என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • தேர்தல் நடத்தும் உதவி அலுவலரான பாளை தாசில்தார் சரவணன் பாளை போலீசில் புகார் அளித்தார்.
    • வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நெல்லை:

    நெல்லை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாளான கடந்த 27-ந்தேதி நாம் தமிழர் கட்சி சார்பில் வேட்பாளர் சத்யாவும், தி.மு.க. கூட்டணி கட்சியான காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களும் நெல்லை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர்.

    அப்போது நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளுக்கும், தி.மு.க.வினருக்கும் இடையே கலெக்டர் அலுவலக வளாகத்தில் வைத்து வாக்குவாதம் ஏற்பட்டது.

    நாம் தமிழர் கட்சியினர் தாங்கள் மனுதாக்கல் செய்ய முதலில் வந்ததாகவும், குறைவான ஆதரவாளர்களுடன் மட்டுமே வந்ததாகவும், ஆனால் காங்கிரசார் அதிகமான எண்ணிக்கையில் வந்திருந்ததாகவும் கூறி நாம் தமிழர் கட்சியினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து தேர்தல் நடத்தும் உதவி அலுவலரான பாளை தாசில்தார் சரவணன் பாளை போலீசில் புகார் அளித்தார்.

    அதன் பேரில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சிதம்பரத்தில் வேலூரை சேர்ந்த பெண் ஒருவரை பா.ஜ.க. வேட்பாளராக நிற்க வைத்து உள்ளனர்.
    • மரியாதை இல்லாததால் பா.ஜ.க.வில் இருந்து விலகி அ.தி.மு.க.வில் சேர்ந்துள்ளேன்.

    சென்னை:

    தமிழக பா.ஜ.க. பட்டியல் அணி மாநில தலைவராக பதவி வகித்து வந்தவர் தடா பெரியசாமி. இவர் திடீரென்று பா.ஜ.க.வில் இருந்து விலகினார். இந்த நிலையில் அவர் இன்று காலை சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு சென்றார். அங்கு எடப்பாடி பழனிசாமி முன்னிலையில், தடா பெரியசாமி அ.தி.மு.க.வில் இணைந்தார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    நான் பா.ஜ.க.வில் இருந்து விலகி எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்துள்ளேன். நான் தமிழக பா.ஜ.க.வில் மாநில பட்டியல் அணி தலைவராக பதவி வகித்தேன். நான் சிதம்பரம் தனி தொகுதியை சேர்ந்தவர். எனது சொந்த தொகுதியான சிதம்பரத்தில் வேலூரை சேர்ந்த பெண் ஒருவரை பா.ஜ.க. வேட்பாளராக நிற்க வைத்து உள்ளனர். நான் பட்டியல் அணி மாநில தலைவராக இருந்தும், அது எனது சொந்த தொகுதியாக இருந்தும் என்னிடம் ஒரு வார்த்தை கூட கேட்கவில்லை, பட்டியல் அணி தலைவருக்கே கட்சியில் மரியாதை இல்லை என்றால், இந்த சமுதாய மக்களுக்கு எப்படி மரியாதை இருக்கும். தமிழக பா.ஜ.க.வில் அண்ணாமலை, எல்.முருகன், கேசவ விநாயகம் ஆகிய 3 பேர் தான் முடிவு எடுக்கிறார்கள். கட்சியில் அவர்கள் 3 பேர் தான் இருக்கிறார்களா? வேறு யாரும் இல்லையா?

    எனவே எனக்கு மரியாதை இல்லாததால் பா.ஜ.க.வில் இருந்து விலகி அ.தி.மு.க.வில் சேர்ந்துள்ளேன். இனி அ.தி.மு.க. தலைமை எடுக்கும் முடிவுக்கு கட்டுப்பட்டு செயல்படுவேன். இந்த தேர்தலில் மட்டுமல்ல, 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலிலும் அ.தி.மு.க. தலைமை எடுக்கும் முடிவின்படி செயல்படுவேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தடா பெரியசாமி கடந்த சட்டசபை தேர்தலில் திட்டக்குடி தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளராக போட்டியிட்டு தோல்வி அடைந்தார். தற்போது அவர் சிதம்பரம் தொகுதியில் போட்டியிட சீட் கேட்டிருந்தார். ஆனால் அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. இதனால் அவர் பா.ஜ.க.வில் இருந்து விலகி அ.தி.மு.க.வில் இணைந்து உள்ளதாக கூறப்படுகிறது.

    • மஞ்சும்மல் பாய்ஸ் படம் உலகம் முழுவதும் 200 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்துள்ளது.
    • இந்த மைல்கல்லை எட்டிய முதல் மலையாளப் படம் என்ற பெருமையையும் இப்படம் பெற்றது.

    சென்னை:

    கொடைக்கானலில் உள்ள குணா குகையில் நடைபெற்ற உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் தான் மஞ்சும்மல் பாய்ஸ். இந்தத் திரைப்படம் மலையாளத்தில் கடந்த பிப்ரவரி 22-ம் தேதி அன்று வெளியானது. இயக்குனர் சிதம்பரம் இயக்கிய இந்தப் படத்தில் ஸ்ரீநாத் பாஸி, சௌபின் சாஹிர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

    இந்தப் படம் வெளியாகி தமிழ், மலையாளம் என இருதரப்பு ரசிகர்களிடமும் பாராட்டுகளைப் பெற்றது. வசூல் ரீதியாகவும் மஞ்சும்மல் பாய்ஸ் வெற்றி பெற்றது. மஞ்சும்மல் பாய்ஸ் படம் உலகம் முழுவதும் 200 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து, அந்த மைல்கல்லை எட்டிய முதல் மலையாளப் படம் என்ற பெருமையைப் பெற்றது.

    தமிழ் சினிமா பிரபலங்களும் மஞ்சும்மல் பாய்ஸை கொண்டாடத் தவறவில்லை. படத்தைப் பார்த்த நடிகர்கள் கமல்ஹாசன், தனுஷ், விக்ரம் உள்ளிட்ட திரையுலகப் பிரபலங்கள் படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டினர்.

    இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் மஞ்சும்மல் பாய்ஸ் படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டி உள்ளார். இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சமூகநீதி குறித்தெல்லாம் பேசுவதற்கு தமக்கு தகுதி இருக்கிறதா? என்று மு.க.ஸ்டாலின் தனக்குத் தானே வினா எழுப்பி விடை காண வேண்டும்.
    • வன்னியர் சமூகத்திற்கு இழைத்த துரோகங்களுக்காக தி.மு.க.வுக்கு வரும் தேர்தலில் பாடம் புகட்ட மக்கள் தயாராகிவிட்டனர்.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    சமூகநீதி குறித்த பாட்டாளி மக்கள் கட்சியின் கோரிக்கைகளை பிரதமர் நரேந்திரமோடி ஏற்றுக்கொள்வாரா? அதற்கான உத்தரவாதத்தை நரேந்திர மோடியிடமிருந்து பாட்டாளி மக்கள் கட்சி பெற்றிருக்கிறதா? என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வினா எழுப்பியிருக்கிறார்.

    2004-ம் ஆண்டில் சமூகநீதிக் கொள்கையில் பாட்டாளி மக்கள் கட்சி எந்த அளவு உறுதியுடன் இருந்ததோ, அதே உறுதியுடன் தான் இப்போதும் உள்ளது. பாராளுமன்றத்தில் அப்போதிருந்த அளவுக்கு வலிமையை இப்போதும் பெறுவோம் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. கொள்கை வலிமையையும், அதிகார வலிமையையும் பயன்படுத்தி சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்துவதற்கு மத்திய அரசை ஒப்புக்கொள்ளச் செய்ய பா.ம.க.வால் முடியும்.

    பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு உள் இட ஒதுக்கீடு வழங்குவதற்காக நீதிபதி ரோகிணி ஆணையத்தை அமைத்து, அதன் அறிக்கையை பெற்ற பிரதமர் நரேந்திர மோடி இக்கோரிக்கையையும் ஏற்றுக் கொள்வார் என்று நம்புகிறேன்.

    இது ஒருபுறம் இருக்க, சமூகநீதி குறித்தெல்லாம் பேசுவதற்கு தமக்கு தகுதி இருக்கிறதா? என்று மு.க.ஸ்டாலின் தனக்குத் தானே வினா எழுப்பி விடை காண வேண்டும். உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதாக அளித்த உத்தரவாதத்தை இரு ஆண்டுகள் ஆகியும் நிறைவேற்றினோமா? என்பதை நேர்மையுடனும், மனசாட்சியுடனும் சிந்தித்து பார்க்க வேண்டும்.

    மு.க.ஸ்டாலின் நினைத்திருந்தால் வன்னியர்களுக்கு எப்போதோ இட ஒதுக்கீடு கிடைத்திருக்கும். ஆனால், பிற சமூகங்களின் கோரிக்கைகளைக் கேட்டுக் கேட்டு நிறைவேற்றும் மு.க. ஸ்டாலினுக்கு வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதற்கு மட்டும் மனம் வரவில்லை. ஆனால், மேடைகளில் மட்டும் சமூகநீதியில் அக்கறைக் கொண்டவர் போல நடிக்கிறார். மு.க.ஸ்டாலினுக்கு சமூகநீதியில் உண்மையாகவே அக்கறை இருந்தால் வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்கி விட்டு, தமிழகத்தில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தி விட்டு, அதன்பிறகு சமூகநீதி பற்றி பேச வேண்டும்.

    ஒருவரை ஒரு முறை ஏமாற்றலாம்... சிலரை சில முறை ஏமாற்றலாம். ஆனால், வன்னியர்களை ஒவ்வொரு முறையும் ஏமாற்ற முடியாது. வன்னியர் சமூகத்திற்கு இழைத்த துரோகங்களுக்காக தி.மு.க.வுக்கு வரும் தேர்தலில் பாடம் புகட்ட மக்கள் தயாராகிவிட்டனர். அதை தி.மு.க. விரைவில் உணரும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • முதலமைச்சர் வட னெ்னையில் தனிக்கவனம் செலுத்தி, வடசென்னை வளர்ச்சி திட்டத்தை அறிவித்திருக்கின்றார்.
    • நிச்சயம் அந்த பணிகள் அனைத்தையும் மேற்கொண்டால் வடசென்னை தென் சென்னைக்கு நிகராக உயரும்.

    சென்னை:

    சென்னை, அகரம், ஜெகநாதன் தெருவில், வட சென்னை பாராளுமன்ற இந்தியா கூட்டணி கட்சியின் வேட்பாளர் கலாநிதி வீராசாமியை ஆதரித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட பொழுது அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேசியதாவது:-

    கொளத்தூர் சட்டமன்ற தொகுதியை பொறுத்தளவில் தினந்தோறும் தேர்தல் பணியை எப்போதும் செய்து கொண்டிருக்கின்ற கழகத் தோழர்கள் நிறைந்த பகுதி, மக்கள் மீது அக்கறை கொண்ட தலைவரின் நல்வழியை பின்பற்றுகின்ற மக்கள் நல விரும்பிகள் தான், இந்த தொகுதியில் மாநகராட்சியின் மாமன்ற உறுப்பினர்களாகவும், கட்சியினுடைய முக்கிய பொறுப்புகளில் இருப்பதால் மக்களோடு தினசரி மக்களுடைய பிரச்சினைகளை அணுகுவதால் இந்த முறை இந்த கொளத்தூர் தொகுதியிலேயே பதிவாகின்ற வாக்குகளில் 75 சதவீதம் அளவிற்கு தி.மு.க. உதயசூரியன் சின்னம் பெறும் என்பதில் எந்தவிதமான ஐயமுமில்லை.

    கலாநிதி, நமது ஆட்சி வந்த பிறகு 34 மாதங்கள் அவர் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தாலும், ஆட்சி இல்லாத போது அரசிடம் போராடி பல்வேறு நலத்திட்டங்களை பெற்றவர், பல்வேறு அடிப்படை கட்டமைப்புகளை உயர்த்துவதற்குண்டான நடவடிக்கையில் ஈடுபட்டவர். ஆட்சி வந்த பிறகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய காலத்தில் கொடுங்கையூர் குப்பைகள் கொட்டும் வளாகம், கணேசபுரம் மேம்பாலம். ஆர்.கே. நகர் மேம்பாலம் போன்ற, மக்களுக்கு கால காலத்துக்கும் பயன்படுகின்ற பல நலத்திட்டங்களை கொண்டு வந்தவர்.

    மீண்டும் அவரை தேர்ந்தெடுக்கும் பட்சத்தில் இந்த வட சென்னை பாராளுமன்ற தொகுதியினுடைய வளர்ச்சிக்கும், தேவைகளுக்கும் கட்டமைப்புகளை உயர்த்துவதற்கும் தொடர்ந்து இப்போது போல் பாடுபடுவார்.


    முதலமைச்சர் வட னெ்னையில் தனிக்கவனம் செலுத்தி, வடசென்னை வளர்ச்சி திட்டத்தை அறிவித்திருக்கின்றார். சுமார் 2 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு தற்போது வட சென்னையில் வடசென்னை வளர்ச்சி திட்டத்தில் பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. பூங்காக்கள், பஸ் நிலையங்கள், மருத்துவமனைகள், பள்ளிக்கூட கட்டிடங்கள், கடற்கரையை அழகுபடுத்துகின்ற பணிகள், சந்தைகள், வணிக வளாகங்கள் அதேபோல டயாலிசிஸ் அமைப்புகள் என்று கிட்டத்தட்ட மாநகராட்சி சமூக நலக்கூடங்கள் என்று 1,000 கோடி ரூபாய்க்கு மேலாக, ஏற்கனவே வளர்ச்சி திட்டப்பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன.

    இந்த மாதம் 14-ந் தேதி, சென்னை தங்க சாலை மணிக் கூண்டு அருகிலே ரூபாய் 4,414 கோடி அளவிற்கு வளர்ச்சி திட்டத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருக்கின்றார். அறிவித்தார் என்பதைவிட பிரகடனப்படுத்தி இருக்கின்றார்.

    நிச்சயம் அந்த பணிகள் அனைத்தையும் மேற்கொண்டால் வடசென்னை தென் சென்னைக்கு நிகராக உயரும்.

    அனைவருடைய மேம்பாட்டிற்காகவும் நிச்சயம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருக்கின்ற இந்த திட்டங்களை நிறைவேற்றுவார்.

    தொடர் பயணமாக 20 ஆண்டுகளுக்கு இந்த மாவட்டத்தை முன்னேற்றத்துடன் கூடிய ஒரு மாவட்டமாக கொண்டு வருவதற்கு அனைத்து பணிகளையும் தொலைதூர நோக்கோடு திட்டமிட்டு இருக்கின்றார். இந்த ஆட்சியைப் பொறுத்தவரையில் இனி கால் நூற்றாண்டுகள் தி.மு.க. ஆட்சிதான் தமிழகத்திலேயே என்ற நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொலை நோக்கு திட்டங்கள் நிச்சயம் வெற்றி பெறும் என்பதில் முழு நம்பிக்கை உள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • தேர்தல் பத்திரம் மூலம் தி.மு.க., வேதாந்தா நிறுவனத்திடம் இருந்து 19 கோடி ரூபாய் பெற்றுள்ளது.
    • குறைந்த வாக்கு சதவீதம் கொண்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு கேட்ட சைக்கிள் சின்னம் கிடைக்கிறது.

    தூத்துக்குடி:

    நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று தூத்துக்குடி திரேஸ்புரத்தில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் தான் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை கொண்டு வந்தனர். ஸ்டெர்லைட் ஆலை இல்லை என்றால் தாமிரம் தட்டுப்பாடு வந்து விடும் என்று சொன்னார்கள். ஆனால் இங்குள்ள நிலமும், தண்ணீரும் கெட்டு விடும் என்று சொல்லவில்லை.

    ஸ்டெர்லைட் ஆலையால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக கூறி பொதுமக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆலையை மூடக்கோரி கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க சென்றபோது அதனை வாங்கி இருக்க வேண்டும். ஆனால் தடியடி நடத்தி பொதுமக்களை சுட்டுக்கொன்றனர்.

    இதுதொடர்பாக விசாரணை நடத்திய அருணா ஜெகதீசன் அறிக்கை தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் கடந்த 6 மாதமாக அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் கிடப்பில் போட்டுள்ளனர். குற்றம் சாட்டப்பட்ட போலீ சாருக்கு பதவி உயர்வும் வழங்கப்பட்டுள்ளது.

    தேர்தல் பத்திரம் மூலம் தி.மு.க., வேதாந்தா நிறுவனத்திடம் இருந்து 19 கோடி ரூபாய் பெற்றுள்ளது. இதேபோல் அனைத்து கட்சிகளும் பணம் பெற்றுள்ளது. ஆனால் நாம் தமிழர் கட்சி மட்டும் பணம் பெறவில்லை.

    மணிப்பூரில் கலவரம் ஏற்பட்டபோது இங்குள்ள அனைத்து கட்சியினரும் துடித்தனர். ஆனால் ஈழத்தில் தமிழர்கள் கொல்லப்பட்டபோது யாரும் வாய் திறக்கவில்லை. நான் மட்டும்தான் அது குறித்து துடித்தேன்.

    வீட்டுக்கு தேவையான பொருட்களை தரம் பார்த்து நல்ல பொருட்களாக வாங்குவதை போல் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் நல்ல வேட்பாளர்களை ஓட்டு போட்டு தேர்ந்தெடுக்க வேண்டும்.

    பாராளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சியுடன் கூட்டணி வைப்பதற்காக பல்வேறு கட்சியினர் என்னை தொடர்பு கொண்டு பேசினர். ஆனால் தனித்து போட்டி என்ற கொள்கையில் உறுதியாக இருந்ததால் அதனை மறுத்து விட்டேன்.

    தேர்தல் வெற்றிக்காக கடந்த 18 வருடங்களாக போராடிக்கொண்டு இருக்கிறேன்.

    குறைந்த வாக்கு சதவீதம் கொண்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு கேட்ட சைக்கிள் சின்னம் கிடைக்கிறது. ஆனால் அதை விட அதிக ஓட்டு சதவீதம் கொண்ட நாம் தமிழர் கட்சிக்கு நாங்கள் கேட்ட சின்னம் தர மறுக்கிறார்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • மத்தியில் 10 ஆண்டுகளாக காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி ஆட்சியில் இருந்தபோது சிஆர்பிஎப் போன்ற தேசிய அளவிலான தேர்வுகளை தமிழ் மொழியில் எழுத முடியவில்லை.
    • மத்திய தேர்வுகளை தமிழ் மொழியில் எழுத பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு தான் நடவடிக்கை எடுத்துள்ளது.

    கோவை:

    மத்திய மந்திரி எல்.முருகன் இன்று தனது எக்ஸ் தளத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கண்டனம் தெரிவித்து ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். அதில் எல்.முருகன் கூறியிருப்பதாதவது:-

    பிரதமர் நரேந்திரமோடி இந்தியை பரப்புவதாக ஒரு பொய் செய்தியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீண்டும் பரப்பி வருகிறார். பிரதமர் மோடி, தமிழில் பேச ஆரம்பித்தால், உங்களைப் போன்ற போலி திராவிட மாடல் ஆட்சியாளர்களுக்கு, மீண்டும் மீண்டும் ஆட்சியமைப்பதற்கான வாய்ப்பே கிடைக்காது என்பது தான் உண்மை.

    இந்த உண்மையை, இன்று தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு சாமானிய மக்களும் உணர்ந்துள்ளார்கள். அதன் விளைவே உங்களின் இந்த அறிக்கை என்பதையும் உணர்கிறேன்.

    இதுவரை எந்தவொரு மத்திய அரசும் செய்யாத அளவிற்கு, தமிழுக்கு அரும்பெரும் தொண்டாற்றி வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி. மத்திய அரசு கடந்த 10 ஆண்டுகளில் தமிழுக்கு செய்த தொண்டுகளை பட்டியலிடுகிறேன்.

    கடந்த காலங்களில், பல்வேறு நாடுகளுக்கும், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கும் சுற்றுப்பயணம் சென்று வரும் பிரதமர், திருக்குறள் உள்ளிட்ட தமிழின் தொன்மைக்கால இலக்கியங்கள் ஒவ்வொன்றையும் உலக அரங்கில் முன்மொழிந்து வருகிறார் என்பதை முதலமைச்சர் பார்ப்பதில்லையா?

    கடந்தாண்டு பொதுத்தேர்வு எழுதுகிற மாணவர்களிடம் கலந்துரையாடும் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், நமது தேசத்தின் மிகவும் தொன்மையான மொழி தமிழ் தான் என்பதை சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், கடந்த இரண்டு ஆண்டுகளாக காசிக்கும், தமிழ்நாட்டிற்கும் உள்ள தொடர்பை எடுத்துக்காட்டும் வண்ணம், 'காசித் தமிழ்ச் சங்கமம்' விமரிசையாக நடத்தப்பட்டது என்பதெல்லாம் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நினைவில்லையா?

    பாராளுமன்றம் புதிய கட்டிடத்தில் தமிழகத்தின் பெருமையான செங்கோல், சென்னையில் செம்மொழி ஆராய்ச்சி மையத்திற்கான புதிய கட்டிடம் என்று, தமிழ் மொழி முன்னிலைப்படுத்தப்பட்டு வருவதை கவனிப்பதில்லையா?

    மத்தியில் 10 ஆண்டுகளாக காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி ஆட்சியில் இருந்தபோது சிஆர்பிஎப் போன்ற தேசிய அளவிலான தேர்வுகளை தமிழ் மொழியில் எழுத முடியவில்லை. மத்திய தேர்வுகளை தமிழ் மொழியில் எழுத பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு தான் நடவடிக்கை எடுத்துள்ளது.

    தமிழ் தான் எல்லாம் என்று இத்தனை ஆண்டு காலமாக பொய் சொல்லியே தமிழ் மக்களை ஏமாற்றி வந்த உங்களால், உங்களின் கட்சிக்காரர்கள் நடத்துகிற தனியார் பள்ளிகளில் தமிழை கட்டாய மொழியாக்க முடிந்ததா? கெட்டிக்காரன் புளுகு எட்டு நாள் என்றால், உங்கள் கட்சி தொடங்கிய காலத்திலிருந்து தமிழின் பெயரைச் சொல்லியே புளுகி வரும் உங்களைப் பற்றி சுயபரிசோதனை செய்து பாருங்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினே.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • தி.மு.க அறிக்கை என்பது வெற்று அறிக்கை, பொய் அறிக்கையாகும்.
    • மாற்றத்திற்கான அரசியலை உருவாக்க தேர்தல் நடைபெறுகின்றது.

    கடலூர்:

    கடலூரில் பா.ஜ.க. கூட்டணி பா.ம.க வேட்பாளரை ஆதரித்து கடலூர் முதுநகரில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    பா.ஜ.க. கூட்டணியில் பா.ம.க. வேட்பாளராக தங்கர் பச்சான் போட்டியிடுகிறார். பா.ஜ.க. ஆட்சியில் கடலூர் மாவட்டத்தில் செய்துள்ள வேலைகள் தற்போது குறிப்பிடுகிறேன். இதில் கடலூர்-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலைக்கு ரூ.1507 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது . பிரதமர் வீடு கட்டு திட்டம் மூலம் 5803 குடும்பம், 3 லட்சத்து 7 ஆயிரம் கழிப்பறை, 2 லட்சத்து 40 ஆயிரத்து 800 மக்களுக்கு சமையல் எரிவாயு, மருத்துவ காப்பீடு மூலம் 2 லட்சத்து 88 ஆயிரம், 2 லட்சத்து 65 ஆயிரம் விவசாயிகளுக்கு தலா 30 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

    இதன் மூலம் அடித்தட்டு மக்களுக்கு பாரபட்சம் இன்றி பாரத பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு உள்ளன. ஆனால் தி.மு.க. ஆட்சியில் வெறும் வாய் பேச்சு தான். முதலமைச்சர், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் போன்றவர்கள் மக்களுக்கான திட்டங்கள் எதுவும் செய்யவில்லை . ஆனால் தங்கர் பச்சானை நீங்கள் வெற்றி பெற செய்தால் முந்திரி பதப்படுத்தும் தொழிற்சாலை உடனடியாக கொண்டுவரப்படும்.

    விவசாய மக்களுக்கு தேவையான அனைத்து திட்டங்களும் உடனடியாக செயல்படுத்தப்படும். ஆனால் தி.மு.க . ஆட்சியில் அறிவிக்கப்பட்ட பெரும்பாலான வாக்குறுதிகள் நிறைவேற்றவில்லை. சிலிண்டருக்கு ரூ.100 மானியம், பெட்ரோல் விலை குறைக்கப்படும் என தெரிவித்தனர். ஆனால் எந்த வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை. இந்த நிலையில் பிரதமர் மோடி 3 முறை பெட்ரோல் விலை குறைத்துள்ளார்.

    ஆகையால் தி.மு.க அறிக்கை என்பது வெற்று அறிக்கை, பொய் அறிக்கையாகும். பா.ஜ.க. கூட்டணியில் பா.ம.க. வேட்பாளர் தங்கர் பச்சானை அதிக வாக்கு வித்தியாசத்தில் மாம்பழ சின்னத்தில் வாக்களித்து நீங்கள் வெற்றி பெற செய்ய வேண்டும். மாற்றத்திற்கான அரசியலை உருவாக்க தேர்தல் நடைபெறுகின்றது. மேலும் செல்லும் இடங்களில் பெண்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் திரண்டு வருவதால் பா.ஜ.க. வெற்றி பயணத்தை நோக்கி செல்கின்றது. 10 ஆண்டு மோடி ஆட்சி மக்களின் ஆதரவுடன் இன்னும் 5 ஆண்டுகள் தொடர வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • மத்திய அரசுக்கு எதிரான பிரசாரத்தையும் காங்கிரசார் எடுத்து வைக்க உள்ளனர்.
    • தமிழகத்திலும் வீடு வீடாக சென்று காங்கிரஸ் நிர்வாகிகள் ஓட்டு கேட்க உள்ளனர்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலையொட்டி காங்கிரஸ் கட்சி வீட்டுக்கு வீடு உத்தரவாதம் என்கிற அடிப்படையில் புதுவிதமான பிரசாரத்தை கையில் எடுக்க உள்ளது. காங்கிரஸ் கட்சி சார்பில் நாடு முழுவதும் 8 கோடி வீடுகளுக்கு நேரில் சென்று ஆதரவு கேட்க அந்த கட்சி முடிவு செய்துள்ளது.

    இந்த பிரசார பயணம் வருகிற 3-ந் தேதி தொடங்குகிறது. அப்போது காங்கிரஸ் கட்சி இதற்கு முன்பு தங்களது ஆட்சியில் செய்துள்ள சாதனைகளை பட்டியல் போட்டு எடுத்துச் செல்ல காங்கிரஸ் நிர்வாகிகள் திட்டமிட்டுள்ளனர். மத்திய அரசுக்கு எதிரான பிரசாரத்தையும் காங்கிரசார் எடுத்து வைக்க உள்ளனர்.

    இது தவிர சமூக ஊடகங்களை பயன்படுத்தியும் பிரசாரம் செய்ய காங்கிரஸ் கட்சி வியூகம் அமைத்து வருகிறது. பாராளுமன்ற தேர்தலையொட்டி காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை வருகிற 5-ந் தேதி வெளியிடப்பட உள்ளது.

    காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே முன்னாள் தலைவர்கள் சோனியாகாந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் தேர்தல் அறிக்கையை வெளியிட உள்ளனர்.

    ஏப்ரல் 6-ந் தேதியில் இருந்து பிரசார பயணத்தின் போது வீடு வீடாக தேர்தல் அறிக்கையில் உள்ள முக்கிய அம்சங்களை எடுத்துக் கூறவும் காங்கிரஸ் கட்சி தலைவர்கள் முடிவு செய்துள்ளனர்.

    தமிழகத்திலும் வீடு வீடாக சென்று காங்கிரஸ் நிர்வாகிகள் ஓட்டு கேட்க உள்ளனர். இதைத் தொடர்ந்து தேர்தல் பிரசாரத்துக்காக ராகுல், பிரியங்கா, கார்கே ஆகியோர் தமிழகத்துக்கு விரைவில் வர உள்ளனர்.

    இதையடுத்து தமிழக காங்கிரசார் தேர்தல் பணிகளில் சுறுசுறுப்புடன் ஈடுபட்டு வருகிறார்கள்.

    • ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து மக்கள் நீதிமய்யம் தலைவர் கமல்ஹாசன் நேற்று மாலை பிரசாரம் செய்தார்.
    • சேலம் மாமாங்கம் பகுதியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தங்கியுள்ள அதே ஓட்டலுக்கு வந்து கமல்ஹாசன் தங்கினார்.

    சேலம்:

    சேலம் பெத்தநாயக்கன் பாளையத்தில் இன்று மாலை நடைபெறும் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சேலம் மாமாங்கம் பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் தங்கியுள்ளார்.

    இதே போல் ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து மக்கள் நீதிமய்யம் தலைவர் கமல்ஹாசன் நேற்று மாலை பிரசாரம் செய்தார். பின்னர் அவரும் சேலம் மாமாங்கம் பகுதியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தங்கியுள்ள அதே ஓட்டலுக்கு வந்து தங்கினார்.

    இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, கமல்ஹாசன் இன்று காலை சந்தித்து பேசினார். பின்னர் கமல்ஹாசன் சென்னைக்கு புறப்பட்டு சென்றார்.

    • முன்னாள் பிரதமர்கள் வாஜ்பாய், நரசிம்மராவ் மற்றும் மறைந்த முன்னாள் முதலமைச்சர்கள் ஜெயலலிதா, கருணாநிதி உள்ளிட்ட புகழ்பெற்றவர்களை எதிர்த்து போட்டியிட்டு உள்ளேன்.
    • தேர்தல் மன்னன் பத்மராஜனுக்கு தற்போது 65 வயதாகிறது.

    சேலம்:

    சேலம் மாவட்டம் மேட்டூரை சேர்ந்தவர் கே. பத்மராஜன். தேர்தல் மன்னன் என்று அழைக்கப்படும் இவர் இதுவரை 238 தேர்தல்களில் போட்டியிட்டுள்ளார். தற்போது 239-வது முறையாக தருமபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடுகிறார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    நான் டயர் பழுது பார்க்கும் கடை வைத்து நடத்தி வருகிறேன். முன்னாள் பிரதமர்கள் வாஜ்பாய், நரசிம்மராவ் மற்றும் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர்கள் ஜெயலலிதா, கருணாநிதி, உள்ளிட்ட புகழ்பெற்றவர்களை எதிர்த்து போட்டியிட்டு உள்ளேன். ஜனாதிபதி, துணை ஜனாதிபதி தேர்தல்களிலும் 6 முறை போட்டியிட்டுள்ளேன். நான் வெற்றி பெற விரும்பவில்லை. தோல்வியை மட்டுமே அடைய வேண்டும். ஏனெனில் நீங்கள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே வெற்றியை ருசிக்க முடியும். ஆனால் நீங்கள் என்றென்றும் இழப்பை அனுபவிக்க முடியும். மேலும் இதுவரை தேர்தலுக்காக சுமார் ரூ. 1 கோடி செலவழித்து உள்ளேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தேர்தல் மன்னன் பத்மராஜனுக்கு தற்போது 65 வயதாகிறது. இவர் லிம்கா புக் ஆப் ரெக்கார்ட்ஸ், ஆசியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் மற்றும் டெல்லி புக் ஆப் ரெக்கார்ட்ஸ் ஆகியவற்றில் தேர்தல் வரலாற்றில் மிகவும் தோல்வி அடைந்த வேட்பாளர் என்ற அங்கீகாரத்தை பெற்றுள்ளார்.

    • அணையில் இறங்கிய பிரேம்குமார் செல்போன் மூலம் போட்டோ எடுக்க கூறியுள்ளார்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடத்தூர்:

    தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியில் அரசு கல்லூரி பிற்படுத்தபட்டோர் மாணவர் விடுதி உள்ளது . இங்கு 100 மாணவர்கள் தங்கிபடித்து வருகின்றனர். இந்த விடுதியின் காப்பாளராக நாகராஜ், சமையலராக மெணசியை சேர்ந்த சிலம்பரசன், வாட்சமேனாக தங்கவேல் ஆகிய 3 பேரும் பணியாற்றி வருகின்றனர்.

    நேற்று முதல் 3 நாட்கள் கல்லூரி விடுமுறை என்பதால் பெரும்பாலான மாணவர்கள் வீட்டிற்கு சென்று விட்டனர்.

    சுமார் 20 மாணவர்கள் மட்டுமே விடுதியில் இருந்தனர்.

    இதில் 3-ம் ஆண்டு கணினி அறிவியல் படிக்கும் திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த இளங்குன்னி பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜ் மகன் பிரேம்குமார், (19) முதலாம் ஆண்டு இயற்பியல் படிக்கும் பூபதி, (17) ஆகிய 2 பேரும் நேற்று மதியம் சாப்பிட்டு விட்டு, வாணியாறு அணையை சுற்றி பார்க்க சென்றனர்.

    அப்போது அணையில் இறங்கிய பிரேம்குமார் செல்போன் மூலம் போட்டோ எடுக்க கூறியுள்ளார். அப்போது அணையில் சேற்றில் சிக்கி பிரேம்குமார் உயிருக்கு போராடியுள்ளார். அவரை பூபதி காப்பாற்ற முயற்சி செய்தும் முடியாமல் போகவே, கூச்சலிட்டு உள்ளார். சிறிது நேரத்தில் மாணவர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

    தகவலின் பேரில் வந்த பாப்பிரெட்டிப்பட்டி தீயணைப்பு துறையினர், போலீசாரும் அணையில் இருந்து சடலமாக பிரேம்கு மாரை மீட்டனர். புகாரின் படி போலீசார் விசாரிக்கின்றனர்.

    ×