என் மலர்
உள்ளூர் செய்திகள்
- துரை மணிகண்டன் தலைமையில் காங்கிரசார் ஊர்வலமாக வந்து ரெயில் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
- ரெயில் நிலையத்துக்குள் செல்ல முயன்ற அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் தள்ளு முள்ளு ஏற்பட்டது.
திண்டுக்கல்:
திரிபுரா மாநிலம், அகர்தலாவில் இருந்து மேற்குவங்கத்தில் உள்ள சியல்டாவை நோக்கி கஞ்சன்ஜங்கா விரைவு ரெயில் சென்றது. ரங்கபானி ரெயில் நிலையம் அருகே நேற்று காலை 9 மணியளவில் சென்று கொண்டிருந்த இந்த ரெயில் மீது சரக்கு ரெயில் பின்பக்கமாக மோதியதில் 9 பேர் பலியாகினர்.
இந்த விபத்துக்கு பொறுப்பேற்று மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி திண்டுக்கல்லில், மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் ரெயில் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மாநகர மாவட்ட தலைவர் துரை மணிகண்டன் தலைமையில் காங்கிரசார் ஊர்வலமாக வந்து ரெயில் நிலையத்தை முற்றுகையிட்டனர். அப்போது பா.ஜ.க. அரசை கண்டித்தும், விபத்துக்கு பொறுப்பேற்று ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் பதவி விலக வேண்டும் என்றும் கண்டன கோஷங்கள் எழுப்பினர். ரெயில் நிலையத்துக்குள் செல்ல முயன்ற அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் தள்ளு முள்ளு ஏற்பட்டது.
இந்த போராட்டத்தில் மாவட்ட பொதுச் செயலாளர் வேங்கை ராஜா, மாவட்ட துணைத் தலைவர் அப்துல் ரகுமான், கவுன்சிலர் பாரதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். காங்கிரசாரின் முற்றுகை போராட்டத்தை அடுத்து ரெயில் நிலையம் முழுவதும் போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டனர். இச்சம்பவத்தால் ரெயில் நிலையத்தில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
- மே மாதத்திற்கான பொருட்களை ஜூன் இறுதி வரை பெற்றுக்கொள்ளலாம்.
- ரேஷன் பொருட்கள் குறித்து மக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை.
சென்னை:
ரேஷன் கடைகளில் மே மாதத்திற்கான துவரம் பருப்பு, பாமாயில் இன்னும் வழங்கப்படாத நிலையில் ஜூன் மாதத்திற்கான துவரம் பருப்பு, பாமாயில் இன்னும் வந்து சேரவில்லை என்று புகார் எழுந்தது.
இதையடுத்து ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு, பாமாயில் தடையின்றி கிடைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
இதுதொடர்பாக உணவுத்துறை அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். அதில்,
பாராளுமன்ற தேர்தலையொட்டி டெண்டர் போடுவதில் தாமதம் ஏற்பட்டதாகவும், அதன் காரணமாகவே துவரம் பருப்பு, பாமாயிலை பெற்று வழங்குவதில் தாமதம் ஏற்பட்டது.
மே மாதம் ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு, பாமாயில் பெறாதவர்கள் மற்றும் இந்த மாதம் பெற வேண்டியதையும் சேர்ந்து பெற்றுக்கொள்ளலாம்.
மே மாதத்திற்கான பொருட்களை ஜூன் இறுதி வரை பெற்றுக்கொள்ளலாம்.
தேவையான பொருட்கள் அனைத்தும் ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
ரேஷன் பொருட்கள் குறித்து மக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- கடல் அலையில் அடித்து வரப்படும் மணல் கருமையாக மாறி உள்ளது.
- தொழிற்சாலை கழிவுநீரே காரணம் என்று கூறப்படுகிறது.
பொன்னேரி:
பழவேற்காடு பகுதியை சுற்றி 35 மீனவ கிராமங்கள் உள்ளன. திருமலை நகர் தொடங்கி காட்டுப்பள்ளி வரை நீண்ட கடற்கரை உள்ளது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பழவேற்காடு கடற்கரை பகுதி கருப்பு நிறமாக மாறி வருகிறது. பழைய சாட்டன்குப்பம், கோரைகுப்பம், வைரவன் குப்பம் உள்ளிட்ட மீனவ கிராம கடற்கரை பகுதிகளில் கடல் அலையில் அடித்து வரப்படும் மணல் கருமையாக மாறி உள்ளது.
இதனால் அந்த பகுதியில் கடற்கரை முழுவதும் கருப்பாக காட்சி அளிக்கிறது. கடல் அலைகளும் சகதியாக மாறிவிட்டன. இதனால் மீனவர்கள் அச்சம் அடைந்து உள்ளனர். இந்த பாதிப்புக்கு தொழிற்சாலை கழிவுநீரே காரணம் என்று கூறப்படுகிறது.
கடலில் கலக்கப்படும் கடல்நீரால் மாசு ஏற்பட்டு இருப்பதாக மீனவர்கள் குற்றம்சாட்டி உள்ளனர். இதுகுறித்து மீனவர்கள் கூறும்போது, காட்டுப்பள்ளி, புழுதிவாக்கம், அத்திப்பட்டு புதுநகர் உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு தொழில் நிறுவனங்கள் உள்ளன. அவற்றின் கழிவுகள் கடலில் கலக்கின்றன.
தற்போது கடலில் அலை சீற்றம் அதிகமாக இருக்கிறது. இதனால் அந்த கழிவுகள் கடற்கரை பகுதியில் ஒதுங்குகிறதா? என்று தெரியவில்லை. இதுவரை, இதுபோன்று பழவேற்காடு கடற்கரை கருப்பு நிறமாக மாறியது இல்லை என்றார்.
- மத்திய அரசு நீட் தேர்வை விரும்பாத மாநிலங்களுக்கு அதிலிருந்து விலக்களிக்க வேண்டும்.
- பழனியில் நீதிமன்ற உத்தரவுப்படி 500க்கும் மேற்பட்ட கடைகள் அகற்றப்பட்டுள்ளன.
திண்டுக்கல்:
திண்டுக்கல்லில் இன்று மார்க்சிஸ்ட்டு கம்யூனிஸ்ட்டு மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது,
மேற்குவங்க மாநிலத்தில் 2 ரெயில்கள் மோதியதில் 9 பேர் பலியாகி பலர் படுகாயமடைந்துள்ளனர். இந்த விபத்துக்கு பொறுப்பேற்று மத்திய ரெயில்வே மந்திரி உடனடியாக தனது பதவியை ராஜினாமா செய்யவேண்டும். கடந்த 10 ஆண்டுகளில் இதுபோன்ற பல்வேறு ரெயில் விபத்துகள் நாட்டில் நடந்துள்ளன. இதற்கு மத்திய அரசின் தவறான நிர்வாகம் மற்றும் அலட்சியப்போக்கே காரணம். விபத்து நடந்த பிறகு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்வதாக கூறுகின்றனர். பல்வேறு நவீன வசதிகள் வந்துவிட்ட போதிலும் விபத்துகளை தவிர்க்க இந்தியாவில் அதுபோன்ற எந்த வசதியையும் மத்திய அரசு செய்யவில்லை.
நீட் தேர்வு வேண்டாம் என்று முதன்முதலில் தமிழகம் குரல் கொடுத்த நிலையில் தற்போது குஜராத், கேரளா போன்ற பல்வேறு மாநிலங்களும் அந்த மனநிலைக்கு வந்துவிட்டன. நீட் தேர்வில் ஏற்படும் குளறுபடி, முறைகேடு ஆகியவை மாணவர்களின் வாழ்க்கை யோடு, எதிர்காலத்தோடு விளையாடுவதாக உள்ளது. எனவே மத்திய அரசு நீட் தேர்வை விரும்பாத மாநிலங்களுக்கு அதிலிருந்து விலக்களிக்க வேண்டும்.
நெல்லையில் ஜாதி மறுப்பு திருமணம் செய்த காதல் ஜோடிக்கு பாதுகாப்பு அளித்ததற்காக கட்சி அலுவலகம் போலீசார் முன்னிலையிலேயே தாக்கப்பட்டது. அங்கிருந்த கம்யூனிஸ்ட்டு தொண்டர்கள் தாக்குதலுக்கு உள்ளானார்கள். எனவே தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகு றித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வலியுறுத்த உள்ளோம். உச்சநீதிமன்றமே அறிவுறுத்திய பிறகும் ஆணவ கொலைகள் தொடர்வது கவலையளிக்கிறது. எனவே இதற்கு எதிராக தமிழக சட்டப்பே ரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்து சட்டம் இயற்ற வலியுறுத்த உள்ளோம்.
மேட்டூர் அணையிலிருந்து இந்த முறை ஜூன் 12ம் தேதி தண்ணீர் திறக்கவில்லை. இதனால் காவிரி டெல்டா விவசாயிகள் குறுவை சாகுபடி செய்யமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே தமிழக அரசு காவிரியில் நமக்கு கிடைக்க வேண்டிய தண்ணீரை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக நீர்வளத்துறை அமைச்சர் கர்நாடகா அரசுடன் இதுகுறித்து பேச்சு வார்த்தை நடத்த வேண்டும். அதேபோல் திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மக்காச்சோள பயிர்கள் நோய் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து வேளாண் அதிகாரிகள் பார்வையிட்டு நடவடிக்கை எடுப்பதுடன் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடுவதாக கூறிய எடப்பாடி பழனிசாமி பின்னர் அதிலிருந்து ஜகா வாங்கிவிட்டார். போட்டியிட்டால் கண்டிப்பாக தோல்வி உறுதி என்பதால் புறக்கணித்துவிட்டு வேறு காரணங்களை கூறி வருகிறார்.
பழனியில் நீதிமன்ற உத்தரவுப்படி 500க்கும் மேற்பட்ட கடைகள் அகற்றப்பட்டுள்ளன. இதனால் அவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே தமிழக அரசும், பழனி தேவஸ்தானமும் நீதிமன்ற உத்தரவுகளை காரணம் காட்டாமல் அந்த வியாபாரிகளுக்கு மாற்று இடம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- விபத்து நடந்த நேரத்தில் ஆட்டே ரேஸ் நடந்து இருப்பது தெரியவந்தது.
- வாலிபர்கள் கூச்சலிட்டபடி பின்தொடர்ந்து செல்வதும் பதிவாகி உள்ளது.
பொன்னேரி:
சென்னை வண்டலூரில் இருந்து மீஞ்சூர் வரை 60.5 கி.மீ. தூரத்துக்கு வெளி வட்டச் சாலை 6 வழி சாலையாக அமைந்துள்ளது. இந்த சாலையானது சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையை செங்குன்றம், பொன்னேரி மீஞ்சூர், திருவொற்றியூர், பஞ்செட்டி ஆகியவற்றுடன் இணைக்கிறது.
மீஞ்சூர்-வண்டலூர் சாலையில் கனரக வாகனங்கள் எவ்வித தடையின்றி செல்ல வழி செய்யப்பட்டுள்ளது. மேலும் சாலையில் கனரக வாகனங்கள் நிறுத்துவதற்கு பெரிய அளவில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளன. இதனால் இந்த சாலை அதிக போக்குவரத்து நெரிசல் இல்லாமல் காணப்படும்.
இந்த சாலைகளில் தடையை மீறி வாரவிடுமுறை நாட்களில் பைக் ரேஸ், ஆட்டோ ரேஸ் தொடர்ந்து நடந்து வருகின்றன.போலீசார் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும் அவ்வப்போது ரேஸ் செல்வதும் வாடிக்கையாக உள்ளது.
இந்தநிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு மீஞ்சூர் - வண்டலூர் வெளிவட்ட சாலையில் சோழவரம் அருகே அருமந்தை என்ற பகுதியில் அதிகாலையில் மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் சென்னையை சேர்ந்த மணி, ஷாம் சுந்தர் ஆகிய 2 பேர் பலியானார்கள்.
மேலும் மோகனகிருஷ்ணன், மாரிமுத்து, ஜெபேயர் ஆகிய 3 பேர் படுகாயமடைந்தனர். இது குறித்து செங்குன்றம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். அங்குள்ள கண்காணிப்பு காமிராவை ஆய்வு செய்த போது விபத்து நடந்த நேரத்தில் ஆட்டே ரேஸ் நடந்து இருப்பது தெரியவந்தது.
மீஞ்சூர்-வண்டலூர் சாலையில் சுமார் 10-க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் போட்டி போட்டு சீறி பாய்ந்து செல்வதும் அதன் பின்னாலேயே 20-க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்களில் வாலிபர்கள் கூச்சலிட்டபடி பின்தொடர்ந்து செல்வதும் பதிவாகி உள்ளது.
ரேசின் போது ஆட்டோ ஒன்று கவிழ்ந்த போது அதனை பின் தொடர்ந்து மோட்டார்சைக்கிளில் வந்தவர்களும் அதன் மீது மோதி விழுந்து உள்ளனர். இதில் 2 பேர் பலியாகி இருப்பது விசாரணையில் தெரியவந்தது.
இதற்கிடையே ஆட்டோ ரேஸ் செல்வதை மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபர் ஒருவர் தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்து உள்ளார். இந்த வீடியோ தற்போது வெளியாகி சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. ஆட்டே ரேஸ் செல்வதை பார்க்கும் போதே அச்ச உணர்வு ஏற்படும் வகையில் சீறிப்பாய்கின்றன.
வண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் சாகச ரேசை தடுக்க போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
- மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம் இதுவரை 1 கோடியே 70 ஆயிரம் பேர் பயனடைந்துள்ளனர்.
- அடுத்தகட்டமாக மதுரையில் செயற்கை கருத்தரிப்பு மையம் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.
தஞ்சாவூா்:
தஞ்சாவூா் மாவட்டம் ஒரத்தூரில் இன்று ரூ.30 லட்சம் மதிப்பில் புதிய துணை சுகாதார நிலையத்தை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-
மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம் இதுவரை 1 கோடியே 70 ஆயிரம் பேர் பயனடைந்துள்ளனர். இன்னுயிர் காப்போம், நம்மை காக்கும் 48 திட்டத்தின் மூலம் இதுவரை 2 லட்சத்து 56 ஆயிரம் பேர் பயனடைந்துள்ளனர். சென்னை எழும்பூரில் உள்ளது போல் தஞ்சையிலும் குழந்தைகள் நல மருத்துவமனை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தஞ்சை-புதுக்கோட்டை சாலை திருக்கா னூர்பட்டியில் விபத்து கால அதிதீவிர சிகிச்சை மையம் அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு பணிகள் தொடங்க உள்ளது.
சென்னை எழும்பூர் குழந்தைகள் நல அரசு மருத்துவமனையில் ரூ.7 கோடி மதிப்பில் செயற்கை கருத்தரிப்பு சிகிச்சை மையம் தொடங்கப்பட்டுள்ளது. இங்கு முற்றிலும் இலவசமாக சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது.
தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற பல லட்சம் செலவு ஏற்படுவதால் ஏழை மக்களுக்காகவே முதலமைச்சர் உத்தரவுபடி அரசு மருத்துவமனையில் செயற்கை கருத்தரிப்பு மையம் தொடங்கப்பட்டது. அடுத்தகட்டமாக மதுரையில் செயற்கை கருத்தரிப்பு மையம் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.
இந்த மையத்தின் அனுபவங்கள், செயல்பாடுகள் வைத்து அடுத்தகட்டமாக செயற்கை கருத்தரிப்பு மையங்கள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும். சென்னை கிண்டியில் அரசு இயற்கை மருத்துவமனை தொடங்கப்பட்டுள்ளது. மருத்துவ துறையில் உள்ள காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தேர்தல் முடிவில் பா.ஜ.க. ஒரு இடத்தில்கூட வெற்றி பெறவில்லை.
- அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து முடிவு
சென்னை:
பாராளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் பா.ஜனதா 23 தொகுதிகளில் போட்டியிட்டது. இதில் 19 தொகுதிகளில் பா.ஜனதா வேட்பாளர்கள் நேரடியாக போட்டியிட்டார்கள்.
கூட்டணி கட்சிகளை சேர்ந்த 4 பேர் தாமரை சின்னத்தில போட்டியிட்டார்கள்.
இந்த தேர்தலில் தமிழகத்தில் காலூன்ற பா.ஜ.க. 2 ஆண்டுகளுக்கு முன்பே வியூகம் அமைத்து பணியாற்றியது.
குறிப்பாக சில தொகுதிகளை தேர்வு செய்து தனிகவனம் செலுத்தி தேர்தல் பணியாற்றியது. பா.ஜ.க.வின் வெற்றி கணக்கு தமிழகத்தில் இருந்து தொடங்கும் என்று பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்தார்.
கள நிலவரங்களை ஆய்வு செய்து கூட்டணி கட்சிகள் உள்பட 5 முதல் 10 தொகுதிகள் வரை தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வெற்றி கிடைக்கும் என்று உறுதியாக நம்பினார்கள்.
குறிப்பாக மத்திய மந்திரி எல்.முருகன், முன்னாள் கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்திரராஜன், மாநில தலைவர் அண்ணாமலை, ராம.சீனிவாசன், பொன்.ராதாகிருஷ்ணன், நயினார் நாகேந்திரன், பொன் பாலகணபதி உள்ளிட்டவர்களை கட்சி மேலிடம் நட்சத்திர வேட்பாளர்களாக நம்பியது.
ஆனால் தேர்தல் முடிவில் பா.ஜ.க. ஒரு இடத்தில்கூட வெற்றி பெறவில்லை. இது பா.ஜனதா தலைவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
கூட்டணி பலமின்மை, தேர்தலின்போது சில தொகுதிகளில் தேர்தல் செலவினத்தில் நடந்த முறைகேடுகள் போன்ற சில முக்கிய காரணங்களை தோல்விக்கான அடிப்படை காரணங்களாக கூறினார்கள்.
இது ஒருபக்கம் இருந்தாலும் முதல் முறை பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தபோது தமிழகத்தில் மோடி எதிர்ப்பு அலை இருந்தது. ஆனாலும் அப்போது பா.ஜ.க. பெற்ற வாக்கு சதவீதத்தைவிட இந்த தேர்தலில் வாக்கு சதவீதம் குறைந்துள்ளது.
இதற்கான காரணங்களை டெல்லி மேலிடமும் எதிர்பார்க்கிறது. இந்த நிலையில் தமிழக பா.ஜ.க. மையக்குழு கூட்டம் நாளை (புதன்) காலையில் கமலாலயத்தில் கூடுகிறது. கூட்டத்துக்கு மாநில தலைவர் அண்ணாமலை தலைமை தாங்குகிறார். மத்திய மந்திரி எல்.முருகன், பொன்.கேசவ விநாயகம், ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன், எச்.ராஜா, நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட மையக்குழு உறுப்பினர்கள் கலந்து கொள்கிறார்கள்.
இந்த கூட்டத்தில் கட்சியின் தோல்விக்கான காரணங்கள் பற்றியும், எதிர்கால திட்டங்கள் பற்றியும் விரிவாக ஆலோசிக்கிறார்கள்.
- தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை சார்பில் கடந்த 6.4.2023 அன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே அகழாய்வுப் பணிகளை தொடங்கி வைத்தார்.
- அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களை சேகரித்து காட்சி பொருளாக வைக்கப்பட்டுள்ளது.
சென்னை:
அண்மைக்கால தொல்லியல் சாதனைகள் மூலம் நமது புகழ்பெற்ற, நீண்ட வரலாற்றில் காணும் பண்பாடு மற்றும் கால வரிசை இடைவெளிகளை நிரப்புவதற்கு நாம் இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டும். நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை அடைவதற்காக தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளையும் உள்ளடக்கி வரலாற்றுக்கு முந்தைய காலம் முதல், வரலாற்றுக் காலம் வரையிலான தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் அகழாய்வு செய்வதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.
பண்டைத் தமிழ்ச் சமூகத்தின் தொன்மை, பண்பாடு, தொழில்நுட்பம் மற்றும் விழுமியங்களுக்குப் பெருமை சேர்க்கும் வண்ணம் தற்போது 2024-ம் ஆண்டில் கீழ்க்காணும் எட்டு இடங்களில் அகழாய்வுகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை சென்ற ஆண்டில் எட்டு இடங்களில் அகழாய்வு செய்ததைப் போன்று இவ்வாண்டியிலும் எட்டு இடங்களில் அகழாய்வு மேற்கொள்ளப்படுவதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமை செயலகத்தில் இருந்தபடி தொடங்கி வைத்தார். அவை வருமாறு:-
1. கீழடி மற்றும் அதன் அருகிலுள்ள தொல்லியல் தளமான கொந்தகை, சிவகங்கை மாவட்டம் பத்தாம் கட்டம்.
2. வெம்பக்கோட்டை, விருதுநகர் மாவட்டம் மூன்றாம் கட்டம்
3. கீழ்நமண்டி, திருவண்ணாமலை மாவட்டம் இரண்டாம் கட்டம்
4. பொற்பனைக்கோட்டை, புதுக்கோட்டை மாவட்டம் இரண்டாம் கட்டம்
5. திருமலாபுரம், தென்காசி மாவட்டம்- முதல் கட்டம்
6. சென்னானூர், கிருஷ்ணகிரி மாவட்டம் முதல் கட்டம்
7. கொங்கல்நகரம், திருப்பூர் மாவட்டம் முதல் கட்டம்
8. மருங்கூர், கடலூர் மாவட்டம் முதல் கட்டம்
தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை சார்பில் கடந்த 6.4.2023 அன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே அகழாய்வுப் பணிகளை தொடங்கி வைத்தார். அந்த அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களை சேகரித்து காட்சி பொருளாக வைக்கப்பட்டுள்ளது.
தருமபுரி மாவட்டம், பெரும்பாலை என்னும் தளங்களில் மேற்கொண்ட அகழாய்வின் அறிக்கை மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 138 கல்வெட்டுகளில் விளக்க உரைகள் அடங்கிய தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள் தொகுதி 28 ஆகிய இரண்டு நூல்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டார்.
- கடந்த பல தேர்தல்களில் பா.ம.க. மாம்பழம் சின்னத்தில் போட்டியிட்டுள்ளது.
- நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் 4.23 சதவீத வாக்குகளை பெற்று மாநில கட்சி அந்தஸ்தை பாம.க இழந்தது.
விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கு அடுத்த மாதம் 10-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இத்தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பா.ம.க. வேட்பாளர் சி.அன்புமணி போட்டியிடுகிறார். இதையடுத்து இவர் நாளை வேட்புமனு தாக்கல் செய்வார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் மாம்பழம் சின்னம் கேட்டு இந்திய தேர்தல் ஆணையத்திற்கு பா.ம.க. சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
அக்கடிதத்தில் கடந்த பல தேர்தல்களில் பா.ம.க. மாம்பழம் சின்னத்தில் போட்டியிட்டுள்ளது. அதனால் இந்த தேர்தலிலும் பா.ம.க.வுக்கு மாம்பழ சின்னம் ஒதுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளது.
நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் 4.23 சதவீத வாக்குகளை பெற்று மாநில கட்சி அந்தஸ்தை பாம.க இழந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
- கடந்த 2 நாட்களுக்கு முன்பு சேகர் இரவில் வீட்டுக்கு வந்துள்ளார்.
- போலீசார் சேகர் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள்.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி தெற்கு குண்டல் பகுதியை சேர்ந்தவர் சேகர் (வயது58). மாற்றுத் திறனாளியான இவர், திருமணமாகாததால் தனியாக வசித்து வந்தார். இவர் அந்தப் பகுதி அ.தி.மு.க. கிளை அவைத் தலைவராக இருந்து வந்தார்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு சேகர் இரவில் வீட்டுக்கு வந்துள்ளார். அதன்பிறகு அவரை யாரும் பார்க்கவில்லை. அவரது வீட்டுக் கதவும் திறக்கப்படாமல் இருந்துள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் கன்னியாகுமரி போலீசில் புகார் செய்தனர்.
அதன் பேரில் போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்று வீட்டைத் திறந்து பார்த்தனர். அப்போது படுக்கை அறையில் சேகர் பிணமாக கிடந்தது தெரிய வந்தது.
இதைத் தொடர்ந்து போலீசார் சேகர் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள். அதன் பிறகு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு உடல் அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
ஆனால் அவருக்கு மனைவி மற்றும் குழந்தைகள் இல்லாததால் அவரது சாவில் சந்தேகம் ஏதாவது உள்ளதா? என்பதை விசாரிப்பதற்காக சேகர் உடலை உறவினர்களிடம் இதுவரை ஒப்படைக்காமல் ஆசாரிபள்ளத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள பிண அறையில் கடந்த 2 நாட்களாக போலீசார் பாதுகாப்பாக வைத்து உள்ளனர். இதனால் சேகர் சாவில் குழப்பம் நீடிக்கிறது.
- மார்த்தாண்டம் போலீசாரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கடந்த சில நாட்களுக்கு முன்பு மார்த்தாண்டம் பகுதியில் ஒரு ஓட்டலில் சவர்மா சாப்பிட்ட சிலருக்கு வாந்தி-மயக்கம் ஏற்பட்டது.
குழித்துறை:
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் பழைய தியேட்டர் சந்திப்பில் பிரபலமான ஓட்டல் செயல்பட்டு வருகிறது. மக்கள் நடமாட்டம் மிகுந்த இடத்தில் ஓட்டல் அமைந்துள்ளதால் தினமும் ஏராளமானோர் சாப்பிட வருவதுண்டு.
மார்த்தாண்டம் போலீஸ் குடியிருப்பில் வசிக்கும் போலீஸ் அதிகாரி ஒருவர், தனது மகன் ரோகித்திடம் இரவு சாப்பாட்டுக்கு மாட்டு இறைச்சி பிரை வாங்கி வருமாறு கூறி உள்ளார். அதன்படி அவர், அந்த ஓட்டலுக்குச் சென்று மாட்டு இறைச்சி பிரை வாங்கி வந்துள்ளார்.
தொடர்ந்து வீட்டில் வைத்து பார்சலை பிரித்த போது, இறைச்சியுடன் வால் முறிந்த நிலையில் இறந்த பல்லி கிடந்துள்ளது. இதனை பார்த்து ரோகித்தும் அவரது தந்தையும் அதிர்ச்சி அடைந்தனர். உடனே மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்தில் ரோகித் புகார் செய்தார். அப்போது பல்லி கிடந்த இறைச்சியையும் அவர் காண்பித்தார்.
அதனை பெற்றுக்கொண்ட போலீசார், உணவு பாதுகாப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி கிளாட்சன் மற்றும் பணியாளர்கள், குறிப்பிட்ட ஓட்டலுக்குச் சென்றனர். அங்கு சாப்பிட்டு கொண்டு இருந்தவர்களை வெளியேற்றி விட்டு இறைச்சியை பரிசோதனை செய்தனர்.

இதில் சந்தேகம் இருந்ததால் இறைச்சியை பரிசோதனைக்கு எடுத்து சென்றனர். மார்த்தாண்டம் போலீசாரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு மார்த்தாண்டம் பகுதியில் ஒரு ஓட்டலில் சவர்மா சாப்பிட்ட சிலருக்கு வாந்தி-மயக்கம் ஏற்பட்டது. அந்த சம்பவம் மக்கள் மனதை விட்டு மறைவதற்குள் இறைச்சியில் பல்லி கிடந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
குமரி மாவட்டத்தில் உள்ள பிரபல ஓட்டல்களில் தொடர்ந்து இது போன்ற நிகழ்வுகள் அரங்கேறி வருவதால், அசைவ உணவு பிரியர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. மக்களின் பாதுகாப்பு கருதி உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள், ஓட்டல்களில் தீவிர சோதனை நடத்த வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- மே மாதத்தில் மாணவர் சேர்க்கை நடவடிக்கைகள் தொடங்கும், ஜூன் மாதத்தில் வகுப்புகள் தொடங்கும் என்பது அரசுக்கு நன்றாகத் தெரியும்.
- கல்லூரிகளில் நிலையான முதல்வர்கள் இல்லாத சூழலில் மாணவர் சேர்க்கைப் பணிகள் கடுமையாக பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது.
சென்னை:
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தமிழ்நாட்டில் உள்ள 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 60-க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் முதல்வர் பணியிடங்கள் கடந்த பல மாதங்களாக காலியாக உள்ளன. அதனால், கல்லூரியின் அன்றாட நிர்வாகம் பாதிக்கப்படுவதுடன், கல்வித்தரமும் குறைகிறது. அரசு கல்லூரிகளின் முதல்வர் பணியிடங்களை நிரப்புவதில் தமிழக அரசு காட்டும் அலட்சியம் கண்டிக்கத்தக்கது.
மே மாதத்தில் மாணவர் சேர்க்கை நடவடிக்கைகள் தொடங்கும், ஜூன் மாதத்தில் வகுப்புகள் தொடங்கும் என்பது அரசுக்கு நன்றாகத் தெரியும். அதனால், மே மாதத்திற்கு முன்பாகவே முதல்வர் பணியிடங்களை அரசு நிரப்பியிருக்க வேண்டும். ஆனால், நிலையான முதல்வர்களை நியமிப்பதற்கு மாறாக பொறுப்பு முதல்வர்களை மட்டுமே நியமித்து கல்லூரி நிர்வாகத்தை நடத்த தமிழக அரசு முயல்கிறது. இது தவறான அணுகுமுறை ஆகும்.
கல்லூரிகளில் நிலையான முதல்வர்கள் இல்லாத சூழலில் மாணவர் சேர்க்கைப் பணிகள் கடுமையாக பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது. அதையும், கல்லூரிகளின் கல்வி மேம்பாட்டுப் பணிகளையும் கருத்தில் கொண்டு தமிழ்நாட்டில் அரசு கல்லூரிகளில் காலியாக உள்ள அனைத்து முதல்வர் பணியிடங்களையும் உடனடியாக நிரப்ப தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.






