என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • தர்ஹா கடந்த 1950-ம் ஆண்டு கட்டப்பட்டது.
    • முஸ்லிம்கள் மட்டுமல்லாது அனைத்து சமுதாயத்தைச் சேர்ந்த ஆண், பெண்கள் வழிபாடு செய்து வருகின்றனர்.

    கம்பம்:

    ஆந்திர மாநிலம் நகரி சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிடும் நடிகையும், அம்மாநில சுற்றுலாத்துறை அமைச்சருமான ரோஜா தனது கணவருடன் தேனி மாவட்டம் கம்பத்தில் உள்ள தர்ஹாவில் சிறப்பு தொழுகை நடத்தினார்.

    கம்பம் கம்பமெட்டுச் சாலையில் கல்வத் நாயகம், அம்பாநாயகம் அடக்கம் செய்யப்பட்ட இடம் உள்ளது. இந்த தர்ஹா கடந்த 1950-ம் ஆண்டு கட்டப்பட்டது. இங்கு முஸ்லிம்கள் மட்டுமல்லாது அனைத்து சமுதாயத்தைச் சேர்ந்த ஆண், பெண்கள் வழிபாடு செய்து வருகின்றனர்.

    இந்நிலையில் ஆந்திர மாநில சுற்றுலா மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் ரோஜா தனது கணவரும் சினிமா இயக்குநருமான ஆர்.கே. செல்வமணியுடன் கம்பம் தர்ஹாவிற்கு வந்து சுமார் 15 நிமிடம் வழிபாடு செய்தனர். செல்வமணி இஸ்லாமிய முறைப்படி தலையில் கைக்குட்டையை கட்டிக்கொண்டு தொழுகை நடத்தினார். பின்னர் அவர்கள் காரில் புறப்பட்டு சென்றனர்.

    இது குறித்து தர்ஹாவை சேர்ந்தவர்கள் கூறுகையில், ரோஜா ஆந்திர மாநில சுற்றுலா மற்றும் இளைஞர் நலத்துறை மந்திரியாக உள்ளார். தற்போது ஆந்திராவில் நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டசபைத் தேர்தலும் வருகிறது. இதில் ரோஜா மீண்டும் நகரி பகுதியில் சட்டசபை உறுப்பினருக்கு போட்டியிடுகிறார். தேர்தலில் வெற்றி பெறவும், ஜெகன்மோகன்ரெட்டி மீண்டும் முதல் மந்திரியாக ஆக வேண்டும் என்பதற்காக சிறப்பு பிரார்த்தனை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்தனர்.

    ரோஜா வருகை குறித்து போலீசாருக்கு எவ்வித தகவலும் தெரிவிக்க வில்லை. அவர் வந்து சென்ற பிறகே இது குறித்த தகவல் அப்பகுதி மக்களிடம் பரவியது. 

    • அ.தி.முக.வை யாரும் மிரட்ட முடியாது, எந்த பூச்சாண்டிக்கும் அ.தி.மு.க. பயப்படாது.
    • அ.தி.மு.க.வை யார் அழிக்க நினைத்தாலும் அவர்கள் காற்றோடு கரைந்து போய் விடுவார்கள் என்றார்.

    அரியலூர்:

    அரியலூரில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று பேசியதாவது:

    இந்த தேர்தலுக்கு பிறகு அ.தி.மு.க., காணாமல் போகும் என சிலர் பேசுகின்றனர். ஜூன் 4-ம் தேதிக்கு பிறகு யார் காணாமல் போவார் என்று மக்கள் முடிவு செய்வார்கள். வெயில் காலத்தில் உஷ்ணம் அதிகமாகி விட்டதால்தான் இப்படி பேசுகின்றனர்.

    தி.மு.க. ஆட்சிக்கு வந்த 3 ஆண்டுகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்களை பார்க்கவே இல்லை. தேர்தல் காரணமாக தற்போதுதான் தேநீர் கடைக்கு வந்து மக்களைச் சந்தித்துள்ளார்.

    சைக்கிள் ஓட்டுவது, உடற்பயிற்சி மற்றும் நடைபயணம் செய்வதை மட்டுமே முதல்வர் செய்கிறார். தி.மு.க.வினர் அராஜகத்தில் ஈடுபடுகின்றனர்.

    மகளிர் உரிமைத்தொகை கிடைக்க அ.தி.மு.க. கொடுத்த அழுத்தமே காரணம்.

    மக்கள் எங்கள் பக்கம் இருக்கின்றனர் என ஸ்டாலின் கூறுகிறார். ஆம் அவர்கள் பக்கம் இருக்கின்றனர். ஆனால், எங்களுக்கு ஓட்டுப் போடுவார்கள்.

    எப்போதும் குடும்பத்தைப் பற்றி சிந்திக்கும் முதல்வராக ஸ்டாலின் உள்ளார். தமக்கு மக்கள் செல்வாக்கு இல்லாததால் இந்தியா கூட்டணியை ஏற்படுத்தி வாக்கு கேட்கிறார் என தெரிவித்தார்.

    • இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் பாரிவேந்தர் பெரம்பலூர் தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிடுகிறார்
    • இன்று பெரம்பலூர் தொகுதியில் உள்ள சிறுவயலூர், குரூர், செட்டிகுளம் ஆகிய பகுதியில் பாரிவேந்தர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்

     இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் பாரிவேந்தர் பெரம்பலூர் தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிடுகிறார். தேர்தல் நெருங்கி வருவதால், பாரிவேந்தர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

    அந்த வகையில், இன்று பெரம்பலூர் தொகுதியில் உள்ள சிறுவயலூர், குரூர், செட்டிகுளம் ஆகிய பகுதியில் பாரிவேந்தர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

    அப்போது பொது மக்களுக்கு மத்தியில் அவர் பேசியதாவது:-

    வருகிற பாராளுமன்ற தேர்தலில் நீங்கள் அனைவரும் தாமரை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும். 2019-ல் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் 4 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்தீர்கள். வெற்றி பெற செய்த நான் உங்களுக்காக என்ன செய்தேன் என்று கேட்கலாம். உங்களுக்காக பாராளுமன்றத்திலே பேசிருக்கிறேன், உங்கள் தொகுதிகளுக்கு என்னென்ன செய்தேன் என இவை அனைத்தையும் உங்களுக்கு புத்தமாக போட்டு கொடுத்திருக்கிறேன்.

    இந்த புத்தகம் எல்லாருடைய வெற்றிக்கும் வந்து சேர்ந்திருக்கும். இல்லையென்றாலும் விரைவில் வரும். மற்ற தொகுதிகளில் வெற்றி பெற்ற எம்பிக்கள் இது போன்ற புத்தகங்கள் போடுவதில்லை. பாராளுமன்ற உறுப்பினரின் பணிக்கு மதிப்பெண்கள் கொடுத்தால் எனக்கு நீங்கள் 100 மதிப்பெண்கள் கொடுப்பேர்கள். அந்த அளவிற்கு இந்த பகுதியில் நான் வேலை செய்துள்ளேன்.

    ஒரு பாராளுமன்ற உறுப்பினரின் வேலை உங்களின் பிரச்சனைகளை பாராளுமன்றத்தில் பேசுவது. உங்களின் பிரச்சினைகளை தீர்க்க மத்திய அரசு 17 கோடி கொடுத்தது. அந்த 17 கோடி ரூபாயில் எனது பாராளுமன்ற தொகுதிக்கு தேவையான உதவிகளை செய்து கொடுத்துள்ளேன்.

    பெரம்பலூர் தொகுதியில் ஏழை மாணவர்களால் உயர்கல்வி பெற முடியாமல் தவித்தனர். அதனால் ஏழை மாணவர்களை தேர்வு செய்து அவர்களில் 1200 மாணவர்களுக்கு மருத்துவம் , எஞ்ஜினியர், விவசாயம் ஆகிய உயர்கல்விகளை படிக்க வைத்துள்ளேன். எனது தொகுதியில் 1200 மாணவ, மாணவிகள் பட்டாதாரிகளாக ஆக்கியுள்ளோம். இதுவரை எந்த எம்பி செய்யாத ஒன்றை நான் செய்திருக்கிறேன். இதுவரை 118 கோடி மாணவர்களுக்காக செலவு செய்திருக்கிறேன்.

    நீங்கள் மீண்டும் என்னை பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுத்தால், 1500 ஏழை குடும்பங்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு உயர் மருத்துவம் செய்து தருவேன். குறிப்பாக இதய நோய், சிறுநீரக செயல் இழப்பு, போன்ற பல லட்சம் செய்ய கூடிய மருத்துவ சிகிச்சைகளுக்கு உயர் மருத்துவம் செய்து தருவேன் .

    இந்த 1500 குடும்பங்களுக்கு 10 லட்சம் மதிப்பிலான இன்சூரன்ஸ் செய்து இந்த சிகிக்சை கிடைக்க வழிவகை செய்வேன். இவை அனைத்தும் என் தனிப்பட்ட வாக்குறுதிகள்.

    செட்டிகுளம் பகுதியில் விளையும் சின்ன வெங்காயம் புகழ்பெற்றது. அத்தகைய செட்டிகுளம் சின்ன வெங்காயத்திற்கு புவிசார் குறியீடு விரைவில் நான் பெற்று தருவேன்.

    கடந்த 10 ஆண்டுகளாக பாஜக ஆட்சி செய்து வருகிறது. மோடி பிரதமராக உள்ளார். பாஜக ஆட்சியில் எந்த அமைச்சர் மீதும் எந்த ஊழல் குற்றசாட்டும் இல்லை. அந்த வகையில் ஊழல் இல்லா ஆட்சியை மோடி கொடுத்திருக்கிறார்.

    தேசபக்தி கொண்டவர். அவர் ஒரு மகான், புண்ணியவான், சந்நியாசி. இரவு பகல் பாராமல் மோடி நாட்டுக்காக உழைத்து கொண்டிருக்கிறார். இந்திய பொருளாதாரத்தை உயர்த்தியார் மோடி.

    மீண்டும் மோடி 3-வது முறையாக பிரதமராக மக்கள் வாக்களிக்க போகிறார்கள். வட மாநிலங்களில் மோடிக்கு பெரும் ஆதரவு உள்ளது. இந்த முறை தமிழ்நாட்டில் இருந்து பாஜக சார்பாக நாம் எம்.பிக்களை அனுப்ப வேண்டும்.

    இந்தியா முழுவதும் ஊழல் செய்த கட்சி என்றால் திமுகவை தான் அழைக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களை டெல்லிக்கு அனுப்பாதீர்கள்.திமுக அமைச்சர்கள் பலர் மீது ஊழல் குற்றசாட்டு உள்ளது. எப்போது வேண்டுமானாலும் அவர்கள் கைது செய்யப்படலாம். ஆகவே ஊழல் கட்சிகளுக்கு வாக்களிக்காதீர்கள்.

    என்னை எதிர்த்து போட்டியிடுவர் எவ்வளவு பெரிய மலைக்கோட்டை மன்னனின் மகனாக இருந்தாலும் சரி, அவர்கள் எல்லாம் ஊழல்வாதிகள், நமது எதிரி நாடான சீனாவில் உள்ள நிறுவனங்களுடன் வியாபாரம் செய்பவர்கள், மக்களின் வரிப்பணத்தை கொள்ளை அடிப்பவர்களின் குடும்பம், அவர்கள் கொள்ளையடித்தது போதாது என்று அவர்களின் மகனை வேட்பளராக நிறுத்தியுள்ளார்கள்.

    மற்றவர்கள் சம்பாதிக்க வந்தவர்கள், ஊழல்வாதிகள், மக்களின் வரிப்பணத்தை கொள்ளையடிப்பவர்கள். மக்களிடம் கொள்ளையடித்த அந்த பணத்தை வெளிநாடுகளில் முதலீடு செய்கிறார்கள். அவர்கள் சீன நாட்டு நிறுவனங்களிடம் வியாபாரம் செய்கிறார்கள். அவர்கள் எல்லாம் துரோகிகள். அவர்களுக்கு நீங்கள் வாக்களிக்க கூடாது.

    மக்களுக்கு நல்லது செய்ய நினைப்பர்களுக்கு தான் நீங்கள் வாக்களிக்க வேண்டும். அந்த வகையில் நீங்கள் அனைவரும் தாமரை சின்னத்துக்கு தான் வாக்களிக்க வேண்டும் என்று பாரிவேந்தர் தெரிவித்தார்.

    • ரூ.1,977 கோடியில் 10 தளங்களுடன் 870 படுக்கை வசதிகளுடன் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படுகிறது.
    • மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான முதல்கட்ட கட்டுமானப் பணிகள் தொடங்கியுள்ளன.

    மதுரை:

    மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க 2015-ம் ஆண்டு மத்திய அரசு அனுமதி வழங்கியது. ரூ.1,977 கோடியில் 10 தளங்களுடன் 870 படுக்கை வசதிகளுடன் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படுகிறது. இதனால் திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தோப்பூரில் அதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு 2019-ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடியால் அடிக்கல் நாட்டப்பட்டது.

    தற்போது வரை எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள இடத்தில் விசாலமான சாலை மற்றும் சுற்றுச்சுவரை தவிர வேறு கட்டுமானப் பணிகள் எதுவும் தொடங்கவில்லை. இதனால் எய்ம்ஸ் மருத்துவமனை விவகாரம் பேசுபொருளாக மாறியது.

    இதற்கிடையே, மதுரை தோப்பூரில் அமையும் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிக்கு மத்திய அரசு டெண்டர் கோரியது. இந்த டெண்டரை எல் அண்ட் டி நிறுவனம் கைப்பற்றியது. அடிக்கல் நாட்டி 5 ஆண்டுக்கு பிறகு சமீபத்தில் எய்ம்ஸ் கட்டுமானப் பணிக்கான வாஸ்து பூஜை மற்றும் சமன்படுத்தும் வேலை நடைபெற்றது.

    இந்நிலையில், மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான முதல்கட்ட கட்டுமானப் பணிகள் தொடங்கியுள்ளன. முதல் கட்டமாக ரூ.10 கோடி மதிப்பீட்டில் 5 கி.மீ. சுற்றளவுக்கு 12 அடி உயர சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டுள்ளது.

    எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள பகுதியில் ரூ.21 கோடியில், 6 கிலோமீட்டருக்கு சாலை பணிகள் நிறைவடைந்துள்ளது. மருத்துவமனை கட்டுமானப் பணிகளை எல் அண்ட் டி நிறுவனம் தொடங்கியுள்ளதாக எய்ம்ஸ் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. 

    • தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் ஒரே கட்டமாக வரும் 19-ம் தேதி நடைபெறுகிறது.
    • பா.ஜ.க. வேட்பாளர் பாரிவேந்தர் தேனூர், அடைக்கம்பட்டியில் வாக்கு சேகரித்தார்.

    திருச்சி:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் ஒரே கட்டமாக வரும் 19-ம் தேதி நடைபெறுகிறது. இதற்காக அனைத்துக் கட்சிகளும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில், பெரம்பலூர் தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் பாரிவேந்தர் தேனூர் கிராமத்தில் தாமரை சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது:

    கடந்த தேர்தலில் 6 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் என்னை வெற்றிபெற வைத்தீர்கள். நான் பாராளுமன்றத்தில் பேசியது மற்றும் பிரதமரை சந்தித்தது தொடர்பாக ஒரு புத்தகம் உங்களுக்கு வழங்கியுள்ளேன். மத்திய அரசு எவ்வளவு பணம் கொடுத்தது, எதற்காக கொடுத்தது என்பதையும் இதில் விளக்கியுள்ளேன்.

    இதுபோன்ற புத்தகம் போடுவதற்கு துணிச்சல் வேண்டும். நான் ஏழைகளுக்காக உதவ வந்த எம்.பி. எனக்கு வழங்கப்பட்ட 17 கோடி ரூபாய் பணத்தில் 42 வகுப்பறைகள், நியாயவிலைக் கடைகள், சமூக நலக் கூடங்கள் மற்றும் கழிவறைகள் கட்டிக்கொடுத்துள்ளேன்.

    கடந்த முறை உங்களுக்கு நான் அளித்த வாக்குறுதிப்படி 118 கோடி ரூபாய் செலவில் 1,200 ஏழை மாணவர்களைத் தேர்ந்தெடுத்து பட்டப்படிப்பு படிக்க வைத்துள்ளேன். இது இம்முறையும் தொடரும்.

    இந்த முறை 1,500 ஏழைக் குடும்பங்களை தேர்ந்தெடுத்து உயர் மருத்துவம் அளிக்கப்படும் என வாக்குறுதி அளிக்கிறேன்.

    வரும் தேர்தலில் நல்லவர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் ஊழலற்ற ஆட்சி நடந்து வருகிறது. ரெயில் பாதை அமைக்கும் முயற்சியில் பாதியளவு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் இருக்கும் திராவிட கட்சிகள் அனைத்தும் ஊழல் கட்சிகள்தான். அவர்கள் லஞ்சம் வாங்காமல் எந்த ஒரு காரியத்தையும் செய்வதில்லை.

    நீட் தேர்வில் இருந்து விலக்களிக்கப்படும் எனக்கூறி ஆட்சிக்கு வந்த தி.மு.க. அரசு அதை செய்யவில்லை. நீட் என சொல்லி தமிழக மக்களை ஏமாற்றி உள்ளனர். ஆட்சிக்கு வந்ததும் பெண்களுக்கு 1,000 ரூபாய் கொடுக்கப்படும் என வாக்குறுதி அளித்தனர். ஆட்சிக்கு வந்து 3 ஆண்டு கழித்து கொடுக்கின்றனர் என தெரிவித்தார்.

    இதேபோல், அடைக்கம்பட்டியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் பாரிவேந்தர் பேசியதாவது:

    ஆட்சிக்கு வந்த தி.மு.க. அரசு வீட்டு வரி, மின்சார வரி, நில வரி, பால் விலை ஆகியவற்றை உயர்த்தி விட்டது. இதனால் விலைவாசியும் உயர்ந்து விட்டது. எனவே நல்லவர்கள் யார் என தேர்வு செய்து வாக்களிக்க வேண்டுகிறேன்.

    தமிழக அமைச்சர்கள் அனைவரும் ஊழல் அமைச்சர்கள் என உலகமெல்லாம் பேசுகிறது. தி.மு.க.வுக்கு வாக்களித்தால் நீங்கள் காலம் முழுவதும் கஷ்டத்தில் இருக்க வேண்டியதுதான். 1,000 ரூபாய் உரிமைத்தொகையை பாதி பெண்களுக்கு வழங்கவில்லை.

    நீட் தேர்வு குறித்து சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது என்பதால் தி.மு.க.வால் ஒன்றும் செய்யமுடியாது.

    இங்கு நான்கு வழிச்சாலை அமைக்கச் சொல்லி கேட்டு வருகிறீர்கள். ஆட்சிக்கு வந்ததும் செய்து முடிக்க நடவடிக்கை எடுக்கிறேன்.

    நேரு மகனுக்கு வாக்களித்து மற்றொரு ராமஜெயத்தை உருவாக்கி விடாதீர்கள். நாடெல்லாம் எனது, மக்கள் எல்லாம் எனது அடிமைகள் என சென்னையில் மு.க.ஸ்டாலின் நினைக்கிறார். சூரியன் எப்படி பகலில் சுட்டெரிக்கிறதோ, ரத்தத்தை உறிஞ்சுகிறதோ, அதுபோல் சூரியனுக்கு வாக்களித்தால் உங்கள் ரத்தம் உறிஞ்சப்படும்.

    எனவே கல்விக்கு தெய்வமான சரஸ்வதி தேவி அமர்ந்துள்ள தாமரை சின்னத்துக்கு வாக்களிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்தார்.

    • வந்தாரை வாழவைக்கும் திருப்பூருக்கு வந்திருக்கிறேன் - முதல்வர் ஸ்டாலின்
    • நேற்று நடந்த ராகுல் காந்தியின் கூட்டம் பாகுபலி படம் போல பிரமாண்டமாக இருந்தது

    கோவை அவிநாசியில், நீலகிரி திமுக வேட்பாளர் ஆ.ராசா மற்றும் திருப்பூர் தொகுதி சி.பி.ஐ வேட்பாளர் சுப்பராயனை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார்.

    அப்போது பேசிய அவர், "வந்தாரை வாழவைக்கும் திருப்பூருக்கு வந்திருக்கிறேன். மலைகளின் அரசியாகவும், நீர் வீழ்ச்சியின் எழுச்சியாகவும். மக்கள் மனங்களில் மகிழ்ச்சியாகவும் உள்ள இடத்திற்கு வந்துள்ளேன்.

    நேற்று நடந்த ராகுல் காந்தியின் கூட்டம் பாகுபலி படம் போல பிரமாண்டமாக இருந்தது. ஒரே ஒரு கூட்டம் டோட்டல் பாஜகவும் குளோஸ். ராகுல் காந்தியின் ஒரு நாள் வருகையே பிரதமர் மோடியின் மொத்த பிரசார பயணத்தையும் காலி செய்துவிட்டது.

    தமிழ்நாட்டு மக்களை உண்மையான அன்பால் மட்டுமே ஆள முடியும் என்பதை ராகுல் காந்தி நிரூபித்துவிட்டார். ராகுல் எந்த அளவுக்கு தமிழ்நாட்டை மதிக்கிறார். என்பது அவரின் பேச்சின் மூலம் தெரிந்திருக்கும்.

    மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தார் என்றால், முதலில் இட ஒதுக்கீட்டைதான் ரத்து செய்வார். ஏனென்றால் சமூகநீதி என்றாலே பாஜகவுக்கு அலர்ஜி.

    உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாக இந்தியா விளங்க காரணம், இந்திய அரசியலமைப்பு சட்டம். மீண்டும் மோடி ஆட்சிக்கு வந்தால், புரட்சியாளர் அம்பேத்கர் உருவாக்கிய அந்த அரசியலமைப்பு சட்டத்தையே மாற்றிவிடுவார்.

    திருப்பூரில் ஜி.எஸ்.டி குறித்து கேள்வி எழுப்பிய பெண்ணை, பாஜகவினர் தாக்கியுள்ளனர். இதுதான் பாஜக மக்களை மதிக்கும் லட்சணம். இதுதான் பாஜக பெண்களுக்கு கொடுக்கிற மதிப்பு. மக்களை மதிக்காமல் அராஜகம் செய்கிற பாஜகவினர் திருப்பூரை மணிப்பூராக்கிவிடுவார்கள். மோடியும், பாஜகவும் வீட்டுக்கும் கேடு; நாட்டுக்கும் கேடு.

    கலவரம் செய்வது பாஜகவின் DNAவில் ஊறிப் போன ஒன்று. அமைதியான இடத்தில்தான் தொழில் வளரும், தொழில் வளர்ச்சி இருக்கும், நிறுவனங்களை நடத்த முடியும். பாஜக போன்ற கலவரக் கட்சிகளை உள்ளே விட்டால், அமைதி போய்விடும். தொழில் வளர்ச்சி போய்விடும்.. நிறுவனங்களை நிம்மதியாக நடத்த முடியாது" என்று தெரிவித்தார்.

    மோடி ஆட்சியில் பத்திரிக்கையாளர்களும், ஊடக நிறுவனங்களும் நிம்மதியாக செயல்பட முடியவில்லை. பத்திரிக்கையாளர்கள் படுகொலையை ஒன்றிய அரசு வேடிக்கை பார்க்கிறது. மோடி ஆட்சியில் பத்திரிக்கை சுதந்திரம் பறிக்கப்பட்டதன் விளைவுதான், ஊடக சுதந்திரத்தில் 161 இடத்தில் இந்தியா இருக்கிறது. நமது பழம்பெரும் ஜனநாயகத்திற்கு மோடி ஏற்படுத்திய அவமானம் இது

    பன்னீர் செல்வத்தை தர்ம யுத்தம் நடத்த வைத்தது, பழனிசாமியை முதலமைச்சராக கொண்டுவந்தது, இரு துருவங்களாக இருந்த பன்னீரையும், பழனிசாமியையும் சேர்த்தது, தினகரனை கைது செய்து தங்களின் அடிமையாக மாற்றியது, அரசியலுக்குள் சசிகலாவை வரவிடாமல் தடுத்தது, தற்போது பன்னீரையும், தினகரனையும் மிரட்டி தேர்தலில் நிற்க வைத்திருப்பதும் பாஜகதான். இப்படி டிவி சீரியல்களில் வருவதுபோல், திடீர் திடீர் என காட்சிகளை மாற்றி சதி நாடகம் நடத்துகிறது பாஜக" என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். 

    • கதிரேசன் - மீனாட்சி தம்பதியினர் நடிகர் தனுஷ் தங்களது மகன் என்று மேலூர் நீதிமன்றத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு மனுத் தாக்கல் செய்தனர்
    • தனுஷ் பள்ளியில் படித்துக்கொண்டிருந்த காலகட்டத்திலேயே வீட்டைவிட்டு ஓடிவிட்டதாகவும், அவரை எங்கு தேடியும் கிடைக்கவில்லை என அவர்கள் தெரிவித்தனர்

    தனுஷ் தனது மகன் என வழக்கு தொடுத்த மேலூர் கதிரேசன் (79) உடல் நலக்குறைவு காரணமாக மதுரை அரசு மருத்துவமனையில் நேற்று காலமானார்.

    மதுரை மேலூர் பகுதியைச் சேர்ந்த கதிரேசன் - மீனாட்சி தம்பதியினர் நடிகர் தனுஷ் தங்களது மகன் என்று மேலூர் நீதிமன்றத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு மனுத் தாக்கல் செய்தனர். அப்போது இந்த வழக்கு பெரும் பரபரப்பாக பேசப்பட்டது.

    தனுஷ் பள்ளியில் படித்துக்கொண்டிருந்த காலகட்டத்திலேயே வீட்டைவிட்டு ஓடிவிட்டதாகவும், அவரை எங்கு தேடியும் கிடைக்கவில்லை என அவர்கள் தெரிவித்தனர்.

    மேலும், இயக்குநர் கஸ்தூரி ராஜாவின் வளர்ப்பு மகனாக இருந்து நடிகரானது பிறகே தெரிய வந்தது என்று அவர்கள் தெரிவித்தனர்.

    நடிகர் தனுஷ் எங்களது மகன் என்ற முறையில் பெற்றோரான எங்களது பராமரிப்பு செலவிற்காக மாதாமாதம் உதவித்தொகை வழங்க உத்தரவிட வேண்டும் என அவர்கள் நீதிமன்றத்தில் முறையிட்டனர். பல ஆண்டுகளாக இந்த சட்டப்போராட்டம் நடைபெற்று வந்தது.

    இந்த வழக்கை மேலூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதன்பின்பு, சென்னை உயர்நீதிமன்றத்தில் கதிரேசன் தரப்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.

    அந்த மனு மீது கடந்த மார்ச் 13 ஆம் தேதி தீர்ப்பு வழங்கிய உயர்நீதிமன்றம், தவறான உள்நோக்கத்தில் மனுதாரர்களான கதிரேசன் மீனாட்சி தம்பதி இந்த மனுவை தாக்கல் செய்தது மட்டுமின்றி குற்றச்சாட்டுகளை நிரூபிக்க உரிய ஆதாரங்களையும் தாக்கல் செய்யவில்லை என வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

    இந்த நிலையில், உடல்நலக்குறைவு காரணமாக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த கதிரேசன் சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை உயிரிழந்தார். கதிரேசனின் வழக்கு மாவட்ட நீதிமன்றத்தில் தற்போதும் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • ஜூன் 4-ந்தேதிக்குப்பின் யார் காணாமல் போவார்கள் என்பதை மக்கள் முடிவு செய்வார்கள்.
    • அதிமுக பொன்விழா கண்ட கட்சி. 50 ஆண்டுகள் நிறைவு செய்த கட்சி.

    சிதம்பரம் தொகுதி வேட்பாளர் சந்திரகாசனை ஆதரித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    2024-க்குப் பிறகு அதிமுக கட்சி இருக்காது என சிலர் கூறுகிறார்கள். வேறு எங்கு போகும்?. அதிமுக இங்கேதான் இருக்கும். ஜூன் 4-ந்தேதிக்குப்பின் யார் காணாமல் போவார்கள் என்பதை மக்கள் முடிவு செய்வார்கள். அதிமுக பொன்விழா கண்ட கட்சி. 50 ஆண்டுகள் நிறைவு செய்த கட்சி.

    மதுரையில் பிரமாண்டமாக மாநில மாநாடு நடத்தினோம். அந்த மாநாடு இந்தியாவே திரும்பிப்பார்க்கும் மாநாடாக அமைந்தது. அது சில பேருக்கு புரியாமல்... வெயில் காலத்தில் உஷ்ணம் அதிகமாகிவிட்டது போலிக்கிறது. அதனால் இப்படி மாறிமாறி பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

    அதிமுக-வை தோற்றுவித்தவர் எம்.ஜி.ஆர். அதை கட்டிக்காத்தவர் புரட்சித்தலைவி அம்மா. இருபெரும் தலைவர்களும் தெய்வமாக விளங்கிக் கொண்டிருக்கிறார்கள். தெய்வத்தின் அருள் ஆசியுடன் இருக்கக் கூடிய கட்சி அதிமுக என்பதை மறந்து கொண்டி பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

    இது தெய்வ சக்தி உள்ள கட்சி. அழிக்க நினைத்தாலோ, முடக்க நினைத்தாலோ காற்றோடு காற்றாக கரைந்து போய் விடுவார்கள். இதுதான் வரலாறு. இந்த கட்சியை எத்தனையோ பேர் எதிர்த்தார்கள். அவர்கள் இருக்கும் இடம் தெரிகிறதா? எங்கே போனார்கள் என்றே தெரியவில்லை.

    சிலர் பலத்தை தூக்கிக்கொண்டு திரிகிறார்கள். அவர்கள் யார் என்று நீங்களே தெரிந்து கொள்ளுங்கள். அதிமுக-வை நம்பியவர்கள் கெட்டுப்போன சரித்திரம் கிடையாது. அதிமுக-வை அழிக்க நினைத்தவர்கள் அழிந்து போனதுதான் வரலாறு. அதிமுக-விடம் பூச்சாண்டி காட்டுவதை நிறுத்திவிடுங்கள். அதிமுக உழைப்பை நம்பி இருக்கின்றன கட்சி.

    இவ்வாறு எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

    தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை தேர்தலுக்குப் பிறகு அதிமுக அழிந்து போகும் எனத் தெரிவித்திருந்தார். மேலும், ஜூன் 4-ந்தேதி எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக இருக்காது. உண்மையான தலைவர்கள் கைக்கு கட்சி வந்துவிடும் எனத் தெரிவித்திருந்தார். அதற்கு தற்போது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பதிலடி கொடுத்துள்ளார்.

    • ஒரு குடும்பத்தில் பெண் வேலையை பார்த்தால் அந்த குடும்பம் மட்டுமல்லது அந்த சந்ததியே நன்றாக இருக்கும்.
    • வருடத்திற்கு ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும்.

    பசும்பொன்:

    ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் பா.ஜெயபெருமாள் புதுக்கோட்டை பகுதிகளுக்கு உட்பட்ட கரூர், ஒக்கூர், குறுந்தலூர்,பெரம்பூர், இரும்பாநாடு, தீயத்தூர். பெருங்குளம், பொன்பேத்தி. வேல்வரை, தாழனூர், மதகம் உட்பட 29 கிராமங்களுக்கு சென்று இரட்டை இலை சின்னத்திற்கு தீவிரமாக வாக்கு சேகரித்தார்.

    அப்போது பெண்கள், இளைஞர்கள், முதியவர்கள் என அனைவரும் திரண்டு வேட்பாளர் ஜெயபெருமாளுக்கு மலர் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர். அவர்கள் மத்தியில் வேட்பாளர் ஜெயபெருமாள் பேசுகையில், ஒரு குடும்பத்தில் பெண் வேலையை பார்த்தால் அந்த குடும்பம் மட்டுமல்லது அந்த சந்ததியே நன்றாக இருக்கும். அதன் அடிப்படையில் தான் பெண் கல்விக்கு முக்கியத்துவம் அளித்தார் ஜெயலலிதா.

    அதேபோல் பெண்களின் வாழ்க்கைத் தரம் உயர வேண்டும் என்பதற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியவர் எடப்பாடி பழனிச்சாமி. ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட பெண்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தவும், பொருளாதார ரீதியாக அவர்களின் குடும்பங்களை எவ்வித கஷ்டமும் இல்லாமல் கொண்டு செல்லவும் ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட அனைத்து தாலுகாக்களிலும் இலவச தொழில் மையங்கள் அமைக்கப்பபடும்.

    படித்த இளைஞர்கள் வேலை வாய்ப்புக்காக காத்திருக்காமல் பெரிய தொழிற்சாலைகள் மூலம் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தி வருடத்திற்கு ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும். சிறப்பு போட்டி தேர்வுகளில் வெற்றி பெற அவர்களுக்கு இலவச தேர்வு மையங்கள் அமைக்கப்படும் என பல்வேறு வாக்குறுதிகளை அளித்து பேசினார். இதில் புதுக்கோட்டை தெற்கு மாவட்ட செயலாளர் வைரம் முத்து, மாவட்ட துணைச் செயலாளர் ராஜநாயகம், அனைத்து உலகை எம்.ஜி.ஆர். மன்ற துணைச் செயலாளர் ஆனி முத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பெண்களுக்கு தகப்பனாராகவும், சகோதரராகவும் திட்டதை நமது முதல்வர் கொண்டு வந்துள்ளார்.
    • ராகுல் காந்தியும் இந்தியாவில் மகாலட்சுமி திட்டத்தை அறிவித்துள்ளார்.

    சிவகாசி:

    விருதுநகர் பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை ஆதரித்து சிவகாசி அருகே உள்ள தாயில் பட்டியில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசுகையில், மக்களிடம் ஓட்டு கேட்க தி.மு.க.வுக்கு அதிக உரிமை உள்ளது. வானம் பார்த்த பூமியான விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு தொழில் பிரதானமாக உள்ளது. மத்தியில் ஆட்சி அமைக்கும், அதில் மாணிக்கம் தாகூர் அமைச்சராக பொறுப்பேற்பார். அப்போது பட்டாசு பிரச்சனைக்கு நிரந்தரமாக தீர்வு காணப்படும்.

    காங்கிரஸ் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட 100 நாள் வேலையை 150 நாட்களாகவும், சம்பளம் 400 ஆகவும் உயர்த்தி தரப்படும். தேர்தல் முடிந்த பின்னர் மகளிர் உரிமைத் தொகை கிடைக்காதவர்களுக்கு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். மகளிர் உரிமை திட்டம் இந்தியாவில் தமிழ் நாட்டில் மட்டும் தான் செயல்படுகிறது. பெண்களுக்கு தகப்பனாராகவும், சகோதரராகவும் திட்டதை நமது முதல்வர் கொண்டு வந்துள்ளார்.

    அதனைப் போன்று ராகுல் காந்தியும் இந்தியாவில் மகாலட்சுமி திட்டத்தை அறிவித்துள்ளார். அதில் பெண்களுக்கு வருடத்திற்கு ஒரு லட்சம் வழங்கப்படும். அதற்காக பத்திரம் ஒன்று எழுதி உறுதி கொடுத்துள்ளார் என்றார். பிரசாரத்தில் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் கைச்சின்னத்தில் வாக்களித்து சமூக வெற்றி பெறச் செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டார். இதில் கூட்டணி கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

    • இந்திய தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ஆகியோருக்கு கடிதம்.
    • தமிழக உளவுத்துறை ஐ.ஜி. செந்தில்வேலன் எதிர்க்கட்சியினர்களின் தொலைபேசிகளை ஒட்டுக்கேட்பதாக குற்றச்சாட்டு.

    எதிர்க்கட்சியினரின் தொலைபேசி உரையாடல்கள் ஒட்டுக்கேட்கப்படுவதாக தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ஆகியோருக்கு அதிமுக கடிதம் ஏழுதியுள்ளது.

    அதிமுக சார்பில் அக்கட்சியின் வழக்கறிஞர் பிரிவு செயலாளர் இன்பதுரை கடிதம் எழுதியுள்ளார். தமிழக உளவுத்துறை அதிகாரிகள் பெகாசஸ் உள்ளிட்ட மென்பொருள்களை பயன்படுத்தி ஒட்டுக்கேட்பதாக அதில் குற்றம்சாட்டியுள்ளார்.

    தமிழக உளவுத்துறை ஐ.ஜி. செந்தில்வேலன் எதிர்க்கட்சியினர்களின் தொலைபேசிகளை சட்டவிரோதமாக இடைமறித்து மென்பொருகள் மூலமாக உரையாடல்களை ஒட்டுக்கேட்பதாக அவர் மீது அதிமுக குற்றம்சாட்டியுள்ளது.

    மேலும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

    • பாஜக தனது வெறுப்பு அரசியலை தமிழகத்தில் புகுத்த பார்க்கிறது.
    • பாராளுமன்ற தேர்தல் மூலம் இந்தியாவிலிருந்து பாஜக ஆட்சி அகற்றப்படும்.

    திருச்சி:

    திருச்சியில் இன்று காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;-

    இந்தியாவில் உள்ள விளிம்பு நிலை மக்களுக்கு, பெண்களுக்கு, சிறுபான்மை மக்களுக்கு பா.ஜ.க. ஆட்சியில் பாதுகாப்பு இல்லை. உப்பு சத்தியாகிரகத்தை பற்றி, இந்திய நாட்டின் சுதந்திரத்திற்காக போராடியவர்களை பற்றி மோடியும், அண்ணாமலையும் தெரிந்து கொள்ள வேண்டும்.

    பாஜக தனது வெறுப்பு அரசியலை தமிழகத்தில் புகுத்த பார்க்கிறது. இதனை ஒரு நாளும் தமிழக மக்கள் அனுமதிக்க மாட்டார்கள். ஜாதி, மத அரசியலை இந்திய மக்கள் ஒரு பொழுதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். தமிழ் இன துரோகி அண்ணாமலை தான். கர்நாடக எம்.பி. தமிழர்கள் மீது அபாண்டமாக பழி சுமத்திய போது அதற்கு அண்ணாமலை பதில் ஏதும் சொல்லாமல் இருப்பது ஏன்?தமிழகத்தின் உரிமை எங்கெல்லாம் பாதிக்கப்படுகிறதோ அங்கெல்லாம் காங்கிரஸ் கட்சி நிச்சயம் குரல் எழுப்பும். காவிரி நதிநீர் பிரச்சனையில் தமிழக அரசுக்கு காங்கிரஸ் உறுதுணையாக இருக்கும். ஒரு நாளும் உரிமையை விட்டுக் கொடுக்காது. இந்த பாராளுமன்ற தேர்தல் மூலம் இந்தியாவிலிருந்து பாஜக ஆட்சி அகற்றப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×