என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • நீதிமன்றம் முன்பு இப்படி ஒரு சம்பவம் நடந்தால் சாட்சிகள் எப்படி சாட்சி சொல்ல வருவார்கள்.
    • என்ன சம்பவத்திற்காக கொலை நடந்தது என்பதை விட கொலை நடந்த இடம் தான் கவலை அளிப்பதாக உள்ளது.

    நெல்லை மாவட்ட நீதிமன்ற வாயிலில் இளைஞர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.

    இந்நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இதில் பாதுகாப்பு பணியில் கவனக் குறைவாக இருந்த போலீசார் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க நெல்லை காவல் ஆணையருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    மேலும் ஒரே ஒருநபர் மட்டும் குற்றவாளிகளை பிடிக்க ஆர்வம் காட்டிய நிலையில், பாதுகாப்பு பணியில் இருந்த மற்ற போலீசார் என்ற செய்து கொண்டிருந்தனர்.

    என்ன சம்பவத்திற்காக கொலை நடந்தது என்பதை விட கொலை நடந்த இடம் தான் கவலை அளிப்பதாக உள்ளது. நீதிமன்றம் முன்பு இப்படி ஒரு சம்பவம் நடந்தால் சாட்சிகள் எப்படி சாட்சி சொல்ல வருவார்கள்.

    பணியில் இருக்கும் போலீசார் பணியை விட செல்போனில் மூழ்கி கிடப்பது வேதனையாக உள்ளது. கொலையாளியை பிடித்த சிறப்பு எஸ்ஐ உய்கொண்டானுக்கு நீதிபதிகள் பாராட்டுகளை தெரிவித்தனர்.

    • அண்ணல் அம்பேத்கரை இழிவுபடுத்தியதற்கு எதிர்ப்பு, நிதிக்கோரிக்கை என உரக்கப் பேசியிருக்கிறோம்.
    • நாடாளுமுன்றத்தில் பேசிய எம்பிக்களை எண்ணி கழகத் தலைவராகப் பெருமை கொள்கிறேன்.

    நாடாளுமன்றத்தில் உரக்கப் பேசியிருக்கிறோம், மத்திய அரசு மவுனம் கலைத்து தமிழ்நாட்டு மக்களின் குரலுக்குச் செவிசாய்க்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.

    அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-

    உங்கள் எம்.பி.களால் என்ன செய்துவிட முடியும் என்று கேட்டவர்களை வாயடைக்கச் செய்த நம் நாடாளுமன்ற உறுப்பினர்கள்.

    அரசியலமைப்பின் 75-ஆவது ஆண்டை முன்னிட்ட விவாதத்தில் ஆழ்ந்த கருத்துகள் - மாநில உரிமை - மணிப்பூர் வன்முறை - சிறுபான்மை நலன் - ஜனநாயகத்துக்கு எதிரான #ONOE மற்றும் அண்ணல் அம்பேத்கரை இழிவுபடுத்தியதற்கு எதிர்ப்பு, நிதிக்கோரிக்கை என உரக்கப் பேசியிருக்கிறோம்!

    கழகத் தலைவராகப் பெருமை கொள்கிறேன்.

    ஒன்றிய அரசு மவுனம் கலைத்து தமிழ்நாட்டு மக்களின் குரலுக்குச் செவிசாய்க்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மாணவியிடம் ரூ. 500 கொடுத்து மோட்டார்சைக்கிளில் வருமாறு கூறியுள்ளார்.
    • உதவி ஜெயிலர் அடி வாங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    மதுரை மத்திய சிறையில் உதவி ஜெயிலாராக குருசாமி பணிபுரிந்து வந்துள்ளார். அங்கு விசாரணை கைதியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த பழக்கத்தின் மூலம் அவரது மகள் மற்றும் பேத்தியுடன் பழகி வந்துள்ளார்.

    இந்நிலையில் அந்த சிறைவாசியின் பேத்தியை தான் வசிக்கும் இடத்திற்கு தனியாக அழைத்ததாக கூறப்படுகிறது. இதனை தனது குடும்பத்தாரிடம் மாணவி கூறியுள்ளார். உடனே மாணவியை அனுப்பி வைத்துவிட்டு குடும்பத்தார் மறைவாக நின்று நோட்டமிட்டுள்ளனர்.

    அப்போது அந்த இடத்திற்கு வந்த உதவி ஜெயிலர், மாணவியிடம் ரூ. 500 கொடுத்து மோட்டார்சைக்கிளில் வருமாறு கூறியுள்ளார். உடனே அந்த மாணவி கூச்சலிட்டுள்ளார்.

    மாணவி கூச்சலிட்டத்தை அடுத்து அருகிலிருந்த மாணவியின் சித்தி உதவி ஜெயிலருக்கு தர்ம அடி கொடுத்தார். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக சம்பவம் இடத்திற்கு வந்த போலீசார் குருசாமி மற்றும் மாணவியின் குடும்பத்தாரை மகளிர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    உதவி ஜெயிலர் அடி வாங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
    • கட்டிடத்தின் பல்வேறு பகுதிகளில் விரிசல் அடைந்து இடிந்து விழும் சூழல் ஏற்பட்டுள்ளது.

    திருப்பூர்:

    திருப்பூர் மணிய காரம்பாளையம் பகுதியில் பின்னலாடைகளை பல்வேறு பகுதிகளுக்கும் அனுப்பும் கொரியர் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. முதலிபாளையம் சிட்கோ பகுதியில் உற்பத்தி செய்யப்படும் பின்னலாடைகள் கொரியர் நிறுவனத்திற்கு கொண்டு வரப்பட்டு ஆன்லைன் ஆர்டர்களுக்கு ஏற்றவாறு அந்தந்த பகுதி வாரியாக அனுப்பப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் இன்று காலை கொரியர் நிறுவன கட்டிடத்தின் ஒரு பகுதியில் திடீரென கரும்புகை வெளியேறியது. பின்னர் சிறிது நேரத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் அங்கிருந்து அவசர அவசரமாக வெளியேறினர். இதையடுத்து தீ மளமளவென கொளுந்து விட்டு எரிந்தது. ஊழியர்கள் தீயை அணைக்க முயற்சி செய்தும் முடியவில்லை. உடனே இது குறித்து திருப்பூர் தெற்கு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இருப்பினும் முடியவில்லை. இதையடுத்து திருப்பூர் வடக்கு மற்றும் ஊத்துக்குளியில் இருந்து மேலும் 4 தீயணைப்பு வண்டிகள் மற்றும் 5 டேங்கர் லாரிகளில் தண்ணீர் கொண்டு வரப்பட்டு தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர்.


    இந்த தீ விபத்தின் காரணமாக கொரியர் நிறுவன கட்டிடம் முழுவதும் சேதமடைந்தது மட்டுமல்லாது கட்டிடத்தின் பல்வேறு பகுதிகளில் விரிசல் அடைந்து இடிந்து விழும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அப்பகுதியில் பொதுமக்கள் செல்ல அனுமதிக்காமல் தீயணைப்புத்துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த கட்டிடத்தின் பின்புறத்தில் பின்னலாடை உற்பத்திக்கு தேவையான நிட்டிங் , டைலரிங் உள்ளிட்ட நிறுவனங்கள் செயல்பட்டு வரக்கூடிய நிலையில் அவற்றுக்கு தீ பரவாமல் இருக்கும் வகையில் தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.

    இந்த தீ விபத்தில் கொரியர் நிறுவனத்தில் இருந்த பல கோடி மதிப்பிலான ஆடைகள் எரிந்து சேதமாகின. இதனைப்பார்த்து ஊழியர்கள் கண்ணீர் சிந்தினர். தீ விபத்தால் அப்பகுதியில் 50 அடி உயரத்திற்கு கரும்புகை வெளியேறியது. இதனால் அப்பகுதி முழுவதும் மேகமூட்டம் போல் காணப்பட்டது.

    மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று நல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஒன்றரை வயது குழந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
    • 4 வருடங்களாக கணவன் மனைவி பிரிந்து வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது.

    சென்னை:

    சென்னை கீழ்பாக்கம் பகுதியில் திவ்யா- ராம்குமார் தம்பதி வசித்து வந்தனர். இந்த தம்பதிக்கு 5 வயதில் ஒரு மகனும் ஒன்றரை வயதில் ஒரு மகனும் உள்ளனர். திவ்யா- ராம்குமார் தம்பதி கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். திவ்யா தனது தாய் வீடான கீழ்பாக்கத்திலும் ராம்குமார் பெருங்களத்தூரிலும் வசித்து வந்துள்ளனர்.

    இந்நிலையில் திவ்யா, தனது இரு குழந்தைகளின் கழுத்தையும் அறுத்து விட்டு தானும் கத்தியால் தன்னை தானே குத்தியுள்ளார்.இதில் ஒன்றரை வயது குழந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

    காயத்துடன் இருந்த 5 வயது சிறுவனுக்கும் தாய் திவ்யாவுக்கு மருத்துவனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    திவ்யா கணவனை பிரிந்து வாழ்வதாகவும், மன அழுத்ததால் வெறிச்செயலில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தனது குழந்தையை கொன்று விட்டு தானும் தற்கொலை முயற்சி செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
    • கூட்டத்தில் சுமார் 400 பேர் பங்கேற்க உள்ளனர்.

    சென்னை:

    தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ஏற்கனவே அறிவிக்கப்பட்டு ஒத்தி வைக்கப்பட்ட தி.மு.க. தலைமைச் செயற்குழு கூட்டம் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணியளவில் கலைஞர் அரங்கில் நடைபெறும்.

    இதில் உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். இந்த கூட்டத்தில் சுமார் 400 பேர் பங்கேற்க உள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • வருகிற பிப்ரவரி மாதம் டெல்லி மாநில சட்டசபைக்கு தேர்தல் நடைபெற உள்ளது.
    • தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் தரப்பில் பலமான வேட்பாளர்கள் இல்லை.

    சென்னை:

    ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி கடந்த தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டது. இந்த தொகுதியில் காங்கிரஸ் சார்பில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மகன் திருமகன் ஈ.வே.ரா. போட்டியிட்டு வென்றார்.

    ஆனால் அடுத்த 2 ஆண்டுகளில் திடீரென்று அவர் மரணம் அடைந்தார். இதனால் அந்த தொகுதி இடைத்தேர்தலை சந்தித்தது. அப்போது மீண்டும் காங்கிரசுக்கே அந்த தொகுதி ஒதுக்கப்பட்டது. ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் களம் இறக்கப்பட்டார். கடந்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற தேர்தலில் இளங்கோவன் வெற்றி பெற்று எம்.எல்.ஏ. ஆனார்.

    மகனை போலவே தந்தை இளங்கோவனும் கடந்த 14-ந்தேதி உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார்.

    இதனால் அந்த தொகுதி காலியானதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஒரு தொகுதி காலியானால் 6 மாதங்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பது விதி. அதன்படி இந்த தொகுதிக்கான தேர்தல் ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் தொடங்கி விட்டது.

    வருகிற பிப்ரவரி மாதம் டெல்லி மாநில சட்டசபைக்கு தேர்தல் நடைபெற உள்ளது. அப்போது ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தலும் நடத்தப்படலாம் என்று கூறப்படுகிறது.

    பொதுத் தேர்தல் நடத்தப்பட்டு 5 ஆண்டுகள் முடிவடைவதற்குள் 2-வது முறையாக ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை சந்திக்கிறது.


    மீண்டும் இந்த தொகுதியை காங்கிரசுக்கு கொடுப்பதை விட தி.மு.க.வே போட்டியிட விரும்புகிறது.

    கடந்த தேர்தலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோளின் பேரில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிட்டார். அப்போது தலைவர் என்ற ரீதியில் தி.மு.க.- காங்கிரஸ் கட்சியினர் தீவிரமாக தேர்தல் பணியாற்றினார்கள்.

    ஆனால் இந்த தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் தரப்பில் பலமான வேட்பாளர்கள் இல்லை. ஈ.வி.கே. எஸ்.இளங்கோவன் குடும்பத்தில் இருந்து அவரது மகன் சஞ்சயை போட்டியிட வைக்க திட்டமிட்டார்கள். ஆனால் அவர் இடைத்தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை என்று கூறி விட்டார்.

    அத்துடன் தனது முடிவையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து தெரிவித்து விட்டார்.

    இந்த சூழ்நிலையில் காங்கிரசில் இருந்து வேறு நபர்களை தேர்வு செய்வதிலும் பிரச்சனை உள்ளது. இடைத்தேர்தலை சந்திக்க செலவு அதிகமாகும். அதற்கு தகுதியானவர்கள் இல்லை என்று கூறப்படுகிறது. எனவே தி.மு.க.வுக்கு விட்டுக் கொடுத்து விடலாம் என்ற முடிவுக்கு காங்கிரஸ் வந்திருப்பதாக கூறப்படுகிறது.

    ஈரோடு கிழக்கு தொகுதியின் நிலவரத்தை தமிழக காங்கிரஸ் கமிட்டி சார்பில் டெல்லி மேலிடத்துக்கும் தெரிவித்து இருப்பதாக கூறப்படுகிறது.

    இதையடுத்தே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்றைய தனது சுற்றுப் பயணத்தின் போது ஈரோடு மாவட்ட தி.மு.க. நிர்வாகிகளை சந்தித்து விவாதித்தார்.

    பின்னர் நிருபர்களிடம் கூறும்போது, ஈரோடு கிழக்கு தொகுதியில் யார் போட்டியிடுவது என்பது பற்றி முறையாக காங்கிரசாருடன் கலந்து பேசி முடி வெடுத்து அறிவிப்போம் என்றார்.

    விட்டுக் கொடுக்கும் மன நிலைக்கு காங்கிரஸ் வந்திருப்பதால் ஈரோடு தொகுதியில் தி.மு.க.வே போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த தொகுதியில் பலத்தை நிரூபிப்பதன் மூலம் கொங்கு மண்டலத்தில் 2026 தேர்தலுக்கான வலுவான அடித்தளத்தை உருவாக்க முடியும் என்று தி.மு.க. கருதுகிறது.

    • புத்தக வாசிப்பின் முக்கியத்துவம் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிலையில், சென்னையில் இன்று பேரணி நடைபெற்றது.
    • புத்தக கண்காட்சியானது முன்கூட்டியே வரும் டிசம்பர் 27-ம் தேதி தொடங்க உள்ளது.

    சென்னையில் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்தினரால் ஆண்டுதோறும் புத்தக கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. இக்கண்காட்சி பொதுவாக ஆங்கிலப் புத்தாண்டு பொங்கல் பண்டிகையை ஒட்டி ஜனவரி மாதம் நடைபெறும்.

    தமிழகம் முழுவதும் உள்ள வெளியீட்டாளர்கள் தனித்தனி ஸ்டால்களில் தங்கள் பதிப்பக புத்தகங்களை காட்சிப்படுத்துவர். கண்காட்சியோடு சேர்த்து சொற்பொழிவு, பேச்சாளர்களின் சிறப்பு நிகழ்வுகள் உள்ளிட்டவையுடன் பண்பாட்டு நிகழ்ச்சிகளும் நடத்தப்படும்.

    1977 ஆம் ஆண்டு முதல் புத்தக கண்காட்சி நடத்தப்பட்ட நிலையில் அடுத்ததாக 48 வது புத்தக கண்காட்சி நடத்தப்பட உள்ளது.

    அதன்படி, புத்தக கண்காட்சியானது முன்கூட்டியே வரும் டிசம்பர் 27-ம் தேதி தொடங்க உள்ளது.

    இந்நிலையில், புத்தக வாசிப்பின் முக்கியத்துவம் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிலையில், சென்னையில் இன்று பேரணி நடைபெற்றது.

    இதனை, தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத் தலைவர் சேது சொக்கலிங்கம் கொடியசைத்து விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்தார்.

    பேரணியில், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், சென்னை மேயர் பிரியா ஆகியோர் பங்கேற்றனர்.

    அதன்படி நந்தனம் ஆவின் பாலகம் அருகில் இருந்து ஒய்எம்சிஏ மைதானம் வரை பேரணி நடைபெற்றது. இதில் 500க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவர்கள் பங்கேற்றனர்.

    • நாகை எம்.எல்.ஏ. ஆளூர் ஷாநவாஸ் நன்றி தெரிவித்து இருந்தார்.
    • சிறுவர் விளையாட்டுப் பூங்காவிற்கு ‘இசை முரசு நாகூர் E.M.ஹனிபா நூற்றாண்டு நினைவுப் பூங்கா’ என்றும் பெயர் சூட்டி சிறப்பு செய்தார்கள்.

    நாகூர் ஹனிபா நூற்றாண்டு தொடக்கத்தை முன்னிட்டு நாகப்பட்டினம் நகரில் அமைந்துள்ள தைக்கால் தெரு மற்றும் புதிதாக அமைய உள்ள பூங்காவுக்கு 'இசை முரசு' ஹனிபா பெயர் சூட்டி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது. இதற்கு நாகை எம்.எல்.ஏ. ஆளூர் ஷாநவாஸ் நன்றி தெரிவித்து இருந்தார்.

    இந்த நிலையில், நாகூர் ஹனிபா குடும்பத்தினர் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர். இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி எக்ஸ் தள பக்கத்தில்,

    இசை முரசு நாகூர் ஹனிபா அவர்களின் நூற்றாண்டை முன்னிட்டு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், நாகப்பட்டினம் நகராட்சியின் எல்லைக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள நாகூர் தைக்கால் தெருவிற்கு 'இசை முரசு நாகூர் E.M.ஹனிபா தெரு' என்றும், சிறுவர் விளையாட்டுப் பூங்காவிற்கு 'இசை முரசு நாகூர் E.M.ஹனிபா நூற்றாண்டு நினைவுப் பூங்கா' என்றும் பெயர் சூட்டி சிறப்பு செய்தார்கள்.

    இதனை முன்னிட்டு முதலமைச்சர் அவர்களை, அய்யா நாகூர் ஹனிபா அவர்களின் குடும்பத்தினருடன் தலைமைச் செயலகத்தில் சந்தித்து நன்றிகள் தெரிவித்துக்கொண்டோம் என பதிவிட்டுள்ளார். 

    • சொத்து பிரச்சனையில் விவசாயி தலை துண்டித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆழ்வார்குறிச்சி:

    தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள ஆழ்வார்குறிச்சி கருத்தப்புலியூர் அந்தோணியார் கோவில் தெருவை சேர்ந்தவர் அருள். இவருக்கு 2 மனைவிகள். இதில் மூத்த மனைவிக்கு இருதயராஜ் (வயது47) என்ற மகன் உள்ளார்.

    விவசாயியான இவருக்கும், அவரது தந்தையின் 2-வது மனைவியின் மகன்களான ஆரோக்கியராஜ், ஜெயபால் ஆகியோருக்கும் இடையே சொத்து பிரச்சனை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் இருதயராஜ் அப்பகுதியில் உள்ள அச்சங்குளத்தில் மீன் பிடிக்கும் குத்தகை எடுத்துள்ளார். இது தொடர்பாக நேற்றிரவு அவர் குளப்பகுதிக்கு சென்றுள்ளார்.

    அப்போது அங்கு வந்த ஆரோக்கியராஜ், ஜெயபால் ஆகிய 2 பேரும் இருதயராஜுடன் கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளனர். திடீரென தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் இருதயராஜை வெட்டிய தோடு அவரது தலையை துண்டித்து கொடூரமாக கொலை செய்தனர். பின்னர் 2 பேரும் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

    இந்த கொலை குறித்து தகவல் அறிந்ததும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன், டி.எஸ்.பி. ஜெயபால் பர்ணபாஸ், இன்ஸ்பெக்டர் மேரி ஜெமிதா, சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அவர்கள் கொலை செய்யப்பட்ட இருதயராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த கொலை தொடர்பாக டி.எஸ்.பி. ஜெயபால் பர்ணபாஸ் கூறுகையில், சொத்து பிரச்சனை காரணமாக ஆரோக்கியராஜ், ஜெயபால் ஆகிய 2 பேரும் இருதயராஜை கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது. 2 பேரின் செல்போன்களும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. அவர்களை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.

    சொத்து பிரச்சனையில் விவசாயி தலை துண்டித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • டிசம்பர் 31ம் தேதி மாலை 6 மணிக்கு மேல் நீச்சல் குளங்களில் குளிக்க அனுமதி வழங்க கூடாது.
    • கடற்கரை ரிசார்ட்டுகளில் தங்கி உள்ளடர்கள் இரவு 12 மணிக்கு மேல், அறைகளைவிட்டு வெளியே வர கூடாது.

    புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது மாமல்லபுரம், கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் 12 மணிக்கு மேல் கேளிக்கை நிகழ்ச்சிகள் நடத்த கூடாது என தனியார் நட்சத்திர ஓட்டல் பொது மேலாளர்கள் அழைத்து காவல் துறை அறிவுறுத்தி உள்ளது.

    புத்தாண்டு வாழ்த்து சொல்வது போல் பெண்களை கேலி, கிண்டல் செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    மேலும், டிசம்பர் 31ம் தேதி மாலை 6 மணிக்கு மேல் நீச்சல் குளங்களில் குளிக்க அனுமதி வழங்க கூடாது.

    கடற்கரை ரிசார்ட்டுகளில் தங்கி உள்ளடர்கள் இரவு 12 மணிக்கு மேல், அறைகளைவிட்டு வெளியே வர கூடாது.

    ஓட்டல்கள், கேளிக்கை விடுதிகளில் வரவேற்பு அறையில் உள்ள சிசிடிவி கேமரா கண்டிப்பாக இயங்க வேண்டும்.

    அடையாள அட்டை வழங்காத நபர்களுக்கு அறைகள் கொடுக்க கூடாது உள்ளிட்ட முக்கிய அறிவிப்புகளை வழங்கியுள்ளது.

    • அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
    • சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

    சென்னை:

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    நேற்று, மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மாலை 17.30 மணி அளவில், ஆந்திர கடலோரப்பகுதிகளை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, கிழக்கு-வடகிழக்கு திசையில் நகர்ந்து, இன்று 8.30 மணி அளவில் மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில், விசாகபட்டினத்திற்கு (ஆந்திரா) தெற்கு-தென்கிழக்கே சுமார் 430 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னைக்கு கிழக்கு- வடகிழக்கே 480 கிலோ மீட்டர் தொலைவிலும், கோபல்பூரிற்கு (ஒரிசா) தெற்கே 590 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலைகொண்டுள்ளது. இது, அடுத்த 12 மணி நேரத்தில், கிழக்கு-வடகிழக்கு திசையில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மெதுவாக நகர்ந்து, அதன் பிறகு, கடலில் படிப்படியாக வழுவிழக்கக்கூடும்.

    இன்று முதல் 27-ந்தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகாலை வேளையில் ஒருசில பகுதிகளில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 31° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24-25° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகாலை வேளையில் ஒருசில பகுதிகளில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 31-32° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24-25° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    இன்று மற்றும் நாளை வடதமிழக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். 

    ×