என் மலர்
உள்ளூர் செய்திகள்
- அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
- சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
சென்னை:
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
நேற்று, மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மாலை 17.30 மணி அளவில், ஆந்திர கடலோரப்பகுதிகளை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, கிழக்கு-வடகிழக்கு திசையில் நகர்ந்து, இன்று 8.30 மணி அளவில் மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில், விசாகபட்டினத்திற்கு (ஆந்திரா) தெற்கு-தென்கிழக்கே சுமார் 430 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னைக்கு கிழக்கு- வடகிழக்கே 480 கிலோ மீட்டர் தொலைவிலும், கோபல்பூரிற்கு (ஒரிசா) தெற்கே 590 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலைகொண்டுள்ளது. இது, அடுத்த 12 மணி நேரத்தில், கிழக்கு-வடகிழக்கு திசையில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மெதுவாக நகர்ந்து, அதன் பிறகு, கடலில் படிப்படியாக வழுவிழக்கக்கூடும்.
இன்று முதல் 27-ந்தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகாலை வேளையில் ஒருசில பகுதிகளில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 31° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24-25° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகாலை வேளையில் ஒருசில பகுதிகளில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 31-32° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24-25° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
இன்று மற்றும் நாளை வடதமிழக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
- குட்கா மற்றும் காரை பறிமுதல் செய்தனர்.
- புகையிலை பொருட்கள் இருந்தது தெரிய வந்தது.
மத்தூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் போலீசார் கிருஷ்ணகிரி-ஊத்தங்கரை சாலை பெருகோபனப் பள்ளி பக்கமாக ரோந்து சென்றனர். அந்த பகுதியில் இருந்த காரை நிறுத்தி சோதனை செய்த போது அதில் 400 கிலோ புகையிலை பொருட்கள் இருந்தது தெரிய வந்தது.
விசாரணையில் பெங்களூருவில் இருந்து திருவண்ணாமலைக்கு குட்கா காரில் கடத்தி வரப்பட்டதும், போலீசுக்கு பயந்து காரை விட்டு டிரைவர் தப்பி சென்றதும் தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து போலீசார் குட்கா மற்றும் காரை பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி ஓடிய டிரைவரை தேடி வருகிறார்கள்.
ஓசூர் தாலுகா மத்திகிரி போலீசார் டி.வி.எஸ். சோதனை சாவடி பக்கமாக ரோந்து சென்றனர். அந்த வழியாக ஸ்கூட்டரில் வந்த நபரை நிறுத்தி சோதனை செய்தனர். இதில் 13 கிலோ 750 கிராம் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தது தெரிய வந்தது.
விசாரணையில் மணிகண்டன் (33), ஓசூர் முனீஸ்வர் நகரை சேர்ந்தவர் என தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். ரூ.19 ஆயிரத்து 600 மதிப்புள்ள ஸ்கூட்டர், புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
- ஆ.இரா.வேங்கடாசலபதி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர்.
- சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தில் (MIDS) பேராசிரியராகப் பணிபுரிந்து வருகிறார்.
வரலாற்று ஆய்வாளரும் எழுத்தாளருமான ஆ.இரா.வேங்கடாசலபதிக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆ.இரா. வேங்கடாசலபதி எழுதிய "திருநெல்வேலி எழுச்சியும் வ.உ.சியும் 1908" ஆய்வு நூலுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டது. இதையடுத்து சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்ட ஆ.இரா. வேங்கடாசலபதிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று முகாம் அலுவலகத்தில் எழுத்தாளர் வேங்கடாசலபதி சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டதற்காக சந்தித்து வாழ்த்து பெற்றார்.
ஆ.இரா.வேங்கடாசலபதி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். தற்போது சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தில் (MIDS) பேராசிரியராகப் பணிபுரிந்து வருகிறார்.
- காட்டு யானைகள் குட்டிகளுடன் தேன்கனிக்கோட்டை அஞ்செட்டி சாலையை கடந்து சென்றன.
- காட்டு யானைகள் கூட்டத்தை வனத்துறையினர் கர்நாடக மாநில வனப்பகுதிக்கு விரட்ட திட்டமிட்டுள்ளனர்.
தளி:
கிருஷ்ணகிரி மாவட்டம் சானமாவு வனப்பகுதியில் முகாமிட்டு சுற்றித்திரிந்த 40-க்கும் மேற்பட்ட காட்டு யானைகளை வனத்துறையினர் தேன்கனிக்கோட்டை கஸ்பா வனப்பகுதிக்கு விரட்டினர். இந்த காட்டு யானைகளும் ஏற்கனவே அங்கு முகாமிட்டிருந்த காட்டு யானைகள் என மொத்தமாக 50-க்கும் மேற்பட்ட யானைகள் சேர்ந்தன.
இந்த நிலையில் நேற்று இரவு தேன்கனிக்கோட்டை கஸ்பா பகுதியில் முகாமிட்டிருந்த 50-க்கும் மேற்பட்ட காட்டு யானைகளை வனத்துறையினர் தாவரக்கரை வனப்பகுதிக்கு விரட்டும் பணிகளில் ஈடுபட்டனர். அப்போது காட்டு யானைகள் குட்டிகளுடன் தேன்கனிக்கோட்டை அஞ்செட்டி சாலையை கடந்து சென்றன.
இந்த காட்டு யானைகள் கவிக்கோவில், மாரசந்திரம் மேடு, சாப்ராணப்பள்ளி, சீனிவாசபுரம், லக்கசந்திரம் வழியாக அஞ்செட்டி சாலையை கடந்து சென்றன. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அந்த சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. தொடர்ந்து வனத்துறையினர் காட்டு யானைகளை கொத்தூர், உச்சனப்பள்ளி, அர்த்தகூர், பாலதோட்டனப்பள்ளி, ரங்கசந்திரம், கோட்டை உலிமங்கலம் கிராமங்கள் வழியாக தாவரக்கரை வனப்பகுதிக்கு விரட்டி சென்றனர். காட்டு யானைகள் விரட்டப்பட்டதால் ஓசூர் சானமாவு, ராயக்கோட்டை, ஊடேதுர்கம், தேன்கனிக்கோட்டை கஸ்பா மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதி கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் நிம்மதியடைந்தனர்.
இதனிடையே, 20 யானைகள் தாவரக்கரை வனப்பகுதியில் முகாமிட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் உள்ள விவசாயிகள் அச்சம் அடைந்துள்ளனர். மேலும் யானைகளை விரைந்து கர்நாடக வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையடுத்து காட்டு யானைகள் கூட்டத்தை வனத்துறையினர் கர்நாடக மாநில வனப்பகுதிக்கு விரட்ட திட்டமிட்டுள்ளனர்.
- இன்றைய முக்கியச் செய்திகள்.
- இன்றைய அரசியல், சினிமா, விளையாட்டு செய்திகளை ஒரு சில வரிகளில் பெறுங்கள்.
தமிழக அரசியல், பொது நிகழ்வுகள், தேசிய அரசியல், விளையாட்டு மற்றும் உலக நடப்புகள் குறித்த அனைத்து செய்திகளையும் ஒரே பதிவில் அறிந்து கொள்ளுங்கள்..
- நீர்வரத்து குறைந்தபோதிலும் மெயின் அருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
- பிலிக்குண்டுலுவில் தொடர்ந்து மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் நீர்வரத்தை கண்காணித்து வருகின்றனர்.
ஒகேனக்கல்:
தமிழகம்-கர்நாடகா எல்லை பகுதியில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் சில தினங்களுக்கு முன்பு பெய்த கனமழையின் காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 8 ஆயிரம் கனஅடி வரை அதிகரித்து சென்றது.
இந்த நிலையில் மழையின் அளவு குறைந்ததால் காவிரி ஆற்றில் நீர்வரத்து படிப்படியாக குறையத் தொடங்கியது. இதனால் நேற்றைய நிலவரப்படி வினாடிக்கு 5 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை சற்று சரிந்து வினாடிக்கு 3500 கன அடியாக குறைந்துள்ளது.
நீர்வரத்து குறைந்தபோதிலும் மெயின் அருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
தமிழக-கர்நாடகா எல்லை பகுதியில் அடிக்கடி மழை பெய்து வருவதால், பிலிக்குண்டுலுவில் தொடர்ந்து மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் நீர்வரத்தை கண்காணித்து வருகின்றனர்.
- எந்தவித தகுதியுமே இல்லாத வெட்கம், மானம், சூடு, சொரனை என எதுவுமே இல்லாமல் உள்ளவர் தான் ரகுபதி.
- அஇஅதிமுக-வை சீண்டினால் அதற்கான பதிலடி, இருமடங்காக ரகுபதியையே வந்து சேரும்.
சட்டத்துறை அமைச்சர் ரகுபதியை தாக்கி அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடுமையாக தாக்கி விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து ஜெயக்குமார் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
விடியா திமுக ஆட்சியின் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிப்பதை கழகப் பொதுச்செயலாளர் எடப்பாடியார் வெட்டவெளிச்சமாக்கிவிட்ட விரக்தியில், ரகுபதி எனும் உதிர்ந்த ரோமம் பதில் என்ற பெயரில் வாந்தியைக் கக்கியிருக்கிறது.
அமைச்சர் என்ற பதவிக்கான எந்தவித தகுதியுமே இல்லாத வெட்கம், மானம், சூடு, சொரனை என எதுவுமே இல்லாமல் உள்ளவர் தான் ரகுபதி.
அண்ணா தி.மு.க. வேட்டியைக் கட்டி அரசியல் வாழ்வு பெற்று, இந்த இயக்கத் தொண்டர்கள் சிந்திய வியர்வையிலும் ரத்தத்திலும் சட்டமன்ற உறுப்பினராகி, புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பெரும் உழைப்பால் அமைச்சர் பதவியைப் பெற்ற இந்த ரகுபதிக்கு, வாழ்வளித்த இயக்கத்தின் மீதே இழிச்சொல் உரைக்க நா கூசவில்லையா?
அஇஅதிமுக கொடுத்த முகவரியால் இன்று வரை அரசியல் பிழைப்பு நடத்தும் ரகுபதி, திமுகவின் முதல் குடும்பத்தின் சிறந்த கொத்தடிமை விருது பெற முயற்சிப்பது அவருடைய தனிப்பட்ட வேள்வியாக இருக்கலாம். அதற்கு அஇஅதிமுக-வை சீண்டினால் அதற்கான பதிலடி, இருமடங்காக அவரையே வந்து சேரும்.
கருணாநிதி ஆட்சியில் விவசாய பம்பு செட்களுக்காண மின் கட்டணம் குறித்து கேட்ட விவசாயிகளை ஈவு இரக்கமின்றி துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற வரலாற்றை ரகுபதி திமுக-வில் இணைந்த பின் வசதியாக மறந்து விட்டாரா?
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- கொலை சம்பவத்தால் கீழநத்தம் பகுதி முழுவதும் பதற்றம் நிலவுகிறது.
- வடக்கூர், தெற்கூர் ஆகிய 3 இடங்களிலும் சுமார் 200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
நெல்லை:
நெல்லை பாளையங்கோட்டை கீழநத்தம் மேலூர் பகுதியை சேர்ந்தவர் சண்முகம். இவரது மகன்கள் மாரிசெல்வம்(வயது 25), மாயாண்டி என்ற பல்ல மாயாண்டி(23).
மாயாண்டி நேற்று கொலை முயற்சி வழக்கு தொடர்பாக மாயாண்டி கோர்ட்டில் ஆஜராவதற்காக தனது சகோதரர் மாரி செல்வத்துடன் நேற்று நெல்லை மாவட்ட நீதிமன்றத்திற்கு வந்திருந்தார். அப்போது நீதிமன்றம் முன்பு வைத்து அவரை ஒரு கும்பல் சரமாரியாக வெட்டிக்கொலை செய்து விட்டு காரில் தப்பிச்சென்றது.
அப்போது அதில் ஒருவரை போலீசாரும், வக்கீல்களும் சேர்ந்து பிடித்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் கீழநத்தம் இந்திரா காலனியை சேர்ந்த ராமகிருஷ்ணன்(25) என்பதும், கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 13-ந்தேதி கீழநத்தம் வடக்கூரை சேர்ந்த கீழநத்தம் 2-வது வார்டு உறுப்பினர் ராஜாமணி கொலை செய்யப்பட்டதற்கு பழிக்குப்பழியாக மாயாண்டியை, ராஜாமணியன், மனோராஜ் மற்றும் அவரது உறவினர்கள், நண்பர்கள் என 7 பேர் கும்பல் தீர்த்துக்கட்டியது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி கீழநத்தம் வடக்கூரை சேர்ந்த தங்கமகேஷ்(21), மனோராஜ்(27), சிவா(19), முத்துக்கிருஷ்ணன்(26), கண்ணன்(22), அனவரத நல்லூரை சேர்ந்த மற்றொரு கண்ணன்(20) ஆகிய 7 பேரை கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் மனோராஜ் வாக்குமூலமாக கூறியதாவது:-

எனது சகோதரன் ராஜாமணியை எவ்வித காரணமும் இன்றி மாயாண்டி வெட்டிக் கொலை செய்தார். இதனால் எனது குடும்பத்தினர் மிகுந்த துயரம் அடைந்தனர். இதனை பார்த்து எனக்கு ஆத்திரம் ஏற்பட்டது. எப்படியாவது மாயாண்டியை தீர்த்துக்கட்ட வேண்டும் என்று முடிவு செய்தேன். தொடர்ந்து அவரது நடமாட்டத்தை கண்காணித்து வந்த நிலையில், அவர் கோவையில் இருந்து வழக்கு விசாரணைக்காக நேற்று கோர்ட்டுக்கு வருவதை அறிந்தேன்.
இதனால் எனது நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் சேர்ந்து காரில் கோர்ட்டு எதிரே காத்திருந்தேன். அப்போது அவர் ஓட்டலுக்கு சென்றுவிட்டு நீதிமன்ற நுழைவு வாயிலை நோக்கி சென்றார். உடனே அவரை சுற்றி வளைத்து கொலை செய்து விட்டோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதனிடையே இந்த கொலை சம்பவத்தில் உண்மை குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்ய வேண்டும், மாயாண்டி குடும்பத்திற்கு பாதுகாப்பு வழங்கவேண்டும் என்று கோரிக்கையை வலியுறுத்தி மாயாண்டி உடலை வாங்க அவரது உறவினர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
கொலை சம்பவத்தால் கீழநத்தம் பகுதி முழுவதும் பதற்றம் நிலவுகிறது. இதனால் கீழநத்தம் மேலூர், வடக்கூர், தெற்கூர் ஆகிய 3 இடங்களிலும் சுமார் 200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
- பாராளுமன்ற நுழைவாசலில் என்ன நடந்தது என்பது உலகத்திற்குத் தெரிய வேண்டாமா?
- உண்மை என்ன, பொய் என்ன என்பதைப் பதிவுகளை வெளியிட்டால் தெளிவாகத் தெரிந்துவிடுமே?
சென்னை:
பாராளுமன்ற வளாகத்தில் நேற்று முன்தினம் அம்பேத்கர் விவகாரம் தொடர்பாக பா.ஜ.க. எம்.பி.க்களும், இந்தியா கூட்டணி எம்.பி.க்களும் நேருக்கு நேர் போட்டி போராட்டம் நடத்தினார்கள்.
அப்போது ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் கீழே விழுந்து 2 பா.ஜ.க. எம்.பி.க்கள் காயம் அடைந்தனர். அவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பா.ஜ.க. எம்.பி.க்கள் இருவரும் தங்களை மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தள்ளி விட்டதாக குற்றம் சாட்டினார்கள். இது தொடர்பாக பாராளுமன்ற சாலை காவல் நிலையத்தில் பா.ஜ.க. சார்பில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் ராகுல் மீது 6 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனர். ராகுல் மீது பொய் புகார் கூறப்பட்டுள்ளதாக இந்தியா கூட்டணியை சேர்ந்த கட்சிகள் தெரிவித்து வருகின்றன.
இந்த நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நிதி அமைச்சருமான ப. சிதம்பரம் எக்ஸ் தள பக்கத்தில், பாராளுமன்ற நுழைவாசலில் என்ன நடந்தது என்பது உலகத்திற்குத் தெரிய வேண்டாமா?
நுழைவாசலிலும் பாராளுமன்ற வளாகத்திலும் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்புக் கேமராக்களில் உள்ள ஒளி, ஒலி பதிவுகளை வெளியிட வேண்டியது தானே?
அந்தப் பதிவுகளை வெளியிடுவதற்கு அரசு ஏன் மறுக்கிறது?
உண்மை என்ன, பொய் என்ன என்பதைப் பதிவுகளை வெளியிட்டால் தெளிவாகத் தெரிந்துவிடுமே? என்று கூறியுள்ளார்.
மேலும் மற்றொரு பதிவில்,
பாராளுமன்ற நுழைவாயிலில் பொருத்தப்பட்டுள்ள கேமராக்களின் ஒளி, ஒலி பதிவுகளை வெளியிட வேண்டும் என்பது கோரிக்கை...
இந்த எளிய கோரிக்கையைப் புரிந்த கொள்ள முடியாதா?
இதற்கு 'வெளியிட வேண்டும்' அல்லது 'வெளியிட வேண்டாம்' என்ற இரண்டில் ஒன்று தானே பதிலாக இருக்க முடியம்?
நேரடியாகப் பதில் சொல்வதை ஏன் அரசு தவிர்க்கிறது?
இந்தக் கோரிக்கைக்குப் பதில் சொல்லாமல் வாதப்பிரதிவாதம், வியாக்கியானம், தத்துவம் எல்லாம் எதற்கு? என்று பதிவிட்டுள்ளார்.
- தமிழ்நாட்டில் புதிய ரெயில் திட்டங்களுக்கான அனுமதி மற்றும் தேசிய நெடுஞ்சாலை திட்டங்களை அதிகரிக்க வேண்டும் எனவும் மத்திய அரசை வலியுறுத்தினேன்.
- தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ரூ.6.675 கோடியை விடுவிக்க மத்திய அரசை வலியுறுத்தினேன்.
சென்னை :
தமிழ்நாடு நிதித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
மத்திய அரசின் வரவு - செலவு திட்டத்திற்கான முன்னோட்டம் குறித்து ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் மத்திய அரசு நடத்திய கூட்டத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் பங்கேற்றேன்.
சென்னை மெட்ரோ ரெயில் 2-ம் கட்ட பணிகளுக்காகத் தமிழ்நாடு அரசு ரூ.26,490 கோடி ரூபாய் செலவிட்டுள்ள காரணத்தால், மாநிலத்தில் இதர வளர்ச்சித் திட்டங்களை மேற்கொள்ள ஏதுவாக, நடப்பாண்டில் ரூ. 10,000 கோடி மற்றும் அடுத்த ஆண்டு ரூ.16,000 கோடி ஒதுக்கீடு செய்ய வேண்டுமென மத்திய அரசை வலியுறுத்தினேன்.
ஆசிரியர்களுக்கான ஊதியம் - கல்வி உரிமைச் சட்டத்தை நடைமுறைப்படுத்தல் உள்ளிட்ட பள்ளிச் செயல்பாடுகளை முடக்கும் வகையில், ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின் ரூ.2,152 கோடி நிதியை விடுவிக்காமல் நிபந்தனைகளை ஏற்க வற்புறுத்தி வரும் மத்திய அரசு, 44 இலட்சம் மாணவர்கள் - 2.2 இலட்சம் ஆசிரியர்கள் - 21,276 பணியாளர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு நிதியை உடனடியாக விடுவிக்க வலியுறுத்தினேன்.
மத்திய அரசின் 2025 நிதிநிலை அறிக்கையில், தமிழ்நாட்டில் புதிய ரெயில் திட்டங்களுக்கான அனுமதி மற்றும் தேசிய நெடுஞ்சாலை திட்டங்களை அதிகரிக்க வேண்டும் எனவும் மத்திய அரசை வலியுறுத்தினேன்.
வானிலை நிகழ்வுகளின் எண்ணிக்கை அதிகரிப்பு மற்றும் அவற்றின் தீவிரத்தன்மை காரணமாக தமிழ்நாடு தொடர் பேரிடர் சவால்களைச் சந்தித்து வரும் நிலையில், மக்களின் உயிர் - வாழ்வாதாரம் - உட்கட்டமைப்புகளுக்கு பெரும் சேதம் உண்டாகி வருகிறது. நிவாரணம் மற்றும் மறுசீரமைப்புப் பணிகளுக்காக மாநில பேரிடர் நிவாரண நிதி போதுமானதாக இல்லை. குறிப்பாக, ஃபெஞ்சல் புயல் பாதிப்புகளைக் கருத்தில் கொண்டு, தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ரூ.6.675 கோடியை விடுவிக்க மத்திய அரசை வலியுறுத்தினேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- R-Wallet ரீசார்ஜ் செய்யும்போது வழங்கப்பட்ட சலுகை, இப்போது டிக்கெட் எடுக்கும்போது வழங்கப்படுகிறது.
- டிக்கெட் வாங்குவோரை ஊக்குவிக்கும் விதமாக சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
R-Wallet என்பது UTS (முன்பதிவில்லா டிக்கெட் எடுக்கும் முறை) மொபைல் பயன்பாட்டில் உள்ள வாலட் அம்சமாகும்.
இது இந்திய ரெயில்வே பயணிகளுக்கு முன்பதிவு செய்யப்படாத டிக்கெட்டுகளை வாங்கவும், தானியங்கி டிக்கெட் விற்பனை இயந்திரங்களில் பணம் செலுத்தவும் வசதி செய்து தரப்பட்டிருக்கிறது.
இந்நிலையில், ரெயில் பயணிகள் R-Wallet பயன்படுத்தி UTS மொபைல் ஆப் அல்லது ATVM (தானியங்கி டிக்கெட் விற்பனை இயந்திரங்கள்) மூலம் டிக்கெட் எடுத்தால் 3% கேஷ்பேக் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு, R-Wallet ரீசார்ஜ் செய்யும்போது வழங்கப்பட்ட 3% சலுகை, இப்போது டிக்கெட் எடுக்கும்போது வழங்கப்படுகிறது.
டிக்கெட் பெறுவதற்காக நீண்ட வரிசையில் நிற்பதை தவிர்க்க, ஆப் மூலம் எளிதில் டிக்கெட் பெற்றுக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
UTS மொபைல் செயலியில் உள்ள R-Wallet அல்லது ATVM மூலம் டிக்கெட் வாங்குவோரை ஊக்குவிக்கும் விதமாக சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- செங்கல் சூளைகளுக்கான செம்மண் விற்பனையிலும் ஈடுபட்டு வருகிறார்.
- அரசியல் காரணங்களுக்காக இந்த சோதனை நடத்தப்படுவதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஒட்டன்சத்திரம்:
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகில் உள்ள சத்திரப்பட்டியை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 49). இவர் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களிலும் மிகப்பெரிய அளவில் பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். மேலும் செங்கல் சூளைகளுக்கான செம்மண் விற்பனையிலும் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில் கடந்த 18-ந் தேதி காலை மதுரையை சேர்ந்த வருமானவரித்துறை அதிகாரிகள் 15 பேர் 6 கார்களில் செந்தில்குமார் வீட்டில் சோதனை நடத்துவதற்காக வந்தனர். வீட்டின் பிரதான நுழைவு வாயிலை பூட்டிய அதிகாரிகள் வீட்டில் இருந்தவர்கள் வெளியேறவும், உள்ளே நுழையும் வெளி நபர்களையும் சோதனையிட்டனர்.
இந்த வீட்டின் அருகில் இருந்த அலுவலகம், விருந்தினர் ஓய்வு இல்லம் ஆகியவற்றிலும் சோதனை நடத்தப்பட்டது. சோதனையின் போது செந்தில்குமார் மற்றும் அவரது மனைவி கனியாவதி ஆகிய குடும்பத்தினர் மட்டும் வீட்டில் இருந்தனர்.
கடந்த 4 நாட்களாக நடந்த சோதனை இன்று அதிகாலை நிறைவு பெற்றது. சோதனையின் போது செந்தில் குமாரின் பங்களா அருகில் ஒரு பாழடைந்த வீடு இருந்தது குறித்து அதிகாரிகள் கேட்டனர். அதில் பழைய பொருட்கள் இருப்பதாக அவர் கூறினார். அந்த அறையின் சாவியை கேட்டபோது, அது தொலைந்து போய் விட்டதாக தெரிவித்தார். இதனால் கடப்பாறையை எடுத்து வரச்சொல்லி அந்த அறையை உடைத்து பார்த்தனர். அப்போது அந்த வீட்டுக்குள் சொத்து தொடர்பாக முக்கிய ஆவணங்கள் இருந்தது தெரிய வந்தது. மேலும் கணக்கில் வராத நகைகள் மற்றும் கட்டு கட்டாக பணம் இருந்தது தெரிய வரவே அதனையும் கைப்பற்றினர்.
செந்தில்குமாரின் உறவினர்களான குழந்தைவேல் மற்றும் இவரது தம்பி முருகன் ஆகியோர் ஒட்டன்சத்திரம்-தாராபுரம் சாலையில் நகைக்கடை வைத்து நடத்தி வருகின்றனர். ஒட்டன்சத்திரம்-பழனி சாலையில் இவர்களுக்கு சொந்தமான பெட்ரோல் பங்க்கும் இயங்கி வருகிறது. இந்நிலையில் செந்தில்குமாரின் வீட்டில் சோதனை நடத்தப்பட்ட அதே நேரத்தில் குழந்தைவேல், முருகன் ஆகியோருக்கு சொந்தமான நகைக்கடை, பெட்ரோல் பங்க் ஆகிய இடங்களிலும் வருமான வரித்துறையால் சோதனை நடத்தப்பட்டது.
இந்த சோதனையில் 6 பேர் கொண்ட குழுவினர் ஈடுபட்டனர். குழந்தைவேல் கடந்த சில தினங்களுக்கு முன்பு உடுமலைப்பேட்டை ரோட்டில் 4 ஏக்கர் பரப்பளவில் புதிய வீட்டு மனை ஒன்றை உருவாக்கினார். இதற்காக 1000 கிடாய்களை வெட்டி மாபெரும் விருந்து வழங்கப்பட்டது. அப்போது இருந்தே இவருக்கு போட்டியாக தொழில் நடத்தி வருபவர்கள் இவர் மீது அதிகாரிகளிடம் புகார் அளித்தனர். அதன் பேரில்தான் இந்த சோதனை நடத்தப்பட்டு வருவதாக தெரிய வந்துள்ளது.
இது தவிர பைனான்ஸ் அதிபர் செந்தில்குமார் பா.ஜ.க. மாநில நிர்வாகிக்கு நெருக்கமானவர். இதனால் அரசியல் காரணங்களுக்காக இந்த சோதனை நடத்தப்படுவதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த 4 நாட்களாக ஒட்டன்சத்திரம் மற்றும் சத்திரப்பட்டியில் நடந்த வருமான வரித்துறை சோதனை முடிவுக்கு வந்துள்ளதால் அதன் பிறகு எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்த பரபரப்பு அதிகரித்துள்ளது.






