என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • வழக்கம் போல் கேலியும் கிண்டலும் பேசுவது தான் திராவிட மாடல்.
    • அரசியலமைப்பு சட்டம் மாற்றப்படும் என்று யாரும் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கவில்லை.

    சென்னை:

    முன்னாள் கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    அரசியலமைப்பு சட்டத்தை மாற்ற நினைத்த வர்களை தலைகுனிந்து வணங்க வைத்திருக்கிறோம் என்று பெருமை பேசும் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களே கடந்த காலங்களில் திராவிட இயக்கத்தின் வரலாற்றை புரட்டிப் பார்த்தால் அன்று திராவிட இயக்கத்தின் தலைவர் பெரியார் சமூக நீதிக்கு அரசியலமைப்புச் சட்டம் எதிரானது என்று அதை எரித்தார்.

    அதன் பின்னர் வந்த முன்னாள் முதல்வர் கலைஞர், பேராசிரியர் அன்பழகன் ஆகியோர் இந்திய அரசியலமைப்பு சட்ட புத்தகத்தை கிழித்து அவமரியாதை செய்தார்கள். அன்றைய சூழ்நிலையில் அச்சம்பவத்தில் அவர்கள் கைது செய்யப்பட்டபோது நீதிமன்றத்தில் அரசியலமைப்பு சட்ட புத்தகத்தை கிழிக்கவில்லை காகிதத்தை தான் கிழித்தோம் என்று கூறி வெளிவந்த வரலாறும் உண்டு.

    அப்படிப்பட்ட வரலாற்றில் வந்த தி.மு.க. கூட்டணியை சேர்ந்த 40 பாராளுமன்ற உறுப்பினர்களும் சென்று அரசியலமைப்பை காக்கப்போகிறோம் என்று கூறுவது வேடிக்கை.

    ஏனென்றால் கடந்த 5 ஆண்டுகளில் தமிழகத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் கள் பாராளுமன்றத்தில் நேரத்தை வீணடித்தார்கள், வெளிநடப்பு செய்தார்கள், வாக்குவாதம் செய்தார்கள், சபையில் கூச்சலிட்டார்கள், பாராளுமன்றத்திற்கு வெளியே சென்று மறியல் செய்தார்கள். இதைத்தவிர தமிழகத்திற்கு தி.மு.க. கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்கள் நலத்திட்டங்களுக்கு ஏதாவது செய்தார்களா?

    அதைத்தான் நான் முன்னரே கூறினேன் வெற்றிபெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெறும் காதறுந்த ஊசிகள்... தைக்க உதவாது... குத்தத்தான் உதவும் என்று.

    அதைப்போல இன்றைக்கு வெற்றி பெற்று நாடாளுமன்றம் செல்லும் பாராளுமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்வார்களே தவிர வழிநடத்த மாட்டார்கள்.

    பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்க நாட்டு பயணத்தின் போது நியூயார்க் நகரத்தில் ஆற்றிய உரையில் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் அருமை பெருமைகளை எடுத்துக்கூறி அதற்கான பாதுகாப்பையும் நன் மதிப்பையும் உலகறிய செய்திருக்கிறார். இந்தியாவே கோவில் அரசியல் அமைப்பு சட்ட புத்தகமே புனித நூல் என்று கூறினார்.

    பிரதமர் நரேந்திர மோடி இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் மீது மிகுந்த பெருமதிப்பும், மரியாதையும் வைத்துள்ளது உலகறிந்த செய்தி.

    இந்த முறை தேசிய ஜன நாயக கூட்டணி வெற்றி பெற்றால் இந்திய அரசியலமைப்பு சட்டத்தையே மாற்றிவிடுவார்கள் என்று பொய் பிரச்சாரம் செய்து மக்களை குழப்பி வாக்குகளை பெற்றுக்கொண்டு மக்களை சமாதானப் படுத்துவதற்காக இப்போது இது போன்ற பொய் பிரசாரம் செய்கிறார்கள்.

    எந்த நிகழ்விலும் இந்திய அரசியலமைப்பு சட்டம் மாற்றப்படும் என்று யாரும் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கவில்லை.

    மோடி பிரதமராக பதவிஏற்கும் முன்னர் உள்ளார்த்த பூர்வமாக இந்திய அரசியலமைப்பு சட்ட புத்தகத்தை வணங்கியதை வழக்கம் போல் கேலியும் கிண்டலும் பேசுவது தான் திராவிட மாடல்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ரேஷன் கடைகளில் ஜூன் மாதத்திற்கான துவரம் பருப்பு, பாமாயில் உள்ளிட்ட பொருட்கள் விநியோகிக்கப்படவில்லை என்று வரும் செய்திகள் கவலையளிக்கின்றன.
    • ரேஷன் கடைகளில் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அளவிற்கு அவலநிலைக்கு சீர்கெடச் செய்த இந்த விடியா திமுக அரசுக்கு கடும் கண்டனம்.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    தமிழ்நாடு முழுவதும் ரேஷன் கடைகளில் ஜூன் மாதத்திற்கான துவரம் பருப்பு, பாமாயில் உள்ளிட்ட பொருட்கள் விநியோகிக்கப்படவில்லை என்று வரும் செய்திகள் கவலையளிக்கின்றன.

    பொது விநியோகத்தில் வரலாற்றுச் சாதனைகளைப் புரிந்து, நாட்டிற்கே முன்மாதிரியாகத் திகழ்ந்த தமிழ்நாட்டின் ரேஷன் கடைகளில் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அளவிற்கு அவலநிலைக்கு சீர்கெடச் செய்த இந்த விடியா திமுக அரசுக்கு கடும் கண்டனம்.

    ஏழை எளிய மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றும் ரேஷன் கடைகளில் அனைத்து பொருட்களும் எவ்வித தட்டுப்பாடும் இன்றி சீராக விநியோகம் செய்யப்படுவதை உறுதிசெய்யுமாறு விடியா திமுக அரசின் முதல்வரை வலியுறுத்துகிறேன்.

    • விக்கிரவாண்டி பஸ் நிலையத்தில் ஒரு விரல் உருவம் பொருத்திய செல்பி பாயிண்ட் வைக்கப்பட்டடுள்ளது.
    • கிராம நிர்வாக அலுவலர்கள் அண்ணாமலை, சீனிவாசன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    விக்கிரவாண்டி:

    விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் வரும் ஜீலை 10-ந் தேதி நடைபெற உள்ளது. இதில் 100 சதவீதம் வாக்களிக்கும் விதமாக வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விக்கிரவாண்டி பஸ் நிலையத்தில் ஒரு விரல் உருவம் பொருத்திய செல்பி பாயிண்ட் வைக்கப்பட்டடுள்ளது. இதன் தொடக்க விழா நேற்று மதியம் நடைபெற்றது.

    விழுப்புரம் மாவட்ட கலெக்டர் பழனி கலந்து கொண்டு விழிப்புணர்வு செல்பி பாயிண்ட்டில் உள்ள ஏறி நின்று ஒரு விரல் உயர்த்தி செல்பி எடுத்துக்கொண்டு பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

    இதில் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் நடத்தும் அலுவலர் சந்திரசேகர், தனி தாசில்தார் ஜெயலட்சுமி, விக்கிரவாண்டி தாசில்தார் யுவராஜ், வருவாய் ஆய்வாளர் தெய்வீகன், கிராம நிர்வாக அலுவலர்கள் அண்ணாமலை, சீனிவாசன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    • நேற்று டிரோன் காமிரா மூலமும் சோதனை நடத்தினர்.
    • அதிகாரிகள் சந்தேகிக்கும் நபர்களை மறைமுகமாக தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    நெல்லை:

    நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே.பி.கே. ஜெயக்குமார் தனசிங் மர்மச்சாவு வழக்கில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் ஒரு மாதத்திற்கும் மேலாக பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடந்த 2 நாட்களாக சிலரிடம் அவர்களது சொந்த ஊர்களுக்கு சென்று சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகளின் ஒரு குழுவினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஜெயக்குமாரின் நண்பர்கள், அவர் சாவுக்கு முந்தைய 2 நாட்களில் சந்தித்தவர்களின் விபரங்கள் சேகரித்து அவர்களிடம் அவர்களது இருப்பிடத்திற்கே சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் ஜெயக்குமார் உடல் கிடந்த தோட்டத்தில் அங்குலம் அங்குலமாக சோதனையிட்டு வரும் நிலையில் நேற்று டிரோன் காமிரா மூலமும் சோதனை நடத்தினர். தோட்டத்தில் இருந்து 3 கிலோமீட்டர் சுற்றளவிற்கு டிரோன் காமிரா மூலமாக சோதனை செய்து அதில் தடயங்கள் ஏதும் கிடைக்குமா என ஆராய்ந்தனர்.

    ஆனாலும் இதுவரை உறுதியான முடிவை எடுக்க முடியாமல் அவர்கள் திணறி வருகின்றனர். அவரது மர்மச்சாவு வழக்கில் இதுவரை பல கோணங்களில் விசாரணை நடத்தி முடித்துள்ளனர். அந்த விசாரணையின் அடிப்படையில் சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் சந்தேகிக்கும் நபர்களை மறைமுகமாக தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    • மத்திய ஜல்சக்தி துறை இணை அமைச்சரின் செயல்பாடானது நடுநிலையானதாக, விவசாயிகளுக்கு நம்பிக்கை கொடுக்கக் கூடியதாக இருக்க வேண்டும்.
    • தமிழ்நாட்டின் உரிமை, விவசாயிகளின் நலன் ஆகியவற்றை கவனத்தில் கொண்டு நியாயம் கிடைக்கும் வகையில் செயல்பட வேண்டும்.

    சென்னை:

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கர்நாடகம், தமிழகம் ஆகிய இரு மாநில மக்களின் தண்ணீர் தேவை மிக மிக முக்கியமான ஒன்று.

    மேகதாதுவில் அணைக் கட்டுவது தொடர்பாக கர்நாடக அரசு மேற்கொள்ளும் முயற்சியானது தமிழக டெல்டா விவசாயிகளை மிகப்பெரிய அளவில் பாதிக்கும். மேலும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கும்.

    அப்படி இருக்கும் போது கர்நாடகத்தைச் சேர்ந்த மத்திய ஜல்சக்தி துறை இணை அமைச்சரின் செயல்பாடானது நடுநிலையானதாக, விவசாயிகளுக்கு நம்பிக்கை கொடுக்கக் கூடியதாக இருக்க வேண்டும்.

    மேலும் கர்நாடகம்- தமிழ்நாடு ஆகிய இரு மாநில நலனை, உறவை காக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மத்திய ஜல்சக்தி துறை இணை அமைச்சர் வரும் நாட்களில் மேகதாது அணை சம்பந்தமாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று கூறுவதை தவிர்க்க வேண்டும்.

    எனவே மத்திய ஜல்சக்தி துறை இணை அமைச்சர் மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாட்டின் உரிமை, விவசாயிகளின் நலன் ஆகியவற்றை கவனத்தில் கொண்டு நியாயம் கிடைக்கும் வகையில் செயல்பட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • யாத்திரையின் போது எதிர்க்கட்சிகள் செய்த ஒவ்வொரு தவறான பிரசாரத்துக்கும் சரியான விளக்கம் அளித்து மக்களிடம் தெளிவை ஏற்படுத்த வேண்டும் என்றும் நட்டா கூறி இருக்கிறார்.
    • அடுத்த சில நாட்களில் யாத்திரை பற்றிய வழிகாட்டு நெறிமுறைகளை கட்சி மேலிடம் அனைத்து மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கும் என்று கூறப்படுகிறது.

    சென்னை:

    பாராளுமன்றத் தேர்தலில் 3-வது முறையாக பா.ஜ.க. வெற்றி பெற்று ஆட்சியமைத்ததை தொடர்ந்து நாடு முழுவதும் நன்றி தெரிவித்து யாத்திரை நடத்த திட்டமிட்டுள்ளார்கள். இந்த யாத்திரையை பிரதமர் மோடி விரைவில் தொடங்கி வைக்கிறார்.

    இந்த யாத்திரையை அனைத்து பாராளுமன்றத் தொகுதிகளிலும் மக்களை சந்திக்கும் யாத்திரையாக நடத்தி தேர்தலில் வாக்களித்த மக்களுக்கு நன்றி சொல்ல முடிவு செய்து உள்ளார்கள்.

    முக்கியமாக இந்த தேர்தலில் காங்கிரஸ், வித்தியாசமான தேர்தல் அணுகுமுறையை கையாண்டது. அப்போது பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் அரசியல் சட்டத்தை மாற்றி விடுவார்கள். மனு தர்ம சட்டங்களை கொண்டு வருவார்கள் என்று ராகுல் காந்தி பிரசாரம் செய்தார்.

    இந்த பிரசாரம் மக்கள் மத்தியில் எடுபட்டது. அவர்களை நம்பவும் வைத்தது. எனவே, பா.ஜ.க. யாத்திரையை மாவட்டம், தொகுதி, மண்டல அளவில் நடத்தவும் யாத்திரையின் போது எதிர்க்கட்சிகள் செய்த ஒவ்வொரு தவறான பிரசாரத்துக்கும் சரியான விளக்கம் அளித்து மக்களிடம் தெளிவை ஏற்படுத்த வேண்டும் என்றும் நட்டா கூறி இருக்கிறார்.

    அடுத்த சில நாட்களில் யாத்திரை பற்றிய வழிகாட்டு நெறிமுறைகளை கட்சி மேலிடம் அனைத்து மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கும் என்று கூறப்படுகிறது.

    • இலங்கை கடற்படையின் அத்துமீறலை இந்தியா அனுமதிக்கக் கூடாது.
    • தமிழக மீனவர்கள் பாரம்பரியமாக மீன் பிடித்து வரும் பகுதிகளில் மீன் பிடிப்பது அவர்களின் உரிமை.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    வங்கக்கடலில் கச்சத்தீவுக்கு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்த 4 மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். அவர்கள் மீன் பிடிக்கச் சென்ற படகும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தமிழக மீனவர்களுக்கு எதிரான சிங்களப் படையினரின் இந்த அத்துமீறல் கடுமையாக கண்டிக்கத்தக்கது.

    வங்கக்கடலில் மீன் பிடிப்பதற்கான இரு மாத தடைக்காலம் கடந்த 15-ஆம் தேதி தான் முடிவுக்கு வந்தது. அதன்பின் மீண்டும் மீன்பிடிக்கச் சென்ற இரண்டாவது நாளிலேயே தமிழக மீனவர்களை சிங்களக் கடற்படை கைது செய்திருக்கிறது. கடந்த ஏப்ரல் மாதம் 15-ஆம் நாள் மீன்பிடி தடைக்காலம் முடிவடைவதற்கு முன்பாகவும் தமிழக மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்டனர். தமிழக மீனவர்களை கைது செய்வதையே சிங்களக் கடற்படை தொழிலாக வைத்திருக்கிறது என்பதை இதிலிருந்தே புரிந்து கொள்ள முடியும்.

    தமிழக மீனவர்கள் பாரம்பரியமாக மீன் பிடித்து வரும் பகுதிகளில் மீன் பிடிப்பது அவர்களின் உரிமை. அதற்காக அவர்களை கைது செய்ய இலங்கை அரசுக்கு எந்த உரிமையும் இல்லை. அதையும் மீறி தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படை தொடர்ந்து கைது செய்வது இந்திய இறையாண்மைக்கு விடப்பட்ட சவால் ஆகும். இலங்கை கடற்படையின் இந்த அத்துமீறலை இந்தியா அனுமதிக்கக் கூடாது.

    வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் நாளை மறுநாள் (ஜூன் 20) அரசுமுறைப் பயணமாக இலங்கைக்கு செல்லவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இலங்கை அதிபருடனான சந்திப்பின் போது, தமிழக மீனவர் சிக்கலுக்கு நிரந்தரத் தீர்வு காணும் வகையில் இந்தியா - இலங்கை அரசுகள் இணைந்து அமைத்துள்ள கூட்டுப் பணிக்குழுவின் கூட்டத்தைக் கூட்டுவது குறித்தும், இலங்கைப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை அவர்களின் படகுடன் விடுதலை செய்வது குறித்தும் வலியுறுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

    • ஆட்சிப் பொறுப்பேற்று மூன்று ஆண்டுகள் முடிவடைந்தும் இந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை.
    • விவசாயிகளுக்கான நெல் கொள்முதல் விலையை உயர்த்த தி.மு.க. அரசு தயக்கம் காட்டுவது கடும் கண்டனத்திற்குரியது.

    சென்னை:

    முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    2021-ம் ஆண்டு தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில், நெல்லுக்கான ஆதார விலை குறைந்தபட்சம் குவிண்டால் ஒன்றுக்கு 2,500 ரூபாயாக உயர்த்தப்படும் என்ற வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆட்சிப் பொறுப்பேற்று மூன்று ஆண்டுகள் முடிவடைந்தும் இந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. தற்போது, தமிழ்நாட்டில் சாதாரண நெல் குவிண்டால் 2,265 ரூபாய்க்கும், சன்ன ரக நெல் 2,310 ரூபாய்க்கும் கொள்முதல் செய்யப்படுகிறது.

    விவசாயிகளுக்கான நெல் கொள்முதல் விலையை உயர்த்த தி.மு.க. அரசு தயக்கம் காட்டுவது கடும் கண்டனத்திற்குரியது.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடிக் கவனம் செலுத்தி, வருகின்ற சட்டமன்றக் கூட்டத் தொடரின்போது, நெல் கொள்முதல் விலையை உடனடியாக குவிண்டால் ஒன்றுக்கு 3,500 ரூபாயாக உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • 2026ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றப் பொதுத் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளை மேற்கொண்டு, தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று, மக்கள் பணியாற்றுவது தான் பிரதான இலக்கு.
    • இடைப்பட்ட காலத்தில் நடத்தப்படும் உள்ளாட்சித் தேர்தல் உள்பட எந்தத் தேர்தலிலும் தமிழக வெற்றிக் கழகம் போட்டியிடாது.

    சென்னை:

    விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கு அடுத்த மாதம் 10-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த இடைத்தேர்தலில் தி.மு.க. சார்பில் அன்னியூர் சிவா, தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பா.ம.க. வேட்பாளர் சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சி சார்பில் மருத்துவர் அபிநயா ஆகியோர் போட்டியிடுகின்றனர். அ.தி.மு.க. தேர்தலை புறக்கணித்துள்ளதால் மும்முனை போட்டி நிலவுகிறது.

    இந்நிலையில், விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை என தமிழக வெற்றிக் கழகம் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் , கடந்த பிப்ரவரி மாதம் 2ஆம் தேதி வெளியிட்ட கட்சித் தொடக்க அறிவிப்பிற்கான முதல் அறிக்கையிலேயே, எங்கள் கழகத்தின் அரசியல் நிலைப்பாடு குறித்துத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்.

    கழகத் தலைவர், விரைவில் கழகத்தின் கொள்கைகள், கோட்பாடுகள் மற்றும் செயல்திட்டங்களைத் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டில் வெளியிட்டு, அதன் தொடர்ச்சியாகக் கழக உள்கட்டமைப்பு சார்ந்த பணிகள், தமிழகம் முழுவதும் மக்கள் சந்திப்புப் பயணங்கள் என்று, வரும் 2026ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றப் பொதுத் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளை மேற்கொண்டு, தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று, மக்கள் பணியாற்றுவது தான் நமது பிரதான இலக்கு என்று ஏற்கெனவே தெரிவித்துள்ளார்.

    எனவே, அதுவரை இடைப்பட்ட காலத்தில் நடத்தப்படும் உள்ளாட்சித் தேர்தல் உள்பட எந்தத் தேர்தலிலும் தமிழக வெற்றிக் கழகம் போட்டியிடாது என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    குறிப்பாக, வருகிற ஜூலை 10ஆம் தேதி நடைபெற உள்ள விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில், தமிழக வெற்றிக் கழகம் போட்டியிடாது என்றும், எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை என்றும், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் அறிவுறுத்தலின் பேரில் தெரிவித்துக்கொள்கிறேன்.

    • போதை கலாச்சாரமும் தற்போது கிரிவலப் பாதையில் நுழைந்து விட்டது.
    • சில சமூக விரோதிகளும் கிரிவலம் பாதையில் நடமாடி வருவதாக கூறப்படுகிறது.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலைக்கு உலக நாடுகளில் இருந்தும் ஆன்மீக அன்பர்கள் கிரிவலம் வருகின்றனர். அவர்கள் கிரிவலப்பாதையில் தங்கி இருந்து தியானம், யோகா செய்து வருகின்றனர்.

    கூடவே அவர்களின் போதை கலாச்சாரமும் தற்போது கிரிவலப் பாதையில் நுழைந்து விட்டது. சாமியார்கள் என்ற போர்வையில் சில சமூக விரோதிகளும் கிரிவலம் பாதையில் நடமாடி வருவதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் திருவண்ணாமலையில் போதை திருவிழா நடத்த வெளிநாட்டினர் திட்டமிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    அயாஹுவாஸ்கா. ஆன்மிக ரீதியான பரவச நிலைக்கான திருவிழாவாக உலகம் முழுவதும் நடத்தபடு கிறது. அமேசான் காடுகளிலும், தென் அமெரிக்க நாடுகளிலும் பழங்குடியின கலாசாரத்தோடு இணைந்தது இந்த அயாஹுவாஸ்கா திருவிழா.

    அயாஹுவாஸ்கா என்ற ஒருவகை மூலிகைச் செடியில் இருந்து உருவாக்கப்படும் கசாயம் போன்ற பானம், மன நோய்களை குணப்படுத்து வதற்கும், ஆன்மிக ரீதியான பரவச நிலைக்காகவும் பயன்படுத்தப்பட்டு வந்தது. ஆனால், தற்போது அது போதை நிலைக்கு பயன்படுத்தும் பொருளாக மாற்றப்பட்டுள்ளது.

    மனதில் ஒரு மாயத்தோற்றத்தை உருவாக்கும் அயாஹுவாஸ்காவின் பயன்பாடு இந்தியாவில் போதைப்பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடை செய்யப்பட்டுள்ளது.

    ஆன்மிக பூமியான திருவண்ணாமலையில் கடந்த 15-ந் தேதி முதல் 2 நாட்களுக்கு இந்த நிகழ்ச்சி நடைபெற இருந்தது. அது தொடர்பாக கிடைத்த ரகசிய தகவலின்படி மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் தனிப்படை அமைத்து சல்லடை போட்டுத் தேடினர்.

    அதில் சந்தேகத்தின் பேரில் ரஷ்யாவை சேர்ந்த ஒரு ஆணும், பெண்ணும் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டனர். முன்னுக்குப்பின் முரணாக அவர்கள் பேசினர். அதிகாரிகளோ விசாரணையை முடுக்கி விட்டனர். அதில், அவர்கள் கொடுத்த வாக்குமூலம் அதிகாரிகளுக்கே தலைச் சுற்றலை உண்டாக்கியது.

    ரிஷிகேஷ், மணாலி என ஆன்மிகம், சுற்றுலாவில் சிறந்து விளங்கும் பகுதியில் அயாஹுவாஸ்கா திருவிழாவை நடத்தி விட்டு, அதன் வெற்றிக் கொண்டாட்டமாகத்தான் திருவண்ணாமலைக்கு அவர்கள் வந்துள்ளனர்.

    20 வயதில் இருந்து 35 வயது வரையிலான ஆண்களும், பெண்களுமே இவர்களின் இலக்கு. அயாஹுவாஸ்கா கசாயத்தை குடித்தும், உடலில் சிறிய துளையிட்டு அதில் தவளை விஷத்தை செலுத்தியும் போதையை ஏற்படுத்துகின்றனர்.

    போதை உச்சத்தை அடையும்போது, கட்டுப்பாடு அற்ற அத்துமீறல்களும், அடாவடிகளும் அங்கு அரங்கேற்றப்படுகின்றன. சுமார் 6 மணி நேரத்திற்கு இது போன்ற மாயத்தோற்றம் இருக்குமாம்.

    இதற்காக நபர் ஒருவருக்கு ஆயிரம் டாலர் வரை அதாவது இந்திய மதிப்பில் 80 ஆயிரம் ரூபாய்க்கு மேல் கட்டணமாக வசூலிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட ரஷ்யர்களிடமிருந்து அயாஹுவாஸ்கா மட்டுமல்ல மேஜிக் மஸ்ரூம், கம்போ எனப்படும் தவளை விஷம் போன்றவையும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

    239 கிராம் சைலோசிபின், டி.எம்.டி போன்ற மனநோய்களுக்கு பயன்படுத்தப்படும் வேதிப் பொருட்களையும் அவர்கள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்துள்ளது.

    கிரிவலப்பாதையை அதிரவைத்த போதை திருவிழா தமிழ்நாட்டில் வேறு எந்தெந்த பகுதிகளில் நடத்த திட்டமிட்டு இருந்தனர், இதில் யார் யாருக்கு தொடர்பு உள்ளது என்பது குறித்து போதைப்பொருள் தடுப்பு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். திருவண்ணாமலை தேரடி வீதியிலுள்ள முருகர் தேர் பக்கத்தில் 'அமானுஷ்ய' உணர்வை ஏற்படுத்தும் விதமாக ஒரு கார் நிறுத்தப்பட்டிருந்தது.

    காரின் முன்பக்க பகுதியில் 7 மனித மண்டை ஓடுகள் வரிசையாக வைக்கப்பட்டிருந்தன.

    கயிலாய மலையில் சிவபெருமான் அமர்ந்திருப்பதைபோல பெரிய ஸ்டிக்கர் இருந்தன. சிவன் மடியில் அமர்ந்தவாறு, வாட்டசாட்டமான உடல்வாகுடைய அகோரி ஒருவர் கழுத்தில் மனித மண்டை ஓடுகளை மாலையாக அணிந்து படுபயங்கரமாகக் காட்சியளித்த புகைப்பட ஸ்டிக்கரும் ஒட்டப்பட்டிருந்தன.

    காரைச் சுற்றிலும் சிவப்பு நிற எச்சரிக்கை குறியீடுகளுடன் ஆங்கிலத்தில் 'டேஞ்சர்' என்ற மண்டை ஓட்டு ஸ்டிக்கர்களும் ஒட்டப்பட்டிருந்தன.

    முன் பக்கமும், பின் பக்கமும் 'அகோரி நாக சாது' என ஆங்கிலத்தில் பெயர் பலகை தொங்கவிடப்பட்டிருந்தன. மிரட்சியை ஏற்படுத்திய அந்த காரை பொதுமக்கள் சூழ்ந்து பார்வையிட்டுக்கொண்டிருந்தனர். தகலவறிந்ததும், திருவண்ணாமலை போலீஸார் விரைந்து வந்து காரை நோட்டமிட்டனர்.

    'அந்த நேரத்தில் கோவிலுக்கு தரிசனம் செய்ய சென்ற அகோரி சாமியார் அங்கு வந்தார்.

    சாம்பலைத் தண்ணீரில் கரைத்து, முகம் தொடங்கி உடல் முழுவதும் பூசிக்கொண்டிருந்தார். பெயர் 'அகோரி நாக சாது' எனக் கூறிய அவர், 'நானே கடவுள்.

    நானே சிவன், நானே பிரம்மா, நானே விஷ்ணு..' என பேசினார். அவரை கண்டித்த போலீசார் காரை இடையூறாக நிறுத்தியதற்காக ரூ.3 ஆயிரம் அபராதம் விதித்துவிட்டு அனுப்பி வைத்துவிட்டனர்.

    திகில் கிளப்பிய இந்த காரால், இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக தேரடி வீதியே பரபரப்புக்குள்ளாகி போனது. போதைத் திருவிழா மற்றும் மண்டை ஓடுகளுடன் வந்த அகோரியால் திருவண்ணாமலையில் சில தினங்களாக பதட்டமும் படபடப்பும் எகிறி இருக்கிறது.

    தடை செய்யப்பட்ட போதை பொருட்களை போலீசார் கைப்பற்றி போதை திருவிழாவை முறியடித்ததால் வெளிநாட்டு போதை கும்பல் வேறு வழியில் கிரிவலப் பாதையில் நுழைய கூடலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

    இது தொடர்பாக போலீசார் கண்காணிப்பு பணிகளை அதிகப்படுத்தி இது போன்ற சம்பவங்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    • தலைமை ஆசிரியை பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    • விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை:

    மதுரை திருநகரில் வசித்து வருபவர் ரமேஷ், விருதுநகர் மாவட்ட வேளாண்மை விற்பனை பிரிவு இணை இயக்குனர்.

    இவரது மனைவி மனைவி ஜெனுவா இவாஞ்சலின், மதுரை அமெரிக்கன் கல்லுாரி, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை. இவர் அமெரிக்கன் கல்லூரியின் முதல்வர் தவமணி கிறிஸ்டோபரின் தங்கை ஆவர்.

    நேற்று முன்தினம் இரவு சொந்த ஊரான ராமநாதபுரம் மாவட்டம், நரிப்பையூருக்கு குடும்பத்துடன் சென்றனர். நேற்று ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.

    மதியம் 2:30 மணிக்கு திருச்சுழி அருகே கமுதி விலக்கு பகுதியில் வந்து கொண்டிருந்த போது, காரின் முன் டயர் வெடித்து, கட்டுப்பாட்டை இழந்து அருகில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில், ஜெனோவா இவாஞ்சலின் பலியானார்.

    இவருடன் காரில் பயணித்த கணவர் உட்பட 3 பேர் காயம் அடைந்தனர். தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து 3 பேரை மருந்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    பலியான ஜெனோவா இவாஞ்சலின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது

    தலைமை ஆசிரியை பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • கொசுக்கள் மற்றும் தண்ணீர் மூலம் பரவும் நோய்கள் அதிகரிக்க தொடங்கி உள்ளது.
    • குழந்தைகளிடையே சளி மற்றும் காய்ச்சல் அதிகமாக காணப்படுகிறது.

    சென்னை:

    தமிழகம் முழுவதும் கடுமையான வெப்பம், திடீர் மழை என்று பருவநிலை மாறி மாறி வருகிறது. இதனால் கொசுக்கள் மற்றும் தண்ணீர் மூலம் பரவும் நோய்கள் அதிகரிக்க தொடங்கி உள்ளது.

    தற்போது பள்ளிகளும் திறந்துள்ளதால் குழந்தைகளிடையே சளி மற்றும் காய்ச்சல் அதிகமாக காணப்படுகிறது.

    இது தொடர்பாக குழந்தைகள் நல முதுநிலை மருத்துவ நிபுணர் டாக்டர் வில்வநாதன் கூறியதாவது:-

    பருவ காலங்கள் மாறும்போது இன்ப்ளூ யன்ஸா, டெங்கு உள்ளிட்ட வைரஸ் காய்ச்சல்கள், டைபாய்டு, வயிற்றுப்போக்கு போன்ற பாதிப்புகள் பரவலாக காணப்படும். அந்த வகையில் தற்போது குழந்தைகள், பள்ளி செல்லும் மாணவர்களிடையே காய்ச்சல் பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. பலருக்கு ரத்தப் பரிசோதனைகள் தேவைப்படுகின்றன.

    கடந்த வாரம் வரை இத்தகைய நிலை இல்லை. ஓரிரு நாட்களாக தான் சூழல் மாறி இருக்கிறது. காய்ச்சல் அறிகுறிகளுடன் நேற்று (17-ந்தேதி) மருத்துவ மனைகளை நாடியவர்களின் எண்ணிக்கை வழக்கத்தை காட்டிலும் 3 மடங்கு உயர்ந்திருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதுதொடர்பாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-

    இது சீசன் காய்ச்சல்தான். பருவநிலை மாறும்போது இந்த மாதிரி தொற்று வியாதிகள் ஏற்படுவது வழக்கமானதுதான். கடந்த ஆண்டுகளை விட அதிகமாக பரவுவதாக வெளியாகும் தகவல்கள் ஆதாரமற்றவை. எனவே மக்கள் தேவையில்லாமல் பீதி அடைய வேண்டாம்.

    பொதுவாகவே பருவ நிலைகள் மாறும்போது முன்எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். காய்ச்சிய நீரை குடிப்பது, சுற்றுப்புறங்களை தூய்மையாக பராமரிப்பது போன்ற பழக்கங்களை கடைபிடிக்க வேண்டும். அது மட்டுமல்ல, காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டால் அருகில் உள்ள அரசு மருத்துவமனை களுக்கு சென்று மருத்துவர் ஆலோசனை பெற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×