search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கொடைக்கானல் ஏரியில் செயற்கை நீரூற்றின் நடுவே படகு சவாரி- சுற்றுலா பயணிகள் குதூகலம்
    X

    கொடைக்கானல் ஏரியில் செயற்கை நீரூற்றின் நடுவே படகு சவாரி- சுற்றுலா பயணிகள் குதூகலம்

    • வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் சுற்றுலா பயணிகள் பெரும்பாலும் ஏரி பகுதியில் முகாமிட்டு படகு சவாரி செய்து மகிழ்ந்து வருகின்றனர்.
    • போக்குவரத்து போலீசார் போதிய அளவு இல்லாததால் சுற்றுலா பயணிகள் சிரமம் அடைந்து வருகின்றனர்.

    கொடைக்கானல்:

    மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் வழக்கமாக சுற்றுலா பயணிகள் வருகை கோடை காலத்தில் அதிகரித்து காணப்படும்.

    தற்போது பள்ளி இறுதி தேர்வு முடிந்துள்ளதாலும் தொடர் விடுமுறை காரணமாகவும், சுட்டெரிக்கும் கோடை வெயில் காரணமாகவும் கொடைக்கானலை நோக்கி தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்படுகிறது.

    கொடைக்கானலிலும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் சுற்றுலா பயணிகள் பெரும்பாலும் ஏரி பகுதியில் முகாமிட்டு படகு சவாரி செய்து மகிழ்ந்து வருகின்றனர். ஏரியின் நடுவே செயற்கை நீரூற்று அமைக்கப்பட்டு அதன் அருகே செல்லும்போது ஷவர் பாத்தில் குளிப்பதுபோன்ற உணர்வு ஏற்படுவதால் சுற்றுலா பயணிகள் அதிகமாக படகு சவாரி செய்து வருகின்றனர்.

    குடும்பத்துடனும், நண்பர்களுடனும் வரும் சுற்றுலா பயணிகள் ஒரே படகில் குழுவாக சென்று இதுபோன்ற குதூகலத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் குணா குகை பகுதியிலும் தொடர்ந்து சுற்றுலா பயணிகள் அதிகமாக குவிந்து புகைப்படம் எடுத்து செல்கின்றனர். அதன் அருகே நின்று குணா படத்தில் வரும் பாடலை பாடி சமூக வலைதலங்களில் பதிவிட்டு வருகின்றனர். மேலும் சுற்றுலா இடங்களான தூண்பாறை, பசுமை பள்ளத்தாக்கு பைன்பாரஸ்ட், பிரையண்ட் பூங்கா உள்ளிட்ட பகுதிகளிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதி வருகிறது.

    ஏரிச்சாலையில் குதிரை சவாரி, சைக்கிள் ரைடிங் செய்தும் குழந்தைகள் மற்றும் சுற்றுலா பயணிகள் உற்சாகம் அடைந்தனர். சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பின் காரணமாக பல்வேறு இடங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போக்குவரத்து போலீசார் போதிய அளவு இல்லாததால் சுற்றுலா பயணிகள் சிரமம் அடைந்து வருகின்றனர்.

    வரும் வாரங்களில் சுற்றுலா பயணிகளின் வருகை மேலும் அதிகரிக்கும் என்பதால் போக்குவரத்து காவலர்களை கூடுதலாக நியமிக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×