என் மலர்
உள்ளூர் செய்திகள்
- அனைத்து கொடியையும் இறக்கிவிட்டு உதயநிதி பேச்சை கேட்டனர்.
- எடப்பாடி பழனிசாமி சிரித்துக் கொண்டிருக்கும் போட்டோவை எடுத்து காட்டினார்.
புதுச்சேரி:
புதுச்சேரியில் தமிழக அமைச்சர் உதயநிதி காங்கிரஸ் வேட்பாளர் வைத்தி லிங்கத்தை ஆதரித்து வில்லியனூர், மரப்பாலம் மற்றும் அண்ணாசிலை சதுக்கம் ஆகிய இடங்களில் பேசினார்.
உதயநிதி பேச தொடங்கிய போது, எல்லாரும் நல்லா இருக்கீங்களா, நீங்க திரும்ப கேட்க மாட்டீங்களா என கேட்டார். அப்போது தொண்டர்கள் நல்லா இருக்கீங்களா? என கோஷ மிட்டனர். அதற்கு பதிலளித்த உதயநிதி, ஏதோ சுமாரா இருக்கேன். நீங்க இருக்கும்போது எனக்கு என்ன கவலை? என்றார்.
உதயநிதி பேச தொடங்கிய போது, தி.மு.க.-காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் பெரிய கொடியை ஆட்டிக் கொண்டே இருந்தனர். தான் பேசி முடிக்கும் வரை கட்சி கொடியை கீழே இறக்கும்படி உதயநிதி கேட்டுக் கொண்டார். இதனால் கூட்டணி கட்சியினர் அப்செட் ஆகினர். இருப்பினும் அனைத்து கொடியையும் இறக்கிவிட்டு உதயநிதி பேச்சை கேட்டனர்.
பிரசாரத்தில் வழக்கம் போல உதயநிதி எய்ம்ஸ் செங்கல்லை எடுத்து காட்டுவார். அதுபோல் புதுச்சேரி பிரசாரத்தில் எய்ம்ஸ் கல்லை காட்டுவார் என்று தொண்டர்கள் எதிர்பார்த்து கேள்வி எழுப்பினர். இதையடுத்து எய்ம்ஸ் செங்கல் புதுச்சேரி வரை பேமஸ் ஆகிவிட்டதா? எனக்கேட்டு செங்கல்லை எடுத்துக்காட்டிய உதயநிதி நீங்கள் காட்ட சொன்னதால்தான் கல்லை காட்டுகிறேன். இந்த கல்லுக்கு அவ்வளவு டிமாண்ட். நான் காட்டினது கல்லு, அவர் காட்டினது என பிரதமர் மோடியுடன் அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி சிரித்துக் கொண்டிருக்கும் போட்டோவை எடுத்து காட்டினார்.
மரப்பாலத்தில் பேசும் போது, தொண்டர் ஒருவர் ஆபாசமாக பேசினார். அப்போது உதயநிதி, நீ கெட்ட வார்த்தையில் பேசிட்டு போய்விடுவாய், போலீஸ் என்மீது வழக்கு போடும். ஆனால் அதற்காக நான் பயப்பட மாட்டேன் என்றார்.
- குடிபோதையில் சிகரெட் பிடித்து விட்டு தீயை அணைக்காமல் போட்டுச் சென்றது தெரிய வந்தது.
- கண்ணனை கைது செய்து உத்தமபாளையம் சிறையில் அடைத்தனர்.
மேலசொக்கநாதபுரம்:
தேனி மாவட்டம் போடி மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த சில வாரங்களாக பல்வேறு இடங்களில் காட்டுத் தீ பற்றி வருகிறது. குறிப்பாக குரங்கணி, மரக்காமலை, ஏணிப்பாறை உள்ளிட்ட வனப்பகுதிகளில் அதிகளவில் பற்றி எரிந்த காட்டுத்தீயால் பல 100 ஏக்கர் சுற்றளவில் அரிய வகை மரம், செடி, கொடிகள், வனவிலங்குகள், பறவைகள், ஊர்வன ஆகியவை அழியும் நிலை ஏற்பட்டது.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு குரங்கணி கொம்பு தூக்கி மலைப்பகுதியில் வனத்துறை அருகே உள்ள தனியார் தோட்டப்பகுதியில் காட்டு தீ பற்றி எரிந்து பிச்சாங்கரை புலம் பகுதி வரை பரவியது.
காட்டுத்தீயை அணைக்க சென்ற வனத்துறையினர் அங்கு சென்று ஆய்வு செய்தபொழுது அப்பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில் காவலாளியாக வேலை பார்த்து வரும் போடி புதூரில் வசித்து வரும் கண்ணன் (வயது 38) என்பவர் அப்பகுதியில் குடிபோதையில் சிகரெட் பிடித்து விட்டு தீயை அணைக்காமல் போட்டுச் சென்றது தெரிய வந்தது.
ஏற்கனவே கடுமையான வெயில் காரணமாக காய்ந்து போன மரம், செடி, கொடிகள் எளிதில் தீ பற்றி வனப்பகுதியில் காட்டு தீ பற்றி உள்ளது.
கண்ணனிடம் வனத்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டதில் அவர் குடிபோதையில் தீ வைத்தது தெரிய வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து கண்ணனை கைது செய்து உத்தமபாளையம் சிறையில் அடைத்தனர்.
மேலும் தற்போது தேனி பாராளுமன்ற தொகுதி தேர்தல் வருகிற 19-ந் தேதி நடைபெற உள்ள நிலையில் டாப் ஸ்டேஷன், உருவாக்குடி, சென்ட்ரல் போன்ற பகுதிகளுக்கு குதிரைகள் மூலம் வாக்குப்பெட்டிகள், வாக்கு எந்திரங்கள் கொண்டு செல்லப்பட உள்ளது.
இந்த சூழலில் ஆங்காங்கே சமூக விரோதிகளின் செயல்பாடுகள் காரணமாக காட்டுத்தீ பற்றி எரிவது கண்டறியப்பட்டால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
- எங்கு தேடினாலும் இதுபோன்ற உண்மையான பாசமான தொண்டர்களை பார்க்க முடியாது.
- முன்னதாக அ.தி.மு.க. வேட்பாளர் குமரகுரு விஜயகாந்த் குறித்து பேசிய போது அவரும் கண் கலங்கினார்.
ரிஷிவந்தியம்:
கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் குமரகுருவை ஆதரித்து தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் நேற்று ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதி வாணாபுரத்தில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசினார்.
ரிஷிவந்தியம் வந்த எனக்கு தலைவர் விஜயகாந்த் வாழ்ந்த நாட்கள் தான் ஞாபகம் வருகிறது. கேப்டன் விஜயகாந்த் மக்களை சந்தித்து எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றி இருக்கிறார். விஜயகாந்த் மறைவிற்கு பிறகு பொதுச்செயலாளராக பதவி ஏற்ற பிறகு ரிஷிவந்தியம் மக்களை சந்திக்க வந்துள்ளேன்.
நான் எந்த தொகுதிக்கு சென்றாலும் தைரியமாக பேசுவேன். ஆனால் கேப்டன் விஜயகாந்த் வாழ்ந்த இந்த பூமியை நிச்சயமாக என்னால் மறக்க முடியவில்லை. எங்கு தேடினாலும் இதுபோன்ற உண்மையான பாசமான தொண்டர்களை பார்க்க முடியாது.
இவ்வாறு அவர் பேசினார்.
பொதுக்கூட்டத்தில் விஜயகாந்த் செய்த திட்டங்கள் குறித்து பேசிய போது திடீரென அவர் தேம்பி, தேம்பி அழ தொடங்கினார். இதைப்பார்த்த அங்கிருந்த தொண்டர்களின் கண்களிலும் கண்ணீர் வரத் தொடங்கியது. பின்னர் அவர் தனது அழுகையை அடக்கிக் கொண்டு மீண்டும் தனது பேச்சை தொடங்கினார். முன்னதாக அ.தி.மு.க. வேட்பாளர் குமரகுரு விஜயகாந்த் குறித்து பேசிய போது அவரும் கண் கலங்கினார்.
- ஒரு கிராமுக்கு 85 ரூபாய் உயர்ந்து 6455 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
- ஒரு பவுனுக்கு 680 ரூபாய் உயர்ந்து 51 ஆயிரத்து 640 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்த வன்ணமாகவே உள்ளது. கடந்த வாரம் இதுவரை இல்லாத வகையில் 50 ஆயிரம் ரூபாயை தாண்டி விற்பனை செய்யப்பட்டு வந்தது.
இந்த நிலையில் இன்று காலை பவுனுக்கு 680 ரூபாய் உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று காலை ஆபரண தங்கம் ஒரு பவுன் 51 ஆயிரத்து 640 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் 6,455 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
- மீனவர்களின் வலைகள் உள்ளிட்ட மீன் பிடி உபகரணங்களும் பலத்த சேதம் அடைந்தன.
- சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
ராமேசுவரம்:
மன்னார் வளைகுடா கடல் பகுதியில் சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்களை கவரும் வகையில் அமைந்துள்ளது தனுஷ்கோடி மற்றும் அரிச்சல் முனை. தீவுப்பகுதியான ராமேசுவரத்திற்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் அனைவரும் தனுஷ்கோடி மற்றும் அரிச்சல்முனைக்கு சென்று இயற்கை அழகையும், வரலாற்று சிறப்புமிக்க இடங்களையும் கண்டுகளிப்பது வழக்கம். இதனால் நாள் தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்களில் 10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் சென்று வருகின்றனர்.
இந்த நிலையில், நேற்று மாலையில் திடீரென மன்னார் வளைகுடா கடல் பகுதியில் பயங்கர சூறைக் காற்று வீசத்தொடங்கியது. இதனால் கடல் சீற்றம் ஏற்பட்டு தனுஷ்கோடி மீனவர் குடியிருப்பு பகுதிகளில் கடல் நீர் புகுந்தது. மேலும் சீறி வந்த அலையால் தனுஷ் கோடி மற்றும் அரிச்சனை முனை வரை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சேதம் ஏற்பட தொடங்கியது. சுமார் 5 அடி உயரத்திற்கு எழுந்த ராட்சத அலைகளால் எங்கு பார்த்தாலும் கடலாகவே காட்சி அளித்தது.
பல இடங்களில் மணல் பரப்பே தெரியாத அளவுக்கு அந்த பகுதிகளை கடல் நீர் சூழ்ந்திருந்தது. குறிப்பாக தனுஷ்கோடி பகுதியில் தங்கி தொழில் செய்து வரும் மீன் விற்பனையாளர்கள், குளிர்பான கடைகள் வைத்திருப்பவர்களின் உடமைகளை அனைத்தும் கடல் நீரில் அடித்து செல்லப்பட்டன. மேலும் மீனவர்களின் வலைகள் உள்ளிட்ட மீன் பிடி உபகரணங்களும் பலத்த சேதம் அடைந்தன.

இதனைதொடர்ந்து, அங்கு வழக்கமாக கண்காணிப்பு பணியில் இருந்த போலீசார் அந்த பகுதியில் இருந்த சுற்றுலா பயணிகளை உடனடியாக வெளியேற எச்சரித்தனர். இதனால் பீதியடைந்த ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் உடனே அவர்கள் வந்த வாகனத்துடன் வெளியேறினர்.
நேற்று இரவு சுமார் 9 மணியளவில் மீண்டும் பயங்கர சூறாவளியுடன் காற்று வீசியதால் அப்போதும் கடல் நீர் நிலப்பரப்புகளை மூடியது. மணல் திட்டுகள் அனைத்தும் காணாமல் போனது. மேலும் அங்கு போடப்பட்டிருந்த தார்ச்சாலைகளில் அரிப்பு ஏற்பட்டு கற்கள் ஆங்காங்கே சிதறிக்கிடக்கின்றன. தற்காப்புக்காக வைக்கப்பட்டிருந்த தடுப்புகள் அனைத்தும் காற்றில் வேகத்தில் பறந்தன. அந்த பகுதியையும் கடல் நீர் குளம்போல் மாற்றியது.
மேலும் இன்றும் கடல் சீற்றம் காணப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் தனுஷ்கோடிக்கு சுற்றுலா வாகனங்கள் செல்ல வருவாய்த்துறையினர் தடை விதிக்கப்பட்டுள்ளது. நடராஜபுரம் பகுதியில் காவல்துறையினர் தடுப்பு வேலி அமைத்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தனுஷ்கோடி, அரிச்சல்முனை, முகுந்தராயர் சத்திரம் பகுதிகளுக்கு செல்ல ஆர்வத்துடன் வந்த சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
- தொடர்ந்து கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு அங்கு பதிவாகியிருந்த தடயங்களை ஆய்வு செய்தனர்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவில்பட்டி:
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சுபா நகர் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 43).
மதுரை அருகே உசிலம்பட்டி சின்ன நத்தம் கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
இவரது மனைவி பிரபா சிபோரா (40). கோவில்பட்டி அருகே உள்ள திருவேங்கடத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
இவர் தனது குடும்பத்தினருடன், ராஜபாளையத்தை சேர்ந்த உறவினர்களுடன் நேற்று மாலை 3 மணியளவில் வீட்டை பூட்டிவிட்டு, நெல்லைக்கு ஜவுளி எடுக்க சென்றனர். பின்னர் மீண்டும் இரவு 8 மணி அளவில் வீட்டுக்கு திரும்பினர். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. அதில் இருந்த ஜவுளிகள் மற்றும் பொருட்கள் அனைத்தும் சிதறி கிடந்தன.

மேலும் பீரோ மற்றும் அலமாரியில் இருந்த சதீஷ்குமாருக்கு சொந்தமான 50 பவுன் தங்க நகை மற்றும் ராஜபாளையத்தை சேர்ந்த அவரது உறவினரான பாபு சந்திரபிரகாஷ் என்பவரின் மனைவி பிரியரூபாவதிக்கு சொந்தமான 50 பவுன் தங்க நகை என மொத்தம் 100 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து சதீஷ்குமார் அளித்த தகவலின் பேரில், டி.எஸ்.பி. வெங்கடேஷ் தலைமையில் மேற்கு போலீஸ் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
தொடர்ந்து கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு அங்கு பதிவாகியிருந்த தடயங்களை ஆய்வு செய்தனர். மேலும் மோப்ப நாய் வரவைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது.
சம்பவம் குறித்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. தனிப்படை போலீசார் அந்த பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பா.ம.க. பிரமுகர் பிரபு மீது அரியலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பிரமுகர் சுதாகர் மீது வழக்கு பதிவு செய்து ஆண்டிமடம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அரியலூர்:
சிதம்பரம் மக்களவை தொகுதி தேர்தல் பிரச்சாரங்கள் சூடுபிடிக்க ஆரம்பித்துவிட்டது. அரசியல் கட்சியினர் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சரும் அரியலூர் மாவட்ட தி.மு.க. செயலாளருமான எஸ்.எஸ்.சிவசங்கர் குறித்து முகநூலில் தவறான செய்தி வெளியிட்டதாக கூறப்படுகிறது. இது பற்றி தி.மு.க. வக்கீல் அன்பரசு கொடுத்த புகாரின் பேரில் பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தொகுதி, ஓலைப்பாடி கிராமத்தை சார்ந்த பா.ம.க. பிரமுகர் பிரபு மீது அரியலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனை போல, தமிழக அரசின் செயல்பாடுகள் குறித்து முகநூலில் தவறான செய்தி வெளியிட்டதாக தி.மு.க. வக்கீல் ராஜசேகர் கொடுத்த புகாரின் பேரில், அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டம், கொலையனூர் கிராமத்தை சார்ந்த அ.தி.மு.க. பிரமுகர் திருமுருகன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அரியலூர் மாவட்டம், ஆண்டிமடத்தில் அனுமதி இல்லாமல் சுவர் விளம்பரம் செய்ததாக பெரிய கிருஷ்ணாபுரம் கிராம நிர்வாக அதிகாரி பாலமுருகன் கொடுத்த புகாரின் பேரில், பள்ள கிருஷ்ணாபுரத்தை சார்ந்த அ.தி.மு.க. பிரமுகர் சுதாகர் மீது வழக்கு பதிவு செய்து ஆண்டிமடம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- தனுஷ்கோடியில் ஏற்கனவே புயலால் அழிந்த கட்டிடங்கள் இருந்த பகுதி வரை, கடல் நீர் புகுந்தது.
- அச்சம் அடைந்த மீனவ மக்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் குவிந்து மறியலில் ஈடுபட்டனர்.
ராமேசுவரம்:
ராமேசுவரம் அருகே உள்ளது புயலால் அழிந்து போன தனுஷ்கோடி கடல் பகுதி. இயற்கையாகவே தனுஷ்கோடி பகுதி கடல் சீற்றம் மற்றும் நீரோட்டம் உள்ள பகுதியாகும். வழக்கத்திற்கு மாறாக நேற்று பகலில் இருந்து கடல் சீற்றமாகவே இருந்தது.
மாலை 4 மணிக்கு பிறகும் கடல் சீற்றத்துடனும், கடல் நீர் பொங்கியபடி கடற்கரை மணல் பரப்பை நோக்கியும், சாலை வரையிலும் வந்தது. மாலை 5 மணிக்கு பிறகு எம்.ஆர்.சத்திரம் தெற்கு கடற்கரை பகுதியில் இருந்து அரிச்சல் முனை வரையிலும் சுமார் 10 கி.மீ. தூரத்திற்கு கடற்கரை பகுதி முழுமையாக கடல் நீரால் சூழ்ந்தது.
அதுபோல் கம்பிப்பாடு பகுதியில் இருந்து அரிச்சல்முனைக்கு இடைப்பட்ட தென்கடல் பகுதியில் பயங்கர கடல் சீற்றம் இருந்ததுடன் கடல் நீரானது தடுப்புச் சுவரில் மோதி சாலை வரையிலும் வந்தது.
இதனை சுற்றுலா பயணிகள் ஆச்சரியத்துடன் பார்த்து ரசித்தனர். செல்போனிலும் வீடியோ படம் எடுத்து மகிழ்ந்தனர்.
அதுபோல் தனுஷ்கோடியில் ஏற்கனவே புயலால் அழிந்த கட்டிடங்கள் இருந்த பகுதி வரை, கடல் நீர் புகுந்தது. இதன் காரணமாக, கடலுக்குள் இருந்த ஏராளமான நண்டுகள் கரைப்பகுதிக்கு வந்து முகாமிட்டன. இங்கு கடல் சீற்றமாக இருப்பதால், தடுப்புச்சுவரும், சாலையும் பாதிக்கப்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது என மீனவர்கள் கவலையுடன் தெரிவித்தனர்.
இது குறித்து தனுஷ்கோடி பகுதியைச் சேர்ந்த மீனவர் உமைய செல்வம் கூறுகையில், தற்போது கடல் சீற்றத்தால் கடல் நீர் கரையை தாண்டி வந்துள்ளது. கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகளை கடல் நீரில் இழுத்துச் சென்றது. அவற்றை கடும் முயற்சி எடுத்து மீட்டு தடுப்புச் சுவர் பகுதிக்கு கொண்டு வந்து வைத்து உள்ளோம் என்றார்.
அதுபோல் தனுஷ்கோடி பகுதியில் ஏற்பட்டுள்ள திடீர் கடல் சீற்றத்தால் சாலை முழுவதும் தடுப்புச் சுவரின் கற்கள் பெயர்ந்தும் கடலில் உள்ள பாசி மற்றும் தாழை செடிகளும் ஆங்காங்கே குவிந்து கிடக்கின்றன. வழக்கமாக கடல் சீற்றம் இருக்கும்போது பலத்த சூறாவளி காற்று வீசும். ஆனால் நேற்று ராமேசுவரம் தனுஷ்கோடி பகுதியில் காற்று வீசாத நிலையில் தனுஷ்கோடி பகுதியில் கடல் சீற்றம் மட்டுமே இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோல் குமரி மாவட்டம் நேற்று கொல்லங்கோடு இரையுமன்துறை பகுதியில் கடல்சீற்றம் ஏற்பட்டது. கடலில் ராட்சத அலைகள் எழும்பி அலை தடுப்புச்சுவரை கடந்து கரையோரம் இருந்த வீடுகளுக்குள் கடல்நீர் புகுந்தது.
இதனால் அச்சம் அடைந்த மீனவ மக்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் குவிந்து மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து அங்கு வந்த கிள்ளியூர் தாசில்தார் ராஜசேகர் மற்றும் அதிகாரிகளை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்கிடையே கடலில் சீற்றம் சற்று தணிந்தது. இதையடுத்து அதிகாரிகளும், மக்கள் பிரதிநிதிகளும் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். ஆனால், மீனவர்கள் இரவிலும் சாலைகளில் கூடி நின்றனர்.
கன்னியாகுமரியிலும் நேற்று கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. எனவே சுற்றுலா பயணிகள் குளிக்க போலீசார் தடை விதித்தனர்.
- கட்டண உயர்வு அறிவிப்புக்கு லாரி உரிமையாளர்கள் உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.
- சுங்கக்கட்டணம் உயர்த்தப்பட்டு வந்த நிலையில் திடீரென நிறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மொத்தம் 54 சுங்கச்சாவடிகள் உள்ளன. இவற்றில் ஏப்ரல், செப்டம்பர் மாதங்களில் கட்டணங்கள் மாற்றி அமைப்பது வழக்கம்.
இதன்படி கடந்த சில நாட்களுக்கு முன்பு முதலில் ஏப்ரல்-1ந் தேதி முதல் அரியலூர் மாவட்டம் மணகெதி, திருச்சி மாவட்டம் கல்லக்குடி, வேலூர் மாவட்டம் வல்லம், திருவண்ணாமலை மாவட்டம் இமைக்க ரியாந்தல், விழுப்புரம் மாவட்டம் தென்னமாதேவி ஆகிய 5 சுங்கச்சவாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாக முதலில் அறிவிக்கப்பட்டது.
இதில் பரனூர், ஆத்தூர் உள்ளிட்ட மொத்த 7 சுங்கச்சாவடிகளில் இன்று சுங்கக்கட்டணம் உயர்வு அமலுக்கு வருகிறது என்று அறிவிக்கப்பட்டது.

கட்டண உயர்வு அறிவிப்புக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் லாரி உரிமையாளர்கள் உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் நாடு முழுவதும் சுங்கச்சாவடிகளின் கட்டண உயர்வு முடிவைத் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் திரும்பப் பெற்றது. இது தொடர்பான உத்தரவு அனைத்து திட்ட இயக்குநர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.
கடந்த 10 ஆண்டுகளாக ஆண்டுதோறும் ஏப்ரல் 1ஆம் தேதி சுங்கக்கட்டணம் உயர்த்தப்பட்டு வந்த நிலையில் திடீரென நிறுத்தப்பட்டுள்ளது.
- சென்னையில் வணிக சிலிண்டர் 1930 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
- சமையல் சிலிண்டர் விலை மகளிர் தினத்தை முன்னிட்டு 100 ரூபாய் குறைக்கப்பட்டது.
எண்ணெய் நிறுவனங்கள் கச்சா எண்ணெய் விலை உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை கருத்தில் கொண்டு சமையல் மற்றும் வணிக சிலிண்டர் விலையை மாற்றியமைக்கும். அந்த வகையில் மாதத்தின் முதல் நாளான இன்று விலை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
அதன்படி வணிக சிலிண்டரின் விலை 30 ரூபாய் 50 காசுகள் குறைக்கப்பட்டுள்ளது. சென்னையில் இதுவரை வரை 1960 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை தற்போது 30.50 ரூபாய் குறைக்கப்பட்டு 1930 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஆனால் சமையல் சிலிண்டர் விலை குறைக்கப்படவில்லை. மகளிர் தினத்தை முன்னிட்டு சிலிண்டருக்கு 100 ரூபாய் குறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் 1930 ரூபாய் விற்பனை செய்யப்படும் நிலையில் டெல்லி, மும்பை, கொல்கத்தா பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில் விலையில் சிறிது மாற்றம் இருக்கும்.
- பா.ஜ.க. கூட்டணி சார்பில் டாக்டர் பாரிவேந்தர் பெரம்பலூரில் போட்டியிடுகிறார்.
- பெரம்பலூர் காமராஜர் வளைவு பகுதியில் பாரிவேந்தரை ஆதரித்து அண்ணாமலை வாக்கு சேகரித்தார்.
பெரம்பலூர்
தமிழகத்தின் கல்வி வள்ளலான டாக்டர் பாரிவேந்தர் பெரம்பலூரில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் தாமரை சின்னத்தில் போட்டியிடுகிறார். இதற்காக பெரம்பலூர் சட்டமன்ற தொகுதியான முசிறி, குளித்தலை, துறையூர், லால்குடி, மண்ணச்சநல்லூர், பெரம்பலூரில் முகாமிட்டு கூட்டணி கட்சியினரின் உதவியுடன் இரவு பகல் பாராமல் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்.
ஏற்கனவே தான் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றியதுடன் எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டால் 1,200 மாணவர்களுக்கு கட்டணமில்லா கல்வி தொடரும் என தெரிவித்துள்ளார். மேலும் 1500 ஏழை குடும்பங்களுக்கு உயர்தர சிகிச்சை அளிக்கப்படும் என உறுதி அளித்துள்ளார்.
டாக்டர் பாரிவேந்தருக்கு ஆதரவாக பெரம்பலூரில் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
ஐ.ஜே.கே. நிறுவனர் டாக்டர் பாரிவேந்தார், பாஜக தலைவர் அண்ணாமலையைக் காண ஆயிரக்கணக்கான மக்கள் குழுமி இருந்தனர்.
பெரம்பலூர் காமராஜர் வளைவு பகுதியில் டாக்டர் பாரிவேந்தரை ஆதரித்து பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை வாக்கு சேகரித்தார்.
முன்னதாக, பெரம்பலூர் நான்கு ரோடு, பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் வழியாக கூட்டணி கட்சி தொண்டர்களின் இருசக்கர வாகனங்கள் புடைசூழ ஊர்வலமாக வந்து வாக்கு சேகரித்தார்.
பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, ஐ.ஜே.கே. வேட்பாளர் பாரிவேந்தர் உள்ளிட்டோர் ஒருசேர பிரசார வாகனத்தில் ஏறி ஊர்வலமாக வந்தனர்.
பெரம்பலூரில் டாக்டர் பாரிவேந்தருக்கு ஆதரவு திரட்டி பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை பிரசாரம் செய்தார்.அப்போது பேசிய அவர், பாரிவேந்தரின் கனவான பெரம்பலூர் ரெயில் திட்டம் கண்டிப்பாக கொண்டு வரப்படும். அதற்கான ஆரம்ப கட்டப் பணிகள் நடந்து கொண்டிருக்கிறது.
நேர்மையால், உண்மையால், மக்கள் சிந்தனையால் உழைத்து முன்னுக்கு வந்தவர் பாரிவேந்தர். அவர் சம்பாதித்த பணத்தை தொகுதி மக்களுக்கு செலவழித்து வருவது பெருமையாக இருக்கிறது.
இம்முறை பாரிவேந்தர் வெற்றி பெற்றால் 1,500 ஏழை குடும்பங்களுக்கு இலவச சிகிச்சை கொடுக்கும் பொறுப்பை ஏற்க உள்ளார்.
மோடி குஜராத் முதல்வராக இருந்தபோது அவரை முதன்முதலாக தமிழகத்திற்கு அழைத்துவந்தவர் பாரிவேந்தர். பாரிவேந்தருக்காக பிரதமர் மோடி பெரம்பலூர் வர வாய்ப்புள்ளது.
தாமரைச் சின்னத்தில் நிற்கும் பாரிவேந்தர் வெற்றிக்காக ஒவ்வொரு பா.ஜ.க. நிர்வாகியும், தொண்டனும் அடுத்த 20 நாளைக்கு உயிரைக் கொடுத்து வேலை பார்க்க வேண்டும்.
பெண்களை அவமானப்படுத்தும் தி.மு.க.வின் வேட்பாளர்கள் நமக்கு வேண்டாம். உண்மையான மனிதர் டாக்டர் பாரிவேந்தரை வெற்றிபெறச் செய்வது நமது கடமை என பேசினார்.
- எம்.எஸ் டோனி என்ற பெயர்தான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இன்ஸ்டாகிராமில் அதிக பேர் பின்தொடர்பவதற்கு காரணம்
- சென்னைக்கு அடுத்தபடியாக 13.5 மில்லியன் பின் தொடர்பவர்களுடன் பெங்களூரு அணி இரண்டாவது இடத்தில் உள்ளது
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அவர்களுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 15 மில்லியன் பின் தொடர்பவர்களை பெற்ற முதல் அணி என்ற சாதனையை படைத்துள்ளது.
சென்னைக்கு அடுத்தபடியாக 13.5 மில்லியன் பின் தொடர்பவர்களுடன் ஆர்.சி.பி அணி இரண்டாவது இடத்திலும், 13.2 மில்லியன் பின் தொடர்பவர்களுடன் மும்பை இந்தியன்ஸ் அணி மூன்றாவது இடத்திலும் உள்ளது.
எம்.எஸ் டோனி என்ற பெயர்தான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இன்ஸ்டாகிராமில் அதிக பேர் பின்தொடர்பவதற்கு காரணம் என்றால் மிகையாகாது. இந்திய முழுவதும் சென்னை அணிக்கு ரசிகர்கள் இருப்பதற்கும் அவர்தான் காரணம். இதுவரை 5 ஐபிஎல் கோப்பைகளை சென்னை அணி வென்றுள்ளது.
இந்நிலையில், ஐபிஎல் 2024 தொடரில் சிஎஸ்கே கேப்டன் பதவியில் இருந்து தோனி விலகி, ருதுராஜ் கெய்க்வாட் இடம் கேப்டன் பொறுப்பை ஒப்படைத்தார். இந்த தொடரில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையில் முதல் 2 போட்டிகளிலும் சென்னை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.






