என் மலர்
உள்ளூர் செய்திகள்
- தமிழக அரசோ சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசுதான் நடத்த வேண்டும் என்று கூறி வருகிறது.
- பஞ்சமி நிலங்களை மீட்க வலியுறுத்தியும் சென்னையில் பேரணியாக செல்ல சீமான் முடிவு செய்து உள்ளார்.
சென்னை:
தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என பல்வேறு கட்சிகளும் கோரிக்கை விடுத்து வருகின்றன. ஆனால் தமிழக அரசோ சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசுதான் நடத்த வேண்டும் என்று கூறி வருகிறது.
இந்த நிலையில் தமிழக அரசு சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த கோரியும், பஞ்சமி நிலங்களை மீட்க வலியுறுத்தியும் சென்னையில் பேரணியாக செல்ல சீமான் முடிவு செய்து உள்ளார்.
மார்ச் 1-ந்தேதி இந்த பேரணியை பிரமாண்டமாக நடத்துவதற்கு நாம் தமிழர் கட்சி திட்டமிட்டுள்ளது. இதற்காக போலீசாரிடம் அனுமதி கேட்கப்பட்டு உள்ளது. சென்னையில் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ள நிலையில் அதற்கு அனுமதி கிடைக்காவிட்டால் வெளி மாவட்டங்களில் பேரணியை நடத்தலாமா என்பது பற்றியும் நாம் தமிழர் கட்சியினர் ஆலோசித்து வருகிறார்கள்.
- விளம்பர போட்டோ ஷூட்டிங் சுற்றுலாவில் நீங்கள் இருப்பது ரோம் நகரம் எரிந்து கொண்டிருக்கும் வேளையில், நீரோ மன்னன் பிடில் வாசிப்பது போல உள்ளது.
- பள்ளிக்கல்வித்துறை அமைச்சரின் மாவட்டத்தில் நடந்திருக்கக் கூடிய இந்த கொடுமைக்கு என்ன பதில் வைத்திருக்கிறது மு.க.ஸ்டாலின் மாடல் ஆட்சி?
சென்னை:
அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
திருச்சி மாவட்டம் மணப்பாறையில், 4-ம் வகுப்பு மாணவி பாலியல் தொல்லைக்கு ஆளானதாக வரும் செய்தி நெஞ்சை பதை பதைக்க வைக்கிறது.
பெண்கள், குறிப்பாக சிறுமிகளுக்கு எதிரான பாலியல் சீண்டல்கள் இந்த ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சியில் எந்த விதமான அச்சமும் இன்றி அதிகரித்து வருவது மிகுந்த வேதனையளிக்கிறது; இது கடும் கண்டனத்திற்குரியது.
மு.க.ஸ்டாலின் அவர்களே- பல்வேறு குற்றச்செயல்கள் நடந்து வரும் இவ்வேளையில் விளம்பர போட்டோ ஷூட்டிங் சுற்றுலாவில் நீங்கள் இருப்பது ரோம் நகரம் எரிந்து கொண்டிருக்கும் வேளையில், நீரோ மன்னன் பிடில் வாசிப்பது போல உள்ளது.
ஒரு 4-ம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு, படிக்கும் பள்ளியில் கூட பாதுகாப்பு இல்லாத அளவிற்கு ஒரு ஆட்சியை நடத்துகிறீர்கள்.
உங்கள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சரின் மாவட்டத்தில் நடந்திருக்கக் கூடிய இந்த கொடுமைக்கு என்ன பதில் வைத்திருக்கிறது மு.க.ஸ்டாலின் மாடல் ஆட்சி?
மேலும் அதே பள்ளியில் பயிலும் மற்றுமொரு மாணவியும் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகவும், அவர் காவல்துறையில் புகார் அளித்ததாகவும் செய்திகள் வருகிறது.
எனவே சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கைது செய்யப்பட்டுள்ளவர்கள் மட்டும்தான் இக்குற்றச்சாட்டில் தொடர்பு உள்ளவர்களா? மற்றும் வேறு பலர் உள்ளார்களா என முறையாக விசாரித்து, இதில் தொடர்புள்ள அனைவர் மீதும் மிகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன் என்று கூறியுள்ளார்.
- பலத்த காயமடைந்த அணிகேட் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
- உபேந்திராவை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடையநல்லூர்:
டெல்லி அசோக் பிஹார் பேஸ் ஜெய்லர் லாலாபாக் பகுதியை சேர்ந்தவர் சங்கர் சரோஜ். இவரது மகன் அணிகேட் (வயது 25).
இவரது நண்பர் டெல்லி சாலிமார்பேக் லோகியா கேம் பகுதியை சேர்ந்த உபேந்திரா (24). இவர்கள் இருவரும் தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள சொக்கம்பட்டியை அடுத்த புன்னையாபுரம் முந்தல் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் ரைஸ் மில்லில் வேலை பார்த்து வந்தனர்.
இந்நிலையில் இவர்கள் இருவருக்கும் இடையில் வேலை செய்வதில் தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்று இரவு வழக்கம் போல் வேலையை முடித்துவிட்டு ரைஸ் மில் அருகே தங்கும் விடுதிக்கு சென்றுள்ளனர்.
அவர்கள் இரவு சமையல் செய்த போது இருவருக்கும் இடையே மீண்டும் வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த உபேந்திரா, சமையலுக்கு காய்கறிகளை வெட்டிக் கொண்டிருந்த கத்தியால் அணிகேட்டை குத்தியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த அணிகேட் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து தகவலறிந்ததும் சொக்கம்பட்டி சப்-இன்ஸ்பெக்டர் உடையார்சாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அணிகேட்டின் உடலை கைப்பற்றி நெல்லை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் உபேந்திராவை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தடயவியல் சோதனை மையத்தில் ஞானசேகரனுக்கு குரல் பரிசோதனை நடத்தப்பட்டது.
- ஞானசேகரனின் நீதிமன்ற காவல் இன்றோடு முடிகிறது.
சென்னை:
அண்ணா பல்கலைக் கழக பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பல்கலைக்கழக வளாகத்தில் வைத்து மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட ஞானசேகரன் மிகவும் கொடூரமாக நடந்து கொண்டிருந்தார். அப்போது அவர் போனில் வேறு ஒருவருடன் பேசிக் கொண்டிருந்ததாகவும் குற்றம் சாட்டியிருந்த மாணவி அந்த சாருடனுடன் நீ உல்லாசமாக இருக்க வேண்டும் என்று தனது புகாரில் குறிப்பிட்டிருந்தார்.
இதைதொடர்ந்து ஞானசேகரனிடமிருந்து அவரது செல்போனை முக்கிய ஆதாரமாக போலீசார் கைப்பற்றியுள்ளனர். மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய வழக்கு என்பதால் இந்த வழக்கில் திரட்டப்பட்ட ஆதாரங்களை போலீசார் முதன்மையானதாக கருதி விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அந்த வகையில் ஞானசேகரன் போனில் பேசியது தொடர்பாக குரல் பரிசோதனை நடத்துவதற்கு முடிவு செய்திருந்தனர். இது பற்றி சென்னை டி.ஜி.பி. அலுவலக வளாகத்தில் உள்ள தடயவியல் சோதனை மையத்தில் ஞானசேகரனுக்கு பரிசோதனை நடத்தப்பட்டது. 3 மணி நேரமாக நடத்தப்பட்ட இந்த பரிசோதனையின் போது பல கோணங்களில் அவரை பேச வைத்து குரலை பதிவு செய்துள்ளனர்.
இதனை தொடர்ந்து ஞானசேகரனுக்கு ரத்த பரிசோதனை நடத்தவும் போலீசார் முடிவு செய்து உள்ளனர். இது தொடர்பாக கோர்ட்டில் அனுமதி கேட்டுள்ள போலீசார் விரைவில் அரசு ஆஸ்பத்திரிக்கு அவரை அழைத்துச் சென்று ரத்த பரிசோதனையை மேற்கொள்வதற்கு திட்டமிட்டு உள்ளனர்.
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் பாலியல் சம்பவத்தில் ஈடுபட்ட போது கைப்பற்றப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையிலேயே அடுத்த கட்டமாக இந்த ரத்த பரிசோதனை நடத்தப்படுகிறது. குரல் பரிசோதனை போன்று இந்த ரத்த பரிசோதனையும் பாலியல் வன்கொடுமை வழக்கில் முக்கியமான பரிசோதனையாகவே பார்க்கப்படுகிறது. இதற்கிடையே ஞானசேகரனின் நீதிமன்ற காவல் இன்றோடு முடிகிறது.
இதை தொடர்ந்து அவரை சைதாப்பேட்டை கோர்ட்டில் இன்று ஆஜர்படுத்த உள்ளனர். அப்போது ஞானசேகரனின் நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட உள்ளது. இந்த வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய உள்ள போலீசார் வழக்கு விசாரணையை விரைந்து முடித்து ஞானசேகரனுக்கு கடும் தண்டனையை வாங்கி கொடுக்க திட்டமிட்டு உள்ளனர்.
- நாளை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும்.
- காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும்.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும்.
நாளை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும்.
வரும் 9-ந்தேதி முதல் 13-ந்தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும்.
இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 32-33 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 21-22 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 32-33 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 21-22 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- போலீசார் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வியாபாரிகளை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
- ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கடலூர்:
கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் பஸ் நிலையம் அருகில் பூ மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. கடலூர் , நெல்லிக்குப்பம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த மக்கள், வியாபாரிகள் இங்கு தினசரி வந்து பூக்களை வாங்கி செல்கின்றனர்.
இந்த நிலையில் பூ மார்க்கெட்டில் போக்குவரத்துக்கு இடையூறாக ஆக்கிரமிப்புகள் உள்ளதாக மாநகராட்சியில் பொதுமக்கள் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் மாநகராட்சி நகரமைப்பு அலுவலர் ராஜசேகர் தலைமையிலான அதிகாரிகள் கடந்த 5-ந் தேதி பூ மார்க்கெட்டுக்கு சென்று போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த மேற்கூரைகளை அகற்றி ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது பூக்கடை வியாபாரிகள், ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு 3 நாட்கள் அவகாசம் கேட்டனர். தொடர்ந்து ஒரு நாளைக்குள் ஆக்கிரமிப்புகளை அகற்றிக்கொள்ள வேண்டும். இல்லையெனில் மாநகராட்சி மூலமாக அகற்றப்படும் என்றனர்.
இந்த நிலையில் இன்று காலை மாநகராட்சி அதிகாரிகள் பொக்லைன் எந்திரத்துடன் சென்று பூக்கடைகளின் மேற்கூரைகளை இடித்து அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த வியாபாரிகள் நாங்கள் கேட்ட கால அவகாசம் முடிவதற்குள் ஏன் கடைகளை அகற்றுகிறீர்கள் என்று அங்கிருந்த அதிகாரிகள் மற்றும் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து போலீசார் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வியாபாரிகளை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். தொடர்ந்து ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
- அரசுப் பணிகளில் தலையிடுவதை தி.மு.க.வினர் வாடிக்கையாக கொண்டிருந்தனர்.
- மக்கள் நலப் பணிகள் தொடர்ந்து நடைபெற ஆவன செய்ய வேண்டும்.
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கடந்த 44 மாத கால தி.மு.க. ஆட்சியில், அரசு ஊழியர்கள், காவல் துறை அதிகாரிகள், உள்ளாட்சி அமைப்புகளைச் சேர்ந்த அதிகாரிகள் என அனைவரையும் மிரட்டி அரசுப் பணிகளில் தலையிடுவதை தி.மு.க.வினர் வாடிக்கையாக கொண்டிருந்தனர். இதற்கு பல உதாரணங்களைக் கூறலாம்.
இந்த வகையில், தற்போது உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் தங்களின் பதவிக் காலம் முடிந்தும் அரசுப் பணிகளில் அவர்களின் தலையீடு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதில் உடனடியாகத் தலையிட்டு, பதவிக் காலம் முடிந்த உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளாட்சி அமைப்புகளின் பணிகளில் தலையிடுவதை தடுத்து நிறுத்தி, தனி அலுவலர்கள் சுதந்திரமாக செயல்பட வழிவகை செய்து, மக்கள் நலப் பணிகள் தொடர்ந்து நடைபெற ஆவன செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- கைது செய்யப்பட்ட மீனவர்கள் 17 பேரில் 13 பேரை நிபந்தனை அடிப்படையில் விடுதலை செய்தார்.
- இரு படகோட்டிகளுக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார்.
எல்லைதாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவதும், மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்துவதும், அவர்களது படகுகளை பறிமுதல் செய்வதும் தொடர்கதையாகி வருகிறது.
சிறை பிடிக்கப்பட்டவர்களை விடுதலை செய்ய அரசு நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழக மீனவர்கள் வேலைநிறுத்தம், ஆர்ப்பாட்டங்களையும் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த ஆண்டு டிச. 24-ந்தேதி இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் வழக்கு இலங்கை மன்னார் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி, கைது செய்யப்பட்ட மீனவர்கள் 17 பேரில் 13 பேரை நிபந்தனை அடிப்படையில் விடுதலை செய்தார். மேலும் இரு படகோட்டிகளுக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார்.
மேலும் 2 மீனவர்களின் வழக்கு விசாரணையை பிப்.12-ந்தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
- விசாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து 250 நாட்டிக்கல் மைல் தொலைவில் நின்று உளவு பார்த்தது.
- தென்னிந்திய பகுதிகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
சென்னை:
சீன உளவு கப்பலான 'சியாங் யாங் ஹாங் 01' இந்திய பெருங்கடல் பகுதிக்கு மீண்டும் வந்துள்ளது. நேற்று அந்த கப்பல் இந்திய பெருங்கடல் பகுதியில் நுழைந்திருப்பது செயற்கைகோள் அனுப்பியுள்ள படங்கள் மூலம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் இந்தியாவில், உள்நாட்டிலேயே நவீன தொழில்நுட்ப முறையில் உருவாக்கப்பட்ட கண்டம் விட்டு கண்டம் பாயும் அக்னி-5 ஏவுகணையை முதல் முறையாக ஏவி இந்தியா சோதனை நடத்தியது அப்போது சீன உளவு கப்பல் இந்திய பெருங்கடல் பகுதியில் நுழைந்தது.
விசாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து 250 நாட்டிக்கல் மைல் தொலைவில் நின்று உளவு பார்த்தது. இந்திய கடற்படை தளங்களின் செயல்பாடுகளையும் அந்த சீன உளவு கப்பல் கண்காணித்தது. பின்னர் அந்த கப்பல் அங்கிருந்து சென்று விட்டது.
இந்த நிலையில் சீன உளவு கப்பலான 'சியாங் யாங் ஹாங் 01' மீண்டும் இந்திய பெருங்கடல் பகுதிக்கு வந்துள்ளது. சீன நீர்மூழ்கி கப்பல்கள் மற்றும் விமானம் தாங்கி கப்பல்களை கடலுக்கு அடியில் நிலை நிறுத்துவதற்காக சீன உளவு கப்பல் நீருக்கு அடியில் ஆய்வுகளை நடத்துவதாக சந்தேகிக்கப்பட்டது.
இதன் மூலம் தென்னிந்திய பகுதிகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்திய பெருங்கடல் பகுதியில் சீன உளவு கப்பலின் செயல்பாடுகளை இந்தியா கண்காணித்து வருவதாக இந்திய கடற்படை தலைவர் தினேஷ் கே.திரிபாதி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், 'இந்திய பெருங்கடல் பகுதியில் சீன உளவு கப்பல் நுழைந்துள்ளது. இதை செயற்கைகோள் அனுப்பிய படம் மூலம் கண்டறிந்துள்ளோம். அந்த சீன உளவு கப்பலின் செயல்பாடுகளை நாங்கள் உன்னிப்பாக கண்காணித்து வருகிறோம். அந்த பகுதியில் சீன உளவு கப்பல் என்ன செய்கிறது என்பதை நாங்கள் கண்டறிந்து விடுவோம்' என்றார்.
- வாக்கு எண்ணிக்கை மையமான சித்தோடு அரசு பொறியியல் கல்லூரி வளாகம் மலைப்பகுதிகள் நிறைந்ததாகும்.
- துணை ராணுவத்தினர், பட்டாலியன் போலீசார், உள்ளூர் போலீசார், தீயணைப்பு வீரர்கள் தீயணைப்பு வாகனங்களுடன் தயார் நிலையில் உள்ளனர்.
ஈரோடு:
ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் நேற்று முன்தினம் நடந்தது. 67.97 சதவீதம் வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. மொத்தம் உள்ள 2 லட்சத்து 27 ஆயிரத்து 546 வாக்காளர்களில் இந்த இடைத்தேர்தலில் 1 லட்சத்து 54 ஆயிரத்து 657 வாக்காளர்கள் தங்களது வாக்கினை பதிவு செய்துள்ளனர்.
72 ஆயிரத்து 889 பேர் ஓட்டு போடவில்லை. முக்கிய எதிர் கட்சிகள் புறக்கணிப்பால் இடைத்தேர்தலில் வாக்கு சதவீதம் சரிந்துள்ளதாக கூறப்படுகிறது. ஓட்டுப்பதிவுக்கு பின்னர் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பூட்டி சீல் வைக்கப்பட்டு சித்தோட்டில் உள்ள அரசு பொறியியல் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
அங்கு பாதுகாப்பு அறையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வரிசைப்படி அடுக்கி வைக்கப்பட்டன. பின்னர் அந்த மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பு அறையில் பூட்டி சீல் வைக்கப்பட்டது. வாக்கு எண்ணும் மையத்தில் 78 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. வேட்பாளர்கள் மற்றும் வேட்பாளர்களின் முகவர்கள் இந்த கேமராக்களில் பதிவாகும் காட்சிகளை கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வாக்குப்பெட்டி பாதுகாப்பு அறை 4 அடுக்கு பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. துணை ராணுவத்தினர், பட்டாலியன் போலீசார், உள்ளூர் போலீசார், தீயணைப்பு வீரர்கள் தீயணைப்பு வாகனங்களுடன் தயார் நிலையில் உள்ளனர்.
வாக்கு எண்ணிக்கை மையமான சித்தோடு அரசு பொறியியல் கல்லூரி வளாகம் மலைப்பகுதிகள் நிறைந்ததாகும். இதன் நுழைவுவாயிலில் இருந்து வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு செல்ல 2 கிலோமீட்டர் கடந்து செல்ல வேண்டும்.
நுழைவுவாயில் பகுதியில் டி.எஸ்.பி சண்முகம் தலைமையில் 15-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
நுழைவுவாயில் பகுதியிலிருந்து ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் மையத்திற்கு செல்வதற்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. வாகனங்கள், பணியாளர்கள் கடும் சோதனைக்கு பிறகு உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். வாகனத்தில் வருபவர்கள் ஐ.டி கார்டு, வாகன பதிவு எண், வாகனத்தில் வருபவர்களின் செல்போன் எண், முகவரி, உள்ளே செல்லும் நேரம், வெளியே வரும் நேரம், எந்த பணிக்காக வந்து உள்ளா ர்கள் போன்ற விவரங்கள் சேகரித்த பின்னரே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர்.
வாக்கு எண்ணிக்கை மையம் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மொத்தம் 14 மேஜைகளில் 17 சுற்றுக்களாக வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இந்த பணியில் ஒவ்வொரு மேஜைகளிலும் வாக்கு எண்ணிக்கை அலுவலர், உதவி அலுவலர், நுண்பார்வையாளர்கள் உட்பட 3 பேர், கூடுதல் அலுவலர் ஒருவர் என 51 பேர் ஈடுபட உள்ளனர்.
இதை தவிர வாக்குபதிவு எந்திரங்களை எடுத்து வைத்தல் மற்றும் பிற பணிகளுக்கு 50-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபட உள்ளனர். நாளை காலை பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டிருக்கும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வாக்கு எண்ணும் மைய கட்டிடத்திற்கு கொண்டுவரப்படுகிறது.
அதைத் தொடர்ந்து காலை 8 மணிக்கு முதலில் தபால் ஓட்டுகள் பிரித்து எண்ணப்படுகிறது. அதைதொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படுகிறது.
- பெண்ணை ஓடும் ரெயிலில் இருந்து கீழே தள்ளிவிட்டிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றன.
- தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்பாக வாழவே முடியாது என்பதையே வெளிச்சம் போட்டு காட்டுகிறது.
சென்னை:
அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
கோவையிலிருந்து திருப்பதி செல்லும் ரெயிலில் பெண்களுக்கான பெட்டியில் அத்துமீறி நுழைந்த இருவர், அதில் பயணம் செய்து கொண்டிருந்த கர்ப்பிணி பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததோடு, தன்னைக் காப்பாற்றக் கூறி கூச்சலிட்ட பெண்ணை ஓடும் ரெயிலில் இருந்து கீழே தள்ளிவிட்டிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றன.
நேற்று ஒரே நாளில், கோவை மேட்டுப்பாளையத்தில் ஆட்டோ ஓட்டுநரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட 15 வயது சிறுமி, திருச்சியில் பள்ளித்தாளாளரின் கணவரால் பாலியல் துன்புறுத்தப்பட்ட 4 வயது குழந்தை, கடலூரில் அடையாளம் தெரியாத நபர்களால் பாலியல் தொந்தரவுக்குள்ளான 16 வயது சிறுமி என அடுத்தடுத்து நடைபெற்றிருக்கும் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றச் சம்பவங்களுக்கு முதலமைச்சர் என்ன பதில் சொல்லப் போகிறார்?
குழந்தைகள் மற்றும் பெண்களின் பாதுகாப்பில் சிறிதளவும் அக்கறையற்ற திமுக அரசால், அரசுப் பள்ளிகள், பொது இடங்கள், பொது போக்குவரத்து என அனைத்து இடங்களிலும் சர்வசாதாரணமாக நடைபெறும் பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள் தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்பாக வாழவே முடியாது என்பதையே வெளிச்சம் போட்டு காட்டுகிறது.
எனவே, கடுமையான சட்டங்களை கொண்டுவந்த பிறகும் தினந்தோறும் பெண்களுக்கு எதிராக நடைபெறும் பாலியல் குற்றச்சம்பவங்களை அடியோடு தடுத்து நிறுத்திட தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு தமிழக முதலமைச்சரையும், அவர் வசம் இருக்கும் காவல்துறையையும் வலியுறுத்துகிறேன் என தெரிவித்துள்ளார்.
- 20 க்கும் மேற்பட்டோர் காயமடைந்து ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
- சிகிச்சையில் இருக்கும் 2 பேரையும் சிகிச்சைக்கு பின் கைது செய்ய போலீசார் முடிவு செய்துள்ளனர்.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டம் செங்கப்பள்ளி அருகே தனியார் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 2 கல்லூரி மாணவர்கள் பலியாகினர். 20 க்கும் மேற்பட்டோர் காயமடைந்து ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்தநிலையில் தனியார் பேருந்து டிரைவர் பெருந்துறையை சேர்ந்த மாரசாமி மற்றும் கண்டக்டர் துரைசாமி ஆகியோர் மீது ஊத்துக்குளி போலீசார் 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
281-பொது சாலைகளில் அதிவேகமாக வாகனத்தை இயக்குதல், 125-ஏ பிறர் உயிருக்கும் பாதுகாப்புக்கும் ஆபத்தை விளைவிக்கும் வகையில் அலட்சியமாக செயல்படுதல், 106( 1 )அலட்சியமாக செயல்பட்டு மரணத்தை விளைவித்தல் ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தற்போது சிகிச்சையில் இருக்கும் 2 பேரையும் சிகிச்சைக்கு பின் கைது செய்ய போலீசார் முடிவு செய்துள்ளனர்.






