என் மலர்
உள்ளூர் செய்திகள்

சென்னையில் பா.ஜனதா தேர்தல் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நாளை நடக்கிறது
- கூட்டத்தில் வேட்பாளர்கள் பெயர் பட்டியல் பரிசீலிக்கப்படுகிறது.
- பா.ஜனதா நிச்சயம் வெற்றி பெறும் என்று நம்பும் 10 தொகுதிகளின் பட்டியல் இறுதி செய்யப்படுகிறது.
சென்னை:
தமிழக பா.ஜனதா தேர்தல் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நாளை காலையில் கட்சி தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நடைபெறுகிறது. கூட்டத்துக்கு மாநில தலைவர் அண்ணாமலை தலைமை தாங்குகிறார். குழு உறுப்பினர்களான மத்திய மந்திரி எல்.முருகன், வானதி சீனிவாசன், பொன். ராதா கிருஷ்ணன், எச்.ராஜா, முருகானந்தம் உள்ளிட்டோர் பங்கேற்கிறார்கள்.
இந்த கூட்டத்தில் வேட்பாளர்கள் பெயர் பட்டியல் பரிசீலிக்கப்படுகிறது. பா.ஜனதா நிச்சயம் வெற்றி பெறும் என்று நம்பும் 10 தொகுதிகளின் பட்டியல் இறுதி செய்யப்படுகிறது.
கூடவே மற்ற தொகுதிகளுக்கான பெயர் பட்டியலும் தயார் செய்யப்படுகிறது. இந்த பட்டியலுடன் அண்ணாமலை நாளை கூட்டம் முடிந்ததும் டெல்லி செல்கிறார். அங்கு மேலிட தலைவர்களுடன் ஆலோசனை நடத்துகிறார். மத்திய தேர்தல் குழு இறுதி செய்த பிறகு அகில இந்தியா அளவில் வெளியிடப்படும் 2-வது வேட்பாளர் பட்டியலில் தமிழகத்தில் இருந்தும் 10 தொகுதிகள் இடம்பெறலாம் என்று கட்சி வட்டாரங்களில் கூறப்படுகிறது.






