என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போடி"

    • ஒரு சில நிமிடங்களில் மீண்டும் மின்சாரம் வந்து விடும் என்று எதிர்பார்த்து காத்திருந்த மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
    • மீனாட்சிபுரம், சிலமலை, சில்ல மரத்துப்பட்டி, ராசிங்கபுரம், கரட்டுப்பட்டி, சூலபுரம் போன்ற பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது.

    மேலசொக்கநாதபுரம்:

    தேனி மாவட்டம் போடி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் நேற்று காலை முதல் மின்சார விநியோகம் முறையாக இல்லாமல் ½ மணி நேரத்திற்கு ஒரு முறை மின்வெட்டு ஏற்பட்டு வந்தது.

    இந்நிலையில் இரவு சுமார் 11 மணியளவில் மின்வெட்டு ஏற்பட்ட நிலையில் ஒரு சில நிமிடங்களில் மீண்டும் மின்சாரம் வந்து விடும் என்று எதிர்பார்த்து காத்திருந்த மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

    தேனி துணை மின் நிலையத்தில் போடி விநியோகப் பகுதியில் ஏற்பட்ட பழுது காரணமாக சுமார் 3 ½ மணி நேரத்திற்கு மேல் மின்தடை ஏற்பட்டது.

    இதனால் போடி சுற்றுப்பகுதி மக்கள் மட்டுமின்றி அணைக்கரைப்பட்டி, மீனாட்சிபுரம், சிலமலை, சில்ல மரத்துப்பட்டி, ராசிங்கபுரம், கரட்டுப்பட்டி, சூலபுரம் போன்ற பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது.

    மேலும் போடியை சுற்றியுள்ள மேற்கு தொடர்ச்சி மலை கிராமங்களான போடி மெட்டு, கொட்டகுடி, குரங்கணி, டாப் ஸ்டேஷன், சென்ட்ரல், பிச்சாங்கரை போன்ற பகுதிகளிலும் சுமார் 3 ½ மணி நேரத்திற்கு மேல் மின்தடை ஏற்பட்டதால் பொதுமக்கள், முதியவர்கள், நோயாளிகள், குழந்தைகள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகினர்.

    நீண்ட நேரமாகியும் மின்சாரம் வராததால் வீட்டிற்குள் ஏற்பட்ட புழுக்கம் காரணமாக சாலையில் படுக்கை விரித்து படுத்து உறங்கினர்.

    மேலும் வீட்டு வாசலில் பொது மக்கள் கொசுக்கடி காரணமாக மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர்.

    தேனி பகுதியில் மில் வேலைக்கு சென்று இரவு பணி முடித்து திரும்பி வரும் பெண்களை பாதுகாப்பாக அழைத்துச் செல்வதற்காக அவர்களுடைய தாய்மார்கள் இருளில் காத்திருந்தனர்.

    போடி அரசு மருத்துவமனையில் மின்சாரம் தடைப்பட்டதை தொடர்ந்து அங்குள்ள ஜெனரேட்டர் இயக்கப்பட்டு மின்சாரம் விநியோகம் நடைபெற்றது. ஆனால் நீண்ட நேரம் மின் தடை ஏற்பட்டதால் ஜெனரேட்டரில் டீசல் தீர்ந்து நின்று விட்டது. இதனால் நோயாளிகள் பெரிதும் அவதிக்குள்ளாகினர்.

    மேலும் ஏற்பட்ட மின்தடை காரணமாக வேலைக்கு செல்பவர்கள் குழந்தைகள் தூக்கம் பாதிக்கப்பட்டதால் காலையில் வேலைக்கு செல்வதிலும் பள்ளிக்கு செல்வதிலும் மிகுந்த சிரமம் உள்ளதாக வேதனை தெரிவித்தனர்.

    இரவு 11 மணிக்கு ஏற்பட்ட மின்தடை நள்ளிரவு 2½ மணியளவில் சரி செய்யப்பட்டது.

    கடந்த சில வாரங்களாகவே இதுபோன்று மின்தடை ஏற்பட்டுவரும் நிலையில் உரிய பராமரிப்பு மேற்கொண்டு மின்விநியோகத்தை சீராக வழங்க வேண்டும் என்று பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • தலைமறைவாக உள்ள ஜிதேந்திரகுமாரை தேடி வருகின்றனர்.
    • கைப்பற்றப்பட்ட 7 லிட்டர் கள்ளச்சாராயம் அழிக்கப்பட உள்ளதாக தெரிவித்தனர்.

    மேலசொக்கநாதபுரம்:

    போடி அருகில் உள்ள முந்தல் பகுதியில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் சாராயம் காய்ச்சப்படுவதாக உத்தமபாளையம் மதுவிலக்கு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் மதுவிலக்கு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் முருகானந்தம் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். அங்குள்ள சோதனை சாவடியில் சந்தேகத்திற்கு இடமாக வந்த ஒரு வேனை நிறுத்தி ஆய்வு செய்தனர்.

    அப்போது தண்ணீர் குடிப்பதற்கு பயன்படுத்தப்படும் கேன்களில் குடிநீர் கொண்டு செல்வது போல 6 பாட்டில்களில் கள்ளச்சாராயம் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. அதனை பறிமுதல் செய்த போலீசார் வேனை ஓட்டி வந்த கேரள மாநிலம் நெடுங்கண்டம் அருகில் உள்ள பத்துவலவு பகுதியை சேர்ந்த சுகேரியா குரியன் (வயது 52) என்பவரை கைது செய்தனர்.

    இவரிடம் விசாரணை நடத்தியதில் மத்திய பிரதேசத்தை சேர்ந்த ஜிதேந்திரகுமார் என்பவரிடம் இருந்து சாராயம் காய்ச்சுவதற்கான மூலப்பொருட்களை வாங்கி கடந்த பல ஆண்டுகளாக இந்த வியாபாரம் செய்து வந்துள்ளார். காய்ச்சிய சாராயத்தை கேரளாவில் உள்ள தொழிலாளர்களுக்கு விற்பனை செய்து வந்துள்ளார் என்று போலீசார் விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து சுகேரியா குரியனை கைது செய்து வேனையும் கைப்பற்றினர். தலைமறைவாக உள்ள ஜிதேந்திரகுமாரை தேடி வருகின்றனர்.

    கைப்பற்றப்பட்ட 7 லிட்டர் கள்ளச்சாராயம் அழிக்கப்பட உள்ளதாக தெரிவித்தனர்.

    • உரிமம் இன்றி நாட்டுத்துப்பாக்கியை கார்த்திக் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலசொக்கநாதபுரம்:

    தேனி மாவட்டம் போடி அருகே ஒருவர் வீட்டில் நாட்டுத்துப்பாக்கி பதுக்கி வைத்திருப்பதாக மாவட்ட எஸ்.பி.க்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் எஸ்.பி. தனிப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கதிரேசன் தலைமையில் ஏட்டு ராம்குமார் சேதுபதி மற்றும் போலீசார் போடி புதூர் ரெயில்வே லைன் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த அய்யாவு மகன் கார்த்திக் (வயது 42) என்பவரது வீட்டில் சோதனை நடத்தினர்.

    இதில் உரிமம் இன்றி நாட்டுத்துப்பாக்கியை கார்த்திக் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்து நாட்டு துப்பாக்கியை பறிமுதல் செய்தனர். அவர் எதற்காக இதனை பதுக்கி வைத்திருந்தார்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பேருந்தில் பயணித்த சுமார் 16க்கும் மேற்பட்ட பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
    • அதிர்ஷ்டவசமாக அப்போது சாலையில் மற்ற வாகனங்கள் வராததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

    மேலசொக்கநாதபுரம்:

    மூணாறில் இருந்து சென்னை நோக்கி ஆம்னி பஸ் வந்தது. இதில் 16க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர். இந்த பஸ் போடி ரெயில்வே கேட் பகுதியில் வந்த போது திடீரென பின் பக்க டயர் வெடித்து தீ பிடித்து புகை மண்டலமாக காட்சியளித்தது.

    இதைப் பார்த்ததும் டிரைவர் துரிதமாக செயல்பட்டு பஸ்சை ஓரமாக நிறுத்தினார். இதனைத் தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். மேலும் தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

    அவர்கள் விரைந்து வந்து தீ மேலும் பரவாமல் அணைத்தனர். இதனால் பேருந்தில் பயணித்த சுமார் 16க்கும் மேற்பட்ட பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    அதிர்ஷ்டவசமாக அப்போது சாலையில் மற்ற வாகனங்கள் வராததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. நீண்ட தூரம் செல்லும் ஆம்னி பஸ்களை முறையாக பராமரித்து பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • சுமார் 1 மணி நேரம் அதே இடத்தில் நின்றது.
    • புகைப்படம் எடுத்த போதும் சேவல் அதே இடத்தில் ஒற்றைக்காலில் நின்றது.

    போடி:

    தேனி மாவட்டம் போடியில் பிரசித்தி பெற்ற சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. சுமார் 100 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த இந்த கோவில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வருகிறது. இங்கு சஷ்டி, கிருத்திகை நாட்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்படும்.

    மேலும் பங்குனி உத்திரம், தைப்பூசம் போன்ற நாட்களில் ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து முருகனுக்கு அபிஷேகம் செய்து வழிபடுவது வழக்கம்.

    இக்கோவிலில் தை மாத கிருத்திகையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு பால், பழம், மஞ்சள் உள்ளிட்ட 16 வகை பொருட்கள் கொண்டு அபிஷேகம் நடைபெற்றது. அப்போது திடீரென கோவிலுக்குள் சேவல் ஒன்று பறந்து வந்தது.

    அந்த சேவல் யாரும் எதிர்பாராத வகையில் கொடிமரம் அருகே சென்றது. பின்னர் கொடிமரத்துக்கும், பலி பீடத்துக்கும் இடையே ஒற்றைக்காலில் ஏறி நின்றது. பக்தர்கள் அனைவரும் முருகப்பெருமானை கைகூப்பி வணங்குவது போல சேவல் ஒற்றைக்காலை தூக்கியபடி சுமார் 1 மணி நேரம் அதே இடத்தில் நின்றது.

    இதைப் பார்த்த பக்தர்கள் பரவசமடைந்ததுடன் முருகனுக்கு அரோகரா என்று கோஷங்கள் எழுப்பினர். ஆனால் பக்தர்கள் கோஷம் எழுப்பியபோதும் தன்னை புகைப்படம் எடுத்த போதும் அதனை பொருட்படுத்தாமல் சேவல் அதே இடத்தில் ஒற்றைக்காலில் முருகப்பெருமானை வழிபடுவது போல நின்றது.

    தமிழ் கடவுளான முருகனுக்கு சேவற்கொடியோன் என்ற பெயர் உண்டு. அவருடைய கொடியில் சேவல் சின்னம் இடம் பெற்றிருக்கும். இதன் காரணமாகவே தங்கள் வேண்டுதலை நிறைவேற்ற முருகப்பெருமானுக்கு சேவலை காணிக்கையாக செலுத்துவது வழக்கம்.

    அதன்படி பக்தர் காணிக்கையாக செலுத்திய சேவல் ஒற்றைக்காலில் நின்று கிருத்திகை நாளில் முருகப்பெருமானை மனமுருக வழிபட்ட சம்பவம் பக்தர்கள் மற்றும் கோவில் நிர்வாகிகள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

    ×