என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • கிருதுமால் நதியில் தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் தற்போது ஆற்றில் நீர்வரத்து அதிகமாக வந்து கொண்டிருக்கிறது.
    • கரைபுரண்டு ஓடி வரும் வைகை தண்ணீர் திடீரென அருகிலுள்ள உலக்குடி காலனி குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுந்தது.

    திருச்சுழி:

    விருதுநகர் மாவட்டம் நரிக்குடி ஒன்றியம் உலக்குடி காலனி பகுதியில் சுமார் 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக வைகை அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக கிருதுமால் நதியில் தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் தற்போது ஆற்றில் நீர்வரத்து அதிகமாக வந்து கொண்டிருக்கிறது.

    வைகை அணையில் திறக்கப்பட்ட தண்ணீர் விரகனூர் அணைக்கட்டு வழியாக அத்திகுளம் அணையை வந்தடைந்து பின்னர் அங்கிருந்து கிருதுமால் ஆற்றின் வழியாக உலக்குடி மற்றும் மானூர் கண்மாய்களை சென்றடைகிறது.

    உலக்குடி காலனி குடியிருப்பை ஒட்டியே கிருதுமால் ஆற்று குறுகிய கால்வாய் செல்வதாலும், அப்பகுதியில் பல ஆண்டுகளாக தடுப்புச் சுவர் இல்லாததாலும், கரைபுரண்டு ஓடி வரும் வைகை தண்ணீர் திடீரென அருகிலுள்ள உலக்குடி காலனி குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் குடியிருப்புவாசிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.

    இந்த நிலையில் காலனி குடியிருப்பை சேர்ந்த பொதுமக்களின் பலரது வீடுகளை கிருதுமால் ஆற்று தண்ணீர் சூழ்ந்துள்ளதால் அவர்கள் தங்கள் வீட்டிற்குள் குடியிருக்க முடியாமல் வெளியேறி உள்ளனர்.

    எனவே உலக்குடி-மானூர் செல்லும் கால்வாயை ஒட்டியுள்ள உலக்குடி காலனி குடியிருப்பு பகுதியில் கிருதுமால் ஆற்று கால்வாயில் விரைவில் சுற்றுச்சுவர் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், தண்ணீரால் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்து வாழ்வாதாரமின்றி தவித்து வரும் காலனி குடியிருப்பு பொதுமக்களுக்கு உரிய நிவாரணமாக இழப்பீடு தொகையும் வழங்க வேண்டுமென தமிழக அரசுக்கும், மாவட்ட கலெக்டருக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    • சில அரசியல் இயக்கங்கள் குளிர்காய நினைத்தார்கள்.
    • முதலமைச்சர் எப்போதும் விவசாயிகளின் தோழனாக செயல்பட்டு கொண்டிருக்கிறார்.

    பொள்ளாச்சி:

    பொள்ளாச்சி நகராட்சி அலுவலகத்தில் விவசாயிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் தலைமை தாங்கினார்.

    அமைச்சர் செந்தில்பாலாஜி கலந்துகொண்டு விவசாயிகளின் கருத்துக்களை கேட்டறிந்தார். பின்னர் அமைச்சரிடம் விவசாயிகள் கோரிக்கை மனு அளித்தனர். கூட்டத்தில் சப்-கலெக்டர் கேத்தரின் சரண்யா, நகராட்சி தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன், கோவை தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் தளபதி முருகேசன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

    கூட்டம் முடிந்ததும் அமைச்சர் செந்தில்பாலாஜி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    பொள்ளாச்சி அருகே மெட்டுவாவி பகுதியில் புதிய சிப்காட் தொழிற்பூங்கா அமைப்பதாக வதந்தியை பரப்பி, பொதுமக்கள் மத்தியில் ஒரு குழப்பமான சூழ்நிலையை உருவாக்க கூடிய வகையில் சில அரசியல் இயக்கங்கள் செயல்பட்டு வந்தன. இதுவரை சிப்காட் அமைப்பதற்கு எந்தவிதமான புதிய அறிவிப்புகள் வெளியிடப்படவில்லை.

    அரசின் சார்பில் சட்டமன்றத்திலோ, நிதிநிலை அறிக்கையிலோ அல்லது மானிய கோரிக்கையிலோ எந்த விதமான அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. ஒட்டுமொத்தமாக தமிழகம் முழுவதும் இருக்க கூடிய என்.இ.பி.சி. நிலங்கள் குறித்து கணக்கெடுக்கும் பணி தொடங்கி உள்ளது. அந்த வகையில் கோவை மாவட்டத்தில் மெட்டுவாவியில் என்.இ.பி.சி. நிலங்கள் இருப்பதாக அறியப்பட்டு, அந்த கணக்கெடுப்பு பணிகள் தான் நடைபெற்று வருகிறது.

    சிப்காட் அமைப்பதற்கு எந்த பணிகளும் நடைபெறவில்லை. இதை மாற்றி ஏதோ இந்த பகுதியில் சிப்காட் அமைப்பதாக விவசாயிகள் மத்தியில் ஒரு குழப்பத்தை ஏற்படுத்தி, பதற்றத்தை உருவாக்கி அதன் மூலம் சில அரசியல் இயக்கங்கள் குளிர்காய நினைத்தார்கள். எனவே தமிழக முதலமைச்சர் சார்பில் விவசாயிகளை சந்தித்து, இதற்கான தெளிவான ஒரு விளக்கத்தை வழங்கி இருக்கிறோம். விவசாயிகளும் அரசுக்கு உறுதுணையாக இருப்பதாக தெரிவித்து இருக்கிறார்கள். முதலமைச்சர் எப்போதும் விவசாயிகளின் தோழனாக செயல்பட்டு கொண்டிருக்கிறார்.

    குறிப்பாக அரசின் மீது குறை சொல்வதற்கு இதுபோன்ற தவறான கருத்துக்களை விவசாயிகள் மத்தியில் கூறி வருகின்றனர். இது முற்றிலும் தவறானது. விவசாயிகள் பயப்பட வேண்டியதில்லை. நிச்சயம் முதலமைச்சர் துணை உங்களுடன் நிற்பார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மீண்டும் கேரளாவிற்கு எடுத்துச் செல்லும் நடைமுறைகள் இன்று தொடங்கியது.
    • கேரளாவில் இருந்து 25 பேர் கொண்ட குழுவினர் நெல்லை வந்தடைந்தனர்.

    நெல்லை:

    கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு புளியரை சோதனை சாவடி வழியாக நெல்லை மாவட்டத்தில் சுத்தமல்லி அருகே உள்ள கோடக நல்லூர், கொண்டாநகரம், சீதபற்பநல்லூர் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள காட்டுப்பகுதிகளில் மூட்டை மூட்டைகளாக மருத்துவக் கழிவுகளான ஊசிகள், கையுறைகள், ரத்தம் படிந்த பொருட்கள், மருந்து பாட்டில்கள் என மலைபோல் கொட்டப்பட்டு இருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

    இந்த கழிவுகளால் பொது சுகாதாரத்திற்கு கேடும், நோய் தொற்று பரவும் அபாயமும், நீர் நிலைகள் மாசுபடும் அபாயமும் இருந்ததால் இது சம்பந்தமாக முக்கூடல், சீதபற்பநல்லூர் ஆகிய போலீஸ் நிலையங்களில் தலா ஒரு வழக்கும், சுத்தமல்லி போலீஸ் நிலையத்தில் 3 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டது.


    அதில் திருவனந்தபுரத்தில் உள்ள சில நிறுவனங்களுடன் தொடர்பு கொண்டு அங்குள்ள கழிவுகளை ஏற்றி வாகனத்தில் கொண்டு வந்து அரசு வழிமுறைகளை பின்பற்றாமல் சுத்தமல்லி பகுதிகளில் கொட்டியது தெரியவந்தது. இதுதொடர்பாக சுத்தமல்லியை சேர்ந்த மாயாண்டி, மனோகர் ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

    இந்நிலையில் கழிவுகளை கொட்டியவர்கள் யார் என்பது குறித்து அதிரடி விசாரணையில் போலீசார் இறங்கினர். சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்ததில் கழிவுகளை லாரியில் கொண்டு வந்து கொட்டிய சேலம் மாவட்டம், நடுபட்டி, இலத்தூர், காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த செல்லதுரை (37) என்பவரை போலீசார் நேற்று கைது செய்து லாரியை பறிமுதல் செய்தனர்.

    தொடர்ந்து அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் கேரளாவில் செயல்பட்டுவரும் தனியார் நிறுவனத்தின் மேற்பார்வையாளரான கேரள மாநிலம், கன்னூர், இடாவேலியை சேர்ந்த ஜித்தன் ஜேர்ச் (40) என்பவரை கைது செய்தனர்.

    இதனிடையே பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து இந்த கழிவுகள் தொடர்பாக விசாரணை நடத்தி, அவை அனைத்தையும் 3 நாட்களுக்குள் கேரள அரசே அப்புறப்படுத்த வேண்டும். அதற்கான முழு செலவையும் கேரள மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் இருந்து வசூலித்து கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டது.

    அதனைத்தொடர்ந்து நேற்று முன்தினம் கேரளா வில் இருந்து அந்த கழிவுகளை ஆய்வு செய்ய சுகாதாரத்துறை அதிகாரிகள் வந்து ஆய்வு செய்த பின்னர் நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயனுடன் ஆலோசனை நடத்தினர்.

    தொடர்ந்து தேசிய பசுமை தீர்ப்பாய உத்தரவுப்படி கழிவுகளை மீண்டும் கேரளாவிற்கு எடுத்துச் செல்லும் நடைமுறைகள் இன்று காலை தொடங்கியது.

    இதற்காக கேரளாவில் இருந்து சப்-கலெக்டர் ஆல்பர்ட் தலைமையில் 25 பேர் கொண்ட குழுவினர் நெல்லை வந்தடைந்தனர்.

    பின்னர் கேரள அதிகாரிகள் ஆய்வு செய்த இடத்தில் இருந்து கழிவுகளை அகற்றும் பணி இன்று காலை தொடங்கியது. மேலும் கழிவுகளை ஏற்றி செல்வதற்காக கேரள பதிவெண் கொண்ட 16 லாரிகள் நெல்லை மாவட்டத்திற்கு புறப்பட்டன.

    இதில் முதல் கட்டமாக திருவனந்தபுரம், நாகர்கோவில் நாங்குநேரி வழியாக 8 கேரளா லாரிகளும், கோட்டயம், புளியரை, செங்கோட்டை, தென்காசி வழியாக 3 கேரளா லாரிகளும் என மொத்தம் 11 லாரிகள் மருத்துவக்கழிவுகள் கொட்டப்பட்ட இடத்திற்கு வந்து சேர்ந்தது.

    அதனைத்தொடர்ந்து சேரன்மகாதேவி சப்-கலெக்டர் அர்பித் ஜெயின் முன்னிலையில் நடுக்கல்லூர் அரசு பள்ளியில் வைத்து கேரள அதிகாரிகள் குழுவினர் ஆலோசனையில் ஈடுபட்டனர். இதில் நெல்லை மாவட்ட உதவி கலெக்டர் அம்பிகா ஜெயின், திருவனந்தபுரம் மாவட்ட உதவி கலெக்டர் சாக்ஷி மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    அதன் பின்னர் சம்பந்தப்பட்ட இடத்துக்கு சென்று ஜே.சி.பி. எந்திரம் மூலமாக அந்த லாரிகளில் கழிவுகள் ஏற்றப்பட்டு கேரளாவிற்கு கொண்டு செல்லப்படுகிறது. அவை கேரளாவுக்கு செல்வதை உறுதி செய்ய தமிழக-கேரள எல்லைகள் வரை தமிழக போலீசார் கண்காணிப்பில் ஈடுபட உத்தரவிடப்பட்டுள்ளது. 

    • இன்றைய முக்கியச் செய்திகள்
    • இன்றைய அரசியல், சினிமா, விளையாட்டு செய்திகளை ஒரு சில வரிகளில் பெறுங்கள்.

    தமிழக அரசியல், பொது நிகழ்வுகள், தேசிய அரசியல், விளையாட்டு மற்றும் உலக நடப்புகள் குறித்த அனைத்து செய்திகளையும் ஒரே பதிவில் அறிந்து கொள்ளுங்கள்..

    • ஆம்னி பேருந்து சாலைத் தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது.
    • 30-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    வேப்பூர்:

    கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே ஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானத்தில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    சென்னையிலிருந்து கன்னியாகுமரி நோக்கி சென்ற ஆம்னி பேருந்து, கடலூர் மாவட்டம் ராமநத்தம் அருகே சென்ற போது சாலைத் தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்த நிலையில், 30-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    இந்த விபத்தால் சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுக்து நின்றன. விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • உதவி ஜெயிலர் பாலகுருசாமி, அவர் தங்கியிருக்கும் இடத்திற்கு அந்த மாணவியை தனியாக அழைத்துள்ளார்.
    • வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தின.

    மதுரை:

    மதுரை மத்திய சிறையில் கைதியாக இருந்து விடுதலையான ஒருவர், மதுரை பைபாஸ் சாலை பகுதியில் ஓட்டல் நடத்தி வருகிறார். அந்த ஓட்டலுக்கு சில தினங்களுக்கு முன்பு, மதுரை மத்திய சிறையில் உதவி ஜெயிலராக பணியாற்றி வரும் பாலகுருசாமி என்பவர் சென்றார். அப்போது, அங்கிருந்த கைதியின் பேத்தியான 14 வயது மாணவியிடம் பேசி, அவரது செல்போன் எண்ணை வாங்கியுள்ளார்.

    இதற்கிடையே, உதவி ஜெயிலர் பாலகுருசாமி, அவர் தங்கியிருக்கும் இடத்திற்கு அந்த மாணவியை தனியாக அழைத்துள்ளார். இதைத்தொடர்ந்து தனது சித்தியுடன் சம்பவ இடத்திற்கு அந்த மாணவி சென்றார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த பாலகுருசாமி தன்னுடன் வாகனத்தில் வருமாறு மாணவியை அழைத்தாராம்.

    இதனைக்கண்டு அதிர்ச்சி அடைந்த மாணவியின் சித்தி, தன் அக்காள் மகளிடம் பாலியல் ரீதியான சீண்டலில் ஈடுபட முயற்சி செய்ததாக கூறி உதவி ஜெயிலர் பாலகுருசாமியை நடுரோட்டில் வைத்து எட்டி உதைத்தார். பின்னர் செருப்பாலும் தர்மஅடி கொடுத்தார். இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தின.

    இதனைத் தொடர்ந்து, பாலியல் தொல்லை அளித்த புகாரில், மத்திய சிறை உதவி ஜெயிலர் பாலகுருசாமி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதை அடுத்து அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

    மேலும், பொது இடத்தில் அரசு அதிகாரியை தாக்கியது தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பத்தினர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    • புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்ற அறிவுறுத்தப்பட்டு இருந்தது.
    • காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்தது.

    தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானதை தொடர்ந்து, 9 துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்ற அறிவுறுத்தப்பட்டு இருந்தது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்ததை தொடர்ந்து 9 துறைமுகங்களில் ஏற்றப்பட்ட 1ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டை இறக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    அதன்படி சென்னை, கடலூர், நாகப்பட்டினம், எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன் மற்றும் தூத்துக்குடி ஆகிய துறைமுகங்களில் ஏற்றப்பட்ட 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டினை இறக்கிட வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி இருக்கிறது.

    • மின் விபத்தில் உயிரிழப்பவர்களுக்கு வழங்கப்படும் நிவாரணத் தொகையை உயர்த்தி மின்வாரியம் உத்தரவிட்டு உள்ளது.
    • மின்விபத்தால் பாதிக்கப்படும் பசுக்கள், எருதுகளின் உரிமையாளர்களுக்கு வழங்கப்படும் நிவாரணத் தொகை ரூ.25 ஆயிரம் மாற்றமின்றி வழங்கப்படும்.

    சென்னை:

    மழைக்காலங்களில் மின்கம்பிகள் அறுந்து விழுதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மின்சாரம் தாக்கி பொதுமக்கள் சிலர் உயிர் இழக்கின்றனர். சிலர் காயம் அடைகின்றனர். இதனால், அவர்களுடைய குடும்பம் கஷ்டப்படும் நிலைக்கு தள்ளப்படுகிறது. குறிப்பாக, குடும்பத்தினருக்கு கடும் நிதி இழப்பு ஏற்படுகிறது.

    இவ்வாறு பாதிக்கப்படும் குடும்பங்களுக்கு நிவாரண தொகை உயர்த்தி வழங்கப்படும் என மின்துறை அமைச்சர் கடந்த பிப்ரவரி மாதம் சட்டசபையில் அறிவித்தார்.

    இதன்படி, மின் விபத்தில் உயிரிழப்பவர்களுக்கு வழங்கப்படும் நிவாரணத் தொகையை உயர்த்தி மின்வாரியம் உத்தரவிட்டு உள்ளது. மின்விபத்தில் சிக்கி உயிரிழப்பவர்களுக்கு தற்போது வழங்கப்படும் ரூ.5 லட்சம் நிவாரண நிதி ரூ.10 லட்சமாக அதிகரித்து வழங்கப்படும். அதே போல், இரண்டு கை கால்கள் அல்லது 2 கண்களை இழப்பவர்களுக்கு நிவாரணத் தொகை ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.3 லட்சமாகவும், ஒரு கைகால் அல்லது ஒரு கண்ணை இழப்பவர்களுக்கு ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.1½ லட்சமாகவும் உயர்த்தி வழங்கப்படும்.

    அதே சமயம், மின்விபத்தால் பாதிக்கப்படும் பசுக்கள், எருதுகளின் உரிமையாளர்களுக்கு வழங்கப்படும் நிவாரணத் தொகை ரூ.25 ஆயிரம் மாற்றமின்றி வழங்கப்படும். கடந்த மாதம் 25-ந் தேதி நடைபெற்ற மின்வாரிய இயக்குனர் குழு கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டு உள்ளதாக மின்வாரியம் தெரிவித்துள்ளது.

    • தொழில் வளர்ச்சி என்ற முறையில் விளைநிலங்கள் பறிக்கப்படுவதை அனுமதிக்க முடியாது.
    • விவசாயிகளுக்கு எதிரான தி.மு.க. அரசை இன்னும் ஓராண்டில் மக்கள் தூக்கி எறிய தயாராகி விட்டனர்.

    திருவண்ணாமலை:

    தமிழ்நாடு உழவர் பேரியக்கம் சார்பில் திருவண்ணாமலையில் நேற்று உழவர் பேரியக்க மாநில மாநாடு நடந்தது. அதில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் பேசியதாவது:

    தொழில் வளர்ச்சி என்ற முறையில் விளைநிலங்கள் பறிக்கப்படுவதை அனுமதிக்க முடியாது.

    விவசாயிகளின் நலனுக்காக தி.மு.க. அரசு ஒரு துரும்பையும் கிள்ளிப் போடவில்லை. விவசாயிகளை குண்டர் சட்டத்தில் அடைத்தது தி.மு.க. அரசு.

    விவசாயிகளைக் காக்க முடியாத அரசு ஒரு நிமிடம் கூட நீடிக்கக்கூடாது.

    விவசாயிகளுக்கு எதிரான தி.மு.க. அரசை இன்னும் ஓராண்டில் மக்கள் தூக்கி எறிய தயாராகி விட்டனர்.

    தமிழகத்தில் ஏற்படும் வறட்சி என்பது மனிதர்களால் செயற்கையாக ஏற்படுத்தப்படுவது.

    தண்ணீர் மேலாண்மையை சிறப்பாக செயல்படுத்தா விட்டால் தமிழகம் மோசமான நிலைக்கு தள்ளப்படும். ஆறுகளில் மணல் எடுப்பதை நிறுத்த வேண்டும்.

    சென்னையில் போர் நினைவுச் சின்னம் அருகில் விவசாயிகளைத் திரட்டி முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும். 2025ல் போராட்ட தேதியை அறிவிப்பேன் என தெரிவித்தார்.

    • மாலை 5 மணி நிலவரப்படி காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்தது.
    • அடுத்த 24 மணி நேரத்தில் படிப்படியாக மேலும் வலுவிழக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் கிழக்கு- வடகிழக்கு நோக்கி நகர்ந்து வலுவிழந்தது. மாலை 5 மணி நிலவரப்படி காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்தது.

    அடுத்த 24 மணி நேரத்தில் படிப்படியாக மேலும் வலுவிழக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    • அம்பேத்கரை அமித் ஷா அவமதித்ததற்கு எதிராக நாடே கொந்தளித்துக் கொண்டிருக்கிறது.
    • ஆனால் அதிமுகவிடம் இருந்து அது பற்றி பேச்சு மூச்சு கிடையாது.

    எதிர்க்கட்சிகளுக்கு அம்பேத்கர் பெயரை தொடர்ந்து பல முறை முழக்கம் இடுவது வாடிக்கையாக இருக்கிறது. அதற்கு பதிலாக கடவுளின் பெயரை இவ்வளவு முறை உச்சரித்தால் அவர்களுக்கு சொர்க்கத்தில் இடம் கிடைத்து இருக்கும் என்று பாராளுமன்றத்தில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பேசினார்.

    அமித்ஷாவின் இந்த கருத்துக்கு நாடு முழுவதும் பெரும் எதிர்ப்பு கிளம்பியது. தமிழகம் முழுவதும் அமித்ஷாவுக்கு எதிராக போராட்டம் நடைபெற்றது.

    இந்நிலையில் அம்பேத்கரை அமித் ஷா அவமதித்ததற்கு எதிராக நாடே கொந்தளித்துக் கொண்டிருக்கிறது. ஆனால் அதிமுகவிடம் இருந்து அது பற்றி பேச்சு மூச்சு கிடையாது என சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் பெருவிழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    அம்பேத்கரை அமித் ஷா அவமதித்ததற்கு எதிராக நாடே கொந்தளித்துக் கொண்டிருக்கிறது. ஆனால் அதிமுகவிடம் இருந்து அது பற்றி பேச்சு மூச்சு கிடையாது. இது குறித்து எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியிடம் கேட்டால், ஜெயக்குமார் நிலைபாடே தன்னுடைய நிலைபாடு என கூறினார். இப்படிப்பட்ட எதிர்கட்சி தலைவரை எங்கேயாவது பார்த்ததுண்டா. உலக அரசியல் வரலாற்றிலேயே இந்த மாதிரி ஒரு விளக்கத்தை யாரும் கேட்டிருக்க மாட்டார்கள்.

    சரி ஜெயக்குமார் என்ன கூறியுள்ளார் என்று பார்த்தால், அவர் அம்பேத்கர் குறித்து அமித் ஷா பேசியது பாஜக-வுக்கு பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்று கூறியிருந்தார். பாஜகவுக்கு நிச்சயம் பின்விளைவு ஏற்படுத்தும் என்பது தமிழ்நாட்டு மக்களுக்கு எப்பவோ தெரியும். அது அவர் சொல்லிதான் தெரிய வேண்டும் என்பது இல்லை.

    சமீபத்தில் அதிமுக கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதில் ஒன்றிய பாஜகவை எதிர்த்தோ, கண்டித்தோ ஒரு தீர்மானம் கூட நிறைவேற்றப்படவில்லை.

    என்று உதயநிதி கூறினார்.

    • தியானம் என்ற செயல்முறையின் மூலம் நீங்கள் மனதை அதிசயமாக செயல்படும் வகையில் இயக்க கற்றுக் கொள்ள முடியும்.
    • இது நீங்கள் எங்கு இருந்தாலும் செய்யகூடிய எளிய தியான பயிற்சிகளை உங்களுக்கு வழங்கும்.

    தியானத்தின் மூலம் மனம் எனும் அதிசயத்தை அனைவரும் உணர வேண்டும் என சர்வதேச தியான தின வாழ்த்து செய்தியில் சத்குரு கூறியுள்ளார். டிசம்பர் 21-ம் தேதியை சர்வதேச தியான தினமாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்து உள்ளது. அந்த வகையில் முதலாம் ஆண்டு சர்வதேச தியான தினம் இன்று (21/12/2024) உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.

    இதனையொட்டி சத்குரு அவர்கள் வெளியிட்டுள்ள வீடியோவில் "மனிதகுலம் இன்று எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்சினைகளில் ஒன்றாக மனநல பாதிப்புகள் இருக்கும் நிலையில் டிசம்பர் 21-ஆம் தேதியை சர்வதேச தியான தினமாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்து இருப்பது முக்கியத்துவம் வாய்ந்தது. மனநோயின் பெருந்தொற்று உருவாகிக் கொண்டிருக்கிறது என்று நிபுணர்கள் எச்சரிக்கும் இந்த காலகட்டத்தில், மன நலம், உணர்ச்சியில் உறுதி மற்றும் சமநிலையை உருவாக்குவதற்கான கருவியாக தியானத்தை ஐக்கிய நாடுகள் சபை அங்கீகரித்திருப்பது பாராட்டத்தக்கது

    மனிதர்களின் மனம் அதிசயமானது. ஆனால் துரதிஷ்டவசமாக பல மக்கள் அதனை துன்பத்தை உருவாக்கும் இயந்திரமாகவே உணர்கிறார்கள். இது ஏனென்றால் மனம் எனும் அதிசய தொழில்நுட்பத்தை சரியாக கையாளும் கருவிகளை மக்களுக்கு கொடுக்கவில்லை.

    தியானம் என்ற செயல்முறையின் மூலம் நீங்கள் மனதை அதிசயமாக செயல்படும் வகையில் இயக்க கற்றுக் கொள்ள முடியும். நாம் அடுத்த ஆண்டு துவக்கத்தில் "மிராக்கிள் ஆப் தி மைண்ட்" என்ற ஆப்-இனை வெளியிட இருக்கிறோம். இது நீங்கள் எங்கு இருந்தாலும் செய்யகூடிய எளிய தியான பயிற்சிகளை உங்களுக்கு வழங்கும். இதன் மூலம் அமைதி, ஆனந்தம் மற்றும் உற்சாகத்தை உங்கள் வாழ்வில் கொண்டு வர முடியும். பூமியில் உள்ள ஒவ்வொரு மனிதனும் மனமெனும் அதிசயத்தை உணர்ந்திட வேண்டும் என்பதே எனது விருப்பமும் ஆசியும். .

    டிசம்பர் 21-ஆம் தேதியை இதற்கு தேர்ந்தெடுத்து இருப்பது மிகவும் பொருத்தமானதாகும். ஏனென்றால் இது குளிர்கால கதிர்திருப்ப (Winter Solstice) நாள் அல்லது உத்தராயண காலத்தின் துவக்கம் ஆகும். ஐக்கிய நாடுகள் சபை, இந்திய அரசாங்கம் மற்றும் இந்தத் தீர்மானத்தை ஆதரித்த அனைத்து நாடுகளுக்கும் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

    உலகிற்கு மாற்றத்திற்கான கருவிகளை எடுத்துச் செல்வதில் பாரதம் மீண்டும் முன்னணியில் இருப்பது அற்புதமானது. மகிழ்ச்சியான, ஆரோக்கியமான மற்றும் உற்சாகமான மனிதர்களின் தலைமுறையை உருவாக்குவதில் இது மிகவும் முக்கியமான மற்றும் குறிப்பிடத்தக்க படியாகும்," என்று கூறியுள்ளார்.

    சத்குரு கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக யோகா மற்றும் தியானக் கருவிகளை மக்களுக்கு வழங்கி வருகிறார். இதன் மூலம் உலகளவில் மில்லியன் கணக்கான மக்கள் பயன்பெற்று வருகிறார்கள். இந்த பயிற்சிகள் குறித்து முன்னணி பல்கலைக்கழகங்கள் மேற்கொண்ட ஆராய்ச்சிகளின் முடிவில், ஈஷா யோக பயிற்சிகளை தொடர்ந்து செய்யும் மக்களின் மன அழுத்தம் 50% குறைகிறது, தூக்கத்தின் தரம் மேம்பட்டுள்ளது, ஆற்றல், மகிழ்ச்சி மற்றும் உற்பத்தித்திறன் அதிகரித்து உள்ளது என்பது கண்டறியப்பட்டு உள்ளது.

    ×