என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • இந்தியாவிலேயே 2வது பெரிய பொருளாதார மாநிலமாக தமிழ்நாடு உள்ளது.
    • 2022-ம் ஆண்டில் ஆண்டிற்கான ஏற்றுமதி குறியீட்டில் இந்தியாவிலேயே தமிழ்நாடு நம்பர் 1 மாநிலமாக முன்னேற்றம் கண்டுள்ளது.

    சென்னை:

    சட்டசபையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சில அறிவிப்புகளை வெளியிட்டார். அதன் விவரம் வருமாறு:-

    * திராவிட மாடல் ஆட்சி அமைந்த பிறகு தமிழ்நாடு அனைத்து துறைகளிலும் வளர்ந்து வருகிறது. இதில் முதன்மையானது தொழில் துறை.

    * உலகம் முழுவதும் இருந்து பல தொழில் நிறுவனங்கள் தமிழகத்திற்கு தொழில் தொடங்க வருகிறார்கள்.

    * இந்தியாவிலேயே 2வது பெரிய பொருளாதார மாநிலமாக தமிழ்நாடு உள்ளது.

    * 2022-ம் ஆண்டில் ஆண்டிற்கான ஏற்றுமதி குறியீட்டில் இந்தியாவிலேயே தமிழ்நாடு நம்பர் 1 மாநிலமாக முன்னேற்றம் கண்டுள்ளது.

    * புத்தொழில் வளர்ச்சியில் இந்தியாவில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது.

    * மின் வாகனங்கள் உற்பத்தியில் ஓசூர் முக்கிய பங்காற்றி வருகிறது.

    * ஓசூரில் விமான நிலையம் அமைப்பது அவசியம் என அரசு கருதுகிறது.

    * ஓசூரில் 2,000 ஏக்கர் பரப்பளவில் பன்னாட்டு விமான நிலையம் அமைக்கப்படும். ஆண்டுக்கு 3 கோடி பயணிகள் வந்து செல்லும் வகையில் இந்த விமான நிலையம் அமைக்கப்படவுள்ளது.

    * கோவையில் அறிவிக்கப்பட்ட நூலக கட்டுமான பணி விரைவில் தொடங்கும்.

    * திருச்சியில் கலைஞர் பெயரில் நூலகம் மற்றும் ஆராய்ச்சி மையம் அமைக்கப்படும் என்றார்.

    • இன்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காட்சியளிக்கிறது.
    • குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் புறநகர் பகுதிகளான களக்காடு, மூலக்கரைப்பட்டி, சேரன்மகாதேவி, வீரவநல்லூர், நாங்குநேரி, ராதாபுரம், அம்பை உள்ளிட்ட இடங்களில் நேற்று பரவலாக சாரல் மழை பெய்தது.

    ஒரு சில இடங்களில் இரவு முழுவதும் விட்டு விட்டு மழை பெய்தது. மாநகரிலும் பரவலாக சாரல் மழை பெய்து வருகிறது. இன்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காட்சியளிக்கிறது. இதனால் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது.

    மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் 4 நாட்களாக பெய்து வரும் கனமழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. பிரதான அணையான 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணைக்கு நேற்று வரை 2800 கனஅடி வரை தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில், நேற்று நள்ளிரவு வரை சுமார் 18 மில்லிமீட்டர் மழை கொட்டியதால் இன்று காலை நீர் வரத்து அதிகரித்து 4912 கனஅடியாக உள்ளது.

    அணை நீர்மட்டம் இன்று ஒரே நாளில் சுமார் 6 அடி உயர்ந்து 97.15 அடியை எட்டியுள்ளது. சுமார் 5 ஆயிரம் கன அடி தண்ணீர் வருவதால் ஓரிரு நாட்களில் அணை கொள்ளளவு 100 அடியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சேர்வலாறு அணை நீர்மட்டம் இன்று 7 அடி உயர்ந்து 112.53 அடியை எட்டியுள்ளது.

    கடந்த 2 நாட்களில் அணை நீர் இருப்பு சுமார் 13 அடி அதிகரித்துள்ளது. 118 அடி கொண்ட மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 78.44 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1033 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அந்த அணையின் நீர்பிடிப்பு பகுதியில் 14 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.

    கொடுமுடியாறு அணை நீர்மட்டம் தனது முழு கொள்ளளவை எட்டுவதற்கு இன்னும் 2 அடி மட்டுமே நீர் தேவைப்படுகிறது. 52.50 அடி கொண்ட அந்த அணையில் 50.50 அடி நீர் இருப்பு உள்ளது. கன்னடியன் கால்வாய் பகுதியில் 12.4 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது.

    பாபநாசம் அணை நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருவதால், கார் பருவ சாகுபடியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கனவே அணையில் இருந்து பாசனத்திற்காக திறக்கப்பட்டுள்ள தண்ணீர் வழக்கத்திற்கு மாறாக விரைவாகவே பாளை யங்கால்வாய் வரையிலும் வந்து சேர்ந்துவிட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சியுடன் பணியை தொடங்கி உள்ளனர்.

    வழக்கமாக பாளை யங்கால்வாய்க்கு தாமதமாக தண்ணீர் வரும். இதனால் ஒரு போகம் மட்டுமே நெல் விளைவிக்க முடியும். ஆனால் இந்த முறை 2 போகம் நெல் விளையும் என்பதால் விவசாயிகள் துரிதமாக நடவு பணி செய்து வருகின்றனர்.

    மாநகரை கடந்து ஏராளமான பகுதிகளில் தரிசு நிலங்களை விவசாயத்திற்கு பண்படுத்தும் உழவு பணி முழுவீச்சில் நடக்கிறது. மாவட்டம் முழுவதும் சுமார் 40 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நெல் நடவு பணிகள் நடந்து வருகிறது.

    தென்காசி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை வேகம் எடுத்துள்ள நிலையில் மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்து வரும் கனமழையால் அணைகளுக்கு நீர் வரத்து அதிகரிப்பால் அவற்றின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. 85 அடி கொண்ட கடனா அணை நீர்மட்டம் இன்று ஒரே நாளில் 4 அடி உயர்ந்து 57 அடியை எட்டியுள்ளது. அணைக்கு வினாடிக்கு 172 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது.

    84 அடி கொண்ட ராமநதி அணை நீர்மட்டம் மேலும் 2 அடி உயர்ந்து இன்று 74 அடியாக உள்ளது. அந்த அணையில் இருந்து விவசாயத்திற்காக 60 கனஅடி நீர் நேற்று முதல் திறக்கப்பட்டுள்ளது. அணைக்கு 136 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. குண்டாறு அணை முழு கொள்ளளவான 36 அடியை எட்டி 2-வது நாளாக நிரம்பி வழிகிறது.

    மாவட்டத்தின் மிகப்பெரிய அணையான 132 அடி கொண்ட அடவிநயினார் அணை நீர்மட்டம் இன்று 85 அடியை எட்டியுள்ளது. நேற்று 80 அடியாக இருந்த நிலையில் தொடர் மழையால் ஒரே நாளில் 5 அடி உயர்ந்துள்ளது. குண்டாறு, அடவிநயினார் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் தலா 20 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது.

    மாவட்டம் முழுவதும் பருவமழை பரவலாக பெய்து வருகிறது. குறிப்பாக தென்காசி, செங்கோட்டை, சிவகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் பலத்த மழை பெய்தது. செங்கோட்டையில் அதிகபட்சமாக 26.8 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.

    சிவகிரியில் 8 மில்லிமீட்டரும், தென்காசி யில் 7.20 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது. தென்காசி மாவட்டம் முழுவதும் கார் சாகுபடி பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

    • முதலமைச்சரின் ராஜினாமாதான் அவர்களின் நோக்கம்.
    • மதுவற்ற தமிழகம் தான் வளர்ச்சி நிறைந்த, வலிமை மிக்கதாக இருக்கும்.

    காட்டுமன்னார்கோவில்:

    காட்டுமன்னார்கோவிலில் தமிழக முன்னாள் காங்கிரஸ் தலைவர் அழகிரி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-

    கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவாதத்திற்குரியது. காங்கிரசை பொறுத்தவரை மதுவிலக்கு என்பதில் உறுதி யாக உள்ளது. அ.தி.மு.க., பா.ஜ.க, பா.ம.க., கட்சிகள், கள்ளக்குறிச்சி மரணத்திற்கு அனுதாபம் தெரிவிக்கிறீர்களா அல்லது அந்த மரணத்தை வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எதிராக அரசியல் செய்கிறீர்களா என்பது தெரியவில்லை.

    இந்த கட்சிகள் தங்களின் மது கொள்கையை வெளிப்படுத்த மறுக்கின்றன. இந்த கட்சிக்காரர்கள் எல்லாம் அந்த ஊரில் மது விற்பனை செய்துள்ளனர். கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். அழகிரி, ஸ்டாலினை வீழ்த்த மதுவை கையில் எடுத்திருக்கிறார்கள். முதலமைச்சரின் ராஜினாமாதான் அவர்களின் நோக்கம். பாதிக்கப்பட்ட கள்ளக்குறிச்சி மக்கள் மீது இல்லை. இந்த அரசு நீடிக்க வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். மதுவற்ற தமிழகம் தான் வளர்ச்சி நிறைந்த, வலிமை மிக்கதாக இருக்கும்.

    தவறு செய்தவர்கள் மீது முதலமைச்சர் நடவடிக்கை எடுத்துள்ளார். குற்றவாளிகளை பாதுகாக்க வில்லை. குற்றத்தை நியாயப்படுத்தவில்லை. சரியான பாதையில் அரசு நட வடிக்கை எடுத்து வருகிறது. எனவே இந்த அரசாங்கம் ராஜினாமா செய்ய வேண்டும் என்கின்ற கருத்தை காங்கிரஸ் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.

    இவ்வாறு அழகிரி கூறினார்.

    • ஆற்றில் குளிக்கவோ, மீன் பிடிக்கவோ பொதுமக்கள் யாரும் செல்லக்கூடாது என மாவட்ட நிர்வாகம் வலியுறுத்தி வருகிறது.
    • மழையால் கூழாங்கல் ஆறு, நடுமலை ஆறு ஆகிய இரு ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    மேட்டுப்பாளையம்:

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள பில்லூர் அணையில் மொத்த கொள்ளளவு 100 அடியாகும். இந்த அணைக்கு நீலகிரி, கேரளா உள்ளிட்ட பகுதிகளில் பெய்து வரும் மழைநீர் முக்கிய நீராதாரமாக உள்ளது.

    தற்போது நீலகிரி பகுதிகளில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருவதால் அணைக்கான நீர்வரத்து நேற்று நள்ளிரவு அதிகரித்தது. இதனால் அதிகாலை 4 மணியளவில் பில்லூர் அணையில் இருந்து ஓராண்டுக்கு பிறகு 4 மதகுகள் வழியாக சுமார் 14 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டு உள்ளது.

    இருப்பினும் 5 மணிக்கு நீர்வரத்து சற்று குறைந்ததால் 9 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டது. தொடர்ந்து 5.30 மணிக்கு மீண்டும் 12 ஆயிரம் கன அடி நீர் திறந்து விடப்பட்டது. காலை 6 மணி நிலவரப்படி 14,000 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.

    பில்லூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளதால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதனையொட்டி நெல்லித்துறை பத்திரகாளி அம்மன் கோவில், ஓடந்துறை, வச்சினம்பாளையம், ஆலாங்கொம்பு, சிறுமுகை, ஜடையம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கரையோரத்தில் வசிக்கும் பொதுமக்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. மேலும் ஆற்றில் குளிக்கவோ, மீன் பிடிக்கவோ பொதுமக்கள் யாரும் செல்லக்கூடாது என மாவட்ட நிர்வாகம் வலியுறுத்தி வருகிறது.

    இதற்கிடையே மேட்டுப்பாளையம் நகராட்சி சார்பில் ஒலிபெருக்கி மூலம் கரையோரத்தில் வசிப்போருக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையிலுள்ள பவானி ஆற்றுப்பாலத்தில் மேட்டுப்பாளையம் தாசில்தார் சந்திரன், நகராட்சி தலைவர் பர்வீன், கமிஷனர் அமுதா, போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தணிகாசலம் ஆகியோர் கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

    சோலையார் அணை 100 அடியை எட்டியது வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்த மழையால் கூழாங்கல் ஆறு, நடுமலை ஆறு ஆகிய இரு ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வால்பாறை பகுதியில் முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதியான சோலையார் அணை 5 டி.எம்.சி. தண்ணீர் சேகரிக்கும் அணையாக உள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் சோலையார் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

    நேற்று ஒரே நாளில் 20 அடி நீர்மட்டம் உயர்ந்தது. தற்போது அணை நீர்மட்டம் 100 அடியாக உயர்ந்துள்ளது.

    வால்பாறை 72 மில்லி மீட்டர் மழை அளவும், சின்கோனா 64 மில்லி மீட்டர் மழை அளவும், சோலையாறு அணை 47 மில்லி மீட்டர் மழை அளவும், அதிகபட்சமாக சின்னக்கல்லார் 92 மில்லி மீட்டர் மழை அளவும் பதிவானது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 2026-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நாம் தமிழர் கட்சிக்கு மிகவும் முக்கியமான தேர்தலாகும்.
    • கொள்கைகளோடு ஒத்துப்போகும் கட்சிகளுடன் கூட்டணி அமைக்கவும் நாம் தமிழர் கட்சி தயாராக உள்ளது.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில் 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலுக்கான பரபரப்பு இப்போதே ஏற்பட தொடங்கி இருக்கிறது.

    அந்த தேர்தலில் தி.மு.க. தலைமையில் ஒரு அணியும், அ.தி.மு.க. தலைமையில் இன்னொரு அணியும், நேருக்கு நேர் மோதுவதற்கு தயாராகி வரும் நிலையில் பாரதிய ஜனதா தலைமையிலான அணியும் களம் காண உள்ளது.

    2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய் களமிறங்கப் போவதாக அறிவித்துள்ளார். அவர் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுடன் கைகோர்க்க இருப்பதாக பரபரப்பான தகவல்கள் வெளியானது.

    இது தொடர்பாக ரகசிய பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் விரைவில் கூட்டணி தொடர்பான இறுதி அறிவிப்புகள் வெளியாக இருப்பதாகவும் கூறப்பட்டது.

    இந்த நிலையில் 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தல் முதல் தேர்தல் என்பதால் விஜய் தனித்தே களமிறங்க முடிவு செய்து இருப்பது தற்போது தெரிய வந்துள்ளது. தேர்தலில் தனித்து போட்டியிட்டு தனது பலம் என்ன? என்பதை பார்த்து விட்டு அதன் பிறகு கூட்டணி தொடர்பான விஷயங்களில் கவனம் செலுத்தலாம் என்றே விஜய் முடிவு செய்திருப்பதாகவும் பரபரப்பான தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

    நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமானுடன் நல்ல நட்பில் இருக்கும் விஜய், கூட்டணி அமைக்கும் விஷயத்தில் போதிய ஆர்வம் காட்டாமல் நழுவி சென்று இருப்பதாகவும் கூறப்படுகிறது.

    இது தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி ஒருவர் கூறும்போது, 8 சதவீத வாக்குகளை பெற்றுள்ள நாம் தமிழர் கட்சி 2026-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் எத்தனை சதவீத ஓட்டுகளை பெறப்போகிறது? என்கிற எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் எழுந்துள்ளது.

    தற்போதைய நிலையில் 2026-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நாம் தமிழர் கட்சிக்கு மிகவும் முக்கியமான தேர்தலாகும்.

    எங்களோடு கூட்டணி அமைப்பதற்கு பல கட்சிகள் இப்போதே ஆர்வம் காட்டி உள்ளன. எங்கள் கொள்கைகளோடு ஒத்துப்போகும் கட்சிகளுடன் கூட்டணி அமைக்கவும் நாம் தமிழர் கட்சி தயாராக உள்ளது.

    அதே நேரத்தில் கூட்டணிக்கு யாரும் வராவிட்டாலும் எப்போதும் போல தனித்து களம் காணவும் நாங்கள் தயாராகவே இருக்கிறோம் என்றார்.

    விஜயுடனான கூட்டணி பற்றி அவர் மேலும் கூறும்போது, தி.மு.க. அ.தி.மு.க. ஆகிய இரண்டு கட்சிகளையும் வீழ்த்துவதற்கு புதிதாக ஒரு அணி உருவானால் அதனுடன் விஜயும் கைகோர்த்தால் நன்றாக இருக்கும் என்பதே அனைவரது எண்ணமாகவும் உள்ளது. அதையே நாங்களும் விரும்புகிறோம் என்றும் தெரிவித்தார். இருப்பினும் விஜய் எங்களோடு சேரப் போகிறாரா? இல்லையா? என்பது அவர் எடுக்க வேண்டிய முடிவு என்றும் கூறினார்.

    2026-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய் தனது ரசிகர் பட்டாளங்கள் மற்றும் புதிய வாக்காளர்களின் ஆதரவோடு களம் காண்பது உறுதியாகி இருப்பதால் தேர்தல் களம் மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    விஜயின் அரசியல் பயணம் தமிழக அரசியலில் எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்தப் போகிறது? என்பது அனைவரது மத்தியிலும் பேசு பொருளாகவும் மாறி உள்ளது.

    விஜய் தனித்து களம் காணும் பட்சத்தில் வருகிற சட்டமன்றத் தேர்தலில் பல முனை போட்டி நிலவி வாக்குகள் சிதறும் சூழல் உருவாகி உள்ளது. இது யாருக்கு சாதகமாக அமையப் போகிறது? என்பதும் மிகப்பெரிய கேள்வியாக உருவெடுத்து உள்ளது. முதல் தேர்தலிலேயே விஜய் முத்திரை பதிப்பாரா? என்பதும் புதிய வாக்காளர்கள் மற்றும் பெண்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • சூறாவளி காற்றுடன் பலத்த மழை கொட்டியது.
    • மின் கம்பிகளின் மீது விழுந்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

    ஊட்டி:

    தென்மேற்கு பருவமழை காரணமாக கடந்த சில தினங்களாக நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூர், நடுவட்டம், தேவர்சோலை, நாடுகாணி உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

    கூடலூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு சூறாவளி காற்றுடன் பலத்த மழை கொட்டியது. சிறிது நேரத்திற்கு பிறகு மழை நின்றது.

    தொடர்ந்து நேற்று அதிகாலை மீண்டும் கனமழை பெய்தது. இந்த மழையால், தேவர்சோலை பேரூராட்சிக்கு உட்பட்ட குற்றிமுச்சு வழியாக ஓடும் மாயாற்றின் கிளை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அந்த வழியாக செல்லும் சாலையில் உள்ள பாலத்தின் மேல் பகுதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

    மழை பெய்து கொண்டே இருந்ததால் அடிக்கடி மின்தடையும் ஏற்பட்டது. அப்பகுதிகள் இருளில் மூழ்கின. இதனால் பொது மக்களும் சிரமத்திற்குள்ளாகினர்.

    கூடலூரில் இருந்து ஓவேலி பேரூராட்சி பகுதியில் ஆருற்றுப்பாறை மற்றும் மரப்பாலம் பகுதிகளுக்கு செல்லும் சாலையில் சுண்ணாம்பு பாலம் பகுதியில் சாலையின் குறுக்கே மரம் விழுந்தது. அப்பகுதியில் போக்கு வரத்தும் பாதிக்கப்பட்டது.

    மின் கம்பிகளின் மீது விழுந்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. ஓவேலி பேரூராட்சி பகுதிகளில் 2 நாட்களாக மின்சாரம் இல்லாததால் அப்பகுதியே இருளில் மூழ்கி மக்கள் கடும் அவதியடைந்தனர்.

    ஆமைக்குளம் பகுதியில் வசிக்கும் விஜயகுமார் என்பவரின் கடையின் மீது மண்சரிந்து கடை முழுவது மாக சேதம் அடைந்தது. வழக்கமாக இரவில் விஜய குமாரின் தந்தை கடையில் தங்குவார். சம்பவத்தன்று அவர் வீட்டிற்கு சென்றதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

    கொட்டி தீர்த்த கன மழைக்கு தொரப்பள்ளியை அடுத்த எரிவயல் கிராம த்தில் தாழ்வான பகுதிகளில் இருந்த 5-க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. சில வீடுகளுக்குள் தண்ணீரும் புகுந்தது. குடியி ருப்புகளை சூழ்ந்த வெள்ளத்தை மோட்டார் மூலம் வெளியேற்றும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர்.

    பந்தலூரில் பெய்த மழைக்கு சேரங்கோடு ஊராட்சிக்கு உட்பட்ட சேரம்பாடி, பாலபாடி வளவில் கூலித்தொழிலாளி முனியப்பன் என்பவரது வீட்டின் அருகே மண்சரிவு ஏற்பட்டு வீட்டின் ஒரு பகுதி சேதம் அடைந்தது.

    கூடலூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் மழை யுடன் சூறவாளி காற்றும் வீசியது. இதனால் ஆங்கா ங்கே சில இடங்களில் சாலைகளில் மரங்கள் விழுந்தன. இதனை தீயணைப்பு துறையினர் அகற்றினர்.

    இதுகுறித்து கூடலூா் கோட்டாட்சியா் செந்தில்குமாா் கூறியதாவது:-

    கூடலூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. நேற்று இரவு கொட்டி தீர்த்த மழைக்கு 16 இடங்களில் மரங்கள் சாய்ந்துள்ளன. 56 இடங்களில் மின் கம்பிகள் அறுந்து விழுந்துள்ளன. அவை அனைத்தும் உடனுக்குடன் சரி செய்யப்பட்டுள்ளது. மேலும், அனைத்துத்துறை அலுவலா்களும் தொடா்ந்து கண்காணிப்புப் பணியில் இருக்குமாறு அறிவுறுத்தப்ப ட்டுள்ளது.

    கூடலூா் வருவாய் கோட்டத்தில் பருவமழையை எதிா்கொள்ளும் வகையில் வருவாய்த்துறை பணியாளா்கள் அனைத்து பகுதியிலும் களத்தில் உள்ளனா். பாதிப்புகள் ஏற்பட்டதாக தகவல் கிடைத்தவுடன் உடனடியாக மீட்புப் பணியில் ஈடுபட 24 மணி நேரமும் தயாா் நிலையில் உள்ளனா்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மாநில அரசு இந்த விவகாரம் தொடர்பாக நடவடிக்கை எடுக்க தவறி விட்டது.
    • சண்முகம், ராமச்சந்திரன், கருப்பையா ரத்தினம், பன்னீர்செல்வம், கரிகாலன் உள்ளிட்ட மணல் ஒப்பந்ததாரர்களின் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    தமிழ்நாட்டில் சட்டவிரோதமாக மணல் கடத்தப்படும் விவகாரம் தொடர்பாக தமிழக டிஜிபி ஷங்கர் ஜிவாலுக்கு அமலாக்கத்துறை கடிதம் அனுப்பி உள்ளது. அமலாக்கத்துறை கடிதத்தில்,

    * சட்டவிரோதமாக மணல் அள்ளும் விவகாரத்தில் 4,730 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    * அரசு அதிகாரிகளின் உடந்தையோடு தனியார் மணல் ஒப்பந்ததாரர்கள் இந்த மோசடியில் ஈடுபட்டு உள்ளனர்.

    * மாநில அரசு இந்த விவகாரம் தொடர்பாக நடவடிக்கை எடுக்க தவறி விட்டது.

    * 5 மாவட்டங்களில் சட்டவிரோதமாக 987 ஹெக்டேர் பரப்பளவில் மணல் அள்ளப்பட்டுள்ளது. மிக தெளிவான டிரோன், பல்வேறு தொழில்நுட்பங்களை பயன்படுத்தி ஆய்வு செய்து அறிக்கை தயார் செய்துள்ளோம்.

    * நான்கு ஒப்பந்த நிறுவனங்களை அமலாக்கத்துறை குறிப்பிட்டுள்ளது. ஒரு இடத்தில் 2 இயந்திரங்களை வைத்து மட்டுமே மணல் அள்ளுவதற்கு அனுமதி உண்டு. ஆனால் பல்வேறு இயந்திரங்களை பயன்படுத்தி ஒரே நேரத்தில் மணல் அள்ளப்பட்டுள்ளது.

    * சண்முகம், ராமச்சந்திரன், கருப்பையா ரத்தினம், பன்னீர்செல்வம், கரிகாலன் உள்ளிட்ட மணல் ஒப்பந்ததாரர்களின் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது.

    * அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதோடு மட்டுமல்லாதது ஒப்பந்ததாரர்கள் சொத்துக்களை வாங்கி குவித்ததையும் அமலாக்கத்துறை சுட்டிக்காட்டி உள்ளது.

    * அனுமதிக்கப்பட்ட அளவை விட 23.64 லட்சம் யூனிட் கடந்த ஆண்டு மட்டும் அதிகம் அள்ளப்பட்டதாக கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வெள்ளி விலையில் எந்த மாற்றமுமில்லை.
    • ஒரு கிராம் வெள்ளி ரூ.94.50-க்கும் பார் வெள்ளி ரூ.94,500-க்கும் விற்பனையாகிறது.

    சென்னை:

    சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை ஏற்றமும், இறக்கமும் காணப்பட்டு வருகிறது. கடந்த திங்கட்கிழமை தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 உயர்ந்தது. நேற்று முன்தினம் சவரனுக்கு ரூ.160-ம் நேற்று சவரனுக்கு ரூ.160-ம் குறைந்து விற்பனையானது.

    இந்த நிலையில், இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 குறைந்து ஒரு சவரன் ரூ.53,000-க்கும் கிராமுக்கு ரூ.35 குறைந்து ஒரு கிராம் ரூ. 6,625-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    வெள்ளி விலையில் எந்த மாற்றமுமில்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.94.50-க்கும் பார் வெள்ளி ரூ.94,500-க்கும் விற்பனையாகிறது.

    • இன்று காலை தொடங்கி உள்ள போராட்டம் மாலை 5 மணி வரை நடைபெறும் என்று கூறப்படுகிறது.
    • 23 நிபந்தனைகளுடன் போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது.

    சென்னை:

    கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரண சம்பவம் தொடர்பாக சட்டசபையில் பேச அனுமதி கேட்டு அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அமளியில் ஈடுபட்டனர்.

    இதையடுத்து அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அனைவரையும் இந்த கூட்டத் தொடர் முழுவதும் சஸ்பெண்டு செய்து சபாநாயகர் அப்பாவு நடவடிக்கை எடுத்தார்.

    சட்டசபை கூட்டத்தொடர் முழுவதும் சஸ் பெண்டு செய்யப்பட்டதை கண்டித்தும், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரண சம்பவத்தில் சரியான நடவடிக்கை எடுக்காத தி.மு.க. அரசை கண்டித்தும், கள்ளச்சாராய மரணம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வலியுறுத்தியும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் இன்று சென்னையில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்தனர்.

    இதையடுத்து சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் உண்ணவிரதம் இருக்க போலீசார் அனுமதி அளித்தனர். மேலும் உண்ணாவிரதத்துக்கு பல்வேறு கட்டுப்பாடுகளையும் போலீசார் விதித்தனர். உண்ணாவிரதத்தை அமைதியாக நடத்த வேண்டும், தனி நபர்களை தாக்கி பேசக்கூடாது, உருவ பொம்மை எரிக்கக் கூடாது, கூம்பு வடிவ ஒலிபெருக்கி பயன்படுத்தக்கூடாது, மேடை அமைக்கக்கூடாது, பேனர்கள் வைக்கக்கூடாது, கொடி கட்டக்கூடாது, பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தக்கூடாது என்பது உள்பட 23 கட்டுப்பாடுகளை விதித்தனர்.

    அந்த கட்டுப்பாடுகளை பின்பற்றி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் இன்று காலை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இன்று காலை 9 மணிக்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் உண்ணாவிரத போராட்டம் தொடங்கியது. இந்த உண்ணாவிரத போராட்டத்தில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 61 பேரும் கருப்பு சட்டை அணிந்து பங்கேற்றனர்.

    அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க் கள் திண்டுக்கல் சீனிவாசன், எஸ்.பி.வேலுமணி, செங்கோட்டையன், ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜூ, கடம்பூர் ராஜூ, கே.பி.முனுசாமி, ஜெயக்குமார் உள்ளிட்ட அனைவரும் பங்கேற்றனர். அ.தி.மு.க. முக்கிய நிர்வாகிகளும் உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டனர். உண்ணாவிரதத்தில் ஈடு பட்ட எம்.எல்.ஏ.க்கள் ஒவ்வொருவராக பேசினார்கள்.

    மேலும் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உண்ணாவிரத போராட்டத்துக்கு வந்திருந்தனர். சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிர்வாகிகளும், தொண்டர்களும் அங்கு குவிந்திருந்தனர்.

    உண்ணாவிரதத்தில் பரங்கிமலை கிழக்கு ஒன்றிய செயலாளர் பெரும்பாக்கம் ராஜசேகர், துரைப்பாக்கம் டி.சி.கோவிந்தசாமி, முன்னாள் கவுன்சிலர் சின்னையன், இலக்கிய அணி மாநில துணை செய லாளர் கே.எஸ்.மலர்மன்னன், வக்கீல் பழனி, டாக்டர் சுனில், வட பழனி சத்திய நாராயணமூர்த்தி, ராயபுரம் பாலாஜி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    உண்ணாவிரத போராட்டம் நடைபெற்ற இடத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. அங்கு சுமார் 400-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தை திசை திருப்பும் வகையில், ஆர்.எஸ்.பாரதி அவதூறு கருத்துகளை தெரிவித்து வருகிறார்.
    • இழப்பீட்டு தொகையை பயன்படுத்தி, கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் மது மறுவாழ்வு மையம் அமைக்கப்படும்.

    சென்னை:

    கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் விவகாரத்துக்கு பின்னால் அண்ணாமலையின் சதி இருக்கலாம் என்று தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார். தன்னை தொடர்புபடுத்தி அவதூறு கருத்து தெரிவித்ததாக கூறி, ரூ.1 கோடி இழப்பீடு கேட்டு தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு, தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை தனது வக்கீல், பா.ஜனதா மாநில துணைத்தலைவர் பால்கனகராஜ் வாயிலாக நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.

    அதில், 'கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தை திசை திருப்பும் வகையில், ஆர்.எஸ்.பாரதி அவதூறு கருத்துகளை தெரிவித்து வருகிறார். ஆதாரமின்றி தொடர்ந்து குற்றச்சாட்டுகளை தெரிவித்து வருகிறார். நோட்டீஸ் பெறப்பட்ட 3 நாட்களுக்குள் இதற்கு, அவர் மன்னிப்பு கோரவில்லை என்றால், ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும். இந்த இழப்பீட்டு தொகையை பயன்படுத்தி, கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் மது மறுவாழ்வு மையம் அமைக்கப்படும்' என கூறப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கென்யாவில் இருந்து வந்த இளம்பெண், கால்களில் அணிந்திருந்த ஷூக்களில் மறைத்து போதைப்பொருளை கடத்தி வந்தது தெரியவந்தது.
    • சென்னையில் யாரிடம் கொடுப்பதற்காக போதைப்பொருளை எடுத்து வந்தார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நைஜீரிய நாட்டில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.22 கோடி மதிப்புடைய 2.2 கிலோ கோக்கைன் போதைப்பொருளை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

    நைஜீரியாவில் இருந்து தோகா வழியாக சென்னை விமான நிலையத்திற்கு வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது கென்யாவில் இருந்து வந்த இளம்பெண், கால்களில் அணிந்திருந்த ஷூக்களில் மறைத்து போதைப்பொருளை கடத்தி வந்தது தெரியவந்தது.

    இதையடுத்து அப்பெண்ணை கைது செய்த அதிகாரிகள், சென்னையில் யாரிடம் கொடுப்பதற்காக போதைப்பொருளை எடுத்து வந்தார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • காரைக்கால் பணிமனையில் பராமரிப்பு பணி நடைபெறுவதால் சில ரெயில்கள் பகுதி நேர ரத்து செய்யப்படுகிறது.
    • காரைக்காலில் இருந்து ஜூலை 3-ம் தேதி எர்ணாகுளம் புறப்பட்டு செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில், அதற்கு மாற்றாக நாகப்பட்டினத்தில் இருந்து மாலை 5.05 மணிக்கு புறப்பட்டு எர்ணாகுளம் செல்லும்.

    சென்னை

    தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருச்சி கோட்டம், காரைக்கால் பணிமனையில் பராமரிப்பு பணி நடைபெறுவதால் சில ரெயில்கள் பகுதி நேர ரத்து செய்யப்படுகிறது.

    தஞ்சாவூரில் இருந்து வரும் 28, 29, 30 மற்றும் ஜூலை 1, 2, 3 ஆகிய தேதிகளில் காலை 6.50 மணிக்கு புறப்பட்டு காரைக்கால் செல்லும் சிறப்பு ரெயில் (வண்டி எண்.06832) நாகர்கோவில் - காரைக்கால் இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது. மேலும், திருச்சியிலிருந்து வரும் 28, 29, 30 மற்றும் ஜூலை 1, 2, 3 ஆகிய தேதிகளில் காலை 6.50 மணிக்கு புறப்பட்டு காரைக்கால் செல்லும் முன்பதிவில்லா சிறப்பு ரெயில் (06490) நாகர்கோவில் - காரைக்கால் இடையே பகுதி நேர ரத்துசெய்யப்படுகிறது. திருச்சியிலிருந்து வரும் வரும் 28, 29, 30 மற்றும் ஜூலை 1, 2, 3 ஆகிய தேதிகளில் காலை 8.35 மணிக்கு புறப்பட்டு காரைக்கால் செல்லும் சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் (06880) நாகர்கோவில் - காரைக்கால் இடையே பகுதி நேர ரத்துசெய்யப்படுகிறது.

    இதேபோல, எர்ணாகுளத்தில் இருந்து ஜூலை 1-ம் தேதி இரவு 10.25 மணிக்கு புறப்பட்டு காரைக்கால் வரும் எக்ஸ்பிரஸ் ரெயில் (16188) நாகப்பட்டினம் - காரைக்கால் இடையே பகுதி நேர ரத்துசெய்யப்படுகிறது. மேலும், எர்ணாகுளத்தில் இருந்து ஜூலை 2-ம் தேதி இரவு 10.25 மணிக்கு புறப்பட்டு காரைக்கால் வரும் எக்ஸ்பிரஸ் ரெயில் (16188) நாகர்கோவில் - காரைக்கால் இடையே பகுதி நேர ரத்துசெய்யப்படுகிறது.

    சென்னை எழும்பூரில் இருந்து ஜூலை 2-ம்தேதி இரவு 9 மணிக்கு புறப்பட்டு காரைக்கால் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (16175) நாகப்பட்டினம் - காரைக்கால் இடையே பகுதி நேர ரத்துசெய்யப்படுகிறது.

    இதேபோல, காரைக்காலில் இருந்து ஜூலை 3-ம் தேதி மாலை 4.30 மணிக்கு எர்ணாகுளம் புறப்பட்டு செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (16187), அதற்கு மாற்றாக நாகப்பட்டினத்தில் இருந்து மாலை 5.05 மணிக்கு புறப்பட்டு எர்ணாகுளம் செல்லும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    ×