search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    செந்தில் பாலாஜிக்கு எதிரான அமலாக்கத்துறை விசாரணைக்கு தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு
    X

    செந்தில் பாலாஜிக்கு எதிரான அமலாக்கத்துறை விசாரணைக்கு தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு

    • மேல்முறையீட்டு வழக்கு நீதிபதிகள் எம்.எஸ் ரமேஷ், சுந்தர் மோகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
    • செந்தில் பாலாஜி மனுவுக்கு ஏப்ரல் 25-ந்தேதிக்குள் பதிலளிக்கும்படி அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை ஒத்திவைத்தனர்.

    சென்னை:

    அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது, வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணம் பெற்று மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது தொடரப்பட்ட வழக்குகள் சென்னை எம்.பி.- எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டில் விசாரணையில் உள்ளன. இந்த வழக்கில், சட்டவிரோத பண பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து செந்தில் பாலாஜியை கடந்த ஆண்டு ஜூன் மாதம் கைது செய்தது. இந்த வழக்கு சென்னை மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டில் நிலுவையில் இருந்து வருகிறது.

    இந்த நிலையில், தனக்கு எதிராக சிறப்பு கோர்ட்டில் நிலுவையில் உள்ள மோசடி வழக்கு விசாரணை முடியும் வரை, சட்டவிரோத பணபரிமாற்ற தடைச்சட்ட வழக்கை விசாரிக்கக்கூடாது. அந்த வழக்கை தள்ளிவைக்க வேண்டும் என்று சென்னை மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டில் செந்தில் பாலாஜி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.அல்லி தள்ளுபடி செய்தார். இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் செந்தில் பாலாஜி மேல்முறையீடு செய்தார். இந்த மேல்முறையீட்டு வழக்கு நீதிபதிகள் எம்.எஸ் ரமேஷ், சுந்தர் மோகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

    அப்போது அமலாக்கத்துறை வழக்கு ஆரம்ப நிலையில் உள்ளதால் எந்த நிவாரணமும் வழங்க முடியாது எனக்கூறி அமலாக்கத்துறை வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க நீதிபதிகள் மறுத்தனர். செந்தில் பாலாஜி மனுவுக்கு ஏப்ரல் 25-ந்தேதிக்குள் பதிலளிக்கும்படி அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை ஒத்திவைத்தனர்.

    Next Story
    ×