என் மலர்
உள்ளூர் செய்திகள்
- குடிநீர் தட்டுப்பாட்டை போக்க எந்த விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் காங்கிரஸ் அரசு எடுக்கவில்லை.
- பெங்களூருவில் இப்போது ஏற்பட்டிருக்கும் நெருக்கடி முழுக்க முழுக்க கர்நாடக காங்கிரஸ் அரசின் நிர்வாகத் தோல்வி.
சென்னை:
தமிழக பா.ஜ.க மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில்,
உலகின் முன்னணி பெரு நகரங்களில் ஒன்றான பெங்களூருவில் தற்போது கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
தண்ணீர் இல்லாததால் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை, வீட்டில் இருந்தே பணி செய்ய அறிவுறுத்தியுள்ளது. ஆனால், வீட்டிலும் தண்ணீர் இல்லாததால், வேலை செய்ய முடியாமல் ஊழியர்கள் தவித்து வருகின்றனர். கார்களை கழுவினால் ரூ. 5,000 அபராதம் விதிக்கப்படும் என்று கர்நாடக காங்கிரஸ் அரசு அறிவித்துள்ளது. இதிலிருந்து நிலைமை எந்த அளவுக்கு மோசமடைந்துள்ளது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
கர்நாடகத்தில் காங்கிரஸ் அரசு பதவியேற்று ஓராண்டு ஆகப்போகிறது. குடிநீர் தட்டுப்பாடு என்பது ஒரு சில நாட்களில் ஏற்பட்டுவிடும் இயற்கை பேரிடர் அல்ல. போதுமான மழை இல்லை என்பதும், அதனால் அதிகமான மக்கள் தொகை கொண்ட பெங்களூருவில் குடிநீர் தட்டுப்பாடு வரும் என்பதும் தெரிந்த விஷயம் தான்.
ஆனாலும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க எந்த விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் காங்கிரஸ் அரசு எடுக்கவில்லை. பெங்களூருவில் இப்போது ஏற்பட்டிருக்கும் நெருக்கடி முழுக்க முழுக்க கர்நாடக காங்கிரஸ் அரசின் நிர்வாகத் தோல்வி.
கர்நாடக முதல்வர் சித்தராமையா - துணை முதல்வர் டி. கே.சிவகுமார் - காங்கிரஸ் அகில இந்தியத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே என முக்கோண அரசியலில் சிக்கி கர்நாடக மக்கள் தவிக்கின்றனர். இவர்கள் மூவரும் தங்களுக்குள் ஒருவரையொருவர் வீழ்த்த போட்டி போடுகின்றனரே தவிர, மக்களைப் பற்றி துளியும் கவலைப்படவில்லை. அதன் விளைவுதான் குடிநீர் பஞ்சம்.
கர்நாடக காங்கிரஸ் அரசில் இந்த மூவர் தவிர, சோனியா, ராகுல், பிரியங்கா ஆகியோரும் தலையிடுகின்றனர். இந்த ஆறு பேரும் தலையிடுவதால் அரசு நிர்வாகம் செயலிழந்திருக்கிறது.
காங்கிரஸ் ஆளும் மூன்று மாநிலங்களில் வளமான மாநிலம் கர்நாடகம் என்பதால் அதனை தங்களது கஜானாவாகவே காங்கிரஸ் கட்சி பார்க்கிறது. இதன் விளைவுதான் கார்களை கழுவினால் ரூ. 5,000 அபராதம் என்ற அறிவிப்பு.
காங்கிரஸ் அரசின் நிர்வாகத் தோல்வியால் ஏற்பட்ட குடிநீர் பஞ்சத்தால் கர்நாடக மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதிலிருந்து மக்களைத் திசைதிருப்பவும், கர்நாடக மக்களின் உணர்வுகளைத் தூண்டி அரசியல் ஆதாயம் அடையவும், 'தமிழகத்திற்கு ஒரு சொட்டு கூட தண்ணீர் தரமாட்டோம்' என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா அறிவித்திருக்கிறார்.
பெங்களூரு குடிநீர் பஞ்சத்தை காரணம் காட்டி உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தமிழகத்திற்கு வழங்க வேண்டிய தண்ணீரை தர மறுக்கிறது கர்நாடக காங்கிரஸ் அரசு. இதற்கு கடும் எதிர்ப்பை தமிழக அரசு தெரிவிக்காமல், கர்நாடக அரசுடன் போராடி நீரை பெற்று தராமல் தமிழகத்திற்கு துரோகம் செய்து வருவது கடும் கண்டனத்துக்குரியது
காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகளை வாரி வழங்கியிருக்கும் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு, கர்நாடக முதல்வர் சித்ததராமையாவுக்கு கண்டனம் தெரிவிக்க கூட நேரம் இல்லை.
கர்நாடக அரசு பாடத்திட்டத்தில், ஈ.வெ.ராமசாமியின் இந்து விரோத வரலாற்றை சேர்க்க, கர்நாடக காங்கிரஸ் அரசுடன் தனக்குள்ள நட்பை பயன்படுத்த தெரிந்த முதல்வர் ஸ்டாலினுக்கு, தமிழகத்திற்கு தண்ணீர் கேட்க முடியவில்லை.
இனியும் தமிழக மக்களை ஏமாற்றாமல், தனது நண்பர்களான கர்நாடக முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார் ஆகியோருடன் பேசி தமிழகத்திற்கு வர வேண்டிய காவிரி நீரை முதல்வர் ஸ்டாலின் பெற்றுத் தர வேண்டும்.
இல்லையெனில் வரும் மக்களவைத் தேர்தலில் தமிழக மக்கள் திமுக கூட்டணிக்கு உரிய பாடம் புகட்டுவார்கள்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
- சுரேசை கைது செய்த போலீசார் இந்த வழக்கில் தொடர்புடைய அவரது கூட்டாளிகளை தேடி வருகின்றனர்.
குள்ளனம்பட்டி:
திண்டுக்கல்லை அடுத்த உத்தனம்பட்டி பிரிவு அருகே வசிப்பவர் கருப்பையா (வயது 60). அவருடைய மனைவி விஜயலட்சுமி. இவர்களது மகன் பரத்.கருப்பையா தனது வீட்டின் அருகே பெட்ரோல் பங்க் வைத்து நடத்தி வருகிறார். இதனை கருப்பையா மற்றும் அவரது மகன் பரத் ஆகியோர் கவனித்து வருகின்றனர்.
கடந்த மாதம் 7ந் தேதி கருப்பையா தனது மனைவியுடன் வீட்டை பூட்டி விட்டு திண்டுக்கல்லில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார். பின்னர் இரவு 9 மணி அளவில் கருப்பையா வீட்டிற்கு வந்தபோது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் பீரோவில் இருந்த 80 பவுன் நகைகள்,ரொக்க பணம் ரூ.3 லட்சத்து 29 ஆயிரம் மற்றும் விலை உயர்ந்த கைக்கடிகாரங்கள் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது. இது குறித்து திண்டுக்கல் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரமோகன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் அருண் நாராயணன், போலீசார் கிளாடின், ஜஸ்டின், வினோத், கருணாகரன் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை துருப்புச் சீட்டாக பயன்படுத்தி கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை திருப்பூர், தஞ்சாவூர், கோவை, வேலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வலைவீசி தேடி வந்தனர். இந்த நிலையில் தோமையார்புரம் பகுதியில் தனிப்படை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக வாலிபர் ஒருவர் கையில் ஒரு பையுடன் சந்தேகப்படும்படியாக நடந்து சென்றார். உடனே அவரை மடக்கி பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் நெல்லை மாவட்டம் நாங்குநேரியை சேர்ந்த சுரேஷ் (வயது 35) என்பதும், பையில் வீடுகளின் பூட்டை உடைத்து கொள்ளையடிப்பதற்காக உபகரணங்கள் வைத்திருந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து அவரை தாலுகா போலீஸ் நிலையம் அழைத்து வந்து தீவிர விசாரணை நடத்தினர்.
விசாரணையில் சுரேஷ் தனது நண்பர்களுடன் சேர்ந்து பல ஊர்களில் பூட்டி இருக்கும் வீடுகளை நோட்டமிட்டு கொள்ளையடிப்பதையே தொழிலாக கொண்டிருந்ததும் தெரியவந்தது.
கொள்ளையடித்த பணத்தில் பல்வேறு மாநிலங்களுக்கு லாங் டிரைவ் செய்து வந்ததும், கேரளாவிற்கு சென்று அழகிகளுடன் உல்லாச வாழ்க்கை வாழ்ந்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர். திண்டுக்கல்லில் பெட்ரோல் பங்க் உரிமையாளர் வீட்டில் தனது நண்பர்களுடன் கொள்ளையடித்த சுரேஷ் பின்னர் திருச்சியில் உள்ள ஒரு வீட்டிலும் கொள்ளையடித்தனர். பின்னர் அங்கிருந்து பண்ருட்டி வழியாக சென்று கொண்டிருந்தபோது வாகன சோதனையில் இருந்த போலீசார் அவர்களது காரை மடக்கினர். இதையடுத்து வாலிபர்கள் காரை அங்கேயே நிறுத்திவிட்டு தப்பி சென்றனர். பின்னர் பண்ருட்டி போலீசார் காரை பறிமுதல் செய்து அவர்களை தேடி வந்துள்ளனர்.
அதன் பின்பு அவரது நண்பர்கள் வெவ்வேறு இடங்களுக்கு பிரிந்து சென்றனர். சுரேஷ் வேறு இடத்தில் கொள்ளையடிப்பதற்காக திண்டுக்கல் வந்தபோது தனிப்படை போலீசார் அவரை மடக்கி பிடித்து கைது செய்தனர். அவர் கொடுத்த தகவலின் பேரில், நெல்லைக்கு சென்று அவரது உறவினர் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 24 பவுன் நகை, போலி நம்பர் பிளேட், கொள்ளையடிக்க பயன்படுத்தும் உபகரணங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். சுரேஷ் மீது திருச்சி, கோவை, சேலம், திருப்பூர், தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் 57 வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரிய வந்தது.
சுரேசை கைது செய்த போலீசார் இந்த வழக்கில் தொடர்புடைய அவரது கூட்டாளிகளை தேடி வருகின்றனர்.
- 6 வருடம் தனியாக கட்சி நடத்தியுள்ளேன்.
- 1996-ம் ஆண்டில் தி.மு.க. கூட்டணிக்கு தன்னலமின்றி பிரசாரம் செய்தது போலவே தற்போதும் பிரசாரம் செய்வேன்.
சென்னை:
பா.ஜ.க.வுடன் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியை சரத்குமார் நேற்று இணைத்துள்ளார். இதற்கு பல விமர்சனங்கள் எழுந்தன. அவரது கட்சியை சேர்ந்த சிலர் அதிருப்தியில் உள்ளனர்.
இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த சரத்குமார், நான் எடுத்த முடிவில் உறுதியாக இருக்கிறேன் எனக் கூறினார்.
மேலும், 16 வருடம் தனியாக கட்சி நடத்தியுள்ளேன். என்னை பற்றி பா.ஜ.க. அறியும். 1996-ம் ஆண்டில் தி.மு.க. கூட்டணிக்கு தன்னலமின்றி பிரசாரம் செய்தது போலவே தற்போதும் பிரசாரம் செய்வேன். பொறுப்பை எதிர்பார்த்து பா.ஜ.க.வில் சேரவில்லை. பா.ஜ.க. தலைமை சொல்லும் பணியை செய்வேன். நான் கூறிய ஒரு கருத்தை மட்டும் வைத்து விமர்சித்து வருகிறார்கள், நான் தரம் தாழ்ந்து யாரையும் விமர்சித்ததில்லை என்றார்.
- குடியுரிமை திருத்த சட்டத்திற்கு, ராஜ்யசபாவில் அ.தி.மு.க. எதிர்த்து வாக்களித்து இருந்தால் இந்த சட்டமே வந்திருக்காது.
- காங்கிரஸ் உடன் பேச்சுவார்த்தை முடிந்ததும் தி.மு.க. வேட்பாளர் பட்டியல் நாளை அல்லது நாளை மறுநாள் வரும்.
வேலூர்:
வேலூர் மாவட்டம் காட்பாடி சித்தூர் பஸ் நிலையம் அருகே ரூ.3 கோடி மதிப்பீட்டில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள கற்பகம் கூட்டுறவு பெட்ரோல் பங்கை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இன்று திறந்து வைத்தார்.
அப்போது அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
மத்திய அரசு சொன்னாலும் காவிரி ஆற்றில் இருந்து தமிழகத்திற்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட தர மாட்டோம் என்று சித்தராமையா கூறியுள்ளார்.
கர்நாடகாவில் என்றைக்காவது, எந்த மந்திரியாவது தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்து விடுவோம் என்று கூறி கேள்விப்பட்டது உண்டா.

எப்போது பார்த்தாலும் இப்படி தான் சொல்லிக் கொண்டிருப்பார்கள். ஒவ்வொரு முறையும் உச்சநீதிமன்றம் சென்று தான் நாம் தண்ணீரை பெற்றுக் கொண்டிருக்கிறோம். தண்ணீரை கர்நாடகாவிலிருந்து எப்படி பெறுவது என்று எங்களுக்கு தெரியும்.
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு, ராஜ்யசபாவில் அ.தி.மு.க. எதிர்த்து வாக்களித்து இருந்தால் இந்த சட்டமே வந்திருக்காது. காங்கிரஸ் உடன் பேச்சுவார்த்தை முடிந்ததும் தி.மு.க. வேட்பாளர் பட்டியல் நாளை அல்லது நாளை மறுநாள் வரும்.
ஆந்திராவில் பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு அணை கட்டுவது தொடர்பாக தமிழக அரசு தொடுத்த வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது.
அது குறித்து வழக்கறிஞர்கள் பேசுவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
- வருகிற தேர்தலில் அ.தி.மு.க. முழு பலத்துடன் தேர்தலை சந்திக்கும்.
- தேர்தலில் அ.தி.மு.க.வை வெற்றி பெற செய்ய மக்கள் தயாராகிவிட்டார்கள்.
சென்னை:
பாராளுமன்ற தேர்தலையொட்டி ராயப்பேட்டை அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட அமைப்பினர் நேரில் வந்து தங்கள் ஆதரவை தெரிவித்தனர். இந்திய ஜனநாயக புலிகள் கட்சி தலைவர் நடிகர் மன்சூர் அலிகான் அ.தி.மு.க. அலுவலகத்துக்கு வந்தார்.
அங்கிருந்த அ.தி.மு.க. நிர்வாகிகள் கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், பெஞ்சமின் ஆகியோரை சந்தித்து தேர்தலில் ஆதரவளிப்பதாக கூறினார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
வருகிற தேர்தலில் அ.தி.மு.க. முழு பலத்துடன் தேர்தலை சந்திக்கும். இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்பான இயக்கமாக அ.தி.மு.க. திகழ்கிறது. தேர்தலில் அ.தி.மு.க.வை வெற்றி பெற செய்ய மக்கள் தயாராகிவிட்டார்கள். எனவே நானும் எனது முழு ஆதரவை தெரிவித்து உள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
உழவர் உழைப்பாளர் கட்சி, தமிழக விவசாயிகள் சங்கம், தென்னாட்டு மூவேந்தர்கழகம், தங்கத் தமிழ்நாடு கட்டுமான சங்கம், தமிழ்நாடு கிறிஸ்தவ கூட்டமைப்பு உள்ளிட்ட ஏராளமான அமைப்பினர் தலைமை கழகத்தில் திரண்டு இருந்தனர்.
- பிரதமர் மோடி தமிழக முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
- மூன்றாவது முறையாக பிரதமர் மோடி வர வேண்டும் என்று ஆதரவு தெரிவிப்பவர்களை நாங்கள் வரவேற்கிறோம்.
கன்னியாகுமரி:
முன்னாள் மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் கன்னியாகுமரியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நடைபெறும் பாராளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் வெற்றி பெறும். பிரதமர் மோடி தமிழக முழுவதும் சுற்றுப்பயணம் மேற் கொண்டு வருகிறார்.
கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் பிரசாரம் செய்வதற்காக நாளை மறுநாள் வருகிறார். இங்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அவர் கலந்து கொள்கிறார். பிரதமர் வருகையின் மூலமாக கன்னியாகுமரி தொகுதியின் வெற்றி உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
பிரதமர் மோடி 18-ந் தேதி சேலத்தில் நடைபெறும் நிகழ்ச்சியிலும், 19-ந் தேதி கோவையில் நடைபெறும் நிகழ்ச்சிகளும் கலந்து கொள்கிறார். சமத்துவ மக்கள் கட்சி பாரதிய ஜனதா கட்சியுடன் இணைந்ததை வரவேற்கிறேன்.

பிரதமர் மோடி ஆளுமையை ஏற்று வரும் அனைத்து கட்சிகளையும் நாங்கள் வரவேற்கிறோம். எந்த ஒரு கட்சியாக இருந்தாலும் சரி. மூன்றாவது முறையாக பிரதமர் மோடி வர வேண்டும் என்று ஆதரவு தெரிவிப்பவர்களை நாங்கள் வரவேற்கிறோம்.
தமிழகத்தை பொறுத்த மட்டில் தி.மு.க.வை மிஞ்சும் அளவில் தேசிய ஜனநாயக கூட்டணி உள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக பாரதிய ஜனதா கட்சி பல்வேறு சாதனைகளை செள்துள்ளது. அயல்நாட்டு தொடர்பு முதல் அடித்தட்டு மக்கள் வரை பல்வேறு வளர்ச்சிகளை செய்துள்ளது.
கோடிக்கணக்கான திட்டங்களை நாட்டுக்கு பிரதமர் மோடி அர்ப்பணித்துள்ளார். இந்த தேர்தலை பொருத்தமட்டில் மீண்டும் மோடி வேண்டும் மோடி என்ற கொள்கையின் அடிப்படையில் தேர்தலை சந்திக்க உள்ளோம்.
விளவங்கோடு சட்டசபை தொகுதியில் பா.ஜனதா சார்பில் விஜயதரணி போட்டியிடுவாரா? என்பது குறித்து தேர்தல் அறிவிக்கபட்ட பிறகு தலைமை முடிவு செய்யும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- மேல்முறையீட்டு வழக்கு நீதிபதிகள் எம்.எஸ் ரமேஷ், சுந்தர் மோகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
- செந்தில் பாலாஜி மனுவுக்கு ஏப்ரல் 25-ந்தேதிக்குள் பதிலளிக்கும்படி அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை ஒத்திவைத்தனர்.
சென்னை:
அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது, வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணம் பெற்று மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது தொடரப்பட்ட வழக்குகள் சென்னை எம்.பி.- எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டில் விசாரணையில் உள்ளன. இந்த வழக்கில், சட்டவிரோத பண பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து செந்தில் பாலாஜியை கடந்த ஆண்டு ஜூன் மாதம் கைது செய்தது. இந்த வழக்கு சென்னை மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டில் நிலுவையில் இருந்து வருகிறது.
இந்த நிலையில், தனக்கு எதிராக சிறப்பு கோர்ட்டில் நிலுவையில் உள்ள மோசடி வழக்கு விசாரணை முடியும் வரை, சட்டவிரோத பணபரிமாற்ற தடைச்சட்ட வழக்கை விசாரிக்கக்கூடாது. அந்த வழக்கை தள்ளிவைக்க வேண்டும் என்று சென்னை மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டில் செந்தில் பாலாஜி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.அல்லி தள்ளுபடி செய்தார். இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் செந்தில் பாலாஜி மேல்முறையீடு செய்தார். இந்த மேல்முறையீட்டு வழக்கு நீதிபதிகள் எம்.எஸ் ரமேஷ், சுந்தர் மோகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது அமலாக்கத்துறை வழக்கு ஆரம்ப நிலையில் உள்ளதால் எந்த நிவாரணமும் வழங்க முடியாது எனக்கூறி அமலாக்கத்துறை வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க நீதிபதிகள் மறுத்தனர். செந்தில் பாலாஜி மனுவுக்கு ஏப்ரல் 25-ந்தேதிக்குள் பதிலளிக்கும்படி அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை ஒத்திவைத்தனர்.
- தென்மாநிலங்களில் இருந்து பெயரளவுக்கு 5 அல்லது 10 சதவிகிதத்தினர் மட்டுமே நியமிக்கப்படுகின்றனர்.
- மத்திய அரசின் நிர்வாகமும் சிறப்பாக நடைபெறும்.
சென்னை:
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஆண்டுக்கு இரண்டு கோடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குவோம் என வாக்குறுதி வழங்கி 10 ஆண்டு ஆட்சியை பிரதமர் மோடி நிறைவு செய்ய இருக்கிறார். ஆனால், 45 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளது. மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையம் உச்சநீதிமன்றத்தின் ஒரு தீர்ப்பை சாக்காக வைத்துக் கொண்டு மண்டல வாரியான தேர்வு முறையை ஒழித்துக்கட்டியுள்ளது.

இதன் விளைவாக தேர்வுகள் அனைத்தும் தலைநகர் டெல்லியில் நடத்துகிற நிலை ஏற்பட்டுள்ளது. இந்த தேர்வின் மூலமாக 90 சதவிகிதத்திற்கும் மேலாக இந்தி பேசும் மாநிலங்களிலிருந்தே பணி நியமனங்கள் நடைபெறுகிறது. தென்மாநிலங்களில் இருந்து பெயரளவுக்கு 5 அல்லது 10 சதவிகிதத்தினர் மட்டுமே நியமிக்கப்படுகின்றனர்.
சமீபத்தில், பணியாளர் தேர்வாணையத்தில் ஜூன் 2024 முதல் ஜூலைக்குள் 41,233 காலிப் பணியிடங்களுக்கு இணையதளத்தின் மூலம் தேர்வு நடத்த அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த தேர்வுகள் இந்தி மற்றும் ஆங்கிலத்தோடு பிற மாநில மொழிகளில் ஒன்றான தமிழிலும் நடத்தப்பட வேண்டுமென்று வலியுறுத்த விரும்புகிறோம். இந்த கோரிக்கையை ஏற்பதன் மூலம், மத்திய அரசு அலுவலகங்களில் அந்தந்த மாநில மொழி தெரிந்தவர்களே பணியில் நியமிக்கப்படக் கூடிய வாய்ப்பு ஏற்படும். மத்திய அரசின் நிர்வாகமும் சிறப்பாக நடைபெறும். இல்லாவிட்டால் கடுமையான போராட்டம் நடத்த வேண்டிய நிலை ஏற்படும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- சதாவை தேடும் பணியில் மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டனர்.
- மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சென்னையில் பதுங்கி இருந்த சதாவை சுற்றி வளைத்து பிடித்தனர்.
சென்னை:
சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பல் தலைவனாக செயல்பட்ட, தி.மு.க.வின் முன்னாள் நிர்வாகியும், திரைப்பட தயாரிப்பாளருமான ஜாபர் சாதிக், டெல்லியில், கடந்த 9-ந்தேதி கைது செய்யப்பட்டார். அவரை மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள், 7 நாள் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். ஜாபர் சாதிக்கின் சகோதரர் முகமது சலீம், விடுதலை சிறுத்தைகள் கட்சியில், சென்னை மண்டல துணை செயலாளராக இருந்தார்.
மற்றொரு சகோதரர் மைதீன், டைரக்டர் அமீர் இயக்கத்தில், ஜாபர் சாதிக் தயாரித்து வரும், `இறைவன் மிகப் பெரியவன்' என்ற படத்தில் நடித்து வந்தார். இவர்கள் 3 பேரும், சென்னை சாந்தோம் அருளானந்தம் தெருவில், அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கின்றனர்.
ஆஸ்திரேலியா, நியூசிலாந்து என பல நாடுகளுக்கு போதைப்பொருள் கடத்திய ஜாபர் சாதிக்கிற்கு, அவரது சகோதரர்கள் முகமது சலீம், மைதீன் ஆகியோர் மிகவும் பக்கபலமாக இருந்து உள்ளனர். தலைமறைவாக உள்ள இவர்கள் இருவரையும் மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தேடி வருகின்றனர். அவர்கள் வெளிநாடுகளுக்கு தப்பி செல்லாமல் இருக்க, விமான நிலையங்களுக்கு, நேற்று `லுக் அவுட்' நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள, இளைஞர்களை மூளைச்சலவை செய்து, போதைப்பொருள் கடத்தல் தொழிலில் களமிறக்கும் ஏஜெண்டாகவும், முகமது சலீம் மற்றும் மைதீன் ஆகியோர் செயல்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் ஜாபர் சாதிக்கை, மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் காவலில் வைத்து விசாரணை நடத்தியபோது சதா என்கிற சதானந்தம் என்பவர் போதைப்பொருள் கடத்தலில் தனக்கு உடந்தையாக இருப்பதாக தெரிவித்தார். இதையடுத்து சதாவை தேடும் பணியில் மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டனர்.
இதற்காக அவர்கள் சென்னை வந்தனர். சென்னையில் உள்ள அவரது வீட்டுக்கு சென்று தேடியபோது அவர் வீட்டில் இல்லை. பின்னர் அவரது நண்பர்களிடம் விசாரித்தபோது சதா சென்னையில் பதுங்கி இருந்த இடம் மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு தெரியவந்தது.
இதையடுத்து மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சென்னையில் பதுங்கி இருந்த சதாவை சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர் அவரை அதிகாரிகள் டெல்லிக்கு அழைத்து சென்றனர்.
சதாவின் சொந்த ஊர் திருச்சி ஆகும். அவர் போதைப்பொருள் கடத்துவதற்காக சென்னையில் தங்கி இருந்தார். ஜாபர்சாதிக் போதைப்பொருள் கடத்துவதற்கு, சென்னையில் இவர்தான் மிகவும் உறுதுணையாக இருந்ததாக தெரிகிறது. தைப்பொருட்களை மிக்சிங் செய்வது, உணவு பொருட்களுடன் கலப்பது, பேக்கிங் செய்வது ஆகிய வேலைகளையும் சதா தான் செய்து வந்துள்ளார்.
சென்னையில் இருந்தபடியே இந்த பணிகளை அவர் மேற்கொண்டு உள்ளார். மேலும் ஜாபர் சாதிக் போதைப்பொருள் கடத்துவதற்காக சென்னையில் குடோன் ஒன்றை வைத்திருந்ததும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து சதாவை மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கோர்ட்டில் ஆஜர்படுத்தி காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளனர். சதாவிடம் விசாரணை மேற்கொண்டால் இதில் தொடர்புடைவர்கள் பற்றிய மேலும் தகவல்கள் தெரியவரும் என்று கூறப்படுகிறது.
போதைப்பொருள் கடத்தல் வழக்கை சதாவையும் சேர்த்து இதுவரை 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தற்போது மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளின் விசாரணையில், ஜாபர் சாதிக் போதைப்பொருள் கடத்தலில் தொடர்புடையவர்களின் பெயர்களை தெரிவித்து வருவதால், அதன் அடிப்படையில் இனிவரும் நாட்களில் போதைப்பொருள் கடத்தலில் தொடர்புடையவர்கள் மீதான கைது நடவடிக்கை தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- பல்வேறு இடங்களில் கூலிப்படையாக செயல்பட்டு கொலை சம்பவத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
- ரெட்டிச்சாவடி போலீசார் வழக்கு பதிவு செய்து 5 பேரை கைது செய்தனர்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் எல்லையில் புதுச்சேரி மாநிலம் உள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட குற்றவாளிகள் கடலூர் மாவட்ட எல்லை பகுதிகளில் தலைமறைவாக இருந்து வருகின்றனர்.
கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கூலிப்படையாக செயல்பட்டு கொலை சம்பவத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை கட்டுப்படுத்தும் விதமாக கடந்த சில தினங்களுக்கு முன்பு கடலூர் மாவட்ட போலீசாரும், புதுச்சேரி மாநில போலீசாரும் ஒன்றிணைந்து கடலூர் மாவட்ட மற்றும் புதுச்சேரி மாநில எல்லைப் பகுதிகளில் அதிரடியாக சோதனை ஈடுபட்டு குற்றசம்பவங்களில் ஈடுபட்டு வரும் நபர்களின் வீடுகளுக்கு சென்று கடும் எச்சரிக்கையும் விடுத்து வந்தனர்.
பாராளுமன்ற தேர்தல் வர உள்ளதையொட்டி கடலூர் மாவட்ட போலீசார் குற்ற சம்பவங்கள், அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க பல்வேறு முன்னெச்சரிக்கை பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் ரெட்டிச்சாவடி அடுத்த புதுக்கடை பகுதியில் ரெட்டிச்சாவடி இன்ஸ்பெக்டர் ராஜாராமன் தலைமையில் போலீசார் சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது புதுக்கடை சுடுகாடு பகுதியில் ஒரு கும்பல் இருந்ததை பார்த்த போலீசார் அவர்களைப் பிடிக்க சென்றனர்.

அப்போது ஒரு நபர் தப்பி ஓடிவிட்டார். மீதமுள்ள 5 நபர்களை சுற்றி வளைத்து ரெட்டிச்சாவடி போலீசார் விசாரணை நடத்தினார்கள். புதுவை மாநிலம் கரிக்கலாம்பாக்கம் பகுதியை சேர்ந்த சரத்குமார் (வயது 25), கவியரசன் (30), புதுக்கடை சேர்ந்த வேல்முருகன் (27), சந்தோஷ் (21), கீழ் குமாரமங்கலத்தை சேர்ந்த வெங்கடாசலம் (வயது 32) என்பது தெரியவந்தது.
மேலும், தப்பியோடியது கரிக்கலாம்பாக்கத்தை சேர்ந்த பிரபல ரவுடி தாடி அய்யனார் என்பதும் தெரியவந்தது. இவர்களிடம் இருந்து கத்தி, 2 மோட்டார் சைக்கிள் போன்றவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும், இவர்கள் கூட்டாக சேர்ந்து கொள்ளை அடிக்க சதி திட்டம் திட்டியதாக தெரியவந்தது. இது மட்டுமன்றி இவர்கள் மீது தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் பல்வேறு குற்ற வழக்குகள் இருந்து வருவது குறிப்பிடத்தக்கதாகும்.
இதனை தொடர்ந்து ரெட்டிச்சாவடி போலீசார் வழக்கு பதிவு செய்து 5 பேரை கைது செய்தனர். மேலும் பிரபல ரவுடி தாடி அய்யனாரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர். இச்சம்பவம் கடலூர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- அதிமுக - பாஜக மறைமுக கூட்டணி அமைத்து நாடகம் ஆடி வருகிறார்கள்.
- எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதை ஜெயலலிதா தடுத்தாரா? அல்லது நாங்கள் தடுத்தோமா?
பொள்ளாச்சி:
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே ஆச்சிப்பட்டியில் தமிழக அரசு சார்பில் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் விழா இன்று நடந்தது.
விழாவில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று, கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு மாவட்டங்களில் 35 புதிய திட்டபணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
இன்று கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு ஆகிய 4 மாவட்டங்களிலும் சேர்த்து மொத்தமாக ரூ.1,274 கோடி மதிப்பில் புதிய திட்ட பணிகளையும், நலத்திட்ட உதவிகளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். அப்போது அவர் கூறியதாவது:
* நான் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றிய தெம்போடு இங்கு வந்துள்ளேன்.
* பாராளுமன்ற தேர்தல் மட்டுமல்ல இனி வரும் அனைத்து தேர்தல்களிலும் வெல்வோம்.
* அரசு நிகழ்ச்சியா அல்லது மண்டல மாநாடா என்று எண்ணக்கூடிய அளவுக்கு கூட்டம் இருக்கிறது.
* கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம், மகளிர் விடியல் பயணம் என ஏராளமாக திட்டங்களை செயல்படுத்தி உள்ளோம்.
* அனைத்து திட்டங்களுக்கும் முத்தாய்ப்பாக நீங்கள் நலமா திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
* கோட்டையில் இருந்து மட்டும் திட்டங்களை அறிவிக்காமல், கடைக்கோடி மக்களிடமும் பேசும் முதல்வர் நான்தான்.
* திமுக ஆட்சியின் மீது பொறாமைப்பட்டு வாட்ஸ்அப் யுனிவர்சிட்டி நடத்தி வருகிறார்கள்.
* பொய், அவதூறுகளை பரப்புவோருக்கு பாடம் எடுக்கும் நேரம் வந்துவிட்டது.
* கோவையில் செம்மொழி பூங்கா அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. கோவையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது. முத்தாய்ப்பாக மதுரை போன்று நூலகம் அமைக்கப்படும்.
* திருப்பூர் மாவட்டத்தில் பள்ளி கட்டடங்கள், பேருந்து நிலையம் உள்ளிட்ட ஏராளமான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
* நீலகிரி மாவட்ட தோட்ட தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
* தென்னை நோய் பாதிப்புகளை களைய ரூ.14 கோடி நிதி வழங்கப்படும்.
* விவசாயிகளுக்கு 3 லட்சம் தென்னை கன்றுகள் இலவசமாக வழங்கப்படும்.
* அகில இந்திய அளவில் தென்னை விற்பனைக்கு தொடர்பு ஏற்படுத்தப்படும்.
* கூட்டுறவு சங்கங்கள் மூலம் தேங்காய் நேரடி விற்பனை செய்யப்படும்.
* உக்கடத்தில்ரூ.20 கோடி மதிப்பீட்டில் நவீன பேருந்து நிலையம், ஆர்.எஸ்.புரத்தில் ரூ.10 கோடி மதிப்பில் ஹாக்கி மைதானம் அமைக்கப்படும்.
* குளிரூட்டப்பட்ட மஞ்சள் கிடங்குகள் அமைக்கப்படும்.
* ஈரோடு மாவட்டத்தில் 8 சமுதாய நல கூடங்கள் அமைக்கப்படும்.
* ஈரோட்டில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் அருங்காட்சியகம் அமைக்கப்படும்.
* சமுதாய நலக்கூடங்கள் ரூ.11 கோடியில் சீரமைக்கப்படும்.
* உதகை தாவரவியல் பூங்கா உலக தரத்தில் உயர்த்தப்படும்.
* புதிதாக 2 சமுதாய நல கூடங்கள் அமைக்கப்படும்.
* நான் ஒரு கோப்பில் கையெழுத்திட்டால் லட்சக்கணக்கான மக்கள் பயன்பெறுவார்கள்.
* 10 ஆண்டு ஆட்சியில் வாக்களித்த மக்களுக்கு அதிமுக ஏதாவது நன்மை செய்ததா?
* கொங்கு மண்டலம் தங்கள் கோட்டை என கூறும் அதிமுக, கொங்கு பகுதிக்கு என்ன செய்தது?
* பொள்ளாச்சி சம்பவத்தில் தவறிழைத்த அனைவர் மீதும் நடவடிக்கை எடுப்பேன் என்று அப்போதே உறுதி அளித்திருந்தேன்.
* கொடநாடு கொலை சம்பவம் குறித்து முறையான விசாரணை நடைபெற்று வருகின்றது.
* தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு, குட்கா விவசாரம் உள்ளிட்ட பிரச்சனைகள் எல்லாம் யாருடைய ஆட்சியில் நடந்தது?
* அதிமுக - பாஜக மறைமுக கூட்டணி அமைத்து நாடகம் ஆடி வருகிறார்கள்.
* ஒன்றிய அரசின் உதவி இன்றியே பல சாதனைகளை செய்கிறோம். உதவி இருந்தால் 10 மடங்கு சாதனைகளை செய்வோம்.
* மோடி உத்தரவாதம் என்று கூறுகிறார். வேலைவாய்ப்பு குறித்த அளித்த வாக்குறுதி என்ன ஆனது?
* அடுத்த வாரம் பிரதமர் வரும்போது, அவரிடம் தமிழகத்திற்கு என்ன செய்தீர்கள் என்று கேளுங்கள்.
* எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதை ஜெயலலிதா தடுத்தாரா? அல்லது நாங்கள் தடுத்தோமா?
* மத்திய அரசின் திட்டங்களை திமுக தடுப்பதாக பிரதமர் பொய் சொல்கிறார். பிரதமரின் கட்டுக்கதைகள் எடுபடாது என்று கூறினார்.
- விசைத்தறி துணி விற்பனையாகாமல் தேக்கம் அடைந்துள்ளது.
- வரி இல்லாமல் நூல் இறக்குமதி செய்ய சலுகை அளிக்க வேண்டும்.
பல்லடம்:
திருப்பூர், கோவை மாவட்டங்களில் 2.50 லட்சம் விசைத்தறிகள், 50 ஆயிரம் நாடா இல்லா விசைத்தறிகள் இயங்கி வருகின்றன. இவற்றின் மூலம் தினசரி ரூ.100 கோடி மதிப்புள்ள 2 கோடி மீட்டர் காடா துணி உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த காடா துணி உற்பத்தி தொழில் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 5 லட்சம் குடும்பங்கள் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர்.
தற்போது நூல் விலை உயர்ந்து இருப்பதால் விசைத்தறி ஜவுளி உற்பத்தி முழுமையாக பாதிப்படைந்துள்ளது. இதனால் பல்லடம் பகுதியில் ரூ.600 கோடி மதிப்பிலான விசைத்தறி துணி விற்பனையாகாமல் தேக்கம் அடைந்துள்ளது. இதுகுறித்து பல்லடம் விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்க ஒருங்கிணைப்பாளர் கரைப்புதூர் சக்திவேல் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
திருப்பூர், கோவை மாவட்டங்களில் முக்கிய தொழிலாக விவசாயத்திற்கு அடுத்தப்படியாக விசைத்தறி ஜவுளித் தொழில் உள்ளது. இந்த தொழில் ஏற்கனவே ஆட்கள் பற்றாக்குறை, உற்பத்தி செய்த துணிக்கு உரிய விலை கிடைக்காதது போன்ற காரணங்களால் ஜவுளித்தொழில் நெருக்கடியை சந்தித்து வருகிறது. கடந்த வாரத்தில் பஞ்சு விலை உயர்வு காரணத்தால், நூல் கிலோ ஒன்றுக்கு ரூ.15 முதல் 25 வரை விலையேற்றம் ஆனது. ஆனால் ஜவுளி உற்பத்தியாளர்கள் உற்பத்தி செய்யும் ஜவுளிக்கு இன்னும் உரிய விலை கிடைக்கவில்லை.

பஞ்சு மற்றும் நூல் விலை உயர்கிறது. ஆனால் அதில் உற்பத்தி செய்யப்படும் துணி விலை உயரவில்லை. தற்போதுள்ள நெருக்கடியான சூழ்நிலையில் ஜவுளி உற்பத்தியை 50 சதவீதம் வரை குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் ஏற்கனவே உற்பத்தி செய்யப்பட்ட சுமார் ரூ. 600 கோடி மதிப்புள்ள காடா ஜவுளி துணிகள் தேங்கி கிடக்கிறது. உரிய விலை கிடைக்காததாலும், வெளிநாட்டு ஆர்டர்கள் இல்லாததாலும் காடா ஜவுளிகள் தேங்கி கிடக்கின்றன.
எனவே மத்திய, மாநில அரசுகள் உள்நாட்டில் ஜவுளித் தொழில் சீராகும் வரை நூல், கழிவுப்பஞ்சு மற்றும் பஞ்சு ஏற்றுமதிக்கு தடை விதிக்க வேண்டும். ஆண்டு முழுவதும் நூல் விலை சீராக இருக்கும் வகையில் நூல் விலையை அரசு கட்டுப்படுத்த வேண்டும். வரி இல்லாமல் நூல் இறக்குமதி செய்ய சலுகை அளிக்க வேண்டும். வங்கதேசத்தில் இருந்து குறைந்த விலையில் துணிகள் இறக்குமதி செய்யப்படுகிறது. இதனை தவிர்க்க தமிழகத்தில் பருத்தி சாகுபடி பரப்பை அதிகரிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.






