என் மலர்tooltip icon

    இந்தியா

    • ஒரு பஸ்சில் 90 சதவீத இருக்கைகள் முன்பதிவு செய்யப்பட்டால் மட்டுமே சிறப்புப் பஸ் இயக்கப்படும்.
    • இருக்கைகளை ஒரு பெரிய குழுவாகவோ அல்லது பல குழுக்கள் இணைந்தோ முன்பதிவு செய்யலாம்.

    சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு மண்டல பூஜை யாத்திரை மேற்கொள்ளும் பக்தா்களுக்காக, 72 ஆன்மிக சுற்றுலாத் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

    யாத்திரையின்போது வழியில் உள்ள முக்கியக் கோவில்களில் பக்தா்கள் தரிசனம் செய்யும் வகையில், கேரள மாநில சாலைப் போக்குவரத்துக் கழகம் (கே.எஸ்.ஆர்.டி.சி.) இந்தப் புதிய திட்டத்தை முதல்முறையாகத் தொடங்கியுள்ளது.

    சபரிமலை கோவில் நடை, வருடாந்திர மண்டல-மகரவிளக்கு பூஜை யாத்திரைக்காக நேற்று திறக்கப்பட்டது.

    இந்நிலையில், திருவிதாங்கூா் தேவஸ்வம் வாரியத்துடன் இணைந்து, யாத்திரையின் முதல் கட்டமாக இந்த 72 சிறப்பு ஆன்மிக சுற்றுலாத் தொகுப்புகள் (கே.எஸ்.ஆர்.டி.சி.) சாா்பில் அறிவிக்கப்பட்டுள்ளன. இவற்றின்கீழ் 1,600 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன. தேவைப்பட்டால் கூடுதல் பயணங்கள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    வடக்கு மாவட்டங்களில் இருந்து தொடங்கும் பயணங்கள் பெரும்பாலும் இரண்டு நாள் சேவைகளாக இருக்கும். ஆலப்புழா, பத்தனம்திட்டா போன்ற சபரிமலைக்கு அருகில் உள்ள இடங்களிலிருந்து தொடங்கும் பயணங்கள் ஒரு நாள் சேவையாக இருக்கும்.

    ஐயப்பனின் வாழ்க்கையோடு தொடா்புடைய, வரலாற்று மற்றும் புராண முக்கியத்துவம் வாய்ந்த குளத்துப்புழை, ஆரியங்காவு, அச்சன்கோவில், பந்தளம் வலிய கோய்க்கல் ஆகிய இடங்களில் உள்ள ஸ்ரீ தா்ம சாஸ்தா கோவில்கள் இந்தச் சுற்றுலாத் திட்டத்தில் சோ்க்கப்பட்டுள்ளன. வட மாவட்ட பக்தா்களுக்கான திட்டங்களில் குருவாயூா் கோவிலும், தென் மாவட்ட பக்தா்களுக்கு கொட்டாரக் கரை கணபதி கோவிலும் இடம்பெறும்.

    இந்தச் சுற்றுலாத் திட்டங்கள் சலுகை கட்டணத்தில் வழங்கப்படும். உதாரணமாக, திருச்சூா் போன்ற இடங்களில் இருந்து தொடங்கும் பயணங்களுக்கான கட்டணம் ஒரு நபருக்கு சுமாா் ரூ.500 முதல் 700 வரை நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

    ஒரு பஸ்சில் 90 சதவீத இருக்கைகள் முன்பதிவு செய்யப்பட்டால் மட்டுமே சிறப்புப் பஸ் இயக்கப்படும். இருக்கைகளை ஒரு பெரிய குழுவாகவோ அல்லது பல குழுக்கள் இணைந்தோ முன்பதிவு செய்யலாம்.

    குழு முன்பதிவை ஊக்குவிக்க சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. வார இறுதி நாள்களில் முன்பதிவு செய்தால் குழுத் தலைவருக்கு 3 சதவீதமும், வார நாள்களில் முன்பதிவு செய்தால் 2.5 சதவீமும் கமிஷன் வழங்கப்படும்.

    இந்தத் திட்டங்களில் பயணம் செய்வோருக்கு, பம்பை கேஎஸ்ஆா்டிசி பணிமனையில் கூடுதல் வசதிகள் செய்துதரப்படும். சந்நிதானத்தில் பக்தா்களுக்கு நேரடியாக உதவ (கே.எஸ்.ஆர்.டி.சி.) ஒருங்கிணைப்பாளா்கள் நியமிக்கப்படுவா். கூடுதல் தகவல்களுக்கு, பத்தனம் திட்டா(91889 38524), செங்கனூா்(91889 38525) கே.எஸ்.ஆர்.டி.சி. சுற்றுலாப் பிரிவு ஒருங்கிணைப்பாளா்களைத் தொடா்பு கொள்ளலாம்.

    • உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
    • உயிரிழந்தோர் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

    சென்னை:

    தெலுங்கானாவில் இருந்து சவுதி அரேபியாவுக்கு உம்ரா புனித பயணம் மேற்கொண்ட பக்தர்கள் பயணித்த பேருந்து மீது டீசல் லாரி மோதியதில் ஏற்பட்ட விபத்தில் 42 பேர் உயிரிழந்தனர். இதனிடையே, இந்த விபத்தில் இருந்து 24 வயதான வாலிபர் ஒருவர் காயங்களுடன் உயிர் பிழைத்துள்ளார்.

    நாட்டையே உலுக்கிய இந்த துயர சம்பவம் தொடர்பாக தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், அ.தி.முக. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    தெலங்கானா மாநிலத்தில் இருந்து மெக்காவிற்கு புனிதப் பயணம் மேற்கொண்டு, மதீனா நகருக்கு செல்லும் வழியில் பேருந்து விபத்தில் சிக்கி 42 இந்தியர்கள் உயிரிழந்ததாக வரும் செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.

    உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதுடன், உயிரிழந்தோர் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் என்று கூறியுள்ளார். 



    • இந்த விபத்தில் இருந்து ஒருவர் மட்டும் பலத்த காயங்களுடன் உயிர் பிழைத்துள்ளார்.
    • இந்த துயரமான நேரத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்தவர்கள் சவுதி அரேபியாவுக்கு உம்ரா புனித பயணம் மேற்கொண்டனர்.

    அவர்கள் மெக்காவில் தொழுகையை முடித்து விட்டு மதீனாவுக்கு பஸ்சில் சென்று கொண்டு இருந்தனர். ஜோரா என்ற இடத்தில் பஸ் சென்று கொண்டு இருந்த போது எதிர்பாராத விதமாக பஸ் மீது டீசல் லாரி மோதியது. இதில் பஸ் தீப்பிடித்து எரிந்தது. இந்த கோர விபத்தில் பஸ்சில் இருந்த 20 பெண்கள், 11 சிறுவர்கள் உள்பட 42 பேர் பலியானார்கள். இதனிடையே, இந்த விபத்தில் இருந்து ஒருவர் மட்டும் பலத்த காயங்களுடன் உயிர் பிழைத்துள்ளார்.

    நாட்டையே உலுக்கிய இந்த துயர சம்பவம் தொடர்பாக தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    மதீனா அருகே நடந்த துயரமான பேருந்து விபத்தில் பல இந்திய யாத்ரீகர்கள் உயிரிழந்த சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த துயரமான நேரத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் முழு மருத்துவ சிகிச்சை பெற்று விரைவில் குணமடைவர் என்று நம்புகிறேன் என கூறியுள்ளார். 



    • தடம் மாறாத பயணம் - தொற்றா நோய்களின் கட்டுப்பாடு எனச் சாதனை படைத்து, ஐ.நா. விருதை வென்ற திட்டம்
    • களத்தில் உறவென நின்று மக்களைக் கவனித்துக் கொள்ளும் மருத்துவப் பணியாளர்கள் அனைவருக்கும் என் வாழ்த்துகள்!

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    நான்கு ஆண்டுகளில் 2.50 கோடி மக்களின் நலம் காத்துள்ள மக்களைத் தேடி மருத்துவம்!

    தடம் மாறாத பயணம் - தொற்றா நோய்களின் கட்டுப்பாடு எனச் சாதனை படைத்து, ஐ.நா. விருதை வென்ற இத்திட்டத்தின், 2 கோடியே 50 லட்சமாவது பயனாளியான தஞ்சை மாவட்டம் தென்னங்குடியைச் சேர்ந்த மனோன்மணி அவர்களுக்கு மருந்துப் பெட்டகத்தை வழங்கியுள்ள அமைச்சர் மா.சுப்பிரமணியம் அவர்களுக்கு வாழ்த்துகள்!

    நலமான தமிழ்நாட்டை உருவாக்கிடும் இத்திட்டத்தைக் கண்காணித்து சிறப்புறச் செயல்படுத்திவரும் துறையின் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கும், களத்தில் உறவென நின்று மக்களைக் கவனித்துக் கொள்ளும் மருத்துவப் பணியாளர்கள் அனைவருக்கும் என் வாழ்த்துகள்! என்று கூறியுள்ளார். 



    • கடந்த 2012 மற்றும் 2017-ம் ஆண்டில் தான் தமிழகத்தில் டெங்கு பாதிப்பு அதிகம்.
    • வடகிழக்கு பருவமழையின் போது காய்ச்சல் வருவது இயல்பு.

    தஞ்சாவூா்:

    மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு தொகுதி பிள்ளையார் நத்தம் பகுதியில் மக்களைத்தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் ரூ.2 கோடியே 50 லட்சத்து 1-வது பயனாளிக்கு இன்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் ஆகியோர் மருந்து பெட்டகங்களை வழங்கினர். அதனைத் தொடர்ந்து, தென்னங்குடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் புதிய மருத்துவ கட்டடங்களை திறந்து வைத்தனர்.

    பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    தமிழகத்தில், கடைக்கோடி மனிதர்களுக்கும், மருத்துவ சேவையை முழுமையாக கொண்டு போய் சேர்க்கும் வகையில், மக்களை தேடி மருத்துவம் தொடங்கப்பட்டது. அதன்படி, ஒரு திட்டம் துவங்கிய பிறகு, அந்த திட்டம் மக்களுக்கு தொடர்ச்சியாக செல்கிறதா என ஆய்வு செய்வதில், நமது முதலமைச்சருக்கு நிகர் அவர்தான். இரண்டு கோடி பயனாளர்களை கடந்த நிலையில், கடந்த செப்டம்பர் 25-ம் தேதி, அமெரிக்காவில் நடந்த ஐ.நா. சபை கூட்டத்தின் போது, உலகில் தொற்றா நோய்களுக்கான மருந்துகள் தருவதில், தொற்றா நோய்களை தடுப்பதில் எந்த நாடு சிறந்து விளங்குகிறது என்பதை அவர்கள் ஆய்வு செய்த போது, இந்தியாவில், தமிழகம் தான் என கண்டறியப்பட்டு, யுனைடெட் நேஷன்ஸ் இன்டர் ஏஜென்சி டாஸ்க் போஸ்ட் என்ற விருது கிடைத்தது. இந்நிலையில், தஞ்சாவூர் மாவட்டம் தென்னங்குடியில் இரண்டு கோடியே 50-வது லட்சம் பயனாளிக்கு மருந்து பெட்டகம் வழங்கப்பட்டுள்ளது.

    கடந்த 2012 மற்றும் 2017-ம் ஆண்டில் தான் தமிழகத்தில் டெங்கு பாதிப்பு அதிகம். டெங்கு பாதிப்பினால், 2012-ம் ஆண்டு 66 பேரும், 2017-ம் ஆண்டில் 65 பேர் உயிரிழந்தார்கள். இது தான் இந்தியாவிலேயே டெங்கு பாதிப்பினால், உயிரிழப்புகள் ஏற்பட்ட ஆண்டு. இந்த இரண்டு ஆண்டுகளிலும் ஆட்சியில் இருந்தது அ.தி.மு.க., தான். கடந்த 11 மாதங்களில், வெறும் 9 பேர் மட்டுமே டெங்கு பாதிப்பால் இறந்துள்ளனர். இந்த 9 பேருக்கும் இணை நோய் பாதிப்பு இருந்து, சரியான நேரத்தில் மருத்துவம் பார்த்துக்கொள்ளதாவர்கள் என தெரியவந்தது. தி.மு.க., பொறுப்பேற்ற நான்கரை ஆண்டுகளில், ஒரு இலக்கு எண்ணிக்கையில் தான் டெங்கு பாதிப்பு உயிரிழப்புகள் உள்ளன.

    வடகிழக்கு பருவமழையின் போது காய்ச்சல் வருவது இயல்பு. ஆனால், பெரியளவிலான பாதிப்பு இல்லை. யாரும் பதட்டம் அடைய வேண்டாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில் முரசொலி எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் துரை. சந்திரசேகரன், டி.கே.ஜி. நீலமேகம், மேயர் சண் ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • புதிய அரசு அமைப்பதற்கான ஆலோசனைகள் இன்று தீவிரமடைந்தன.
    • ராஜினாமாவை ஏற்றுக்கொண்ட கவர்னர் புதிய ஆட்சி அமையும் வரை தற்காலிகமாக முதல்-மந்திரி பதவியை தொடருமாறு கேட்டுக்கொண்டார்.

    பீகார் சட்டசபை தேர்தலில் மொத்தம் உள்ள 243 தொகுதிகளில் 202 இடங்களைக் கைப்பற்றிய தேசிய ஜனநாயக கூட்டணி அசைக்க முடியாத பலத்துடன் ஆட்சியைக் தக்க வைத்துள்ளது.

    தோ்தலுக்கு முன்பு தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல்-மந்திரி வேட்பாளராக நிதீஷ் குமாா் அதிகாரபூா்வமாக அறிவிக்கப்படவில்லை. அவரது தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி போட்டியிடுவதாக பா.ஜ.க. கூறியிருந்தது.

    இந்த நிலையில் சட்டசபைத் தோ்தலில் தொடா்ந்து 2-வது முறையாக ஐக்கிய ஜனதா தளத்தைவிட பா.ஜ.க. அதிக இடங்களில் வென்றுள்ளது. எனவே, முதல்-மந்திரி பதவியை பா.ஜ.க. விட்டுக் கொடுக்குமா? என்ற கேள்வி எழுந்தது.

    ஆனால் முதல்-மந்திரியாக நிதீஷ்குமாா் நீடிப்பாா் என்று கூட்டணிக் கட்சிகளான லோக் ஜனசக்தி (ராம்விலாஸ்), இந்துஸ்தானி அவாம் மோா்ச்சா ஆகியவை நம்பிக்கை தெரிவித்தன. இதைத் தொடர்ந்து பா.ஜ.க. தலைவர்களும், நிதிஷ்குமார் முதல்-மந்திரி பதவி ஏற்பார் என்று அறிவித்தனர்.

    தோ்தல் முடிவுகள் வெளியாகி 2 நாள்கள் ஆகியுள்ள நிலையில், புதிய அரசு அமைப்பதற்கான ஆலோசனைகள் இன்று தீவிரமடைந்தன.

    பாட்னாவில் முதல்-மந்திரி நிதீஷ் குமாரை கூட்டணி கட்சி தலைவர்கள் சந்தித்து பேசினார்கள். இதையடுத்து ஒருமித்த சுமூகமான முடிவுகள் எட்டப்பட்டன.

    இதன் தொடர்ச்சியாக பீகார் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் புதிய ஆட்சி அமைப்பதற்கு வசதியாக பதவிகளை ராஜினாமா செய்ய தீர்மானிக்கப்பட்டது.

    அதன்படி நிதிஷ்குமார் முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்தார். அவர் மந்திரிகள் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களுடன் கவர்னரை சந்தித்தார். தனது ராஜினாமா கடிதத்தை அவர் கவர்னரிடம் கொடுத்தார்.

    அந்த ராஜினாமாவை ஏற்றுக்கொண்ட கவர்னர் புதிய ஆட்சி அமையும் வரை தற்காலிகமாக முதல்-மந்திரி பதவியை தொடருமாறு கேட்டுக்கொண்டார்.

    பீகாா் சட்டசபையின் பதவிக் காலம் வருகிற 22-ந்தேதியுடன் நிறைவு பெறுகிறது. எனவே அதற்குள் புதிய அரசு பதவியேற்க வேண்டும்.

    நாளை தேசிய ஜனநாயக கூட்டணி எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடக்கிறது. அதில் நிதிஷ்குமார் புதிய முதல்-மந்திரியாக தேர்வு செய்யப்படுவார். இதைத் தொடர்ந்து புதிய அரசு அமைப்பதற்கான செயல் திட்டம் தயார் செய்யப்பட்டு வருகிறது.

    அதன்படி வருகிற 20-ந் தேதி நிதிஷ்குமார் மீண்டும் முதல்-மந்திரியாக பதவியேற்க உள்ளார். பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி மற்றும் மந்திரிகள் பங்கேற்க உள்ளனர்.

    • மதீனாவில் இந்தியர்கள் விபத்தில் சிக்கிய செய்தி அறிந்து மிகுந்த வருத்தம் அடைந்தேன்.
    • பஸ்சில் இருந்த 20 பெண்கள், 11 சிறுவர்கள் உள்பட 42 இந்தியர்கள் பலியானார்கள்.

    தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்தவர்கள் சவுதி அரேபியாவுக்கு உம்ரா புனித பயணம் மேற்கொண்டனர்.

    அவர்கள் மெக்காவில் தொழுகையை முடித்து விட்டு மதீனாவுக்கு பஸ்சில் சென்று கொண்டு இருந்தனர். ஜோரா என்ற இடத்தில் பஸ் சென்று கொண்டு இருந்தபோது எதிர்பாராத விதமாக பஸ் மீது டீசல் லாரி மோதியது. இதில் பஸ் தீப்பிடித்து எரிந்தது.

    இந்த கோர விபத்தில் பஸ்சில் இருந்த 20 பெண்கள், 11 சிறுவர்கள் உள்பட 42 இந்தியர்கள் பலியானார்கள். இந்நிலையில், விபத்தில் உயிரிழந்த 42 பேரின் குடும்பத்தினருக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளனர்.

    இதுகுறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    மதீனாவில் இந்தியர்கள் விபத்தில் சிக்கிய செய்தி அறிந்து மிகுந்த வருத்தம் அடைந்தேன். தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பத்தினருடன் என் எண்ணங்கள் உள்ளன.

    காயமடைந்த அனைவரும் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். ரியாத்தில் உள்ள நம் தூதரகம் மற்றும் ஜெட்டாவில் உள்ள துணைத் தூதரகம் அனைத்து உதவிகளையும் வழங்கி வருகின்றன.

    நம் அதிகாரிகள் சவுதி அரேபிய அதிகாரிகளுடனும் நெருங்கிய தொடர்பில் உள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கார் பழுதாவது தொடர் கதையானது.
    • வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகிய நிலையில் நெட்டிசன்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    மகாராஷ்டிரா மாநிலம் புனே பகுதியை சேர்ந்தவர் கணேஷ் சங்கடே. இவர் சமீபத்தில் புதிதாக ஒரு கார் வாங்கினார். ஆனால் அந்த காரில் அடிக்கடி தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக அவர் தான் கார் வாங்கிய ஷோரூம் நிறுவனத்தினரிடம் புகார் செய்தார். ஆனாலும் அவர்கள் உரிய முறையில் பதில் அளிக்கவில்லை.

    எனவே கார் பழுதாவது தொடர் கதையானது. இதனால் ஆத்திரம் அடைந்த கணேஷ் சம்பவத்தன்று நூதன போராட்டத்தை நடத்த திட்டமிட்டார். அதன்படி தனது புது காரை மேள தாளங்கள் முழங்க கழுதைகளை வைத்து இழுத்து வந்து ஷோரூம் முன்பு நூதன போராட்டத்தில் ஈடுபட்டார்.

    இதுகுறித்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகிய நிலையில் நெட்டிசன்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.



    • பீகாரில் வெற்றி பெற்றதே 6 எம்.எல்.ஏ.க்கள் தான்.
    • ஐக்கிய ஜனதாதளமும் காங்கிரசை துடைத்தெறிய வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறது.

    பீகார் மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் பா.ஜ.க.-ஐக்கிய ஜனதாதளம் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி இமாலய வெற்றி பெற்று ஆட்சியை மீண்டும் தக்க வைத்துள்ளது.

    இந்த கூட்டணியை எதிர்த்து போட்டியிட்ட ராஷ்டீரிய ஜனதாதளம்-காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி படுதோல்வியை சந்தித்தது. அதிலும் பாரம்பரியமிக்க தேசிய கட்சியான காங்கிரஸ் போட்டியிட்ட 61 தொகுதிகளில் வெறும் 6 தொகுதிகளில் மட்டும் வெற்றி பெற்று பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டது. அக்கட்சிக்கு ஆறுதல் அளிப்பது போல இந்த ஒற்றை இலக்க வெற்றி அமைந்தது.

    இத்தோல்வி காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்தியா கூட்டணிக்கே இது சிக்கலை ஏற்படுத்தி இருக்கிறது.

    தொண்டர்கள் மட்டுமின்றி பீகாரில் வெற்றி பெற்ற 6 காங்கிரஸ் எம்.எல்.ஏக்களின் மனநிலையும் தற்போது சற்று மாறி இருப்பதாக கூறப்படுகிறது. இனியும் காங்கிரசில் பயணித்தால் தங்களுக்கு எதிர்காலம் இருக்குமா? இல்லையா? என்ற சந்தேகம் அவர்களுக்கு எழுந்துள்ளது.

    இதனால் வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.க்களில் சிலர் காங்கிரசில் இருந்து விலகி நிதிஷ்குமார் தலைமையிலான ஆளும் ஐக்கிய ஜனதா தளத்தில் இணையலாமா? என ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

    இது தொடர்பாக காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஒருவர் ஐக்கிய ஜனதாதள முக்கிய தலைவரிடம் தொடர்பில் இருப்பதாக தெரிகிறது. இது காங்கிரஸ் கட்சிக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி அளித்து இருக்கிறது. பீகாரில் வெற்றி பெற்றதே 6 எம்.எல்.ஏ.க்கள் தான். அவர்களும் ஒரு வேளை கட்சி தாவி விட்டால் ஒண்ணுமே இல்லாமல் போய் விடுமே என கட்சி மேலிடம் கருதுகிறது. அவர்களை சமாதானப்படுத்தும் முயற்சியும் நடந்து வருவதாக கூறப்படுகிறது.

    அதே சமயம் ஐக்கிய ஜனதாதளமும் காங்கிரசை துடைத்தெறிய வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறது. இதனால் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை தங்கள் பக்கம் இழுப்பதற்கான முயற்சியிலும் அக்கட்சி ஈடுபட்டு வருவதாக பரபரப்பாக பேசப்படுகிறது. இதற்காக திரைமறைவு பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாகவும் சொல்லப்படுகிறது. ஆனால் இது பற்றி காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் யாரும் எந்தவித கருத்தும் தெரிவிக்கவில்லை. இதனால் எந்த நேரத்தில் எதுவும் நடக்கலாம் என்ற சஸ்பென்ஸ் பீகாரில் நீடித்து வருகிறது.

    • தான் வழக்கமாக சூதாடும் இடத்திற்கு சென்ற அவரிடம் அன்று பணம் இல்லை.
    • பணயமாக வைத்த மனைவியை கொண்டு சென்று தோற்றவர்களிடம் ஒப்படைத்தார்.

    உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டை சேர்ந்தவர் டேனிஷ். இவருக்கும் பாக்தாத் பகுதியைச் சேர்ந்த இளம்பெண்ணுக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது.

    டேனிஷ் குடிப்பழக்கத்திற்கும் சூதாட்டத்திற்கும் அடிமையாகி இருந்தார். எப்போதும் சூதாட்டம் ஆடிக் கொண்டுதான் இருப்பார். சூதாட்டத்தில் பணம், பொருட்களை நிறைய இழந்துள்ளார்.

    இந்த நிலையில் தன் மனைவியிடம் அவரது வீட்டிற்கு சென்று நகை, பணம் வாங்கி வரச்சொல்லி கட்டாயப்படுத்தினார். அவர் வாங்கி வரவில்லை. தான் கேட்டும் நகை, பணம் வாங்கி வராததால் மனைவி மீது டேனிஷ் ஆத்திரத்தில் இருந்தார்.

    தான் வழக்கமாக சூதாடும் இடத்திற்கு சென்ற அவரிடம் அன்று பணம் இல்லை. ஆனால் சூதாடாமல் அவரால் இருக்க முடியவில்லை. அப்போது என்ன செய்யலாம் என்று யோசித்த அவர் பணத்திற்கு பதிலாக தனது மனைவியை பணயமாக வைத்து சூதாடினார். துரதிர்ஷ்டவசமாக அன்று அவர் சூதாட்டத்தில் தோற்று போனார். இதனால் அவர் தனது மனைவியை இழக்க நேரிட்டது. பணயமாக வைத்த மனைவியை கொண்டு சென்று தோற்றவர்களிடம் ஒப்படைத்தார்.

    சூதாட்டத்தில் வெற்றி பெற்ற 8 பேர் கும்பல் அவரது மனைவியை பாலியல் ரீதியாக துன்புறுத்த தொடங்கினர். இதனை கணவரிடம் கூறியும் அவர் செவி சாய்க்கவில்லை. இதையடுத்து அந்த 8 பேர் கும்பலும் அவரது மனைவியை கட்டாயப்படுத்தி மாறி மாறி பாலியல் வன்கொடுமை செய்தனர். இதில் அந்த பெண் பலவீனம் அடைந்தாள்.

    அந்த 8 பேர் கும்பலுடன் சேர்ந்து டேனிசும் அவரது மனைவியை துன்புறுத்தி அவரை ஆற்றில் தூக்கி வீசினார். நீரில் தத்தளித்துக் கொண்டிருந்த பெண்ணை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டனர்.

    இதையடுத்து அவர் தனக்கு நடந்த கொடுமை குறித்து போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    அந்த புகாரில் தனது மாமனார் மற்றும் மேலும் 2 பேரும் தன்னை கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிவித்துள்ளார். மேலும் வரதட்சணை கேட்டு மாமியார் தன்னை கொடுமைப்படுத்தியதாகவும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பஸ் சென்று கொண்டு இருந்தபோது எதிர்பாராத விதமாக பஸ் மீது டீசல் லாரி மோதியது.
    • பஸ்சில் இருந்த 20 பெண்கள், 11 சிறுவர்கள் உள்பட 42 இந்தியர்கள் பலியானார்கள்.

    தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்தவர்கள் சவுதி அரேபியாவுக்கு உம்ரா புனித பயணம் மேற்கொண்டனர்.

    அவர்கள் மெக்காவில் தொழுகையை முடித்து விட்டு மதீனாவுக்கு பஸ்சில் சென்று கொண்டு இருந்தனர். ஜோரா என்ற இடத்தில் பஸ் சென்று கொண்டு இருந்தபோது எதிர்பாராத விதமாக பஸ் மீது டீசல் லாரி மோதியது. இதில் பஸ் தீப்பிடித்து எரிந்தது.

    இந்த கோர விபத்தில் பஸ்சில் இருந்த 20 பெண்கள், 11 சிறுவர்கள் உள்பட 42 இந்தியர்கள் பலியானார்கள்.

    இந்நிலையில், விபத்தில் உயிரிழந்த 42 பேரின் குடும்பத்தினருக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் கூறுகையில்," தெலுங்கானாவிலிருந்து மக்கா புனிதப்பயணம் சென்ற பேருந்தும் டீசல் லாரியில் மோதிய விபத்தில் 42 இஸ்லாமியர்கள் உயிரிழந்தது அதிர்ச்சி, வேதனை அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்பதுடன் அவர்களது குடும்பங்களுக்கு நிவாரண உதவி செய்ய வேண்டும்" என்றார்.

    • எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் அரசியல் ரீதியாக எதிர்ப்பை தெரிவித்து வரும் நிலையில் சட்ட ரீதியான நடவடிக்கைகளையும் எடுத்து வருகின்றன.
    • புதுச்சேரி மாநிலத்தில் இருந்து மாநில தலைவர் வைத்திலிங்கம், சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் அனந்தராமன் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.

    சென்னை:

    இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வரும் வாக்காளர் பட்டியல்களின் சிறப்பு தீவிர திருத்த பணிகளை இந்தியா கூட்டணி கட்சிகள் கடுமையாக எதிர்த்து வருகின்றன.

    அதேநேரம் சமீபத்தில் தேர்தல் நடந்து முடிந்த பீகார் மாநிலத்திலும் சிறப்பு சீர்திருத்த பணிகளை தேர்தல் ஆணையம் செய்து முடித்து தேர்தலையும் வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளது.

    இதற்கிடையில் 2-ம் கட்டமாக 2026-ல் சட்டசபை தேர்தலை சந்திக்க உள்ள தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, மேற்கு வங்காளம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் கடந்த 27-ந்தேதி முதல் வாக்காளர் சிறப்பு சீர்திருத்த பணிகளை தேர்தல் ஆணையம் தொடங்கி உள்ளது. இந்த மாநிலங்களில் 51 கோடி வாக்காளர்களின் பெயர்கள், முகவரிகள் சரிபார்க்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

    ஆனால் இந்த பணிகளில் பல்வேறு குளறுபடிகள் இருப்பதாக தொடர்ந்து பல கட்சிகள் புகார் கூறி வருகின்றன. இன்னொரு பக்கத்தில் வாக்காளர்களுக்கு உதவுவதற்காக அரசியல் கட்சியினரும் தேர்தல் ஆணைய அலுவலர்களுக்கு உதவி வருகிறார்கள்.

    எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் அரசியல் ரீதியாக எதிர்ப்பை தெரிவித்து வரும் நிலையில் சட்ட ரீதியான நடவடிக்கைகளையும் எடுத்து வருகின்றன.

    தமிழகத்தில் மொத்தம் 6 கோடியே 41 லட்சத்து 14 ஆயிரத்து 587 வாக்காளர்கள் இருக்கிறார்கள். அவர்களில் 5 கோடியே 90 லட்சத்து 13 ஆயிரத்து 184 பேருக்கு சிறப்பு திருத்தத்துக்கான விண்ணப்ப படிவங்கள் வழங்கப்பட்டு விட்டதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

    சிறப்பு திருத்த பணிகள் நடந்து வரும் 12 மாநிலங்களிலும் உண்மையான கள நிலவரம் என்ன? வாக்காளர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் என்ன? என்பது பற்றி ராகுல்காந்தி காங்கிரஸ் தலைவர்களுடன் ஆலோசனை நடத்த திட்டமிட்டு உள்ளார்.

    இந்த ஆலோசனைக் கூட்டம் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணிக்கு டெல்லியில் உள்ள இந்திரா பவனில் நடக்கிறது. இதில் கலந்து கொள்ள வரும்படி 12 மாநில காங்கிரஸ் தலைவர்கள், சட்டமன்ற தலைவர்கள் மற்றும் பொறுப்பாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    தமிழ்நாட்டில் இருந்து மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்குமார், மேலிட பொறுப்பாளர்கள் கிரீஸ் சோடங்கர், சூரஜ்ஹெக்டே ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.

    புதுச்சேரி மாநிலத்தில் இருந்து மாநில தலைவர் வைத்திலிங்கம், சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் அனந்தராமன் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.

    இந்த கூட்டத்துக்கு பிறகு தமிழ்நாட்டில் மாவட்ட தலைவர்களை தேர்வு செய்வதற்காக டெல்லி மேலிடம் அமைத்துள்ள 38 பேர் கொண்ட குழுவுடனும் ராகுல்காந்தி ஆலோசனை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர்கள் 38 பேரையும் டெல்லிக்கு வரும்படி ஏற்கனவே அழைப்பு விடுத்துள்ளார்கள்.

    இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தமிழகத்தில் உருவாகி இருக்கும் கூட்டணி சர்ச்சைகள் தொடர்பாகவும் டெல்லி மேலிடத்தில் பேசுவதற்கு தமிழக காங்கிரஸ் தலைவர்கள் முடிவு செய்து உள்ளார்கள். அதற்காக மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, முன்னாள் தலைவர் தங்கபாலு, பீட்டர் அல்போன்ஸ் ஆகிய 3 பேரும் இன்று பிற்பகலில் டெல்லி செல்கிறார்கள்.

    டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் அவர்கள் தங்குவதற்கு அறை முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. இன்று மாலையில் இந்த தலைவர்கள் தமிழக பொறுப்பாளர்கள் கிரீஸ் சோடங்கர், அகில இந்திய தலைவர் கார்கே ஆகியோரை சந்தித்து பேச திட்டமிட்டு உள்ளார்கள்.

    காங்கிரஸ்-த.வெ.க. கூட்டணி ஏற்படலாம். இது தொடர்பாக டெல்லி தலைவர்கள் விஜய்யுடன் பேசி வருகிறார்கள் என்ற தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    எனவே தி.மு.க.வுடனான கூட்டணி முறியலாம் என்ற கருத்தும் காங்கிரசுக்குள் பரவி வருகிறது. தற்போதைய சூழலில் தி.மு.க.வுடன் கூட்டணி நீடிக்க வேண்டும் என்பதையே கட்சியின் மூத்த நிர்வாகிகள் விரும்புகிறார்கள். இது தொடர்பாக தங்கள் கருத்துக்களை டெல்லி தலைவர்களிடம் விளக்குவார்கள் என்று தகவல் வெளியாகி உள்ளது.

    ×