என் மலர்
உள்ளூர் செய்திகள்
- வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் சுற்றுலா பயணிகள் பெரும்பாலும் ஏரி பகுதியில் முகாமிட்டு படகு சவாரி செய்து மகிழ்ந்து வருகின்றனர்.
- போக்குவரத்து போலீசார் போதிய அளவு இல்லாததால் சுற்றுலா பயணிகள் சிரமம் அடைந்து வருகின்றனர்.
கொடைக்கானல்:
மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் வழக்கமாக சுற்றுலா பயணிகள் வருகை கோடை காலத்தில் அதிகரித்து காணப்படும்.
தற்போது பள்ளி இறுதி தேர்வு முடிந்துள்ளதாலும் தொடர் விடுமுறை காரணமாகவும், சுட்டெரிக்கும் கோடை வெயில் காரணமாகவும் கொடைக்கானலை நோக்கி தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்படுகிறது.
கொடைக்கானலிலும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் சுற்றுலா பயணிகள் பெரும்பாலும் ஏரி பகுதியில் முகாமிட்டு படகு சவாரி செய்து மகிழ்ந்து வருகின்றனர். ஏரியின் நடுவே செயற்கை நீரூற்று அமைக்கப்பட்டு அதன் அருகே செல்லும்போது ஷவர் பாத்தில் குளிப்பதுபோன்ற உணர்வு ஏற்படுவதால் சுற்றுலா பயணிகள் அதிகமாக படகு சவாரி செய்து வருகின்றனர்.
குடும்பத்துடனும், நண்பர்களுடனும் வரும் சுற்றுலா பயணிகள் ஒரே படகில் குழுவாக சென்று இதுபோன்ற குதூகலத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் குணா குகை பகுதியிலும் தொடர்ந்து சுற்றுலா பயணிகள் அதிகமாக குவிந்து புகைப்படம் எடுத்து செல்கின்றனர். அதன் அருகே நின்று குணா படத்தில் வரும் பாடலை பாடி சமூக வலைதலங்களில் பதிவிட்டு வருகின்றனர். மேலும் சுற்றுலா இடங்களான தூண்பாறை, பசுமை பள்ளத்தாக்கு பைன்பாரஸ்ட், பிரையண்ட் பூங்கா உள்ளிட்ட பகுதிகளிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதி வருகிறது.
ஏரிச்சாலையில் குதிரை சவாரி, சைக்கிள் ரைடிங் செய்தும் குழந்தைகள் மற்றும் சுற்றுலா பயணிகள் உற்சாகம் அடைந்தனர். சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பின் காரணமாக பல்வேறு இடங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போக்குவரத்து போலீசார் போதிய அளவு இல்லாததால் சுற்றுலா பயணிகள் சிரமம் அடைந்து வருகின்றனர்.
வரும் வாரங்களில் சுற்றுலா பயணிகளின் வருகை மேலும் அதிகரிக்கும் என்பதால் போக்குவரத்து காவலர்களை கூடுதலாக நியமிக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- சுய நலத்துக்காக தி.மு.க. மற்றும் பா.ஜ.க. ஆகிய கட்சிகள் கூட்டணி அமைக்கப்பட்டு உள்ளது.
- திருமாவளவன் பொதுத் தொகுதி கேட்டாலும் மு.க.ஸ்டாலின் தனித் தொகுதியையே தருகிறார்.
மதுரை:
மதுரை பாராளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து கட்சியின் கொள்கைபரப்பு இணைச் செயலாளரும், திரைப்பட நடிகையுமான விந்தியா செல்லூர் 50 அடி சாலை, முனிச்சாலை சந்திப்பு, வடக்கு மாசி வீதி-மேலமாசி வீதி சந்திப்பு, ஜீவா நகர் 1-வது தெரு சந்திப்பு ஆகிய இடங்களில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-
சுய நலத்துக்காக தி.மு.க. மற்றும் பா.ஜ.க. ஆகிய கட்சிகள் கூட்டணி அமைக்கப்பட்டு உள்ளது. இரண்டு கூட்டணியையும் மக்கள் நம்ப தாயாராக இல்லை. வைகோ தனது மகனுக்கு ஒற்றை சீட் வேண்டும் என முதலமைச்சர் வீட்டின் பூட்டு போல தொங்கிக் கொண்டு இருந்தார். திருமாவளவன் பொதுத் தொகுதி கேட்டாலும் மு.க.ஸ்டாலின் தனித் தொகுதியையே தருகிறார்.
பெரம்பலூர் தனித் தொகுதி ஆன பிறகு ஆ.ராசாவுக்கு தனித்தொகுதி கொடுக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க., கம்யூனிஸ்ட் கட்சிகள் எந்த கொள்கையின் அடிப்படையில் கூட்டணி வைத்துள்ளது என தெரியவில்லை. தி.மு.க. கூட்டணியை விட பா.ஜ.க. கூட்டணி மிகவும் மோசமாக உள்ளது.

பா.ஜ.க. கூட்டணியில் இருக்கும் கட்சியினர் கூட்டணியில் ஏன் இருக்கிறோம், ஏதற்கு இருக்கிறோம் என்று கூட தெரியாமல் இருக்கிறார்கள். அந்த கட்சிகளின் நிலை தேர்தலுக்குப் பிறகு என்ன ஆகும் என தெரியவில்லை. சரத்குமார் விருதுநகரை பெற்றுக் கொண்டு கட்சியை பா.ஜ.க.விடம் கொடுத்துவிட்டார். தேர்தலுக்குப் பின்னர் பா.ஜ.க. பா.ம.க.வை கழற்றி விட்டு விடும் என ராமதாஸ் கூறியும் அன்புமணி ராஜ்ய சபா சீட்டுக்காக கூட்டணி வைத்துள்ளார்.
மரியாதையுடன் வாழ்ந்த டி.டி.வி.தினகரனும், ஓ.பி.எஸ்.சும் பாவம். சுயநலத்திற்காகவும், வாரிசுக்காகவும் பா.ஜ.க. கூட்டணியில் டி.டி.வி.தினகரனும், ஓ.பி.எஸ்.சும் இடம்பெற்றுள்ளனர். தி.மு.க., பா.ஜ.க. இரண்டு கட்சிகளும் தமிழக மக்களுக்கு மிகவும் ஆபத்தானவர்கள். தி.மு.க. தேர்தலுக்காக மக்களை ஏமாற்ற என்ன வேண்டுமானாலும் பேசுவார்கள். தி.மு.க. சொல்வது ஒன்று செய்வது ஒன்று. தி.மு.க. கொடுத்த எந்தவொரு வாக்குறுதிகளையும் நிறைவேற்றமால் அமைச்சர் உதயநிதி செங்கல்லை தூக்கி கொண்டு செல்கிறார். தி.மு.க. நீட்டை ஒழிப்போம் என சொல்லி விட்டு ஒரு ஆணியையும் புடுங்கவில்லை. தேர்தலில் தி.மு.க.வையும், திருந்தாத பா.ஜ.க.வையும் மக்கள் ஒற்றை விரலால் ஒங்கி அடிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- 4-ந்தேதி (வியாழக்கிழமை)-காலை 11 மணி-ஊட்டி, இரவு 7 மணி-திண்டுக்கல் பொதுக்கூட்டம்.
- 5-ந்தேதி (வெள்ளிக்கிழமை)-காலை 11 மணி-சோழவந்தான், பகல் 12 மணி-மதுரை, மாலை 4 மணி-பரமக்குடி, மாலை 6 மணி-விருதுநகர் தேர்தல் பொதுக்கூட்டம்.
சென்னை:
தமிழக காங்கிரஸ் ஊடகம் மற்றும் செய்தி தெடர்புத்துறை தலைவர் ஆனந்த் ஸ்ரீநிவாசன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-
பாராளுமன்ற தேர்தலையொட்டி தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நாளை (திங்கட்கிழமை) முதல் வருகிற 17-ந்தேதி வரை சூறாவளி பிரசாரம் செய்கிறார். அதன் விவரம் வருமாறு:-
நாளை (ஏப்ரல் 1-ந்தேதி) காலை 9 மணி-சென்னையில் இருந்து புறப்படுதல், (சாலை வழி), காலை 11.30 மணி-ஆற்காடு, மதியம் 3 மணி-வேலூர், மாலை 4 மணி-திருப்பத்தூர், இரவு 7 மணி-கிருஷ்ணகிரி தேர்தல் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.
2-ந்தேதி (செவ்வாய்க்கிழமை)-காலை 11 மணி-சேலம், மதியம் 1 மணி-நாமக்கல், மாலை 6 மணி-கரூர் தேர்தல் பொதுக்கூட்டம்.
3-ந்தேதி (பதன்கிழமை)-காலை 11 மணி-ஈரோடு, பிற்பகல் 3 மணி-திருப்பூர், மாலை 4 மணி-பொள்ளாச்சி, இரவு 7 மணி-கோவை தேர்தல் பொதுக்கூட்டம்.
4-ந்தேதி (வியாழக்கிழமை)-காலை 11 மணி-ஊட்டி, இரவு 7 மணி-திண்டுக்கல் பொதுக்கூட்டம்.
5-ந்தேதி (வெள்ளிக்கிழமை)-காலை 11 மணி-சோழவந்தான், பகல் 12 மணி-மதுரை, மாலை 4 மணி-பரமக்குடி, மாலை 6 மணி-விருதுநகர் தேர்தல் பொதுக்கூட்டம்.
6-ந்தேதி (சனிக்கிழமை)-காலை 11 மணி-ஸ்ரீவில்லிபுத்தூர், மதியம் 3 மணி-கோவில்பட்டி, இரவு 7 மணி-திருநெல்வேலி தேர்தல் பொதுக்கூட்டம்.
7-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை)-காலை 11 மணி-ராதாபுரம், மாலை 4 மணி-விளவங்கோடு, இரவு 7 மணி-நாகர்கோவில் தேர்தல் பொதுக்கூட்டம்.
8-ந்தேதி (திங்கட்கிழமை)-சென்னை சத்தியமூர்த்தி பவன் வருகிறார்.
9-ந்தேதி-காலை 9.35 மணிக்கு சென்னையில் இருந்து திருச்சிக்கு விமானத்தில் புறப்படுகிறார். பகல் 12 மணி-பெரம்பலூர், மாலை 4 மணி-திருச்சி, இரவு 7 மணி-சிவகங்கையில் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.
10-ந்தேதி-காலை 11 மணி-தஞ்சாவூர், பிற்பகல் 3 மணி-திருவாரூர், இரவு 7 மணி-கும்பகோணம், இரவு 11 மணி-ரெயில் மூலம் சென்னைக்கு புறப்படுகிறார்.
11, 12, 13-ந்தேதிகளில் சென்னை சத்தியமூர்த்தி பவன்.
14-ந்தேதி-காலை 10 மணிக்கு சென்னை துறைமுகத்தில் உள்ள அம்பேத்காரின் சிலைக்கு மலர் அஞ்சலி செலுத்துகிறார்.
மாலை 4 மணி-விழுப்புரம், இரவு 7 மணி-சிதம்பரத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.
15-ந்தேதி-காலை 11 மணி-புதுச்சேரியில் தேர்தல் பிரசாரம் செய்கிறார். மதியம் 2 மணி முதல் 8 மணி வரை-கடலூர் பிரசாரம் மற்றும் பொதுக்கூட்டம்.
இரவு 11 மணிக்கு கார் மூலம் சென்னை புறப்படுகிறார்.
16-ந்தேதி-மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் பிரசாரம் செய்கிறார்.
17-ந்தேதி காலை 11 மணி முதல் மதியம் 2 மணி வரை திருவள்ளூர் சாலை வழியாக தேர்தல் பிரசாரம் செய்கிறார்.
மதியம் 2.30 மணிக்கு திருவள்ளூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- திடீரென தஞ்சாவூர் ஆப்ரகாம் பண்டிதர் சாலையில் உள்ள கிருஷ்ணசாமி வாண்டையார் வீட்டிற்கு சென்றார்.
- அண்ணாமலையும் கிருஷ்ணசாமி வாண்டையாருக்கு சால்வை அணிவித்து உடல் நலம் குறித்து விசாரித்தார்.
தஞ்சாவூா்:
தஞ்சாவூர் அருகே உள்ள பூண்டியை பூர்வீகமாக கொண்டவர் மறைந்த துளசி அய்யா வாண்டையார். இவரது மகன் கிருஷ்ணசாமி வாண்டையார். பாரம்பரியமிக்க காங்கிரஸ் குடும்பத்தை சேர்ந்தவர். கிருஷ்ணசாமி வாண்டையார் தஞ்சாவூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவராக உள்ளார். அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரனின் சம்பந்தி.
இந்நிலையில், நேற்று மாலை பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை தஞ்சை பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருவையாறில் பா.ஜனதா வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்தார். முன்னதாக அவர் மாலையில் தஞ்சையில் தான் தங்கி இருந்த ஓட்டலில் இருந்து திடீரென தஞ்சாவூர் ஆப்ரகாம் பண்டிதர் சாலையில் உள்ள கிருஷ்ணசாமி வாண்டையார் வீட்டிற்கு சென்றார்.
அவருக்கு கிருஷ்ணசாமி வாண்டையார் ஏலக்காய் மாலை அணிவித்து வரவேற்றார். அப்போது அண்ணாமலையும் கிருஷ்ணசாமி வாண்டையாருக்கு சால்வை அணிவித்து உடல் நலம் குறித்து விசாரித்தார்.
பின்னர் கிருஷ்ண சாமியும், அண்ணாமலை மட்டும் தனி அறைக்கு சென்று சில நிமிடங்கள் பேசி கொண்டிருந்தனர். இதைத் தொடர்ந்து வெளியே வந்த அண்ணாமலை நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
நீண்ட காலமாக கிருஷ்ணசாமி வாண்டையாரை பார்க்க ஆசை. சென்னையில் சந்தித்தபோது, நான் தஞ்சாவூருக்கு வரும்போது, உங்களது வீட்டுக்கு வந்து காபி அருந்துகிறேன் என கூறினேன். அதன்படி வந்துள்ளேன்.
இவர்களது குடும்பத்தின் மீது எங்களது தலைவர்கள் எல்லோருக்கும் பெரிய மரியாதை உண்டு. நான் தேர்தல் பிரசாரத்துக்கு வரும்போது மரியாதை நிமித்தமாக சந்தித்துள்ளேன். இந்த சந்திப்பை எல்லாம் அரசியல் வட்டத்துக்குள் போட்டு அடைக்க வேண்டாம். இதில் அரசியல் உள்நோக்கம் ஏதும் கிடையாது. இவ்வாறு அவர் கூறினார்.
இதுகுறித்து கிருஷ்ணசாமி வாண்டையார் கூறுகையில்:-
நான் காங்கிரஸ் கட்சியை விட்டு, பா.ஜனதாவில் இணையமாட்டேன். எனக்கு உடல் நிலை சரியில்லாமல் இருந்ததால் சந்திக்க வந்துள்ளனர். இதில் வேறு ஏதும் உள்நோக்கம் கிடையாது என்றார். இந்த சந்திப்பின்போது பா.ஜனதா வேட்பாளர் கருப்பு முருகானந்தம், தெற்கு மாவட்ட தலைவர் ஜெய்சதீஷ் மற்றும் நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.
- மேல்நிலை நீர்தேக்க தொட்டி ஜேசிபி வாகனம் மீது சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது.
- சுதாரித்துக் கொண்ட ஓட்டுநர் உடனடியாக ஜேசிபி வாகனத்தில் இருந்து கீழே குதித்தார்.
திருத்தணி:
திருத்தணி ரெயில் நிலையத்தில் இருந்து, திருப்பதி, ரேணிகுண்டா , அரக்கோணம், திருவள்ளூர், சென்னை சென்ட்ரல், சென்னை கடற்கரை ஆகிய பகுதிகளுக்கு தினமும் மின்சார ரெயில் மற்றும் விரைவு ரெயில்கள் மூலம் 5,000 த்திற்கும் மேற்பட்ட பயணிகள் சென்று வருகின்றனர்.

இந்நிலையில் திருத்தணி ரெயில் நிலையத்தில் இருக்கும் மேல்நிலை நீர்தேக்க தொட்டியை ஜேசிபி வாகனம் மூலம் இடிக்க முயன்ற போது திடீரென மேல்நிலை நீர்தேக்க தொட்டி ஜேசிபி வாகனம் மீது சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது.
சுதாரித்துக் கொண்ட ஓட்டுநர் உடனடியாக ஜேசிபி வாகனத்தில் இருந்து கீழே குதித்தார்.
இச்சம்பவம் திருத்தணி ரெயில் நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- பெண்கள் அலகு குத்தி அந்தரத்தில் தொங்கி வந்தது பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்தது.
- ரோப்கார் நிலையம், மின் இழுவை ரெயில் நிலையம், படிப்பாதை, யானைப்பாதை உள்ளிட்ட இடங்களிலும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி காணப்பட்டது.
பழனி:
முருகபெருமானின் 3-ம் படை வீடான பழனியில் பிரசித்தி பெற்ற பங்குனி உத்திர திருவிழா கடந்த 18ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
அதனைத் தொடர்ந்து தினந்தோறும் சாமி வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக தேரோட்டம் கடந்த 24-ந் தேதி நடந்தது. 27ந் தேதியுடன் பங்குனிஉத்திர திருவிழா நிறைவு பெற்றது.
திருவிழா நிறைவடைந்த நிலையிலும் பக்தர்கள் கூட்டம் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. பொதுவாக பங்குனி மாதம் முழுவதும் பக்தர்கள் வருகை தந்து தீர்த்தம் எடுத்து முருகனுக்கு அபிஷேகம் செய்து வழிபாடு நடத்துவார்கள். தற்போது தொடர் விடுமுறை காரணமாக இன்று காலை முதல் பக்தர்கள் வருகை அதிகரித்து காணப்பட்டது.
சேலம் மாவட்டம் அரிசிபாளையம் பகுதியை சேர்ந்த பக்தர்கள் அலகு குத்தி கிரேனில் பறவைக்கா வடியாக வந்தனர். வழக்கமாக இதுபோன்ற பறவை காவடியில் பெரும்பாலும் ஆண்கள் மட்டுமே வரும் நிலையில் தற்போது பெண்கள் அலகு குத்தி அந்தரத்தில் தொங்கி வந்தது பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்தது.
மேலும் பல்வேறு ஊர்களில் இருந்து தீர்த்தம் எடுத்து வந்த பக்தர்கள் ஆடிப்பாடி உற்சாகமாக கிரி வீதியை சுற்றி மலைக்கோவிலுக்கு சென்று தண்டாயுதபாணியை சாமி தரிசனம் செய்தனர். மலைக்கோவிலில் சாமி தரிசனத்துக்கு சுமார் 2 மணி நேரம் வரை காத்திருக்கும் நிலை பக்தர்களுக்கு ஏற்பட்டது. கடும் வெயிலை யும் பொருட்படுத்தாது பக்தர்கள் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். கூட்டம் அதிகரிப்பால் ரோப்கார் நிலையம், மின் இழுவை ரெயில் நிலையம், படிப்பாதை, யானைப்பாதை உள்ளிட்ட இடங்களிலும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி காணப்பட்டது.
- நாகப்பட்டினத்தில் 9 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
- காங்கிரஸ், அ.தி.மு.க., பா.ஜ.க., நாம் தமிழர் மற்றும் சுயேட்சைகள் உள்ளிட்ட 54 பேர் இறுதியாக களத்தில் உள்ளனர்.
கரூர்:
பாராளுமன்ற தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் தமிழகத்தில் கடந்த 20-ந் தேதி தொடங்கி 27-ந் தேதியுடன் நிறைவடைந்தது. 28-ந் தேதி மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்றது. 29-ந் தேதி வேட்பு மனுக்கள் திரும்ப பெற கடைசி நாளாக இருந்தது. இதனையொட்டி நேற்று மாலை 3 மணிக்கு இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
அதன்படி தமிழகம் முழுவதும் 39 பாராளுமன்ற தொகுதிக்கு 950 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதில் அதிக வேட்பாளர் போட்டியிடும் தொகுதியாக கரூரும், மிக குறைந்த வாக்காளர்கள் போட்டியிடும் தொகுதியாக நாகப்பட்டினமும் உள்ளன.
கரூரில் போட்டியிடுவதற்காக மொத்தம் 62 பேர் மனுதாக்கல் செய்திருந்தனர். அதனையடுத்து வேட்பு மனு பரிசீலனையின்போது 6 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு 56 பேர் களத்தில் இருந்தனர்.
இந்த நிலையில் நேற்று வேட்பு மனு திரும்பப் பெறும் நாளில் 2 சுயேச்சை வேட்பாளர்கள் தங்களது மனுவை வாபஸ் பெற்றனர். இதையடுத்து, காங்கிரஸ், அ.தி.மு.க., பா.ஜ.க., நாம் தமிழர் மற்றும் சுயேட்சைகள் உள்ளிட்ட 54 பேர் இறுதியாக களத்தில் உள்ளனர்.
இதனால் கரூர் தொகுதி தமிழகத்திலேயே அதிக வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதி என்ற அந்தஸ்தை பெற்றுளது. வாக்குப்பதிவின் போது தமிழகத்தின் மற்ற பாராளுமன்ற தொகுதியை விட கூடுதல் வாக்குப்பதிவு எந்திரங்கள் கரூர் தொகுதியில் பயன்படுத்தப்பட உள்ளது குறுப்பிடத்தக்கது.
தமிழகத்திலேயே மிக குறைவாக நாகப்பட்டினத்தில் 9 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
- மகாசிவராத்திரியை முன்னிட்டு பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் இறுதி வரை பக்தர்கள் மலையேற வனத்துறை அனுமதி வழங்கி வருகிறது.
- மலையடிவாரத்தில் உள்ள டாக்டர்கள் குழுவினர், பக்தர்களை பரிசோதித்து மலையேற அனுமதித்து வந்தனர்.
கோவை:
கோவை மாவட்டம் பூண்டி அருகே வெள்ளியங்கிரி மலை உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியான இங்குள்ள 7 மலைகளை கடந்து மலை உச்சியில் இருக்கும் சுயம்புலிங்கத்தை வழிபடுவதை பக்தர்கள் வழக்கமாக கொண்டு வருகிறார்கள்.
இங்கு மலையேறுவதற்காக தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகிறார்கள். மலையேற சிரமமாக இருக்கும் என்பதால் மலையேறுபவர்கள் கையில் கம்பை ஊன்றியபடியே செல்வார்கள். ஒவ்வொரு ஆண்டும் மகாசிவராத்திரியை முன்னிட்டு பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் இறுதி வரை பக்தர்கள் மலையேற வனத்துறை அனுமதி வழங்கி வருகிறது.
இவ்வாறு வெள்ளியங்கிரி மலையேறும் போது மூச்சுத்திணறல் ஏற்பட்டு ஒரு மாதத்தில் மட்டும் 5 பக்தர்கள் பலியானார்கள். ஏற்கனவே அவர்கள் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் உள்ளிட்டவைகளால் பாதிக்கப்பட்டு இருந்து மலையேறும் போது உடல்நிலை ஒத்துக் கொள்ளாமல் அவர்கள் இறந்தது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து வனத்துறையினர் பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து மலையேற அனுமதித்து வருகிறார்கள். இதயநோய், மூச்சுத்திணறல், உடல் பருமன், நீரிழிவு நோய், வயது முதிர்ந்தவர்கள், உடல் நிலை சரியில்லாதவர்கள், கொரோனாவில் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் வெள்ளியங்கிரி மலையேற வேண்டாம் என கேட்டுக் கொண்டனர். இதற்காக மலையடிவாரத்தில் உள்ள டாக்டர்கள் குழுவினர், பக்தர்களை பரிசோதித்து மலையேற அனுமதித்து வந்தனர்.
இந்நிலையில் வெள்ளியங்கிரி மலையேறிய மேலும் ஒரு பக்தர் மரணம் அடைந்தார். சென்னை முகப்பேரைச் சேர்ந்தவர் ரகுராம் (வயது 50). தனியார் வேலைவாய்ப்பு மையம் நடத்தி வந்தார். தீவிர ஆன்மீக ஈடுபாடு கொண்டவர்.
இவரும், அவரது பகுதியில் வசிக்கும் 15 பேரும் சென்னையில் இருந்து ஒரு வேன் மூலம் வெள்ளியங்கிரி மலையேறுவதற்காக நேற்று இரவு கோவை மாவட்டம் வந்தனர். பின்னர் அவர்கள் மலையேற தொடங்கினர். 4 மலைகளை கடந்து 5-வது மலைக்கு சென்ற நிலையில் ரகுராமுக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. அந்த இடத்திலேயே அவர் மயங்கி விழுந்தார்.
இதனால் அவருடன் சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அங்குள்ள மலைவாழ் மக்களின் உதவியுடன் ரகுராமை மீட்டு அடிவாரத்துக்கு கொண்டு வந்தனர். முகாமில் இருந்த மருத்துவர்கள், ரகுராமை சோதித்து பார்த்து அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து ஆலாந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ரகுராமின் உடல் பிரேத பரிசோதனை க்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. ஏற்கனவே 5 பேர் இறந்தநிலையில் நேற்று ரகுராமும் மரணம் அடைந்ததால் சாவு எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.
- மயிலாடுதுறையில் ஜவாஹிருல்லா தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார்.
- ஸ்ரீபெரும்புதூர் வருகிற 17-ந்தேதி பிரசாரத்தை நிறைவு செய்கிறார்.
சென்னை:
இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா தேர்தல் பிரசார சுற்றுப்பயணம் செய்கிறார். அதன் விவரம் வருமாறு:-
ஏப்ரல் 3-ந்தேதி மயிலாடுதுறையில் தொடங்கி 4-ந்தேதி ராமநாதபுரம், 6-ந்தேதி நாகப்பட்டினம், 7-ந்தேதி கரூர், 8-ந்தேதி திருச்சி, 9-ந்தேதி பெரம்பலூர், 10-ந்தேதி திருவள்ளூர், 12-ந்தேதி வேலூர், 13-ந்தேதி திண்டுக்கல், 14-ந்தேதி சிதம்பரம், 15-ந் தேதி திருப்பூர், 16-ந்தேதி மத்திய சென்னை, 17-ந்தேதி ஸ்ரீபெரும்புதூரில் பிரசாரம் செய்கிறார்.
- போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
- தேர்தல் அலுவலர், போலீஸ் சூப்பிரண்டு ஆகியோரிடம் புகார் அளிக்க பாஜக நிர்வாகிகள் முடிவு செய்துள்ளனர்.
தேனி:
தேனி பங்களாமேடு, புது பஸ்நிலையத்தில் நவீன மனிதர்கள் அமைப்பை சேர்ந்த வாலிபர்கள் ஆண்டவர், ஜெயராஜ், உதயசூரியன் உள்ளிட்ட சிலர் அனுமதியின்றி போதும் மோடி, பை பை மோடி என்று பதாகைகளுடன் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எதிராக பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
இன்ஸ்பெக்டர் உதயசூரியன் போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் பா.ஜ.க. நிர்வாகிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். ஆனால் பிரதமர் மோடிக்கு எதிராக கோசம் எழுப்பிய வாலிபர்கள் அதற்கு முன்பே அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் குறித்து தேனி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
பிரதமர் மோடிக்கு எதிராக கோஷமிட்ட வாலிபர்களை கண்டித்தும், நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் தேர்தல் நடத்தும் அலுவலர், போலீஸ் சூப்பிரண்டு ஆகியோரிடம் புகார் அளிக்க பா.ஜ.க. நிர்வாகிகள் முடிவு செய்துள்ளனர்.
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை குமாரவலசில் உள்ள கணேசமூர்த்தி எம்.பி. தோட்டத்து வீட்டிற்கு சென்றார்.
- கணேசமூர்த்தி எம்.பி. மகன் கபிலன், மகள் தமிழ்பிரியா ஆகியோருக்கு ஆறுதல் கூறினார்.
ஈரோடு:
ஈரோடு பாராளுமன்ற தொகுதி எம்.பி.ஆக இருந்த கணேசமூர்த்தி (77) கடந்த 24-ந்தேதி ஈரோடு பெரியார் நகர் வீட்டில் வைத்து சல்பாஸ் மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார்.
அவரை மீட்டு ஈரோட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
எனினும் சிகிச்சை பலனின்றி கடந்த 28-ந்தேதி கணேசமூர்த்தி எம்.பி. பரிதாபமாக இறந்தார். அவரது உடல் ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அடுத்த குமாரவலசு பகுதியில் உள்ள தோட்டத்தில் எரியூட்டப்பட்டது.
இந்நிலையில் ஈரோடு மாவட்டத்திற்கு தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்திற்கு கலந்து கொள்வதற்காக வருகை தந்த முதலமைச்சர மு.க.ஸ்டாலின் இன்று காலை குமாரவலசில் உள்ள கணேசமூர்த்தி எம்.பி. தோட்டத்து வீட்டிற்கு சென்றார். அங்கு கணேசமூர்த்தி எம்.பி. படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் கணேசமூர்த்தி எம்.பி. மகன் கபிலன், மகள் தமிழ்பிரியா ஆகியோருக்கு ஆறுதல் கூறினார். சிறிது நேரம் அங்கிருந்த முதலமைச்சர் பின்னர் மீண்டும் தான் தங்கி இருக்கும் பயணியர் மாளிகைக்கு கிளம்பி சென்றார்.
- தனியார் மதுபான விடுதியில் கடந்த 28 ஆம் தேதி மாலை முதல் மாடியின் மேல்தளம் திடீரென இடிந்து விழுந்தது.
- விடுதியின் உரிமையாளரான அசோக் குமார் தப்பி ஓடி தலைமறைவாகிய நிலையில் நேற்று இரவு அவர் அபிராமபுரம் காவல் நிலையத்தில் சரண் அடைந்தார்.
ஆழ்வார்பேட்டை:
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மதுபான விடுதியில் கடந்த 28 ஆம் தேதி மாலை முதல் மாடியின் மேல்தளம் திடீரென இடிந்து விழுந்தது. இதில் கட்டிட இடிபாடுகளில் சிக்கி மணிப்பூர் மாநிலத்தை சேர்ந்த மேக்ஸ் என்ற வாலிபர், திருநங்கை லவ்லி மற்றும் திண்டுக்கல்லை சேர்ந்த சைக்ளோன் ராஜ் ஆகிய 3 பேர் உயிரிழந்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக 12 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இவர்களில் விடுதி மேலாளர் சதீஸ் கைது செய்யப்பட்டார். மேலும் விடுதியின் உரிமையாளரான அசோக் குமார் தப்பி ஓடி தலைமறைவாகிய நிலையில் நேற்று இரவு அவர் அபிராமபுரம் காவல் நிலையத்தில் சரண் அடைந்தார்.
இந்நிலையில், சுமார் 6 மணி நேர விசாரணைக்கு பின் அசோக் குமார் காவல் நிலைய ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளார்.






