என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • இளைஞர் பள்ளத்தில் விழுந்தது குறித்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
    • தகவல் அறிந்து வந்த தீயணைப்புத் துறையினர், பள்ளத்தில் விழுந்த இளைஞரை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

    கொடைக்கானல்:

    கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்ற தூத்துக்குடியைச் சேர்ந்த தன்ராஜ் என்பவர் டால்ஃபின் நோஸ் பகுதியில் நடந்து சென்றபோது 100 அடி பள்ளத்தில் தவறி விழுந்துள்ளார்.

    இளைஞர் பள்ளத்தில் விழுந்தது குறித்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    பின்னர் தகவல் அறிந்து வந்த தீயணைப்புத் துறையினர், பள்ளத்தில் விழுந்த இளைஞரை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

    இந்நிலையில் 3 மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு, சிறு காயங்களுடன் இளைஞரை பத்திரமாக தீயணைப்புத் துறையினர் மீட்டனர்.

    • வேட்பாளர் பட்டியலில் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் பெயரை கொண்ட பலர் இடம்பெற்றுள்ளனர்.
    • அண்ணாமலை போட்டியிடுவதால் கோவை தொகுதி வி.ஐ.பி. தொகுதியாக மாறி இருக்கிறது.

    கோவை:

    பாரதிய ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை போட்டியிடுவதால் கோவை தொகுதி வி.ஐ.பி. தொகுதியாக மாறி இருக்கிறது. இதனால் இந்த தொகுதி மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள் ளது.

    இந்த தொகுதியில் தி.மு.க. சார்பில் கணபதி ராஜ்குமார், அ.தி.மு.க. சார்பில் சிங்கை ராமச்சந்திரன், பா.ஜ.க. சார்பில் அண்ணாமலை உள்பட 59 பேர் போட்டியிட மனுத்தாக்கல் செய்து இருந்தனர். இவர்களில் 41 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டன. 18 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது.

    41 பேரில் 4 பேர் நேற்று வேட்புமனுவை வாபஸ் பெற்றுக் கொண்டனர். இதனால் இறுதி வேட்பாளர் பட்டியலில் 37 பேர் இடம்பெற்றுள்ளனர். இதில் அ.தி.மு.க., தி.மு.க., பா.ஜ.க., நாம்தமிழர் கட்சி, பகுஜன சமாஜ் கட்சி உள்பட 11 கட்சிகளை சேர்ந்தவர்களும், 26 சுயேச்சைகளும் இடம்பெற்றுள்ளனர். 37 பேர் போட்டியிடுவதால் 3 வாக்குப்பதிவு எந்திரங்களை பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

    இறுதி வேட்பாளர் பட்டியலில் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் பெயரை கொண்ட பலர் இடம்பெற்றுள்ளனர். தி.மு.க. வேட்பாளர் கணபதி ராஜ்குமார் பெயரை கொண்ட ராஜ்குமார் என்ற பெயரில் 4 பேர் போட்டியிடுகிறார்கள். கோ.ராஜ்குமார், கோ.பா.ராஜ்குமார், எம்.ராஜ்குமார், ராஜ்குமார் ஆகிய 4 பேர் சுயேச்சை வேட்பாளர்களாக போட்டியிடுகிறார்கள்.

    அ.தி.மு.க. வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரனை பெயரை கொண்ட ராமச்சந்திரன் பெயரில் மேலும் 2 பேர் போட்டியிடுகிறார்கள். ரா. ராமச்சந்திரன், எம்.ராமச்சந்திரன் ஆகியோர் சுயேச்சைகளாக களமிறங்கி உள்ளனர்.

    வேட்பாளர்களின் பெயரை குழப்பும் வகையில் ஒரே பெயரை கொண்டவர்களை எதிர்க்கட்சியினர் நிறுத்தி உள்ளதாக தி.மு.க. மற்றும் அ.தி.மு.க.வினர் குற்றம் சாட்டி உள்ளனர்.

    • தமிழ்நாட்டில் மொத்தம் 7 தனித் தொகுதிகள் உள்ளன.
    • விழுப்புரத்தில் மட்டும் அதிகபட்சமாக 17 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் இறுதி வேட்பாளர்களின் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. அதன்படி 39 தொகுதிகளில் 950 பேர் போட்டியிடுகின்றனர்.

    இதில் வடசென்னையில் 35 பேர், மத்திய சென்னையில் 31 பேர், தென்சென்னையில் 41 பேர் போட்டியிடுகின்றனர்.

    கடந்த 2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலின் போது பலமுனை போட்டி இருந்தது. அப்போது 845 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இப்போது 950 பேர் போட்டியிடுகின்றனர். இதில் போட்டியிடும் பெண் வேட்பாளர்களின் எண்ணிக்கையும் 65-ல் இருந்து 76 ஆக உயர்ந்துள்ளது.

    இதில் மத்திய சென்னை, வேலூர், விழுப்புரம், சேலம், பொள்ளாச்சி, தஞ்சாவூர் ஆகிய 6 தொகுதிகளில் ஒரு பெண் வேட்பாளர் கூட போட்டியிட வில்லை.

    தமிழ்நாட்டில் தேர்தலில் போட்டியிடும் 950 பேரில் 874 பேர் ஆண்கள். 76 பேர் பெண்கள். அதிகபட்சமாக கரூர் பாராளுமன்ற தொகுதியில் 54 வேட்பாளர்கள் போட்டியில் உள்ளனர். குறைந்தபட்சமாக நாகையில் 9 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

    தமிழ்நாட்டில் மொத்தம் 7 தனித் தொகுதிகள் உள்ளன. அதில் விழுப்புரத்தில் மட்டும் அதிகபட்சமாக 17 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

    விளவங்கோடு சட்டசபை இடைத்தேர்தலில் 10 பேர் போட்டியிடுகின்றனர். பாராளுமன்ற தேர்தலுடன் இங்கு நடைபெறும் இடைத்தேர்தலுக்கான பிரசாரம் ஏப்ரல் 17-ந்தேதி மாலை 5 மணியுடன் பிரசாரம் நிறவைடைகிறது.

    தேர்தலுக்கு பிறகு வாக்கு எந்திரங்களை போலீசார் பாதுகாப்பு பத்திரமாக வைத்திருந்து ஜூன் 4-ந்தேதி ஓட்டு எண்ணிக்கை நடத்தப்பட உள்ளது.

    • பயணிகள் அனைவரும் முண்டியடித்து இறங்கி வேறு பெட்டியில் இடம் பிடிக்க ஓடினார்கள்.
    • பெட்டியில் என்ன பொருட்களை ஏற்றி அனுப்பினார்கள் என்று தெரியவில்லை. அப்போது அங்கு போலீசார் யாரும் இல்லை.

    சென்னை:

    தமிழ்நாடு லஞ்ச ஊழல் தடுப்பு விழிப்புணர்வு சங்க மாநிலத் தலைவர் புதூர் எஸ்.பி.முத்து இந்திய தலைமை தேர்தல் ஆணையாளருக்கு அனுப்பி உள்ள புகாரில் கூறி இருப்பதாவது:-

    தூத்துக்குடியில் இருந்து சென்னை எழும்பூர் செல்லும் முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் முன்பதிவு இல்லா பெட்டியில் கடநத 26-ந்தேதி இரவு 7.30 மணி யளவில் பயணிகள் ஏறி அமர்ந்திருந்தார்கள். அப்போது ரெயில் இரவு 8.25 மணிக்கு புறப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

    ஆனால் திடீரென 8 மணியளவில் ரெயிலின் கடைசி முன்பதிவில்லா பெட்டியில் அமர்ந்திருந்த பயணிகள் அனைவரையும் அடுத்த பெட்டியில் ஏறுங்கள். இதில் பார்சல்கள் ஏற்ற வேண்டும் என ரெயில்வே ஊழியர்கள் கூறி உள்ளனர்.

    இதனால் பயணிகள் அனைவரும் முண்டியடித்து இறங்கி வேறு பெட்டியில் இடம் பிடிக்க ஓடினார்கள். அதன் பின்னர் அந்தப் பெட்டியில் என்ன பார்சல் கள் ஏற்றப்பட்டது என்று தெரியவில்லை.

    லக்கேஜ் ஏற்றுவதற்கு என்று தனி பெட்டி இருந்தும் பயணிகள் பெட்டியில் ரெயில் புறப்படும் போது பயணிகளை இறங்க சொல்லி அந்த பெட்டியில் என்ன பொருட்களை ஏற்றி அனுப்பினார்கள் என்று தெரியவில்லை. அப்போது அங்கு போலீசார் யாரும் இல்லை.

    தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள சூழலில் இது போன்ற சம்பவங்களில் பணம் அல்லது போதை பொருள் ரெயிலில் கடத்தப்படுகிறதா என்று சந்தேகம் ஏற்படுகிறது.

    எனவே இது குறித்து ரெயில்வே ஆர்.பி.எப். அதிகாரிகளிடம் விசாரணை நடத்தி உண்மை நிலையை மக்களுக்கு விளக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் எஸ்.பி. முத்து கூறி உள்ளார். இதன் மீது விசாரணை நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • பாராளுமன்ற தொகுதியில் 42 வகுப்பறைகளை கட்டியுள்ளேன்.
    • கடந்த 5 ஆண்டு காலத்தில் பல கோடி ரூபாய் செலவில் மூன்று மேம்பாலங்களை கட்டியிருக்கிறேன்.

    பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் பாரிவேந்தர் திருச்சி, மணமேட்டில் பிரசாரம் மேற்கொண்டார்.

    இதுகுறித்து பாரிவேந்தர் பேசியதாவது:-

    வரும் பாராளுமன்ற தேர்தலில் உங்களுடைய மேலான வாக்குகளை தாமரை சின்னத்திற்கு போட்டு வெற்றிப்பெற செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

    நான் உங்களுக்கு புதியவன் அல்ல. இதே பாராளுமன்ற தொகுதிக்கு மூன்றாவது முறையாக பார்க்கிறேன். இருந்தாலும் நம்பிக்கையோடு, என்னை பற்றி மக்களுக்கு நல்ல எண்ணம் இருக்கிறது. கருத்து இருக்கிறது. ஆகவே என்னை ஒதுக்க மாட்டார்கள் என்ற அடிப்படையில், உங்களை நம்பி இந்த தேர்தலில் போட்டியிடுகிறேன்.

    2019 தேர்தலில், 6 லட்சம் வாக்குகள் கொண்டு வெற்றிப்பெற செய்தீர்கள். 6 லட்சம் வாக்கு என்பது சாதாரண வாக்கு அல்ல. 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்துள்ளீர்கள்.

    வெற்றி பெற்ற நான் டெல்லிக்கு சென்று உங்கள் தொகுதிக்காக என்ன செய்தேன் என்பதை புத்தகமாக போட்டுக் கொடுத்துள்ளேன்.

    இந்த புத்தகத்தில், பாராளுமன்றத்தில் நான் எத்தனை முறை பேசினேன். எதற்காகப் பேசினேன். எத்தனை முறை பாரத பிரதமர், ரெயில்வே அமைச்சர் உள்ளிட்டவர்களை சந்தித்தேன் என்பதை புத்தகத்தில் பட்டியலிட்டுள்ளேன்.

    இந்த மாதிரி யாராவது கடந்த காலங்களில் உங்களுடைய பாராளுமன்ற உறுப்பினர்கள் பள்ளி மாணவன் மதிப்பெண் அட்டையை காட்டுவது போல் கொடுத்துள்ளார்களா ? பார்த்திருக்க மாட்டீர்கள்.

    அப்படி நான் கொடுக்கிறேன் என்றால் என்ன அர்த்தம், உண்மையாக இருந்திருக்கிறேன். கேட்ட திட்டங்களை கொண்டு வந்திருக்கிறேன். அதேபோல், எந்தெந்த ஊர்களில் என்ணென்ன பிரச்சனை இருக்கிறது என்பதை அதையெல்லாம் முழுமையாக தீர்த்து வைத்திருக்கிறேன்.

    குறிப்பாக, முசரியில் என்னுடைய நிதியில் இருந்து வகுப்பறைகள் கட்டப்பட்டது. பாராளுமன்ற தொகுதியில் 42 வகுப்பறைகளை கட்டியுள்ளேன்.

    அதேபோல, எத்தனையோ சமூக கூடங்கள், ரேஷன் கடைகள், நீர்தேக்கத் தொட்டிகள், கழிப்பறைகள் ஆகிய அத்தனையும் கட்டிக் கொடுத்திருக்கிறேன்.

    பள்ளிக்கூடத்தில் கட்டிக் கொடுத்தால் அதனால் என்ன பயன் என்று நீங்கள் கேட்கலாம். நான் அடிப்படையில் கல்வியாளர் என்று தெரிந்துதான் என்னை தேர்ந்தெடுத்தீர்கள்.

    மனிதனுக்கு வாழ்வில் கல்வி என்பது அவசியம். முதலிடம். ஆகவே தான் என் பாராளுமன்ற தொகுதிக்கு 42 வகுப்பறைகளை கட்டிக் கொடுத்திருக்கிறேன்.

    அதுமட்டுமல்ல, கடந்த 5 ஆண்டு காலத்தில் பல கோடி ரூபாய் செலவில் மூன்று மேம்பாலங்களை கட்டியிருக்கிறேன். 9 தரைப்பாலங்களை கட்டியிருக்கிறேன். எளிதாக யாராலும் இந்த திட்டங்களை எல்லாம் கொடுக்க முடியாது.

    திமுக திருவாளர்கள் எம்.பிக்கள் பாராளுன்றத்தை முடக்குவதற்கே முயற்சிக்கின்றனர். மோடியை குழப்புவதிலயே குறியாக இருக்கின்றனர். அந்த நிலையிலும் கூட, என்னால் இதையெல்லாம் செய்திருக்க முடிந்தது.

    அரியலூர், பெரம்பலூர், துரையூர், நாமக்கலில் ரெயில்வே பாலம் அமைக்கிற திட்டம், 50 ஆண்டு கால கனவுத் திட்டமாக இருக்கிறது. இது தொடர்பாக, பிரதமர், ரெயில்வே அமைச்சர், நிதி அமைச்சரை சந்தித்து பேசியுள்ளேன்.

    முடியாது என்று கூறிய இத்திட்டத்திற்கு உயிர் கொடுத்து, தட்டி எழுப்பி இன்று சர்வே நடந்திருக்கிறது.

    2024 நிதி ஆண்டில் இதற்காக ரூ.1000 கோடி நிதி ஒதுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்தியாவில் யார் ஆட்சி அமைப்புது என்பதை நீங்கள் சிந்திக்க வேண்டும். 10 ஆண்டுகாலமாக பிரதமர் மோடி சிறப்பான ஆட்சியை கொடுத்திருக்கிறார். இந்தியாவின் பெருமையை உலகளவில் ஓங்கியிருக்கிறார்.

    மோடி எப்போது எங்கள் நாட்டிற்கு வருவார் என்று எண்ணிக் கொண்டிருக்கின்றனர். ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் எல்லாம் எங்கள் தலைவர் மோடி என்கிறார்கள். இன்னும் சொல்ல போனால்,, உலகத் தலைவர்கள் எல்லாம் உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் எங்கள் நாட்டிற்கு கொடுங்கள், அவரை எங்கள் நாட்டில் பிரதமராக்கி விடுகிறோம் என்கிறார்கள்.

    அப்படிப்பட்ட மகானை, திறமைசாலியை, நாட்டுப்பற்று கொண்டவரை, எப்படியாவது ஊனப்படுத்த வேண்டும். அவருக்கு மன உளைச்சலை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக செய்துக் கொண்டிருக்கிறார்கள்.

    நமக்கு 100 ஆண்டுகளுக்கு முன்பு விவேக்கானந்தர் கிடைத்தார். அவர் நாட்டின் ஆன்மிகத்தை உலகளவிற்கு கொண்டு சென்றார். இன்று மோடி அவர்கள், நல்லாட்சியை அரசியலுக்கு உலகளவில் கொண்டுபோய் சேர்த்திருக்கிறார்.

    பிரதமர் மோடியின் ஆட்சியில் தமிழகத்தில் இருந்து 39 எம்பிக்கள் போனாலும், போகாவிட்டாலும் 3வது முறையாக ஆட்சி அமைக்கிறார் என்பதில் சந்தேகமே கிடையாது.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்ட பகுதி வழியாக கவுநீர் கலந்து வருவதாக தெரிகிறது.
    • குழாய் மூலம் வரும் தண்ணீர் தொடர்ந்து கருப்பாகவும், துர்நாற்றமாகவும் வருகிறது.

    அடையாறு, கஸ்தூரிபாய் நகர் 6-வது மெயின்ரோடு பகுதியில் உள்ள வீடுகளுக்கு கடந்த சில நாடகளாக கருப்பு நிறத்துடனும், துர்நாற்றத்துடனும் குடிநீர் வருகிறது. மேலும் அப்பகுதியில் உள்ள கழிவுநீர் செல்லும் பாதையில் அடைப்பு ஏற்பட்டு இருந்தது.

    இதையடுத்து மாநகராட்சி ஊழியர்கள் கழிவு நீர் அடைப்பை சரிசெய்தனர். பின்னர் தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்து மெட்ரோ வாட்டர் தண்ணீரை பயன்படுத்தும் படி அப்பகுதி மக்களிடம் தெரிவித்தனர். ஆனாலும் தொடர்ந்து அப்பகுதியில் குடிநீருடன் கழிவு நீர் கலந்து வருகிறது.

    இதனால் அப்பகுதி மக்கள் தண்ணீரை பயன்படுத்த முடியாமல் கடும் அவதி அடைந்து வருகிறார்கள்.

    குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்ட பகுதி வழியாக கவுநீர் கலந்து வருவதாக தெரிகிறது. இதுபற்றி அப்பகுதி மக்கள் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம்சாட்டி உள்ளனர்.

    இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் கூறும்போது, கழிவுநீர் அடைப்பை சரிபார்த்த பிறகு குழாய்களில் வரும் தண்ணீரை சேமித்து வைக்கும் தொட்டியை சுத்தம் செய்யச் சொன்னார்கள். நாங்கள் அதை சுத்தம் செய்து எங்கள் தொட்டியின் வால்வை மூடிவிட்டோம். ஆனால் குழாய் மூலம் வரும் தண்ணீர் தொடர்ந்து கருப்பாகவும், துர்நாற்றமாகவும் வருகிறது. இதனால் சிலர் லாரிகளில் முன்பதிவு செய்து தண்ணீர் வாங்கி வருகின்றனர். தண்ணீர் வினியோகத்தில் பாதிப்பு ஏற்படும் போது பதிவு செய்யப்பட்ட எண்ணில் இருந்து தினமும் லாரி தண்ணீரை முன்பதிவு செய்ய அனுமதிக்க வேண்டும். இதனால் தனியார் தண்ணீர் லாரிகளை நம்பியிருக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். தண்ணீரில் கழிவு நீர் கலந்து வருவது முதல் முறையல்ல. இதேபோல் கடந்த ஆண்டு ஆகஸ்டு, நவம்பர் மாதங்களிலும் தண்ணீர் மிகவும் மோசமாக வந்தது என்றார்.

    இதுகுறித்து அதிகாரிகள் கூறும் போது, அந்த பகுதியில் இருந்த கழிவுநீர் அடைப்பு சரிசெய்யப்பட்டது. தண்ணீர் மாசு குறித்து ஆய்வு செய்து வருகிறோம் என்றனர்.

    தண்ணீர் மாசு காரணமாக அப்பகுதியில் சிலருக்கு உடல்நலக்குறைவும் ஏற்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. எனவே கழிவுநீர் கலந்து வரும் தண்ணீரை சரி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • மறந்தும் கூட இந்த முறை திமுக நிர்வாகிகளை அனுப்பினால் பாராளுமன்றத்தை முடக்கி விடுவார்கள்.
    • டும்ப ஆட்சி என்ற கருத்து இந்தியா முழுவதும் பரவியுள்ளது. இவை அனைத்து திராவிட திருவளார்கள் ஆரம்பித்தது தான்.

    பாராளுமன்ற தொகுதி தொட்டியம் பகுதியில் பாரிவேந்தர் இன்று பிரசாரத்தில் ஈடுபட்டார். அதில் அவர் பேசியதாவது:

    எனது உரையை துவக்குவதற்கு முன்னால் இங்கு வந்திருக்கிற சகோதர் ஒருவர் மூன்று கோரிக்கைகளை வைத்துள்ளார்.

    முதலாவதாக தொட்டியம் பகுதியில் வாழை மற்றும் வெற்றிலை விவசாசயத்திற்கு தடுப்பணை கட்ட வேண்டும். இரண்டாவது வாழைக்காய் மதிப்புக் கூட்டி விற்பனை தொழிற்சாலை அமைக்க வேண்டும். முன்னால் சொன்ன கோரிக்கை தமிழ்நாடு அரசு செய்ய வேண்டியது. இரண்டாவது கோரிக்கை நான் செய்ய வேண்டியது இதை நான் பார்த்துக் கொள்கிறேன். மூன்றாவதாக செயல்படாத காகிதம் செய்யும் ஆலையை சீர்செய்து தருமாறும் இந்த மூன்று கோரிக்கைகளை தொட்டியம் பகுதிக்காக கேட்டுள்ளார். ஒரு திட்டம் தமிழ்நாட்டை சேர்ந்தது மற்ற இரண்டும் மத்திய அரசை சேர்ந்தது இந்த கோரிக்கைகளை நான் வெற்றி பெற்ற பிறகு முடித்து கொடுக்கிறேன் என்று வாக்குறுதி அளிக்கிறேன்.

    வருகிற பாராளுமன்ற தேர்தலில் நீங்கள் அனைவரும் தாமரை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும். 2019த்தில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் 4 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்தீர்கள். வெற்றி பெற செய்த நான் உங்களுக்காக என்ன செய்தேன் என்று கேட்கலாம். உங்களுக்காக பாராளுமன்றத்திலே பேசிருக்கிறேன், ரெயில்வே மந்திரி, நிதிமந்திரி, பிரதமர் ஆகியோரை சந்தித்து பேசியிருக்கிறேன் இவை அனைத்தையும் உங்களுக்கு புத்தமாக போட்டு கொடுத்திருக்கிறேன். இதை படித்தாலே கடந்த பாராளுமன்ற தொகுதிக்கு என்ன செய்தேன் என்பது உங்களுக்கு தெரியவரும்.

    மற்ற தொகுதிகளில் வெற்றி பெற்றவர்கள் இது போன்ற புத்தகங்கள் போடுவதில்லை. ஏதாவது செய்திருந்தால் தானே புத்தகம் போடுவார்கள் நான் செய்திருக்கிறேன் அதனால் புத்தகம் போட்டேன்.

     

    குறிப்பாக இந்த பகுதியில் பள்ளிகளில் 42 வகுப்பறைகள் கட்டி கொடுத்திருக்கிறேன். நீர் தேக்க தொட்டி அமைத்துக் கொடுத்திருக்கிறேன். அதேபோல் கழிவறைகள், சுற்றுசுவர் அமைத்து கொடுத்திருக்கேன். கடந்த முறை மத்திய அரசிடம் இருந்து என்ன நிதி பெறுகிறோம் என்றும் அதை எப்படி செலவிடுகிறோம் என்றும் குறிப்பிட்டுள்ளோம். இதுவரை மூன்று மேம்பாலங்கள் கட்டிகொடுத்திருக்கிறோம். 9 தரைப்பாளங்களை கட்டிக்கொடுத்திருக்கிறோம். அதேபோல் அரியலூர், பெரம்பலூர், துரையூர், நாமக்கல் இதை இணைக்கும் ரெயில் பாதை அமைக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு பாதி வேலை முடிவடைந்துவிட்டது.

    இதேபோல் சமூக கூடங்கள், நியாயவிலை கடைகள், கழிவு நீர் தொட்டி மற்றும் பலவற்றை செய்துள்ளோம். ஏழை மாணவர்களை தேர்வு செய்து அவர்களில் 1200 மாணவர்களுக்கு மருத்தும், எஞ்ஜினியர், விவசாயம் ஆகிய உயர்கல்விகளை அளித்துள்ளோம். எனது தொகுதியில் 1200 மாணவ, மாணவிகள் பட்டாதாரிகாளாக ஆகியுள்ளோம். இதுவரை எந்த எம்பி செய்யாத ஒன்றை நான் செய்திருக்கிறேன்.

    அரசியலுக்கு வருவோர் பெரும்பாலும் என்ன சம்பாதிக்கலாம் என்ற எண்ணத்தில் தான் வருவார்கள். நான் இங்கு வந்திருப்பது சம்பாதிப்பதற்றாக அல்ல. என்னால் முடிந்ததை என் மக்களுக்கு என் சொந்த பணத்தில் இருந்து உதவி செய்துதான் எனது கொள்கையாக வைத்திருக்கிறேன்.

    கடந்த 10 வருடங்களாக மோடி ஆட்சி செய்து கொண்டிருக்கிறார் அவரை யாரும் குறை கூற முடியுமா? மந்திரிகள் யாராவது ஊழல் செய்தார்கள் என்று யாரும் சொல்ல முடியாது. ஆனால் இங்கு அப்படியில்லை. ஊழல் செய்து வழங்கில் உள்ளார்கள் எப்படி தப்பிப்பார் என்றும் தெரியவில்லை. ஆகவே இந்தியாவிற்கு நல்ல ஆட்சி கொடுத்து, உலக நாடுகள் அனைத்து வியந்து பார்த்த அந்த மாமனிதரை நாம் ஊக்கப்படுத்த வேண்டும். மோடி அவர்கள் பிரதமர் ஆவதற்கு முன்பு முதலமைச்சாராக இருந்தார். இந்த 23 வருடங்களில் அப்பழுக்கற்றவராக இருக்கிறார். அவர் பணக்காரர் இல்லை. வறுமை கோட்டிற்கும் கீழே உள்ள ஏழை. அவரது அம்மா அவரை நன்கு படிக்க வைத்தார். தனது சொந்த உழைப்பால் அவர் பிரதமர் ஆகி இருக்கிறார்.

    நாட்டு மக்கள் என்னைப்போல் கஷ்டப்படக்கூடாது என்பதற்காக பல்வேறு நல்ல திட்டங்களை கொண்டு வந்துள்ளார். மேலும் பெண்களுக்காக நல்ல திட்டங்களை கொண்டுவது செயல்படுத்தியும் இருக்கிறார். மோடியை விட்டால் நமக்கு வேறு வழிகிடையாது, அவர் எதிர்பதற்கும் வேறு ஆள் கிடையாது.

    மோடியின் ஆட்சிக்கு பிறகு தான் இந்தியாவை உலகநாடுகள் மதிக்கின்றனர். மோடியின் கரங்களை வலுப்படுத்துவது ஒவ்வொரு இந்தியனுடைய கடமை. இந்தியா கூட்டணி இந்தியாவை காப்பாற்ற வருபவர்கள் அல்ல. இந்தியாவை உடைப்பதற்கு வருகிறார்கள். ஒற்றுமை என்ற பெயரில் ஒவ்வொரு மாநிலத்தையும் பிரிப்பதற்கு வழிவகுக்கிறார்கள். எந்த ஒரு கேட்ட காரியத்தையும் முதலில் ஆரம்பிப்பது திராவிட திருவாளர்கள் தான். ஊழல் முதலில் ஆரம்பித்தது திராவிட திருவாளர்கள் தான். இவர்களுக்கு நீங்கள் வாக்களித்து இந்தியாவின் ஒற்றுமையை குலைக்க கூடாது. குடும்ப ஆட்சி என்ற கருத்து இந்தியா முழுவதும் பரவியுள்ளது. இவை அனைத்து திராவிட திருவளார்கள் ஆரம்பித்தது தான். ஆகவே எனக்கு வாக்களித்தால் உங்களுக்கு இன்னும் பல்வேறு திட்டங்களை கொண்டு வருவேன்

    மறந்தும் கூட இந்த முறை திமுக நிர்வாகிகளை அனுப்பினால் பாராளுமன்றத்தை முடக்கி விடுவார்கள், செயல்பட விடமாட்டார்கள், மோடியை திட்டுவதே குறியாக இருப்பார்கள். விவேகானந்தர் 100 ஆண்டுகளுக்கு முன்பு வந்தது போல் நமக்கு மோடி என்ற ஒரு நல்லவர் கிடைத்திருக்கிறார். இதை புரிந்து கொண்டு நாட்டினுடைய வளர்ச்சி அடைவதற்கு நீங்கள் தாமரை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும். என்று கூறினார்.

    • கோவில் பயன்பாட்டிற்காக விட வேண்டும், அந்த இடத்தில் சார் பதிவாளர்கள் அலுவலகம் கட்டக்கூடாது.
    • இல்லாத பட்சத்தில் தேர்தலை புறக்கணிப்போம் என்று அறிவிப்பு பலகையில் கூறப்பட்டுள்ளது.

    முக்கூடல்:

    நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே சடையப்பபுரத்தில் சந்தன மாரியம்மன் கோவில் வளாகத்தில் உள்ள வெற்றிடத்தை அப்பகுதி பொதுமக்கள் இதுநாள் வரை பயன்படுத்தி வந்தனர்.

    சுமார் 100 ஆண்டுகளாக பயன்படுத்தி வரும் வழிபாட்டு இடத்தை மறைமுகமாக சார்பதிவாளர் அலுவலகம் கட்டுவதற்கு ஏற்பாடு செய்து வருகிறார்கள்.

    எனவே அலுவலகத்திற்கு கையகப்படுத்தியதில் இருந்து விலக்கு அளிக்க மறுப்பதாக கூறி அதனை கண்டித்து வருகிற பாராளுமன்ற தேர்தலை புறக்கணிக்க போவதாக சடையப்பபுரம் ஊர் பொதுமக்கள் அறிவிப்பு பலகை வைத்துள்ளனர்.

    அந்த இடத்தை கோவில் பயன்பாட்டிற்காக விட வேண்டும், அந்த இடத்தில் சார் பதிவாளர்கள் அலுவலகம் கட்டக்கூடாது என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.

    இல்லாத பட்சத்தில் தேர்தலை புறக்கணிப்போம் என்று அறிவிப்பு பலகையில் கூறப்பட்டுள்ளது.

    • தமிழர்களின் உண்மையான தந்தை பிரதமர் மோடி மட்டுமே.
    • தி.மு.க.வினருக்கு எந்தெந்த திட்டங்களில் ஊழல் செய்யலாம் என்பது பற்றி தான் கவனம் இருக்கும்.

    ஊட்டி:

    மத்திய மந்திரி எல்.முருகன் ஊட்டியில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    பொதுமக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களின் பிரதிநிதிகளை தி.மு.க அரசு வஞ்சித்து வருவதன் மூலம் தமிழக முதலமைச்சரின் போலி வேஷம் அம்பலத்துக்கு வந்து உள்ளது. தாழ்த்தப்பட்ட மாணவர்கள் தங்கிபடிக்கும் விடுதிகளின் நிலைமை சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை. டீக்கடையில் உட்கார்ந்துகொண்டு நாடகம் போடும் அவர்களுக்கு தாழ்த்தப்பட்ட மாணவர் விடுதிகளை நேரடியாக சென்று பார்க்க நேரம் இல்லை.

    தமிழர்களின் உண்மையான தந்தை பிரதமர் மோடி மட்டுமே. பா.ஜனதா ஆட்சியில் வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது அப்துல்கலாமை ஜனாதிபதி பதவியில் அமர்த்தினோம். அவரை 2-வது முறையாக தேர்வுசெய்தபோது குறுக்கே புகுந்து தடுத்து நிறுத்தியவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி. தொடர்ந்து கடந்த 2014-ம் ஆண்டு ராம்நாத் கோவிந்தையும், 3-வது முறையாக பழங்குடியினத்தை சேர்ந்த திரவுபதி முர்முவை ஜனாதிபதியாக தேர்வு செய்து உள்ளோம்.

    மத்திய மந்திரிகள் பட்டியலில் 27 சதவீதம் பேர் மிகவும் பிற்பட்டோர் பட்டியலை சேர்ந்தவர்கள். மேலும் 11 பழங்குடியினத்தவரும், 12 தாழ்த்தப்பட்ட பிரிவினரும் மத்திய மந்திரிசபையில் இடம்பெற்று உள்ளனர். மிகவும் பிற்பட்டோர் கமிஷனுக்கு சட்டரீதியாக அங்கீகாரம் வழங்கியது பா.ஜனதா கட்சி.

    தி.மு.க.வினருக்கு எந்தெந்த திட்டங்களில் ஊழல் செய்யலாம் என்பது பற்றி தான் கவனம் இருக்கும். இதற்கு உதாரணமாக 2ஜி, காமன்வெல்த் ஊழல் என்று சொல்லிக்கொண்டே போகலாம். சமூக நீதியை பற்றி பேசுவதற்கு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அருகதை இல்லை.

    அவர்கள் தமிழை வைத்து அரசியல் லாபம் தேடிவருகின்றனர். ஆனால் உண்மையிலேயே தமிழை போற்றுவது பிரதமர் மோடி மட்டுமே. புதிய பாராளுமன்றம் கட்டியபோது சோழர்களின் ஆட்சி பரிபாலனத்தின் அடையாளமாக கருதப்படும் செங்கோலை தமிழகத்தை சேர்ந்த ஆதீனங்கள் வேதமந்திரம் முழங்க நிலைநிறுத்தியவர் நரேந்திர மோடி.

    காங்கிரஸ் ஆட்சிகாலத்தில் இதே செங்கோல் அலகாபாத் மியூசியத்தில் வாக்கிங் ஸ்டிக் என்ற பெயரில் வைக்கப்பட்டு இருந்தது. பாராளுமன்றத்தில் செங்கோல் வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றபோது அதனை புறக்கணித்தது யார் என்பது உலகம் அறியும். சர்வதேச அளவில் 35 மொழிகளில் திருக்குறள் வெளியிடப்பட்டு உள்ளது. காசி பனாரஸ் பல்கலைக்கழகத்தில் பாரதியார் பெயரில் இருக்கை ஏற்படுத்தி கொடுத்தது பாரதிய ஜனதா கட்சி. காசி தமிழ் சங்கமத்தை 2 தடவைகளும், சவுராஷ்டிரா தமிழ் சங்கமத்தையும் நடத்தி காட்டி உள்ளோம்.

    பிரதமர் மோடி இன்றைக்கு உலக நாடுகளுக்கு மத்தியில் தமிழர் பண்பாடு குறித்து பேசி வருகிறார். மேலும் ஐ.நா.சபையில் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற முதுமொழியை பதிவு செய்திருக்கிறார். தமிழக முதலமைச்சர் தமிழ் மீது அக்கறை உள்ளவர் போல போலியாக வேஷம் போட்டு நடித்துக்கொண்டு இருக்கிறார். தமிழகத்தில் இன்றைக்கு தி.மு.க.வினர் தோல்வியின் விளிம்பில், தோல்வி பயத்துடன் நின்றுகொண்டு உள்ளனர்.

    தமிழகத்தில் தேர்தல் அதிகாரிகளின் செயல்பாடு தி.மு.க.வினருக்கு ஆதரவாக உள்ளது. அவர்கள் செல்லும் வாகனங்களில் அதிகாரிகள் அரைகுறையாக சோதனை நடத்துகிறார்கள். பாராளுமன்ற தேர்தல் நேரத்தில் அதிகாரிகள் நேர்மை தவறாமல் நடக்க வேண்டும். ஆ.ராசாவின் வாகனத்தை தேர்தல் பறக்கும் படையினர் மெத்தனமாக சோதனை செய்துள்ளனர். அந்த வாகனத்தில் பல பெட்டிகள் இருந்துள்ளது. தேர்தல் நேரம் என்பதால் ஆளும் கட்சியினர் என்று பாகுபாடு பாராமல் செயல்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பொள்ளாச்சி பாராளுமன்ற தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் மற்றும் சின்னங்கள் தற்போது ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளன.
    • நாம் தமிழர் கட்சி இழந்த கரும்பு விவசாயி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பானை ஆகிய சின்னங்களில் வேறு வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    பொள்ளாச்சி:

    பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடுவதற்காக 29 பேர் வேட்புமனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.

    தொடர்ந்து 28-ந்தேதி நடைபெற்ற வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனையில், 18 பேரின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டன.

    மீதம் உள்ள 11 பேரின் வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. தொடர்ந்து பொள்ளாச்சி பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பாளர்களின் வேட்புமனுக்களை மாவட்ட தேர்தல் அதிகாரிகள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்தனர்.

    வேட்புமனுக்கள் வாபஸ் பெறுவதற்கான கடைசி நாளில் சுயேச்சையாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்திருந்த 3 பேர் தங்களின் மனுக்களை வாபஸ் பெற்றுக் கொண்டனர்.

    தொடர்ந்து பொள்ளாச்சி பாராளுமன்ற தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் மற்றும் சின்னங்கள் தற்போது ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளன.

    அந்த வகையில் ஈஸ்வரசாமி (தி.மு.க) உதயசூரியன், கார்த்திக் அப்புசாமி (அ.தி.மு.க) இரட்டை இலை, வசந்தராஜன் (பா.ஜனதா) தாமரை, சுரேஷ்குமார் (நாம் தமிழர் கட்சி) மைக் சின்னம் என 15 பேர் களமிறங்கி உள்ளனர்.

    பொள்ளாச்சி பாராளுமன்ற பொதுத்தேர்தலில் போட்டியிடுவதற்கான இறுதி வேட்பாளர்கள் பட்டியலில் ஒருவர் கூட பெண் இல்லை.

    மேலும் நாம் தமிழர் கட்சி இழந்த கரும்பு விவசாயி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பானை ஆகிய சின்னங்களில் வேறு வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
    • கட்டுமான பணிக்காக ரூ.10 லட்சத்தை முன்பணமாக பெற்று சென்றதாக தெரிவித்தார்.

    தாராபுரம்:

    திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த குளத்துப்பாளையம் அருகே தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக வந்த கட்டிட என்ஜினீயர் செந்தமிழ் செல்வன் என்பவரிடம் சோதனை செய்தனர். அப்போது அவர் ரூ.10 லட்சம் பணம் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இது குறித்து விசாரித்த போது அவர், கட்டுமான பணிக்காக ரூ.10 லட்சத்தை முன்பணமாக பெற்று சென்றதாக தெரிவித்தார். ஆனால் உரிய ஆவணங்கள் இல்லாததால் அந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து கோட்டாட்சியர் செந்தில் அரசனிடம் ஒப்படைத்தனர்.

    • கோவிலில் சுவாமி தரிசனம் முடித்த பின்னா் நேற்று மாலையில் அங்கிருந்து சென்னை நோக்கி காரில் புறப்பட்டனா்.
    • விபத்தில் காரில் இருந்த 6 பேரும் படுகாயம் அடைந்தனா். இதில் காரின் முன் பகுதி அப்பளம் போல் நொறுங்கியது.

    ஆத்தூர்:

    சென்னை அம்பத்தூரை சேர்ந்தவர் சேகா்(வயது 42). இவர் தனது குடும்பத்தினருடன் சென்னையில் இருந்து திருச்செந்தூருக்கு கோவிலுக்கு ஒரு காரில் வந்தார்.

    அப்போது அவருடன் அவரது மனைவி நித்திய கலா (41), அவர்களது மகள் தீக்ஷித் (13), மகன் ரித்விக்(8) ஆகியோரும், உறவினர்களான வனஜா(61), காா்த்திக் (40) ஆகியோரும் வந்திருந்தனர். காரை சேகர் ஓட்டி சென்றார்.

    கோவிலில் சுவாமி தரிசனம் முடித்த பின்னா் நேற்று மாலையில் அங்கிருந்து சென்னை நோக்கி காரில் புறப்பட்டனா். திருச்செந்தூர்-தூத்துக்குடி மெயின் ரோட்டில் பழைய காயல் அருகே கார் சென்ற போது எதிர்பாராதவிதமாக எதிரே வந்த லாரி மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் காரில் இருந்த 6 பேரும் படுகாயம் அடைந்தனா். இதில் காரின் முன் பகுதி அப்பளம் போல் நொறுங்கியது.

    இதுகுறித்து தகவல் அறிந்த ஆத்தூர் போலீசார் அங்கு விரைந்து சென்று காரின் இடிபாட்டில் சிக்கிய 6 பேரையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த விபத்து தொடர்பாக ஆத்தூா் போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவரான நாமக்கல் மாவட்டம் சோ்ந்தமங்கலம் தாலுகாவை சேர்ந்த ராமசாமி (40) என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×