என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • வாக்கு எண்ணிக்கை மையமான சித்தோடு அரசு பொறியியல் கல்லூரி வளாகம் மலைப்பகுதிகள் நிறைந்ததாகும்.
    • துணை ராணுவத்தினர், பட்டாலியன் போலீசார், உள்ளூர் போலீசார், தீயணைப்பு வீரர்கள் தீயணைப்பு வாகனங்களுடன் தயார் நிலையில் உள்ளனர்.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் நேற்று முன்தினம் நடந்தது. 67.97 சதவீதம் வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. மொத்தம் உள்ள 2 லட்சத்து 27 ஆயிரத்து 546 வாக்காளர்களில் இந்த இடைத்தேர்தலில் 1 லட்சத்து 54 ஆயிரத்து 657 வாக்காளர்கள் தங்களது வாக்கினை பதிவு செய்துள்ளனர்.

    72 ஆயிரத்து 889 பேர் ஓட்டு போடவில்லை. முக்கிய எதிர் கட்சிகள் புறக்கணிப்பால் இடைத்தேர்தலில் வாக்கு சதவீதம் சரிந்துள்ளதாக கூறப்படுகிறது. ஓட்டுப்பதிவுக்கு பின்னர் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பூட்டி சீல் வைக்கப்பட்டு சித்தோட்டில் உள்ள அரசு பொறியியல் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

    அங்கு பாதுகாப்பு அறையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வரிசைப்படி அடுக்கி வைக்கப்பட்டன. பின்னர் அந்த மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பு அறையில் பூட்டி சீல் வைக்கப்பட்டது. வாக்கு எண்ணும் மையத்தில் 78 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. வேட்பாளர்கள் மற்றும் வேட்பாளர்களின் முகவர்கள் இந்த கேமராக்களில் பதிவாகும் காட்சிகளை கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வாக்குப்பெட்டி பாதுகாப்பு அறை 4 அடுக்கு பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. துணை ராணுவத்தினர், பட்டாலியன் போலீசார், உள்ளூர் போலீசார், தீயணைப்பு வீரர்கள் தீயணைப்பு வாகனங்களுடன் தயார் நிலையில் உள்ளனர்.

    வாக்கு எண்ணிக்கை மையமான சித்தோடு அரசு பொறியியல் கல்லூரி வளாகம் மலைப்பகுதிகள் நிறைந்ததாகும். இதன் நுழைவுவாயிலில் இருந்து வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு செல்ல 2 கிலோமீட்டர் கடந்து செல்ல வேண்டும்.

    நுழைவுவாயில் பகுதியில் டி.எஸ்.பி சண்முகம் தலைமையில் 15-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    நுழைவுவாயில் பகுதியிலிருந்து ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் மையத்திற்கு செல்வதற்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. வாகனங்கள், பணியாளர்கள் கடும் சோதனைக்கு பிறகு உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். வாகனத்தில் வருபவர்கள் ஐ.டி கார்டு, வாகன பதிவு எண், வாகனத்தில் வருபவர்களின் செல்போன் எண், முகவரி, உள்ளே செல்லும் நேரம், வெளியே வரும் நேரம், எந்த பணிக்காக வந்து உள்ளா ர்கள் போன்ற விவரங்கள் சேகரித்த பின்னரே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர்.

    வாக்கு எண்ணிக்கை மையம் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மொத்தம் 14 மேஜைகளில் 17 சுற்றுக்களாக வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இந்த பணியில் ஒவ்வொரு மேஜைகளிலும் வாக்கு எண்ணிக்கை அலுவலர், உதவி அலுவலர், நுண்பார்வையாளர்கள் உட்பட 3 பேர், கூடுதல் அலுவலர் ஒருவர் என 51 பேர் ஈடுபட உள்ளனர்.

    இதை தவிர வாக்குபதிவு எந்திரங்களை எடுத்து வைத்தல் மற்றும் பிற பணிகளுக்கு 50-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபட உள்ளனர். நாளை காலை பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டிருக்கும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வாக்கு எண்ணும் மைய கட்டிடத்திற்கு கொண்டுவரப்படுகிறது.

    அதைத் தொடர்ந்து காலை 8 மணிக்கு முதலில் தபால் ஓட்டுகள் பிரித்து எண்ணப்படுகிறது. அதைதொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படுகிறது.

    • பெண்ணை ஓடும் ரெயிலில் இருந்து கீழே தள்ளிவிட்டிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றன.
    • தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்பாக வாழவே முடியாது என்பதையே வெளிச்சம் போட்டு காட்டுகிறது.

    சென்னை:

    அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    கோவையிலிருந்து திருப்பதி செல்லும் ரெயிலில் பெண்களுக்கான பெட்டியில் அத்துமீறி நுழைந்த இருவர், அதில் பயணம் செய்து கொண்டிருந்த கர்ப்பிணி பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததோடு, தன்னைக் காப்பாற்றக் கூறி கூச்சலிட்ட பெண்ணை ஓடும் ரெயிலில் இருந்து கீழே தள்ளிவிட்டிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றன.

    நேற்று ஒரே நாளில், கோவை மேட்டுப்பாளையத்தில் ஆட்டோ ஓட்டுநரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட 15 வயது சிறுமி, திருச்சியில் பள்ளித்தாளாளரின் கணவரால் பாலியல் துன்புறுத்தப்பட்ட 4 வயது குழந்தை, கடலூரில் அடையாளம் தெரியாத நபர்களால் பாலியல் தொந்தரவுக்குள்ளான 16 வயது சிறுமி என அடுத்தடுத்து நடைபெற்றிருக்கும் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றச் சம்பவங்களுக்கு முதலமைச்சர் என்ன பதில் சொல்லப் போகிறார்?

    குழந்தைகள் மற்றும் பெண்களின் பாதுகாப்பில் சிறிதளவும் அக்கறையற்ற திமுக அரசால், அரசுப் பள்ளிகள், பொது இடங்கள், பொது போக்குவரத்து என அனைத்து இடங்களிலும் சர்வசாதாரணமாக நடைபெறும் பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள் தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்பாக வாழவே முடியாது என்பதையே வெளிச்சம் போட்டு காட்டுகிறது.

    எனவே, கடுமையான சட்டங்களை கொண்டுவந்த பிறகும் தினந்தோறும் பெண்களுக்கு எதிராக நடைபெறும் பாலியல் குற்றச்சம்பவங்களை அடியோடு தடுத்து நிறுத்திட தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு தமிழக முதலமைச்சரையும், அவர் வசம் இருக்கும் காவல்துறையையும் வலியுறுத்துகிறேன் என தெரிவித்துள்ளார். 

    • 20 க்கும் மேற்பட்டோர் காயமடைந்து ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    • சிகிச்சையில் இருக்கும் 2 பேரையும் சிகிச்சைக்கு பின் கைது செய்ய போலீசார் முடிவு செய்துள்ளனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம் செங்கப்பள்ளி அருகே தனியார் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 2 கல்லூரி மாணவர்கள் பலியாகினர். 20 க்கும் மேற்பட்டோர் காயமடைந்து ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்தநிலையில் தனியார் பேருந்து டிரைவர் பெருந்துறையை சேர்ந்த மாரசாமி மற்றும் கண்டக்டர் துரைசாமி ஆகியோர் மீது ஊத்துக்குளி போலீசார் 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    281-பொது சாலைகளில் அதிவேகமாக வாகனத்தை இயக்குதல், 125-ஏ பிறர் உயிருக்கும் பாதுகாப்புக்கும் ஆபத்தை விளைவிக்கும் வகையில் அலட்சியமாக செயல்படுதல், 106( 1 )அலட்சியமாக செயல்பட்டு மரணத்தை விளைவித்தல் ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    தற்போது சிகிச்சையில் இருக்கும் 2 பேரையும் சிகிச்சைக்கு பின் கைது செய்ய போலீசார் முடிவு செய்துள்ளனர்.

    • மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாய பெருமக்களுக்கு மத்திய, மாநில அரசுகள் நிவாரணத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும்.
    • தமிழ்நாடு முழுவதும் குண்டும், குழியுமாக இருக்கின்ற சாலைகளை சரி செய்து தர வேண்டும்.

    சென்னை:

    தே.மு.தி.க. மாவட்ட கழக செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

    * முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், புதுக்கோட்டை சமூக ஆர்வலர் ஜெகபர் அலி, தே.மு.தி.க. நாமக்கல் தெற்கு முன்னாள் மாவட்ட கழக செயலாளர் ஆர்.கே.ராமலிங்கம் ஆகியோரது மறைவுக்கு இரங்கலை தெரிவித்து, இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்படுகிறது.

    * தே.மு.தி.க. கொடி நாள் வருகிற 12-ந்தேதி 25-ம் ஆண்டு "வெள்ளி விழாவை" முன்னிட்டு தமிழகம் முழுவதும் கிராமந்தோறும் உள்ள அனைத்து கிளை கழகங்களிலும் கொடி ஏற்றி இனிப்புகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்பாக கொண்டாட வேண்டும்.

    * அண்ணா பல்கலைக்கழக மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த ஞானசேகரனை வன்மையாக கண்டிப்பதோடு, காவல்துறை குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தாலும், அந்த "சார்" யார் என்று இன்னும் கண்டு பிடித்து தெரியப்படுத்தவில்லை. எனவே தமிழக அரசு உடனடியாக ஞானசேகரனுக்கு உதவிய "சாரை" கைது செய்ய வேண்டும்.

    * தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற பிறகு படிப்படியாக டாஸ்மாக்கை குறைப்போம் என்று அறிவித்த போதிலும், நாள் தோறும் விற்பனை அதிகரித்துகொண்டே தான் போகிறது. இதனால் கொலை, கொள்ளை, கற்பழிப்பு, சாலை விபத்து போன்ற சம்பவங்கள் நடந்தேறிவருவது தொடர்கதையாக இருக்கிறது. தமிழக அரசு உடனடியாக மது மற்றும் போதை இல்லாத தமிழகத்தை உருவாக்க வேண்டும்.

    * மத்திய, மாநில அரசுகள் தலையிட்டு, மீனவர்கள் பிரச்சனையில் நிரந்தர தீர்வு காண "கச்சத்தீவை மீட்டு" எடுக்க வேண்டும்.

    * தென்காசி, புதுக்கோட்டை, திருச்சி, வேலூரில் நடைபெற்று வரும் கனிம வளக் கொள்ளை மற்றும் மணல் கொள்ளை போன்ற கனிம வளங்களை பக்கத்து மாநிலங்களான கேரளா மற்றும் ஆந்திராவிற்கு கடத்தி கொண்டிருக்கின்றனர்.

    இதுபோதாது என்று தி.மு.க. அரசு மீண்டும் 13 மாவட்டத்தில் மணல் குவாரிகளை திறக்க தேர்வு செய்திருப்பதை கண்டிக்கிறேன்.

    * மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாய பெருமக்களுக்கு மத்திய, மாநில அரசுகள் நிவாரணத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும்.

    * மறைந்த தே.மு.தி.க. நிறுவனத் தலைவர் கேப்டனுக்கு இலங்கையில் வாழும் தமிழர்கள் ஒன்று கூடி கேப்டன் உருவப்படம் நிறுவிய "தேர்" ஒன்றை தயாரித்துள்ளார்கள். தேரை ஒருமாதத்திற்கு பிறகு கேப்டன் ஆலயத்தில் நேரடியாக ஒப்படைக்க உள்ளார்கள்.

    கேப்டன் மீது பற்று வைத்து, தேரை தயாரித்த இலங்கையில் வாழும் தமிழ் பெருமக்களுக்கு, கழக பொதுச்செயலாளர் பிரேமலதா சார்பாகவும், கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சார்பாகவும் எங்களது நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

    * புதுக்கோட்டை வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த பிரச்சனையில், அந்த சமுதாயத்தை சேர்ந்தவர்களே அந்த செயலை செய்ததாக மூன்று பேரை கைது செய்திருப்பது வேடிக்கையாக உள்ளது.

    இந்த சம்பவத்தை காவல்துறை திசை திருப்ப முயற்சி செய்கிறது என்று மக்கள் சந்தேகப்படுகிறார்கள். எனவே உண்மைக் குற்றவாளியை கண்டுபிடிக்க சி.பி.ஐ. விசாரணை வேண்டும்.

    * தமிழ்நாடு முழுவதும் குண்டும், குழியுமாக இருக்கின்ற சாலைகளை சரி செய்து தர வேண்டும்.

    இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

    • மேம்பாட்டு பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து நகராட்சியாக மாற்றப்பட்டுள்ளது.
    • பேரூராட்சிக்கு சொந்தமான அசையும், அசையாத சொத்துக்களின் கணக்கெடுப்பும் நடந்து வருகிறது.

    மாமல்லபுரம் சிறப்புநிலை பேரூராட்சியை நகராட்சியாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் மாமல்லபுரத்தை நகராட்சியாக தரம் உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.

    இதைத்தொடர்ந்து அருகில் உள்ள ஊராட்சிகளை மாமல்லபுரத்துடன் இணைக்கும் பணிகள் மற்றும் பேரூராட்சிக்கு சொந்தமான அசையும், அசையாத சொத்துக்களின் கணக்கெடுப்பும் நடந்து வருகிறது.

    மாமல்லபுரம் புராதன சின்னங்கள் உடைய "யுனஸ்கோ" அங்கீகாரம் பெற்ற சர்வதேச சுற்றுலா நகர பகுதி என்பதால், அதன் மேம்பாட்டு பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து நகராட்சியாக மாற்றப்பட்டுள்ளது.

    • நகைகளை திரும்ப வழங்கக்கோரி கணவர் ஜெயகாந்த் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார்.
    • சுங்க அதிகாரிகளின் இந்த செயல் நியாயமற்றது என்றும் நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.

    இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட தனுஷிகா இலங்கையில் இருந்து சென்னை வந்துள்ளார். பிரான்ஸில் இருந்து வந்த ஜெயகாந்த் என்பவருடன் தனுஷிகாவுக்கு 2023-ம் ஆண்டு ஜூலை மாதம் திருமணம் நடைபெற்றது. திருமணம் செய்துகொண்ட ஜெயகாந்த் பிரான்ஸுக்கு திரும்பிச் சென்று அவருடைய மனைவிக்கான விசா ஏற்பாடுகளை செய்தார்.

    அதே ஆண்டு நவம்பர் மாதம் அவருக்கு விசா கிடைத்தது. தமிழ்நாட்டில் உள்ள சில கோவில்களுக்கு சென்றுவிட்டு பிரான்ஸ் செல்ல முடிவு தனுஷிகா செய்து இருந்தார். அப்போது சென்னை விமான நிலையம் வந்தபோது அவரது நகை அதிக எடையில் இருப்பதாக அவரின் தாலி உட்பட அனைத்து தங்க ஆபரணங்களையும் சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

    இதையடுத்து சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்த நகைகளை திரும்ப வழங்கக்கோரி கணவர் ஜெயகாந்த் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார்.

    இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, இலங்கையைச் சேர்ந்த பெண்ணிடம் கைப்பற்றிய 216 கிராம் எடை கொண்ட தாலியை உடனடியாக திருப்பி அளிக்கும்படி சுங்க அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    நம்முடைய பழக்கவழக்கங்களின்படி, திருமணமான பெண்கள் அந்த எடையில் தங்கத்தில் தாலி போட்டுக்கொள்வது நடைமுறையில் இருக்கும் ஒன்று. அதிகாரிகள் சோதனை செய்யும்போது அவர்கள் அனைத்து மதத்தின் பழக்கவழக்கங்களையும் மதிக்க வேண்டும் என்று நீதிபதி தெரிவித்தார்.

    சுங்க அதிகாரிகளின் இந்த செயல் நியாயமற்றது என்றும் நீதிபதி குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்த நடவடிக்கையில் ஈடுபட்ட அதிகாரி மீது தகுந்த துறைசார் நடவடிக்கை மேற்கொள்ளும்படியும் அறிவுறுத்தி உள்ளார்.

    • திமுகவில் அமைச்சராவதற்கு முதல் தகுதியே, பொய் சொல்லி மக்களை ஏமாற்றுவதுதான் என்பதை தனது அறிக்கை மூலம் மீண்டும் நிரூபித்திருக்கிறார்.
    • எப்படிக் கூட்டினாலும், அமைச்சர் கூறும் ரூ.12,110.74 கோடி வரவில்லை.

    சென்னை :

    பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    பயிர்க் கடன் தள்ளுபடி என்ற திமுக தேர்தல் வாக்குறுதியை ஏன் நிறைவேற்றவில்லை என்று நாங்கள் நேற்று அறிக்கை வாயிலாக எழுப்பிய கேள்விக்கு, ஊர் உறங்கிய பின்னர், நள்ளிரவில் பதிலளித்திருக்கிறார் அமைச்சர் பெரியகருப்பன். திமுக ஆட்சியில் விடியாது என்பதில், அமைச்சருக்கு அத்தனை நம்பிக்கை.

    கடந்த 2021 ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்ததும், இதற்கு முந்தைய ஆட்சியில் அறிவிக்கப்பட்டிருந்த ரூ.12,110.74 கோடி கூட்டுறவு பயிர்க் கடனை தள்ளுபடி செய்தோம் என்று, கொஞ்சம் கூடக் கூசாமல் பொய்யைக் கட்டவிழ்த்து விட்டிருக்கிறார் அமைச்சர். திமுகவில் அமைச்சராவதற்கு முதல் தகுதியே, பொய் சொல்லி மக்களை ஏமாற்றுவதுதான் என்பதை தனது அறிக்கை மூலம் மீண்டும் நிரூபித்திருக்கிறார்.

    தமிழக அரசு வெளியிட்டுள்ள கொள்கைக் குறிப்பிலேயே, கடந்த 2021 - 2022 முதல் 2023 - 2024 வரை, தள்ளுபடி செய்யப்பட்ட கூட்டுறவு பயிர்க் கடன் ரூ.4,455.37 கோடி மற்றும் நிலுவையில் இருக்கும் கடனுக்கான வட்டித் தொகை ரூ.1,430.27 கோடி என்று கூறப்பட்டுள்ளது. இதை எப்படிக் கூட்டினாலும், அமைச்சர் கூறும் ரூ.12,110.74 கோடி வரவில்லை. நபார்டு வங்கி மறு நிதியை எல்லாம் கணக்கில் காட்டி சமாளிக்க முயன்று தோற்றிருக்கிறார் அமைச்சர். கணிதப் பாடத்தில், முதலமைச்சர் முதற்கொண்டு திமுகவினர் எத்தனை திறமையானவர்கள் என்பதைத் தமிழக மக்கள் அறிவார்கள். அப்படி இருக்கையில், இப்படி ஒரு பொய் சொல்ல வெட்கமாக இல்லையா அமைச்சர் அவர்களே?

    நான்கு ஆண்டுகால டிராமா மாடல் ஆட்சியில், விவசாயிகளுக்குச் செய்த திட்டங்களாகப் பட்டியலிட்டிருக்கும் அமைச்சர், விவசாயிகள் மீது குண்டாஸ் வழக்கு, டங்ஸ்டன் திட்டத்தை எதிர்த்துப் போராடிய 11,000 விவசாயிகள் மீது வழக்கு போன்றவற்றையும் சேர்த்திருந்தால், அந்தப் பட்டியல் நிறைவு பெற்றிருக்கும்.

    நகைக் கடன், கல்விக் கடன், பயிர்க் கடன் அனைத்தையும் தள்ளுபடி செய்வோம் என்று பொய்யான வாக்குறுதி கொடுத்து, பொதுமக்களைக் கடனாளியாக்கிவிட்டு, ஆட்சிக்கு வந்த பின்னர் கண்துடைப்புக்காக சிறிய அளவில் தள்ளுபடி செய்து மக்களை ஏமாற்றுவதைக் கேள்வி கேட்டால், உங்களுக்கு கோபம் வேறு வருகிறதா? என்று தெரிவித்துள்ளார். 



    • மது பிரியர்கள் பாலத்தின் கீழ்பகுதியில் அமர்ந்து மதுகுடித்து வருகிறார்கள்.
    • பொதுமக்கள் இந்த பாலத்தின் கீழ் பகுதிவழியாக சென்று வருகிறார்கள்.

    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு நகரத்தின் முக்கியமான பகுதியான அண்ணாநகர் பகுதியில் மாமல்லபுரம் செல்லும் பாலம் உள்ளது. இந்த பாலத்தின் கீழ் பகுதியை அண்ணாநகர் பகுதியில் வசிப்பவர்கள் மற்றும் மேலமையூர் மற்றும் திருமணி ஆகிய பகுதிகளுக்கு செல்பவர்கள் பயன்படுத்தி வருகிறார்கள். தினந்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் இந்த பாலத்தின் கீழ் பகுதிவழியாக சென்று வருகிறார்கள்.

    இந்த நிலையில் இந்த பகுதி தற்போது இரவு நேர மதுபாராக மாறி உள்ளது. பாலத்தின் அருகே மதுக்கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு மதுபாட்டில்களை வாங்கும் மது பிரியர்கள் பாலத்தின் கீழ்பகுதியில் அமர்ந்து மதுகுடித்து வருகிறார்கள்.

    இதனால் அந்த இடம் தற்போது இரவு நேர மதுபாராக மாறி உள்ளது.

    தினந்தோறும் மதுபோதையில் மோதல் சம்பவமும் நடந்து வருகிறது. போதை நபர்கள் பயன்படுத்திய காலி மது பாட்டில்கள், பிளாஸ்டிக் டம்ளர் மற்றும் குப்பை கழிவுகள் அங்கேயே அகற்றப்படாமல் குவிந்து கிடக்கிறது. அந்த இடமே குப்பை கிடங்குபோல் மாறி உள்ளது.

    பகல் நேரங்களிலும் பாலத்தின் கீழ் பகுதியில் கூட்டம் கூட்டமாக அமர்ந்து மது அருந்துவதால் அவ்வழியே செல்லும் பொது மக்கள், பெண்கள் மற்றும் பள்ளிக்கு செல்லும் மாணவ மாணவிகள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள்.

    இதுபற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கு பொதுமக்கள் புகார் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்று அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி உள்ளனர். பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் திறந்த வெளிபாராக மாறி உள்ளதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • மூன்று முறை தெப்பத்தை சுற்றி வந்து சுவாமிகள் பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.
    • சூரசம்கார லீலை நடைபெற்று வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்கள்.

    திருப்பரங்குன்றம்:

    திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோவிலில் தெப்ப திருவிழா கடந்த 29-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவினை முன்னிட்டு சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் காலையில் தங்க சப்பரத்திலும், மாலையில் தங்கமயில் வாகனம், பச்சைக்குதிரை வாகனம், வெள்ளி பூத வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வந்தார்.

    விழாவின் ஒன்பதாம் நாளான நேற்று தெப்பம் முட்டுத்தள்ளுதல் மற்றும் தெப்பத் திருவிழா தேரோட்டம் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இன்று தெப்பத் திருவிழா வெகு விமரிசையாக நடந்தது.


    முன்னதாக உற்சவர் சன்னதியில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மனுக்கு பால், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட அபிஷே கங்கள் நடைபெற்று சிறப்பு அலங்காரத்தில் ஜி.எஸ்.டி. சாலையில் உள்ள தெப்பத்தில் எழுந்தருளினார்.

    அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த தெப்ப மிதவையில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் எழுந்தருள பக்தர்கள் வடம் பிடித்து தெப்ப மிதவையை இழுத்தனர். மூன்று முறை தெப்பத்தை சுற்றி வந்து சுவாமிகள் பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.

    இதே போல இன்று இரவில் மின்னொளியிலும் சுவாமிகள் தெப்பத்தில் எழுந்தருளி மூன்று முறை சுற்றி வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    தொடர்ந்து தங்க குதிரை வாகனத்தில் சுப்பிரமணிய சுவாமி எழுந்தருளி சன்னதி தெருவில் சூரசம்கார லீலை நடைபெற்று வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்கள். விழா விற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் சத்யபிரியா பாலாஜி, அறங்காவலர்கள் சண்முகசுந்தரம், மணிச் செல்வன், பொம்மதேவன் ராமையா மற்றும் கோவில் துணை ஆணையர் சூரிய நாராயணன் மற்றும் பணி யாளர்கள் செய்துள்ளனர். 

    • சுமார் 1 மணி நேரம் அதே இடத்தில் நின்றது.
    • புகைப்படம் எடுத்த போதும் சேவல் அதே இடத்தில் ஒற்றைக்காலில் நின்றது.

    போடி:

    தேனி மாவட்டம் போடியில் பிரசித்தி பெற்ற சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. சுமார் 100 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த இந்த கோவில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வருகிறது. இங்கு சஷ்டி, கிருத்திகை நாட்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்படும்.

    மேலும் பங்குனி உத்திரம், தைப்பூசம் போன்ற நாட்களில் ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து முருகனுக்கு அபிஷேகம் செய்து வழிபடுவது வழக்கம்.

    இக்கோவிலில் தை மாத கிருத்திகையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு பால், பழம், மஞ்சள் உள்ளிட்ட 16 வகை பொருட்கள் கொண்டு அபிஷேகம் நடைபெற்றது. அப்போது திடீரென கோவிலுக்குள் சேவல் ஒன்று பறந்து வந்தது.

    அந்த சேவல் யாரும் எதிர்பாராத வகையில் கொடிமரம் அருகே சென்றது. பின்னர் கொடிமரத்துக்கும், பலி பீடத்துக்கும் இடையே ஒற்றைக்காலில் ஏறி நின்றது. பக்தர்கள் அனைவரும் முருகப்பெருமானை கைகூப்பி வணங்குவது போல சேவல் ஒற்றைக்காலை தூக்கியபடி சுமார் 1 மணி நேரம் அதே இடத்தில் நின்றது.

    இதைப் பார்த்த பக்தர்கள் பரவசமடைந்ததுடன் முருகனுக்கு அரோகரா என்று கோஷங்கள் எழுப்பினர். ஆனால் பக்தர்கள் கோஷம் எழுப்பியபோதும் தன்னை புகைப்படம் எடுத்த போதும் அதனை பொருட்படுத்தாமல் சேவல் அதே இடத்தில் ஒற்றைக்காலில் முருகப்பெருமானை வழிபடுவது போல நின்றது.

    தமிழ் கடவுளான முருகனுக்கு சேவற்கொடியோன் என்ற பெயர் உண்டு. அவருடைய கொடியில் சேவல் சின்னம் இடம் பெற்றிருக்கும். இதன் காரணமாகவே தங்கள் வேண்டுதலை நிறைவேற்ற முருகப்பெருமானுக்கு சேவலை காணிக்கையாக செலுத்துவது வழக்கம்.

    அதன்படி பக்தர் காணிக்கையாக செலுத்திய சேவல் ஒற்றைக்காலில் நின்று கிருத்திகை நாளில் முருகப்பெருமானை மனமுருக வழிபட்ட சம்பவம் பக்தர்கள் மற்றும் கோவில் நிர்வாகிகள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

    • பெண் எஸ்.ஐ. மீது காவல் நிலையத்தின் உள்ளேயே புகுந்து தாக்குதல் நடந்திருப்பதாக வரும் செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.
    • சட்டம் ஒழுங்கை சந்தி சிரிக்க வைத்த மு.க.ஸ்டாலின் மாடல் அரசுக்கு கடும் கண்டனம்.

    சென்னை:

    எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில்,

    சிவகங்கை மாவட்டத்தில் பெண் எஸ்.ஐ. மீது காவல் நிலையத்தின் உள்ளேயே புகுந்து தாக்குதல் நடந்திருப்பதாக வரும் செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.

    பொதுமக்களின் பாதுகாப்பினை உறுதி செய்ய வேண்டிய காவலர்களுக்கு காவல் நிலையத்திலேயே பாதுகாப்பு இல்லை என்ற நிலைக்கு சட்டம் ஒழுங்கை சந்தி சிரிக்க வைத்த மு.க.ஸ்டாலின் மாடல் அரசுக்கு எனது கடும் கண்டனம்.

    குழந்தைகளுக்கு பள்ளியில் பாதுகாப்பில்லை!

    பெண்களுக்கு பொது இடங்களில் பாதுகாப்பில்லை!

    மூதாட்டிகளுக்கு வசிக்கும் இடங்களில் பாதுகாப்பில்லை!

    காவலர்களுக்கு காவல் நிலையத்திலேயே பாதுகாப்பில்லை!

    இதுதான் மு.க.ஸ்டாலின் மாடல் ஆட்சி!

    பெண்களுக்கு எதிரான குற்றம் புரிவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுவதை உறுதிசெய்ய வேண்டுமென ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன் என்று பதிவிட்டுள்ளார். 



    • விவசாய நிலங்கள் பயன்பெறும்.
    • 24 முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்தார்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்திற்கு 2 நாட்கள் சுற்றுப்பயணமாக வருகை தந்துள்ள முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 2-வது நாளான இன்று நெல்லை அரசு பல்நோக்கு மருத்துவமனை வளாகத்தில் நடந்த அரசு விழாவில் பங்கேற்றார்.

    இந்த விழாவில் இந்தியாவின் முதல் நதிநீர் இணைப்பு திட்டமாக அறிவிக்கப்பட்டு ரூ.1060.76 கோடி மதிப்பில் பணிகள் முடிக்கப்பட்டுள்ள தாமிரபரணி ஆறு-கருமேனியாறு மற்றும் நம்பியாறு நதிநீர் இணைப்பு வெள்ளநீர் கால்வாய் திட்டத்தை அவர் தொடங்கி வைத்தார்.

    இந்த திட்டத்தின் மூலம் நெல்லை மாவட்டம் ராதாபுரம் தொகுதியில் உள்ள வறண்ட பகுதிகளான திசையன்விளை, எம்.எல். தேரி பகுதிகளில் உள்ள விவசாய நிலங்கள் பயன்பெறும்.

    தொடர்ந்து ரூ.77 கோடி மதிப்பில் நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள மெகா உணவு பூங்கா, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் மானூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு அமைக்கப்பட்டுள்ள கூட்டுக் குடிநீர் திட்டம், நகர்புற வாழ்விடம் மேம்பாட்டு வாரியத்தின் மூலம் கட்டி முடிக்கப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளிட்ட 24 முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்தார்.

    மேலும் நெல்லை மாவட்டத்தில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் கடந்த முறை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெல்லைக்கு வருகை தந்தபோது அறிவிக்கப்பட்ட நெல்லை மேற்கு புறவழிச்சாலை தொகுதி-1 திட்டம் உள்ளிட்ட 20 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். மொத்தமாக இன்று ரூ.1,679.75 கோடி மதிப்பிலான திட்டங்களை முதல்-அமைச்சர் தொடங்கி வைத்தார்.


    பின்னர் இலவச வீட்டு மனை பட்டா உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்ந்த 75,151 பயனாளிகளுக்கு ரூ.167 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி பேருரை ஆற்றினார். முன்னதாக அவர் பல்வேறு துறைகளுக்கும் வாங்கப்பட்டுள்ள புதிய வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    பின்னர் மேடையில் வைக்கப்பட்டிருந்த கண்காட்சிகளை பார்வையிட்டதோடு, பயனாளிகளுக்கு மொபட் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் சபாநாயகர் அப்பாவு, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு, அமைச்சர்கள் ராஜகண்ணப்பன், சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, பெரியகருப்பன், மூர்த்தி, கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், தி.மு.க. நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன், மத்திய மாவட்ட பொறுப்பாளர் மைதீன்கான், ராபர்ட் புரூஸ் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் அப்துல் வகாப், ரூபி மனோகரன், நயினார் நாகேந்திரன், மேயர் ராமகிருஷ்ணன், துணை மேயர் ராஜூ, மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ், மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன், மாநகராட்சி கமிஷனர் சுகபுத்ரா, முன்னாள் அமைச்சர் பூங்கோதை ஆலடி அருணா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    ×