என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • 3 ஒருநாள் போட்டிகளிலும் தென் ஆப்பிரிக்கா பெண்கள் அணியை வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றது.
    • டி20 போட்டிகளுக்கான டிக்கெட் விலை 150 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    தென் ஆப்பிரிக்கா பெண்கள் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள், 1 டெஸ்ட், 3 டி20 போட்டிகளில் விளையாடுகிறது.

    அதில் முதலில் நடைபெற்ற 3 ஒருநாள் போட்டிகளிலும் தென் ஆப்பிரிக்கா பெண்கள் அணியை வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றது.

    அடுத்தாக டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஜூன் 28 ஆம் தேதி தொடங்கவுள்ளது.

    இந்நிலையில், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஜூன் 28ம் தேதி முதல் 1ம் தேதி வரை நடைபெறவுள்ள இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான மகளிர் டெஸ்ட் போட்டியை பார்க்க அனுமதி இலவசம் என தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது.

    இதேபோல், ஜூலை 5, 7, 9 ஆகிய தேதிகளில் நடைபெறும் டி20 போட்டிகளுக்கான டிக்கெட்டை, ஜூன் 29ம் தேதி PAYTM insider இணையத்தில் வாங்கி கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. டி20 போட்டிகளுக்கான டிக்கெட் விலை 150 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

     

    • 61 பேர் பலியான சம்பவத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து 61 பேர் பலியான சம்பவத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    திண்டுக்கல்லில் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சீனிவாசன், கிழக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான நத்தம் விசுவநாதன் ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்தில் திண்டுக்கல் சீனிவாசன் அதிமுக ஆட்சியிலேயே கள்ளச்சாராயம் காய்ச்சப்பட்டது என்று வெளிப்படையாக பேசியது பெரும் சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது.

    ஆர்ப்பாட்டத்தில் பேசும் போது "நான் வனத்துறை அமைச்சராக இருந்தபோது கல்வராயன்மலையில் எங்கு பார்த்தாலும் அடுப்பு எரிந்தது" என்று பேசியது அங்கு இருந்த அதிமுகவினர் இடையே பெரும் சர்ச்சை ஏற்படுத்தியது. அவர் பேசிய வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • வெறும் வார்த்தையாக அல்ல, ஆதாரங்களோடு தான் அவைக்குத் தெரிவிக்க விரும்புகின்றேன்.
    • ஏராளமான வேலை வாய்ப்புகளை உருவாக்கித் தந்துள்ளோம்.

    சென்னை:

    முதல்-அமைசசர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் இன்று 110-வது விதியின் கீழ் அறிக்கை ஒன்றை படித்தார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

    இளைஞர் நலனை, இளைஞர் எதிர்காலத்தை, இளைஞர்களின் மேன்மையை எப்போதும் மனதில் வைத்து திட்டங்களைத் தீட்டி வருவது திராவிட மாடல் ஆட்சியின் தனித்தன்மை. இளைய சக்தியை ஆக்கபூர்வமாகப் பயன்படுத்திக்கொள்ளும் வகையில், வேலை வாய்ப்புகளை உருவாக்குவதில் மிக மிகக் கவனமாக செயல்பட்டு வருகிறோம். அதனை அடிப்படையாகக் கொண்ட அறிவிப்பைத்தான் இப்போது வெளியிட விரும்புகிறேன்.

    வளமான அரசாக, அமைதியான அரசாக தமிழ்நாடு அரசு செயல்பட்டு வருகிறது. தொழில் வளம் நிறைந்த தமிழ்நாட்டை உருவாக்கிடவும், அதன்மூலம் நமது இளைஞர்கள் வேலை வாய்ப்புகளைப் பெற்றிடவும் பல்வேறு திட்டங்களைத் தீட்டி வருகிறோம். நமது மாணவச் செல்வங்களுக்குத் தரமான பள்ளிக் கல்வியையும் உயர்கல்வியையும் அளிக்கின்றோம்.

    அத்துடன் அவர்களது வேலைவாய்ப்புகளைப் பெருக்கிடும் வகையில் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளும் அளிக்கப்படுகின்றன. கல்வியின் மூலமாக ஒரு அறிவுசார் பொருளாதாரத்தை நாம் உருவாக்கி வருகிறோம்.

    இவற்றை மனதில் கொண்டு உருவாக்கப் பட்டவைதான் புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன், நான் முதல்வன் போன்ற திட்டங்கள். அடுத்த தேர்தலை அல்ல, அடுத்த தலைமுறையைப் பற்றி சிந்திக்கும் அரசுதான் நமது திராவிட மாடல் அரசு.

    கழக அரசு பொறுப்பேற்றதில் இருந்து, கடந்த 3 ஆண்டுகளில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம், ஆசிரியர் தேர்வு வாரியம் ஆகிய தேர்வு முகமைகள் வாயிலாக 32 ஆயிரத்து 774 நபர்களுக்குப் பல்வேறு அரசுத்துறைகளில் நேரடிப் பணி நியமனங்கள் வழங்கப்பட்டன.

    அதேபோல், உள்ளாட்சி அமைப்புகள், அரசுத் துறை நிறுவனங்கள் போன்ற பல்வேறு அரசு அமைப்புகளில் 32 ஆயிரத்து 709 இளைஞர்கள் பணிநியமனம் பெற்றனர். மொத்தம் 65 ஆயிரத்து 483 இளைஞர்களுக்கு கடந்த 3 ஆண்டுகளில் அரசுப் பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளது என்ற செய்தியை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

    அரசுத் துறைகளில் மட்டுமல்லாது, பெருந்தொழில் மற்றும் குறு, சிறு நிறுவனங்களின் மூலமாகவும் ஏராளமான வேலை வாய்ப்புகளை உருவாக்கித் தந்துள்ளோம்.

    நமது அரசு மேற்கொண்ட பல்வேறு முன்னெடுப்பு களின் காரணமாகவும், மிகச்சிறப்பான முறையிலே நடத்தி முடிக்கப்பட்ட உலக முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் கிடைக்கப் பெற்ற பெரும் முதலீடுகள் காரணமாகவும் லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகள் கடந்த 3 ஆண்டுகளில் ஏற்படுத்தப்பட்டுள்ளன. வெறும் வார்த்தையாக அல்ல, ஆதாரங்களோடு தான் இதனை இந்த அவைக்குத் தெரிவிக்க விரும்புகின்றேன்.

    தமிழ்நாட்டில் கடந்த 3 ஆண்டுகளில் அமைப்பு சார்ந்த தனியார் துறைகளில் உருவாக்கப்பட்ட வேலை வாய்ப்புகள் குறித்த புள்ளி விவரங்கள் ஒன்றிய அரசின் தொழிலாளர் வைப்பு நிதி நிறுவனத்தின் மூலம் பெறப்பட்டது.

    இது ஒன்றிய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின்கீழ் செயல்படும் ஓர் அமைப்பாகும். இந்த நிறுவனத்தின் தரவுகளின்படி, கடந்த 3 ஆண்டுகளில் மொத்தம் 77 லட்சத்து 78 ஆயிரத்து 999 இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது. அவர்களுக்குத் தொழிலாளர் வைப்பு நிதி கணக்குகளும் தொடங்கப்பட்டுள்ளன.

    இதுமட்டுமின்றி, என்னுடைய கனவுத் திட்டம் என்று நான் எப்போதும் பெருமையோடு குறிப்பிடக் கூடிய "நான் முதல்வன் திட்டம்" மூலமாகச் சிறப்பு பயிற்சிகள் தரப்பட்டு வருகிறது. இதன் மூலம் படித்த இளைஞர்களின் திறன்கள் மேம்படுத்தப்பட்டு வருகின்றது. இத்திட்டத்தின் மூலமாக இதுவரை, 3 லட்சத்து 6 ஆயிரத்து

    459 நபர்களுக்குத் தனியார் துறைகளில் வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அதேபோல, தமிழ்நாடு அரசின் தொழிலாளர் நலத்துறையின் மூலமாக நடத்தப்பட்ட சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்கள் மூலமாக கடந்த 3 ஆண்டுகளில் 2 லட்சத்து ஆயிரத்து 596 இளைஞர்களுக்கு தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு ஏற்படுத்தித் தரப்பட்டது.

    இந்த இரண்டையும் சேர்த்து, தமிழ்நாடு அரசின் முயற்சியினால், கடந்த 3 ஆண்டுகளில் மட்டும், மொத்தம் 5 லட்சத்து 8 ஆயிரத்து 55 தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்பதை பெருமையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

    'நம் இளைஞர்கள்தான் நம் பலம். அவர்கள்தான் நமது எதிர்கால வளத்திற்கு அடிப்படையானவர்கள்!' இதனை உணர்ந்த காரணத்தி னால், தமிழ்நாடு அரசு இந்த முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.

    அரசுப் பணியினை எதிர் நோக்கி இருக்கும் ஆயிரக் கணக்கான தமிழ்நாட்டு இளைஞர்களுக்குத் தற்போது ஒரு மகிழ்ச்சியான செய்தியினை பேரவையில் தெரிவித்துக் கொள்கின்றேன்.

    வரும் ஜனவரி 2026-க்குள், அதாவது இன்னும் 18 மாதங்களுக்குள் பல்வேறு அரசுப் பணியிடங்களுக்காக, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலமாக 17 ஆயிரத்து 595 பணியிடங்களும், ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாக 19 ஆயிரத்து 260 ஆசிரியப் பணியிடங்களும், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலமாக 3 ஆயிரத்து 41 பணியிடங்களும், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் மூலமாக 6 ஆயிரத்து 688 பணியிடங்களும் நிரப்பப்படும்.

    அதாவது வரும் 2026-ம் ஆண்டு ஜனவரி மாதத்துக்குள் மொத்தம் 46 ஆயிரத்து 584 பணியிடங்கள் நிரப்பப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். இதுதவிர, சமூக நலத்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை உள்ளிட்ட முக்கிய துறைகளில் காலியாக இருக்கக்கூடிய 30 ஆயிரத்து 219 பணியிடங்களும் நிரப்பப்படும்.

    இவற்றை மொத்தமாக சேர்த்துப் பார்க்கையில், 75,000-க்கும் மேற்பட்ட அரசுப் பணியிடங்கள் வரும் 2026-ம் ஆண்டு ஜனவரி மாதத்திற்குள் நிரப்பப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து அமைகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அரசு ஆஸ்பத்திரி பிரதான நுழைவு வாயில் முன்பு திரண்டு அங்கு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • நுழைவு வாயில் முன்பு கல்லூரி பஸ்கள் நிறுத்தப்பட்டன.

    சேலம்:

    சேலம் பள்ளப்பட்டி முனியப்பன் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் தினேஷ் (27). இவர் சேலம் கல்லாங்குத்து பகுதியில் நேற்று இரவு ஒரு சூப் கடைக்கு தகர சீட்டு அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது தகர சீட்டை எடுத்தபோது மேலே சென்று கொண்டிருந்த மின் கம்பியில் தகர சீட்பட்டு மின்சாரம் தாக்கி அவர் தூக்கி வீசப்பட்டார்.

    இதில் படுகாயம் அடைந்த அவரை மீட்டு அங்கு இருந்தவர்கள் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினார்.

    இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த உறவினர்கள் ஆஸ்பத்திரிக்கு வந்து அவரது உடலை பார்த்து கதறி அழுதனர். இந்த சம்பவம் ஆஸ்பத்திரியில் சோகத்தை ஏற்படுத்தியது. சம்பவம் குறித்து டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பலியான வாலிபர் தினேசுக்கு திருமணம் ஆகி சந்தியா (25) என்ற மனைவியும், 1½ வயதில் பெண் குழந்தையும் உள்ளனர்.

    மனைவி சந்தியா கையெழுத்து போட்டால் தான் தினேஷ் உடல் பிரேத பரிசோதனை செய்யப்படும். இதற்காக தினேஷ் உடல் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள பிரேத பரிசோதனை கூடத்தில் வைக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் தனது கணவர் உடலை வாங்க மறுத்து சந்தியா மற்றும் அவரது உறவினர்கள் 100-க்கும் மேற்பட்டோர் சேலம் அரசு ஆஸ்பத்திரி பிரதான நுழைவு வாயில் முன்பு திரண்டு அங்கு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அப்போது ஆஸ்பத்திரி வளாகத்தில் இருந்து அரசு நர்சிங் கல்லூரி மற்றும் அரசு மருத்துவ கல்லூரி பஸ் ஆகியவை வெளியே செல்வதற்காக புறப்பட்டு வந்தது. அப்போது நுழைவு வாயில் வரை வந்த பஸ்கள் நுழைவு வாயில் முன்பு மக்கள் அமர்ந்து போராட்டம் செய்ததால் பஸ்கள் செல்ல முடியவில்லை. இதனால் நுழைவு வாயில் முன்பு கல்லூரி பஸ்கள் நிறுத்தப்பட்டன.

    இது குறித்து தகவல் அறிந்ததும் சேலம் டவுன் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் ரமேஷ் கண்ணா தலைமையிலான போலீசார் அங்கு வந்து சந்தியா மற்றும் அவரது உறவினர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். அனைவரும் தர்ணா போராட்டத்தை கைவிடுமாறும், உங்களது கோரிக்கைகள் குறித்து பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தனர்.

    அப்போது சந்தியா கண்ணீர் மல்க கூறுகையில், எனக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. எனது கணவர் இறந்து விட்டதால் வருமானத்திற்கு வேறு வழியில்லை. எனவே இழப்பீடாக ரூ.30 லட்சம் சம்பந்தப்பட்ட ஓட்டல் உரிமையாளர் வழங்க வேண்டும். அப்போது தான் எனது கணவர் உடலை வாங்குவேன் என்றார்.

    இதனால் அவரிடம் தொடர்ந்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவத்தால் ஆஸ்பத்திரி பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தமிழக மாவட்டங்களில் தொடர்ந்து மழையானது பெய்து வருகிறது.
    • சென்னையில் ஒரு சில பகுதியில் மிதமான மழைக்கு வாய்ப்பு.

    தென் மேற்கு பருவ மழையானது கேரளாவில் தொடர்ந்து பெய்து வரும் நிலையில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள தமிழக மாவட்டங்களில் தொடர்ந்து மழையானது பெய்து வருகிறது.

    இந்நிலையில் நீலகிரி, கோவை, மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு நகரின் ஒரு சில பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.

    • சுதந்திர இந்தியாவில் இன்றைய நாள் கருப்பு நாள்.
    • நாட்டில் ஜனநாயகம் தோற்றுவிட்டதாகத்தான் அர்த்தம்.

    சென்னை:

    முன்னாள் கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள வீடியோ உரையில் கூறியிருப்பதாவது:-

    சுதந்திர இந்தியாவில் இன்றைய நாள் கருப்பு நாள். ஜனநாயகத்தின் குரல்வலையை நெறித்து அவசர நிலையை காங்கிரஸ் அமுல்படுத்திய தினம்.

    இன்று பாராளுமன்றத்தில் அரசியல் அமைப்பு சட்ட புத்தகத்தை வைத்து காங்கிரஸ் அரசியல் செய்கிறது. தி.மு.க.வும் அதற்கு துணைபோகிறது.

    அரசியல் அமைப்பு சட்டத்தை மதிக்காமல் நாட்டில் அவசர நிலையை இந்திரா பிரகடனப்படுத்தினார். பத்திரிகைகள் முடக்கப்பட்டன. தலைவர்களை கைது செய்தனர். யாரை எங்கு வைத்துள்ளார்கள் என்பதுகூட தெரியாத இருண்ட சூழ்நிலை நிலவியது.

    ஒரு நாட்டில் அவசர நிலை அமுல்படுத்தினால் அந்த நாட்டில் ஜனநாயகம் தோற்றுவிட்டதாகத்தான் அர்த்தம்.

    ஆனால் இன்று பிரதமர் மோடியை பார்த்து அரசியல் அமைப்பு சட்டத்தை மாற்றிவிடுவார் என்கிறார்கள். ஆனால் எனது புனிதநூல் எங்கள் அரசியல் அமைப்பு சட்ட புத்தகம்தான் என்று நம் நாட்டில் மட்டுமல்ல அமெரிக்க பாராளுமன்றத்திலும் மோடி முழங்கினார்.

    இன்று அரசியல் அமைப்பு சட்டத்தை பாதுகாக்கப் போவதாக காங்கிரஸ் கூச்சல் போடுகிறது. அதற்கு தி.மு.க.வும் துணைபோகிறது.

    அரசில் அமைப்பு சட்ட நகலை கிழித்து எறிந்து போராட்டம் நடத்தியவர்கள்தான் தி.மு.க.வினர். இதனால் வழக்கை சந்திக்க நேர்ந்தது. நாங்கள் அரசியல் அமைப்பு சட்ட நகலை எரிக்கவில்லை. வெறும் காகிதத்தைதான் எரித்தோம் என்று பல்டி அடித்தார் கருணாநிதி.

    அப்போதும் அரசியல் சட்டத்தை பாதுகாக்க குரல் கொடுத்தது பா.ஜனதா தலைவர்கள்தான். நாடு முழுவதும் ஜனதா, பா.ஜனதா, காமராஜ் தொண்டர்கள் கைது செய்யப்பட்டார்கள்.

    எனது தந்தை காமராஜரின் பழைய காங்கிரசில் இருந்தார். 6 மாதங்கள் அவர் சிறையில் இருந்தார். நான் பள்ளி மாணவியாக இருந்தேன். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அம்மாவை கவனிக்க யாருமில்லை. ஆஸ்பத்திரியில் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டிருந்த போது நானே அழுதுகொண்டு ஆபரேசனுக்கு கையெழுத்துபோட்டுக் கொடுத்தேன். அந்த நிகழ்வுகள்தான் காங்கிரசை வெறுக்க வைத்தது.

    இந்திய ஜனநாயகத்தையும், அரசியல் அமைப்பு சட்டத்தையும் பாதுகாப்பது மோடி அரசு. ஆனால் அதன் குரல்வளையை நெறித்த காங்கிரசையும், அதற்கு துணைபோன தி.மு.க.வையும் புறக்கணிப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 5 பேருக்கும் தலா 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.1000 அபராதமும் விதித்துதீர்ப்பளித்தார்.
    • போலீசார் குற்றவாளிகள் 5 பேரையும் புழல் சிறையில் அடைத்தனர்.

    கும்மிடிப்பூண்டி:

    கும்மிடிப்பூண்டி அடுத்த ராகவரெட்டிமேடு கிராமத்தைச்சேர்ந்தவர் திருச்செல்வம். இவர் கவரைப்பேட்டை அடுத்த புதுவாயல் பகுதியில் உள்ள அரசு மதுபானக்கடையின் சூப்பர்வைசராக பணியாற்றி வந்தார். கடந்த 2017-ம் ஆண்டு மே மாதம் 6-ந்தேதி அவர் மதுக்கடையில் விற்பனையான பணம் ரூ. 12 லட்சத்தை எடுத்துக் கொண்டு நள்ளிரவில் மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.

    கும்மிடிப்பூண்டி பஜார் வழியே சென்ற போது காரில் வந்த மர்ம கும்பல் திருச்செல்வத்தை கத்தியால் தாக்கி, ரூ. 12 லட்சத்தை பறித்து சென்றனர்.

    இது குறித்து கும்மிடிப்பூண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து சோழவரத்தை சேர்ந்த அருண், மீஞ்சூரை சேர்ந்த ஜெயசீலன் என்கிற கார்த்திக், வன்னியம்பாக்கத்தை சேர்ந்த அருண், மதன்குமார், புழலைச்சேர்ந்த பக்ருதீன் ஆகிய 5 பேரை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை பொன்னேரி கூடுதல் சார்பு நீதிமன்றத்தில் கடந்த 7 வருடங்களாக நடைபெற்று வந்தது.

    வழக்கை விசாரித்த நீதிபதி பிரேமாவதி தீர்ப்பளித்தார். அப்போது குற்றம் நிரூபிக்கப்பட்டதால் குற்றவாளிகள் அருண், கார்த்திக் உள்பட 5 பேருக்கும் தலா 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.1000 அபராதமும் விதித்துதீர்ப்பளித்தார். அரசு தரப்பில் வக்கீல் பல்லவன் வாதாடினார்.

    இதைத்தொடர்ந்து இன்ஸ்பெக்டர் வடிவேல் முருகன் தலைமையிலான கும்மிடிப்பூண்டி போலீசார் குற்றவாளிகள் 5 பேரையும் புழல் சிறையில் அடைத்தனர்.

    • ஜூலை 1-ம் நாள் முதல் சென்னை, அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரியில் அடிப்படைப் பயிற்சி தொடங்க உள்ளது.
    • நிகழ்ச்சியில் அமைச்சர் தங்கம் தென்னரசு, தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, மனிதவள மேலாண்மைத் துறை செயலாளர் க.நந்தகுமார் கலந்து கொண்டனர்.

    சென்னை:

    தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தொகுதி-I-க்கான பணிகளில் மொத்தம் 95 பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், 14 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

    பணிநியமன ஆணைகள் பெற்றுக்கொண்ட பயிற்சி அலுவலர்களுக்கு வரும் ஜூலை 1-ம் நாள் முதல் சென்னை, அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரியில் அடிப்படைப் பயிற்சி தொடங்க உள்ளது.

    நிகழ்ச்சியில் அமைச்சர் தங்கம் தென்னரசு, தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, மனிதவள மேலாண்மைத் துறை செயலாளர் க.நந்தகுமார் கலந்து கொண்டனர்.

    • ஆதிதிருவரங்கம் அரங்கநாத சுவாமி கோவில் என்பது அரங்கநாதனின் மச்சாவதாரம் கொண்ட முதல் கோவிலாகும்.
    • பசுபதீஸ்வரர் திருக்கோவிலுக்கு 1992-ம் ஆண்டு இறுதியாக குடமுழுக்கு நடைபெற்றது.

    சென்னை:

    இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு சட்டப்பேரவையில் இன்று ரிஷி வந்தியம் சட்டமன்ற உறுப்பினர் க.கார்த்திகேயன் எழுப்பிய வினாக்களுக்கு பதிலளித்து பேசினார்.

    கேள்வி: ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றியம், ஆதி திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு தங்கும் விடுதி கட்ட அரசு முன்வருமா?

    அமைச்சர் பதில்: ஆதிதிருவரங்கம் அரங்கநாத சுவாமி கோவில் என்பது அரங்கநாதனின் மச்சாவதாரம் கொண்ட முதல் கோவிலாகும். கோவிலுக்கு ரூ.10 கோடி மதிப்பீட்டில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு நடைபெற்று வருகின்றன. உறுப்பினர் கோரிய பக்தர்கள் தங்கும் விடுதியானது ரூ.86.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டுவதற்கு ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு வருகின்ற 16.07.2024 அன்று ஒப்பந்தப்புள்ளிகள் திறக்கப்பட்டு பணி இறுதி செய்யப்படும்.

    அடுத்த மாதம் இறுதிக்குள் பக்தர்கள் தங்கும் விடுதி கட்டுவதற்கு சிறப்பு பூஜைகள் செய்து பணிகளை தொடங்கிக் கொள்ளலாம். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகு 17 கோவில்களில் பக்தர்கள் தங்கும் விடுதி ரூ.70 கோடி மதிப்பீட்டில் கட்டும்பணி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

    கேள்வி: கள்ளக்குறிச்சி வட்டம் வரஞ்சரம் ஊராட்சியில் அமைந்துள்ள பழமை வாய்ந்த பசுபதீசுவரர் கோவிலை புனரமைத்து குடமுழுக்கு நடத்த அமைச்சர் ஒப்புதல் தருவாரா?

    அமைச்சர் பதில்: இந்த பசுபதீஸ்வரர் திருக்கோவிலுக்கு 1992-ம் ஆண்டு இறுதியாக குடமுழுக்கு நடைபெற்றது. 1,000 ஆண்டு பழமையான கோவில் பட்டியலில் இந்த கோவிலையும் இணைத்து அதற்கு தொல்லியல் துறை, மண்டலக்குழு மாநில வல்லுனர் குழு ஒப்புதல் பெறப்பட்டிருக்கின்றது. மதிப்பீடு தயார் செய்யப்பட்டு விரைவில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படும்.

    கேள்வி: சின்னசேலம் வட்டம் கூகையூர் ஊராட்சியில் அமைந்துள்ள சொர்ண புரீஸ்வரர் கோவில் மிகவும் பழமை வாய்ந்த, ஆயிரக்கணக்கான பக்தர்கள் தினமும் வந்து செல்கின்ற ஒரு கோவிலாகும். கோவிலை புனரமைத்து குடமுழுக்கு செய்யப்படுமா?

    அமைச்சர் பதில்: சொர்ணபுரீஸ்வரர் கோவிலுக்கு 2008-ம் ஆண்டு இறுதியாக குடமுழுக்கு நடைபெற்றது. தற்போது அந்த கோவிலுக்கும் மாநில குழு மற்றும் மண்டல குழு ஒப்புதல் பெறப்பட்டு மதிப்பீடுகள் தயார் செய்யப்பட்டு வருகின்றன. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு தான் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட வருமானம் இல்லாத கோவில்களுக்கு ஆண்டுதோறும் ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்து தந்து, திருப்பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார். இந்தாண்டும் ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்து தந்துள்ளார். அதன்படி இந்த கோவிலின் திருப்பணி இந்தாண்டு எடுத்துக் கொள்ளப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • கடந்த காலங்களில் தற்போது முதலமைச்சராக உள்ள மு.க.ஸ்டாலின், அவரது சகோதரி கனிமொழி எம்.பி. ஆகியோர் டாஸ்மாக் கடைக்கு எதிராக கருப்பு உடை அணிந்து போராட்டம் நடத்தினார்கள்.
    • சம்பவத்திற்கு பொறுப்பேற்று மது விலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் முத்துசாமி உடனடியாக பதவி விலக வேண்டும்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்து 59 பேர் பலியாகினர். இந்த சம்பவம் தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். இதற்கு முழுப்பொறுப்பேற்று முதலமைச்சர் மு,க.ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி அ.தி.மு.க. சார்பில் தமிழகம் முழுவதும் நேற்று ஆர்ப்பாட்டம். அதே போல பா.ஜ.க.வினரும் நேற்று முன்தினம் போராட்டம் நடத்தினர்.

    இந்த நிலையில் போதை இல்லாத தமிழகத்தை உருவாக்க தவறிய ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசின் நிர்வாக சீர்கேட்டை கண்டித்து தே.மு.தி.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பங்கேற்று கண்டன உரையாற்றினார். இதில் அவர் பேசியதாவது,

    கள்ளக்குறிச்சி என்றாலே தற்போது கள்ளச்சாராய சாவால் கண்ணீர் மாவட்டமாக மாறியுள்ளது. கடந்த காலங்களில் தற்போது முதலமைச்சராக உள்ள மு.க.ஸ்டாலின், அவரது சகோதரி கனிமொழி எம்.பி. ஆகியோர் டாஸ்மாக் கடைக்கு எதிராக கருப்பு உடை அணிந்து போராட்டம் நடத்தினார்கள்.

    ஆனால், தற்போது என்ன நடக்கிறது? கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயத்திற்கு பல பேர் பலியாகி உள்ளனர். ஆனால், முதலமைச்சர் நேரில் கூட வந்து ஆறுதல் கூறவில்லை. இந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்று மது விலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் முத்துசாமி உடனடியாக பதவி விலக வேண்டும்.

    கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். மேலும், இந்த வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும். இது தொடர்பாக தமிழக கவர்னரை விரைவில் சந்தித்து பேச உள்ளேன். தமிழக கவர்னரும், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவிடம் எடுத்துக்கூறி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • இருவரும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக தெரிகிறது.
    • காசிமேடு மீன்பிடி துறைமுக போலீசில் புகார் செய்யப்பட்டது.

    ராயபுரம்:

    காசிமேடு பல்லவன் நகரை சேர்ந்தவர் சுனில் என்கிற சுண்டு(23). மீன்பிடி துறைமுகத்தில் கூலி வேலை செய்து வருகிறார். இவர் அதே பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவரை காதலித்தார். இவர்கள் இருவரும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக தெரிகிறது.

    ஆனால் இளம்பெண்ணின் பெற்றோர் சுனிலின் நடவடிக்கை சரியில்லாத காரணத்தாலும் இவர் மீது வழக்குகள் உள்ளதாலும் மகளை திருமணம் செய்து கொடுக்க மறுத்து உள்ளனர். பின்னர் இளம்பெண்ணும் சுனிலிடம் பழகுவதை நிறுத்தியதாக கூறப்படுகிறது.

    இதைத்தொடர்ந்து கடந்த பிப்ரவரி மாதம் இளம்பெண்ணுக்கும் வேறொரு வாலிபருக்கு திருமணம் நடந்தது. இதனால் காதலித்த பெண்ணை திருமணம் செய்து கொடுக்கவில்லை என்று சுனில் ஆத்திரத்தில் இருந்தார். நேற்று நள்ளிரவில் சுனில் தனது நண்பர்களுடன் காதலியின் வீட்டுக்கு சென்று ரகளையில் ஈடுபட்டனர். அவர்கள் வீட்டின் ஜன்ல்கண்ணாடிகளை உடைத்து சூறையாடினர்.

    மேலும் அங்கு நிறுத்தப்பட்ட இருந்த மோட்டார் சைக்கிள்களையும் அடித்து உடைத்தனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    இதுகுறித்து காசிமேடு மீன்பிடி துறைமுக போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து சுனில் மற்றும் அவரது நண்பர்களான அதே பகுதியை சேர்ந்த விக்னேஷ், சர்மா, குப்புசாமி, சஞ்சய் ,சுபாஷ், லிவிங்ஸ்டன் மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய 8 பேரை கைது செய்தனர். பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். சிறுவனை புரசைவாக்கம் கெல்லீசில் உள்ள சீர்திருத்தப் பள்ளியில் சேர்த்தனர்.

    • கள்ளச்சாராய சம்பவத்தை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும். சி.பி.ஐ. விசாரித்தால் மட்டுமே நியாயமாக விசாரணை நடைபெறும்.
    • ஆளுங்கட்சியினர் ஆதரவு இல்லாமல் கள்ளச்சாராயம் விற்பனை நடைபெற வாய்ப்பு இல்லை.

    சென்னை:

    கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.பி.க்கள் இன்று கவர்னரை சந்தித்து கள்ளச்சாராயம் விவகாரம் தொடர்பாக மனு அளித்தனர்.

    இதன்பின் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி,

    * காவல் நிலையம் அருகே கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

    * அரசு அலுவலகங்கள் நிறைந்த மையப்பகுதியில் கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்படுகிறது.

    * கள்ளச்சாராயம் அருந்தியவர்களுக்கு மருத்துவமனையில் முதலில் சிகிச்சை மறுக்கப்பட்டுள்ளது.

    * கள்ளக்குறிச்சி சம்பவத்திற்கு பொறுப்பேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும்.

    * கள்ளச்சாராய சம்பவத்தை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும். சி.பி.ஐ. விசாரித்தால் மட்டுமே நியாயமாக விசாரணை நடைபெறும்.

    * ஆளுங்கட்சியினர் ஆதரவு இல்லாமல் கள்ளச்சாராயம் விற்பனை நடைபெற வாய்ப்பு இல்லை.

    * மரக்காணம் கள்ளச்சாராய வழக்கை சிபிசிஐடி விசாரித்தது. அது பலனளிக்கவில்லை.

    * தற்போது நடைபெறும் கள்ளச்சாராய ரெய்டுகளை முன்கூட்டியே செய்திருக்கலாம்.

    * வனத்துறை அதிகாரிகளிடமும் விசாரணை நடத்த வேண்டும். வனத்துறை அதிகாரிகளுக்கு தெரியாமல் கள்ளச்சாராயம் காய்ச்ச வாய்ப்பு இல்லை.

    * ஒரு நபர் விசாரணை ஆணையம் மூலம் நியாயம் கிடைப்பது சந்தேகம்தான்.

    * உளவுத்துறை தோல்வி அடைந்து விட்டதா?

    * போதைப்பொருட்கள் நிறைந்த மாநிலமாக தமிழகம் மாறியுள்ளது.

    * மாநில போலீசார் விசாரித்தால் நியாயம் கிடைக்காது.

    * எனக்கு எதிரான வழக்கில், ஆர்.எஸ். பாரதி சி.பி.ஐ. விசாரணை கோரவில்லை. சிபிஐ விசாரிக்க வேண்டும் என்ற உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தான் உசச்சநீதிமன்றம் சென்றேன்.

    * அதிமுக ஆட்சியில் கள்ளச்சாராயம் விற்பனை நடந்ததற்கு என்ன ஆதாரம் உள்ளது?

    இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.

    ×