என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    போலீஸ் நிலையங்களில் கட்ட பஞ்சாயத்துக்கு அனுமதி இல்லை- அறிவிப்பு பலகை வைத்த போலீசார்
    X

    போலீஸ் நிலையங்களில் கட்ட பஞ்சாயத்துக்கு அனுமதி இல்லை- அறிவிப்பு பலகை வைத்த போலீசார்

    • கட்டப்பஞ்சாயத்து தொடர்பாக அறிவிப்பு பலகை எழுதி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
    • புகார் கொடுப்பவர்களிடம் மனுக்கள் பெறப்பட்டு விசாரணை மட்டுமே நடைபெறும்.

    விழுப்புரம்:

    தமிழக டி.ஜி.பி சங்கர் ஜூவால் பல்வேறு மாவட்டகளுக்கு நேரடியாக சென்று போலீஸ் சூப்பிரண்டு அலுவலகங்களில் சட்டம்-ஒழுங்கு குறித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.

    அதன்படி விழுப்புரம் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் உள்ளிட்ட 3 மாவட்ட போலீஸ் உயர் அதிகாரிகளுடன் நேற்று அவர் ஆலோசனை நடத்தினார்.

    இந்த நிலையில் விழுப்புரம் மாவட்ட போலீஸ் நிலையங்கள் முன்பு அறிவிப்பு பலகை என்ற புதிய போர்டு வைக்கப்பட்டுள்ளது.

    அதில் போலீஸ் நிலையங்களில் கட்டப்பஞ்சாயத்துகளுக்கு அனுமதி இல்லை. இப்படிக்கு போலீஸ் நிலையம் என்று எழுதி வைக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து போலீஸ் வட்டாரத்தில் விசாரித்த போது கூறியதாவது:-

    போலீஸ் நிலையத்திற்கு புகார் கொடுக்க வருபவர்களிடம் கட்டப்பஞ்சாயத்து செய்வதாக புகார்கள் வந்தது.

    குறிப்பாக சிவில் வழக்கு, மகளிர் போலீஸ் நிலையங்களில் குடும்ப நல வழக்குகள், அடிதடி வழக்குகளில் வழக்கு பதிவு செய்வதில் புகார்தாரர்கள், எதிர் தரப்பினர்களை வைத்து கட்டப் பஞ்சாயத்து நடப்பதாக புகார் கூறப்பட்டது.

    மேலும் இடைத்தரகர்களை பேச்சு வார்த்தைக்கு அழைத்து வந்து போலீஸ் நிலையங்கள் கட்டப் பஞ்சாயத்து செய்யும் இடங்களாக மாறி வருவதாகவும் கூறப்பட்டது.

    இது தொடர்பான புகார்கள் போலீஸ் சூப்பிரண்டுக்கு சென்ற நிலையில் ஒவ்வொரு போலீஸ் நிலையங்கள் முன்பும் கட்டப்பஞ்சாயத்து தொடர்பாக அறிவிப்பு பலகை எழுதி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

    அதன்படி மாவட்டத்தில உள்ள போலீஸ் நிலையங்கள் முன்பு கட்டப் பஞ்சாயத்துக்கு இடமில்லை என்று பெரிய எழுத்தில் எழுதி அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.

    இதன் மூலம் புகார் கொடுப்பவர்களிடம் மனுக்கள் பெறப்பட்டு விசாரணை மட்டுமே நடைபெறும். மற்றபடி பேச்சு வார்த்தை போன்ற பஞ்சாயத்துக்கள் நடைபெறாது.

    இதனை வெளிப்படையாக தெரிவிக்கவே இந்த போர்டுகளை போலீஸ் நிலையம் முன் வைத்துள்ளனர்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    Next Story
    ×