search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tamil Nadu Cricket Association"

    • தமிழ்நாட்டில் இருந்து 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் முதல் வீரர் என்ற சாதனையை அஸ்வின் படைத்தார்
    • அனில் கும்ப்ளேவிற்கு பின் 500 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வீரர் என்ற சாதனையை அஸ்வின் படைத்தார்

    தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் சேப்பாக்கம் மைதானத்தில் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 100 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 500 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்த அஸ்வினுக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது.

    அதில், அஷ்வினுக்கு ரூ.1 கோடி பரிசும், தங்க நாணயங்கள் மூலம் 500 என வடிவமைக்கப்பட்ட நினைவுப் பரிசும், செங்கோலும் வழங்கி தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் கௌரவித்தது.

    இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடியதன் மூலமாக தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய வீரர் என்ற சாதனையை படைத்தார். இந்தியாவில் இருந்து 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் 14வது வீரர் என்ற பெருமையையும், தமிழ்நாட்டில் இருந்து 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் முதல் வீரர் என்ற சாதனையையும் அஸ்வின் படைத்தார்.

    அதுமட்டுமல்லாமல் இங்கிலாந்து அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் கிராலியின் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலமாக டெஸ்ட் கிரிக்கெட்டில் 500வது விக்கெட்டை வீழ்த்தினார் அஸ்வின். இதன் மூலமாக அனில் கும்ப்ளேவிற்கு பின் 500 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வீரர் என்ற சாதனையை அஸ்வின் படைத்தார்.

    அஸ்வினின் இந்த சாதனையை பாராட்டும் வகையில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பாக அஸ்வின் மற்றும் அவரது குடும்பத்தினர் கவுரவிக்கப்பட்டுள்ளனர். இந்த விழாவில் ரவிச்சந்திரன் அஸ்வின், அவர் மனைவி பிரீத்தி, இரு மகள்கள் கலந்து கொண்டு பரிசினை பெற்று கொண்டனர்.

    இந்நிகழ்வில், ஐசிசி முன்னாள் தலைவர் ஸ்ரீனிவாசன், இந்திய முன்னாள் பயிற்சியாளர் அனில் கும்ப்ளே, சிஎஸ்கே சிஇஓ காசி விஸ்வநாதன், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம்.தலைவர் அசோக் சிகாமணி, முன்னாள் வீரர் ஸ்ரீகாந்த் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு அஸ்வினுக்கு பாராட்டு தெரிவித்தனர்.

    இந்நிகழ்வில் பேசிய அஷ்வின், "2008-ல் ஐ.பி.எல் தொடர் தொடங்கப்பட்டது. பல கோடிகள் முதலீட்டுடன் சென்னை அணி உள்ளே இறங்கியது. அந்த அணிக்கான வீரர்களைத் தேர்வு செய்யும் பணி நடந்து கொண்டிருந்தது. அப்போது நான் இந்தியா சிமெண்ட்ஸூக்கு எதிரான போட்டி ஒன்றில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தேன்.

    அன்று மாலை நடந்த பரிசளிப்பு விழாவில் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் அவர்கள், அஷ்வின் சிறப்பாக விளையாடினாய், அஷ்வினை சிஎஸ்கே டீமில் எடுக்கிறோம் தானே, எடுத்துட்டிங்களா என சிஎஸ்கே நிர்வாகி ஒருவரைப் பார்த்து கேட்டுவிட்டார். அங்கிருந்துதான் சென்னை அணியில் என்னுடைய பயணம் தொடங்கியது.

    அந்தளவுக்கு முக்கியமான தருணம் அது. 2013-ல் ஒரு தொடரின் போது என்னை அணியிலிருந்து ட்ராப் செய்யும் முடிவில் இருந்தார்கள். டோனிதான் 'அவர் கடந்த தொடரில் சிறப்பாக ஆடியிருக்கிறார் எனக் கூறி எனக்காக இயன்றளவுக்கு ஆதரவு கொடுத்து அணியில் எடுத்தார்.

    நாளை நான் உயிரோடு இல்லையென்றாலும் என்னுடைய ஆன்மா இந்த சேப்பாக்கத்தை சுற்றிக்கொண்டேதான் இருக்கும். அந்தளவுக்கு இந்த இடம் எனக்கு முக்கியமானது" என அவர் தெரிவித்தார்.

    • கோவை, சேலம் உள்பட 4 இடங்களில் நடக்கிறது.
    • இந்த போட்டியில் கோப்பையை வெல்லும் அணிக்கு ரூ.3 லட்சமும், 2-வது இடத்தை பிடிக்கும் அணிக்கு ரூ.2 லட்சமும், ஆட்டநாயகனுக்கு ரூ.10 ஆயிரமும், தொடர்நாயகனுக்கு ரூ.25 ஆயிரமும் வழங்கப்படும்.

    சென்னை:

    'தென்இந்திய கிரிக்கெட்டின் தந்தை' என்று அழைக்கப்பட்ட மறைந்த புச்சிபாபு நினைவாக அகில இந்திய அழைப்பு கிரிக்கெட் போட்டி (4 நாள் ஆட்டம்) வருகிற 15-ந்தேதி முதல் அடுத்த மாதம் (செப்டம்பர்) 11-ந்தேதி வரை நெல்லை, கோவை, சேலம், நத்தம் ஆகிய இடங்களில் நடக்கிறது. உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்காக சென்னை சேப்பாக்கம் மைதானம் தயார்படுத்தப்பட்டு வருவதால் முதல்முறையாக புச்சி பாபு கிரிக்கெட் சென்னைக்கு வெளியே நடத்தப்படுகிறது. 6 ஆண்டுக்கு பிறகு திரும்பும் இந்த போட்டியில் 12 அணிகள் பங்கேற்கின்றன. அவை 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவர் லெவன், இந்தியன் ரெயில்வே, திரிபுரா, 'பி' பிரிவில் அரியானா, பரோடா, மத்திய பிரதேசம், 'சி' பிரிவில் மும்பை, டெல்லி, ஜம்மு-காஷ்மீர், 'டி' பிரிவில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்க லெவன் கேரளா, பெங்கால் ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். இதன் முடிவில் 4 பிரிவிலும் முதலிடத்தை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும்.

    வருகிற 15-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை நடக்கும் தொடக்க ஆட்டத்தில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவர் லெவன்- இந்தியன் ரெயில்வே (இடம்: கோவை), அரியானா-பரோடா (நத்தம்), மும்பை-டெல்லி (சேலம்), தமிழ்நாடு கிரிக்கெட் சங்க லெவன்- கேரளா (நெல்லை) ஆகிய அணிகள் மோதுகின்றன.

    இறுதிப்போட்டி கோவையில் (செப்.8-11) அரங்கேறுகிறது. இந்த போட்டியில் கோப்பையை வெல்லும் அணிக்கு ரூ.3 லட்சமும், 2-வது இடத்தை பிடிக்கும் அணிக்கு ரூ.2 லட்சமும், ஆட்டநாயகனுக்கு ரூ.10 ஆயிரமும், தொடர்நாயகனுக்கு ரூ.25 ஆயிரமும் வழங்கப்படும்.

    இந்த தகவலை தமிழ்நாடு கிரிக்கெட் சங்க செயலாளர் ஆர்.ஐ. பழனி சென்னையில் நேற்று தெரிவித்தார். அப்போது. இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ஸ்ரீகாந்த், தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவர் அசோக் சிகாமணி, பொருளாளர் ஸ்ரீனிவாசராஜ், உதவி செயலாளர் டாக்டர் பாபா, சென்னை சூப்பர் கிங்ஸ் தலைவர் செயல் அதிகாரி காசிவிஸ்வநாதன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

    • தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் பெண்களுக்கான 20 ஓவர் லீக் கிரிக்கெட் போட்டி சென்னையில் 26-ந் தேதி தொடங்குகிறது.
    • இந்த போட்டிக்கான ஒவ்வொரு அணிகளிலும் தலா 15 வீராங்கனைகள் இடம் பெறுவார்கள்.

    சென்னை:

    தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் இந்த ஆண்டுக்கான (2023-24) பெண்கள் 20 ஓவர் மற்றும் 50 ஓவர் லீக் கிரிக்கெட் போட்டி நடத்தப்படுகிறது. பிரேயர் கோப்பைக்கான இந்த போட்டி சென்னை செங்குன்றத்தில் உள்ள ஸ்டேக் மற்றும் கேளம்பாக்கத்தில் உள்ள ஜூனியர் சூப்பர் கிங்ஸ் அகாடமி மைதானங்களில் நடக்கிறது.

    இதில் பெண்களுக்கான 20 ஓவர் லீக் கிரிக்கெட் போட்டி வருகிற 26-ந் தேதி தொடங்குகிறது. 29-ந் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில் கிரீன் இன்வாடெர்ஸ், சில்வர் ஸ்டிரைக்கர்ஸ், பிங்க் வாரியர்ஸ், புளூ அவெஞ்சர்ஸ், எல்லோ சேலஞ்சர்ஸ், ரெட் ரேஞ்சர்ஸ், ஆரஞ்ச் டிராகன்ஸ், பர்பிள் பிளாசர்ஸ் ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன.

    இந்த அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் தலா 4 அணிகள் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதலிடம் பிடிக்கும் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும். தினசரி 2 லீக் ஆட்டங்கள் நடைபெறுகிறது. இதில் முதல் ஆட்டம் காலை 8.45 மணிக்கும், 2-வது ஆட்டம் பகல் 12.45 மணிக்கும் தொடங்கி நடைபெறும்.

    இதேபோல் பெண்களுக்கான 50 ஓவர் கிரிக்கெட் போட்டி ஜூலை 1-ந் தேதி முதல் 10-ந் தேதி வரை அரங்கேறுகிறது. மேற்கண்ட 2 மைதானங்களில் நடைபெறும் இந்த போட்டியில் 20 ஓவர் போட்டியில் ஆடும் 8 அணிகளும் அப்படியே கலந்து கொள்கின்றன. இந்த போட்டியிலும் லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்குள் நுழையும். தினசரி 2 லீக் ஆட்டங்கள் நடைபெறுகிறது. இதில் முதல் ஆட்டம் காலை 9 மணிக்கும், 2-வது ஆட்டம் காலை 9.15 மணிக்கு தொடங்கி நடைபெறும். போட்டியில் வெற்றி பெறும் அணிகளுக்கு பரிசு கோப்பை மற்றும் சிறந்த வீராங்கனைகளுக்கு விருது வழங்கப்படும்.

    இந்த போட்டிக்கான ஒவ்வொரு அணிகளிலும் தலா 15 வீராங்கனைகள் இடம் பெறுவார்கள். இதில் 15, 19, 23 வயதுக்கு உட்பட்ட வீராங்கனைகள் மற்றும் சீனியர்கள் இடம் பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டியின் முடிவில் 15, 19, 23 வயதுக்கு உட்பட்ட மற்றும் சீனியர் பெண்களுக்கான தமிழக அணி தேர்வு செய்யப்படும்.

    இந்த தகவலை தமிழ்நாடு கிரிக்கெட் சங்க இணைசெயலாளர் கே.சிவக்குமார் சென்னையில் நேற்று நிருபர்களிடம் தெரிவித்தார். அப்போது தமிழ்நாடு கிரிக்கெட் சங்க பொருளாளரும், பிரேயர் இண்டர்நேஷனல் நிறுவன தலைவருமான ஸ்ரீனிவாசராஜ், நிதி இயக்குனர் ஸ்ரீராஜன், கிரிக்கெட் ஆலோசனை கமிட்டி உறுப்பினர் சுதா ஷா ஆகியோர் உடனிருந்தனர்.

    ×