search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கனிமொழி குழுவினர் தயாரித்த தி.மு.க. தேர்தல் அறிக்கையை அடுத்தவாரம் வெளியிட ஏற்பாடு
    X

    கனிமொழி குழுவினர் தயாரித்த தி.மு.க. தேர்தல் அறிக்கையை அடுத்தவாரம் வெளியிட ஏற்பாடு

    • கருத்து கேட்பு முடிவடைந்த நிலையில், தேர்தல் அறிக்கையில் இடம்பெற வேண்டிய முக்கிய அம்சங்கள் இப்போது தொகுக்கப்பட்டு வருகிறது.
    • பெண்கள், விவசாயிகள், நெசவாளர்கள், மீனவர்கள், மாணவ-மாணவியருக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது.

    சென்னை:

    பாராளுமன்றத் தேர்தலையொட்டி தி.மு.க.வில் தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்காக கனிமொழி எம்.பி. தலைமையில் குழு அமைக்கப்பட்டிருந்தது.

    இந்த குழுவில் டி.கே.எஸ். இளங்கோவன், ஏ.கே.எஸ்.விஜயன், அமைச்சர்கள் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், டி.ஆர்.பி.ராஜா, சென்னை மேயர் பிரியா உள்பட 11 பேர் இடம் பெற்றிருந்தனர்.

    தி.மு.க. தேர்தல் அறிக்கையில் இடம் பெற வேண்டிய அம்சங்கள் தொடர்பாக கருத்துக்களை பெற மாவட்டம் வாரியாக பிப்ரவரி 5-ந்தேதி முதல் இக்குழுவினர் சென்று பொதுமக்களிடம் கருத்துக்கள் கேட்டனர். விவசாயிகள், நெசவாளர்கள், தொழிற்சங்கத்தினர் என பல்வேறு தரப்பினரையும் சந்தித்து பரிந்துரைகளை பெற்றனர்.

    அந்தந்த மாவட்டச் செயலாளர்களும், அமைச்சர்களும், கனிமொழி எம்.பி. குழுவினரிடம் மனுக்களை கொடுத்தனர். மொத்தம் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மனுக்கள் குவிந்தது. இ-மெயில் மூலமும் ஏராளமான கருத்துக்கள் பெறப்பட்டிருந்தது.

    கடந்த மாதத்துடன் கருத்து கேட்பு முடிவடைந்த நிலையில், தேர்தல் அறிக்கையில் இடம்பெற வேண்டிய முக்கிய அம்சங்கள் இப்போது தொகுக்கப்பட்டு வருகிறது.

    இந்த தேர்தல் அறிக்கையில் பெண்கள், விவசாயிகள், நெசவாளர்கள், மீனவர்கள், மாணவ-மாணவியருக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது. தற்போது இந்த பணிகள் முடிவுறும் தருவாயில் உள்ளது.

    தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள அம்சங்கள் சரியாக உள்ளதா? என்பதை குழுவினர் தற்போது பார்வையிட்டு வருவதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வைக்கும் ஓரிரு நாளில் இதை அனுப்ப உள்ளதாகவும் குழுவில் இடம் பெற்றவர்கள் தெரிவித்தனர்.

    இதில் திருத்தங்கள் அனைத்தும் முடிந்ததும் அடுத்த வாரம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தி.மு.க. தேர்தல் அறிக்கையை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    Next Story
    ×