடம் அணிந்திருந்தவர்கள் தாண்டி ஆக்ரோஷமாக சென்றனர்.
- போதைப்பொருள் புழக்கம் தொடர்பாக விளக்கமான அறிக்கையை கவர்னரிடம் அளித்துள்ளோம்.
- போதைப்பொருள் புழக்கத்தை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கவர்னரிடம் வலியுறுத்தினோம்.
கிண்டி:
கிண்டியில் உள்ள ராஜ்பவனில் கவர்னர் ஆர்.என்.ரவியை அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசினார். அப்போது அவருடன் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் உடன் இருந்தனர்.
கவர்னரை சந்தித்து மனு அளித்த பின் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-
* தமிழகத்தில் போதைப்பொருள் நடமாட்டம் அதிகரித்துள்ளது.
* போதைப்பொருள் சர்வ சாதாரணமாக கிடைக்கிறது. இதே நிலைமை தொடர்ந்தால் தமிழகம் சீரழிந்துவிடும்.
* போதைப்பொருள் புழக்கம் தொடர்பாக விளக்கமான அறிக்கையை கவர்னரிடம் அளித்துள்ளோம்.
* போதைப்பொருள் புழக்கத்தை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கவர்னரிடம் வலியுறுத்தினோம்.
* போதைப்பொருள் புழக்கத்திற்கு திமுக தார்மீக பொறுப்பேற்க வேண்டும் என்றார்.
- பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி, பா.ஜ.க.வில் இணைந்தவர்களை மத்திய அமைச்சர் எல்.முருகன் பொன்னாடை அணிவித்து வரவேற்றார்.
- இந்த கருத்துக்கள், ஆலோசனைகள் பிரதமரிடம் கொண்டு சேர்க்கப்படும்.
திருச்செங்கோடு:
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் இன்று காலை பா.ஜ.க. சட்டமன்ற தொகுதி தேர்தல் அலுவலகத்தை மத்திய மந்திரி எல். முருகன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். தொடர்ந்து பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி, பா.ஜ.க.வில் இணைந்தவர்களை மத்திய அமைச்சர் எல்.முருகன் பொன்னாடை அணிவித்து வரவேற்றார்.
இதனையடுத்து திருச்செங்கோடு பஸ் நிலையம் அருகே உள்ள தினசரி காய்கறி சந்தையில், மாவட்ட பா.ஜ.க. சார்பில் அமைக்கப்பட்ட பிரதமரின் கருத்து கேட்பு முகாமில் பொதுமக்கள் தங்களது கருத்துக்கள், ஆலோசனைகள் ஆகியவற்றை பிரதமருக்கு வழங்கும் வகையில் அதற்கான வைக்கப்பட்ட பெட்டியில் அளித்தனர். இதனை மத்திய மந்திரி எல்.முருகன் பார்வையிட்டார். பின்னர் அவர் கூறியதாவது:-
பிரதமர் நரேந்திர மோடி, வலிமையான பாரதம் வளர்ச்சி அடைந்த பாரதம் குறித்து பொதுமக்கள் தங்கள் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை வழங்கலாம் என கேட்டுக் கொண்டுள்ளார். அதன டிப்படையில் பா.ஜ.க. சார்பில் கருத்துக் கேட்பு முகாம்கள் நடத்தப்பட்டு அதில் பொது மக்களின் கருத்துக்கள் பெறப்பட்டு வருகின்றன.
எனவே பொதுமக்கள், இளைஞர்கள் பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகள், தொழிலாளர்கள், அனைத்து தரப்பு மக்கள் இந்த முகாம்களை அதிக அளவில் பயன்படுத்திக் கொண்டு, நமது நாட்டின் நலனுக்கும், வளர்ச்சிக்கும் தகுந்த கருத்துக்களை ஆலோசனைகளை ஒரு வெள்ளைத் தாளில் எழுதி இங்கு வைக்கப்பட்டுள்ள பெட்டிகளில் போடுமாறு கேட்டுக் கொள்கிறேன். மேலும் இந்த கருத்துக்கள், ஆலோசனைகள் பிரதமரிடம் கொண்டு சேர்க்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.






