கடையம் அருகே தலை துண்டித்து விவசாயி கொலை

சொத்து பிரச்சனையில் விவசாயி தலை துண்டித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடையம் அருகே தலை துண்டித்து விவசாயி கொலை
Published on

ஆழ்வார்குறிச்சி:

தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள ஆழ்வார்குறிச்சி கருத்தப்புலியூர் அந்தோணியார் கோவில் தெருவை சேர்ந்தவர் அருள். இவருக்கு 2 மனைவிகள். இதில் மூத்த மனைவிக்கு இருதயராஜ் (வயது47) என்ற மகன் உள்ளார்.

விவசாயியான இவருக்கும், அவரது தந்தையின் 2-வது மனைவியின் மகன்களான ஆரோக்கியராஜ், ஜெயபால் ஆகியோருக்கும் இடையே சொத்து பிரச்சனை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இருதயராஜ் அப்பகுதியில் உள்ள அச்சங்குளத்தில் மீன் பிடிக்கும் குத்தகை எடுத்துள்ளார். இது தொடர்பாக நேற்றிரவு அவர் குளப்பகுதிக்கு சென்றுள்ளார்.

அப்போது அங்கு வந்த ஆரோக்கியராஜ், ஜெயபால் ஆகிய 2 பேரும் இருதயராஜுடன் கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளனர். திடீரென தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் இருதயராஜை வெட்டிய தோடு அவரது தலையை துண்டித்து கொடூரமாக கொலை செய்தனர். பின்னர் 2 பேரும் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

இந்த கொலை குறித்து தகவல் அறிந்ததும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன், டி.எஸ்.பி. ஜெயபால் பர்ணபாஸ், இன்ஸ்பெக்டர் மேரி ஜெமிதா, சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அவர்கள் கொலை செய்யப்பட்ட இருதயராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த கொலை தொடர்பாக டி.எஸ்.பி. ஜெயபால் பர்ணபாஸ் கூறுகையில், சொத்து பிரச்சனை காரணமாக ஆரோக்கியராஜ், ஜெயபால் ஆகிய 2 பேரும் இருதயராஜை கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது. 2 பேரின் செல்போன்களும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. அவர்களை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.

சொத்து பிரச்சனையில் விவசாயி தலை துண்டித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com