என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • தேர்தல் பிரசாரத்துக்கு இன்னும் 17 நாட்களே உள்ள நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • 700 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் திருச்சி தில்லைநகர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    திருச்சி:

    பாராளுமன்ற தேர்தல் களம் தமிழகத்தில் சூடு பிடித்துள்ளது. தேர்தல் பிரசாரத்துக்கு இன்னும் 17 நாட்களே உள்ள நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில், பாஜக மாநில தலைவரும், கோவை பாராளுமன்ற தொகுதி வேட்பாளருமான அண்ணாமலை உட்பட 700 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    திருச்சி தொகுதியில் போட்டியிடும் அ.ம.மு.க. வேட்பாளர் செந்தில்நாதனை ஆதரித்து அண்ணாமலை நேற்று பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது இரவு 10 மணிக்கு மேல் பிரசாரத்தில் ஈடுபட்டதாக புகார் கூறப்பட்டது.

    இதையடுத்து தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக அண்ணாமலை, அமமுக வேட்பாளர் செந்தில் நாதன், அமமுக அமைப்பு செயலாளர் சாருபாலா தொண்டைமான் உட்பட 700 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் திருச்சி தில்லைநகர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    • ஆரத்தி எடுத்த பெண்களுக்கு பணம் கொடுத்த விவகாரத்தில் நடவடிக்கை.
    • அறந்தாங்கி போலீசாரிடம் கண்காணிப்பு குழு அதிகாரி அருள் புகார்.

    பாராளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயகக்கூட்டணியில் அங்கும் வகிக்கும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ராமநாதபுரம் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இத்தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக களமிறங்கும் ஓ. பன்னீர்செல்வம் சுயேட்சை சின்னத்தில் போட்டியிடுகிறார்.

    இதற்கிடையே, ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு பலாப்பழம் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    இந்நிலையில், ராமநாதபுரம் வேட்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    அறந்தாங்கியில் நேற்று காலை ஆரத்தி எடுத்த பெண்களுக்கு பணம் கொடுத்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    மேலும், அனுமதிக்கப்பட்ட நேரத்துக்கு முன்பாகவே ஓ.பன்னீர்செல்வம் கூட்டம் நடத்தியதாக புகார் எழுந்துள்ளது.

    இதுதொடர்பாக, ஓ.பன்னீர்செல்வம் மீது அறந்தாங்கி போலீசாரிடம் கண்காணிப்பு குழு அதிகாரி அருள் புகார் அளித்துள்ளார்.

    புகாரின் அடிப்படையில் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெறுகிறது.

    • உழவர் சந்தையில் காய்கறி வாங்க வந்தவர்களிடம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உரையாடினார்.
    • திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து தொகுதி வாரியாக பிரசாரம்.

    தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது.

    இந்த தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் மற்றும் கூட்டணி கட்சிகள் தங்களின் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதேபோல், முதலமைச்சர் மு.க ஸ்டாலின் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து தொகுதி வாரியாக பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

    இந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை ஈரோட்டில் நடைபயிற்சி செய்தபடியே பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்.

    ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து சம்பத் நகர் சாலை வழியாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உழவர் சந்தைக்கு சென்றார்.

    அப்போது, உழவர் சந்தையில் காய்கறி வாங்க வந்தவர்களிடம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உரையாடினார்.

    தொடர்ந்து, முதலமைச்சருடன் பொது மக்கள் ஆர்வத்துடன் வந்து செல்பி எடுத்துக் கொண்டனர்.

    • விபத்து தொடர்பாக 12 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
    • விபத்து தொடர்பாக போலீசார் அதிரடி விசாரணை.

    சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மதுபான விடுதியில் கடந்த 28 ஆம் தேதி மாலை முதல் மாடியின் மேல்தளம் திடீரென இடிந்து விழுந்தது. இதில் கட்டிட இடிபாட்டில் சிக்கி மணிப்பூர் மாநிலத்தை சேர்ந்த மேக்ஸ் என்ற வாலிபர், திருநங்கை லவ்லி மற்றும் திண்டுக்கல்லை சேர்ந்த சைக்ளோன் ராஜ் ஆகிய 3 பேர் உயிரிழந்தனர்.

    கட்டிடம் இடிந்து விழுந்தபோது டமார் என்று பயங்கர சத்தம் கேட்டுள்ளது. இதனால் அப்பகுதி முழுவதுமே அதிர்வலைகள் ஏற்பட்டுள்ளன. இதுபற்றி தகவல் கிடைத்ததும் தென்சென்னை போலீஸ் கூடுதல் கமிஷனர் பிரேமானந்த் சின்கா, இணை கமிஷனர் சிபி சக்ரவர்த்தி மற்றும் போலீஸ் அதிகாரிகள் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    மதுபான விடுதி விபத்து தொடர்பாக 12 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இவர்களில் விடுதி மேலாளர் சதீஸ் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் கட்டிடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தது தொடர்பாக போலீசார் அதிரடியாக விசாரணை நடத்தி வருகிறார்கள். மற்ற 11 பேர் மீதும் போலீசார் நடவடிக்கை எடுக்க உள்ளனர்.

    விபத்தில் சிக்கிய விடுதியின் உரிமையாளரான அசோக் குமார் தப்பி ஓடி தலைமறைவாகிவிட்டதாக கூறப்பட்டது. இந்த நிலையில், மதுமான விடுதயின் உரிமையாளர் அசோக் குமார் அபிராமபுரம் காவல் நிலையத்தில் சரண் அடைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. 

    • வேப்பூர் பகுதியை சேர்ந்த 4 பெண்கள் தங்கள் குலதெய்வ கோவிலான முனீஸ்வரன் கோவிலுக்கு சென்றுள்ளனர்
    • கோவிலில் வழிபாடு செய்தபின் மாலை 5 மணியளவில் 4 பெண்களும் கோவில் அருகே உள்ள ஏரியில் குளித்துள்ளனர்

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே வேப்பூர் பகுதியில் பகுதியை சேர்ந்த 4 பெண்கள் உள்பட குடும்பத்தினர் வனப்பகுதியில் உள்ள தங்கள் குலதெய்வ கோவிலான முனீஸ்வரன் கோவிலுக்கு இன்று காலை சென்றுள்ளனர்.

    கோவிலில் வழிபாடு செய்தபின் மாலை 5 மணியளவில் 4 பெண்களும் கோவில் அருகே உள்ள ஏரியில் குளித்துள்ளனர். அப்போது, ஏரியில் ஆழம் அதிகமாக இருந்த நிலையில் 4 பெண்களும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்

    தற்போது அனைவரின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளது. விபத்து குறித்து குடியாத்தம் நகர போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • திராவிட மாடலின் குரல் தெற்கில் மட்டும் ஒலிக்கவில்லை. வடக்கிலும் ஒலிக்கிறது. வடக்கிற்கும் சேர்த்தே ஒலிக்கிறது.
    • ஒரு மாநில அரசு எப்படி செயல்பட வேண்டும் என்பதற்கு நான்தான் எடுத்துக்காட்டு.

    தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் சேலம், கள்ளக்குறிச்சி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரித்தார். இருவரையும் ஆதரித்து பெத்தநாயக்கன்பாளையத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசினார்.

    அப்போது மு.க. ஸ்டாலின் கூறியதாவது:-

    * திராவிட மாடலின் குரல் தெற்கில் மட்டும் ஒலிக்கவில்லை. வடக்கிலும் ஒலிக்கிறது. வடக்கிற்கும் சேர்த்தே ஒலிக்கிறது.

    * ஒரு மாநில அரசு எப்படி செயல்பட வேண்டும் என்பதற்கு நான்தான் எடுத்துக்காட்டு.

    * ஒரு மத்திய அரசு எப்படி செயல்படக் கூடாது என்பதற்கு பா.ஜனதா அரசுதான் எடுத்துக்காட்டு.

    * சேலத்திற்கு வந்த பிரதமர் மோடி, பா.ஜனதாவுக்கு கிடைத்திருக்கும் ஆதரவால் திமுக-வின் தூக்கம் தொலைந்துவிட்டதாக பேசிவிட்டு சென்றார்.

    * உண்மையிலேயே தூக்கத்தை தொலைத்தவர்கள், இவர்கள்தான் (10 ஆண்டு ஆட்சிக்காலத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு மூலம் பாதிக்கப்பட்ட சாமானிய மக்கள். சிலிண்டர் விலை உயர்வு மூலம் தாய்மார்கள், ஏழைகள். வேலையில்லா திண்டாட்டம் மூலம் இளைஞர்கள். ஜிஎஸ்டி மூலம் சிறுகுறு தொழில் நடத்துபவர்கள். 3 சட்டங்கள் மூலம் உழவர்கள். சிஏஏ மூலம் சிறுபான்மையினர் மக்கள்.)

    * இப்படி 10 ஆண்டு கால ஆட்சியில் ஒட்டுமொத்த நாடே தூக்கத்தை தொலைத்துவிட்டு தவிக்கிறது.

    * தற்போது உச்சநீதிமன்ற உத்தரவால் வெளிவந்துள்ள தேர்தல் பத்திரம் ஊழலால் பிரதமர் மோடி தூக்கத்தை தொலைச்சிட்டார்.

    * இன்னொரு முக்கிய காரணம் மத்திய உளவுத்துறை கொடுத்த ரிப்போர்ட். தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பு வரை தென்மாநிலங்களில் பா.ஜனதாவால் வெற்றி பெற முடியாத நிலை இருந்தது. தேர்தல் பத்திரம் ஊழல் வந்த பிறகு வட மாநிலங்களிலும் வெற்றி பெற முடியாது என உளவுத்துறை ரிப்போர்ட் கொடுத்துள்ளது. இதனால்தான் தூக்கத்தை தொலைத்துவிட்டு பதட்டப்படுகிறார்.

    பதட்டத்தில் ஹேமந்த் சோரன், டெல்லி மாநில முதல்வர் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறையால் கைது செய்கிறார். காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களுக்கு வருமான வரித்துறையை ஏவிவிட்டு நோட்டீஸ் விடுகிறார்.

    எதிர்க்கட்சி எம்.பி.க்கள் எதிர்த்து பேசினால் சிபிஐ ரெய்டு விடுகிறார். கூட்டணி கட்சிகளை போன்று அமலாக்கத்துறை, சிபிஐ, வருமானவரித்துறையை பயன்படுத்துகிறார் என்றால் உச்சக்கட்ட தோல்வி பயத்தில் இருக்கிறார் என்று அர்த்தம். ஆட்சி வரவேண்டும் என்ற வெறியில் இந்திய ஜனநாயகத்தை சீரழித்துக் கொண்டு இருக்கிறார்.

    இவ்வாறு முக ஸ்டாலின் குறிப்பிட்டார்.

    • தேர்தல் சின்னமாக பலாப்பழம், கிரிக்கெட் பேட் மற்றும் லாரி கேட்டுள்ளேன்.
    • ஒருவேளை பலாப்பழம் சின்னம் கிடைத்தால் தலையில் வச்சிட்டு ஓட்டு கேட்கப் போறேன்

    பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் முதல்கட்டமாக ஏப்ரல் 19ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் இந்திய ஜனநாயக புலிகள் என்ற கட்சியை தொடங்கிய மன்சூர் அலிகான் போட்டியிடுகிறார்.

    வேலூர் தொகுதியில் போட்டியிடுவதாக அறிவித்த அவர் இன்று வேலூரில் தேர்தல் அலுவலகம் சென்று முதல் ஆளாக வேட்புமனு தாக்கல் செய்தார்.

    அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் "இந்திய ஜனநாயக புலிகள்தான் என் கட்சி. ஆனால் இன்னும் அதற்கு ஒப்புதல் அளிக்கப்படவில்லை. அதற்கு சில மாதங்கள் ஆகும். தற்போது சுயேட்சையாகதான் நிற்கிறேன். தேர்தல் சின்னமாக பலாப்பழம், கிரிக்கெட் பேட் மற்றும் லாரி கேட்டுள்ளேன். லாரிக்கு தமிழில் சரக்கு உந்து என்று பெயர். சரக்கு என்றால் அந்த சரக்கு இல்லை.

    ஒருவேளை பலாப்பழம் சின்னம் கிடைத்தால் தலையில் வச்சிட்டு ஓட்டு கேட்கப் போறேன் என்று நகைச்சுவையாக பேசினார் மன்சூர் அலிகான்.

    இந்நிலையில், வேலூர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் நடிகர் மன்சூர் அலிகானுக்கு 'பலாப்பழம்' சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    • தமிழிசைக்கு குரு பெயர்ச்சி மாறிபோய் விட்டது.
    • அண்ணனின் இயல்பை ரசிப்பவள் நான்.

    சென்னை:

    தேர்தல் களத்தில் பிரசார அனல் வீசினாலும் அவ்வப்போது பெரிய தலைவர்களின் பேச்சுக்கள் சிரிப்பு, சிந்தனை, நையாண்டியோடு வாழைப் பழத்தில் ஊசி இறக்குவது போல் அவர்கள் நயமாக பேசுவது தென்றலாக வந்து செல்லும்.

    அப்படித்தான் தி.மு.க.வின் மூத்த தலைவரான அமைச்சர் துரைமுருகனின் பேச்சும் தேர்தல் களத்தில் கலகலப்பை ஏற்படுத்தியது.

    தென்சென்னை தொகுதி தி.மு.க. வேட்பாளரான தமிழச்சி தங்கபாண்டியனை ஆதரித்து அவர் பிரசாரம் செய்தார். வழக்கம் போலவே தனது நகைச்சுவை கலந்த பேச்சை மலரும் நினைவுகளோடு பேசினார். அவர் பேசியதாவது:-

    உனக்கு ரொம்ப அதிர்ஷ்டம். உன் பெயர் தமிழச்சி. எதிர்த்து போட்டியிடுபவர் தமிழிசை. கொஞ்சம் மாறினால் வேறு ராகத்துக்கு போய் விடும். ஜாக்கிரதையாக பேச வேண்டும். இப்போது என்னண்ணா அந்த அம்மாவும் (தமிழிசையும்) எனக்கு வேண்டியவர்தான்.

    என் வீட்டின் பின்னால்தான் குமரிஅனந்தன் குடியிருந்தார். தமிழிசை குழந்தையாக இருந்த போது கவுன் போட்டு கொண்டு வீட்டின் முன் விளையாடும். இப்போ அது தலைவராகி, கவர்னராகி விட்டது.


    ஒரு திருமண நிகழ்ச்சியில் இருவரும் கலந்து கொண்டோம். அந்த நிகழ்ச்சியில் என்னை முதலில் பேச விட்டு அவரை பேசவைத்தனர். அதை பார்த்ததும் அவரை அழைத்து சிரித்துக் கொண்டே நீயெல்லாம் தலைவர் என்றேன். அதையும் பேசும் போது அப்படியே சொல்லிவிட்டார்.

    தமிழிசைக்கு குரு பெயர்ச்சி மாறிபோய் விட்டது. இல்லை என்றால் கவர்னர் பதவியை விட்டு விட்டு வருமா? ஒரு மாநிலத்துக்கு அல்ல. இரண்டு மாநிலங்களுக்கு கவர்னராக இருந்தவர். ஒரு வேலையும் கிடையாது. காலை எழுந்து சாப்பிட்டு விட்டு ஒரு பைல் வந்தால் கையெழுத்து போட வேண்டியது. அதன் பிறகு நிம்மதியாக இருக்கலாம்.

    இப்போ அரசனை நம்பி புருஷனை கைவிட்ட கதையாகி விட்டது. எனக்கு முன் கூட்டியே தெரிந்திருந்தால் போன் போட்டு வேண்டாம்மானு சொல்லி இருப்பேன்.

    அதிலும் தென்சென்னனக்கு வரலாமா? தமிழச்சி பாராளுமன்றத்துக்கு தகுதியானவர். தமிழச்சி ஆங்கிலத்தில் புலமை பெற்று பேராசிரியையாக இருந்தார். அவர் பேசியபோது சபையே அதிர்ந்து போனது என்றார்.

    அமைச்சர் துரைமுருகனின் பேச்சுக்கு டாக்டர் தமிழிசையும் தனது பாணியில் பதிலடி கொடுத்து உள்ளார். அவர் கூறியதாவது:-

    அண்ணன் துரைமுருகன் அவர்களே உங்கள் மீதான மதிப்பும், மரியாதையும் தனி என்பது தமிழிசைக்கும் புரியும்.


    உங்கள் வீட்டு முன்பு கவுன் போட்டுக் கொண்டு நானும், உங்கள் மகன் தம்பி கதிர்ஆனந்த், அண்ணன் ரகுமான்கான் மகன் தம்பி சுபீர் எல்லாம் விளையாடி கொண்டிருப்பதும் அப்போது நாங்கள் உங்களை பார்த்ததும் நீங்கள் எங்களை சிரிக்க வைத்து மகிழ்வதும் மறக்க முடியாத மலரும் நினைவுகள்தான்.

    நீங்கள் பார்த்து வளர்ந்த பிள்ளை நான். கட்சிக்காக எனக்கு எதிராக நீங்கள் பேசினாலும் நான் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணம் உங்கள் உள்மனதில் இருக்கும். உங்கள் உதடுகள் பேசினாலும் உள்ளம் பேசாது.

    அண்ணன் அவர்களே, நீங்களே கூறி விட்டீர்கள் கவர்னர் பதவி எவ்வளவு சொகுசானது என்று. அப்படிப்பட்ட சொகுசான, கவுரவமான பதவியையே வேண்டாம் என்று நான் குடியிருக்கும் தென் சென்னையில் போட்டியிடுகிறேன் என்றால் எல்லோருக்கும் ஒரு கனவு இருக்கும். அதை சொகுசான பதவி நிறைவேற்றி வைக்காது. மக்களோடு இருந்து நேரடியாக மக்களுக்கு சேவை செய்யும் ஆசையில் வந்திருக்கிறேன்.

    இந்த நேரத்தில் உங்களை நினைத்து சநதோசப்படுகிறேன். நாங்கள் கடவுள் நம்பிக்கை உடையவர்கள். உங்களுக்கும் குரு பெயர்ச்சி மீது நம்பிக்கை வந்திருக்கிறது. அதை நினைத்து மகிழ்கிறேன்.

    எனக்கு பெயர்ச்சிகள் சாதகமாகவே இருந்து வருகின்றன. கட்சி தலைவராகவும், கவர்னராகவும் பெயர்ச்சி நடந்தது. இப்போது பாராளுமன்றத்தை நோக்கி பெயர்கிறது.

    அண்ணனின் இயல்பை ரசிப்பவள் நான். ஆனால் கொஞ்சம் அகங்காரத்தோடு பேசுகிறீர்கள். பெயரில் தமிழச்சி, நீங்களெல்லாம் முழுங்குவதும் தமிழ் தமிழ் என்றுதான். ஆனால் தமிழச்சி பாராளுமன்றத்தில் ஆங்கிலத்தில் பிய்த்து உதறி விட்டார் என்று பெருமை பேசுகிறீர்கள்.

    உங்கள் தமிழ் பேச்சு இவ்வளவு தானா? ஊருக்கு தான் உபதேசமா? பாராளுமன்றத்தில் தாய்மொழி தமிழில் பேசும் உரிமையை குமரிஅனந்தன் எப்போதோ பெற்று தந்து விட்டாரே. ஆங்கில புலமை பெற்றிருந்தும் தமிழில் பேசி அதிர வைத்தார். அவரது போராட்ட வெற்றியை கலைஞரும் பாராட்டினார் என்பதை நீங்களும் அறிவீர்கள்.

    நான் இரு மாநிலங்களிலும் தமிழில்தான் பதவி பிரமாணம் எடுத்து கொண்டேன். தமிழ் மீது அக்கறை இருந்தால் கன்னிப் பேச்சை அன்னை தமிழில் அல்லவா பேச செய்து இருக்க வேண்டும்.

    தமிழ் மொழியில் பேசுவதையே அவமானமாக கருதுகிறார்கள் தி.மு.க. எம்.பி.க்கள். ஆனால் என் தாய்மொழியாக தமிழ் இல்லாமல் போய் விட்டதே என்று பிரதமர் மோடி ஆதங்கப்படுகிறார். தாய் மொழியில் பாராளுமன்றத்தில் பேசும் உரிமையை கூட விட்டுக் கொடுத்தவர்கள் நீங்கள்.

    பேசி பேசியே மக்களை மயக்கியவர்கள் நீங்கள். மக்கள் மயக்கம் தெளிந்து விட்டார்கள். உண்மையை உணர்ந்து கொண்டார்கள். சூரியன் உதித்தாலும் சரி, உதிக்காவிட்டாலும் சரி. தாமரை மலரும் காலம் இது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • விசிக என்றால் விடுதலை சிறுத்தைகள் கட்சி என்றுதான் நினைத்துக் கொண்டிருந்தேன்.
    • அடித்தட்டு மக்களின் உயர்வுக்காக உழைப்பார் என பிரதமரால் தேர்வு செய்யப்பட்டவர் கார்த்தியாயினி.

    சிதம்பரம்:

    சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை இன்று வேட்பாளர் கார்த்தியாயினிக்கு வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது:

    சிதம்பரம் தொகுதியில் திருமாவளவனை அனைவரும் சேர்ந்து தோற்கடிக்க செய்யவேண்டும். அதனால்தான் நாம் எல்லோரும் களத்தில் நின்று கொண்டிருக்கிறோம்.

    யாராக இருந்தாலும் தனது அதிகார பலத்தை வைத்து முடக்கிவிடலாம் என்று நினைக்கக்கூடிய தொல். திருமாவளவனை சிதம்பரம் தொகுதி மக்கள் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் இந்த முறை தோற்கடித்து பாடம் புகட்டவேண்டும்.

    விசிக என்றால் விடுதலை சிறுத்தைகள் கட்சி என்றுதான் நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் இப்போதுதான் தெரிகிறது, அது விழுப்புரம் சிதம்பரம் கட்சி என்று.

    திருமாவளவன் அதிக தொகுதிகளை கேட்டாரு. பொது தொகுதியை கேட்டாரு. கூட்டணி மாறிவிடலாம் என்றுகூட யோசிச்சாரு. ஆனால் தி.மு.க. தலைமை இறங்கி வரவில்லை. திருமாவளவன் மீது திமுக வைத்திருக்கும் மரியாதை அவ்வளவுதான்.

    பா.ஜ.க. வேட்பாளர் அக்கா கார்த்தியாயினியை வெற்றிபெற செய்யவேண்டும். அக்கா கார்த்தியாயினி அரசியல் தெரிந்தவர். நிர்வாகத் திறன் மிக்கவர். மேயராக பணியாற்றியவர். அடித்தட்டில் இருந்து மேலே வந்த கார்த்தியாயினி, அடித்தட்டு மக்களின் உயர்வுக்காக உழைப்பார் என பிரதமர் மோடியால் தேர்வு செய்யப்பட்டவர் என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என் தெரிவித்தார்.

    • கார் பழனி அருகே வந்தபோது அதனை சுற்றி வளைத்தனர்.
    • காரில் வந்தவரை பிடித்து விசாரித்ததில் அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார்.

    பழனி:

    திண்டுக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பகல் நேரங்களில் பூட்டியிருக்கும் வீடுகளை நோட்டமிட்டு காரில் வந்து மர்ம நபர் திருடிச் செல்லும் சம்பவம் அதிகரித்து வந்தது. அவர் வந்த காரின் எண்ணை வைத்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    அப்போது அதே பதிவெண் கொண்ட கார் திருப்பூரிலும் நடமாடி வந்தது. மேலும் அந்த காரில் இருந்த மர்மநபர் திருப்பூர் மாவட்டத்திலும் பல்வேறு வீடுகளில் கைவரிசை காட்டி வந்துள்ளார். இவரை பிடிக்க திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி. பிரதீப் உத்தரவின் பேரில் பழனி டி.எஸ்.பி. தனஞ்செயன் மேற்பார்வையில் பழனி தாலுகா இன்ஸ்பெக்டர் தென்னரசன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் தியாகராஜன் மற்றும் போலீசார் கார்த்திகேயன், முபாரக் கொண்ட தனிப்படையினர் தீவிரமாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    அப்போது சம்மந்தப்பட்ட பதிவெண் கொண்ட கார் பழனி அருகே வந்தபோது அதனை சுற்றி வளைத்தனர். காரில் வந்தவரை பிடித்து விசாரித்ததில் அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார். போலீஸ் நிலையத்திற்கு வரவழைத்து விசாரித்ததில் அவர் சிவகங்கை மாவட்டம் தெற்கு தமராக்கி பகுதியை சேர்ந்த அய்யனார் மகன் அதிபதிராஜா (வயது 23) என தெரியவந்தது.

    இவர் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து விதவிதமான கார் பதிவெண்களை கொண்டு பகல் நேரங்களில் பூட்டியிருக்கும் வீடுகளை நோட்டமிட்டு கொள்ளையடித்து வந்துள்ளனர். இதனை தொடர்ந்து அவரிடமிருந்து 2 கார்கள், போலி பதிவெண்கள், கையுறை, முகமுடி, பூட்டை உடைக்க பயன்படுத்தப்படும் ஆயுதங்கள் ஆகியவற்றை கைப்பறினர்.

    மேலும் அதிபதிராஜாவை பழனி கோர்ட்டில் ஆஜர்படுத்தி திண்டுக்கல் சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய சிவகங்கை மாவட்டம் ஆவாரங்காட்டை சேர்ந்த பல கொள்ளை வழக்குகளில் தொடர்புடைய சுள்ளான் அகிலன், நித்தீஸ், கேடி கண்ணன், மதுரை ஒத்தக்கடையை சேர்ந்த அராத் என்ற பாசில் ஆகியோரை தேடி வருகின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.
    • ம.தி.மு.க., விடுதலைச் சிறுத்தைக்கு முந்தைய தேர்தலில் ஒதுக்கப்பட்ட சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கவில்லை.

    சென்னை:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இந்த தேர்தலில் ம.தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள், நாம் தமிழர் ஆகிய கட்சிகளுக்கு முந்தைய தேர்தல்களில் ஒதுக்கப்பட்ட சின்னத்தை இந்த தேர்தலில் தேர்தல் ஆணையம் ஒதுக்கவில்லை.

    தேர்தல் ஆணையம் ஒருதலைபட்சமாக செயல்படுவதாகவும், நீதிமன்றம் வரை சென்றும் கேட்ட சின்னம் கிடைக்கவில்லை என அக்கட்சிகள் குற்றம்சாட்டி உள்ளன.

     

    அதேவேளையில், பா.ஜ.க. கூட்டணியில் உள்ள பா.ம.க., தமிழ் மாநில காங்கிரஸ், அ.ம.மு.க. போன்ற கட்சிகளுக்கு அவர்கள் கேட்ட சின்னங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதற்கு பின்னால் பா.ஜ.க.வின் தலையீடு இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.

    2 தொகுதிகளில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சி, பானை சின்னம் கோரி தேர்தல் ஆணையத்தை அணுகி கிடைக்காததால் டெல்லி உயர்நீதிமன்றத்தை நாடியது. ஆனால், ஒரு சதவீதத்திற்கும் குறைவாக வாக்கு சதவீதம் கொண்டிருப்பதாகவும், சில விதிமுறைகளைப் பின்பற்ற முடியவில்லை எனக்கூறி பானை சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுத்துவிட்டது.

    அதேபோன்று, ம.தி.மு.க.வுக்கு குறைந்தது 2 தொகுதியிலாவது போட்டியிட்டால்தான் சின்னம் ஒதுக்கப்படும் எனக்கூறி பம்பரம் சின்னத்தை வழங்க தேர்தல் ஆணையம் மறுத்தது.

    இந்நிலையில், ம.தி.மு.க.வுக்கு பம்பரம் சின்னம் மறுக்கப்பட்டதால் தீப்பெட்டி சின்னத்தை தேர்தல் ஆணையம் இன்று ஒதுக்கியது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நாராயணசாமிக்கு தான் வெற்றி உறுதியாகி இருக்கிறது.
    • ஜெயலலிதா இருந்தவரை உங்களை பார்த்து பயந்தது உண்மைதான்.

    தேனி:

    பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் தேனி தொகுதியில் போட்டியிடும் நாராயணசாமியை ஆதரித்து முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது:-

    பாஜக கூட்டணியில் அமமுக என்று சொல்லுபவர் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த பக்கம் எட்டிப்பார்க்காதவர், வராதவர். ஜெயலலிதாவால் நடவடிக்கை எடுக்கப்பட்டு கட்சியில் இருந்து 10 ஆண்டுகளுக்கும் மேலே ஒதுக்கி வைக்கப்பட்டார். ஜெயலலிதா மறைந்த பிறகுதான் அவர் தமிழ்நாட்டிலேயே தலை காட்ட ஆரம்பித்தார்.

    ஆர்.கே.நகர் தேர்தலில் நின்று மக்களிடையே 20 ரூபாய் நோட்டை காண்பித்து ஏமாற்றி அந்த தொகுதி பக்கமே போகாமல் அந்த தொகுதியிலே நிற்க முடியாமல் கோவில்பட்டியில் கடந்த சட்டமன்ற தேர்தலில் நின்றார். அங்கேயும் மக்கள் அவர் மீது நம்பிக்கை வைக்காமல் அவரை புறக்கணித்து தோல்வி அடையச் செய்தார்கள். கடைசி புகலிடமாக தேனி பாராளுமன்ற தொகுதியை தேடி வந்திருக்கிறார். இங்கேயும் மக்கள் ஏற்க தயாராக இல்லை. வீராப்பு எல்லாம் தேனி தொகுதியில் எடுபடாது என்று அவருக்கு தெரியும்.

    நாராயணசாமிக்கு தான் வெற்றி உறுதியாகி இருக்கிறது. ஜெயலலிதா இருந்தவரை உங்களை பார்த்து பயந்தது உண்மைதான். இப்ப எல்லாம் நீங்கள் காட்டுகிற பூச்சாண்டிக்கு எல்லாம் புழு கூட பயப்படாது. அ.தி.மு.க. தொண்டன் சுதந்திர காற்றை சுவாசிக்கிறான். உங்களிடம் இருந்து விடுதலை பெற்று இந்த இயக்கமும், இந்த இயக்க தொண்டர்களும் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சுதந்திர காற்றை சுவாசிக்கிறோம். அதனால் இந்த பூச்சாண்டி காட்டுறது, நையாண்டி பண்றது எல்லாம் ஜெயலலிதா இருந்தவரைக்கும் கேட்டுக்கிட்டு இருந்தது உண்மைதான். உங்க வீட்டுக்கு காவல் நாயாக இருந்திருக்கிறோம். இப்ப நீங்க எங்களை சீண்டி பார்த்தீங்கன்னு சொன்னா அதுக்கு அ.தி.மு.க. இரண்டரை கோடி தொண்டர்கள் சீறும் சிங்கமாக விஸ்வரூபம் எடுத்து இருக்கிறோம் என்று கூறினார்.

    ×