search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    போதைப்பொருள் கடத்தல் வழக்கு: ஜாபர் சாதிக் கூட்டாளி கைது
    X

    போதைப்பொருள் கடத்தல் வழக்கு: ஜாபர் சாதிக் கூட்டாளி கைது

    • சதாவை தேடும் பணியில் மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டனர்.
    • மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சென்னையில் பதுங்கி இருந்த சதாவை சுற்றி வளைத்து பிடித்தனர்.

    சென்னை:

    சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பல் தலைவனாக செயல்பட்ட, தி.மு.க.வின் முன்னாள் நிர்வாகியும், திரைப்பட தயாரிப்பாளருமான ஜாபர் சாதிக், டெல்லியில், கடந்த 9-ந்தேதி கைது செய்யப்பட்டார். அவரை மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள், 7 நாள் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். ஜாபர் சாதிக்கின் சகோதரர் முகமது சலீம், விடுதலை சிறுத்தைகள் கட்சியில், சென்னை மண்டல துணை செயலாளராக இருந்தார்.

    மற்றொரு சகோதரர் மைதீன், டைரக்டர் அமீர் இயக்கத்தில், ஜாபர் சாதிக் தயாரித்து வரும், `இறைவன் மிகப் பெரியவன்' என்ற படத்தில் நடித்து வந்தார். இவர்கள் 3 பேரும், சென்னை சாந்தோம் அருளானந்தம் தெருவில், அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கின்றனர்.

    ஆஸ்திரேலியா, நியூசிலாந்து என பல நாடுகளுக்கு போதைப்பொருள் கடத்திய ஜாபர் சாதிக்கிற்கு, அவரது சகோதரர்கள் முகமது சலீம், மைதீன் ஆகியோர் மிகவும் பக்கபலமாக இருந்து உள்ளனர். தலைமறைவாக உள்ள இவர்கள் இருவரையும் மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தேடி வருகின்றனர். அவர்கள் வெளிநாடுகளுக்கு தப்பி செல்லாமல் இருக்க, விமான நிலையங்களுக்கு, நேற்று `லுக் அவுட்' நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் உள்ள, இளைஞர்களை மூளைச்சலவை செய்து, போதைப்பொருள் கடத்தல் தொழிலில் களமிறக்கும் ஏஜெண்டாகவும், முகமது சலீம் மற்றும் மைதீன் ஆகியோர் செயல்பட்டுள்ளனர்.

    இந்த நிலையில் ஜாபர் சாதிக்கை, மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் காவலில் வைத்து விசாரணை நடத்தியபோது சதா என்கிற சதானந்தம் என்பவர் போதைப்பொருள் கடத்தலில் தனக்கு உடந்தையாக இருப்பதாக தெரிவித்தார். இதையடுத்து சதாவை தேடும் பணியில் மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டனர்.

    இதற்காக அவர்கள் சென்னை வந்தனர். சென்னையில் உள்ள அவரது வீட்டுக்கு சென்று தேடியபோது அவர் வீட்டில் இல்லை. பின்னர் அவரது நண்பர்களிடம் விசாரித்தபோது சதா சென்னையில் பதுங்கி இருந்த இடம் மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு தெரியவந்தது.

    இதையடுத்து மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சென்னையில் பதுங்கி இருந்த சதாவை சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர் அவரை அதிகாரிகள் டெல்லிக்கு அழைத்து சென்றனர்.

    சதாவின் சொந்த ஊர் திருச்சி ஆகும். அவர் போதைப்பொருள் கடத்துவதற்காக சென்னையில் தங்கி இருந்தார். ஜாபர்சாதிக் போதைப்பொருள் கடத்துவதற்கு, சென்னையில் இவர்தான் மிகவும் உறுதுணையாக இருந்ததாக தெரிகிறது. தைப்பொருட்களை மிக்சிங் செய்வது, உணவு பொருட்களுடன் கலப்பது, பேக்கிங் செய்வது ஆகிய வேலைகளையும் சதா தான் செய்து வந்துள்ளார்.

    சென்னையில் இருந்தபடியே இந்த பணிகளை அவர் மேற்கொண்டு உள்ளார். மேலும் ஜாபர் சாதிக் போதைப்பொருள் கடத்துவதற்காக சென்னையில் குடோன் ஒன்றை வைத்திருந்ததும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

    இதையடுத்து சதாவை மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கோர்ட்டில் ஆஜர்படுத்தி காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளனர். சதாவிடம் விசாரணை மேற்கொண்டால் இதில் தொடர்புடைவர்கள் பற்றிய மேலும் தகவல்கள் தெரியவரும் என்று கூறப்படுகிறது.

    போதைப்பொருள் கடத்தல் வழக்கை சதாவையும் சேர்த்து இதுவரை 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தற்போது மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளின் விசாரணையில், ஜாபர் சாதிக் போதைப்பொருள் கடத்தலில் தொடர்புடையவர்களின் பெயர்களை தெரிவித்து வருவதால், அதன் அடிப்படையில் இனிவரும் நாட்களில் போதைப்பொருள் கடத்தலில் தொடர்புடையவர்கள் மீதான கைது நடவடிக்கை தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    Next Story
    ×