search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    நீங்கள் பார்த்து வளர்ந்த குழந்தை; உள்ளுக்குள் நான் ஜெயிக்க நினைப்பீர்கள்
    X

    'நீங்கள் பார்த்து வளர்ந்த குழந்தை; உள்ளுக்குள் நான் ஜெயிக்க நினைப்பீர்கள்'

    • தமிழிசைக்கு குரு பெயர்ச்சி மாறிபோய் விட்டது.
    • அண்ணனின் இயல்பை ரசிப்பவள் நான்.

    சென்னை:

    தேர்தல் களத்தில் பிரசார அனல் வீசினாலும் அவ்வப்போது பெரிய தலைவர்களின் பேச்சுக்கள் சிரிப்பு, சிந்தனை, நையாண்டியோடு வாழைப் பழத்தில் ஊசி இறக்குவது போல் அவர்கள் நயமாக பேசுவது தென்றலாக வந்து செல்லும்.

    அப்படித்தான் தி.மு.க.வின் மூத்த தலைவரான அமைச்சர் துரைமுருகனின் பேச்சும் தேர்தல் களத்தில் கலகலப்பை ஏற்படுத்தியது.

    தென்சென்னை தொகுதி தி.மு.க. வேட்பாளரான தமிழச்சி தங்கபாண்டியனை ஆதரித்து அவர் பிரசாரம் செய்தார். வழக்கம் போலவே தனது நகைச்சுவை கலந்த பேச்சை மலரும் நினைவுகளோடு பேசினார். அவர் பேசியதாவது:-

    உனக்கு ரொம்ப அதிர்ஷ்டம். உன் பெயர் தமிழச்சி. எதிர்த்து போட்டியிடுபவர் தமிழிசை. கொஞ்சம் மாறினால் வேறு ராகத்துக்கு போய் விடும். ஜாக்கிரதையாக பேச வேண்டும். இப்போது என்னண்ணா அந்த அம்மாவும் (தமிழிசையும்) எனக்கு வேண்டியவர்தான்.

    என் வீட்டின் பின்னால்தான் குமரிஅனந்தன் குடியிருந்தார். தமிழிசை குழந்தையாக இருந்த போது கவுன் போட்டு கொண்டு வீட்டின் முன் விளையாடும். இப்போ அது தலைவராகி, கவர்னராகி விட்டது.


    ஒரு திருமண நிகழ்ச்சியில் இருவரும் கலந்து கொண்டோம். அந்த நிகழ்ச்சியில் என்னை முதலில் பேச விட்டு அவரை பேசவைத்தனர். அதை பார்த்ததும் அவரை அழைத்து சிரித்துக் கொண்டே நீயெல்லாம் தலைவர் என்றேன். அதையும் பேசும் போது அப்படியே சொல்லிவிட்டார்.

    தமிழிசைக்கு குரு பெயர்ச்சி மாறிபோய் விட்டது. இல்லை என்றால் கவர்னர் பதவியை விட்டு விட்டு வருமா? ஒரு மாநிலத்துக்கு அல்ல. இரண்டு மாநிலங்களுக்கு கவர்னராக இருந்தவர். ஒரு வேலையும் கிடையாது. காலை எழுந்து சாப்பிட்டு விட்டு ஒரு பைல் வந்தால் கையெழுத்து போட வேண்டியது. அதன் பிறகு நிம்மதியாக இருக்கலாம்.

    இப்போ அரசனை நம்பி புருஷனை கைவிட்ட கதையாகி விட்டது. எனக்கு முன் கூட்டியே தெரிந்திருந்தால் போன் போட்டு வேண்டாம்மானு சொல்லி இருப்பேன்.

    அதிலும் தென்சென்னனக்கு வரலாமா? தமிழச்சி பாராளுமன்றத்துக்கு தகுதியானவர். தமிழச்சி ஆங்கிலத்தில் புலமை பெற்று பேராசிரியையாக இருந்தார். அவர் பேசியபோது சபையே அதிர்ந்து போனது என்றார்.

    அமைச்சர் துரைமுருகனின் பேச்சுக்கு டாக்டர் தமிழிசையும் தனது பாணியில் பதிலடி கொடுத்து உள்ளார். அவர் கூறியதாவது:-

    அண்ணன் துரைமுருகன் அவர்களே உங்கள் மீதான மதிப்பும், மரியாதையும் தனி என்பது தமிழிசைக்கும் புரியும்.


    உங்கள் வீட்டு முன்பு கவுன் போட்டுக் கொண்டு நானும், உங்கள் மகன் தம்பி கதிர்ஆனந்த், அண்ணன் ரகுமான்கான் மகன் தம்பி சுபீர் எல்லாம் விளையாடி கொண்டிருப்பதும் அப்போது நாங்கள் உங்களை பார்த்ததும் நீங்கள் எங்களை சிரிக்க வைத்து மகிழ்வதும் மறக்க முடியாத மலரும் நினைவுகள்தான்.

    நீங்கள் பார்த்து வளர்ந்த பிள்ளை நான். கட்சிக்காக எனக்கு எதிராக நீங்கள் பேசினாலும் நான் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணம் உங்கள் உள்மனதில் இருக்கும். உங்கள் உதடுகள் பேசினாலும் உள்ளம் பேசாது.

    அண்ணன் அவர்களே, நீங்களே கூறி விட்டீர்கள் கவர்னர் பதவி எவ்வளவு சொகுசானது என்று. அப்படிப்பட்ட சொகுசான, கவுரவமான பதவியையே வேண்டாம் என்று நான் குடியிருக்கும் தென் சென்னையில் போட்டியிடுகிறேன் என்றால் எல்லோருக்கும் ஒரு கனவு இருக்கும். அதை சொகுசான பதவி நிறைவேற்றி வைக்காது. மக்களோடு இருந்து நேரடியாக மக்களுக்கு சேவை செய்யும் ஆசையில் வந்திருக்கிறேன்.

    இந்த நேரத்தில் உங்களை நினைத்து சநதோசப்படுகிறேன். நாங்கள் கடவுள் நம்பிக்கை உடையவர்கள். உங்களுக்கும் குரு பெயர்ச்சி மீது நம்பிக்கை வந்திருக்கிறது. அதை நினைத்து மகிழ்கிறேன்.

    எனக்கு பெயர்ச்சிகள் சாதகமாகவே இருந்து வருகின்றன. கட்சி தலைவராகவும், கவர்னராகவும் பெயர்ச்சி நடந்தது. இப்போது பாராளுமன்றத்தை நோக்கி பெயர்கிறது.

    அண்ணனின் இயல்பை ரசிப்பவள் நான். ஆனால் கொஞ்சம் அகங்காரத்தோடு பேசுகிறீர்கள். பெயரில் தமிழச்சி, நீங்களெல்லாம் முழுங்குவதும் தமிழ் தமிழ் என்றுதான். ஆனால் தமிழச்சி பாராளுமன்றத்தில் ஆங்கிலத்தில் பிய்த்து உதறி விட்டார் என்று பெருமை பேசுகிறீர்கள்.

    உங்கள் தமிழ் பேச்சு இவ்வளவு தானா? ஊருக்கு தான் உபதேசமா? பாராளுமன்றத்தில் தாய்மொழி தமிழில் பேசும் உரிமையை குமரிஅனந்தன் எப்போதோ பெற்று தந்து விட்டாரே. ஆங்கில புலமை பெற்றிருந்தும் தமிழில் பேசி அதிர வைத்தார். அவரது போராட்ட வெற்றியை கலைஞரும் பாராட்டினார் என்பதை நீங்களும் அறிவீர்கள்.

    நான் இரு மாநிலங்களிலும் தமிழில்தான் பதவி பிரமாணம் எடுத்து கொண்டேன். தமிழ் மீது அக்கறை இருந்தால் கன்னிப் பேச்சை அன்னை தமிழில் அல்லவா பேச செய்து இருக்க வேண்டும்.

    தமிழ் மொழியில் பேசுவதையே அவமானமாக கருதுகிறார்கள் தி.மு.க. எம்.பி.க்கள். ஆனால் என் தாய்மொழியாக தமிழ் இல்லாமல் போய் விட்டதே என்று பிரதமர் மோடி ஆதங்கப்படுகிறார். தாய் மொழியில் பாராளுமன்றத்தில் பேசும் உரிமையை கூட விட்டுக் கொடுத்தவர்கள் நீங்கள்.

    பேசி பேசியே மக்களை மயக்கியவர்கள் நீங்கள். மக்கள் மயக்கம் தெளிந்து விட்டார்கள். உண்மையை உணர்ந்து கொண்டார்கள். சூரியன் உதித்தாலும் சரி, உதிக்காவிட்டாலும் சரி. தாமரை மலரும் காலம் இது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×