என் மலர்
இந்தியா
- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கெதிரான போட்டியில் ஆர்சிபி வெற்றி பெற்றது.
- பேருந்து ஓட்டுநர் ஒருவர் செல்போனில் ஐபிஎல் பார்த்துக்கொண்டே பேருந்தை இயக்கியுள்ளார்.
ஐபிஎல் 2025 சீசன் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் கலைநிகழ்ச்சியுடன் கோலாகலமாக தொடங்கியது. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கெதிராக ஆர்சிபி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் எடுத்தது. இதையடுத்து களமிறங்கிய ஆர்சிபி அணி 16.2 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுக்கு இழந்து 177 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
இந்நிலையில், மகாராஷ்டிராவில் கே.கே.ஆர்.- ஆர்.சி.பி. போட்டியை பேருந்து ஓட்டுநர் ஒருவர் செல்போனில் பார்த்துக்கொண்டே பேருந்தை இயக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஐ.பி.எல் போட்டியை பார்த்துக்கொண்டே பேருந்தை இயக்கிய ஓட்டுநரின் செயலை பயணி ஒருவர் வீடியோ எடுத்து இணையத்தில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் முதல்வர் தேவேந்திர பட்நாவிசை அவர் டேக் செய்திருந்தார். இதனையடுத்து பேருந்து ஓட்டுநர் பணிநீக்கம் செய்யப்பட்டார்.
- 40 சுங்கச்சாவடிகளின் சுங்கக்கட்டணம் வரும் ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் உயர்த்தப்படவுள்ளது.
- ஏப்ரல் மாதம் முதல் உயர்த்தப்படவுள்ள சுங்கக்கட்டணத்தின் அளவு குறைந்தபட்சம் ரூ.5 முதல் ரூ.75 வரை இருக்கும் என்று கூறப்படுகிறது.
சென்னை:
பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் ஆண்டுக்கு ஒருமுறை, இரு கட்டங்களாக, சுங்கக்கட்டணம் உயர்த்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் நடப்பாண்டில் முதற்கட்டமாக தமிழ்நாட்டில் உள்ள 78 சுங்கச்சாவடிகளில், வானகரம், செங்கல்பட்டு பரனூர், திண்டிவனம் ஆத்தூர், சூரப்பட்டு, பட்டறைப்பெரும்புதூர் உள்ளிட்ட 40 சுங்கச்சாவடிகளின் சுங்கக்கட்டணம் வரும் ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் உயர்த்தப்படவுள்ளது. மீதமுள்ள சுங்கச்சாவடிகளின் சுங்கக்கட்டணம் வரும் செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் உயர்த்தப்படும். ஏப்ரல் மாதம் முதல் உயர்த்தப்படவுள்ள சுங்கக்கட்டணத்தின் அளவு குறைந்தபட்சம் ரூ.5 முதல் ரூ.75 வரை இருக்கும் என்று கூறப்படுகிறது. இது நியாயமற்றதாகும்.
டெல்லியில் கடந்த வாரம் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய மத்திய நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி, ஏப்ரல் ஒன்றாம் தேதிக்குள் புதிய சுங்கக்கட்டணக் கொள்கை அறிவிக்கப்படும் என்றும், அதில் சாலைகளை பயன்படுத்துவோருக்கு சலுகைகள் அறிவிக்கப்படும் என்றும் கூறியிருந்தார்.
புதிய சுங்கக் கட்டணக் கொள்கை அடுத்த ஒரு வாரத்தில் அறிவிக்கப்படவுள்ள நிலையில், அதில் இடம் பெற்றுள்ள அம்சங்களை அறிந்து கொண்டு சுங்கக்கட்டண மாற்றத்தை செயல்படுத்துவது தான் சரியாக இருக்கும். புதிய சுங்கக்கட்டண கொள்கையை மத்திய அரசு அறிவிக்கும் வரை சுங்கக்கட்டண உயர்வு அறிவிப்பை தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் நிறுத்தி வைக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- பல்கலைக்கழகங்கள் துணைவேந்தர்கள் இல்லாமல் தடுமாறும் அவல நிலை.
- பல்கலைக்கழகங்களில் பட்டமளிப்பு விழாக்கள் நடத்தப்படவில்லை.
சென்னை:
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தமிழ்நாட்டில் சென்னை பல்கலைக்கழகம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், கோவை பாரதியார் பல்கலைக்கழகம், தமிழ்நாடு கல்வியியல் பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம், அண்ணாமலைப் பல்கலைக் கழகம், திருச்சி பாரதிதாசன், தமிழ்நாடு விளையாட்டுப் பல்கலைக்கழகம் ஆகிய 8 பல்கலைக் கழகங்கள் உள்பட உயர்கல்வித்துறையின் கீழ் இயங்கும் 13 பல்கலைக்கழகங்களில் 11 பல்கலைக்கழகங்கள், அதாவது 85 சதவீதம் பல்கலைக்கழகங்கள் துணைவேந்தர்கள் இல்லாமல் தடுமாறும் அவல நிலை உருவாகிவிடும்.
துணைவேந்தர்கள் இல்லாமல் பல பல்கலைக்கழகங்களில் பட்டமளிப்பு விழாக்கள் நடத்தப்படவில்லை. சில பல்கலைக்கழகங்களில் பட்டமளிப்பு விழாக்கள் நடத்தப்பட்டாலும் துணைவேந்தர்களின் கையெழுத்து இல்லாமல் வழங்கப்பட்டுள்ள பட்டச் சான்றுகளுக்கு மதிப்பில்லை என்பதால் மாணவர்களின் வேலைவாய்ப்புத் தகுதி பாதிக்கப்பட்டுள்ளது.
கவர்னருக்கும், அரசுக்கும் இடையிலான மோதலில் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுவிடக் கூடாது. பல்கலைக்கழகங்கள் முடங்கி விடக்கூடாது. எனவே அரசுக்கும், கவர்னருக்கும் இடையிலான மோதலை முடிவுக்கு கொண்டு வந்து காலியாக உள்ள 8 பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் பணியிடங்களையும் நிரப்ப வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- இணையதளங்களுக்கு எதிரான நடவடிக்கையை ஜிஎஸ்டி புலனாய்வு இயக்குனரகம் தீவிரப்படுத்தி வருகிறது.
- சட்டவிரோத ஆன்லைன் விளையாட்டு இணையதளங்களுடன் இணைக்கப்பட்ட 2,400 வங்கி கணக்குகளையும் அரசு முடக்கியுள்ளது.
புதுடெல்லி:
வெளிநாடுகளை சேர்ந்த ஆன்லைன் விளையாட்டு இணையதளங்கள் இந்தியாவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அதில் ஒரு சில இணையதளங்கள் ஜிஎஸ்டியை பதிவு செய்யத் தவறியதன் மூலம், வரி செலுத்த வேண்டிய தொகைகளை மறைத்து, வரிக் கடமைகளைத் தவிர்த்து வருகின்றன. அத்தகைய இணையதளங்களுக்கு எதிரான நடவடிக்கையை ஜிஎஸ்டி புலனாய்வு இயக்குனரகம் தீவிரப்படுத்தி வருகிறது.
அதன் ஒரு பகுதியாக இந்தியாவில் சட்டவிரோதமாக இயங்கி வரும் 357 வெளிநாட்டு ஆன்லைன் விளையாட்டு இணையதளங்களுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.
மேலும் சட்டவிரோத ஆன்லைன் விளையாட்டு இணையதளங்களுடன் இணைக்கப்பட்ட 2,400 வங்கி கணக்குகளையும் அரசு முடக்கியுள்ளது. இதன் மூலம் ரூ.126 கோடி முடக்கப்பட்டுள்ளது.
மேற்கூறிய தகவல்களை மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
- 12 ஆம் வகுப்பு வணிக நிர்வாகத் தேர்வு ரத்து செய்யப்படுவதாக ராஜஸ்தான் அரசு அறிவித்துள்ளது.
- வினாத்தாள் தயாரித்த ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராஜஸ்தானில் நேற்று முன்தினம் நடைபெற்ற 12 ஆம் வகுப்பு வணிக நிர்வாகத் தேர்வு ரத்து செய்யப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. புதிய தேர்வு தேதியை பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு வணிக நிர்வாகத் தேர்வு வினாத்தாள் அப்படியே நகல் எடுக்கப்பட்டு இந்தாண்டு நடைபெற்ற தேர்விலும் வழங்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்த விவகாரத்தில் ராஜஸ்தான் பள்ளி கல்வி வாரியம் அலட்சியத்துடன் செயல்பட்டதாக புகார் எழுந்த நிலையில், வினாத்தாள் தயாரித்த ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- குற்றவாளிகளை தேவைப்பட்டால் துப்பாக்கி சூடு நடத்த உத்தரவு.
- குற்ற சம்பவங்களை தடுக்கும் விதமாக போலீசார் நடவடிக்கை.
கோவை:
தமிழகத்தில் உள்ள மாநகர போலீஸ் கமிஷனர், போலீஸ் சூப்பிரண்டுகள் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் தங்களது பகுதிகளில் குற்றச் செயல்களை தடுப்பதற்கும், கட்டுப்படுத்துவதற்கும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க டி.ஜி.பி. சங்கர் ஜிவால் அறிவுறுத்தி உள்ளார்.
மேலும் ரவுடிகள் மற்றும் குற்றவாளிகளை பிடிக்கச் செல்லும் போது தேவைப்பட்டால் துப்பாக்கி சூடு நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து கோவை மாவட்டத்திலும் குற்ற சம்பவங்களை தடுக்கும் விதமாக போலீசார் நடவடிக்கை எடுக்க தொடங்கியுள்ளனர்.
கோவை மாவட்டத்தில், வெளி மாவட்டங்கள், மாநிலங்களை சேர்ந்தவர்கள் தங்கி பல்வேறு நிறுவனங்களில் பணிபுரிகின்றனர்.
இவ்வாறு பணிக்காக வருபவர்களுடன் அண்டை மாவட்டங்கள், மாநிலங்களில் குற்ற செயல்களில் ஈடுபட்டவர்களும் கலந்து விடுகின்றனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு கூட கடலூர் திட்டக்குடியை சேர்ந்த தனிப்படை போலீசார், சிறுமிகளை கடத்தில் விபசாரத்தில் ஈடுபடுத்திய நபரை கைது செய்தனர்.
இதனால் வெளி மாவட்டங்களில் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு கோவையில் பதுங்கிய நபர்கள் குறித்து சோதனை செய்ய போலீசார் முடிவு செய்தனர்.
குற்ற சம்பவங்களை தடுக்க அனைத்து கோட்டங்களிலும் ஒரு சப்-இன்ஸ்பெக்டர், 3 போலீசார் கொண்ட குழு நியமிக்கப்பட்டு உள்ளது. அவர்கள் துப்பாக்கி ஏந்திய நிலையில் தொடர்ந்து மாவட்டம் முழுவதும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்று முன்தினம் 80 தாபாக்காள், ஓட்டல்களில் போலீசார் சோதனை செய்தது, 350 பேரிடம் விசாரணை நடத்தினர். அவர்களின் இருப்பிடம், அவர்கள் மீதுள்ள குற்ற வழக்குகள் குறித்தும் விசாரித்தனர். இதில் 14 பேர் மீது குற்ற வழக்குகள் இருப்பது தெரியவந்தது.
தொடர்ந்து 2-வது நாளாக நேற்றும் போலீசார் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ரவுடிகள் குறித்து சோதனை நடத்தினர். இதில் 70-க்கும் மேற்பட்ட ரவுடிகள் அடையாளம் காணப்பட்டனர். அவர்களில் 44 பேரை போலீசார் கைது செய்தனர்.
இதில் 32 பேர் மீது ஆயுத வழக்கு, கஞ்சா, கொள்ளை முயற்சி உள்பட பல்வேறு வழக்குகள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் 32 பேரை ஜெயிலில் அடைத்தனர். 12 பேர் நன்னடத்தை பிணைய சான்றிதழின் கீழ் விடுவித்தனர்.
இதேபோல் காந்திபுரம் பஸ் நிலையம், டவுன் பஸ் நிலையம், அரசு விரைவு பஸ் நிலையங்களிலும் போலீசார், போதைப்பொருள் விற்பனை நடைபெறுகிறதா? என்பது குறித்து சோதனை நடத்தி ஆய்வு செய்தனர்.
ஏற்கனவே கோவை மாநகரில் தொடர் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் ஓராண்டுக்கு கோவையை விட்டு வெளியேற வேண்டும் என போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் உத்தரவிட்டுள்ளார்.
அதன்பேரிலும் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் பலர் வெளியேறி உள்ளனர். அவ்வாறு வெளியேறாதவர்களை போலீசார் கைது செய்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இப்படி கோவை மாவட்டம் முழுவதும் ரவுடிகளுக்கு எதிராக போலீசார் எடுத்து வரும் கடும் நடவடிக்கைகள் ரவுடிகள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
அத்துடன் இங்கிருந்தால் நம் மீதும் நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளது என பயந்து கோவையில் உள்ள பல ரவுடிகள் ஊரை காலி செய்து, விட்டு வெளியூர்களுக்கு தப்பியோடி வருகின்றனர்.
கோவையில் நடந்து வரும் சோதனை குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் கூறியதாவது:-
பல மாவட்டங்களில் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டவர்கள், கோவையில் வந்து பதுங்கி கொள்கிறார்கள்.
அவர்களை அடையாளம் கண்டு நடவடிக்கை எடுக்கவே இந்த சோதனை நடத்தப்பட்டது. இதுபோன்ற சோதனைகள் தொடர்ந்து நடைபெறும். முக்கிய பகுதிகளில் போலீசார் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- ஆறு மணி நேரமாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
- பல லட்சம் மதிப்பிலான எண்ணெய் வித்து பொருள்கள் எரிந்து நாசமானது.
ஆலங்குடி:
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பள்ளி வாசல் தெருவில் வசிப்பவர் சாகுல் (வயது 40).
இவர் அதே பகுதியில் ஆயில் மில் நடத்தி வருகிறார். ஆயில் மில் மேல் தளத்தில் நல்லெண்ணெய், கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெய் மற்றும் எண்ணெய் தயாரிப்பதற்கான அட்டைப்பெட்டிகள், எள் மூட்டைகள், கடலை பருப்பு மூட்டைகள் உள்ளிட்ட ஆயில் பொருட்களை வைத்துள்ளார்.
வழக்கம் போல் நேற்று இரவு வேலைகளை முடித்துவிட்டு ஆயில் மில்லை வழக்கம் போல் சாகுல் பூட்டிவிட்டு சென்றார்.
இந்த மில்லில் இருந்து நள்ளிரவில் பொருட்கள் வைத்திருத்த தளத்தில் இருந்து புகையுடன் தீ பற்றியது. பின்னர் தீ மளமளவென பரவி ஆயில் மில் மேல் தளத்தில் உள்ள குடோன் முழுவதும் பரவியது இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக ஆலங்குடி தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் பல மணி நேரமாக போராடினர். ஆனால் தீயை கட்டுப்படுத்த முடியவில்லை.
இதையடுத்து இது ஆயில் குடுடோன் என்பதால் இதற்கு என பிரத்தியேகமாக உள்ள தீயணைப்பு வாகனம் புதுக்கோட்டையில் இருந்து வரவழைக்கப்பட்டது.
அவர்கள் ஆறு மணி நேரமாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். மேலும் அக்கம் பக்கத்தில் உள்ள கட்டிடங்களிலும் தண்ணீர் பீச்சியடித்து தீ பரவாமல் தடுத்தனர்.
இந்த தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான எண்ணெய் மற்றும் எண்ணெய் வித்து பொருள்கள் எரிந்து நாசமானது. நள்ளிரவில் நடந்த இந்த தீ விபத்தால் ஆலங்குடி பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
- ஊட்டியில் 700 படுக்கை வசதி கொண்ட அரசு மருத்துவக்கல்லூரி.
- பல்வேறு வசதிகள் கொண்ட கூடுதல் கட்டிடத்தையும் திறந்து வைக்க உள்ளார்.
ஊட்டி:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாவட்டம் வாரியாக நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
அரசால் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் மக்களை முறையாக சென்றடைகிறதா? மாவட்டங்களில் நடந்து வரும் திட்டப்பணிகள் சரியாக நடக்கிறதா? என்பது உள்ளிட்ட பல்வேறு ஆய்வுப்பணிகளை மேற்கொண்டு வருகிறார். மேலும் பொதுமக்களுக்கு பல்வேறு நலஉதவிகளையும் வழங்கி வருகிறார்.
அந்த வகையில் ஏப்ரல் முதல் வாரம் மலை மாவட்டமான நீலகிரி மாவட்டத்தில் ஆய்வுப்பணி மேற்கொள்கிறார். ஏப்ரல் 5 மற்றும் 6-ந் தேதிகளில் அவர் நீலகிரி மாவட்டத்தில் முகாமிட்டு ஆய்வுப்பணியை மேற்கொள்ள உள்ளார்.
அப்போது ஊட்டியில் புதிதாக கட்டப்பட்டுள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைக்க உள்ளார்.
இதையொட்டி அரசு மருத்துவக்கல்லூரியில் நடந்து வரும் இறுதிக்கட்ட பணிகளை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைப்படி தமிழ்நாட்டில் பல்வேறு மருத்துவ கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டும், ஏற்படுத்தப்பட்டும் பொது மக்களின் பயன்பாட்டிற்கு தொடர்ந்து திறந்து வைக்கப்பட்டு வருகிறது.
ஊட்டியில் ரூ.143.69 கோடி செலவில் மருத்துவமனை கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டது. கடந்த 3 ஆண்டுகளாக மாவட்ட நிர்வாகமும், பொதுப்பணித்துறை யினரும் இணைந்து நிலச்சரிவு, மழை உள்ளிட்ட பல்வேறு இடர்பாடுகளுக்கு இடையே இக்கட்டுமான பணிகளை சிறப்பாக கட்டி முடித்துள்ளனர்.
இந்தியாவிலேயே 700 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை அமைந்துள்ள மலை பிரதேசம் என்றால் அது ஊட்டி என்று தான் சொல்ல வேண்டும்.
மேலும் இந்த மருத்துவ மனையின் சிறப்பம்சம் என்னவென்றால் பழங்குடியினருக்கு தனி வார்டு ஒன்று அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்ததை தொடர்ந்து முதல்-அமைச்சரின் வழிகாட்டுதலின்படி பழங்குடியினருக்கென தனி வார்டு ஒன்று, ஆண்களுக்கு 20 படுக்கைகள், பெண்களுக்கு 20 படுக்கைகள் மற்றும் மகப்பேறுக்கென்று 10 படுக்கைகள் என மொத்தம் 50 படுக்கைகள் கொண்ட வார்டு உருவாக்கப்பட்டுள்ளது.
மேலும் இம்மருத்து வமனையை பொறுத்தவரை எம்.ஆர்.ஐ., சி.டி. ஸ்கேன், டிஜிட்டல் எக்ஸ்ரே போன்ற அதிநவீன தொழில்நுட்பத்துடனும், 10 அறுவை சிகிச்சை அரங்கு களுடனும் அமைக்கப்பட்டு தற்போது திறக்கும் தருவாயில் உள்ளது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நீலகிரி மாவட்டத்தில் வருகிற ஏப்ரல் 5 மற்றும் 6-ந்தேதி ஆகிய 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். 6-ந்தேதி அன்று ஊட்டி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்க உள்ளார்.
அதுமட்டுமல்லாமல் 17 ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் துணை சுகாதார நிலையங்களையும், எமரால்டு அரசு மருத்துவமனையில் ரூ.8.60 கோடி செலவில் தங்கும் அறை, ஆம்புலன்ஸ் நிறுத்துமிடம், தடுப்புச்சுவர், கழிவுநீர் சுத்திகரிப்பான் போன்ற பல்வேறு வசதிகள் கொண்ட கூடுதல் கட்டிடத்தையும் திறந்து வைக்க உள்ளார். மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் கூடுதலாக பல்வேறு திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டவும் உள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் தலைமை அரசு கொறடா ராமச்சந்திரன், கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு, போலீஸ் சூப்பிரண்டு நிஷா உள்பட பலர் பங்கேற்றனர்.
- வன்முறையில் காயமடைந்தவர்களில் ஒருவர் சனிக்கிழமை அன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
- இரட்டை மாடி வீடு நகராட்சிக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டது.
அவுரங்கசீப் கல்லறை தொடர்பாக நாக்பூரில் வன்முறை வெடித்தது. மத நூல் எரிக்கப்பட்டதாகக் கூறப்பட்டதைத் தொடர்ந்து இரண்டு குழுக்கள் மோதிக்கொண்டன, இதில் நாக்பூரில் 40 பேர் காயமடைந்தனர். இதனை தொடர்ந்து அப்பகுதியில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது.
இதனிடையே வன்முறை சம்பவம் தொடர்பாக பாஹிம் கான் என்பவனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதற்கிடையே வன்முறையில் காயமடைந்தவர்களில் ஒருவர் சனிக்கிழமை அன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
வன்முறை சம்பவம் தொடர்பாக பேசிய முதல்-மந்திரி பட்னாவிஸ், வன்முறையால் நகரத்தின் 80 சதவீத பகுதிகள் பாதிக்கப்படவில்லை என்று கூறியதை அடுத்து நேற்று ஊரடங்கு உத்தரவு நீக்கப்பட்டது.
இந்த நிலையில், வன்முறை சம்பவம் தொடர்பாக கைதாகி சிறையில் உள்ள பாஹிம் கானின் வீட்டை இடிக்க மாநகராட்சி முடிவு செய்து அதனை செயல்படுத்தி உள்ளது.
சஞ்சய் பாக் காலனியில் உள்ள பாஹிம் கானின் இரட்டை மாடி வீடு நகராட்சிக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டது. இதைத் தொடர்ந்து இன்று காலை மாநகராட்சி சார்பில் வீட்டை இடிக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
- சி.எச்.ஆர்.ஐ.ஆல் கணக்கெடுக்கப்பட்ட 22 கட்சிகளில் மொத்தம் 1,595 வேட்பாளர்களை நிறுத்தி உள்ளன.
- பொதுக்கூட்ட ஏற்பாடுகளுக்காக ரூ.130 கோடி செலவிடப்பட்டுள்ளது.
புதுடெல்லி:
கடந்த ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றது. இதையொட்டி அரசியல் கட்சிகள் பெற்ற நிதி விபரங்கள் மற்றும் பிரசாரம், விளம்பரம் உள்ளிட்ட பல்வேறு செலவுகள் குறித்த விபரங்களை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்தன.
இதில் பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு பா.ஜ.க., தெலுங்கு தேசம், மார்சிஸ்ட் கம்யூனிஸ்டு, எல்.ஜே.பி. (ராம்விலாஸ்), சிக்கிம் ஜனநாயக முன்னணி (எஸ்.டி.எப்) மற்றும் அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி (ஏ.ஐ.யூ.டி.எப்.) ஆகிய 6 கட்சிகளிடம் ரூ.4,300 கோடி அதிகமாக நிதி இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.
இதுதொடர்பாக காமன்வெல்த் மனித உரிமைகள் முன் முயற்சி (சி.எச்.ஆர்.ஐ.) அமைப்பின் இயக்குனர் வெங்கடேஷ் நாயக் ஒரு ஆய்வை நடத்தி உள்ளார். அதில் தேசிய கட்சிகளான பா.ஜ.க, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, ஆம் ஆத்மி, பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் திரிணாமுல் காங்கிரஸ், தி.மு.க., தெலுங்கு தேசம் கட்சி, ஓய்.எஸ்.ஆர். காங்கிரஸ், சமாஜ்வாடி கட்சி, ஜனதா தளம் உள்ளிட்ட 17 மாநில கட்சிகள் என 22 கட்சிகள் 2024-ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தல் மற்றும் 4 மாநில சட்டமன்ற பொதுத்தேர்தல்கள் அறிவிக்கப்பட்ட போது ரூ.11,326 கோடி தொடக்க இருப்பு வைத்திருந்தது தெரியவந்துள்ளது.
தேர்தல் செயல்பாட்டின் போது ரூ.7,416 கோடி திரட்டி உள்ளன. அதில் ரூ.3,861.6 கோடி செலவு செய்துள்ளனர். தேர்தல் முடிந்த நாளில் ரூ.14,848 கோடி மொத்த இறுதி இருப்பு தொகை இருப்பது தெரியவந்துள்ளது. ஆய்வின்படி பா.ஜ.க. அதிகபட்சமாக ரூ.5,921.8 கோடி தொடக்க இருப்பு தொகையுடன் முதல் இடத்தில் உள்ளது. காங்கிரஸ் தொடக்க இருப்பு தொகையை அடிப்படையில் 22 கட்சிகளில் 9-வது இடத்தை பிடித்தது. இறுதி இருப்பு தொகை பொறுத்த வரை காங்கிரஸ் 12-வது இடத்தில் உள்ளது.
சி.எச்.ஆர்.ஐ.ஆல் கணக்கெடுக்கப்பட்ட 22 கட்சிகளில் மொத்தம் 1,595 வேட்பாளர்களை நிறுத்தி உள்ளன. அவர்களில் 480 பேர் பாராளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஆய்வின்படி 22 கட்சிகள் பெற்ற மொத்த தொகையில் 84.5 சதவீதம் பாஜ.க. திரட்டியுள்ளது. அந்த கட்சியின் மொத்த தேர்தல் செலவு ரூ.1,738 கோடி என்று அந்த கட்சி தெரிவித்துள்ளது.
இது 22 கட்சிகளில் மொத்த பிரசார செலவில் 45 சதவீதமாகும். ஊடக விளம்பரங்களுக்காக 22 கட்சிகளும் சேர்ந்து ரூ.992.4 கோடிக்கு மேல் செலவிட்டன. பொதுக்கூட்ட ஏற்பாடுகளுக்காக ரூ.130 கோடி செலவிடப்பட்டுள்ளது.
- மக்களவையில் நீதிபதி வீட்டில் பணம் கண்டெடுக்கப்பட்ட விவகாரம் எழுப்பப்பட்டது.
- மாநிலங்களவையில் பா.ஜ.க.வினர் அமளியில் ஈடுபட்டனர்.
பாராளுமன்றத்தில் இன்று காலை பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது. இன்றைய அலுவல் நேரத்தில் பல்வேறு மசோதாக்கள் குறித்த விவாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது.
தி.மு.க. எம்.பி. வில்சன் மாநிலங்களவை செயலாளரிடம் கடிதம் ஒன்றை கொடுத்து இருந்தார். அதில் அவர், "மாநிலங்களவையில் இன்று நடக்கும் அனைத்து நிகழ்ச்சிகளையும் ரத்து செய்து விட்டு தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் பற்றி விவாதிக்க வேண்டும். 2026-ம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்பு நடைபெற உள்ள நிலையில் இது தேசிய முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
எனவே சட்டவிதி 267-ன்கீழ் அனைத்து அலு வல்க ளையும் ரத்து செய்து தொகுதி மறுசீரமைப்பு பற்றி விவாதிக்க வேண்டும். பிரதமர் மோடி இதற்கு பதில் அளிக்க அளிக்க வேண்டும் கேட்டுக் கொள்கிறோம்" என்று கூறப்பட்டு இருந்தது. இதை வலியுறுத்தி தி.மு.க. எம்.பி.க்கள் குரல் எழுப்பினார்கள்.
அப்போது மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டா பேசினார். அப்போது, கர்நாடகா மாநிலத்தில் மத ரீதியிலான இட ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கிறது. அரசு ஒப்பந்தங்களில் இஸ்லாமியர்களுக்கு 4 சதவீதம் இடம் ஒதுக்கீடு அளிக்க அம்மாநில அரசு முடிவு செய்து இருக்கிறது. மத ரீதியிலான இந்த இட ஒதுக்கீடு அரசியல் சாசனத்துக்கு விரோதமானது. கர்நாடகா காங்கிரஸ் கட்சி சட்டத்துக்கு எதிராக நடந்து வருகிறது.
கர்நாடகா மாநில துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் அரசியல் சாசனத்தை மாற்ற நினைக்கிறார். தங்கள் கட்சிக்கு சாதகமாக இட ஒதுக்கீட்டை செய்ய இருப்பது சரியானது அல்ல. இதை காங்கிரஸ் தலைவர் கார்கே ஏற்கிறாரா? என்பதை தெரிவிக்க வேண்டும்," என்றார்.
ஜே.பி.நட்டா பேசியதும் காங்கிரஸ் எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். காங்கிரஸ் தலைவர் கார்கே பேசும் போது, "நட்டாவின் பேச்சுகளை ஏற்க இயலாது. இஸ்லாமியர்களுக்கு நன்மை தரும் இட ஒதுக்கீட்டை யாராலும் அகற்றி விட முடியாது," என்று கூறினார்.
இதற்கு பா.ஜ.க. எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களுக்கு காங்கிரஸ் எம்.பி.க்கள் எதிர்குரல் கொடுத்தனர். இதனால் மாநிலங்களவையில் கடும் கூச்சல்-அமளி ஏற்பட்டது. இதையடுத்து மாநிலங்களவை மதியம் 2 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது.
பாராளுமன்ற மக்களவை இன்று 11 மணிக்கு கூடியதும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் எழுந்து டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் கட்டுக்கட்டாக கோடிக்கணக்கில் பணம் சிக்கியது பற்றி விவாதிக்க வேண்டும் என்றனர். ஆனால் சபாநாயகர் அதற்கு அனுமதி கொடுக்கவில்லை.
அப்போது சமாஜ்வாடி எம்.பி.க்கள் எழுந்து உத்தர பிரதேசத்தில் கொலை-கொள்ளை அதிகரித்து விட்டது. அதுபற்றி விவாதிக்க வேண்டும் என்றனர். ஆனால் சபாநாயகர் அதை ஏற்க மறுத்தார். உடனே சமாஜ்வாடி எம்.பி.க்கள் உத்தரபிரதேசத்தில் சட்டம்-ஒழுங்கு கெட்டுவிட்டதாக எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தி பிடித்தனர்.
இதை கண்டதும் சபாநாயகர் ஓம்பிர்லா கோபம் அடைந்தார். இப்படி நடந்து கொண்டால் உங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தார். இதையடுத்து மக்களவையில் கடும் கூச்சல்-அமளி ஏற்பட்டது. இதனால் மக்களவையை மதியம் 12 மணி வரை ஒத்தி வைப்பதாக சபாநாயகர் அறிவித்தார்.
- பள்ளிக்கு எதிரே உள்ள ஒரு கடையில், குளிர்பானம் வாங்கி குடித்துள்ளனர்.
- தனியார் மருத்துவமனையில், தொடர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
போச்சம்பள்ளி:
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த புளியம்பட்டி கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் சுமார் 700-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.
இப்பள்ளியில் கடந்த 20-ந் தேதி வழக்கம்போல் பள்ளி முடிவடைந்த நிலையில், பள்ளியைவிட்டு வெளியேறிய 10-ம் வகுப்பு மாணவர்கள் 8 பேர், பள்ளிக்கு எதிரே உள்ள ஒரு கடையில், குளிர்பானம் வாங்கி குடித்துள்ளனர்.
பின்னர் அனைவரும் அவரவர் வீடுகளுக்கு சென்று உள்ளனர். அடுத்த நாள் வகுப்பறைக்கு வந்த ஆசிரியர், அந்த 8 மாண வர்கள் பள்ளிக்கு வராமல் இருந்தது குறித்து சந்தேகமடைந்து பெற்றோருக்கு செல்போனில் தொடர்பு கொண்டு கேட்டபோது, 8 மாணவர்களுக்கும் உடல் நிலை சரியில்லை என்பது தெரிய வந்தது.
இதையடுத்து பள்ளியின் பொறுப்பு தலைமை ஆசிரியர் மற்றும் பெற்றோர் கழக ஆசிரியர் தலைவர் ஆகியோர் சம்மந்தப்பட்ட மாணவர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று விசாரித்து உள்ளனர்.
அப்போதுதான் மாணவர்கள் அன்று மாலை குளிர்பானம் குடித்ததாக வும், அதன்பிறகு வாந்தி, மயக்கம் உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்பட்ட தாகவும் கூறியுள்ளனர்.
இதில் 8 மணாவர்க ளுக்கும் மருத்துவ சிகிச்சை அளித்த பின்பு 5 மாணவர்கள் உடல் நலன் பெற்று வீடு திரும்பிய நிலையில், இரு மாணவர்கள் போச்சம்பள்ளியில் உள்ள தனியார் மருத்துவமனையில், தொடர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அதில் ஒரு மாணவன் மேல் சிகிச்சைக்காக ஓசூரில் உள்ள தனியார் மருத்துவ மனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் உள்ளார்.
இந்நிலையில் பள்ளிக்கு வந்த சிறப்பு மருத்துவக்குழு பள்ளியில் உள்ள அனைத்து மாணவர்களையும் பரிசோதித்து மருத்துவ சிகிச்சை அளித்துள்ளனர்.
விரைவில் நடைபெற உள்ள 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத வேண்டிய மாணவர்கள் குளிர்பானத்தை அருந்தி விட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால் அவர்களது பெற்றோர்கள் அச்சத்தில் உள்ளனர்.
இதுகுறித்து பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் பேசியபோது, பள்ளியை விட்டு வெளியே சென்ற மாணவர்கள் குடித்த குளிர்பானத்தால்தான் உடல் உபாதைக்கு உள்ளாகி உள்ளனர். தொடர்ந்து பாதிக்கப்பட்ட மாண வர்களை ஆசியர்களும் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவரும் இணைந்து கண்காணித்து வருகிறோம். பொதுத்தேர்வுக்கு தயாராகி விடுவார்கள் என நம்பிக்கை தெரிவித்தார்.
மேலும் காலாவதியான குளிர்பானம் குறித்து கேட்டதற்கு, காலாவதியான குளிர்பானம் என்பது குறித்து உணவு பாதுகாப்பு துறையினர் தான் தெரிவிக்க வேண்டும் என தெரிவித்தார்.






