என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • இந்தியாவிற்கென தனிக்கட்சி தேவையில்லை. மாநிலக் கட்சிகளே போதும்.
    • காமராஜர், முத்துராமலிங்கத்தேவர், கக்கன், வ.உ.சி ஆகியோர் வழியில் வந்த நாம் தூய அரசியலை உருவாக்க நாம் தமிழருக்கு ஆதரவளிக்க வேண்டும்.

    ஆலங்குளம்:

    நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    இந்த தேர்தலில் வெற்றி என்பது ஒரு சாதாரண நிகழ்வல்ல. உங்கள் பிள்ளைகள் எங்களின் வெற்றி என்பது வரலாற்றிலே மாபெரும் புரட்சி என்பதை நினைவில் வைத்துக் கொண்டு நீங்கள் இந்த தேர்தலில் எங்களுக்கு வாக்கு செலுத்த வேண்டும்.

    ஒன்றிய அரசு மாநிலத்தின் மொத்த வருமானத்தையும் தன்னகத்தே வைத்துக் கொண்டு, மாநிலங்கள் மீது அதிகாரத்தை செலுத்த முயலுகின்றது. அதிகாரம் பரவலாக வேண்டும் என்பது தான் நம்முடைய நோக்கம்.

    மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தின் தன்னாட்சி என்பதுதான் நம்முடைய இலக்கு. இந்தியாவிற்கென தனிக்கட்சி தேவையில்லை. மாநிலக் கட்சிகளே போதும்.

    அப்படியென்றால் இந்தியாவை யார் ஆள்வது என்ற கேள்வி எழுகிறது. வெற்றி பெறும் மாநிலக் கட்சிகள் சுழற்சி முறையில் இந்தியாவை ஆள வேண்டும். அதுதான் மிகச்சிறந்த ஜனநாயகமாக இருக்க முடியும்.

    பேரிடர் காலங்களில் ஆடு, மாடு போன்றவற்றை இழந்து நிற்கும் நேரங்களில் நம்முடைய வாழ்க்கையை பற்றி சிந்திக்காத பா.ஜ.க.விற்கு நமது வாக்கை செலுத்தக்கூடாது.

    இது மற்றவர்களுக்கு தேர்தல் களம், நமக்கு போர்க்களம். இந்த போர்க்களத்தில் அண்ணன், தம்பி, சித்தப்பா, பெரியப்பா, மாமன் என வேறுபாடு பார்க்க கூடாது. உடலோடு ஒட்டிப்பிறந்த அண்ணன், தம்பியாக இருந்தால் கூட லட்சியத்திற்காக வென்றால் வெட்டி வீசுவதுதான் சரியான அணுகுமுறையாக இருக்கும். பெற்ற தாய் தந்தையரே வந்தால் கூட எதிரிகள் தான்.

    காமராஜர், முத்துராமலிங்கத்தேவர், கக்கன், வ.உ.சி ஆகியோர் வழியில் வந்த நாம் தூய அரசியலை உருவாக்க நாம் தமிழருக்கு ஆதரவளிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • ராகுல் காந்தி ஒரே நாளில் 3 இடங்களில் பிரசார கூட்டங்களில் பேசும் வகையில் பயண திட்டம் தயாரித்துள்ளனர்.
    • அடுத்த வார இறுதியில் இருந்து ஒவ்வொருவராக வர இருக்கிறார்கள்.

    சென்னை:

    தமிழகத்தில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்ட காங்கிரஸ் தலைவர் ராகுல், பிரியங்கா, முன்னாள் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் கார்கே ஆகிய மூவரும் வர இருப்பதாக காங்கிரஸ் தரப்பில் கூறப்பட்டது. அடுத்த வார இறுதியில் இருந்து ஒவ்வொருவராக வர இருக்கிறார்கள்.

    ராகுல் காந்தி ஒரே நாளில் 3 இடங்களில் பிரசார கூட்டங்களில் பேசும் வகையில் பயண திட்டம் தயாரித்துள்ளனர். ராகுல் செல்ல முடியாத இடங்களுக்கு பிரியங்காவும், அதேபோல் கார்கேவும் செல்வார்கள். தமிழகம் முழுவதும் இவர்கள் செல்லும் வகையில் பயண திட்டங்களை தயார் செய்து டெல்லி தலைமைக்கு அனுப்பி இருக்கிறார்கள். தலைவர்கள் வருகைக்கான தேதி உறுதியானதும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று காங்கிரஸ் நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

    • இது குறித்து ராமுத்தாய் தல்லாக்குளம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
    • போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து பல்வேறு இடங்களில் தீவிரமாக தேடி வந்த நிலையில் தற்போது கைது செய்துள்ளனர்.

    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள குளிச்சிபட்டியைச் சேர்ந்தவர் ராமுத்தாய் (வயது 72). இவருக்கு 3 மகன்கள் உள்ளனர். முதல் மகன் நடராஜன். கப்பலில் என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சொந்தமான வீடு மதுரை ஆத்திகுளம் குறிஞ்சி நகரில் உள்ளது.

    இந்த வீட்டில்தான் ராமுத்தாய் தங்கி இருந்தார். நடராஜன் அனுப்பிய ரூ.15 கோடியே 62 லட்சத்து 35 ஆயிரத்து 236 பணம் ராமுத்தாயின் சகோதரி மகன் பாலமுருகனின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது. அதன் மூலம் மதுரை, சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சொத்துக்கள் வாங்கப்பட்டது.

    இந்த சொத்துக்களுக்கு பாலமுருகன் காப்பாளராக நியமிக்கப்பட்டு இருந்தார். மேலும் ராமுத்தாய் வசம் இருந்த நகை மற்றும் சொத்துக்களை பாலமுருகன் மற்றும் அவரது மனைவி சேர்ந்து வெற்றுத்தாளில் கையெழுத்து போடுமாறு மிரட்டி வந்துள்ளனர். இதனால் ராமுத்தாய் சொத்து ஆவணங்கள் அனைத்தையும் மதுரையில் உள்ள முகவரிக்கு மாற்றியுள்ளார்.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு மதுரைக்கு வந்த பாலமுருகன் மற்றும் அவரது மனைவி ஜெயலட்சுமி ஆகியோர் ராமுத்தாயிடம் துப்பாக்கி முனையில் மிரட்டி கோடிக்கணக்கான சொத்துக்கள் மற்றும் ரூ.1000 பவுன் தங்கம், வைர நகைகளை பறித்துக் கொண்டு ஓடி விட்டனர்.

    இது குறித்து ராமுத்தாய் தல்லாக்குளம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். மேலும் நிலக்கோட்டை போலீஸ் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டு இந்த வழக்கு மதுரை மாவட்ட குற்றப்பிரிவுக்கும் மாற்றப்பட்டது. போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து பல்வேறு இடங்களில் தீவிரமாக தேடி வந்த நிலையில் தற்போது கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட பாலமுருகன் என்ற வைகை பாலன் ஓ.பி.எஸ். அணியின் திண்டுக்கல் மேற்கு மாவட்ட செயலாளராக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தலைமறைவாக உள்ள இவரது மனைவியை தேடி வருகின்றனர்.

    • மகளும், மனைவியும் தூக்கு போட்டு தற்கொலை செய்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
    • ஒரே நாளில் மகளும், தாயும் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள மாரனேரி போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட அம்மாபட்டியைச் சேர்ந்தவர் பாலமுருகன், கட்டிட தொழிலாளி. இவரது மனைவி பாப்புக்குட்டி (வயது 41), பட்டாசு ஆலையில் வேலை பார்த்து வருகிறார்.

    இவர்களுக்கு ஐஸ்வர்யா (19), இந்துமதி (13) என்ற 2 மகள்களும், அருண்குமார் (10) என்ற மகனும் உள்ளனர். இதில் இந்துமதி அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார்.

    கடந்த சில நாட்களாக அவர் பள்ளிக்கு செல்லவில்லை என கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று பாலமுருகன் வேலைக்கு சென்று விட ஐஸ்வர்யா, அருண் குமாரும் வழக்கம்போல் பள்ளிக்கு புறப்பட்டனர்.

    பள்ளிக்கு செல்லாமல் இந்துமதி மட்டும் வீட்டில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனை பாப்புக்குட்டி கண்டித்துள்ளார். இதனால் இந்துமதி விரக்தி அடைந்துள்ளார்.

    சிறிது நேரத்திற்கு பின் பாப்புக்குட்டி வெளியே சென்று விட்டார். அப்போது வாழ்க்கையில் வெறுப்படைந்த இந்துமதி வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். வெளியே சென்று விட்டு வீட்டுக்கு வந்த பாப்பு குட்டி மகள் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    தான் கண்டித்ததால் மகள் விபரீத முடிவை எடுத்து விட்டதாக நினைத்து பாப்புக்குட்டி கலங்கினார். மகள் சாவுக்கு காரணமாகி விட்டோமே என நினைத்து மனம் வருந்திய பாப்புக்குட்டி தனது கணவருக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்தார். அப்போது நான் இனிமேல் உயிருடன் இருக்க மாட்டேன் என்று கூறிவிட்டு செல்போன் இணைப்பை துண்டித்தார்.

    பின்னர் மகள் அருகிலேயே பாப்புக்குட்டியும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதற்கிடையே மனைவி கூறியதை கேட்டு பதட்டம் அடைந்தார். மேலும் அக்கம்பக்கத்தில் வசிப்பவர்களுக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்து மனைவியை காப்பாற்ற முயன்றார். ஆனால் அவர்கள் யாரும் செல்போனை எடுக்காததால் பாலமுருகன் அவசரம், அவசரமாக வீட்டிற்கு வந்தார்.

    அப்போது மகளும், மனைவியும் தூக்கு போட்டு தற்கொலை செய்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து மாரனேரி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து தாய், மகளின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே நாளில் மகளும், தாயும் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • விடுதியின் உரிமையாளரான அசோக் குமார் தப்பி ஓடி தலைமறைவாகிவிட்டார்.
    • மேக்ஸ், லவ்லி ஆகிய இருவரும் மேசையை துடைத்து சுத்தம் செய்து கொண்டிருந்தனர்.

    சென்னை:

    சென்னை ஆழ்வார்பேட்டை சேமியர்ஸ் சாலையில் உள்ள தனியார் மதுபான விடுதியில் நேற்று மாலை 6.45 மணி அளவில் முதல் மாடியின் மேல்தளம் திடீரென இடிந்து விழுந்தது.

    இதில் கட்டிட இடிபாட்டில் சிக்கி மணிப்பூர் மாநிலத்தை சேர்ந்த மேக்ஸ் என்ற வாலிபர், திருநங்கை லவ்லி மற்றும் திண்டுக்கல்லை சேர்ந்த சைக்ளோன் ராஜ் ஆகிய 3 பேர் உயிரிழந்தனர்.

    கட்டிடம் இடிந்து விழுந்தபோது டமார் என்று பயங்கர சத்தம் கேட்டுள்ளது. இதனால் அப்பகுதி முழுவதுமே அதிர்வலைகள் ஏற்பட்டுள்ளன. இதுபற்றி தகவல் கிடைத்ததும் தென்சென்னை போலீஸ் கூடுதல் கமிஷனர் பிரேமானந்த் சின்கா, இணை கமிஷனர் சிபி சக்ரவர்த்தி மற்றும் போலீஸ் அதிகாரிகள் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    மதுபான விடுதி கட்டிடம் இடிந்தது தொடர்பாக அபிராமபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 304-ஐ.பி.சி. சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    மதுபான விடுதி விபத்து தொடர்பாக 12 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இவர்களில் விடுதி மேலாளர் சதீஸ் கைது செய்யப்பட்டுள்ளார்.

    அவரிடம் கட்டிடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தது தொடர்பாக போலீசார் அதிரடியாக விசாரணை நடத்தி வருகிறார்கள். மற்ற 11 பேர் மீதும் போலீசார் நடவடிக்கை எடுக்க உள்ளனர். விடுதியின் உரிமையாளரான அசோக் குமார் தப்பி ஓடி தலைமறைவாகிவிட்டார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    கட்டிடம் இடிந்து விபத்து நடைபெற்ற பகுதியில் மெட்ரோ ரெயில் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் மதுபான விடுதி கட்டிடத்தில் விரிசல் ஏற்பட்டு விபத்து நடந்திருக்கலாம் என்றே முதலில் கருதப்பட்டது. ஆனால் இதனை மெட்ரோ ரெயில் அதிகாரிகள் மறுத்து உள்ளனர்.

    நாங்கள் இன்னும் மெட்ரோ ரெயில் பணிக்காக சுரங்கத்தில் துளைபோடும் பணியை தொடங்கவே இல்லை என்றும், எனவே கட்டிட விபத்துக்கு மெட்ரோ ரெயில் பணிகள் காரணம் இல்லை என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

    மதுபான விடுதி கட்டிடம் இடிந்து விழுந்தபோது அதனை அங்கிருந்த ஊழியர்கள் சிலர் நேரில் பார்த்து அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர்.

    இதுபற்றி மணிப்பூர் மாநிலத்தை சேர்ந்த துவாம் என்ற வாலிபர் கூறியதாவது:-

    மாலை 3 மணியில் இருந்து 6.45 மணி வரை மதுபான விடுதியில் வேலை செய்யும் 15 பேர் ஓய்வுக்காக சென்றிருந்தனர். இருப்பினும் 14 பேர் வரை மதுபான கூடத்தில் இருந்தோம். மதுபான விடுதிக்கு வெளியில் இருந்து வாடிக்கையாளர்கள் வர தொடங்கினார்கள்.

    இதனால் மேக்ஸ், லவ்லி ஆகிய இருவரும் மேசையை துடைத்து சுத்தம் செய்து கொண்டிருந்தனர். சைக்ளோன் ராஜ் அவர்களை மேற்பார்வையிட்டுக் கொண்டிருந்தார்.

    இந்த நேரத்தில் திடீரென மேற்கூரை இடிந்து விழுந்து 3 பேரும் சிக்கிக் கொண்டனர். இடிபாடுகளில் சிக்கி கிடந்த அவர்களை எங்களால் மீட்க முடியவில்லை.

    இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் தவியாய் தவித்தோம். எங்கள் கண்முன்னே எல்லாம் ஒரு நொடியில் முடிந்து போய் விட்டது. கட்டிடம் இடிந்து விழுந்த இடத்தின் அருகில் நின்று கொண்டிருந்த வாடிக்கையாளர்கள், மற்ற ஊழியர்கள் எல்லாம் வெளியில் அலறியடித்து ஓடிவிட்டனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இரவு 10 மணி அளவில் கட்டிடம் இடிந்து விழுந்திருந்தால் நூற்றுக்கணக்கானோர் விடுதியில் மதுபோதையில் இருந்திருப்பார்கள். இதனால் உயிர்சேதம் அதிகரித்திருக்கும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

    மதுபான விடுதியில் மேற்கூரை இடிந்து விழுந்ததற்கான காரணம் என்ன? என்பது தெரியவில்லை. மெட்ரோ ரெயில் பணிகள் விபத்துக்கு காரணம் இல்லை என்பது தெரியவந்துள்ள நிலையில் விதிகளை மீறி கட்டிடம் கட்டப்பட்டுள்ளதால் விபத்து நடந்துள்ளதா? என்கிற சந்தேகமும் ஏற்பட்டு உள்ளது.

    இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி மற்றும் சி.எம்.டி.ஏ. அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். சம்பந்தப்பட்ட மதுபான விடுதியில் உரிமையாளரிடம் இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    உயிரிழந்த 3 பேரின் உடல்களும் ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் இன்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. மதுபான விடுதியை பூட்டி அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.

    • ஈரோடு பாராளுமன்ற உறுப்பினர் கணேச மூர்த்தி மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
    • அமித்ஷா வருகை திருப்புமுனை தரும் வகையில் அமையும்.

    நாகர்கோவில்:

    மத்திய மந்திரி அமித்ஷா தேர்தல் பிரசாரம் செய்வதற்காக வருகிற 5-ந்தேதி குமரி மாவட்டத்திற்கு வருகிறார். இதுகுறித்து முன்னாள் மத்திய மந்திரியும், கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி பாரதிய ஜனதா வேட்பாளருமான பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஈரோடு பாராளுமன்ற உறுப்பினர் கணேச மூர்த்தி மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். தன்னுடைய வாழ்நாளை மக்களுக்காக அர்ப்பணித்து செயல்பட்ட அவர் இப்படிப்பட்ட முடிவை எடுத்துள்ளார். ஈரோடு தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கொடுக்காததால் இந்த முடியை எடுத்ததாக கூறுகிறார்கள்.

    ம.தி.மு.க. 2014-ம் ஆண்டு பாரதிய ஜனதா கூட்டணியில் இருந்தபோது அவர்களுக்கு விருதுநகர், ஈரோடு தொகுதியை நாங்கள் ஒதுக்கீடு செய்தோம். அவர்கள் கேட்காமலேயே அந்த தொகுதியை வழங்கினோம். தற்போது ஈரோடு தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கொடுக்காததால் இந்த மரணம் நிகழ்ந்துள்ளதாக கூறுகிறார்கள். இது கவலை தரக்கூடிய செய்தியாகும். இதற்கு தி.மு.க. காங்கிரஸ் கூட்டணி முழு பொறுப்பேற்க வேண்டும்.

    காங்கிரஸ் கட்சி வேட்பாளர் தொழிலதிபராக இருக்கலாம். ஆனால் அவர் வணிக நிறுவனங்கள் சார்பில் விளம்பரங்கள் தற்போது செய்யப்பட்டு வருகிறது. பல்வேறு இடங்களில் விளம்பரங்கள் செய்யப்பட்டுள்ளது. இதற்கு தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இந்த தேர்தல் மாவட்டத்தின் வளர்ச்சிக்காகவா, வீழ்ச்சிக்காகவா என்பதை உணர்ந்து மக்கள் வாக்களிக்க வேண்டும். கடந்த 5 ஆண்டுகளில் குமரி மாவட்டத்தில் எந்த ஒரு வளர்ச்சி திட்ட பணிகளும் நடைபெறவில்லை. ஜாதி, மதத்தை வைத்து அரசியல் செய்பவர்கள் இனி ஒன்றும் செய்ய முடியாது. குமரி மாவட்டம் வளர்ச்சி அடைய பா.ஜ.க.வுக்கு வாக்களிக்க மக்கள் தயாராகிவிட்டனர். 1.5 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் நான் வெற்றி பெறுவேன்.

    மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா வருகிற 5-ந்தேதி குமரி மாவட்டத்தில் பிரசாரம் செய்கிறார். அவர் ரோடு-ஷோ மூலமாக வாக்கு சேகரிக்கிறார். சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு நடைபெறும் ரோடு-ஷோ நிகழ்ச்சியில் ஏராளமான தொண்டர்களும் கலந்து கொள்ள உள்ளனர். அமித்ஷா வருகை திருப்புமுனை தரும் வகையில் அமையும்.

    டாரஸ் லாரிகளால் பொதுமக்கள் நாளுக்கு நாள் அவதிப்பட்டு வருகிறார்கள். அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கேரளாவில் இருந்து லாரிகள் மூலம் கழிவுகள் குமரி மாவட்டத்திற்கு கொண்டு வரப்படுகிறது. ஆனால் இங்கிருந்து வைரங்கள் கேரளாவுக்கு கொண்டு செல்லப்படுகிறது. குமரி மாவட்டத்தை உரக்கிடங்கு மாவட்டமாக மாற்றி உள்ளனர். இதற்கு மக்கள் நல்ல தீர்ப்பை வழங்க வேண்டும்.

    தி.மு.க.வை சேர்ந்தவர்களின் வாகனங்கள் பறக்கும்படைக்கு பயன்படுத்தப்படுகிறது. எனவே அதை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். பறக்கும் படை அதிகாரிகளின் வாகனங்களையும் சோதனை செய்ய வேண்டும்.

    ஜாதி, மதத்தை வைத்து காங்கிரஸ் கட்சி அரசியல் செய்கிறது. குமரி மாவட்டத்தை பிளவுபடுத்த தி.மு.க., காங்கிரஸ் முயற்சி மேற்கொள்கிறது. கனிமவள கடத்தலின்போது லாரி மோதி 6 பேர் பலியானார்கள். இதற்கு இந்த அமைச்சரோ, கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினரோ இரங்கல் எதுவும் தெரிவிக்கவில்லை.

    மாநிலம் விட்டு மாநிலம் செல்லும் கனிம வளங்களை மாநில அரசு நினைத்தால் மட்டுமே தடுக்க முடியும். நான் பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றால் கண்டிப்பாக உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். எந்த கட்சிக்கு எந்த சின்னம் ஒதுக்க வேண்டும் என்பது குறித்து தேர்தல் ஆணையம் தான் முடிவு செய்யும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பா.ஜ.க வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தின் மனு ஏற்கப்பட்டிருக்கிறது.
    • அ.தி.மு.க. வேட்பாளர் பசுபதி பெயரிலும் சுயேட்சையாக இன்னொரு பசுபதி போட்டியிடுகிறார்.

    வேலூர்:

    வேலூர் பாராளுமன்ற தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளராக புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம் போட்டியிடுகிறார்.

    வேட்பு மனு பரிசீலனையின் போது சண்முகம், சண்முகவேலு, சண்முகசுந்தரம் என்ற பெயரிலேயே மொத்தமாக 10 பேர் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதில் 9 வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது தெரியவந்தது.

    பா.ஜ.க வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தின் மனு ஏற்கப்பட்டிருக்கிறது. அவரைத் தவிர்த்து மற்ற அனைவருமே சுயேட்சை வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்.

    சத்துவாச்சாரியைச் சேர்ந்த சண்முகவேலு என்பவரின் மனு ஏற்கப்பட்டிருக்கிறது. வாணியம்பாடி அம்பலூர் கிராமத்தைச் சேர்ந்த ஏ.சி.சண்முகம் என்பவரும் மனுத்தாக்கல் செய்திருக்கிறார். தந்தை பெயர் சென்னப்பன் எனக் குறிப்பிட்டிருக்கிறார். இவரின் மனு ஏற்கப்பட்டிருக்கிறது.

    சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியைச் சேர்ந்த ஜி.சண்முகம் என்பவர் 2 மனு தாக்கல் செய்திருந்தார். அதில் ஒன்று நிராகரிக்கப்பட்டு, இன்னொன்று ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. அதேபோல, வாணியம்பாடி கிரிசமுத்திரத்தைச் சேர்ந்த பி.சண்முகம், வேலூர் அருகே உள்ள திருவலத்தைச் சேர்ந்த சண்முகசுந்தரம், வேலூர் சலவன்பேட்டையைச் சேர்ந்த கே.சண்முகம், வேலூர் விருப்பாட்சி புரத்தைச் சேர்ந்த ஜி.சண்முகம், வாணியம்பாடி புதூரைச் சேர்ந்த எம்.பி.சண்முகம் ஆகியோரின் மனுக்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

    அதேபோல், அ.தி.மு.க. வேட்பாளர் பசுபதி பெயரிலும் சுயேட்சையாக இன்னொரு பசுபதி போட்டியிடுகிறார்.

    • உப்பாறு அணைக்கு, பி.ஏ.பி திட்ட பாசன விரிவாக்கம் நடந்த பிறகு, உபரி நீரின் அளவு குறைந்தது.
    • கைகளில் கருப்பு கொடி ஏந்தி கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

    தாராபுரம்:

    திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அருகே உள்ளது உப்பாறு அணை. திருமூர்த்தி அணையின் உபரி நீரை சேமிக்கும் வகையில், இந்த அணை கட்டப்பட்டது. பல ஆண்டுகளுக்கு முன்னர் உபரி நீரால் பயன்பெற்று வந்த உப்பாறு அணைக்கு, பி.ஏ.பி திட்ட பாசன விரிவாக்கம் நடந்த பிறகு, உபரி நீரின் அளவு குறைந்தது.

    அதோடு, அணைக்கு மழைநீர் வரும் ஓடையில் பல இடங்களில் ஊராட்சி நிர்வாகங்களால் தடுப்பணைகள் கட்டப்பட்டதால், அணைக்கு வரக்கூடிய மழைநீரும் வராமல் போய்விட்டது. அணையின் நீராதாரங்கள் அழிக்கப்பட்டதால், உப்பாறு அணையால் பயனடைந்த 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்கள் பாதிக்கப்பட்டு வருகின்றன.

    இந்நிலையில், உப்பாறு அணையை நம்பியுள்ள விவசாயிகள், திருமூர்த்தி அணையில் இருந்து பி.ஏ.பி பாசன திட்டத்தில் உபரி நீரை திறந்துவிடக்கோரி, தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    விவசாயிகளின் போராட்டத்தால் உப்பாறு அணைக்கு தண்ணீர் தருவதாக நீர்வளத்துறை அதிகாரிகள் வாய்மொழியாக உறுதி அளித்தனர். ஆனால் கூறியவாறு தண்ணீர் திறக்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த உப்பாறு பாசன விவசாயிகள் மற்றும் நடுமரத்துப்பாளையம் பகுதி பொதுமக்கள் இன்று காலை வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    மேலும் கைகளில் கருப்பு கொடி ஏந்தி கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். இது குறித்த தகவல் அறிந்ததும் வருவாய் மற்றும் நீர்வளத்துறையினர், அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், கயல்விழி செல்வராஜ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.

    • ஜெயக்குமார் பனங்கிழங்கு வாங்குவதற்கு நீலா புஷ்பா வீட்டிற்கு அடிக்கடி சென்றுள்ளார்.
    • வெயிலில் சென்றதால் களைத்த அவர் திருட சென்ற வீட்டில் வாளியில் நிரப்பி வைக்கப்பட்டிருந்த தண்ணீரீல் குளித்துள்ளதும் தெரிய வந்தது.

    சாத்தான்குளம்:

    தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள தட்டார்மடத்தை அடுத்த சாலைபுதூர் அம்மன் கோவில் வடக்குத் தெருவை சேர்ந்தவர் சித்திரை. இவரது மனைவி நீலா புஷ்பா ( வயது 60).

    இவர்களுக்கு 3 மகன், ஒரு மகள் உள்ளனர். அவர்களுக்கு திருமணமாகி வெளியூர்களில் வசித்து வருகின்றனர். கணவர் இறந்து விட்டதால் நீலா புஷ்பா மட்டும் தனியாக வசித்து வந்தார். இவர் பனங்கிழங்குகள் வியாபாரம் செய்து வருகிறார்.

    சம்பவத்தன்று இவர் வியாபாரத்திற்கு சென்று விட்டு வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது ரூ.2 லட்சம் ரொக்கப்பணம், 3 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது.

    இதுகுறித்து அவர் தட்டார்மடம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் டி.எஸ்.பி. கென்னடி உத்தரவின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் டேவிட் தலைமையிலான தனிப்படையினர் விசாரணை நடத்தி வந்தனர். மேலும் சம்பவ இடத்தில் இருந்த சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில் திருட்டில் ஈடுபட்டது சாத்தான்குளம் அருகே உள்ள பண்டாரபுரத்தை சேர்ந்த ஜெயக்குமார் (40) என்பது தெரியவந்தது. மேலும் சில திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

    ஜெயக்குமார் பனங்கிழங்கு வாங்குவதற்கு நீலா புஷ்பா வீட்டிற்கு அடிக்கடி சென்றுள்ளார். அப்போது அவர் வீட்டில் தனியாக வசித்து வருவதையும், அங்கு நகை, பணம் இருப்பதையும் தெரிந்து கொண்டார். அதன்படி சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் நகை-பணத்தை கொள்ளையடித்துள்ளார்.

    மேலும் வெயிலில் சென்றதால் களைத்த அவர் திருட சென்ற வீட்டில் வாளியில் நிரப்பி வைக்கப்பட்டிருந்த தண்ணீரீல் குளித்துள்ளதும் தெரிய வந்தது. அவரிடம் இருந்து திருடிய நகை-பணத்தை பறிமுதல் செய்தனர்.

    • பாரம்பரிய மீனவ சமுதாய மக்கள் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கப்படுவார்கள். மீனவர்கள் நலன் காக்க தேசிய மீனவர்கள் நல வாரியம் அமைக்கப்படும்.
    • ஐபிஎல் விளையாட்டும் அ.தி.மு.க.வும் ஒன்று. அ.தி.மு.க.விலும் அத்தனை அணிகள் உள்ளன.

    சென்னை:

    அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று திருவள்ளூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து பொன்னேரியில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    இந்த உச்சி வெயிலை விட உக்கிரமான ஒன்றிய அரசை விரட்டியே ஆக வேண்டும் என்று இவ்வளவு எழுச்சியோடு கூடி இருக்கிறீர்களே... அதற்கு முதலில் நன்றி. கடந்த 2019 பாராளுமன்ற தேர்தலில் நான் இதே இடத்தில் பிரசாரத்தை மேற்கொண்டேன். அப்போது இதே தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளருக்கு 3 லட்சத்து 57 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றியை பெற்றுக் கொடுத்தீர்கள். ஆனால் இந்த முறை 3 லட்சத்து 57 ஆயிரம் வாக்குகள் போதாது.

    கடந்த முறை நமது எதிரிகள் ஒன்றாக சேர்ந்து வந்தார்கள். இன்று எல்லோரும் பிரிந்து நிற்கிறார்கள். எனவே குறைந்தது 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றியை கொடுக்க வேண்டும். நான் உங்களுக்கு ஒரு சவால் விடுகிறேன். குறைந்த பட்சம் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தால் மாதம் 2 நாள் நான் இங்கு வந்து திருவள்ளூர் தொகுதியில் தங்கி உங்களுடைய தொகுதியின் அனைத்து தேவைகளையும் முதல்-அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு சென்று நிறைவேற்றி தருவேன். நீங்கள் இதை செய்தால் எனது வாக்குறுதியை நான் காப்பாற்றுவேன். நீங்கள் எங்கள் வேட்பாளருக்கு போடும் வாக்கு, பிரதமர் மோடியின் தலையில் வைக்கும் வேட்டு.


    தலைவர் கலைஞர் ஒவ்வொரு தேர்தலின் போதும் தேர்தல் அறிக் கையை வெளியிட்டு சொல்வார். சொல்வதை செய்வோம், செய்வதைத்தான் சொல்வோம் என்று செய்து காட்டினார். அவரது வழியில் வந்த முதல்-அமைச்சரும் சொல்வதைத்தான் செய்வார். செய்வதைத்தான் சொல்வார். பொன்னேரி அரசு மருத்துவமனை அனைத்து வசதிகளுடன் முதல் தரமான மருத்துவமனையாக மாற்றி அமைக்கப்படும். அனைத்து குக்கிராமங்களுக்கும் பஸ் வசதி விரிவுபடுத்தப்படும். குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணப்படும். இந்த தொகுதியை சுற்றி உள்ள அனைத்து தொழிற்சாலைகளிலும் இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு 50 சதவீத வேலைவாய்ப்பை உறுதி செய்து தருவோம். மாதவரம் அல்லது விம்கோ நகரில் இருந்து மெட்ரோ ரெயில் சேவை மீஞ்சூர் வரை நீட்டிக்கப்படும். பாரம்பரிய மீனவ சமுகதாய மக்கள் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கப்படு வார்கள். மீனவர்கள் நலன் காக்க தேசிய மீனவர்கள் நல வாரியம் அமைக்கப்படும்.

    இயற்கை சீற்றம் ஏற்படும் நேரங்களில் ஆழ்கடலில் மீனவர்கள் மாயமாவதை தடுக்க தடையற்ற தொலை தொடர்பு வசதி ஏற்படுத்தி தரப்படும். இந்த வாக்குறுதிகளை முதல்-அமைச்சர் உங்களுக்கு கொடுத்து உள்ளார்.

    மகளிருக்கு கட்டண மில்லா பஸ் வசதி திட்டத்தை முதல்-அமைச்சர் கொடுத்தார். இங்கு வந்திருக்கும் மகளிரும் இதை பயன்படுத்துகிறீர்கள் தானே. இப்போது எங்கு பார்த்தாலும் பிங்க் நிற பஸ்தான். இன்னும் சொல்லப்போனால் நாம், பெண்களிடம் தான் கற்றுக்கொள்ள வேண்டும்.

    அரசு ஒரு திட்டத்தை செயல்படுத்தினால் அதை எந்த அளவுக்கு பயன்படுத்த வேண்டும் என்று பெண்களிடம் கற்றுக்கொள்ள வேண்டும். ஏனென்றால் இப்போது அவர்கள் தான் பஸ் உரிமையாளர்கள். எங்கு வேண்டுமானாலும் ஏறிக்கொள்ளலாம், எங்கு வேண்டுமானாலும் இறங்கிக்கொள்ளலாம். இந்த 3 வருடத்தில் 460 கோடி பயணங்களை மேற் கொண்டு இருக்கிறார்கள். இதை நகைச்சுவையாக சொல்லவில்லை. இதுதான் இந்த திட்டத்தின் வெற்றி. இதுதான் திராவிட மாடல் அரசு. இப்போது பிங்க் பஸ்சை தாய்மார்கள் ஸ்டாலின் பஸ் என்று தான் சொல்கிறார்கள்.

    எடப்பாடி பழனிசாமி யாரைப்பார்த்தாலும் முட்டி போட்டு விடுகிறார். பிரதமர் மோடியை பார்த்தால் படுத்து விடுகிறார். மனிதருக்கு முதுகெலும்பு நிமிர்ந்து நிற்கத்தான் கொடுக்கப்பட்டு உள்ளது. ஆனால் முதுகெலும்பு இல்லாத ஒரே மனிதர் எடப்பாடி பழனிசாமிதான். மோடி பிரதமராக வரக்கூடாது என்று எங்களால் கூற முடியும். ஆனால் எடப்பாடி பழனிசாமி கூறுவாரா? ஐபிஎல் விளையாட்டும் அ.தி.மு.க.வும் ஒன்று. அ.தி.மு.க.விலும் அத்தனை அணிகள் உள்ளன.

    பிரதமர் மோடியின் பெயரை 29 காசு என்று மாற்றிவிட்டேன். ஏனென்றால், நாம் ஒரு ரூபாய் வரி கட்டினால் வெறும் 29 காசு தான் தருகிறார். இனி யாரும் பிரதமர் நரேந்திர மோடி என்று சொல்லாதீர்கள். இனி அவரது பெயர் 29 காசு. இன்னும் ஒரு மாதம் தான் அவர் பிரதமர். அதன் பிறகு அவர் பிரதமர் கிடையாது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • சென்னையில் உள்ள 3 பாராளுமன்ற தொகுதிகளில் 19,400 அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பணியாற்றுவதற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
    • பெரும்பாலானோர் மருத்துவ காரணங்களை குறிப்பிட்டு விளக்கம் அளித்துள்ளனர்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் யார்-யார் என்ற விவரம் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பே பட்டியலிடப்பட்டு அதன் அடிப்படையில் அவர்களுக்கு தேர்தல் பணி வழங்கப்பட்டுள்ளது.

    வாக்குப்பதிவு மையங்களில் பணியாற்றுபவர்கள், வாக்கு எண்ணும் மையங்களில் பணியாற்றுபவர்கள் என இருவகைப்படுத்தி அவர்களுக்கு அதற்கேற்ப பயிற்சி வகுப்புகளும் நடத்தப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் சென்னையில் உள்ள 3 பாராளுமன்ற தொகுதிகளில் 19,400 அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பணியாற்றுவதற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

    இவர்களுக்கு கடந்த 24-ந்தேதி முதற்கட்ட பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது. 3 பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட 16 சட்டமன்ற தொகுதிகளிலும் நடத்தப்பட்ட பயிற்சி வகுப்பில் 1,500 பேர் வரை பங்கேற்காதது தெரியவந்துள்ளது.

    தேர்தல் பணி பயிற்சிக்கு வராத 1,500 ஊழியர்களுக்கும் இப்போது விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்பப்பட்டு உள்ளதாக மாநகராட்சி ஆணையாளரான மாவட்ட தேர்தல் அதிகாரி டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

    நோட்டீசை பெற்றுக்கொண்டுள்ள அரசு ஊழியர்கள் பல்வேறு காரணங்களை குறிப்பிட்டு விடுமுறை எடுத்ததாக கடிதத்தில் குறிப்பிட்டு உள்ளனர். பெரும்பாலானோர் மருத்துவ காரணங்களை குறிப்பிட்டு விளக்கம் அளித்துள்ளனர்.

    இதுகுறித்து மாநகராட்சி கமிஷனர் டாக்டர் ராதா கிருஷ்ணன் கூறுகையில், முதற்கட்ட பயிற்சிக்கு வராதவர்களுக்கு நாளைக்கு மீண்டும் பயிற்சி அளிக்க உள்ளதாக தெரிவித்தார்.

    • நாம் தமிழர் கட்சி பிரமுகர்கள் தாக்கியதாக கூறி, ஆறுமுகம் ஓசூர் அரசு மருத்துவனையில் சேர்ந்துள்ளார்.
    • நாளைக்குள் வேட்புமனுவை வாபஸ் பெறாவிட்டால் கொன்று விடுவோம் எனக்கூறி மிரட்டினர்.

    கிருஷ்ணகிரி:

    தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அடுத்த எச்சனஹள்ளியை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 51). இவர், திராவிட தெலுங்கு தேசம் கட்சி மாநில தலைமை ஒருங்கிணைப்பாளராக உள்ளார். வருகிற பாராளுமன்ற தேர்தலில், திராவிட தெலுங்கு தேசம் கட்சி பாரதிய மக்கள் ஐக்கியதா கட்சியுடன் இணைந்து தமிழகத்தில் 13 இடங்களில் போட்டியிடுகிறது.

    இந்த கட்சிக்கு நாம் தமிழர் கட்சி முன்பு பயன்படுத்தி வந்த கரும்பு விவசாயி சின்னம் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தன்னை, நாம் தமிழர் கட்சி பிரமுகர்கள் தாக்கியதாக கூறி, ஆறுமுகம் ஓசூர் அரசு மருத்துவனையில் சேர்ந்துள்ளார்.

    இது குறித்து பாரதிய மக்கள் ஐக்கியதா கட்சி வேட்பாளர் ஆறுமுகம் கூறியதாவது:-

    நான் கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்ய வந்தபோதிலிருந்து நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் என்னை கண்காணித்த வண்ணம் இருந்தனர். நேற்று வேட்புமனு பரிசீலனைக்கு வந்த போது அவர்கள் என்னை பின் தொடர்ந்தனர். இதையறிந்த நான் என் நண்பரின் காரில் ஓசூர் நோக்கி சென்றேன்.

    கிருஷ்ணகிரியில் இருந்து, 5 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கும்மனூர் அருகே சென்றபோது, 10-க்கும் மேற்பட்ட மோட்டார்சைக்கிளில் வந்த நாம் தமிழர் கட்சியினர், எங்கள் காரை வழிமறித்து என்னையும் என்னுடன் இருந்தவர்களையும் கடுமையாக தாக்கினர். மேலும் விவசாயி சின்னத்தில் நீ போட்டியிட கூடாது. நாளைக்குள் வேட்புமனுவை வாபஸ் பெறாவிட்டால் கொன்று விடுவோம் எனக்கூறி மிரட்டினர். இவ்வாறு அவர் கூறினார்.

    காயமடைந்த ஆறுமுகம் ஓசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து குருபரப்பள்ளி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×