என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • இந்த வழக்கு மீதான விசாரணை இன்று பிற்பகல் விசாரணைக்கு வந்தது.
    • தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை தள்ளி வைத்தனர்.

    தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள ம.தி.மு.க. திருச்சி தொகுதியில் போட்டியிடுகிறது. அக்கட்சியின் பொதுச் செயலாளரான வைகோவின் மகன் துரை வைகோ அந்த தொகுதியில் தனி சின்னத் தில் போட்டியிட முடிவு செய்துள்ளார்.

    ம.தி.மு.க. வின் சின்னமாக இருந்த பம்பரம் சின்னத்தை இந்த தேர்தலில் தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று வைகோ சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

    இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்கபுர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வைகோ தரப்பில் தங்கள் கோரிக்கையை ஏற்று கட்சி நிர்வாகிகளின் பெயர்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்த தேர்தல் ஆணையம், பம்பரம் சின்னத்தை ஒதுக்கீடு செய்யவில்லை.

    வேட்பு மனு தாக்கலுக்கு நாளை கடைசி நாள் என்ப தால் தங்கள் கோரிக்கையை பரிசீலிக்கும்படி தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.

    இதற்கு பதில் அளித்த தேர்தல் ஆணையம் தரப்பு வக்கீல், சட்டப்படி அங்கீகரிக்கப்படாத பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சி 2 தொகுதிகளுக்கு மேல் போட்டியிடும் பட்சத்திலேயே ஒரே சின்னம் ஒதுக்கப்படும் என்றும், ம.தி.மு.க. வின் கோரிக்கை மீது இன்று முடிவெடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

    14 ஆண்டுகளுக்கு முன்பு அங்கீகாரம் ரத்து செய்யப்பட்ட நிலையில் ம.தி.மு.க. வுக்கு சின்னம் ஒதுக்கீடு செய்வது தொடர்பாக சம்பந்தப்பட்ட தொகுதியின் தேர்தல் அதிகாரி தான் முடிவு எடுப்பார் என்றும் தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    இதையடுத்து பம்பரம் சின்னம் பொது சின்ன பட்டியலில் உள்ளதா? இல்லையா? என்பது குறித்து இன்று பிற்பகல் விளக்கம் அளிக்கும்படி தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை தள்ளி வைத்தனர்.

    அதன்படி, இந்த வழக்கு மீதான விசாரணை இன்று பிற்பகல் விசாரணைக்கு வந்தது.

    பம்பரம் சின்னம் கோரி மதிமுக அளித்த விண்ணப்பத்தின் மீது நாளை காலை 9 மணிக்குள் முடிவெடுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    பம்பரம் சின்னம் கோரி மதிமுக சார்பில் பொதுச்செயலாளர் வைகோ தொடர்ந்த வழக்கு நாளை பிற்பகல் 2.15 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

    • வன உயிரினங்களின் நடமாட்டம் போன்ற காரணங்களால் பலர் காடுகளுக்கு செல்ல முடியாத நிலை உள்ளது.
    • 7 பேரிடம் இருந்து இந்த பட்டா காடுகள் ரூ.2.31 கோடிக்கு வனத்துறை விலைக்கு வாங்கி வனத்துடன் சேர்க்கப்பட்டது.

    கூடலூர்:

    தமிழகத்தில் 5-வது புலிகள் காப்பகமாக கடந்த 2021-ம் ஆண்டு ஸ்ரீவில்லிபுத்தூர்-மேகமலை புலிகள் காப்பகம் அறிவிக்கப்பட்டது. இது இந்தியாவின் 21-வது புலிகள் காப்பகமாகும். இங்கு மேகமலை பகுதியில் உள்ள கண்டமனூர், எரசக்கநாயக்கனூர், சாப்டூர் ஜமீன்களுக்கு சொந்தமான நிலங்கள் பட்டா காடுகளாகவும், அதில் தனியார் ஏலக்காய், காபி சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

    இந்த நிலங்களுக்கு செல்ல பாதை வசதி இல்லாதது, தொழிலாளர் பிரச்சனை, வன உயிரினங்களின் நடமாட்டம் போன்ற காரணங்களால் பலர் காடுகளுக்கு செல்ல முடியாத நிலை உள்ளது.

    ஹைவேவிஸ் வனப்பகுதியில் ஏகன் ஜகா பகுதியில் அடர் வனப்பகுதிக்குள் இருந்த 30.41 ஏக்கர் தனியார் பட்டா காடுகளை வனத்துறை அதிகாரிகள் நில உரிமையாளர்களிடம் பேசி விலைக்கு வாங்கியுள்ளனர்.

    7 பேரிடம் இருந்து இந்த பட்டா காடுகள் ரூ.2.31 கோடிக்கு வனத்துறை விலைக்கு வாங்கி வனத்துடன் சேர்க்கப்பட்டது. இந்தியாவிலேயே வர்த்தகம் இல்லாத பயன்பாட்டுக்காக வனப்பகுதியில் புலிகள் காப்பகத்துக்கு என மாநில அரசு தனியாரிடம் நிலம் விலைக்கு வாங்குவது இதுவே முதல் முறை என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

    இதற்காக பத்திரப்பதிவு செய்யப்பட்டு தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா, புலிகள் காப்பக துணை இயக்குனர் ஆனந்த் ஆகியோர் அதிக அக்கறை செலுத்தி இந்த முயற்சியை மேற்கொண்டு தேனி மாவட்டத்தில் வனப்பகுதியை அதிகரித்துள்ளனர்.

    • தேர்தல் நடத்தும் அலுவலர்கள் தொடர்ந்து வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • தேர்தல் நடத்தும் அலுவலர்கள் வாகனத்தில் வந்த டிரைவர் மற்றும் பாதுகாவலரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தருமபுரி:

    பாராளுமன்றத் தேர்தல் அடுத்த மாதம் 19-ந் தேதி நடைபெற உள்ளது என்று தேர்தல் ஆணையம் அறிவிக்கப்பட்ட நிலையில் தருமபுரி மாவட்டத்தில் தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்தது.

    அதன் அடிப்படையில் தருமபுரி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட எல்லையில் பறக்கும் படையினர் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் தொடர்ந்து வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் இன்று காலை சேலத்தில் இருந்து பெங்களூருவுக்கு சென்ற ஒரு வாகனத்தினை பறக்கும் படையினர் தருமபுரி மாவட்ட எல்லையான தொப்பூர் சோதனை சாவடியில் வழிமறித்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 180 கிலோ தங்கம் மற்றும் 250 கிலோ வெள்ளி ஆபரணங்களாக செய்யப்பட்டு உரிய ஆவணங்களுடன் பெங்களூருவுக்கு கொண்டு செல்வதாக தெரியவந்தது.

    உரிய ஆதாரங்கள் இருந்த போதிலும் அந்த தங்கம் மற்றும் வெள்ளி ஆபரணங்கள் தமிழகத்திற்கு உண்டான அனுமதி இல்லாததால் வாகனத்தை ஆய்வுக்காக தொப்பூரில் இருந்து பறக்கும் படையினர் தருமபுரி வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் கொண்டு வந்து நிறுத்தினர். காலை 10 மணிக்கு நிறுத்திய வாகனம் ஒரு மணி நேரம் ஆகியும் அதிகாரிகள் யாரும் உடனே வரவில்லை.

    இது குறித்து தேர்தல் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தும் சற்று காலதாமதத்திற்கு பிறகு சம்பவ இடத்திற்கு வந்தனர்.

    இதுகுறித்து தேர்தல் நடத்தும் அதிகாரிகள் அந்த வாகனத்தில் வந்தவர்களிடம் விசாரித்தனர். இதில் உள்ளிருக்கும் பொருட்களை அதன் உரிமையாளர் மட்டுமே திறக்க முடியும் என்று அவர்கள் கூறினர்.

    உடனே தங்கம் மற்றும் வெள்ளி ஆபரணங்களுக்கு சொந்தமான உரிமையாளருக்காக தகவல் கொடுக்கப்பட்டு அவருக்காக வட்டாட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. மற்ற அரசு ஊழியர்களும் காத்துக் கிடந்தனர்.

    இதுகுறித்து தேர்தல் நடத்தும் அலுவலர்கள் வாகனத்தில் வந்த டிரைவர் மற்றும் பாதுகாவலரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • வடசென்னை தொகுதியில், திமுக சார்பில் கலாநிதி வீராசாமியும், அதிமுக வேட்பாளர் ராயபுரம் மனோவும் போட்டியிடுகின்றனர்
    • அமலாக்கத்துறையை பாஜகவின் ஏவல் துறையாக மாற்றிவிட்டார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

    வட சென்னை தொகுதியில் ஓய்வு பெற்ற ஐ.ஆர்.எஸ். அதிகாரி பாலமுருகன் சுயேட்சையாக போட்டியிட வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளார்.

    வடசென்னை தொகுதியில், திமுக சார்பில் கலாநிதி வீராசாமியும், அதிமுக வேட்பாளர் ராயபுரம் மனோவும் போட்டியிடுகின்றனர்.

    கடந்த வருடம் சேலத்தை சேர்ந்த 2 விவசாயிகளை விசாரணைக்கு ஆஜராகச் சொல்லி அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. அந்த விவசாயிகளுக்கு ஆதரவாக ஓய்வுபெற்ற ஐ.ஆர்.எஸ். அதிகாரி பாலமுருகனின் மனைவி பிரவீனா ஆஜரானார். பின்பு இந்த வழக்கு விவகாரம் பெரிதாகிவிட, விவசாயிகள் மீது பதிந்த வழக்கை அமலாக்கத்துறை முடித்து வைத்தது.

    இந்த விவகாரத்தை மேற்கோள்காட்டி ஜனாதிபதி திரெளபதி முர்முவுக்கு பாலமுருகன் கடிதம் எழுதினார். அதில், அமலாக்கத்துறையை பாஜகவின் ஏவல் துறையாக மாற்றிவிட்டார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். அவரை பதவியிலிருந்து நீக்க வேண்டும் எனக் கோரியிருந்தார்.

    அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவையொட்டி, இந்தாண்டு ஜனவரி 22-ம் தேதி மத்திய அரசு அலுவலகங்களுக்கெல்லாம் அரைநாள் விடுமுறை அறிவித்தது மத்திய அரசு. ஆனால், பாலமுருகன் மட்டும் விடுமுறை ஏதும் எடுக்காமல் அன்று முழுவதும் அலுவலகத்தில் பணிபுரிந்தார். எனக்கு விடுமுறை வேண்டாம். என் அலுவலகம் வழக்கம்போல செயல்படும் என அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும் மத்திய வருவாய்த்துறைச் செயலாளருக்கும் அவர் கடிதமும் எழுதினார்.

    இதனையடுத்து அவர், பணி ஓய்வுக்கு இரண்டு நாள்கள் முன்னதாக சஸ்பெண்ட் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஒ.பி.எஸ். மூன்று முறை முதல்வராக இருந்தவர், இன்று கட்சியின் வேட்டியை கூட கட்ட முடியவில்லை.
    • அம்மாவின் ஆன்மா இந்த தேர்தல் முடிந்த பின் அரசியலை விட்டே போகும் நிலைக்கு செல்லும் நிலையை உருவாக்கும்.

    திருமங்கலம்:

    அ.தி.மு.க. முன்னாள் அமைச்சரும், தற்போதைய சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவருமான ஆர்.பி.உதயகுமார் உசிலம் பட்டியில் இன்று நடந்த கூட்டத்தில் பேசியதாவது:-

    தாய்மார்களுக்கு 3 ஆயிரம் ரூபாய் என்ற அ.தி.மு. க.வின் தேர்தல் அறிக்கை இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்துள்ளது. நீங்கள் அதே அறிவிப்பை வெளியிட்ட போது எந்த இடத்திலும் பேசப்படவில்லை. ஏனென்றால் பொய்யான வாக்குறுதியை அளிப்பார்கள் என மக்கள் நம்பவில்லை. ஆனால் அ.தி.மு.க. அதே அறிவிப்பை கொடுக்கும் போது பேசப்படுகிறது.

    ஒ.பி.எஸ். மூன்று முறை முதல்வராக இருந்தவர், இன்று கட்சியின் வேட்டியை கூட கட்ட முடியவில்லை, கட்சி பெயரை பயன்படுத்த முடியவில்லை. என்ன பாவம், என்ன துரோகம் செய்துள்ளார் என யோசித்து பார்த்தபோது அம்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது அப்போது முதல்வராக இருந்தவர் அதிகாரத்தை கையில் வைத்திருந்தவர் வெளிநாட்டிற்கு கூட கொண்டு சென்று காப்பாற்றி இருக்கலாம். ஆனால் மவுன சாமியாராக இருந்துவிட்டார்.

    அதனாலேயே பாவம் ஏற்பட்டு அம்மாவின் ஆன்மா வஞ்சிக்கிறதோ என தெரிகிறது. எம்.ஜி.ஆர்., அம்மா என முதல்வராக இருந்த யாருக்கும் இந்த நிலை இல்லை. இன்று வீதியில் நின்று ஒரே ஒரு சீட்டுக்காக சென்றிருக்கிறார். சின்னத்திற்காக அது வேண்டும், இது வேண்டும் என கேட்கிறார்.

    அம்மா உயிர் பறிபோக நீங்கள் தான் காரணம். அம்மாவின் ஆன்மா இந்த தேர்தல் முடிந்த பின் அரசியலை விட்டே போகும் நிலைக்கு செல்லும் நிலையை உருவாக்கும். ஜெயலலிதாவின் ஆன்மா ஓ.பி.எஸ்.சை வஞ்சிக்கிறது. அமைச்சர் மூர்த்திக்கு பயம் வந்துவிட்டது. இந்த தேர்தலில் தோற்றால் அமைச்சர் பதவியையும், மாவட்ட செயலாளர் பதவியையும் ராஜினாமா செய்கிறேன் என சொல்கிறார். தேர்தல் ரிசல்ட் வரை வேண்டாம் நாளைக்கே ராஜினாமா செய்யுங்கள். நீங்கள் வெற்றி பெற போவது இல்லை. துரோகம் செய்தவர்களுக்கு தக்க பாடத்தை தொண்டர்கள் காட்ட வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • டி.எச்.ரோடு டோல்கேட் மெட்ரோ அருகே தேர்தல் பறக்கும் படை அதிகாரி தேவராஜ் தலைமையில் அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
    • சுரேசிடம் இருந்த ரூ.6 லட்சம் 38 ஆயிரத்தை தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்து கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

    ராயபுரம்:

    பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் பறக்கும்படையினர் சோதனை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. புதுவண்ணாரப்பேட்டை டி.எச்.ரோடு டோல்கேட் மெட்ரோ அருகே தேர்தல் பறக்கும் படை அதிகாரி தேவராஜ் தலைமையில் அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அவ்வழியே மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரை நிறுத்தி சோதனை செய்தபோது கட்டுகட்டாக ரூ.6 லட்சம் 38 ஆயிரம் பணம் இருந்தது. விசாரணையில் அவர், திருவொற்றியூர் தேரடி துலுக்கானம் தெருவை சேர்ந்தவர் சுரேஷ் என்பதும் தனியார் வங்கியில் ஏஜெண்டாக பணியாற்றும் அவர் லோன் கட்ட வேண்டிய நபர்களிடம் இருந்து பணத்தை வசூல் செய்து வந்ததும் தெரிய வந்தது.

    ஆனால் அவர் வைத்திருந்த பணத்திற்கு உரிய ஆவணங்கள் இல்லை. இதைத்தொடர்ந்து சுரேசிடம் இருந்த ரூ.6 லட்சம் 38 ஆயிரத்தை தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்து கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

    இதேபோல் டோல்கேட் பஸ் நிறுத்தம் அருகே தேர்தல் பறக்கும் படை அதிகாரி பழனி தலைமையில் சோதனையில் ஈடுபட்டபோது ஏழுகிணறு சீனிவாசஐயர் தெருவை சேர்ந்த சந்திரசேகர் என்பவரிடம் இருந்து ரூ.78 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ராமநாதபுரம் தொகுதியில் முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் சுயேட்சை சின்னத்தில் போட்டியிடுகிறார்
    • இந்தியா கூட்டணி சார்பில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி வேட்பாளர் நவாஸ் கனி போட்டியிடுகிறார்

    பாராளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயகக்கூட்டணியில் அங்கும் வகிக்கும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ராமநாதபுரம் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இத்தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக களமிறங்கும் ஓ. பன்னீர்செல்வம் சுயேட்சை சின்னத்தில் போட்டியிடுகிறார்.

    இதையடுத்து ஓ.பன்னீர்செல்வம் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளார். நிர்வாகிகளுடன் சென்று தேர்தல் நடத்து அதிகாரியிடம் வேட்பு மனுவை ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.

    ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி வேட்பாளர் நவாஸ் கனி, அ.தி.மு.க. சார்பில் ஜெயபெருமாள் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

    இந்நிலையில், ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர்செல்வம் என்ற பெயரில் மேலும் 4 சுயேட்சை வேட்பாளர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு எதிராக மதுரை உசிலம்பட்டியை சேர்ந்த ஓ.பன்னீர்செல்வம் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார். இந்நிலையில், இன்று ஓ பன்னீர்செல்வம் பெயர் கொண்ட 3 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

    ஓ.பன்னீர் செல்வம் என்ற பெயரில் 5 வேட்பாளர்கள் சுயேச்சை சின்னத்தில் போட்டியிட இருப்பதால் ராமநாதபுரம் வாக்காளர்களுக்கு கடும் குழப்பம் ஏற்பட வாய்ப்புள்ளது.

    • திருவண்ணாமலையில் ரூ. 38 கோடி மதிப்பில் புதிய பஸ் நிலையம் கட்டப்பட்டு வருகிறது.
    • இந்தியா கூட்டணி வெற்றி பெற்று மத்தியில் ஆட்சி அமைத்தால் தினமும் திருவண்ணாமலையில் இருந்து சென்னைக்கு ரெயில் இயக்கப்படும்

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை காந்தி சிலை அருகில் இன்று காலை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:

    திருவண்ணாமலையில் ரூ. 38 கோடி மதிப்பில் புதிய பஸ் நிலையம் கட்டப்பட்டு வருகிறது. திருவண்ணாமலை நகர மக்களின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய 56 கோடி ரூபாய் செலவில் சாத்தனூர் அணையில் இருந்து ராட்சத குழாய் மூலம் தண்ணீர் கொண்டுவரும் பணி நடைபெற்று வருகிறது.

    தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்று மத்தியில் ஆட்சி அமைத்தால் தினமும் திருவண்ணாமலையில் இருந்து சென்னைக்கு ரெயில் இயக்கப்படும். திருவண்ணாமலை-திருப்பத்தூருக்கு ரெயில் சேவை வழங்கப்படும்.

    புதியதாக அமைய உள்ள சுங்கச்சாவடி ரத்து செய்யப்படும். கடந்த 2014-ம் ஆண்டு சமையல் கியாஸ் சிலிண்டர் விலை 450 ரூபாயாக இருந்தது. இன்று சிலிண்டர் விலை 1,200 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

    தற்போது 100 ரூபாய் குறைப்பு என்ற நாடகத்தை மோடி அரசு நடத்தி உள்ளது. மீண்டும் மோடி ஆட்சிக்கு வந்தால் கியாஸ் சிலிண்டர் மீது 500 ரூபாய் விலையை ஏற்றி விடுவார்.

    அவர்களின் நாடகத்தை மக்கள் நம்பாதீர்கள், இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் கியாஸ் சிலிண்டர் விலை 500 ரூபாயாக குறைக்கப்படும். 75 ரூபாய்க்கு ஒரு லிட்டர் பெட்ரோலும், 65 ரூபாய்க்கு ஒரு லிட்டர் டீசலும் வழங்கப்படும்.

    ஜூன் 3-ந் தேதி முன்னாள் முதல் அமைச்சர் கருணாநிதியின் 101-வது பிறந்தநாள், ஜூன் 4-ந் தேதி தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாள்.

    கருணாநிதியின் பிறந்தநாள் பரிசாக 40-க்கு 40 என்ற மகத்தான வெற்றி இலக்கை அடைய அனைவரும் அயராது உழைப்போம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சவுமியா அன்புமணி வாரிசு அரசியலில் வர மாட்டார். அவருக்கு தகுதி இருப்பதாகவே பார்க்கிறேன்
    • அன்புமணி ராமதாஸ்- சவுமியாவின் மகள் சங்கமித்ராவின் திருமணம் கடந்த 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்றது

    பாஜக கூட்டணியில் உள்ள பாமக, தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடுகிறது. அந்த தொகுதியின் வேட்பாளராக பாமக தலைவர் அன்புமணி ராமதாசின் மனைவியும், பசுமை இயக்கத்தின் நிர்வாகியுமான சவுமியா அன்புமணி போட்டியிடுகிறார்.

    இந்நிலையில், கோவை தொகுதி பாஜக வேட்பாளராக அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவரிடம், சவுமியா அன்புமணி வாரிசு அரசியலில் வருவாரா?, மாட்டாரா? என்ற கேள்வியை பத்திரிகையாளர்கள் கேட்டனர்.

    அதற்கு பதில் அளித்த அண்ணாமலை, சவுமியா அன்புமணி வாரிசு அரசியலில் வர மாட்டார். அவருக்கு தகுதி இருப்பதாகவே பார்க்கிறேன் என தெரிவித்தார். பசுமை இயக்கத்துக்கு அவர் வேலை செய்து இருக்கிறார். அவர் ஒன்றும் 24 வயதில் சீட் கேட்கவில்லை,30 வயதில் சீட் கேட்கவில்லை,35 வயதில் சீட் கேட்கவில்லை,50 வயதிலும் சீட் கேட்கவில்லை என தெரிவித்தார். சௌமியா அன்புமணிக்கு குழந்தை பிறந்து, அந்த குழந்தைக்கு திருமணம் ஆகி குழந்தை பிறந்து, அந்த குழந்தைக்கும் திருமணமான பின்புதான் அரசியலுக்கே வந்துள்ளார் என்று குழப்பமான பதிலை கூறினார்.

    இவரது பேச்சை கேட்டு, அங்கு கூடியிருந்த பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் சிரிக்க தொடங்கினர்.

    மேலும், கே.என்.நேரு பையனையும், டி.ஆர்.பி.ராஜாவையும் தயவு செய்து சவுமியா அன்புமணியுடன் ஒப்பிட வேண்டாம் எனவும் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

    பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்- சவுமியாவின் மகள் சங்கமித்ராவின் திருமணம் கடந்த 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்றது. சவுமியா அன்புமணியின் மகளுக்கு திருமணம் நடைபெற்ற நிலையில், பேத்திக்கு திருமணம் நடைபெற்றது என்று அண்ணாமலை மாற்றி கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    • சென்னையின் பல்வேறு பகுதிகளிலிருந்து வரும் பார்வையாளர்கள் மாநகர பஸ்களில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான நுழைவுச் சீட்டை காண்பித்து இலவசமாகப் பயணிக்கலாம்.
    • எண்ணூர், மீஞ்சூர், மூலக்கடை, காரனோடை செல்லும் பஸ்கள் சென்னை பல்கலைக்கழக பஸ் நிறுத்தத்தில் இருந்து இயக்கப்படும்.

    சென்னை:

    மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் ஆல்பி ஜான் வர்கீஸ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    சென்னையில் 2024-ம் ஆண்டுக்கான ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள், சேப்பாக்கம் சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்று வருகின்றன. இதற்கு வரும் மக்களின் நலன் கருதி சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் நிறுவனத்திடம் இருந்து மாநகர போக்குவரத்துக் கழகம் உரிய பயண கட்டணம் பெற்று சில முன் ஏற்பாடுகளைச் செய்து உள்ளது.

    அதன்படி, பயணிகள் கிரிக்கெட் போட்டிக்கான நுழைவுச் சீட்டு வைத்திருந்தால் அதை நடத்துனரிடம் காண்பித்து மாநகர போக்குவரத்துக் கழக பஸ்களில் போட்டி நடைபெறும் நேரத்துக்கு 3 மணி நேரத்துக்கு முன்பும், போட்டி முடிந்த பின்னர் 3 மணிநேரத்துக்கும் பஸ்களில் பயணிக்க அனுமதி வழங்கப்படுகிறது.

    அதன்படி இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறும் ஐ.பி.எல். கிரிக் கெட் போட்டிக்கும் மாநகர பஸ்களை இயக்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. சென்னையின் பல்வேறு பகுதிகளிலிருந்து வரும் பார்வையாளர்கள் மாநகர பஸ்களில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான நுழைவுச் சீட்டை காண்பித்து இலவசமாகப் பயணிக்கலாம்.

    இதற்காக பல பஸ்களைப் பயன்படுத்தியும் மைதானத்துக்கு வந்தடையலாம்.

    போட்டி முடிந்த பின்பு அடையாறு, மந்தவெளி, கோட்டூர்புரம், திருவான்மியூர், ஈஞ்சம்பாக்கம், கோவளம், பெரும்பாக்கம், சோழிங்கநல்லூர், கேளம்பாக்கம், திருப்போரூர் செல்லும் பஸ்கள் அண்ணா சதுக்கம் பஸ் நிலையத்தில் இருந்து இயக்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    அதேபோல பாரீஸ் கார்னர், சென்னை கடற்கரை, ராயபுரம், தண்டையார்பேட்டை, திருவொற்றியூர், மணலி, எண்ணூர், மீஞ்சூர், மூலக்கடை, காரனோடை செல்லும் பஸ்கள் சென்னை பல்கலைக்கழக பஸ் நிறுத்தத்தில் இருந்து இயக்கப்படும்.

    ராயப்பேட்டை, மந்தவெளி, நந்தனம், சைதாப்பேட்டை, வேளச்சேரி, மடிப்பாக்கம், மேடவாக்கம், கிண்டி, பல்லாவரம், தாம்பரம், எழும்பூர், கோயம்பேடு, பெரம்பூர், அண்ணாநகர் ஆகிய இடங்களுக்குச் செல்லும் பஸ்கள் ஓமந்தூரார் அரசு மருத்துவமனை அருகில் இருந்து இயக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • 10 நாள் உற்சவம் நடைபெறுவது வழக்கம்.
    • தினமும் நில மங்கை தாயாருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது.

    மாமல்லபுரம் தலசயன பெருமாள் கோவிலில் பெருமாள், நிலமங்கை தாயார், ஆண்டாள், பூதத்தாழ்வார், நரசிம்மர், ராமன், சீதை, லட்சுமணன், ஆஞ்சநேயர், கருடன் ஆகியோருக்கு தனித்தனியாக சன்னதிகள் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு 10 நாள் உற்சவம் நடைபெறுவது வழக்கம்.

    கடந்த 16ந் தேதி பங்குனி உத்திர உற்சவம் வெகு விமரிசையாக தொடங்கியது. இதனைத் தொடர்ந்து, தினமும் நில மங்கை தாயாருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. பின்னர், கோவில் உள் பிரகாரத்தில் நிலமங்கை தாயார் சுற்றி வந்து ஊஞ்சல் சேவை நடைபெற்று, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டு வந்தது.

    இந்த நிலையில், பங்குனி உத்திரம் நிறைவு நாளான நேற்று காலை பட்டாச்சாரியார்கள் மூலம் யாகம் வளர்த்து பெருமாள், தாயார், பூதத்தாழ்வாருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் திருமஞ்சனம் செய்யப்பட்டது., இதையடுத்து, மாலை 6 மணிக்கு நான்கு ராஜவீதிகள் வழியாக ஸ்ரீதேவி, பூ தேவியுடன், திருவீதி உலாவந்து தலசயன பெருமாள், நிலமங்கை தாயாருக்கு மாலை மாற்றிய திருக்கல்யாணம் வைபவம் நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள், சுற்றுலா பயணிகள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • பொய் சொல்வதை முதலில் நிறுத்துங்கள் என்றும் நிர்வாகிகளை கடிந்து கொண்டார்.
    • தேனி தொகுதியில் போட்டி கடுமையானதாக இருக்கும் என்பது கட்சியினர் இடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

    பாராளுமன்ற தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ள நிலையில் மாநிலம் முழுவதும் பிரசாரங்களும்களை கட்டி வருகிறது.

    2019ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணி 38 இடங்களில் அபார வெற்றி பெற்றது. மீதமுள்ள ஒரு தொகுதி தேனி ஆகும்.

    இந்த தொகுதியில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் போட்டியிட்டார். அவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் போட்டியிட்டார்.

    2019ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் ரவீந்திரநாத் 4,99,354 வாக்குகள் பெற்றார். காங்கிரசின் இளங்கோவன் 4,23,035 வாக்குகள் பெற்றார். இதன்மூலம் 76,319 வாக்குகள் வித்தியாசத்தில் ரவீந்திரநாத் குமார் வெற்றி பெற்றார்.

    இந்நிலையில் நடைபெற இருக்கும் பாராளுமன்ற தேர்தலில் தேனி தொகுதியில் திமுக சார்பில் தங்க தமிழ்செல்வனும், அதிமுக சார்பில் நாராயணசாமியும், அமமுக சார்பில் டிடிவி தினகரனும், நாம் தமிழர் சார்பில் மதன் ஜெயபாலும் வேட்பாளர்களாக களம் இறங்குகிறார்கள். இதை தொடர்ந்து இந்த முறையும் தேனி தொகுதியில் போட்டி கடுமையானதாக இருக்கும் என்பது கட்சியினர் இடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இந்நிலையில் மதுரை அலங்காநல்லூரில் சோழவந்தான் சட்டமன்ற தொகுதி தி.முக. நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் அமைச்சர் மூர்த்தி பேசியதாவது,

    திமுக பாராளுமன்ற தேர்தலில் தேனி மாவட்ட திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் வெற்றி பெற வேண்டும் என்றும், அதிகப்படியான வாக்குவித்தியாசத்தில் வெற்றி பெறவில்லை என்றால் தனது பதவியை அடுத்த நாளே ராஜினாமா செய்கிறேன் என்று கூறினார்.

    நிர்வாகிகள் கூட்டத்தில் வெளியில் இருந்து பெண்களை அழைத்து வந்ததை சுட்டிக்காட்டி பேசிய அமைச்சர் மூர்த்தி செல்போனில் அரசியல் தேவையில்லை என்றும், மக்களை நேரில் சந்தியுங்கள் என்றும், செல்போனில் அரசியல் செய்தால் எப்படி உருப்படும் என்றும், பொய் சொல்வதை முதலில் நிறுத்துங்கள் என்றும் நிர்வாகிகளை கடிந்து கொண்டார்.

    ×