என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • பணத்திற்கு உரிய ஆவணங்கள் இல்லை.
    • பணம் பூந்தமல்லியில் உள்ள அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.

    பூந்தமல்லி:

    பாராளுமன்ற தேர்தலில் பண பட்டுவாடாவை தடுப்பதற்காக தேர்தல் ஆணையம் அறிவுறுத்தலின்படி பல்வேறு பகுதிகளில் பறக்கும் படையினர் தீவிரசோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இந்த நிலையில் பூந்தமல்லி அருகே கோளப்பன்சேரி சோதனை சாவடியில் நேற்று இரவு தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது ஏ.டி.எம். மையத்திற்கு பணம் எடுத்து செல்லப்படும் வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர்.அதில் கட்டுகட்டாக ரூ.2 கோடியே 29 லட்சத்து 31 ஆயிரம் பணம் இருந்தது. ஆனால் இந்த பணத்திற்கு உரிய ஆவணங்கள் இல்லை. ஆவணம் இல்லாமல் பணம் எடுத்து செல்லப்பட்டது தெரிய வந்தது.

    இதையடுத்து தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் ரூ.2 கோடியே 29 லட்சத்து 31 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். பின்னர் அந்த பணம் பூந்தமல்லியில் உள்ள அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது. உரிய ஆவணங்கள் காண்பித்த பிறகு பணம் ஒப்படைக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ஏற்கனவே மாலை 6 மணிக்கு மேல் ஏ.டி.எம். மையங்களுக்கு பணம் நிரப்ப வாகனங்களில் பணம் எடுத்துச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தி இருந்த நிலையில் இரவில் உரிய ஆவணங்களை இல்லாமல் பணத்தை கொண்டு சென்றது ஏன் என்பது குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள். தேர்தல் பறக்கும் படை சோதனையில் ரூ.2 கோடி பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • மக்கள் முதலில் கச்சத்தீவை எப்படி கொடுத்தார்கள் என்பதை தெரிந்து கொள்ளட்டும்.
    • ஏசி ரூமில் அமர்ந்து கொண்டு அரசியல் செய்யும் அரசியல்வாதி நான் இல்லை.

    இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையே கடல் பகுதியில் உள்ள சிறிய தீவு தான் கச்சத்தீவு. சுமார் 285 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள இந்த தீவு ராமேசுவரத்தில் இருந்து 12 மைல் தூரத்திலும், இலங்கை யாழ்ப்பாணம் நெடுந்தீவில் இருந்து 10.5 மைல் தொலைவிலும் இருக்கிறது.

    கடந்த 1974-ம் ஆண்டு இந்திராகாந்தி பிரதமராக இருந்த போது இந்தியா-இலங்கை இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தின்படி கச்சத்தீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டது. தற்போது கச்சத்தீவு இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது.

    நீண்ட காலமாக மீன்பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தாக்கி சித்ரவதை செய்வதும், சிறைபிடித்து செல்வதும் தொடர்கதையாக நடந்து வருகிறது.

    இதையடுத்து கச்சத்தீவை மீண்டும் மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசியல் கட்சிகள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர.

    ஒவ்வொரு பாாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தலின் போதும் கச்சத்தீவு விவகாரத்தை தி.மு.க., அ.தி.மு.க போன்ற கட்சிகள் கையில் எடுத்து பிரசாரம் செய்து வருகிறது.

    நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்திலும் இந்த பிரச்சனை எதிரொலித்து இருக்கிறது.


    இந்த நிலையில் சச்சத்தீவு தொடர்பாக அண்ணாமலை தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் கேள்வி கேட்டு இருந்தார். இதற்கு பதில் கொடுக்கப்பட்டு உள்ளது.

    இதற்கான ஆவணங்களை பெற்ற அண்ணாமலை அதில் கூறப்பட்டுள்ள தகவலை பகிர்ந்துள்ளார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    1969-ம் ஆண்டு இலங்கைக்கு கச்சத்தீவை கொடுக்க எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் அப்போது இந்திரா காந்தி இலங்கையுடன் நல்ல நட்புணர்வுடன் இருக்க விரும்பினார். 1968-ம் ஆண்டு அப்போதைய இலங்கை பிரதமர் டட்லி சேனா நாயக்கா இந்திரா காந்தியுடன் இது பற்றி பேச்சுவார்த்தை நடத்தினார். 1973-ம் ஆண்டு கொழும்பில் நடந்த வெளியுறவு செயலர் அளவிலான பேச்சுவார்த்தை நடந்தது.

    1974-ம் ஆண்டு வெளியுறவுத்துறை செயலாளர் கேவல் சிங் மூலம் அப்போதைய தமிழக முதல்வர் கருணாநிதியிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் கச்சத்தீவுக்கு இலங்கை உரிமை கொண்டாடி வருவதை நிரூபிக்கும் வகையில் ஆதாரங்கள் எதையும் தரவில்லை என்றும் கேவல் சிங் தெரிவித்தார்.

    அந்த சமயம் கச்சத்தீவை இலங்கை உரிமை கோரிய நிலையில் ராமநாதபுரம் ராஜாவுக்கு சொந்தமானது என்ற ஆவணங்களை தமிழக அரசு காட்டவில்லை.

    இறுதியாக 1974-ம் ஆண்டு கச்சச்தீவை இலங்கைக்கு இந்திரா காந்தி தாரை வார்த்து கொடுத்ததாக தகவல் அறியும் உரிமை சட்ட பதிலில் இடம்பெற்று உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கச்சத்தீவு தொடர்பாக திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் இன்று பிரசாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கச்சத்தீவை பற்றி தொடர்ச்சியாக பேசிக்கொண்டிருக்கிறோம். 1968-ல் பிரதமராக இருந்த இந்திராகாந்தியும், இலங்கை பிரதமராக இருந்த செனாயும் போட்ட ரகசிய ஒப்பந்தம்தான் கச்சத்தீவு. 1948ம் ஆண்டு வரை கச்சத்தீவு ராமநாதபுரம் மன்னரின் கட்டுப்பாட்டில் இருந்தது. 1974ம் ஆண்டு கச்சத்தீவு முழுமையாக இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டு விட்டது. எதற்காக கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டது என்ற ஆவணங்களை தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் பெற்றுள்ளோம். இதை படித்தால் ஒவ்வொரு குடிமகனுக்கும் ரத்தம் கொதிக்கும். நேரு பிரதமராக இருந்தபோது பைல் நோட்டிங் எழுதுகிறார். இந்த குட்டி தீவுக்கு நான் எந்தவிதமான மரியாதையும் தரப்போவதில்லை. வேறு ஒரு நாட்டிற்கு தர தயாராக இருக்கின்றேன். இது 10-5-1961 ல் நேரு எழுதிய பைல் நோட்டிங்.

    முழுமையாக கச்சத்தீவு நம்மிடம் தான் இருக்க வேண்டும் என பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் தெரிவித்தும், இலங்கையில் அரசியல் சூழ்நிலை சரியில்லை என்பதால் இந்த பிரச்சனையை தள்ளி போட்டுக்கொண்டே சென்றார்கள். தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் பெறப்பட்ட முதல் பகுதி இன்று வெளியாகி உள்ளது. நாளை இதன் இரண்டாம் பகுதி வெளியாகும் போது கலைஞர் கருணாநிதி கச்சத்தீவு விவகாரத்தில் செய்த துரோகம் குறித்து பேசுவோம். நாட்டின் எல்லையை சுருக்கியது காங்கிரஸ் கட்சி.

    1960-ல் இருந்து ஒவ்வொரு செங்கல்லாக பிரித்து கச்சத்தீவை இலங்கைக்கு காங்கிரஸ் கட்சி தாரை வார்த்துவிட்டது. இன்று வெளியாகி உள்ள தகவல் அறியும் உரிமை சட்டத்தின் முதல் பகுதி மூலம் காங்கிரஸ் எப்படி துரோகம் செய்துள்ளது என்பது தெரிய வருகிறது. நாளை வெளியாகும் இரண்டாவது பகுதியில் கலைஞர் கருணாநிதி செய்த துரோகம் என்ன என்பது தெரியும்.

    ஆர்ட்டிக்கிள் 6 ன் படி கச்சத்தீவு இலங்கைக்கு தாரைவாக்கப்பட்டாலும் இந்திய மீனவர்கள் அங்கு மீன்பிடிக்கலாம் என தெரிவிக்கிறது. ஆனால் தற்போது ஆர்ட்டிக்கிள் 6 இல்லாத காரணத்தினால் மீனவர்கள் தற்போது கச்சத்தீவுக்கு செல்ல முடியாத நிலை உள்ளது. நாளை மக்களின் பார்வைக்காக இரண்டு பகுதியாக வெளியாகி உள்ள தகவல் அறியும் உரிமை சட்டத்தின் அனைத்து ஆவணங்களையும் தருகிறோம்.

    கச்சத்தீவை இலங்கைக்கு எப்படி தாரை வார்த்து கொடுத்தார்கள் என யாருக்கும் தெரியாது. எனவே மக்கள் முதலில் கச்சத்தீவை எப்படி கொடுத்தார்கள் என்பதை தெரிந்து கொள்ளட்டும். இதற்கு நிரந்தர தீர்வு என்பது எல்லையை நம் நாட்டுக்குள் கொண்டு வர வேண்டும்.

    கச்சத்தீவை தாண்டி நெடுந்தீவு வரை நாம் சென்றோம்... ராமநாத சுவாமி கோவில் சிவபெருமானுக்கு நெடுந்தீவிலிருந்து பால் கொண்டுவரப்பட்டது. கச்சத்தீவை மீட்பது எங்கள் கோரிக்கை மட்டுமல்ல. கண்டிப்பாக மீட்போம் என கங்கணம் கட்டியுள்ளோம். 3 ஆண்டுகளில் தமிழகம் முழுவதும் பட்டித்தொட்டி எல்லாம் சுற்றி இருக்கிறேன். ஏசி ரூமில் அமர்ந்து கொண்டு அரசியல் செய்யும் அரசியல்வாதி நான் இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் ஆஜராக சம்மன்.
    • ஜாபர் சாதிக் தயாரித்த படத்தை, அமீர் இயக்கி இருந்தார்.

    டெல்லியில் இருந்து போதைப்பொருட்களை கடத்தி ரூ.2 ஆயிரம் கோடிக்கு மேல் சம்பாதித்ததாக கைது செய்யப்பட்டுள்ள தமிழ் சினிமா தயாரிப்பாளரும் தி.மு.க. அயலக அணி முன்னாள் நிர்வாகியுமான ஜாபர் சாதிக்கை கைது செய்த மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

    டெல்லியில் இருந்து உணவுப் பொருட்களை நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கு அனுப்புவது போல ஜாபர் சாதிக் போதைப்பொருட்களை கடத்தி இருப்பது அம்பலமானதை அடுத்து அவர் மீதான பிடி இறுகியது.

    இந்நிலையில், ஜாபர் சாதிக் வழக்கில் இயக்குனர் அமீர் ஆஜராக, மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு சம்மன் அனுப்பி உள்ளது.

    அதில், வரும் 2ம் தேதி டெல்லியில் உள்ள மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

    ரூ.2000 கோடி போதைப்பொருள் கடத்தல் வழக்கில், ஜாபர் சாதிக், அவரது கூட்டாளி சதா ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

    ஜாபர் சாதிக் தயாரித்த படத்தை, அமீர் இயக்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.

    • 288 பணிகள் ஆறு சட்டமன்ற தொகுதியிலும் என்னால் செய்து முடிக்கப்பட்டுள்ளது.
    • நேர்மையாகவும், நாணயமாகவும் மக்கள் பணியாற்றியுள்ளேன்.

    சென்னை:

    காங்கிரஸ் தொகுதியான திருச்சியும், ஆரணியும் இந்த முறை மாற்றப்பட்டது. இதில் ஆரணி எம்.பி.யான விஷ்ணு பிரசாத்துக்கு கடலூரில் போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. ஆனால் திருச்சி எம்.பி. திருநாவுக்கரசருக்கு எங்கும் வாய்ப்பளிக்கப்படவில்லை. இது காங்கிரஸ் வட்டாரத்தில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த நிலையில் திருநாவுக்கரசர் ஆதங்கத்துடன் ஒரு அறிக்கை வெளியிட்டு உள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

    கடந்த தேர்தலில் திருச்சியில் வேட்பாளராக போட்டியிட்ட எனக்கு வரலாறு காணாத வாக்குகளை அள்ளித்தந்து சுமார் 4,60,000 வாக்குகள் வித்தியாசத்தில் பாராளுமன்ற உறுப்பினராக, இந்தியாவிலேயே காங்கிரஸ் வேட்பாளர்களிலேயே அதிக வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்த திருச்சி பாராளுமன்ற தொகுதி வாக்காளப் பெருமக்கள் அனைவரின் பாதங்களையும் தொட்டு என் நன்றியை மீண்டும் காணிக்கையாக்குகிறேன்.

    கடந்த 5 ஆண்டுகளில் கொரோனா தொற்றால் பாதிப்புக்குண்டான சுமார் ஒன்றரை ஆண்டுகள் நீங்கலாக எனது பாராளுமன்ற தொகுதி வளர்ச்சி நிதியில் இருந்து சுமார் 17 கோடி ரூபாய் மக்களின் நலனுக்காகவும் மற்றும் மக்கள் நலப் பணிகளுக்காகவும் இத்தொகுதியில் செலவிடப்பட்டுள்ளது.

    288 பணிகள் ஆறு சட்டமன்ற தொகுதியிலும் என்னால் செய்து முடிக்கப்பட்டுள்ளது. கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை தொடங்கி அனைத்து பணிகளிலும் எந்த லஞ்ச, ஊழல் புகார்களுக்கும், ஆட்படாமல், நேர்மையாகவும், நாணயமாகவும் மக்கள் பணியாற்றியுள்ளேன்.

    இத்தேர்தலில் நான் மீண்டும் போட்டியிட விரும்பியவர்களுக்கும், என் வாய்ப்புக்காக உதவிட முயன்றவர்களுக்கும், பாராளுமன்ற உறுப்பினராக நான் தொடரக் கூடாதென இத்தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிட்டாமல்போக முயன்றவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    • தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் காரை சோதனை செய்தபோது, அதில் உரிய ஆவணங்கள் இன்றி, ரூ.10 லட்சம் பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
    • 6 பேர் கொண்ட குழுவினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சீதாராம் மேடு ஜலகண்டேஸ்வரர் நகரை சேர்ந்த லோகேஷ் குமார் (வயது35). இவர், பேரண்டபள்ளி பகுதியில் தனியார் கிரஷர் கம்பெனி நடத்தி வருகிறார். இந்த நிலையில் கடந்த 28-ந்தேதி, பெங்களூரிலிருந்து அவர் காரில் வந்தபோது, ஓசூர் சோதனைச்சாவடி பகுதியில் அவரது காரை, தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை செய்தபோது, அதில் உரிய ஆவணங்கள் இன்றி, ரூ.10 லட்சம் பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து, ஓசூர் சப்-கலெக்டர் அலுவலகத்தில் சப்-கலெக்டர் பிரியங்காவிடம் ஒப்படைத்தனர். தனது கிரஷரில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுப்பதற்காக அந்த பணத்தை அவர் பெங்களூரிலிருந்து, ஒரு தொழிலதிபரிடம் வாங்கி வந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் இன்று காலை, ஓசூர் ஜலகண்டேஸ்வரர் நகரில் உள்ள லோகேஷ் குமாரின் வீட்டில், ஓசூர் வருமான வரித்துறை துணை இயக்குனர் விஷ்ணு பிரசாத் தலைமையில் 6 பேர் கொண்ட குழுவினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர். தொடர்ந்து சோதனை நடைபெற்றது. இந்த நிலையில், அவரது வீட்டில் இருந்து ஒரு சூட்கேசை கைப்பற்றி போலீஸ் ஜீப்பில் அதிகாரிகள் கொண்டு சென்றனர்.

    அதில் இருந்த 100 பவுன் நகை மற்றும் ரூ.1.20 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    கிரஷர் உரிமையாளர் லோகேஷ் குமார், கர்நாடக பா.ஜ.க. எம்.எல்.ஏ பசவராஜின் உதவியாளர் மஞ்சுநாத்தின் மருமகன் ஆவார்.

    இந்த அதிரடி சோதனை ஓசூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • வேலூர் தொகுதியில் ஏராளமான மக்கள் பிரச்சினையில் உள்ளனர்.
    • பணபலம், அதிகார பலத்தை தாண்டி நான் வெல்வது உறுதி.

    சென்னை:

    வருகிற பாராளுமன்ற தேர்தலில் வேலூர் தொகுதியில் நடிகர் மன்சூர் அலிகான் போட்டியிடுகிறார்.

    இதைத்தொடர்ந்து அவர் தொகுதி முழுவதும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

    மன்சூர் அலிகானுக்கு பலாப்பழ சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கி உள்ளது. அதே சின்னத்தை ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடும் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்துள்ளது.

    இது பற்றி மன்சூர் அலிகானிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-

    பலாப்பழம் சின்னத்தை முதலில் கேட்டது நான் தான். எனக்கு பலா சின்னம் கிடைத்துள்ளது. ஓ.பி.எஸ்., இ.பி.எஸ்., டி.பி.எஸ் என யாருக்கு ஒதுக்கப்பட்டாலும் எனக்கு கவலையில்லை.


    பலாப்பழம் எனக்கு பிடித்த பழம். 'விறகு வாங்கலியோ விறகு' என்பது போல பலாப்பழத்தை தலையில் தூக்கி வைத்துக் கொண்டு தொகுதி முழுவதும் பிரசாரத்தில் ஈடுபடுவேன். நான் வெல்வது உறுதி. ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது ஓ.பன்னீர்செல்வம் தான் முதல்வராக இருந்தார்.

    ஜெயலலிதா மரணத்தில் மர்மம் உள்ளது. அவரது மரணம் குறித்து விசாரணை செய்ய வேண்டும் என பல முறை கூறிவருபவர் நான்.

    மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டிருந்த போது அவரை பார்ப்பதற்காக தினமும் முயற்சி செய்தேன். என்னை பார்க்கவிடவேயில்லை.

    மோடியா? லேடியா? என ஜெயலலிதா தைரியமாக கேட்டார். வாக்குகளை பிரிப்பதற்கு நான் போட்டியிடுகிறேன் என சொல்கிறார்கள் 'படுபாவிகள்'

    வேலூர் தொகுதியில் ஏராளமான மக்கள் பிரச்சினையில் உள்ளனர். மக்கள் அமோகமாக என்னை வரவேற்கின்றனர். பணபலம், அதிகார பலத்தை தாண்டி நான் வெல்வது உறுதி.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 35 நாட்களுக்கு மேலாக உள்ளிருப்பு போராட்டம் நடத்தியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
    • விவசாயிகள், பொதுமக்கள் பாராளுமன்ற தேர்தலை புறக்கணிக்க போவதாக அறிவிப்பு பலகை வைத்துள்ளனர்.

    தாராபுரம்:

    திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்து உப்பாறு அணை உள்ளது. இந்த அணையை நம்பி 6500 க்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாயிகள் விவசாயம் செய்து வந்தனர். இந்நிலையில் உப்பாறு அணைக்கு தண்ணீர் வந்து பல ஆண்டுகள் ஆன நிலையில் அணைக்கு திருமூர்த்தி அணையில் இருந்து உபரி தண்ணீர் திறந்து விட வேண்டும் என கூறி கடந்த ஒரு வருடமாக பல்வேறு போராட்டங்களை விவசாயிகள் நடத்தி வருகின்றனர்.

    35 நாட்களுக்கு மேலாக உள்ளிருப்பு போராட்டம் நடத்தியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. விவசாயத்திற்கு கூட தண்ணீர் வேண்டாம். குடிநீர் மற்றும் கால்நடைகளுக்கு தண்ணீர் கிடைக்கும் வகையில் தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

    இந்நிலையில் உப்பாறு அணைக்கு தண்ணீர் திறந்து விடப்படாததை கண்டித்து அணை பகுதியை சேர்ந்த விவசாய கிராமங்களான கெத்தல் ரேவ், தாசம்பட்டி, பொன்னாளிபாளையம், வண்ணாம்பட்டி, தேர் பாதை, தொண்டாமுத்தூர், ரங்கம் பாளையம், நடுப்பாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பல கிராமங்களை சேர்ந்த விவசாயிகள், பொதுமக்கள் பாராளுமன்ற தேர்தலை புறக்கணிக்க போவதாக அறிவிப்பு பலகை வைத்துள்ளனர்.அரசியல்வாதிகள் யாரும் எங்கள் ஊருக்குள் வரக்கூடாது என தெரிவித்துள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    • மக்கள், பெரியவர்கள் என அனைவரும் கையில் கருப்பு கொடியை ஏந்தி கோவில் முன்பாக அமர்ந்து கோஷங்கள் எழுப்பினர்.
    • வருகிற பாராளுமன்ற தேர்தலை புறக்கணிக்க போவதாக அவர்கள் தெரிவித்தனர்.

    வடமதுரை:

    திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா வடமதுரை ஒன்றியம் சிங்காரக்கோட்டை அருகே எஸ்.பாறைப்பட்டியில் 250க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

    இவர்கள் வருடம் தோறும் இங்குள்ள காளியம்மன், விநாயகர், கருப்பண்ணசாமி மற்றும் முனியாண்டி கோவில் திருவிழாவை நடத்துவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு திருவிழாவை 2 நாட்கள் நடத்த திட்டமிட்டிருந்தனர்.

    இந்நிலையில் அதே ஊரைச் சேர்ந்த கருணாநிதி, தனபால், முருகன். ஆகிய 3 பேர் தூண்டுதலின் பேரில் ஊர் திருவிழாவை நடத்த விடாமல் சிலர் தடுத்து நிறுத்தி உள்ளனர். இதனால் அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்நிலையில் வருகிற பாராளுமன்ற தேர்தலை புறக்கணிக்க போவதாக அவர்கள் தெரிவித்தனர்.

    தங்களது ஆதார் அட்டை, ரேஷன் கார்டு உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் ஒப்படைத்து விட்டு ஊரை காலி செய்யப் போவதாகவும் அவர்கள் தெரிவித்தனர். இது குறித்து தங்கள் எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் போஸ்டர் அடித்து ஒட்டி வருகின்றனர்.

    மேலும் இந்த நிலையில் ஊர் பொதுமக்கள், குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரும் கையில் கருப்பு கொடியை ஏந்தி கோவில் முன்பாக அமர்ந்து கோஷங்கள் எழுப்பினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் உருவானது. ஏற்கனவே திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு கிராமங்கள் தேர்தல் புறக்கணிப்பு போராட்டம் நடத்தி வரும் நிலையில் அதன் வரிசையில் பாறைப்பட்டி கிராமமும் இணைந்துள்ளது.

    • தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளின் சனாதன எதிர்ப்பு மற்றும் இந்து விரோத போக்கு குறித்து மக்கள் மத்தியில் அவர் எடுத்து சொல்வார் என்று கூறப்படுகிறது.
    • காசி தமிழ் சங்கமம் மூலம் ஒன்றுபட்ட மக்கள் உணர்வுகளை பொய் பிரசாரங்கள் மூலம் தடுப்பதை முறியடிக்கும் வகையில் அவரது பிரசாரம் அமையும் என்று கூறப்படுகிறது.

    சென்னை:

    தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில் பா.ஜனதா வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்ட வட இந்திய தலைவர்களும் வருகிறார்கள்.

    மத்திய மந்திரிகள், பா.ஜனதா தலைவர்கள், பிரபலங்கள் என 50 பேர் வருகிறார்கள். இவர்கள் 39 தொகுதிகளுக்கும் செல்லும் வகையில் பயண திட்டங்கள் வகுக்கப்படுகிறது.

    உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்தும் பிரசாரத்துக்கு வருகிறார். அவர் 2 நாட்கள் தமிழகத்தில் பிரசாரம் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.

    தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளின் சனாதன எதிர்ப்பு மற்றும் இந்து விரோத போக்கு குறித்து மக்கள் மத்தியில் அவர் எடுத்து சொல்வார் என்று கூறப்படுகிறது.

    மேலும் காசி தமிழ் சங்கமம் மூலம் ஒன்றுபட்ட மக்கள் உணர்வுகளை பொய் பிரசாரங்கள் மூலம் தடுப்பதை முறியடிக்கும் வகையில் அவரது பிரசாரம் அமையும் என்று கூறப்படுகிறது.

    • தென் சென்னையில் பா.ஜனதா வேட்பாளர் டாக்டர் தமிழிசை, மத்திய சென்னையில் பா.ஜனதா வேட்பாளர் வினோஜ் செல்வம் ஆகியோருக்கு ஆதரவு திரட்டுவார் என்று தெரிகிறது.
    • அன்றைய தினமே வேலூரில் ஏ.சி.சண்முகம், பெரம்பலூரில் பாரிவேந்தர் ஆகியோருக்கு ஆதரவு திரட்டுகிறார். பின்னர் கேரளா செல்கிறார்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தல் பிரசாரம் சூடுபிடித்து வருகிறது. தமிழகத்தில் 39 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வருகிற 19-ந்தேதி வாக்குப்பதிவு நடக்கிறது.

    எனவே தேர்தல் பிரசாரத்தை அரசியல் கட்சிகள் தீவிரப்படுத்தி உள்ளன.

    தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பே பிரதமர் மோடி 5 தடவை தமிழகத்துக்கு வந்து பிரசாரம் செய்தார். கோவை, சேலம், மதுரை, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட இடங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். பொதுக்கூட்டங்களிலும் பேசினார்.

    கோவையில் சாய்பாபா காலனி முதல் ஆர்.எஸ்.புரம் வரை 2½ கிலோ மீட்டர் தூரம் ரோடு ஷோவும் நடத்தினார்.

    மீண்டும் தேர்தல் பிரசாரத்துக்காக பிரதமர் மோடி வருகிற 9-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) தமிழகம் வருகிறார். தமிழகத்தில் சென்னை, வேலூர், பெரம்பலூர் உள்ளிட்ட பகுதிகளில் பா.ஜனதா மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய உள்ளார்.

    இதற்கான பயண திட்டம் தயாராகி வருகிறது. இன்னும் ஓரிரு நாளில் முடிவாகி விடும்.

    9-ந்தேதி சென்னை வரும் பிரதமர் மோடி ரோடு ஷோ செல்கிறார். தென்சென்னையில் பா.ஜனதா வேட்பாளர் டாக்டர் தமிழிசை, மத்திய சென்னையில் பா.ஜனதா வேட்பாளர் வினோஜ் செல்வம் ஆகியோருக்கு ஆதரவு திரட்டுவார் என்று தெரிகிறது.

    இந்த 2 தொகுதிகளுக்கும் பொதுவான இடத்தில் ரோடு ஷோ நடத்த திட்டமிட்டுள்ளார்கள்.

    தென்சென்னைக்கு மேற்கு மாம்பலம், மத்திய சென்னைக்கு பாண்டி பஜார் ஆகிய இடங்களை இணைக்கும் வகையிலும், இதே போல் மேலும் 2 இடங்களையும் தேர்வு செய்து பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள். அவர்களின் முடிவை பொறுத்து இடம் உறுதி செய்யப்படும்.

    வடசென்னை தொகுதி மற்றும் திருவெற்றியூர் வடிவுடையம்மன் கோவில் ஆகியவற்றையும் பயண திட்டத்தில் சேர்க்கவும் கோரிக்கை வைத்துள்ளார்கள்.

    சென்னை நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு விமானத்தில் திருச்சி செல்கிறார்.

    அன்றைய தினமே வேலூரில் ஏ.சி.சண்முகம், பெரம்பலூரில் பாரிவேந்தர் ஆகியோருக்கு ஆதரவு திரட்டுகிறார். பின்னர் கேரளா செல்கிறார்.

    அதன் பிறகு மீண்டும் சில தொகுதிகளில் பிரசாரம் செய்ய வருவார் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

    காங்கிரஸ் மற்றும் தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுவதற்காக ராகுல்காந்தி 11-ந்தேதியில் இருந்து 13-ந்தேதிக்குள் ஒருநாள் தமிழகம் வருவதற்கு ஒத்துக்கொண்டு உள்ளார். ஒரே நாளில் 3 அல்லது 4 இடங்களில் பிரசாரம் செய்யும் வகையில் பயண திட்டம் தயாராகிறது.

    கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி ஆகிய தொகுதிகளை ஒன்றிணைக்கும் வகையில் நெல்லையில் ஒரு இடத்தில் பிரசாரம் செய்கிறார்.

    கடலூர், மயிலாடுதுறையை இணைத்து ஒரு இடத்தில் பேசுகிறார்.

    மேலும் திருவள்ளூர், கரூர் ஆகிய இடங்களிலும் பிரசாரம் செய்வார் என்று கூறப்படுகிறது.

    பிரியங்காவும் தேர்தல் பிரசாரத்துக்கு தமிழகம் வருகிறார். அவர் வரும் தேதி இன்னும் உறுதியாகவில்லை.

    கர்நாடகா மாநிலத்தில் பிரசாரத்தை முடித்து விட்டு பெங்களூரில் இருந்து ஓசூர் வருகிறார். அங்கிருந்து சேலம் வரை ரோடு ஷோ நடத்தவும் திட்டமிட்டுள்ளார்கள்.

    • மெயின் அருவி, சின்பால்ஸ் ஆகிய அருவிகளில் சீரான அளவில் தண்ணீர் கொட்டியது.
    • ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா பயணிகளின் கூட்டம் சற்று அதிகரித்து காணப்பட்டது.

    பென்னாகரம்:

    தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரியாற்றில் கடந்த 28-ந் தேதி நீர்வரத்து விநாடிக்கு 200 கனஅடியாக பதிவானது. 29-ந் தேதி நீர்வரத்து சற்று சரிந்து வினாடிக்கு 150 கனஅடியாகக் குறைந்தது.

    இந்த நிலையில் நேற்று காலை அதே அளவுடன் நீர்வரத்து நீடித்து வந்த நிலையில், நேற்று மாலை திடீரென்று நீர்வரத்து வினாடிக்கு 1,000 கனஅடியாக அதிகரித்தது.

    கர்நாடகா மாநில குடிநீர் தேவைக்காக அங்குள்ள அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதால் ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து உயர்ந்துள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதைத்தொடர்ந்து இன்று காலை நீர்வரத்து சற்று சரிந்து மீண்டும் 400 கனஅடியாக குறைந்து வந்தது. இதன்காரணமாக மெயின் அருவி, சின்பால்ஸ் ஆகிய அருவிகளில் சீரான அளவில் தண்ணீர் கொட்டியது.

    இன்று விடுமுறை நாள் என்பதாலும், கோடை வெயில் அதிகரித்து உள்ளதாலும் ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா பயணிகளின் கூட்டம் சற்று அதிகரித்து காணப்பட்டது. அவர்கள் அருவிகளிலும், காவிரி ஆற்றிலும் குளித்து மகிழ்ந்தனர்.

    • 10 வருடம் ஆண்ட பிரதமர் எத்தனை முறை தமிழ்நாட்டிற்கு வந்துள்ளார்.
    • எல்லாம் தேர்தல் தோல்வி பயம்

    ஜெயங்கொண்டம்:

    அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஜெயங்கொண்டத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-

    கொரோனா பெருந்தொற்று இரண்டாவது அலையின் போது பிரதமர் உங்களை சந்தித்தாரா தொலைக்காட்சியில் அவ்வப்போது பேசுவார் அவ்வளவுதான்.

    அப்போது அவர் நீங்கள் யாரும் வீட்டை விட்டு வரக்கூடாது வீட்டை பூட்டிக் கொண்டு உள்ளே இருங்கள் வேலை வெட்டிக்கு செல்லாதீர்கள் வியாபாரமோ விவசாயமோ பண்ண வேண்டாம் என்று கூறினார்.

    வெளியே வந்து விளக்கேற்றுங்கள். கையில் தட்டு வைத்து சத்தம் எழுப்புங்கள். இதன் மூலம் கொரோனா ஒழிந்து விடும் என்று கூறி மக்களை ஏமாற்றினார்.


    ஆனால் நமது முதல்வர் கோவையில் கொரோனா தொற்று பாதித்தவர்களை உயிரை பணயம் வைத்து கவச உடைய அணிந்து சென்று பார்த்து ஆறுதல் கூறி உயரிய சிகிச்சை அளிக்க செய்தார்.

    10 வருடம் ஆண்ட பிரதமர் எத்தனை முறை தமிழ்நாட்டிற்கு வந்துள்ளார். இப்போது 10 தினங்களாக தமிழ்நாட்டிற்கு வருகிறார். எல்லாம் தேர்தல் தோல்வி பயம். நான் சவால் விடுகிறேன் 10 நாள் அல்ல ஒரு மாதம் முழுவதும் தமிழ்நாட்டில் தங்கி இருந்தாலும் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியாது டெபாசிட் இழப்பார்கள்.

    நாற்பதிலும் நாம் வெற்றி பெற்றால் மத்திய பிரதமராக மு.க.ஸ்டாலின் கூறுபவரே பிரதமர் ஆவார்.

    இவ்வாறு அமைச்சர் கூறினார்.

    ×