என் மலர்
உள்ளூர் செய்திகள்
- தேர்தல் ஆணையம் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
- வாக்களிப்பது நமது கடமை என்ற விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய ஸ்டிக்கர்கள் ஒட்டும் பணி இன்று தொடங்கியது.
திருப்பூர்:
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19-ந்தேதி நடைபெற உள்ளது. இதையடுத்து வாக்காளர்கள் 100 சதவீதம் வாக்களிக்கும் வகையில் தேர்தல் ஆணையம் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் திருப்பூர் வட்டார போக்குவரத்து அலுவலகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் திருப்பூர் கலைஞர் கருணாநிதி மத்திய பேருந்து நிலையத்தில் அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் 100 சதவீதம் நேர்மையாக வாக்களியுங்கள், வாக்களிப்பது நமது கடமை என்ற விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய ஸ்டிக்கர்கள் ஒட்டும் பணி இன்று தொடங்கியது. மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் பஸ்களில் ஸ்டிக்கர்கள் ஒட்டி தொடங்கி வைத்தார்.
- இன்று நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
- சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே போராட்டம் நடத்த காங்கிரஸ் கட்சி சார்பில் நேற்று இரவு போலீசாரிடம் அனுமதி கேட்கப்பட்டது.
சென்னை:
காங்கிரஸ் கட்சி வருமானவரி கணக்கில் முரண்பாடாக நடந்து கொண்டதாக குற்றம்சாட்டி வருமானவரி துறை சார்பில் ரூ.1,823 கோடி அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.
இதனை கண்டித்து இன்று நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
தமிழகத்திலும் இந்த போராட்டத்தை நடத்த காங்கிரசார் முடிவு செய்தனர். சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே போராட்டம் நடத்த காங்கிரஸ் கட்சி சார்பில் நேற்று இரவு போலீசாரிடம் அனுமதி கேட்கப்பட்டது.
அப்போது போலீசார் 24 மணி நேரத்துக்கு முன்பே போராட்டத்துக்கு அனுமதி கேட்க வேண்டும். அதனால் நாளை நீங்கள் போராட்டம் நடத்தினால் தடையை மீறித்தான் நடத்த வேண்டி இருக்கும் என்று கூறியுள்ளனர்.
இதையடுத்து காங்கிரசார் அப்படி ஒன்றும் அவசரம் இல்லை என்கிற எண்ணத்தில் நாளைக்கு போராட்டத்தை நடத்திக் கொள்கிறோம் என்று நழுவிச் சென்றுள்ளனர். முறையான அனுமதி கிடைத்த பிறகு பேராட்டம் நடத்திக் கொள்கிறோம் என்று கூறியுள்ள காங்கிரசார் நாளை போராட்டம் நடத்த காத்திருக்கிறார்கள்.
- 13-ந்தேதி மாலை 4 மணிக்கு சிதம்பரம் தொகுதி-காமராஜர் திடல், அரியலூர்.
- 15-ந்தேதி (திங்கட்கிழமை) காஞ்சிபுரம் தொகுதியில் காலை 9 மணிக்கு காஞ்சிபுரம் மாநகராட்சியில் வேன் பிரசாரம்.
சென்னை:
அ.தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நடைபெற உள்ள பாராளுமன்ற பொதுத்தேர்தலில், அ.தி.மு.க. சார்பிலும், அதன் தலைமையிலான கூட்டணிக் கட்சிகளின் சார்பிலும் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான, எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசார சுற்றுப்பயணம் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதில், 13, 14, 15 ஆகிய தேதிகளுக்கான சுற்றுப் பயணத் திட்டம் கீழ்வருமாறு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
13-ந்தேதி (சனிக்கிழமை) மாலை 4 மணிக்கு சிதம்பரம் தொகுதி-காமராஜர் திடல், அரியலூர். மாலை 6 மணிக்கு பெரம்பலூர் தொகுதி-துறையூர் சாலை, கனரா வங்கி அருகில், பெரம்பலூர் (வேன் பிரசாரம்), இரவு 7.15 மணிக்கு துறையூர் பைபாஸ்.
14-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) கள்ளக்குறிச்சி தொகுதி-மாலை 4.30 மணிக்கு எம்.ஜி.ஆர். திடல், ஆத்தூர், மாலை 5.30 மணிக்கு தியாக துருகம் ரோடு, யமாகா ஷோரூம் எதிரில் கள்ளக்குறிச்சி. இரவு 7 மணிக்கு விழுப்புரம் தொகுதியில் விழுப்புரம் நகரம்.
15-ந்தேதி (திங்கட்கிழமை) காஞ்சிபுரம் தொகுதியில் காலை 9 மணிக்கு காஞ்சிபுரம் மாநகராட்சியில் வேன் பிரசாரம், மாலை 4 மணிக்கு மத்திய சென்னை தொகுதியில் டானா தெரு, புரசைவாக்கம், இரவு 7 மணிக்கு சென்னை தெற்கு தொகுதி வேளச்சேரி ரோடு, சின்ன மலை.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- கடந்த சில நாட்களாக 1000 மில்லியன் லிட்டருக்கு அதிகமாக சப்ளை செய்யப்படுகிறது.
- கோடை வெப்பத்தின் காரணமாக தற்போது ஒரு நாளில் அதிகபட்சமாக நேற்று 1071.4 மி.லிட்டர் தண்ணீர் சப்ளை செய்யப்பட்டு உள்ளது.
சென்னை:
சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளாக பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், கண்ணன்கோட்டை ஏரிகள் உள்ளன. குடிநீர் குழாய், மற்றும் டேங்கர் லாரிகள் மூலம் தண்ணீர் வினியோகிக்கப்படுகிறது.
தற்போது கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் சென்னையில் குடிநீர் தேவை அதிகரித்து உள்ளது. கடந்த சில நாட்களாக 1000 மில்லியன் லிட்டருக்கு அதிகமாக சப்ளை செய்யப்படுகிறது. ஒரு நாளில் அதிகபட்சமாக நேற்று 1071.4 மில்லியன் லிட்டர் தண்ணீர் வினியோகிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது கடந்த சில ஆண்டுகளாக சென்னையில் குடிநீர் சப்ளை அதிகரித்து 1020 மி.லிட்டர் மற்றும் 1060 மி.லிட்டராக வினியோகிக்கப்படுகிறது. கோடை வெப்பத்தின் காரணமாக தற்போது ஒரு நாளில் அதிகபட்சமாக நேற்று 1071.4 மி.லிட்டர் தண்ணீர் சப்ளை செய்யப்பட்டு உள்ளது.
சராசரியாக 1014 மி. லிட்டர் தண்ணீர் குடிநீர் குழாய் மற்றும் டேங்கர் லாரிகள் மூலம் சென்னையில் உள்ள குடியிருப்புகளுக்கும் அதனுடன் இணைக்கப்பட்ட பகுதிகளுக்கும் வினியோகம் செய்யப்படுகிறது.
இதேபோல் வருகிற செப்டம்பர் மாதம் வரை தண்ணீர் சப்ளை இருக்கும். தற்போதைய நிலவரப்படி சென்னையில் தினமும் 1500 மில்லியன் லிட்டர் சப்ளை செய்யும் அளவுக்கு கட்டமைப்பு உள்ளது என்றார்.
சென்னைக்கு குடிநீர் வழங்கும் புழல், செம்பரம்பாக்கம் உள்ளிட்ட 5 ஏரிகளையும் சேர்த்து மொத்தம் 11 ஆயிரத்து 757 மில்லியன் கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கலாம். தற்போது குடி நீர் ஏரிகளில் 8080 மி.கனஅடி தண்ணீர் உள்ளது குறிப்பிடத்தக்கது. புழல் ஏரியில் மொத்த கொள்ளளவான 3300 மி.கனஅடியில் 2813 மி.கனஅடியும், செம்பரம்பாக்கம் ஏரியில் மொத்த கொள்ளளவான 3645 மி.கனஅடியில் 2838 மி.கனஅடியும், பூண்டி ஏரியில் மொத்த கொள்ளளவான 3231 மி.கனஅடியில் 1774 மி.கனஅடியும் தண்ணீர் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த தண்ணீரை கொண்டு இன்னும் 8 மாதத்திற்கு தட்டுப்பாடின்றி சென்னையில் குடிநீர் சப்ளை செய்ய முடியும்.
- சேலம் மாவட்டத் தலைவர் பெரியசாமி, துளுவ வேளாளர் சங்கத் தலைவர் ராஜீ உள்பட பலர் சந்தித்து தங்களது ஆதரவை தெரிவித்துக் கொண்டனர்.
- சக்கரபாணி, வேட்பாளர் செல்வ கணபதி, எஸ்.ஆர்.பார்த்திபன் எம்.பி. ஆகியோர் உடன் இருந்தனர்.
சென்னை:
தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினை சேலத்தில் இன்று 26 சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் சந்தித்து தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தனர்.
தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு சேலம் மாவட்டத் தலைவர் பெரியசாமி, துளுவ வேளாளர் சங்கத் தலைவர் ராஜீ உள்பட பலர் சந்தித்து தங்களது ஆதரவை தெரிவித்துக் கொண்டனர்.
அப்போது அமைச்சர்கள் கே.என்.நேரு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், சக்கரபாணி, வேட்பாளர் செல்வ கணபதி, எஸ்.ஆர்.பார்த்திபன் எம்.பி. ஆகியோர் உடன் இருந்தனர்.
- பறக்கும் படையினரால் நடத்தப்படும் வாகன சோதனைகள் வியாபாரிகளுக்கு கஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
- இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவுக்கு பல்வேறு புகார்கள் சென்றது.
சென்னை:
பாராளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் அனைத்துக் கட்சி தலைவர்களும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வேட்பாளர்களும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட 16-ம் தேதி முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிட்டன. தேர்தல் நேரத்தில் உரிய ஆவணம் இல்லாமல் ரூ.50,000-க்கு மேல் யாரும் பணம் கொண்டுபோனால் வாகன சோதனை நடத்தும் அதிகாரிகள் பறிமுதல் செய்து வருகின்றனர்.
பறக்கும் படையினரால் வாகன சோதனை நடத்தப்படும் நிகழ்வுகள் பொதுமக்களுக்கும் குறிப்பாக, வியாபாரிகளுக்கு பெரும் கஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவுக்கு பல்வேறு புகார்கள் சென்றது. அதில் பணம் கொண்டு செல்வதற்கான கட்டுப்பாடுகளில் தளர்வு அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்நிலையில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறுகையில், ரூ.50,000 பணம் எடுத்துச்செல்வதில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகிறது. இதுகுறித்து இந்திய தேர்தல் ஆணையத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம். இதுதொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் ஆலோசனை செய்து முடிவெடுக்கும். விரைவில் ரொக்கப் பணம் கொண்டுசெல்வது குறித்த புதிய அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிடும் என தெரிவித்தார்.
- தேர்தல் முடிந்து 23-ந்தேதி முதல் 26-ந்தேதி வரை தேர்வுத் தாள்களை திருத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
- கோடை வெயில் இன்னும் அதிகரிக்கும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது.
சென்னை:
தமிழ்நாட்டில் கோடை வெயில் சுட்டெரிக்கிறது. பாராளுமன்ற தேர்தலும் வருகிற 19-ந்தேதி நடைபெறுகிறது.
இதனால் 1 முதல் 9-ம் வகுப்பு வரையிலான பள்ளி இறுதி தேர்வு 2-ந்தேதி தொடங்கி 12-ந்தேதிக்குள் முடியும் என்றும் 13-ந்தேதி முதல் கோடை விடுமுறை விடப்படும். அதன் பிறகு ஆசிரியர்கள் தேர்தல் பணியில் ஈடுபட வேண்டும் என்றும் பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டு இருந்தது.
மேலும் தேர்தல் முடிந்து 23-ந்தேதி முதல் 26-ந்தேதி வரை தேர்வுத் தாள்களை திருத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
இந்நிலையில் ஈகை பெருநாளை முன்னிட்டு 2 தேர்வுகள் தள்ளி வைக்கப் பட்டுள்ளது. அதாவது 10-ந் தேதி நடைபெறுவதாக இருந்த அறிவியல் தேர்வை 12 நாட்கள் கழித்து 22-ந் தேதியும் 12-ந்தேதி நடக்க இருந்த சமூக அறிவியல் தேர்வு 11 நாட்கள் கழித்து 23-ந்தேதியும் நடக்கும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
கோடை வெயில் இன்னும் அதிகரிக்கும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ள நிலையில் 2 தேர்வுகளையும் முன் கூட்டியே முடித்து இருக்கலாம். மொத்தம் 5 தேர்வுகள் தான். 2-ந்தேதி முதல் 12-ந் தேதி வரை ஒரு நாள் விட்டு ஒரு நாள்தான் தேர்வு நடைபெறுகிறது. எனவே அந்த இடைவெளியை குறைத்து முன் கூட்டியே முடித்து இருக்கலாம். இது தேவையில்லாமல் குழந்தைகளை வெயிலில் வதைப்பதாகும் என்று பெற்றோர்கள் வேதனை தெரிவித்துள்ளார்கள்.
- தென்காசியில் தனது முதல் கட்ட பிரசாரத்தை தொடங்கும் கி.வீரமணி, அன்று இரவு 8 மணிக்கு திருநெல்வேலியில் பிரசாரம் செய்கிறார்.
- 16-ந்தேதி அறந்தாங்கி, பேராவூரணியிலும் பிரசாரம் செய்யும் கி.வீரமணி, 17-ந்தேதி தஞ்சாவூரில் பிரசாரத்தை நிறைவு செய்கிறார்.
சென்னை:
திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய உள்ளார். இவர் தனது பிரசாரத்தை வருகிற 2-ந்தேதி தென்காசியில் தொடங்கி ஏப்ரல் 17-ந்தேதி தஞ்சாவூரில் நிறைவு செய்கிறார். அவரது சுற்றுப்பயண திட்டமும் தயாராகி உள்ளது.
வருகிற 2-ந்தேதி மாலை 6 மணிக்கு தென்காசியில் தனது முதல் கட்ட பிரசாரத்தை தொடங்கும் அவர், அன்று இரவு 8 மணிக்கு திருநெல்வேலியில் பிரசாரம் செய்கிறார். 3-ந்தேதி தூத்துக்குடி, விருதுநகரிலும், 4-ந்தேதி ஆண்டிப்பட்டி, மதுரையிலும், 5-ந்தேதி பழனி, உடுமலைப்பேட்டையிலும், 6-ந்தேதி கோவை, மேட்டுப்பாளையத்திலும், 7-ந்தேதி சத்தியமங்கலம், கோபி செட்டிப்பாளையத்திலும், 8-ந்தேதி சேலம், அரூரிலும் முதல்கட்ட பிரசாரத்தை மேற்கொள்கிறார்.
பின்னர் கி.வீரமணி தனது 2-வது கட்ட பிரசாரத்தை வருகிற 10-ந்தேதி மாலை 6 மணிக்கு அரக்கோணத்தில் தொடங்கும் அவர் அன்று இரவு 8 மணிக்கு திருவள்ளூரில் பிரசாரம் செய்கிறார். 11-ந்தேதி அம்பத்தூர், வடசென்னையிலும், 12-ந்தேதி திண்டிவனம், தியாக துருவத்திலும், 13-ந்தேதி ஜெயங்கொண்டம், பெரம்பலூரிலும், 14-ந்தேதி துறையூர், திருச்சியிலும், 15-ந்தேதி மயிலாடுதுறை, நாகப்பட்டினத்திலும், 16-ந்தேதி அறந்தாங்கி, பேராவூரணியிலும் பிரசாரம் செய்யும் அவர், 17-ந்தேதி தஞ்சாவூரில் பிரசாரத்தை நிறைவு செய்கிறார்.
- சிகிச்சை பெற்று வந்த கிஷோர் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்தார்.
- கிஷோரின் தந்தை பிச்சைமுத்து கோவில்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஞானசேகரனிடம் புகார் அளித்தார்.
சரவணம்பட்டி:
கரூர் மாவட்டம் காந்தி கிராமத்தை சேர்ந்தவர் பிச்சைமுத்து. இவர் டாக்டராக வேலை பார்த்து வருகிறார்.
இவரது மகன் கிஷோர் (வயது22). கிஷோர் போதை பழக்கத்திற்கு அடிமையானதாக தெரிகிறது. இதையடுத்து அவரது பெற்றோர் கிஷோரை கோவை அருகே கோவில்பாளையத்தில் உள்ள போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அங்கு அவர் கடந்த பிப்ரவரி 28-ந் தேதி முதல் தங்கி சிகிச்சை எடுத்து வந்தார். இந்த நிலையில் போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வந்த அவர் அடிக்கடி அதிக அளவில் கூச்சல் போட்டு வந்ததாக கூறப்படுகிறது.
சம்பவத்தன்று கிஷோர் தன்னை வீட்டிற்கு அனுப்புமாறு அதிக அளவில் கூச்சல் போட்டுள்ளார். அங்கிருந்த வார்டன் சொல்லி பார்த்தும் அவர் கேட்கவில்லை என தெரிகிறது.
இதையடுத்து அங்கு பணியில் இருந்த காப்பாளர் அரவிந்த்சாமி மற்றும் மனநல ஆலோசகர் பிரசன்னராஜ் ஆகியோர் அவர் சத்தம் போடாமல் இருப்பதற்காக அவரது வாயில் டேப் மற்றும் துணியால் கட்டியுள்ளனர். இதில் சிறிது நேரத்தில் அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கினார்.
இதனால் அதிர்ச்சியான அவர்கள், அவரை அருகே உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த கிஷோர் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வந்த கிஷோர் இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.
இது தொடர்பாக கிஷோரின் தந்தை பிச்சைமுத்து கோவில்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஞானசேகரனிடம் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் போலீசார் போதை மறுவாழ்வு மைய வார்டனான ஆலாந்துறையை சேர்ந்த அரவிந்த்சாமி, திருப்பூர் சூசைபுரத்தை சேர்ந்த உளவியல் நிபுணர் பிரசன்னராஜ் ஆகிய 2 பேரை கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஓ.பன்னீர்செல்வம் ராமநாதபுரம் தொகுதி முழுவதும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.
- ஆரத்தி எடுத்த பெண்ணுக்கு ஓ.பன்னீர் செல்வம் ரூ.2000 வழங்கியது தேர்தல் விதிமுறை மீறல் என்று புகார் எழுந்துள்ளது.
அறந்தாங்கி:
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பா.ஜனதா கூட்டணியில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடுகிறார். அவர் சுயேட்சை சின்னத்தில் தேர்தலை சந்திக்கிறார்.
ஓ.பன்னீர்செல்வம் ராமநாதபுரம் தொகுதி முழுவதும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். அவர் செல்லும் இடங்களில் பெண்கள் அவருக்கு ஆரத்தி எடுத்து வரவேற்பு அளிக்கிறார்கள்.
இந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வம் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அவர் வீடு வீடாக சென்று ஓட்டு சேகரித்தார். அப்போது அவருக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தனர்.
ஒரு பெண் ஆரத்தி எடுத்தபோது ஓ.பன்னீர்செல்வம் அவரது தட்டில் ரூ.2000 போட்டார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.
அந்த வீடியோவில் ஓ. பன்னீர்செல்வம் ஆரத்தி காட்டிய பெண்ணுக்கு கொடுப்பதற்காக தனது பாக்கெட்டில் இருந்து பணத்தை எடுக்கிறார். அதில் 500 ரூபாய் நோட்டுகளாக வருகிறது. அதில் 4 நோட்டுகளை எடுத்து அவர் அந்த பெண்ணுக்கு கொடுக்கிறார்.
இந்த வீடியோ சமூக வலைதளத்தில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆரத்தி எடுத்த பெண்ணுக்கு ஓ.பன்னீர் செல்வம் ரூ.2000 வழங்கியது தேர்தல் விதிமுறை மீறல் என்று புகார் எழுந்துள்ளது. இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
- தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் வேணுகோபால் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடுகிறார்.
- வேட்பாளர்களை ஆதரித்து கட்சி தலைவர்கள் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஸ்ரீபெரும்புதூர்:
பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் நிலையில் முதற்கட்டமாக தமிழ்நாடு-புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கு அடுத்த மாதம் (ஏப்ரல்) 19-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி, அ.தி.மு.க. கூட்டணி, பாரதிய ஜனதா கூட்டணி மோதும் அரசியல் களத்தில் நாம் தமிழர் கட்சி தனியாக களம் இறங்கி உள்ளது. தேர்தலுக்கு இன்னும் 20 நாட்களே உள்ள நிலையில் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. வேட்பாளர்களை ஆதரித்து கட்சி தலைவர்கள் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில், தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் வேணுகோபால் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் பிரசாரம் செய்த நிலையில், பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது பேசிய அண்ணாமலை, 'ஸ்ரீபெரும்புதூரில் இருக்க கூடிய அன்பு சொந்தங்களே நீங்கள் உணர்ந்து கொள்ளவேண்டும். ஒருத்தர் சம்பந்தமே இல்லாம 1980-ல் பேசியதே பேசுறாங்க. இந்தி, சமஸ்கிருதம், இது, அது, வடக்கு தெற்கு-ன்னு. இன்னும் இந்த பிஞ்சி போன செருப்ப அவங்க தூக்கி எரியலைங்க. இது தி.மு.க.' என்று பேசியதற்கு கண்டனங்கள் வலுத்து வருகிறது.
- தி.மு.க.வில் அப்பா அமைச்சர், மகன்கள் எம்.பி, எம்.எல்.ஏ.வாக உள்ளனர் என்பதனை நீங்கள் பார்க்க வேண்டும்.
- டி.ஆர்.பாலு மனைவி சொத்து மதிப்பு 450 சதவீதம் அதிகரித்து உள்ளது.
கடலூர்:
கடலூரில் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது-
அகில இந்திய அளவில் மோடி வழங்கக்கூடிய வாக்குறுதிகள், தமிழ்நாடு சம்பந்தமான வாக்குறுதி ஏப்ரல் முதல் வாரத்தில் வருகிறது. பா.ஜ.க. சின்னத்தில் போட்டியிடக்கூடிய தொகுதிக்கு தனி வாக்குறுதி வழங்கப்படும்.
கேள்வி:-பிரதமர் மோடி தமிழ்நாட்டில் குடும்ப ஆட்சி நடைபெறுகிறது என கடும் விமர்சனம் எழுப்பி உள்ளார். ஆனால் தமிழகத்தில் பா.ம.க.வுடன் பா.ஜ.க. கூட்டணி வைப்பது தொடர்பாக தொடர்ந்து சர்ச்சை எழுப்புகிறது.
பதில்-டாக்டர் சவுமியா அன்புமணி தர்மபுரியில் போட்டியிடுகிறார். சுற்றுச்சூழலுக்காக தங்கள் வாழ்க்கையை தியாகம் செய்து உள்ளார். மேலும் கட்சிக்கு வந்தவுடன் சீட்டு வாங்கவில்லை. தனி அங்கீகாரத்துடன் சவுமியா அன்புமணி போட்டியிடுகிறார். இதில் எப்படி தவறு சொல்ல முடியும். மேலும் பா.ம.க.வில் தனி திறமை உள்ள வேட்பாளர்கள் தான் போட்டியிடுகின்றனர்.
மேலும் சிதம்பரம் தொகுதியில் முன்னாள் மேயரான பட்டியலின பெண் போட்டியிடுகிறார். இதன் மூலம் அவரை வெற்றி பெற செய்து உயர் பதவிக்கு கொண்டுவர போட்டியிட வைத்துள்ளோம். ஆனால் தி.மு.க.வில் அப்பா அமைச்சர், மகன்கள் எம்.பி, எம்.எல்.ஏ.வாக உள்ளனர் என்பதனை நீங்கள் பார்க்க வேண்டும்.
கடலூரில் தி.மு.க. எம்.பி. ரமேஷ் மீது கொலை வழக்கு உள்ளது. இதுதான் சாதனையாகும். இதன் காரணமாக தான் கடலூர் பாராளுமன்ற தொகுதியை கூட்டணிக்கு தி.மு.க. தள்ளிவிட்டு உள்ளனர். ஆகையால் தங்கர் பச்சானுக்கு போட்டி யாரும் இல்லை.
கே-பா.ஜ.க.வுடன் உள்ள கூட்டணி கட்சிக்கு அவர்கள் விருப்பப்படும் சின்னம் வழங்கப்பட உள்ளதா குற்றச்சாட்டு உள்ளதே?
ப:-தேர்தல் ஆணையத்திற்கு தனியாக விதிமுறைகள் இருக்கிறது. ஆனால் நாம் தமிழர் கட்சி சார்பில் சின்னம் கிடைப்பதற்கு முன்னதாகவே பதிவு செய்யவில்லை. ஆனால் தேர்தல் ஆணையத்தில் யார் முன்னதாக சின்னம் கேட்டு பதிவு செய்கின்றார்களோ அவர்களுக்கு சின்னம் வழங்கப்பட்டு வருகிறது.
மேலும் தமிழ் மாநில காங்கிரஸ் மற்றும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் முதலில் அவர்களுக்கு தேவையான சின்னங்கள் தொடர்பாக கேட்டுள்ளனர். மேலும் இவர்கள் கேட்பதற்கு முன்பாக யாரும் அந்த சின்னத்தை கேட்கவில்லை. இதன் அடிப்படையில் தேர்தல் ஆணையம் முன்னுரிமை அடிப்படையில் இவர்களுக்கு சின்னம் ஒதுக்கி உள்ளனர். மேலும் ஒரு இடத்தில் நிற்கக்கூடிய கட்சிகளுக்கு அவர்கள் கேட்கும் சின்னம் வழங்குவது தொடர்பாக தேர்தல் ஆணையம் எடுக்கும் முடிவாகும். தேர்தல் சின்னம் ஒதுக்குவது தொடர்பாக நீதிமன்றங்கள் தெளிவான விளக்கம் மற்றும் உத்தரவு வழங்கி உள்ளனர்.
தற்போது நாம் தமிழர் கட்சி சீமான் ஒவ்வொரு முறையும் நடைபெறும் தேர்தலில் ஒவ்வொரு கட்சியினரும் புது புது சின்னத்தில் போட்டியிட வேண்டும் என தெரிவித்துள்ளார்.
அரசியலுக்கு வந்து விட்டால் களத்தில் உறவினர்கள், அண்ணன், தம்பி என்று பார்க்கக்கூடாது. இங்கு நிற்கக்கூடிய தங்கர் பச்சான் பலமான வேட்பாளராக உள்ளார். மேலும் பா.ம.க. சார்பில் நிறுத்தப்பட்டுள்ள இந்த வேட்பாளர் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக நிற்க வைத்துள்ளனர். நான் ஐ.பி.எஸ். ஆக இருந்தபோது சொந்த பணத்தில் நிலம் வாங்கினேன். தற்போது அதனுடைய மதிப்பு 11 சதவீதம் உயர்ந்துள்ளது. ஆனால் டி.ஆர்.பாலு மனைவி சொத்து மதிப்பு 450 சதவீதம் அதிகரித்து உள்ளது. நான் தேர்தலில் நிற்பது நல்ல அரசியலுக்காகவும், மாற்றத்திற்காகவும் நிற்கின்றேன். மேலும் கோயம்புத்தூரில் ஓட்டுக்கு ஒரு ரூபாய் கிடையாது என திட்ட வட்டமாக தெரிவித்துள்ளேன். அங்குள்ளவர்களிடம் சவால் விட்டு உள்ளேன். ஆனால் மற்ற கட்சியினர் இதனை சொல்ல தயாராக உள்ளனரா? நேர்மையான அரசியலை நான் முன்னெடுத்து உள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.






