என் மலர்
உள்ளூர் செய்திகள்
- தமிழ்நாடு நலன் சார்ந்த - நம் நாட்டு நலன் சார்ந்த பேச்சுக்களை நான் மட்டுமல்ல நாடே கைதட்டி இப்படியல்லவா பாராளுமன்ற உறுப்பினர்கள் செயல்பட வேண்டும் எனப் பாராட்டி வருகிறது.
- தமிழ்நாட்டு மக்களை ஓரவஞ்சனையுடன், மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்த முடியாது என்ற செய்தியை அழுத்தம் திருத்தமாகக் கொண்டுபோய்ச் சேர்த்திருக்கிறார்கள் நமது எம்.பி.க்கள்!
சென்னை :
திமுக தலைவரும் முதலமைச்சருமான் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இந்திய பாராளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடர் கடந்த நவம்பர் 25-ஆம் தேதி தொடங்கி, நேற்றைய தினம் முடிவுற்றுள்ளது. இக்கூட்டத் தொடரில் வீறுகொண்ட வீரர்களாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் பாராளுமன்ற உறுப்பினர்கள் முழங்கி இருக்கிறார்கள்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் பாராளுமன்ற உறுப்பினர்களின் செயல்பாடுகளைப் பார்த்து நாடே வியந்து கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டின் நலனுக்காக குரல் கொடுப்பது - மாநில உரிமைகள் தொடர்பான பிரச்சனைகளை எழுப்பி அவையின் கவனத்தை ஈர்ப்பது ஆகிய இரண்டையும் வெற்றிகரமாகச் செய்து காட்டி இருக்கிறார்கள். மற்ற மாநில எம்.பி.க்களுக்கு முன்னோடிகளாக கழக எம்.பி.க்கள் செயல்படுவதைப் பார்த்து - நூறாண்டு கண்ட திராவிட இயக்கத்தின் தலைவராக நான் எண்ணி எண்ணி மகிழ்கிறேன்.
தி.மு.க. எம்.பி.க்கள் என்ன பேசுகிறார்கள் - நாட்டை உலுக்கும் முக்கியப் பிரச்சனைகளில் தி.மு.க.வின் நிலைப்பாடு என்ன என்பதை இன்று நாடே உன்னிப்பாக கவனிக்கும் நிலைக்கு இந்த திராவிடப் பேரியக்கம் வளர்ந்திருப்பதை நினைத்தும் பெருமையாக இருக்கிறது.

அதானி விவகாரம், மணிப்பூர் கலவரம் என, தான் பொறுப்பேற்று பதில் சொல்லியே ஆகவேண்டிய அனைத்திலும் கனத்த மவுனம் காக்கும் பிரதமர் பாராளுமன்றத்தில் பா.ஜ.க.வினரால் ஜனநாயகம் படாத பாடு பட்டபோது வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார். அவையை நடத்த விரும்புவதை விட- அவையை முடக்க வேண்டும், அரசின் தோல்விகள் குறித்த எந்த விவாதமும் நடைபெற்று விடக்கூடாது என்பதையே மனதில் வைத்து பா.ஜ.க. எம்.பி.க்கள் செயல்பட்டதை நாம் காணமுடிந்தது. ஆக்கப்பூர்வமான விவாதம் செய்வதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்பது பாராளுமன்றத்தைப் பொறுத்தமட்டில் அரிதான நிகழ்வாக பா.ஜ.க. ஆட்சியில் மாறி விட்டதை எண்ணி ஒரு மிகப்பெரிய ஜனநாயக இயக்கமாம் தி.மு.கழகம் கவலை கொள்கிறது.
குளிர்காலக் கூட்டத் தொடர் குறித்து பாராளுமன்ற விவகாரங்கள் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில், மக்களவையானது 54.5 விழுக்காடும், மாநிலங்களவை 40 விழுக்காடும்தான் ஆக்கபூர்வமாகச் செயல்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனைவிட வேதனையான செய்தி இருக்க முடியுமா?
நமது நாட்டின் பெருமைமிக்க அரசியல் சட்டத்தின் 75-ஆவது ஆண்டு கொண்டாட்டத்தின்போது – பா.ஜ.க. ஆட்சியின் கையில் "பாராளுமன்ற ஜனநாயகம்" எப்படி பிய்த்து எறியப்பட்டுள்ளது என்பதற்கு இந்த குளிர்காலக் கூட்டத்தொடரே சாட்சி. அரசியல்சட்டத்தின் 75 ஆண்டு விழா கொண்டாட்டத்தின்போது – அச்சட்டத்தை உருவாக்கித் தந்த அண்ணல் அம்பேத்கரை ஒன்றிய உள்துறை அமைச்சரே அவதூறுசெய்து - இழிவுபடுத்திப் பேசுவது பா.ஜ.க.வின் உயர்வர்க்க பாசிச முகத்தை தோலுரித்துக் காட்டிவிட்டது. ஒருபுறம் அரசியல் சட்டத்திற்கு விழா - இன்னொரு புறம் அதை உருவாக்கித்தந்த அண்ணலுக்கு அவதூறு! இதுதான் பா.ஜ.க.வின் பசப்பு அரசியல் ஆகும்.
இவ்வளவு களேபரத்திலும் – திராவிட முன்னேற்றக் கழக மாநிலங்களவை, மக்களவை உறுப்பினர்கள் தங்கள் ஜனநாயக கடமையாற்ற தவறவில்லை என்பது - இவர்கள் கலைஞர் வளர்த்தெடுத்து அனுப்பி வைக்கப்பட்ட திராவிட இயக்க ஆற்றலாளர்கள் என்பதை அரங்கேற்றியுள்ளது.
"ஒரே நாடு ஒரே தேர்தலை" கடுமையாக எதிர்த்துப் பேசிய தி.மு.க. மக்களவைக் குழுத் தலைவர் டி.ஆர். பாலு - "மதுரை டங்ஸ்டன் கனிம சுரங்க அனுமதியை ரத்து செய்யுங்கள்" என்றும் "பேரிடர் மேலாண்மை 2024 திருத்தச் சட்டத்தை எதிர்த்தும்" அனல் பறக்கப் பேசிய தி.மு.க. பாராளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி கருணாநிதி - "அவைக்குப் பிரதமரே வருவதில்லை" என்று முழங்கிய திருச்சி சிவா - அரசியல் சட்டத்தின் 75 ஆவது ஆண்டில், "அரசியலமைப்புச் சட்டத்தின் ஆறு கட்டமைப்புக் கூறுகளும் - கேசவானந்த பாரதி வழக்கும்" என அரசியல்சட்ட நுணுக்கம் நிறைந்த ஆ.இராசா - மாநில உரிமைகளைப் பற்றியும், மதவாத அரசியல் அச்சுறுத்தல் குறித்தும் உரையாற்றிய ஜெகத்ரட்சகன் - "வானிலை அறிவிப்பு தொழில்நுட்பத்தை மேம்படுத்துக" என தயாநிதி மாறன் - என ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் ஒன்றிய அரசைத் தட்டிஎழுப்பினார்கள்.
பாராளுமன்ற மக்களவை, மாநிலங்களவையில் நமது உறுப்பினர்கள் அனைவர் பேச்சும் தினந்தோறும் 'முரசொலி' ஏட்டில் பக்கம் பக்கமாக வெளிவந்தது. இதனைத் தினந்தோறும் படித்தபோது மனதுக்குள் கைதட்டிக் கொண்டேன். தமிழ்நாடு நலன் சார்ந்த - நம் நாட்டு நலன் சார்ந்த பேச்சுக்களை நான் மட்டுமல்ல நாடே கைதட்டி இப்படியல்லவா பாராளுமன்ற உறுப்பினர்கள் செயல்பட வேண்டும் எனப் பாராட்டி வருகிறது.
தமிழ்நாட்டு மக்கள் "நாற்பதுக்கு நாற்பது" என்ற தேர்தல் வெற்றியைத் தந்தபோது - "பாராளுமன்றத்துக்குச் சென்று இவர்கள் என்ன செய்யப் போகிறார்கள்?" என்று சிலர் கேள்வி எழுப்பினார்கள். ஆனால் அவர்களெல்லாம் வாயடைத்துப் போகும் அளவிற்குத் தி.மு.க. எம்.பி.க்களின் செயல்பாடு அமைந்துள்ளது. அனைத்தையும் பட்டியலிடப் பக்கங்கள் போதாது என்றாலும் – குளிர்காலக் கூட்டத்தொடரில் மட்டும் நம் எம்.பி.க்கள் ஆக்கப்பூர்வமாக எழுப்பிய அடுக்கடுக்கான திட்டங்கள் பற்றி இங்கே சுட்டிகாட்ட விரும்புகிறேன்.
* இலங்கை இராணுவத்தால் கைது செய்யப்படும் தமிழ்நாட்டு மீனவர்கள் விடுதலை.
* ரெயில்வே திட்டங்கள்.
* மெட்ரோ ரெயில் திட்ட நிதி ஒதுக்கீடு.
* சமக்ர சிக்ஷா அபியான் திட்டத்தின் கீழ்தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்கீடு செய்யாமல் இருப்பது.
* விவசாயிகள் கடன் தள்ளுபடி கோரிக்கை.
* விவசாயிகளுக்கான பி-எம். கிசான் திட்டத்தின்கீழ் போதிய நிதி ஒதுக்காதது.
* தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களை விரைவுபடுத்துதல்.
* சுங்கச்சாவடிகளை ஒழித்தல்.
* நாட்டில் நிலவும் வேலைவாய்ப்பின்மை.
* நீதித்துறையில் பன்முகத்தன்மை கோரிக்கை.
* சிறுபான்மையினர் பொருளாதாரத் திட்டங்கள் பற்றிய கோரிக்கை.
* சிறுபான்மையினரைத் தாக்கிப் பேசிய உயர்நீதிமன்ற நீதிபதிக்கு பாராளுமன்றக் கண்டனத் தீர்மானம்.
* நீட் தேர்வு முறைகேடுகள்.
* வக்ப் வாரிய சட்டத் திருத்த எதிர்ப்பு.
* தமிழ்நாட்டின் விமான நிலையத் திட்டங்கள்.
* இந்திய சீன எல்லைப் பிரச்சனை பற்றி வெள்ளை அறிக்கை கோரியது.
* சென்னை-தூத்துக்குடி வந்தே பாரத்.
* பேரிடர் மேலாண்மை நிதி ஒதுக்காதது.
* உள்ளாட்சி அமைப்புகளுக்கு போதிய நிதி ஒதுக்கீடு செய்யக் கோரிக்கை.
* மதுரை எய்ம்ஸ்
* நூறு நாள் வேலைத் திட்டத்தை 150 நாட்களாக உயர்த்தி - தினக் கூலியையும் உயர்த்துவது.
* அகழ்வாராய்ச்சிக்குத் தமிழ்நாட்டிற்கு ஏன் நிதி ஒதுக்கவில்லை.
இப்படி எண்ணற்ற திட்டங்களை - தமிழ்நாட்டின் உரிமைகளை - எந்த மாநில எம்.பி.க்களைக் காட்டிலும் – தமிழ்நாட்டு மக்கள் தேர்ந்தெடுத்து அனுப்பிய கழக எம்.பி.க்கள் எழுப்பியது எழுச்சியூட்டியது.
அடக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக - தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்காக அயராது உழைத்து வரும் தி.மு.க.வின் தலைவர் என்ற நிலையில் நம் எம்.பி.க்களின் சாதனைகளை மார்தட்டி அறிவித்துக்கொள்ள வேண்டியது முக்கியம் என்றே கருதுகிறேன்.
ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டின் குரலாகக் கழக பாராளுமன்ற உறுப்பினர்கள் சுட்டிக்காட்டிய பிரச்சினைகள் - எழுப்பிய மாநில உரிமை முழக்கங்கள் – ஜனநாயகத்தைப் பாழ்படுத்தும் "ஒரே நாடு ஒரே தேர்தலை" ஆணித்தரமாக எதிர்த்த பாராளுமன்றக் குரல்கள் எல்லாம் பிரதமர் மோடி அவர்கள் தலைமையிலான ஒன்றிய அரசின் செவிகளில் உரக்கவே விழுந்திருக்கும் என்ற நம்பிக்கை பிறந்திருக்கிறது. அதன் மூலம் ஒன்றிய அரசு தொடர்ந்து தமிழ்நாட்டை – தமிழ்நாட்டு மக்களை ஓரவஞ்சனையுடன், மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்த முடியாது என்ற செய்தியை அழுத்தம் திருத்தமாகக் கொண்டுபோய்ச் சேர்த்திருக்கிறார்கள் நமது எம்.பி.க்கள்!
இனியும் ஒன்றிய அரசு திருந்தவில்லை என்றால் - தமிழ்நாட்டின் உரிமைகளைத் தரவில்லையென்றால் - தமிழ்நாட்டு மக்கள் உரிய நேரத்தில் மீண்டும் தக்க பதிலடி கொடுப்பார்கள் என்பது உறுதி!
இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
- வார்டு மறு வரையறை, இட ஒதுக்கீடு குறித்து முடிவு செய்யாமல் தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியாகாது.
- அரசின் உத்தரவாதத்தை ஏற்று இதுதொடர்பான வழக்கை உயர்நீதிமன்றம் முடித்து வைத்தது.
வார்டு மறுவரையறை மற்றும் பட்டியலினத்தவர், பழங்குடியினர், மகளிருக்கு ஒதுக்கப்படும் வார்டுகள் குறித்து முடிவு செய்த பிறகே தேர்தல் அறிவிப்பை வெளியிட கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு மீதான விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டது.
அப்போது, "வார்டு மறு வரையறை, இட ஒதுக்கீடு நடைமுறைகள் முடிந்த பிறகு தான் உள்ளாட்சித் தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியிடப்படும்" என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு உறுதி அளித்துள்ளது.
மேலும், வார்டு மறு வரையறை, இட ஒதுக்கீடு குறித்து முடிவு செய்யாமல் தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியாகாது எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், அரசின் உத்தரவாதத்தை ஏற்று இதுதொடர்பான வழக்கை உயர்நீதிமன்றம் முடித்து வைத்தது.
- 3 பேர் கொண்ட தேடுதல் குழு தான் அமைக்க முடியும்.
- தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 2 கட்சி போட்டிதான் இருக்கும் 2-வதாக ஒரு அணி வேண்டுமென்றால் நிற்கலாம்.
புதுக்கோட்டை:
தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி புதுக்கோட்டையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-
சமூக விரோதிகள், பல்வேறு வழக்குகளில் சிக்கியவர்கள், ரவுடிகள் பட்டியலில் இருப்பவர்களை கட்சியில் சேர்ப்பது, பதவிகளை கொடுப்பது பா.ஜ.க.வே, தவிர வேறு எந்த கட்சியும் இல்லை. இதற்கு ஏற்கனவே பலமுறை ஆதாரத்தோடு பெயர் பட்டியலோடு நிரூபித்து இருக்கின்றோம்.
தி.மு.க.வில் தெரிந்து நாங்கள் செய்வது கிடையாது. தெரியாமல் எங்கேயாவது நடந்திருந்தால் உடனடியாக கட்சித் தலைவரின் கவனத்திற்கு கொண்டு சென்று அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்து நீக்கப்படுவார்கள்.

சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று கூறும் எடப்பாடி பழனிசாமி, இந்தியாவுக்கே பொதுவான அம்பேத்கரை பற்றி அமித்ஷா கூறியதைப் பற்றி கேட்டால் ஜெயக்குமார் பேசிய கருத்துதான் எனது கருத்து என்று கூறுகிறார். அப்படி கூறுவதற்கு பொதுச்செயலாளர் பதவி எதற்கு.
பல்கலைக்கழக துணைவேந்தர் தேடுதல் குழு விவகாரத்தில் கவர்னர் அவருக்கு பிடித்தபடி செய்ய வேண்டும் என்று கூறினால் அதற்கான ஆள் நாங்கள் கிடையாது. நாங்கள் சட்டப்படி செய்கிறோம். சட்டப்படி இல்லை என்றால் யார் வேண்டுமென்றால் நீதிமன்றத்திற்கு செல்லலாம்.
3 பேர் கொண்ட தேடுதல் குழு தான் அமைக்க முடியும். கவர்னர் 4-வதாக யு.சி.ஜி.யில் இருந்து ஒருவரை நியமிக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துகிறார். ஆனால் நாங்கள் இதுவரை அப்படி யாரையும் சேர்க்கவில்லை. புதிதாக அப்படி யாரையும் சேர்க்க முடியாது என்பதுதான் எங்களது வாதம்.
இந்த விவகாரம் நீதிமன்றத்திற்கு செல்லும் போது எங்கள் வாதத்தையும் நியாயத்தையும் எடுத்து வைப்போம். சட்டமன்ற கூட்டத்தொடரில் கவர்னரின் கடந்த கால செயல்பாடு தற்போது இருக்காது என்று எண்ணுகின்றோம்.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 2 கட்சி போட்டிதான் இருக்கும் 2-வதாக ஒரு அணி வேண்டுமென்றால் நிற்கலாம். எதிர்க்கட்சிகள் சிதறி கிடைப்பது எங்களுக்கு வலிமை தான். ஆனால் ஆரோக்கியமான போட்டி இருக்க வேண்டும். அதில் வெற்றி பெற்று வர வேண்டும் என்றுதான் எங்கள் தலைவர் விரும்புவார். தகுதியே இல்லாத ஆட்களோடு போட்டியிட விரும்பமாட்டார். என்றைக்கும் ஆரோக்கியமான போட்டிதான் அவருக்கு பிடிக்கும்.
நெல்லையில் 2 கொலைகளில் இதுவரை 4 பேரை பிடித்துள்ளனர். போலீசார் துரிதமாக செயல்பட்டுள்ளனர். இதில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை இல்லை. தனிப்பட்ட முன்விரோதத்தில் நடைபெறும் சம்பவங்களை எப்படி முன்கூட்டி தடுக்க முடியும். கோர்ட்டுக்கு வெளியே நடந்த கொலைக்கு அரசு எப்படி பொறுப்பேற்க முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- திருப்போரூர் முருகன் கோவில் உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டது.
- காணிக்கை பணத்துடன் பக்தர் செலுத்திய ஐபோனும் கோவிலின் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டது.
திருப்போரூரில் உள்ள கந்தசுவாமி கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்களது வேண்டுதலுக்காக அங்குள்ள உண்டியல்களில் காணிக்கை செலுத்துவது வழக்கம்.
இந்நிலையில் கடந்த 2 மாதத்துக்கு முன்பு திருப்போரூர் முருகன் கோவிலுக்கு சென்னை அம்பத்தூர் விநாயகபுரத்தைச் சேர்ந்த தினேஷ் என்பவர் குடும்பத்துடன் வந்து தரிசனம் செய்தார்.
பின்னர் அவர் அங்குள்ள உண்டியலில் காணிக்கை பணம் செலுத்தியபோது தவறுதலாக தன்னுடைய ஐபோனையும் போட்டு விட்டார். இதனால் பதறிய அவர் உண்டியலை திறந்து தனது செல்போனை திருப்பி தருமாறு கோவில் ஊழியர்களிடம் தெரிவித்தார். ஆனால் அவர்கள் இதுபற்றி அறநிலையத்துறை அதிகாரிகள் தான் முடிவு எடுக்க முடியும் என்று தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து தினேஷ் இது குறித்து சென்னை இந்து சமய அறநிலைத்துறை அலுவலகத்தில் புகார் செய்தார். அப்போது திருப்போரூர் முருகன் கோவில் உண்டியல் திறக்கப்படும் போது தகவல் தெரிவிக்கப்படும் எனக் கூறிஅனுப்பி விட்டனர்.
இதையடுத்து திருப்போரூர் முருகன் கோவில் உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டது. அதில் பக்தர் தவறுதலாக செலுத்திய ஐபோனும் இருந்தது. இதுபற்றி தினேசுக்க தகவல் தெரிவிக்கப்பட்டு அவரும் உண்டியல் எண்ணும் இடத்திற்கு வந்தார். அவர் ஐபோன் கிடைக்கும் என்ற ஆர்வத்தில் வந்து செல்போனை பெற முயன்ற போது கோவில் நிர்வாகத்தினர் உண்டியலில் போட்ட அனைத்து பொருட்களும் முருகனுக்கே உரியது. உங்களுக்கு செல்போன் கொடுக்க முடியாது.
வேண்டுமென்றால் உங்களுடைய முக்கியமான தரவுகள் ஏதேனும் செல்போனில் இருந்தால் அவற்றை மட்டும் நீங்கள் பெற்றுக் கொள்ளலாம் என்று கூறி கைவிரித்தனர்.

இதனால் ஏமாற்றம் அடைந்த தினேஷ் எழுத்துப்பூர்வமாக எழுதிக் கொடுத்து அந்த செல்போனில் உள்ள சிம்கார்டு மற்றும் மெமரி கார்டுகளை பெற்றுக் கொண்டு சென்றார். காணிக்கை பணத்துடன் பக்தர் செலுத்திய ஐபோனும் கோவிலின் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டது.
இந்நிலையில் திருப்போரூரில் உள்ள கந்தசுவாமி கோவில் உண்டியலில் ஐபோன் விழுந்த சம்பவம் பற்றி அமைச்சர் சேகர்பாபு கூறியிருப்பதாது:-
சென்னையை சேர்ந்த தினேஷ் என்பர் கோவில் உண்டியலில் காணிக்கை பணம் செலுத்தியபோது தவறுதலாக தன்னுடைய ஐபோனையும் போட்டு விட்டார்.
இதற்கான சாத்தியக்கூறு இருந்தால் ஐபோன் திரும்ப வழங்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.
- விழுப்புரம் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள நகராட்சி திடலில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
- ஆர்ப்பாட்டத்தில் பலர் கலந்து கொண்டனர்.
விழுப்புரம்:
மழை நிவாரணம் கேட்டு விழுப்புரத்தில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மழையால் பாதிக்கப்பட்ட விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த அனைத்து குடும்பங்களுக்கும், மழையால் சேதமடைந்த அனைத்து வீடுகளுக்கும், சேதமடைந்த பயிர்களுக்கும் உரிய நிவாரணம் உடனடியாக வழங்க வலியுறுத்தியும் விழுப்புரம் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து இருந்தார்.
அதன்படி இன்று விழுப்புரம் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள நகராட்சி திடலில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு விழுப்புரம் மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், எம்.பி.யுமான சி.வி.சண்முகம் தலைமை தாங்கினார்.
முன்னாள் மத்திய மந்திரி செஞ்சி ராமச்சந்திரன், சி.வி. ராதாகிருஷ்ணன், எம்.எல்.ஏ.க்கள் அர்ச்சுனன், சக்கரபாணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. முத்தமிழ் செல்வன்,அண்ணா தொழிற்சங்க செயலாளர் அற்புதவேல், மாவட்ட மருத்துவரணி டாக்டர் முத்தையன், மாவட்ட மாணவரணி செயலாளர் சக்திவேல்,தொழில் நுட்ப பிரிவு தலைவர் வக்கீல் பிரபாகரன், ஜெயலலிதா பேரவை துணை செயலாளர் பாலாஜி, நகர செயலாளர்கள் பசுபதி, வண்டிமேடு ராமதாஸ், ஒன்றிய செயலாளர்கள் முகுந்தன், பன்னீர், சுரேஷ் பாபு, பேட்டை முருகன், நகர துணை செயலாளர் வக்கீல் செந்தில், கவுன்சிலர்கள் ராதிகா செந்தில், கோதண்டனர், திண்டிவனம் நகர செயலாளர் தீனதயாளன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மழை நிவாரணம் வழங்க கோரி கோஷங்கள் எழுப்பினார்கள்.
- கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டு தொடர் விடுமுறையால், சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரிப்பு.
- சர்வதேச விமான டிக்கெட் கட்டணங்கள் 4 மடங்கு வரை உயர்த்தப்பட்டுள்ளது.
கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டு தொடர் விடுமுறையால், சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரிக்கத் தொடங்கியதை அடுத்து, தூத்துக்குடி, மதுரை, திருச்சி, கொச்சி, மைசூர் ஆகிய உள்நாட்டு விமான கட்டணங்கள் மற்றும் சிங்கப்பூர், கோலாலம்பூர், தாய்லாந்து, துபாய் ஆகிய சர்வதேச விமான டிக்கெட் கட்டணங்கள் 4 மடங்கு வரை உயர்த்தப்பட்டுள்ளது.
அதன்படி, சென்னை- தூத்துக்குடி இடையே வழக்கமான கட்டணம் - ரூ.4,796, இன்றைய - கட்டணம் ரூ.14,281 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், சென்னை - மதுரை இடையே வழக்கமான கட்டணம் ரூ.4,300, இன்றைய - கட்டணம் ரூ.17,695 என நிர்ணயம்.
சென்னை- திருச்சி இடையே வழக்கமான கட்டணம் ரூ.2,382, இன்றைய கட்டணம் ரூ.14,387 என நிர்ணயம்.
சென்னை- கோவை இடையே வழக்கமான கட்டணம் ரூ.3,485, இன்றைய கட்டணம் ரூ.9,418 என நிர்ணயம்.
சென்னை - சேலம் இடையே வழக்கமான கட்டணம் ரூ.3,537, இன்றைய கட்டணம் - ரூ.8,007 என நிர்ணயம்.
சென்னை - திருவனந்தபுரம் இடையே ரூ.3,821, இன்றைய கட்டணம் ரூ.13,306 என நிர்ணயம்.
சென்னை- கொச்சி இடையே வழக்கமான கட்டணம் ரூ.3,678, இன்றைய கட்டணம் ரூ.18,377 என நிர்ணயம்.
சென்னை- மைசூர் இடையே வழக்கமான கட்டணம் ரூ.3,432, இன்றைய கட்டணம் ரூ.9,872 என நிர்ணயம்.
சென்னை - தாய்லாந்து இடையே வழக்கமான கட்டணம் - ரூ.8,891, இன்றைய - கட்டணம் ரூ.17,437 என நிர்ணயம்.
சென்னை- துபாய் இடையே வழக்கமான கட்டணம் - ரூ.12,871, இன்றைய கட்டணம் - ரூ.26,752 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
- தமிழக அரசை கண்டித்து நேற்று கோவை காந்திபுரம் வி.கே.கே.மேனன் சாலையில் கருப்பு தின பேரணி நடந்தது.
- தடையை மீறி பேரணியில் ஈடுபட்ட அண்ணாமலை, வானதி உள்பட 917 பேரை போலீசார் கைது.
கோவை குண்டு வெடிப்பு தொடர்பாக கைது செய்யப்பட்ட அல்-உம்மா இயக்கத் தலைவர் எஸ்.ஏ.பாஷா கடந்த 16-ந் தேதி உயிரிழந்தார்.
மறுநாள் 17-ந் தேதி அவரது உடல் அவரது வீட்டில் இருந்து ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.
இந்த ஊர்வலத்துக்கு போலீசார் அனுமதி அளித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ.க சார்பில், தமிழக அரசை கண்டித்து நேற்று கோவை காந்திபுரம் வி.கே.கே.மேனன் சாலையில் கருப்பு தின பேரணி நடந்தது.
இந்த பேரணியில் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன், இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், விஷ்வ இந்து பரிஷத் கோவை கோட்ட செயலாளர் சிவலிங்கம் உள்பட 1000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து பா.ஜக. நிர்வாகிகள், தொண்டர்கள் மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் பேரணியாக சென்றனர். அப்போது, தங்களது கைகளில் பதாகைகள் வைத்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களையும் எழுப்பியடி சென்றனர்.
இந்த பேரணிக்கு போலீசார் அனுமதி அளிக்கப்படவில்லை. இதையடுத்து போலீசார் பேரணியில் கலந்து கொண்டவர்களை தடுத்து நிறுத்தினர்.
பின்னர் தடையை மீறி பேரணியில் ஈடுபட்ட பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை, வானதி உள்பட 917 பேரை போலீசார் கைது செய்து அங்குள்ள மண்டபங்களில் தங்க வைத்தனர்.
பின்னர் இரவில் அவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் தடையை மீறி ஊர்வலம் செல்ல முயன்றதாக பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை, வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ., இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், விஷ்வ இந்து பரிஷத் கோவை கோட்ட செயலாளர் சிவலிங்கம், பா.ஜ.க பொருளாளர் சேகர், பொதுச்செயலாளர் ஏ.பி.முருகானந்தம், மாநகர் மாவட்ட செயலாளர் ரமேஷ்குமார், முன்னாள் எம்.எல்.ஏ. சேலஞ்சர் துரை உள்பட 917 பேர் மீது காட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதேபோல் மரணம் அடைந்த அல்-உம்மா இயக்க தலைவர் எஸ்.ஏ.பாஷாவின் இறுதி ஊர்வலத்திற்கு அனுமதி அளித்த போலீசாைர கண்டித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணி மாவட்ட செலயாளர் ஆறுச்சாமி, மண்டல செயலாளர் மார்க்கெட் கிருஷ்ணா, பா.ஜ.க மாவட்ட பொதுச்செயலளார் ஜெய்சங்கர்,, பிரபாகரன், செல்வராஜ், சசிக்குமார் உள்பட மீது தடையைமீறி போராட்டத்தில் ஈடுபடுதல், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துதல் உள்ளிட்ட 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
- சரவணபாபுவை பிடிக்க போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
- போலீசாரால் சுற்றி வளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டார்.
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் மாவட்டம் ராமநாதபுரம் நகர் குட்செட் தெரு அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் ஓய்வு பெற்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம். பென்சன் பெற்று வந்த இவர் கடந்த 3.6.2020 அன்று இறந்து விட்டார்.
இந்த நிலையில் இவரது மகன் சரவணபாபு (வயது41) தனது தந்தை இறந்ததை மாவட்ட கருவூல அலுவலரிடம் தெரியப்படுத்தாமல் 2020-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டு வரை 28 மாதங்கள் மொத்தம் ரூ.8 லட்சத்து 84 ஆயிரத்து 774ஐ அவரது பென்சன் தொகையை ஏ.டி.எம். மூலம் எடுத்து வந்துள்ளார்.
இது கருவூல அலுவலருக்கு தெரிய வந்ததையடுத்து சரவணபாபுவை நேரில் அழைத்து மோசடியாக எடுத்த பணத்தை கருவூலத்தில் திருப்பி ஒப்படைக்கு மாறு எச்சரித்துள்ளார். அதனைத் தொடர்ந்து 2023-ம் ஆண்டு ரூ.30 ஆயிரம் மட்டும் திரும்ப செலுத்தி விட்டு தலைமறைவாகி விட்டார்.
ராமநாதபுரம் மாவட்ட கருவூல அலுவலர் சேசன் இதுதொடர்பாக போலீஸ் சூப்பிரண்டு சந்தீஷிடம் புகார் அளித்தார். உடனடியாக உதவி போலீஸ் சூப்பிரண்டு சிவராமன் உத்தரவின் பேரில் தலைமறைவான சரவணபாபுவை பிடிக்க பி.1 போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
தலைமறைவான சரவணபாபுவை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடிவந்த நிலையில் நேற்று அண்ணா நகரில் உள்ள அவரது வீட்டின் அருகே தனிப்படை போலீசாரால் சுற்றி வளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டார். தொடர்ந்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது.
விசாரணையில் தந்தையின் பென்சன் பணத்தை கையாடல் செய்ததை சரவணபாபு ஒப்புக் கொண்டதை தொடர்ந்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
ஓய்வு பெற்ற போலீஸ் இன்ஸ்பெக்டரின் மகன் தனது தந்தை இறந்ததை மறைத்து பென்சன் பணத்தை கையாடல் செய்தது ராமநாதபுரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- எண்ணூர் பகுதியில் மீண்டும் ஒரு அனல் மின் நிலைய விரிவாக்கத் திட்டம் தொடர்பாக கருத்து கேட்பு கூட்டம்.
- அனல் மின் நிலைய விரிவாக்கம் திட்டம் தொடர்பாக தங்களது ஆதரவு கருத்துகளையும் எதிர்ப்பு கருத்துகளையும் தெரிவித்தனர்.
வடசென்னை எண்ணூர் பகுதியில் மீண்டும் ஒரு அனல் மின் நிலைய விரிவாக்கத் திட்டம் முன்வைக்கப்படுவது தொடர்பானக் கருத்துக் கேட்புக் கூட்டம் நேற்று காலை 11 மணிக்கு சென்னை எர்ணாவூர் மகாலட்சுமி நகரில், பெருந்தலைவர் காமராஜர் மாளிகையில் நடைபெற்றது.
இந்த கூட்டம் சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தலைமையில் நடைபெற்றது. இதில், சட்டப் பேரவை உறுப்பினர் கே.பி.சங்கர், மாநகராட்சி மண்டல குழுத் தலைவர் தி.மு.தனியரசு, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினர் கே.குப்பன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில், அனல் மின் நிலைய விரிவாக்கம் திட்டம் தொடர்பாக தங்களது ஆதரவு கருத்துகளையும் எதிர்ப்பு கருத்துகளையும் தெரிவித்தனர்.
அப்போது, கூட்டத்தில் பேசிய சீமான், "சமீப காலமாக நடத்தப்படும் கருத்து கேட்பு கூட்டங்களில் நியாயமாக கருத்துகளை தெரிவிக்க வாய்ப்பு அளிப்பதில்லை. இக்கருத்து கேட்பு கூட்டத்திலும் ஆளுங்கட்சியினர் மட்டுமே இத்திட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தனர். இது குறித்து மக்களிடம் வீடு வீடாகச் சென்று கருத்துகளை பெறவேண்டும்" என்றார்.
மேலும் அவர், "சுற்றுச்சூழலை பாதுகாக்க எண்ணூர் அனல் மின் நிலையம் அமைப்பதை தடுக்க வேண்டும். இதற்காக தொடர்ந்து போராடுவோம்" என்றார் அவர். இதனால், கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. சீமான் வெளியேற வேண்டும் என கூட்டத்தில் வலியுறுத்தினர்.
இந்நிலையில், கருத்து கேட்பு கூட்டம் குறித்து சூழலியல் ஆர்வலரும், பூவுலகின் நண்பர்கள் அமைப்பை சேர்ந்தவருமான ஜி.சுந்தர்ராஜன் தனது எக்ஸ தளப்பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.
இந்த பதிவில் அவர் கூறுகையில், "பொதுமக்களை கட்சியினர் மிரட்டியது, பாதி கூட்டத்திற்கு தி.மு.க. எல்.எல்.ஏ.வே தலைமை தாங்கி நடத்தியது, உரிய பாதுகாப்பு வழங்காத காவல்துறை, கூட்டத்தை சட்டப்படி முடிக்காமல் மாவட்ட ஆட்சியர் வெளியேறியது என எண்ணூர் பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் அப்பட்டமான விதிமீறலாக நடந்துள்ளது" என்றார்.
- 3 மீனவர்கள் நேற்று மதியம் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.
- மீனவர்களின் குடும்பத்தினர் கடும் வேதனை அடைந்தனர்.
வேதாரண்யம்:
நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் அருகே தமிழக எல்லையில் வெவ்வேறு இடங்களில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 6 பேரை இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்கி மீன்பிடி உபகரணங்களை பறித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அது குறித்த விபரம் வருமாறு:-
நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் அடுத்துள்ள கோடியக்கரையில் இருந்து அக்கரைப்பேட்டையை சேர்ந்த விஜயகுமார் என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் அதே பகுதியை சேர்ந்த ராஜ்குமார், ராஜேந்திரன், நாகலிங்கம் ஆகிய 3 மீனவர்கள் நேற்று மதியம் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.
அவர்கள் கோடியக்கரைக்கு தென்கிழக்கே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு 2 படகுகளில் வந்த 6 இலங்கை கடற்கொள்ளையர்கள் திடீரென மீனவர்களின் படகை வழிமறித்தனர். பின்னர், மீனவர்களின் படகுக்கு சென்று அவர்களை கத்தி மற்றும் கட்டையால் தாக்கி உள்ளனர்.
அதுமட்டுமின்றி, படகில் இருந்த மீன்கள், மீன்பிடி வலைகள், ஜி.பி.எஸ். கருவி உள்ளிட்ட சுமார் ரூ.3 லட்சம் மதிப்புள்ள மீன்பிடி உபகரணங்களை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச்சென்றனர்.

இலங்கை கடற்கொள்ளையர்கள் அரங்கேற்றிய இந்த தாக்குதலில் மீனவர் ராஜேந்திரனுக்கு தலையில் வெட்டுக்காயமும், ராஜ்குமாருக்கு தலையில் வெட்டுக்காயம் மற்றும் கையில் கட்டையால் அடித்ததில் காயமும் ஏற்பட்டது. மற்றொரு மீனவரான நாகலிங்கத்திற்கு உள்காயம் ஏற்பட்டது.
மீன்கள், மீன்பிடி உபகரணங்கள் உள்ளிட்ட அனைத்தையும் பறிகொடுத்து, உடலில் பலத்த காயங்களுடன் இன்று காலை மீனவர்கள் கரைக்கு திரும்பினர். அவர்களை கண்ட சக மீனவர்கள் காயமடைந்த 3 பேரையும் மீட்டு வேதாரண்யம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த மீனவர்களின் குடும்பத்தினர் கடும் வேதனை அடைந்தனர்.
இதேபோல், வேதாரண்யம் அடுத்துள்ள பெருமாள்பேட்டை கிராமத்தை சேர்ந்த குமார், லட்சுமணன், ஜெகன் ஆகிய 3 மீனவர்கள் கோடியக்கரையில் இருந்து மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.
அப்போது அங்கு வந்து இலங்கை கடற்கொள்ளையர்கள் 3 மீனவர்களையும் தாக்கி, அவர்களிடம் இருந்த ரூ.1 லட்சம் மதிப்புள்ள வலை, மீன்பிடி உபகரணங்கள் உள்ளிட்ட பொருட்களை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச்சென்றனர்.
பொருட்களையும் இழந்து, உடலில் காயங்களுடன் இன்று காலை பெருமாள்பேட்டை மீனவர்கள் 3 பேரும் கரை திரும்பினர். பின்னர் நடந்தது குறித்து சக மீனவர்களிடம் கூறி வேதனை தெரிவித்தனர்.
காற்றழுத்த தாழ்வு பகுதி, கனமழை எச்சரிக்கை காரணமாக கடந்த 7 நாட்களாக கடலுக்கு செல்லாமல் இருந்த நாகை மீனவர்கள் நேற்று முன்தினம் மீண்டும் கடலுக்கு சென்றனர். அவ்வாறு சென்ற மீனவர்களை அடுத்தடுத்து இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்கி அவர்களிடம் இருந்த பொருட்களையும் பறித்த சம்பவம் கோடியக்கரை மீனவர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதனால் தங்களது வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக மீனவர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து மத்திய, மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுத்து நிரந்தர தீர்வு காண வேண்டும் எனவும் அப்பகுதி மீனவர்கள் கண்ணீர் மல்க கோரிக்கையும் விடுத்துள்ளனர்.
- மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்ட விவகாரத்தில் மொத்தம் 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
- இந்த வழக்கில் ஏற்கனவே 2 ஏஜெண்டுகள் கைது செய்யப்பட்ட நிலையில் கேரள ஏஜெண்டுக்கு போலீசார் வலை.
நெல்லையில் கேரள மாநில மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்ட விவகாரம் தொடர்பாக மேலும் 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்ட விவகாரத்தில் மொத்தம் 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதில், சுத்தமல்லி காவல் நிலையத்தில் 3 வழக்குகள் பதிவு பதிவு செய்யப்பட்டு, 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மேலும், முக்கூடல் காவல் நிலையத்தில் ஒரு வழக்கும், சீதற்பநல்லூர் காவல் நிலையத்தில் ஒரு வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் ஏற்கனவே 2 ஏஜெண்டுகள் கைது செய்யப்பட்ட நிலையில் கேரள ஏஜெண்டுக்கு போலீசார் வலை வீசியுள்ளனர்.
- கட்டப்பஞ்சாயத்து தொடர்பாக அறிவிப்பு பலகை எழுதி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
- புகார் கொடுப்பவர்களிடம் மனுக்கள் பெறப்பட்டு விசாரணை மட்டுமே நடைபெறும்.
விழுப்புரம்:
தமிழக டி.ஜி.பி சங்கர் ஜூவால் பல்வேறு மாவட்டகளுக்கு நேரடியாக சென்று போலீஸ் சூப்பிரண்டு அலுவலகங்களில் சட்டம்-ஒழுங்கு குறித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.
அதன்படி விழுப்புரம் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் உள்ளிட்ட 3 மாவட்ட போலீஸ் உயர் அதிகாரிகளுடன் நேற்று அவர் ஆலோசனை நடத்தினார்.
இந்த நிலையில் விழுப்புரம் மாவட்ட போலீஸ் நிலையங்கள் முன்பு அறிவிப்பு பலகை என்ற புதிய போர்டு வைக்கப்பட்டுள்ளது.
அதில் போலீஸ் நிலையங்களில் கட்டப்பஞ்சாயத்துகளுக்கு அனுமதி இல்லை. இப்படிக்கு போலீஸ் நிலையம் என்று எழுதி வைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து போலீஸ் வட்டாரத்தில் விசாரித்த போது கூறியதாவது:-
போலீஸ் நிலையத்திற்கு புகார் கொடுக்க வருபவர்களிடம் கட்டப்பஞ்சாயத்து செய்வதாக புகார்கள் வந்தது.
குறிப்பாக சிவில் வழக்கு, மகளிர் போலீஸ் நிலையங்களில் குடும்ப நல வழக்குகள், அடிதடி வழக்குகளில் வழக்கு பதிவு செய்வதில் புகார்தாரர்கள், எதிர் தரப்பினர்களை வைத்து கட்டப் பஞ்சாயத்து நடப்பதாக புகார் கூறப்பட்டது.
மேலும் இடைத்தரகர்களை பேச்சு வார்த்தைக்கு அழைத்து வந்து போலீஸ் நிலையங்கள் கட்டப் பஞ்சாயத்து செய்யும் இடங்களாக மாறி வருவதாகவும் கூறப்பட்டது.
இது தொடர்பான புகார்கள் போலீஸ் சூப்பிரண்டுக்கு சென்ற நிலையில் ஒவ்வொரு போலீஸ் நிலையங்கள் முன்பும் கட்டப்பஞ்சாயத்து தொடர்பாக அறிவிப்பு பலகை எழுதி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
அதன்படி மாவட்டத்தில உள்ள போலீஸ் நிலையங்கள் முன்பு கட்டப் பஞ்சாயத்துக்கு இடமில்லை என்று பெரிய எழுத்தில் எழுதி அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் புகார் கொடுப்பவர்களிடம் மனுக்கள் பெறப்பட்டு விசாரணை மட்டுமே நடைபெறும். மற்றபடி பேச்சு வார்த்தை போன்ற பஞ்சாயத்துக்கள் நடைபெறாது.
இதனை வெளிப்படையாக தெரிவிக்கவே இந்த போர்டுகளை போலீஸ் நிலையம் முன் வைத்துள்ளனர்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.






