என் மலர்
உள்ளூர் செய்திகள்
- கள ஆய்வு செய்தும் இந்தக்குழு பரிந்துரைகளை தயாரித்து அதனை முறைப்படி மு.க.ஸ்டாலினிடம் வழங்கி உள்ளது.
- தமிழகத்தை சமத்துவ பூமியாக மாற்றி அமைத்திட தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும் .
சென்னை:
ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மாணவர்களிடம் சாதிய உணர்வுகளை அகற்றி சமத்துவமும், தோழமையும் கொண்டு அவர்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் காண வேண்டும் என்ற நோக்கத்தோடு தமிழ்நாடு அரசு ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி கே.சந்துரு தலைமையில் ஒரு குழுவினை நியமித்தது.
பல்வேறு அரசியல் கட்சிகள், சமூக இயக்கங்கள், பொதுநல அமைப்புக்கள் ஆகியவைகளிடம் இது தொடர்பான கருத்துக்களை பெற்றும், பிரச்சனைக்குரிய பகுதிகளுக்கு நேரடியாக சென்று கள ஆய்வு செய்தும் இந்தக்குழு பரிந்துரைகளை தயாரித்து அதனை முறைப்படி மு.க.ஸ்டாலினிடம் வழங்கி உள்ளது. இந்தக் குழுவின் பரிந்துரைகளை வரவேற்று, அவைகளை செயல்படுத்தி தமிழகத்தை சமத்துவ பூமியாக மாற்றி அமைத்திட தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- பாபநாசம் அணை பகுதியில் 18 மில்லிமீட்டர் மழை பெய்தது.
- இன்றும் காலை முதலே சாரல் மழை பெய்து வருகிறது.
நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் நேற்று பகலில் வெயில் வாட்டிய நிலையில், பிற்பகலில் திடீரென வானில் கருமேக கூட்டங்கள் திரண்டு மழை பெய்ய ஆரம்பித்தது.
இதனால் மாநகரின் பெரும்பாலான இடங்களில் பலத்த மழை பெய்தது. சந்திப்பு, வண்ணார்பேட்டை, பாளை, டவுன் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் சாரல் மழை பரவலாக பெய்தது.
மாவட்டத்தில் சேரன்மகா தேவி, கன்னடியன் கால்வாய் பகுதிகளில் மட்டும் சாரல் அடித்தது. களக்காடு, மூலக்கரைப்பட்டி உள்ளிட்ட பல இடங்களில் மதியத்திற்கு மேல் வானம் மேகமூட்டமாக காட்சியளித்தது.
மேலும் இதமான காற்றும் வீசியது. இதனால் குளிர்ச்சி யான சூழ்நிலை நிலவியது.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் நேற்று பலத்த மழை பெய்தது. பிற்பகலில் தொடங்கி இரவிலும் பெய்த மழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. அதிகபட்சமாக பாபநாசம் அணை பகுதியில் 18 மில்லிமீட்டர் மழை பெய்தது. சேர்வலாறில் 9 மில்லிமீட்டரும், மணிமுத்தாறில் 3.8 மில்லி மீட்டரும் மழை பதிவாகி உள்ளது.
மழை காரணமாக 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணை நீர்மட்டம் இன்று ஒரு அடி உயர்ந்து 88.50 அடியாக உள்ளது. சேர்வலாறு அணை நீர்மட்டம் நேற்று 98 அடியாக இருந்த நிலையில் இன்று 2 அடி உயர்ந்து 100 அடியை எட்டியுள்ளது. இந்த அணைகளுக்கு வினாடிக்கு 1,258 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது.
அணையில் இருந்து கார் பாசனத்திற்காக 804 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 118 அடி கொள்ளளவு கொண்ட மணிமுத்தாறு அணையில் 77.49 அடி நீர் இருப்பு உள்ளது. அந்த அணையில் 3.8 மில்லிமீட்டர் மழை பெய்தது.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் இன்றும் காலை முதலே சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் அணைகளின் நீர்மட்டம் மேலும் அதிகரிக்கும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதனால் கார் சாகுபடிக்கான பணியில் அவர்கள் ஆர்வமுடன் இறங்கி உள்ளனர்.
மேலும் மலைப்பகுதியில் பெய்து வரும் மழையால் பாபநாசம் அகஸ்தியர் அருவி, மணி முத்தாறு அருவி, களக்காடு தலையணை உள்ளிட்ட இடங்களில் தண்ணீர் ஆர்ப்பரித்து வருவதால், அதில் குளிக்க சுற்றுலாp பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
தமிழகத்தில் அதிக மழை பொழியும் பகுதியான மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள மாஞ்சோலையில் கனமழை பெய்துள்ளது. அங்குள்ள ஊத்து எஸ்டேட்டில் இன்று காலை வரை 6.8 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது. நாலுமுக்கில் 6.6 சென்டிமீட்டரும், காக்காச்சியில் 56 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது. மாஞ்சோலை யில் 4.8 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.
தென்காசி மாவட்டத்திலும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி யில் கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்கும் பெரும்பாலான அணைகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. குறிப்பாக ராமநதி அணை நீர்மட்டம் இன்று ஒரே நாளில் 3 அடி உயர்ந்துள்ளது. நேற்று 66 அடியாக இருந்த நிலையில், இன்று 69 அடியாக அதிகரித்துள்ளது.
அடவிநயினார் அணை நீர்மட்டம் இன்று ஒரே நாளில் 4 அடி உயர்ந்து 71 அடியாகவும், கருப்பாநதி அணை நீர்மட்டம் 5 அடி உயர்ந்து 30 அடியை கடந்துள்ளது. 36 அடி கொண்ட குண்டாறு அணை நீர்மட்டம் 33 அடியை எட்டியுள்ளது. இதனால் இன்னும் ஒருசில நாட்களில் அணை நிரம்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அணைகளின் நீர்பிடிப்பு பகுதியில் அதிகபட்சமாக அடவிநயினாரில் 23 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. கடனா மற்றும் ராமநதியில் தலா 10 மில்லிமீட்டரும், கருப்பாநதியில் 21 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது.
மாவட்டத்தில் ஆலங்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலையில் திடீர் சாரல் மழை பெய்தது. இரவிலும் விட்டு விட்டு சாரல் அடித்தது. செங்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளில் 4.8 மில்லிமீட்டர் மழை பதிவாகியது.
தூத்துக்குடியில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. அதே நேரம் அவ்வப்போது லேசான மேகமூட்டமும், காற்றும் வெயிலை தணித்து வந்தது. அதன்படி நேற்று மாலை 5 மணி அளவில் திடீரென மேகங்கள் திரண்டு பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்ய ஆரம்பித்தது. சுமார் 15 நிமிடம் நீடித்த இந்த மழையால் வெயிலின் தாக்கம் சற்று குறைந்தது.
- கோவை மதுக்கரையை சேர்ந்த சுப்பிமணி என்பவர் ஒப்பந்தமுறையில் பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை:
கோவை அருகே உள்ள பேரூரில் பேரூராட்சி சார்பில் வடக்கு ரதவீதியில் ரூ.71 லட்சத்தில் சாக்கடை வாருகால் அமைக்கும் பணி நடக்கிறது.
கோவை மதுக்கரையை சேர்ந்த சுப்பிமணி என்பவர் ஒப்பந்தமுறையில் பணிகளை மேற்கொண்டு வருகிறார். சாக்கடை வாருகால் அமைக்கும் பணியில் தேனியை சேர்ந்த வேல்முருகன்(வயது49) என்பவர் ஈடுபட்டிருந்தார்.
தற்போது சாலையோரத்தில் சாக்கடை வடிகால் அமைக்க குழி தோண்டப்பட்டு, கான்கிரீட் போடும் பணி நடந்து வருகிறது. தோண்டப்பட்ட குழியை அளவீடு செய்யும் பணி மற்றும் மண்ணை பொக்லைன் உதவியுடன் அகற்றும் பணி நடந்தது.
நேற்று மாலை பேரூர் கோவிலுக்கு வடக்கே ஆற்றுப்பாதைக்கு முன்பு தோண்டப்பட்ட குழியில் இறங்கி வேல்முருகன் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது தனியார் இடத்தை சுற்றி போடப்பட்டிருந்த கருங்கல்லால் ஆன சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது.
இதில் வேல்முருகன் இடிபாடுகளுக்குள் சிக்கி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.
இந்த சம்பவம் குறித்து வேல்முருகனின் மகன் மயில்சாமி பேரூர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார், அஜாக்கிரதையாக வேலையாட்களை பணியாற்ற வைத்து உயிரிழப்பை ஏற்படுத்தியதாக கட்டிட காண்டிராக்டர் செந்தில்குமார், மேஸ்திரி சுப்பிரமணி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து விசாரணையும் நடந்து வருகிறது.
- குற்றாலம் அருவிகளுக்கும் தண்ணீர் வரத்து அதிகரிக்க தொடங்கி உள்ளது.
- சுற்றுலாப் பயணிகள் சிறிது நேரம் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.
தென்காசி:
தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. இதனால் முக்கிய சுற்றுலா தலமான குற்றாலம் அருவிகளுக்கும் தண்ணீர் வரத்து அதிகரிக்க தொடங்கி உள்ளது.
இந்நிலையில் நேற்று மாலையில் தென்காசி, செங்கோட்டை, புளியரை, மேலகரம், இலஞ்சி உள்ளிட்ட பகுதிகளில் சாரல் மழை தொடர்ந்து பெய்தது.
மலைப்பகுதிகளிலும் மழை பெய்ததன் காரணமாக குற்றாலம் அருவிகளான மெயின் அருவி, பழைய குற்றாலம், ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்தது.
இதனால் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி அபாய ஒலி எழுப்பப்பட்டு மெயின் அருவியில் குளித்துக் கொண்டிருந்த சுற்றுலாப் பயணிகள் வெளியேற்றப்பட்டனர். இன்று காலையில் பழைய குற்றாலம் அருவியில் சுற்றுலாப் பயணிகள் சிறிது நேரம் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் தொடர்ந்து பெய்த சாரல் மழையால் அங்கு தண்ணீர் மேலும் அதிகரித்ததால் குளித்துக் கொண்டிருந்த சுற்றுலாப் பயணிகள் போலீசாரால் உடனடியாக அப்புறப்படுத்தப் பட்டனர்.
மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளில் சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் சிற்றருவி மற்றும் புலியருவியில் மட்டும் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.
பிரதான அருவிகளில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு 2-வது நாளாக தடை விதிக்கப்பட்டதால் ஏமாற்றம் அடைந்தனர்.
- போதை பொருட்கள் தடுப்பு சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
- ரூ.21¼ லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டத்தில் போதைப் பொருட்கள் விற்பனையை தடுக்க அதிகாரிகள் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தநிலையில் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவத்தை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் போதை பொருட்கள் தடுப்பு சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இதையடுத்து கலெக்டர் கிறிஸ்துராஜ் உத்தரவின் பேரில், உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அதிகாரி விஜயலலிதாம்பிகை தலைமையில் மாவட்டத்தில் உள்ள உணவு பாதுகாப்பு அலுவலர்கள், காவல்துறையினர், உள்ளாட்சி அமைப்புகளுடன் சேர்ந்து கடந்த 1-ந்தேதி முதல் கடைகளில் தொடர் ஆய்வு மேற்கொண்டனர்.
மொத்தம் 78 கடைகளில் ஆய்வு நடத்தப்பட்டது. இதில் விற்பனைக்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 620 கிலோ எடையுள்ள புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். இதையடுத்து அந்த 78 கடைகளும் பூட்டி சீல் வைக்கப்பட்டது. மேலும் ரூ.21¼ லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
- அ.தி.மு.க. நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள் வைக்கிறேன். உங்களுக்குஒரே எதிரி தி.மு.க.தான்.
- எவ்வளவு பணம் கொட்டப்பட்டாலும் விக்கிரவாண்டி மக்கள், நியாயத்தின் பக்கம் இருப்பார்கள்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் பா.ம.க. வேட்பாளர் சி.அன்புமணியை ஆதரித்து ராதாபுரத்தில் அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது அவர்பேசியதாவது:-
நமக்கு சமூகநீதி கிடைக்க இத்தேர்தல் ஒரு வாய்ப்பு. பா.ம.க. வெற்றி பெற்றால் பின்தங்கிய சமுதாயம், தாழ்த்தப்பட்ட சமுதாயம் முன்னேறும், நமக்கு சமூகநீதி கிடைக்கும், அடுத்த மாதமே சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும், 10.5 சதவீத இடஒதுக்கீடும் கிடைக்கும், இது உறுதி. தமிழ்நாட்டின் வாழ்க்கை பிரச்சனை விக்கிரவாண்டி தொகுதி மக்களின் கையில் உள்ளது.
மேடைக்கு மேடை நாங்கள்தான் சமூகநீதிக்கு சொந்தக்காரர்கள் என்று தி.மு.க.வினர் பேசுகின்றனர். ஆனால் சமூகநீதிக்கும், இன்றைய ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க.வுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. 2019 இடைத்தேர்தலின்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஸ்டாலின், தி.மு.க.ஆட்சிக்கு வந்தால் வன்னியர்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீடு வழங்குவோம் என்றார்.
அந்த வாக்குறுதி என்னவாயிற்று? மத்திய அரசு, மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தினால்தான் 10.5 சதவீத இடஒதுக்கீட்டை கொடுக்கமுடியும் என்கிறார். அப்படியென்றால் எதற்கு அரசாணை பிறப்பித்தீர்கள்?, உச்சநீதிமன்றத்தில் ஏன் மேல் முறையீடு செய்தீர்கள்? தமிழ்நாட்டில் வன்னியர்களுக்கு உள்ஒதுக்கீடு கொடுக்க எந்ததடையும் இல்லை என்று உச்சநீதிமன்றம் சொல்லி 2 ஆண்டுகளாகிறது. ஆனால் நம்மை தி.மு.க. ஏமாற்றி வருகிறது. எங்களிடம் தரவுகள் இல்லை என்பதால் கொடுக்க முடியாது என்று ஸ்டாலின் கூறுகிறார்.
ஆனால் எங்களிடம் தரவுகள் இருக்கிறது, 20 சதவீத விழுக்காட்டில் 10.5 சதவீதத்துக்கு மேல் வன்னியர்கள் இடம்பெறுகிறார்கள் என்று அமைச்சர் சிவசங்கர் கூறுகிறார். இது என்ன மோசடி, யாரை ஏமாற்ற பார்க்கிறீர்கள்?
கள்ளக்குறிச்சியில் நடந்த சாராயபலிகள் சம்பவம் வெட்கக்கேடானது. கடந்த 10 மாதங்களுக்கு முன்பு விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் 22 பேர் சாராயம் குடித்து இறந்தனர். அதன் பிறகும் இந்த அரசு, பாடம் கற்றுக்கொள்ளவில்லை. இதற்கு ஆளும்கட்சியை சார்ந்த அரசியல்வாதிகள் தான் காரணம். அங்கிருக்கிற 2 எம்.எல்.ஏ.க்கள்தான் காரணம் என பள்ளி குழந்தைகள் கூட சொல்கிறார்கள். இவர்கள் நம்மீது வழக்கு போடுகிறார்கள், நாங்கள் சந்திக்க தயாராகத்தான் இருக்கிறோம், எங்களிடம் எல்லா ஆதாரங்களும் இருக்கிறது, தேவைப்பட்டால் ஒவ்வொன்றாகவெளியிடுவோம்.
58 உயிர்கள் இறந்த பிறகுதான் கைது நடவடிக்கை, சாராய ஊறல் அழிப்பு நடவடிக்கை எடுக்கிறார்கள். அதனால்தான் சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என்கிறோம். சி.பி.ஐ. விசாரணை நடந்தால் தான் கடந்த 30 ஆண்டுகளாக யார், யார் சாராயம் விற்றார்கள், யாரெல்லாம் ஆதரவாக இருந்தார்கள் என்ற முழு விவரமும் தெரியும்.
இந்த நேரத்தில் அ.தி.மு.க. நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள் வைக்கிறேன். உங்களுக்குஒரே எதிரி தி.மு.க.தான். அதற்கு உங்களுக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது. நீங்கள் தேர்தலில் போட்டியிடவில்லை என்றாலும் எங்களுக்கு ஆதரவு தாருங்கள். உங்களுடைய எதிரி, மக்களின் எதிரி, விவசாயிகளின் எதிரி, முக்கியமாக பெண்களின் எதிரி தி.மு.க., இதையெல்லாம் அனைவரும் சிந்தியுங்கள். தி.மு.க.விடம் பணம் மட்டும்தான் இருக்கிறது.
நம்மிடம் மக்கள் சக்தி, நியாயம் இருக்கிறது. எவ்வளவு பணம் கொட்டப்பட்டாலும் விக்கிரவாண்டி மக்கள், நியாயத்தின் பக்கம் இருப்பார்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
- வெள்ளி விலையும் சற்று குறைந்துள்ளது.
- கிராமுக்கு 70 பைசாக்கள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ. 95.50-க்கும் கிலோவுக்கு ரூ.700 குறைந்து பார் வெள்ளி ரூ.95,500-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை:
சென்னையில் நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 உயர்ந்த நிலையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்தது. கிராமுக்கு 20 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ. 6,680-க்கும் ஒரு சவரன் ரூ.53,440-க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலையும் சற்று குறைந்துள்ளது. கிராமுக்கு 70 பைசாக்கள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ. 95.50-க்கும் கிலோவுக்கு ரூ.700 குறைந்து பார் வெள்ளி ரூ.95,500-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
- பயணிகள் மறைத்து கடத்தி வரப்பட்ட தங்கம் பிடிபட்டது.
- தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கே.கே.நகர்:
திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் பயணிகள் மறைத்து கடத்தி வரப்பட்ட தங்கம் பிடிபட்டது. இதுபோன்ற செய்திகள் நாளும் பத்திரிகைகளில் தவறாமல் இடம்பெறுகிறது. கட்டிங் பிளேயர் கம்பிகளுக்குள் மறைத்து, தலை முடிக்குள் மறைத்து வைத்து, பேஸ்ட் வடிவில், பேரிச்ச ம்பழக் கொட்டைகளை நீக்கிவிட்டு அதற்குப்பதில் தங்கத்தை வைத்து, ஊட்டச்சத்து பவுடருக்குள் தூளாக்கி, பிரவுன் டேப்புக்குள் பவுடர்களாக தூவி என நூதன முறையில் கடத்தல்காரர்கள் தங்கம் கடத்தி வருவது சுவாரசியம் தரக்கூடிய செய்தியாக மாறி உள்ளது.
இவர்கள் "ரூம் போட்டு யோசிப்பாங்களோ?"னு வடிவேலு பாணியில்தான் கேட்கத் தோன்றுகிறது.
இப்படி யோசித்து தங்கம் கடத்தி வருபவர்களை வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பது தொடர்கதையாகவே உள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு திருச்சி விமான நிலையத்தில் 1 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சிங்கப்பூரில் இருந்து நேற்று இண்டிகோ விமானம் திருச்சி வந்தது. இந்த விமானத்தில் வந்த பயணிகளின் உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து கொண்டிருந்தனர்.
அப்போது சந்தேகத்திற்கு இடமான பயணி ஒருவரின் உடைமைகளை சோதனை செய்தனர். அப்போது அவர் கம்பி அறுக்கும் எந்திரத்தில் மறைத்து ஒரு கோடியே 19 லட்சம் மதிப்பிலான 1666 கிராம் தங்கத்தை மறைத்து எடுத்து வந்தது கண்டறியப்பட்டது.
இதனை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள் அந்த பயணியை கைது செய்து தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரே நாளில் திருச்சி விமான நிலையத்தில் ரூ 1.20 மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது பரபரப்பு ஏற்படுத்தியது.
- மீண்டும் மீண்டும் கலவரத்தை உருவாக்கும் நோக்கில் அ.தி.மு.க. செயல்படுகிறது.
- ஆர்ப்பாட்டம் செய்ய எல்லா கட்சிகளுக்கும் இடமும், உரிமையும் உள்ளது.
சென்னை:
தமிழக சட்டசபையில் கேள்வி நேரத்தை ஒத்திவைத்து கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக விவாதம் நடத்தக்கோரி அ.தி.மு.க. உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து சபாநாயகர் உத்தரவை அடுத்து அவைக் காவலர்கள் அ.தி.மு.க. வினர் சட்டசபையில் இருந்து வெளியேற்றினர்.
இதன்பின், சட்டசபையில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,
* அவை கூடியதும் தேவையற்ற பிரச்சனைகளை அ.தி.மு.க.வினர் கிளப்புகின்றனர்.
* கள்ளக்குறிச்சி சம்பவம் குறித்து கடந்த 20-ந்தேதி சபையில் விளக்கம் அளிக்கப்பட்டது.
* வேண்டுமென்றே திட்டமிட்டு கலவரத்தை ஏற்படுத்த அ.தி.மு.க.வினர் முயற்சி.
* மீண்டும் மீண்டும் கலவரத்தை உருவாக்கும் நோக்கில் அ.தி.மு.க. செயல்படுகிறது.
* மக்களவை தேர்தல் தோல்வியால் அதிமுக விரக்தியில் செயல்படுகிறது.
* கள்ளக்குறிச்சி சம்பவத்தின் உண்மையை அறிய நீதியரசர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
* கள்ளக்குறிச்சியில் இதுவரை 20-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
* பாதிக்கப்பட்ட குடும்பத்தாருக்கு உரிய இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.
* ஆர்ப்பாட்டம் செய்ய எல்லா கட்சிகளுக்கும் இடமும், உரிமையும் உள்ளது.
* நியாயமான ஆர்ப்பாட்டத்திற்கு அரசு அனுமதி அளிக்கிறது.
* இந்த விவகாரத்தில் சபாநாயகர் தான் முடிவு எடுக்க வேண்டும்.
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
- வேட்புமனுக்களின் மீதான பரிசீலனை நேற்று நடைபெற்றது.
- வேட்பு மனுக்களை வாபஸ் பெறுவதற்கு நாளை கடைசி நாளாகும்.
விக்கிரவாண்டி:
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி எம்.எல்.ஏ., புகழேந்தி கடந்த ஏப்ரல் 6-ந் தேதி இறந்தார். இதனை தொடர்ந்து விக்கிரவாண்டி தொகுதியை இந்திய தேர்தல் ஆணையம் காலியாக அறிவித்தது. பாராளுமன்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகு விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் ஜூலை 10-ந் தேதி நடைபெற உள்ளது.
இத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 14-ந் தேதி தொடங்கி 21-ந் தேதி வரை நடைபெற்றது. இதில் தி.மு.க. சார்பில் அன்னியூர் சிவா, பா.ம.க. சார்பில் சி. அன்புமணி, நாம் தமிழர் கட்சி சார்பில் டாக்டர். அபிநயா ஆகியோர் உட்பட பலர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
வேட்புமனுக்களின் மீதான பரிசீலனை நேற்று நடைபெற்றது. இதில் 29 வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது. வேட்பு மனுக்களை வாபஸ் பெறுவதற்கு நாளை கடைசி நாளாகும். இதனை தொடர்ந்து தி.மு.க.வும், பா.ம.க.வும் விக்கிரவாண்டி தொகுதி மக்களிடையே தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் டாக்டர். அபிநயாவிற்கு ஆதரவாக அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் விக்கிரவாண்டியில், தனது தேர்தல் பிரச்சாரத்தை இன்று மாலை மேற்கொள்ளகிறார். விக்கிரவாண்டி தொகுதியில் தி.மு.க.விற்கும், நாம் தமிழர் கட்சிக்கும் தான் போட்டி என சீமான் கூறி வருவது குறிப்பிடத்தக்கதாகும்.
- முன்னாள் பிரதமர் வி.பி.சிங் திருவுருவ சிலைக்கு முதலமைச்சர் மரியாதை செலுத்தினார்.
- அமைச்சர்கள் சேகர்பாபு, மா.சுப்பிரமணியன், மேயர் பிரியா உள்ளிட்டோரும் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
சென்னை:
சென்னை மெரினா கடற்கரையில் உள்ள மாநில கல்லூரி வளாகத்தில் உள்ள முன்னாள் பிரதமர் வி.பி.சிங் திருவுருவ சிலைக்கு முதலமைச்சர் மரியாதை செலுத்தினார்.
முன்னாள் பிரதமர் நீதி காவலர் வி.பி.சிங்-கின் 94-வது பிறந்தநாளான இன்று அவரது திருவுருவப்படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
அவருடன் அமைச்சர்கள் சேகர்பாபு, மா.சுப்பிரமணியன், மேயர் பிரியா உள்ளிட்டோரும் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
வி.பி.சிங் சிலை நிறுவப்பட்ட பிறகு அரசு சார்பில் முதல் பிறந்தநாளான இன்று மரியாதை செலுத்தப்பட்டது.
- போக்குவரத்து பகுதியாக திம்பம் மலைப்பகுதி உள்ளது.
- தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று கொண்டிருக்கும்.
தாளவாடி:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இங்கு புலி, சிறுத்தை, யானை, மான், கரடி, காட்டெருமை உள்பட பல்வேறு வனவிலங்குகள் வசிக்கின்றன.
இந்த வனப்பகுதி வழியாக அமைந்துள்ள சத்தியமங்கலம்-மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் பண்ணாரி அம்மன் கோவிலை அடுத்துள்ள அடர்ந்த வனப்பகுதியில் 27 கொண்டை ஊசி வளைவுகளுடன் கூடிய திம்பம் மலைப்பாதை அமைந்துள்ளது. தமிழக - கர்நாடகா இடையே மிக முக்கிய போக்குவரத்து பகுதியாக திம்பம் மலைப்பகுதி உள்ளது. இந்த பகுதியில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று கொண்டிருக்கும்.
திம்பம் மலைப்பாதையில் அவ்வப்போது இரவு நேரங்களில் சிறுத்தைகள் நடமாடுவது வழக்கம். இந்த நிலையில் 17-வது கொண்டை ஊசி வளைவு அருகே சாலையோர தடுப்புச்சுவரில் ஒரு சிறுத்தை ஜாலியாக படுத்திருந்தது அப்போது அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகள் சிறுத்தை நடமாட்டத்தை கண்டு அச்சமடைந்தனர்.
வாகன ஓட்டி ஒருவர் சிறுத்தை நடமாட்டத்தை செல்போனில் வீடியோவாக பதிவு செய்தார். சிறிது நேரத்தில் சிறுத்தை சாலையை கடந்து வனப்பகுதிக்குள் சென்று மறைந்தது.
இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது,
திம்பம் மலைப்பகுதியில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதால் அந்த பகுதியாக செல்லும் வாகன ஓட்டிகள் கவனத்துடன் இருக்க வேண்டும். தேவையின்றி வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களை நிறுத்தி சாலையோரம் நிற்கக்கூடாது.
குறிப்பாக இரவு நேரங்களில் செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் கவனத்துடன் செல்ல வேண்டும். சிலர் இயற்கை அழகை ரசிப்பதாக கூறி வாகனங்களை சாலையோரம் நிறுத்தி செல்போன்களில் படம் எடுத்து வருகின்றனர். இது ஆபத்தான செயலாகும். இது போன்ற செயலில் ஈடுபடுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.






