என் மலர்
உள்ளூர் செய்திகள்
- கடந்த ஆண்டு இதே நாளில் 7.132 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு இருந்தது குறிப்பிடத்தக்கது.
- பூண்டி ஏரியில் ஷட்டர் பகுதியில் மட்டும் தண்ணீர் தேங்கி நிற்கிறது.
ஊத்துக்கோட்டை:
சென்னைக்கு குடிநீர் வழங்கும் பிரதான ஏரிகளில் ஒன்று பூண்டி ஏரி. இதில் மழை நீர் மற்றும் கிருஷ்ணா நதிநீர் பங்கீடு திட்டத்தின் கீழ் ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே உள்ள கண்டலேறு அணையில் இருந்து பெறப்படும் தண்ணீரை சேமித்து வைத்து தேவைப்படும் போது புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு திறந்து விடப்படுவது வழக்கம்.
கிருஷ்ணா நதிநீர் பங்கீடு திட்டத்தின் படி ஆந்திரா அரசு தமிழகத்துக்கு வருடந்தோறும் 12 டி.எம்.சி. தண்ணீர் திறந்து விட வேண்டும். ஜனவரி முதல் ஏப்ரல் வரையில் 4 டி.எம்.சி., ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டி.எம்.சி. ஆக மொத்தம் 12 டி.எம் சி. தண்ணீர் பூண்டி ஏரிக்கு திறந்து விடவேண்டும்.
இன்றைய காலை நிலவரம் படி சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஆறு ஏரிகளிலும் 6.412 டி.எம்.சி. தண்ணீர்(மொத்தம் 13.2 டி.எம்.சி.) இருப்பு உள்ளது. கடந்த ஆண்டு இதே நாளில் 7.132 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு இருந்தது குறிப்பிடத்தக்கது.
தற்போது இருப்பில் உள்ள தண்ணீரைக் கொண்டு வரும் நவம்பர் மாதம் வரை சென்னையில் தங்கு தடையின்றி குடிநீர் விநியோகிக்க முடியும். எனினும் பூண்டி ஏரி முழுவதுமாக வறண்டு வருவதால் இனி கிருஷ்ணா நதி நீரை நம்பித்தான் ஏரி உள்ளது. கண்டலேறு அணையில் தற்போது 3 1/2 டி. எம். சி தண்ணீர் மட்டுமே உள்ளது. இதனால் ஆந்திராவில் பலத்த மழை பெய்தால் மட்டுமே கண்டலேறு அணைக்கு போதுமான தண்ணீர் வந்த பின்னர் பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறந்து விட முடியும். இதனால் பூண்டி ஏரி கிருஷ்ணா தண்ணீருக்காக காத்திருக்கும் நிலை உள்ளது. இன்று காலை நிலவரப்படி பூண்டி ஏரியில் மொத்த கொள்ளவான 3231 மி.கனஅடியில் வெறும் 74 மி.கனஅடி மட்டுமே தண்ணீர் இருப்பு உள்ளது. இதனால் கடந்த 3 நாட்களுக்கு முன்னர் பூண்டி ஏரியில் இருந்து இணைப்பு கால்வாய் வழியாக புழல் எரிக்கு தண்ணீர் திறப்பு முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. பூண்டி ஏரியில் ஷட்டர் பகுதியில் மட்டும் தண்ணீர் தேங்கி நிற்கிறது. ஏரியில் தண்ணீர் இருப்பு குறைந்து விட்டதால் ஏராளமான மீன்கள் இறந்து மிதக்கின்றன.
- ஊழியர் சங்கம் சார்பில் இன்று உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
- போக்குவரத்து ஊழியர்கள் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
திருவள்ளூர்:
திருவள்ளூரில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு காஞ்சிபுரம் மண்டல தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சங்கம் சார்பில் இன்று உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
சி.ஐ.டி.யூ காஞ்சிபுரம் மண்டல துணைத் தலைவர் மாயக்கண்ணன் தலைமை தாங்கினார். திருவள்ளூர் முன்னாள் நகர மன்ற தலைவர் சுந்தர்ராஜன், சி.ஐ.டி.யூ மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஊதிய பேச்சு வார்த்தையை உடனடியாக தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், ஓய்வு பெற்ற தொழிலாளர்களின் பண பலன், போக்குவரத்து படி, மருத்துவ காப்பீடு உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வுக்கான வேண்டும்.
வாரிசு வேலை, காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். ஒப்பந்த முறையை கைவிட வேண்டும் என்பது உட்பட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
இதில் கோயம்பேடு, திருவள்ளூர், திருத்தணி, பொன்னேரி, ஊத்துக்கோட்டை பணிமனையில் பணியாற்றும் போக்குவரத்து ஊழியர்கள் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
- வகுப்பு ஆசிரியர் மாணவியை தூக்கிக்கொண்டு முதல் உதவி சிகிச்சை அளித்தார்.
- மாணவியின் பெற்றோருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
சின்னமனூர்:
தேனி மாவட்டம் சின்னமனூர் அருகில் உள்ள சீலையம்பட்டியில் தனியாருக்கு சொந்தமான நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு சுமார் 200க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்த பள்ளியில் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த பாண்டி மகள் ரித்திகா (வயது8) என்பவர் 3-ம் வகுப்பு படித்து வருகிறார்.
இன்று காலை வழக்கம்போல் பள்ளிக்கு வந்த மாணவி தனது வகுப்பறையில் அமர்ந்து பாடம் படித்துக் கொண்டிருந்தார். அப்போது இந்த வகுப்பறையில் பழுதான மேற்கூரை கட்டிடம் இடிந்து மாணவியின் தலை மீது விழுந்தது. இதில் மாணவிக்கு மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. இதை பார்த்ததும் அருகில் இருந்த மாணவிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
உடனே வகுப்பு ஆசிரியர் மாணவியை தூக்கிக்கொண்டு முதல் உதவி சிகிச்சை அளித்தார். பின்னர் தலைமை ஆசிரியருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
மேலும் மாணவியின் பெற்றோருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் அலறியடித்துக் கொண்டு பள்ளிக்கு ஓடி வந்தனர். பின்னர் நடந்த விபரத்தை கேட்டு அழுதபடியே மாணவியை ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தால் பள்ளியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
பள்ளிகள் திறப்புக்கு முன்பு மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் பள்ளிமாணவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் தயாராக செய்து கொடுக்க வேண்டும். பழுதடைந்த கட்டிடங்கள், சுவர்கள் ஆகியவற்றை இடித்து பராமரிக்க வேண்டும் என உத்தரவிட்டும் பெரும்பாலான பள்ளிகள் இதனை பின்பற்றுவதில்லை. எனவே இனிமேலாவது அதிகாரிகள் பள்ளிகளில் பாதுகாப்பு வசதிகள் சரியான முறையில் செய்யப்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும் என பெற்றோர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
- மோட்டார் சைக்கிள் திருடர்கள் மாட்டிக் கொள்வதற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
- கேமராக்கள் சென்னை மாநகரில் 28 இடங்களில் நிறுவப்பட்டுள்ளன.
சென்னை:
சென்னையில் மோட்டார் சைக்கிள்கள் திருட்டு என்பது தவிர்க்க முடியாத ஒரு குற்றமாகவே மாறிப் போயிருக்கிறது.
விலை உயர்ந்த மோட் டார் சைக்கிள்களை கள்ளச் சாவி போட்டோ அல்லது மாற்று வழிகளிலோ திருடிக் கொண்டு செல்பவர்கள் சென்னை மாநகரில் சமீப காலமாகவே அதிகரித்து காணப்படுகிறார்கள்.
இப்படி மோட்டார் சைக்கிள்களை திருடிச் செல்பவர்களை கண்டு பிடிப்பது என்பது போலீசாருக்கு பெரும் சவாலாகவே இருந்து வந்தது.
இந்த நிலையில் மோட்டார் சைக்கிள் திருடர்களை பிடிப்பதற்கு சென்னை மாநகரில் நவீன கேமராக்கள் கைகொடுத்து வருகின்றன.. ஏ.என்.பி.ஆர். (ஆட்டோமேட்டிக் நம்பர் பிளேட் ரெகனேசன்) என்று அழைக்கப்படும் இந்த கேமராக்கள் சென்னை மாநகரில் 28 இடங்களில் நிறுவப்பட்டுள்ளன.
இதுபோன்று நிறுவப்பட்டுள்ள 100 கேமராக்கள் மூலமாக திருடப்பட்ட மோட்டார் சைக்கிள்கள் கண்டுபிடிக்கப்பட்டு வரு கிறது. இந்த கேமரா திருடப்பட்ட மோட்டார் சைக்கிள்களை எப்படி கண்டுபிடித்து கொடுக்கிறது?
இதுபற்றி போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
திருடப்பட்ட மோட்டார் சைக்கிள்கள் எந்த பகுதியில் திருடப்பட்டுள்ளது. அது எந்த வகையான வாகனம் என்பது பற்றி வாகனங்களை பறிகொடுத்தவர்கள் போலீஸ் நிலையங்களில் புகார் கொடுத்திருப்பார்கள்.
அந்த தகவல்கள் அனைத்தையும் இதற்கென உரு வாக்கப்பட்டுள்ள செயலியில் பதிவேற்றம் செய்து வைத்துள்ளோம். இது போன்று 2021-ம் ஆண்டில் இருந்து 3,200 வாகனங்கள் செயலியில் பதிவு செய்யப்பட்டு உள்ளது.
திருட்டு வாகனங்களை கண்டுபிடித்துக் கொடுக்கும் நவீன கேமராக்கள் அதனை புள்ளி விவரத்தோடு காவல் துறையின் வாட்ஸ் அப்புக்கு அனுப்பி வைத்து வருகிறது.
பரங்கிமலை பகுதியில் காணாமல் போன ஒரு மோட்டார் சைக்கிள் பாரி முனை பகுதியில் ஓடுவதை அந்த கேமரா சமீபத்தில் காட்டிக்கொடுத்தது. உடனடியாக குற்றவாளியை கண்டுபிடிப்பதற்கு அது கைகொடுக்கும் வகையில் அமைந்திருந்தது.
இது போன்று சென்னை மாநகரில் தினமும் மூன்று அல்லது நான்கு திருட்டு வாகனங்கள் பிடிபடுவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதற்காக நடமாடும் கேமராக்களையும் காவல் துறையினர் பயன்படுத்தி வருகிறார்கள். இந்த கேமராக்களும் திருட்டு மோட்டார் சைக்கிள்களை காட்டிக் கொடுத்து வருகின்றன.
இத்தகைய 50 கேமராக்களும் பயன்பாட்டில் உள்ளன. இதன் மூலமாக திருட்டு மோட்டார் சைக்கிள்களை கண்டுபிடிப்பது தற்போது காவல்துறைக்கு மிகவும் எளிதான விஷயமாக மாறி உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
குற்றச் செயல்களுக்கு சென்னையில் ஓடும் லட்சக்கணக்கான மோட்டார் சைக்கிள்களில் வீடுகளுக்கு வெளியில் நிறுத்தப்படும் மோட்டார் சைக்கிள்களே பெரும்பாலும் திருடப்பட்டு வருகிறது. இப்படி திருடப்படும் மோட்டார் சைக்கிள்களை குற்றவாளிகள் செயின்பறிப்பு செல்போன் பறிப்பு போன்ற குற்றச் செயல்களுக்கு பயன்படுத்தி விட்டு ஏதாவது ஒரு பகுதியில் நிறுத்திவிட்டு செல்வார்கள்.
பின்னர் மீண்டும் அந்த வாகனத்தை எடுத்து பயன்படுத்துவார்கள். தற்போது பொருத்தப்பட்டுள்ள நவீன கேமராக்கள் மூலமாக நிச்சயம் மோட்டார் சைக்கிள் திருடர்கள் மாட்டிக் கொள்வதற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இதன்மூலம் மோட்டார் சைக்கிள் திருடர்கள் இனி சென்னை போலீசாரிடம் இருந்து தப்ப முடியாத நிலை ஏற்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
- எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 61 பேரும், எம்.பி.க்கள் 3 பேர் என அனைவரும் கவர்னரை சந்தித்தனர்.
- கள்ளச்சாராயம் விவகாரம் தொடர்பாக நேற்று அண்ணாமலை, கவர்னரை மனு அளித்தார்.
சென்னை:
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணை கோரி வரும் எடப்பாடி பழனிசாமி இன்று கவர்னர் ஆர்.என்.ரவியை சந்தித்து மனு அளித்தார்.
கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 61 பேரும், எம்.பி.க்கள் 3 பேர் என அனைவரும் கவர்னரை சந்தித்தனர்.
கள்ளச்சாராயம் விவகாரம் தொடர்பாக நேற்று அண்ணாமலை, கவர்னரை மனு அளித்த நிலையில் தற்போது எடப்பாடி பழனிசாமி சந்தித்துள்ளார்.
- கள்ளக்குறிச்சி சம்பவத்துக்கான உண்மையான காரணத்தை அறிய நீதியரசர் கோகுல்தாஸ் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது
- எதிர்க்கட்சித் தலைவர் அப்போது முதலமைச்சராக இருந்தபோது, அவர் மீது சி.பி.ஐ. விசாரணை கொண்டுவரபட்டதை அவர் மறந்திருக்க மாட்டார்.
சென்னை:
சட்டசபையில் இன்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசும் போது கூறியதாவது:-
கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பாக இதே அவையில் கடந்த 20.6.2024 அன்று ஒரு மணிநேரத்துக்கும் மேலாக அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் இந்த அவையிலே விரிவாகப் பேசியிருக்கிறார்கள். அதற்கு நானும் சரியான விளக்கத்தை அளித்திருக்கிறேன்.
அன்றையதினம் அவையில் இருந்து, முக்கிய எதிர்க்கட்சியான அ.தி.மு.க. தனது கருத்தைப் பதிவு செய்திருக்க வேண்டும். மாறாக, தேவையற்ற பிரச்சனையை அவை கூடியதும் கிளப்பினார்கள்.
அவையினுடைய விதி முறைப்படி, கேள்வி நேரம் முடிந்ததற்குப் பிறகுதான் மற்ற அலுவல்களை எடுத்துக் கொள்ள வேண்டும். அப்படித்தான் விதி இருக்கிறது. ஆனால், அதையெல்லாம் பொருட்படுத்தாமல் விதிமுறையை மீறி, உடனடியாக அந்தப் பிரச்சனையை எடுத்துக் கொள்ள வேண்டுமென்று இங்கே ஒரு பெரிய ரகளையே செய்திருக்கிறார்கள்.
கேள்வி-பதில் நேரம் முடிந்ததும் கள்ளக்குறிச்சி பிரச்சனையைப் பற்றித் தான் விவாதிக்கப் போகிறோம் என்று சபாநாயகர் தெளிவாகக் குறிப்பிட்டுச் சொல்லியும், அதையும் மீறி அவர்கள் வேண்டுமென்றே திட்டமிட்டு, ஒரு கலவரத்தை ஏற்படுத்த வேண்டுமென்பதற்காக திட்டமிட்டு அப்படி நடந்து கொண்டார்கள்.
அதற்குப்பிறகு நீங்கள் வேறு வழியில்லாமல் அவர்களை அன்றைக்கு அவையிலிருந்து வெளியேற்றியிருக்கிறீர்கள். அதற்குப்பிறகுதான் நான் அன்றைக்கு அவைக்கு வந்தேன்; வந்ததற்குப்பிறகு இதைக் கேள்விப்பட்டவுடன், மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெறுகிறபோது எதிர்க்கட்சி, அதுவும் பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க. அவையில் இருக்க வேண்டும்;

எனவே மறுபரிசீலனை செய்து இதை சரிசெய்ய வேண்டுமென்று நான் உங்களிடத்திலே வேண்டுகோள் வைத்தேன். நீங்களும் அதை ஏற்றுக்கொண்டு, அவர்கள் அவை நடவடிக்கைகளில் கலந்து கொள்ள அனுமதித்தீர்கள். ஆனால், அதற்குப்பிறகும் அதையும் ஏற்றுக் கொள்ளாமல், மீண்டும் மீண்டும் இந்த அவைக்கு வந்து ஒரு கலவரத்தை உருவாக்க வேண்டுமென்பதற்காக திட்டமிட்டு இப்ப டிப்பட்ட காரியத்தைச் செய்து கொண்டிருக்கிறார்கள்.
வேறு ஒன்றுமல்ல; பாராளுமன்றத் தேர்தலில் நாற்பதுக்கு நாற்பது. அது அவர்களுடைய மனதை உறுத்துகிறது; கண்ணை உறுத்துகிறது. அதை மக்களிடமிருந்து எப்படி மாற்றுவது என்பதற்காக இந்தக் காரியத்தைத் திட்டமிட்டு தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறார்கள். கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவந்த போது, அதற்கு என்னென்ன பரிகாரம் செய்யப்போகிறோம் என்பதைப் பற்றியெல்லாம் நான் பல்வேறு விளக்கங்களைத் தெளிவாகச் சொல்லியிருக்கிறேன்.
கள்ளக்குறிச்சி சம்பவத்துக்கான உண்மையான காரணத்தை அறிய நீதியரசர் கோகுல்தாஸ் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது; சி.பி.சி.ஐ.டி. வசம் இந்த வழக்கு ஒப்படைக்கப்பட்டு உள்ளது; உள்துறைச் செயலாளரையும், டி.ஜி.பி.யையும் ஆய்வு செய்து, உடனடியாக அறிக்கை தரச் சொல்லி இருக்கிறேன்; குற்றவாளிகளில் 20-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்; பலர் தேடப்பட்டு வருகிறார்கள்;
கள்ளச்சாராயம், விஷச்சாராயம் ஒழிப்பு நடவடிக்கைகள் தொடர்கின்றன; இறந்தோர் குடும்பத்துக்கு பத்து லட்சம் ரூபாய் தரப்பட்டு, பாதிக்கப்பட்டோர் குடும்பங்களுக்கும் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது; பெற்றோரை இழந்த பிள்ளைகளின் கல்வி, வாழ்க்கை பொறுப்பை அரசு ஏற்றுக் கொண்டிருக்கிறது; மாவட்ட ஆட்சியர் மாற்றப்பட்டு உள்ளார்; மாவட்ட எஸ்.பி. உள்ளிட்ட காவல் துறை அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு இருக்கிறார்கள்; மதுவிலக்கை கவனித்து வந்த ஏ.டி.ஜி.பி. கட்டாயக் காத்திருப்பில் வைக்கப்பட்டுள்ளார். இப்படிப்பட்ட நடவடிக்கைகளை 24 மணி நேரத்தில் இந்த அரசு எடுத்திருக்கிறது என்பதெல்லாம் உங்களுக்கு நன்றாகத் தெரியும்.
இதற்கிடையில் நேற்றைய தினம் கூட ஆர்ப்பாட்டங்களெல்லாம் செய்திருக்கிறார்கள். ஆர்ப்பாட்டம் செய்வது என்பது நியாயம தான். ஜனநாயகத்தில் எல்லோருக்கும் அந்த உரிமை இருக்கிறது. ஜனநாயகத்திலே இருக்கக்கூடிய உரிமை அது. யார் வேண்டுமானாலும் ஆர்ப்பாட்டம் செய்யலாம். அது நியாயமான முறையில் ஆர்ப்பாட்டமாக இருந்தால், அரசு அதற்கு அனுமதி அளிக்கும். ஆனால், அந்த ஆர்ப்பாட்டத்திலேகூட திரும்பத் திரும்ப சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென்று பேசியிருக்கிறார்கள்.
இதே எதிர்க்கட்சித் தலைவர் அப்போது முதலமைச்சராக இருந்தபோது, அவர் மீது சி.பி.ஐ. விசாரணை கொண்டுவரபட்டதை அவர் மறந்திருக்க மாட்டார். திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, எதிர்க்கட்சித் தலைவர் மீது ஒரு குற்றச்சாட்டைச் சொல்லி, அதிலே முறைகேடு நடந்திருக்கிறது; அதற்கு சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டுமென்று நீதிமன்றத்திற்குச் சென்றபோது, அதை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டுமென்று நீதிமன்றம் உத்தரவிட்டது.
சி.பி.ஐ. மீது நம்பிக்கை இருந்தால் அதை ஏற்றுக்கொண்டு, அந்தச்சவாலை ஏற்றுக் கொண்டிருக்க வேண்டும். ஆனால், சி.பி.ஐ. மீது நம்பிக்கை இல்லாத காரணத்தினால்தான், அதற்குத் தடை உத்தரவு வாங்கிய வீராதி வீரர்தான் இன்றைக்கு இந்த விஷயத்தில் சி.பி.ஐ. விசாரணை வேண்டுமென்று முழங்கிக் கொண்டிருக்கிறார்கள். எனவே, இதுகுறித்து சபாநாயகர்தான் முடிவெடுக்க வேண்டுமென்று நான் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
- 8 மணல் குவாரிகளில் சோதனை நடைபெற்றது.
- ஆவணங்கள் பினாமி பெயரில் இருப்பதை கண்டுபிடித்தனர்.
சென்னை:
தமிழ்நாட்டில் உள்ள மணல் குவாரிகளில் நடைபெறும் முறைகேடு சம்பந்தமாக அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு வந்த புகார்களின் அடிப்படையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 34 இடங்களில் அதிரடி சோதனை நடத்தி இருந்தனர்.
6 மாவட்டங்களில் உள்ள 8 மணல் குவாரிகளில் இந்த சோதனை நடைபெற்றது. அப்போது மணல் குவாரி நடத்த ஒப்பந்தம் பெற்ற தொழில் அதிபர்கள் ராமச்சந்திரன், ரத்தினம், கரிகாலன் ஆகியோர் வீடுகளிலும் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தினார்கள். ஆடிட்டர் சண்முகராஜ் என்பவரது வீட்டிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
மணல் குவாரிகளில் சி.சி.டி.வி. கேமிரா பதிவு காட்சிகள் மற்றும் ஆவணங்களை அமலாக்கத் துறையினர் கைப்பற்றி ஆய்வு செய்தனர். மணல் குவாரிகளில் சேமித்து வைக்கப்பட்டுள்ள மணல் அளவு மற்றும் விற்பனை செய்யப்பட்ட அளவு ஆகியவற்றை பற்றியும் கணக்கிட்டனர்.
குவாரிகள் மூலம் விற்பனை செய்யப்படும் மணலில் போலி பதிவுகள் மூலம் முறைகேடுகள் நடப்பதை சில ஆவணங்கள் மூலம் அமலாக்கத்துறையினர் கண்டுபிடித்ததாக தெரிகிறது.
பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில் அமலாக்கத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்ததில் சில ஆவணங்கள் பினாமி பெயரில் இருப்பதை கண்டுபிடித்தனர். அத்துடன் போலி பில்கள் மூலம் மணல் விற்பனை செய்து ஜி.எஸ்.டி. வரி இழப்பை ஏற்படுத்தியதையும் கண்டுபிடித்தனர்.
விசாரணையின் ஒரு பகுதியாக ஐ.ஐ.டி.கான்பூர் நிபுணத்துவத்தை பயன்படுத்தி அனைத்து மணல் அகழ்வு தளங்களிலும் தொழில்நுட்ப ஆய்வை மேற்கொண்டனர். அதில் மணல் அள்ளப்பட்ட இடங்களில் அளவுக்கு அதிகமாக மணல்கள் அள்ளப்பட்டது ஆய்வில் கண்டறியப்பட்டது.
மொத்தம் ரூ.4,730 கோடி அளவுக்கு மணல் விற்பனை நடைபெற்றுள்ள நிலையில் கணக்கு புத்தகத்தில் காட்டப்பட்டுள்ள வருவாய் ரூ.36.45 கோடி என்று குறிப்பிடப்பட்டிருந்ததையும் கண்டறிந்தனர்.
இதுகுறித்து அமலாக்கத் துறை விசாரணை தீவிரப்படுத்தப்பட்ட நிலையில், பலகோடிக்கு வரி ஏய்ப்பு நடந்துள்ள காரணத்தால் இதுபற்றி விசாரிக்குமாறு வருமான வரித்துறை மற்றும் ஜி.எஸ்.டி.விசாரணை குழுவுக்கு அமலாக்கத்துறை கடிதம் எழுதி உள்ளது.
அதன் அடிப்படையில் விசாரணை இப்போது தீவிரம் அடைந்து வருகிறது. ஏற்கனவே மணல் குவாரிகளில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக திருச்சி உள்ளிட்ட 6 மாவட்ட கலெக்டர்களிடம் விசாரணை நடத்தப்பட்டிருந்தது.
மணல் குவாரிகளில் மணல் அள்ளும் பணிக்கு கோபெல்கோ கன்ஸ்டக்ஷன் என்ற தனியார் நிறுவனம் தமிழகத்தில் உள்ள 16 இடங்களுக்கு மொத்தம் 273 எந்திரங்களை வழங்கியது விசாரணையில் தெரியவந்தது.
இந்த நிறுவனத்திலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி அனைத்து விவரங்களையும் சேகரித்து வைத்துள்ளனர்.
இதன் மூலம் சட்ட விரோ தமாக மணல் விற்பனையில் மிகப் பெரிய முறைகேடு நடந்திருப்பது தெரிய வந்ததின் அடிப்படையில் வரி ஏய்ப்பு தொடர்பாகவும் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 3 லட்சத்து 6 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
- பெண்களுக்கான திட்டத்தை அரசு மக்களிடம் கொண்டு செல்லும்போது சமூகத்தில் மாற்றம் ஏற்படும்.
சென்னை:
தமிழக சட்டசபையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
* வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் கவனம் செலுத்துகிறோம்.
* அடுத்த தலைமுறை பற்றி சிந்திக்கும் அரசு தி.மு.க. அரசு.
* தி.மு.க. அரசு பொறுப்பேற்ற பின், 32 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன.
* 65,483 பேர் கடந்த மூன்று ஆண்டுகளில் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
* உலக முதலீட்டாளர் மாநாடு மூலம் லட்சக்கணக்கான வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
* 3 லட்சத்து 6 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
* 2026 ஜனவரிக்குள் 46,584 அரசு பணியிடங்கள் நிரப்பப்படும்.
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
முன்னதாக, நெல்லையில் சிபிஎம் அலுவலகம் தாக்கப்பட்டது தொடர்பாக பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இருவேறு சமூகத்தை சேர்ந்த மணமக்களுக்கு சாதி மறுப்பு திருமணம் செய்யப்பட்டு அது தொடர்பான புகைப்படம் முகநூல் பக்கத்தில் பதிவிடப்பட்டது. மணமகள் வீட்டார்கள் சிபிஎம் அலுவலகத்தை சேதப்படுத்தி உள்ளார்கள். இந்த சம்பவத்தில் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
புதிய சட்டத்தை கொண்டு வருவதை விட, ஏற்கனவே நடைமுறையில் உள்ள சட்டங்களின் அடிப்படையில் குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவதே சரியானது.
கல்வி, வேலைவாய்ப்பில் சமூகம் உயரும்போது, இதுபோன்ற குற்றங்கள் குறையும்.
பெண்களுக்கான திட்டத்தை அரசு மக்களிடம் கொண்டு செல்லும்போது சமூகத்தில் மாற்றம் ஏற்படும். புதிய சட்டங்களுக்கான தேவையும் குறையும்.
இதுபோன்ற வழக்குகளை விசாரிக்க அரசு குற்றவியல் வழக்கறிஞர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றார்.
- புதிய சிம்கார்டு, இணைப்புகள் பெறுவதற்கு ஆதார் எண் அவசியம்.
- அதிகாரப்பூர்வ அரசிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை:
புதிய தொலைத் தொடர்பு சட்டம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடந்த கூட்டத்தொடரின் போது இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு ஜனாதி தி ஒப்புதலை பெற்றது.
138 ஆண்டுகள் பழமை வாய்ந்த டெலிகிராம் சட்டம் மாற்றப்பட்டு புதிய சட்டம் பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் நிறைவேற்றப்படுகிறது. இந்த புதிய தொலைத்தொடர்பு சட்டமானது அவசர காலங்களில் தொலைத் தொடர்பு சேவைகள் அல்லது நெட்வொர்க்குகளின் கட்டுப்பாட்டை ஏற்க அரசுக்கு அதிகாரம் வழங்கும் விதிகளை உள்ளடக்கியது.
2023-ன் தொலைத் தொடர்பு சட்டம் இந்திய தந்தி சட்டம் (1885) மற்றும் 1933-ன் இந்திய வயர்லெஸ் டெலிகிராப் சட்டம் ஆகிய இரண்டையும் மாற்றும் புதிய சட்டம் தொலைத் தொடர்பு துறையில் கணிசமான தொழில்நுட்ப முன்னேற்றங்களை கொண்டு வரும்.
1, 2, 10 மற்றும் 30 ஆகிய பிரிவுகள் உள்பட புதிய தொலைத்தொடர்பு சட்டத்தின் குறிப்பிட்ட விதிகள் நாளை (26-ந்தேதி) முதல் நடைமுறைக்கு வரும் என்று அதிகாரப்பூர்வ அரசிதழில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
சட்டப்பிரிவுகள் 1, 2, 10 முதல் 30, 42 முதல் 44, 46, 47, 50 முதல் 58, 61 மற்றும் 62 வரையிலான விதிகள் நடைமுறைக்கு வரும்.
ஸ்பெக்ட்ரம் ஏலம் மற்றும் ஒதுக்கீடு குறிப்பிட்ட விதிமீறல்களை தீர்ப்பது மற்றும் இந்திய தொலைத் தொடர்பு ஒழுங்கு முறை ஆணைய சட்டம் 1997-ல் திருத்தங்கள் ஆகியவை நாளை முதல் நடைமுறைக்கு வராது.
தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், இந்தியாவின் தொழில்நுட்ப மேம்பாட்டாளர்களை மேம்படுத்துவதற்கும் தொலைத் தொடர்பு சேவைகள், நெட்வொர்க்குகள், பாதுகாப்பு போன்றவற்றிற்கான தர நிலைகள் அமைக்கும் அதிகாரங்ளை இந்த சட்டம் வகுத்துள்ளது.
இந்த சட்டத்தில் புதிய சிம்கார்டு, இணைப்புகள் பெறுவதற்கு ஆதார் எண் அவசியம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
- கள ஆய்வு செய்தும் இந்தக்குழு பரிந்துரைகளை தயாரித்து அதனை முறைப்படி மு.க.ஸ்டாலினிடம் வழங்கி உள்ளது.
- தமிழகத்தை சமத்துவ பூமியாக மாற்றி அமைத்திட தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும் .
சென்னை:
ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மாணவர்களிடம் சாதிய உணர்வுகளை அகற்றி சமத்துவமும், தோழமையும் கொண்டு அவர்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் காண வேண்டும் என்ற நோக்கத்தோடு தமிழ்நாடு அரசு ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி கே.சந்துரு தலைமையில் ஒரு குழுவினை நியமித்தது.
பல்வேறு அரசியல் கட்சிகள், சமூக இயக்கங்கள், பொதுநல அமைப்புக்கள் ஆகியவைகளிடம் இது தொடர்பான கருத்துக்களை பெற்றும், பிரச்சனைக்குரிய பகுதிகளுக்கு நேரடியாக சென்று கள ஆய்வு செய்தும் இந்தக்குழு பரிந்துரைகளை தயாரித்து அதனை முறைப்படி மு.க.ஸ்டாலினிடம் வழங்கி உள்ளது. இந்தக் குழுவின் பரிந்துரைகளை வரவேற்று, அவைகளை செயல்படுத்தி தமிழகத்தை சமத்துவ பூமியாக மாற்றி அமைத்திட தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- பாபநாசம் அணை பகுதியில் 18 மில்லிமீட்டர் மழை பெய்தது.
- இன்றும் காலை முதலே சாரல் மழை பெய்து வருகிறது.
நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் நேற்று பகலில் வெயில் வாட்டிய நிலையில், பிற்பகலில் திடீரென வானில் கருமேக கூட்டங்கள் திரண்டு மழை பெய்ய ஆரம்பித்தது.
இதனால் மாநகரின் பெரும்பாலான இடங்களில் பலத்த மழை பெய்தது. சந்திப்பு, வண்ணார்பேட்டை, பாளை, டவுன் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் சாரல் மழை பரவலாக பெய்தது.
மாவட்டத்தில் சேரன்மகா தேவி, கன்னடியன் கால்வாய் பகுதிகளில் மட்டும் சாரல் அடித்தது. களக்காடு, மூலக்கரைப்பட்டி உள்ளிட்ட பல இடங்களில் மதியத்திற்கு மேல் வானம் மேகமூட்டமாக காட்சியளித்தது.
மேலும் இதமான காற்றும் வீசியது. இதனால் குளிர்ச்சி யான சூழ்நிலை நிலவியது.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் நேற்று பலத்த மழை பெய்தது. பிற்பகலில் தொடங்கி இரவிலும் பெய்த மழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. அதிகபட்சமாக பாபநாசம் அணை பகுதியில் 18 மில்லிமீட்டர் மழை பெய்தது. சேர்வலாறில் 9 மில்லிமீட்டரும், மணிமுத்தாறில் 3.8 மில்லி மீட்டரும் மழை பதிவாகி உள்ளது.
மழை காரணமாக 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணை நீர்மட்டம் இன்று ஒரு அடி உயர்ந்து 88.50 அடியாக உள்ளது. சேர்வலாறு அணை நீர்மட்டம் நேற்று 98 அடியாக இருந்த நிலையில் இன்று 2 அடி உயர்ந்து 100 அடியை எட்டியுள்ளது. இந்த அணைகளுக்கு வினாடிக்கு 1,258 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது.
அணையில் இருந்து கார் பாசனத்திற்காக 804 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 118 அடி கொள்ளளவு கொண்ட மணிமுத்தாறு அணையில் 77.49 அடி நீர் இருப்பு உள்ளது. அந்த அணையில் 3.8 மில்லிமீட்டர் மழை பெய்தது.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் இன்றும் காலை முதலே சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் அணைகளின் நீர்மட்டம் மேலும் அதிகரிக்கும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதனால் கார் சாகுபடிக்கான பணியில் அவர்கள் ஆர்வமுடன் இறங்கி உள்ளனர்.
மேலும் மலைப்பகுதியில் பெய்து வரும் மழையால் பாபநாசம் அகஸ்தியர் அருவி, மணி முத்தாறு அருவி, களக்காடு தலையணை உள்ளிட்ட இடங்களில் தண்ணீர் ஆர்ப்பரித்து வருவதால், அதில் குளிக்க சுற்றுலாp பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
தமிழகத்தில் அதிக மழை பொழியும் பகுதியான மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள மாஞ்சோலையில் கனமழை பெய்துள்ளது. அங்குள்ள ஊத்து எஸ்டேட்டில் இன்று காலை வரை 6.8 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது. நாலுமுக்கில் 6.6 சென்டிமீட்டரும், காக்காச்சியில் 56 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது. மாஞ்சோலை யில் 4.8 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.
தென்காசி மாவட்டத்திலும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி யில் கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்கும் பெரும்பாலான அணைகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. குறிப்பாக ராமநதி அணை நீர்மட்டம் இன்று ஒரே நாளில் 3 அடி உயர்ந்துள்ளது. நேற்று 66 அடியாக இருந்த நிலையில், இன்று 69 அடியாக அதிகரித்துள்ளது.
அடவிநயினார் அணை நீர்மட்டம் இன்று ஒரே நாளில் 4 அடி உயர்ந்து 71 அடியாகவும், கருப்பாநதி அணை நீர்மட்டம் 5 அடி உயர்ந்து 30 அடியை கடந்துள்ளது. 36 அடி கொண்ட குண்டாறு அணை நீர்மட்டம் 33 அடியை எட்டியுள்ளது. இதனால் இன்னும் ஒருசில நாட்களில் அணை நிரம்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அணைகளின் நீர்பிடிப்பு பகுதியில் அதிகபட்சமாக அடவிநயினாரில் 23 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. கடனா மற்றும் ராமநதியில் தலா 10 மில்லிமீட்டரும், கருப்பாநதியில் 21 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது.
மாவட்டத்தில் ஆலங்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலையில் திடீர் சாரல் மழை பெய்தது. இரவிலும் விட்டு விட்டு சாரல் அடித்தது. செங்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளில் 4.8 மில்லிமீட்டர் மழை பதிவாகியது.
தூத்துக்குடியில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. அதே நேரம் அவ்வப்போது லேசான மேகமூட்டமும், காற்றும் வெயிலை தணித்து வந்தது. அதன்படி நேற்று மாலை 5 மணி அளவில் திடீரென மேகங்கள் திரண்டு பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்ய ஆரம்பித்தது. சுமார் 15 நிமிடம் நீடித்த இந்த மழையால் வெயிலின் தாக்கம் சற்று குறைந்தது.
- கோவை மதுக்கரையை சேர்ந்த சுப்பிமணி என்பவர் ஒப்பந்தமுறையில் பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை:
கோவை அருகே உள்ள பேரூரில் பேரூராட்சி சார்பில் வடக்கு ரதவீதியில் ரூ.71 லட்சத்தில் சாக்கடை வாருகால் அமைக்கும் பணி நடக்கிறது.
கோவை மதுக்கரையை சேர்ந்த சுப்பிமணி என்பவர் ஒப்பந்தமுறையில் பணிகளை மேற்கொண்டு வருகிறார். சாக்கடை வாருகால் அமைக்கும் பணியில் தேனியை சேர்ந்த வேல்முருகன்(வயது49) என்பவர் ஈடுபட்டிருந்தார்.
தற்போது சாலையோரத்தில் சாக்கடை வடிகால் அமைக்க குழி தோண்டப்பட்டு, கான்கிரீட் போடும் பணி நடந்து வருகிறது. தோண்டப்பட்ட குழியை அளவீடு செய்யும் பணி மற்றும் மண்ணை பொக்லைன் உதவியுடன் அகற்றும் பணி நடந்தது.
நேற்று மாலை பேரூர் கோவிலுக்கு வடக்கே ஆற்றுப்பாதைக்கு முன்பு தோண்டப்பட்ட குழியில் இறங்கி வேல்முருகன் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது தனியார் இடத்தை சுற்றி போடப்பட்டிருந்த கருங்கல்லால் ஆன சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது.
இதில் வேல்முருகன் இடிபாடுகளுக்குள் சிக்கி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.
இந்த சம்பவம் குறித்து வேல்முருகனின் மகன் மயில்சாமி பேரூர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார், அஜாக்கிரதையாக வேலையாட்களை பணியாற்ற வைத்து உயிரிழப்பை ஏற்படுத்தியதாக கட்டிட காண்டிராக்டர் செந்தில்குமார், மேஸ்திரி சுப்பிரமணி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து விசாரணையும் நடந்து வருகிறது.






