என் மலர்
இந்தியா
- பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் நீதிபதி வீட்டில் பணம் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக கேள்வி எழுப்பின.
- கர்நாடகா மாநிலத்தில் முஸ்லிம்களுக்கு அரசு ஒப்பந்தத்தில் 4 சதவீதம் ஒதுக்கீடு தொடர்பாக பாஜக எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர்.
அரசு ஒப்பந்தத்தில் முஸ்லிம்களுக்கு 4 சதவீதம் ஒதுக்கீடு வழங்கும் வகையில் கர்நாடகா அரசு சட்டத்திருத்தம் கொண்டு வந்துள்ளது. அதேவேளையில் டெல்லி நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் சர்மா வீட்டில் கோடிக்கணக்கில் பணம் சிக்கியது பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்று பாராளுமன்ற மாநிலங்களவை கூடியதும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள், நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் பணம் சிக்கியது தொடர்பாக கேள்வி எழுப்பியது. அதேவேளையில் கர்நாடகா மாநில அரசும், துணை முதல்வர் டி.கே. சிவக்குமாரும் அரசு ஒப்பந்தங்களில் முஸ்லிம்களுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு வழங்க முடிவு செய்துள்ளது தொடர்பாக கேள்வி எழுப்பினர்.
இதனைத்தொடர்ந்து அவையை நடத்த முடியாத அளவிற்கு கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. இதனால் அவை ஒத்திவைக்கப்பட்டது. அதேபோன்று மக்களவையும் ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில் பாஜக பொய்யான பிரச்சினையால் பாராளுமன்றத்தை முடக்க வந்துள்ளது என காங்கிரஸ் கட்சி பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில் "இன்று பாராளுமன்றத்தை ஒத்திவைக்க பாஜக முற்றிலும் போலியான பிரச்சனையுடன் வந்தது. இதனால் மிகவும் முக்கியமான பிரச்சினையான நீதிபதி யஷ்வந்த் வர்மா பணம் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக விவாதம் நடைபெற முடியாமல் போனது" எனத் தெரிவித்துள்ளார்.
பிரியங்கா காந்தி "பாஜக அவையை நடத்த விடக்கூடாது என்ற மனநிலையில் இருந்ததாக தெரிகிறது. அவர்கள் அவையை நடத்த விரும்பவில்லை. இன்றோடு பல நாட்கள் இதுபோன்று அமளியால் பாதிக்கப்பட்டுள்ளது. அவர்கள் கூச்சல் குழப்பத்தை ஏற்படுத்த சாக்குபோக்கு அல்லது வேறு ஏதாவது காரணத்தை கண்டுபிடிக்கிறார்கள்" என்றார்.
"விரக்தியடைந்த பாஜக, அதன் மாநில மற்றும் மத்தியத் தலைமை மற்றும் அதன் மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு ஆகியோர் காங்கிரஸ் கட்சியையும் என்னையும் அவதூறு செய்ய என் மீது பொய்யான அறிக்கைகளைச் சுமத்தி வெட்கக்கேடான மற்றும் அப்பட்டமான பொய்களை கூறி வருகின்றனர்" என டி.கே. சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
- விமானத்தில் பயணம் செய்த பயணிகளின் உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
- சந்தேகத்திற்கு இடமான வகையில் வந்த பயணி ஒருவரிடம் தீவிர சோதனை செய்தனர்.
திருச்சி விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் அதிக அளவில் தங்கம் கடத்தப்படுவதும், அவற்றை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்வதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் நேற்று மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து ஏர் ஏசியா விமானம் திருச்சி வந்தது.
இந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளின் உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் வந்த பயணி ஒருவரிடம் தீவிர சோதனை செய்தனர்.
இதில் அந்த பயணி தனது உடைமையில் மறைத்து வைத்திருந்த ரூ.5 கோடி மதிப்பிலான 5 கிலோ ஹைட்ரோபோனிக் போதைப்பொருளை கடத்தி வந்தது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து போதைப்பொருளை பறிமுதல் செய்த அதிகாரிகள், அந்த பயணியிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
அவர் யார்? போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் அவருக்கு உள்ள தொடர்பு? இந்தியாவில் அவற்றை எங்கெங்கு சப்ளை செய்ய திட்டமிட்டிருந்தார் என பல கோணங்களில் கிடுக்குப்பிடி விசாரணை நடக்கிறது.
ஏற்கனவே கடந்த 1-ந்தேதி பாங்காக்கில் இருந்து மலேசியா வழியாக திருச்சிக்கு வட்ந்ஹ விமானத்தில் பெண் பயணியிடம் இருந்து ரூ.1 கோடி மதிப்பிலான போதைப்பொருளை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர்.
அந்த பெண் பயணியை அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தினர். இந்த பரபரப்பு அடங்குவதற்குள் ரூ.5 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பிடிபட்டது விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பும் குறைவதுமாக இருந்து வருகிறது.
- நீர்வரத்து காரணமாக ஒகேனக்கல்லில் மெயின் அருவி, சினி அருவி ஆகிய அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி செல்கிறது.
ஒகேனக்கல்:
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து நேற்று வரை வினாடிக்கு 1500 கன அடியாக நீடித்து வந்த நிலையில் இன்று வினாடிக்கு 2000 கனஅடியாக அதிகரித்துள்ளது.
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்வதாலும் கர்நாடகா அணைகளில் இருந்து திறக்கப்படும் நீரால் காவிரி ஆற்றில் தண்ணீர் வருகின்றன.
கர்நாடகா அணைகளில் இருந்து அவ்வப்போது நீர்வரத்து வெளியேற்றப்படுவதால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பும் குறைவதுமாக இருந்து வருகிறது.
இந்த நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் தமிழக-கர்நாடகா எல்லையான பிலிகுண்டுலு வழியாக தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 1500 கன அடியாக இருந்த நிலையில் தற்போது இந்த நீர்வரத்து மேலும் அதிகரித்து வினாடிக்கு 2000 கனஅடியாக அதிகரித்து உள்ளது.
இந்த நீர்வரத்து காரணமாக ஒகேனக்கல்லில் மெயின் அருவி, சினி அருவி ஆகிய அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி செல்கிறது.
- அமைச்சர் துரைமுருகன் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இடையே காரசார விவாதம் நடைபெற்றது.
- வேண்டிய நீரை பெறுவதற்கான வழியைத்தான் கூறுகிறார் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
சென்னை:
தமிழக சட்டசபையில் நீர்வளத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் இன்று நடைபெற்றது. அப்போது தொகுதி மறுசீரமைப்பு கூட்டுக்குழு கூட்டத்தை சுட்டிக்காட்டி எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இடையே காரசார விவாதம் நடைபெற்றது. அதன் விவரம் வருமாறு:-
அண்டை மாநில முதல்வர்களுடன் தமிழகத்திற்கான பிரச்சனையை பேசித் தீர்க்க வேண்டும் என்று ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.
நல்ல நட்புறவை பயன்படுத்தி கேரளா, கர்நாடகா, ஆந்திராவிடம் இருந்து நமக்கு கிடைக்க வேண்டிய நீரை பெற வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.
இதற்கிடையே, அனைத்துக் கட்சி கூட்டத்தில் அ.தி.மு.க.வும் கலந்து கொண்ட நிலையில் குற்றச்சாட்டுகள் வேண்டாம் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.
அதற்கு, நீங்கள் முதலமைச்சராக இருந்தபோது, அண்டை மாநில முதல்வர் என்ன விரோதிகளா? என்று அமைச்சர் துரைமுருகன் கேள்வி எழுப்பினார்.
நான் முதல்வராக இருந்தபோது கேரள முதல்வருடன் பேசினேன், அதன் தொடர்ச்சியாக தான் சொல்கிறேன் என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.
அதற்கு, நல்லெண்ண அடிப்படையில் தான் ஆலோசனையை சொல்கிறேன். குறை எதுவும் சொல்ல விரும்பவில்லை. ஆர்.பி. உதயகுமார் குற்றம்சாட்டவில்லை, வேண்டிய நீரை பெறுவதற்கான வழியைத்தான் கூறுகிறார் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
இவ்வாறு விவாதம் நடைபெற்றது.
- பெரிய பெரிய பெட்டிகளில் கட்டு கட்டாக பணம் இருந்தது.
- ரூ.37 கோடி வரை பணம் இருந்திருக்கலாம்.
டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதியாக இருப்பவர் யஷ்வந்த் வர்மா. கடந்த 16ம் தேதி ஹோலி பண்டிகையின் போது இவரது வீட்டின் ஒரு அறையில் தீப்பிடித்தது. இதுபற்றி தகவல் அறிந்ததும் தீயணைப்பு துறையினறர் அவரது வீட்டுக்கு சென்று தீயை அணைத்தனர்.
இதையடுத்து தீ பரவிய இடங்களில் தீயணைப்புத் துறையினர் ஆய்வு செய்தனர். அப்போது நீதிபதி வீட்டின் அருகே உள்ள ஒரு அறையில் பாதி எரிந்த நிலையில் ரூபாய் நோட்டு கட்டுகள் சிதறி கிடந்தன. தீப்பிடிக்காத பெரிய பெரிய பெட்டிகளில் கட்டு கட்டாக பணம் இருந்தது.
இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் அந்த பணத்தை கைப்பற்றி ஆய்வு செய்தனர். அந்த அறைக்குள் பெட்டிகளில் கட்டு கட்டாக ரூ.15 கோடி வரை பணம் இருந்ததாக தகவல் வெளியானது. ஆனால் ரூ.37 கோடி வரை பணம் இருந்து இருக்கலாம் என்றும் மற்றொரு தகவல் வெளியானது.
இதையடுத்து டெல்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இதுபற்றி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு தகவல் தெரிவித்தார். அதன் அடிப்படையில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா விசாரணைக்கு உத்தரவிட்டார். அதன் பேரில் தீவிர விசாரணை நடந்து வருகிறது.
இதற்கிடையே கட்டு கட்டாக பணம் சிக்கிய விவகாரத்துக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. அது என்னுடைய பணம் அல்ல என்று நீதிபதி யஷ்வந்த் வர்மா தெரிவித்தார். மேலும் பணம் கண்டெடுக்கப்பட்ட அறை தன்னுடைய வீட்டின் ஒரு பகுதி இல்லை என்றும் அவர் எழுத்து மூலம் விளக்கம் அளித்துள்ளார்.
நீதிபதிகள் குழு என்றாலும் இந்த விவகாரத்தில் உண்மை கண்டறிய 4 மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழு விசாரணை முடிவில் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் குற்றம் சாட்டப்பட்டுள்ள நீதிபதி யஷ்வந்த் வர்மா பயன்படுத்தும் செல்போனை ஆய்வு செய்ய விசாரணை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். அவர் வீட்டில் தீப்பிடித்த தினத்தன்று அவர் யார்-யாருடன் பேசி இருக்கிறார் என்பதை கண்டறிய பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது.
அதுபோல அவரது செல்போனுக்கு வந்த அழைப்புகளையும் ஆய்வு செய்ய திட்டமிட்டுள்ளனர். அதுவரை செல்போன் தகவல்கள் எதையும் நீதிபதி யஷ்வந்த் வர்மா அழிக்கவோ அல்லது யாருக்கும் அனுப்பவோ கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், மறு உத்தரவு வரும்வரை பணியாற்றக்கூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.வீட்டில் கட்டு கட்டாக பணம் சிக்கிய விவகாரம் - நீதிபதிக்கு கிடுக்குப்பிடி
- தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை பொதுவாக இன்று மற்றும் நாளை வரை இயல்பை ஒட்டி இருக்கக்கூடும்.
- சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
சென்னை :
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழகத்தில் இன்று மற்றும் நாளை அதிகபட்ச வெப்பநிலையில் பொதுவாக பெரிய மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு.
தமிழகத்தில் 27-ந்தேதி முதல் 29-ந்தேதி வரை ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக 2-3° செல்சியஸ் உயரக்கூடும்.
இயல்பு நிலையிலிருந்து அதிகபட்ச வெப்ப அளவின் வேறுபாடு:
தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை பொதுவாக இன்று மற்றும் நாளை வரை இயல்பை ஒட்டி இருக்கக்கூடும்.
26-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் இயல்பை விட 2-3° செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும்.
27-ந்தேதி மற்றும் 28-ந்தேதி வரை அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும், குறைந்தபட்ச வெப்பநிலை அநேக இடங்களில் இயல்பை விட 2-3° செல்சியஸ் அதிகமாகவும் இருக்கக்கூடிய நிலையில், தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் அசௌகரியம் ஏற்படலாம்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35-36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
- நீர் நிலைகளை தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
- ரூ.120 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ள நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
சென்னை:
சட்டசபையில் நீர்வளத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் இன்று நடைபெற்றது. இதையொட்டி அமைச்சர் துரைமுருகன் இத்துறையின் கொள்கை விளக்க குறிப்புகளை தாக்கல் செய்தார். அதில் கூறியிருப்பதாவது:-
காவிரி டெல்டா பகுதிகளான சேலம், நாமக்கல், ஈரோடு, திருச்சி, கரூர், அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கடலூர் ஆகிய 13 டெல்டா மாவட்டங்கள், அதேபோல், மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் நீர் நிலைகளை தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
அதேபோல், சென்னை, திருச்சி, மதுரை மற்றும் கோயம்புத்தூர் மண்டலங்களின் கட்டுப்பாட்டில் உள்ள ஆறுகள், கால்வாய்கள் மற்றும் வடிகால்களில் தூர்வாரும் பணிகளை முன்னுரிமை அடிப்படையில் ரூ.120 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ள நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- மேட்லி சாலை சந்திப்புக்கு அருகே கட்டப்பட்ட புதிய மேம்பாலம், உஸ்மான் சாலை மேம்பாலத்தை விட உயரமாக இருந்தது.
- தி.நகர் மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டதும், சி.ஐ.டி. நகரில் உள்ள அண்ணாசாலை பகுதியில் இருந்து பனகல் பூங்காவிற்கு நேரடியாக செல்ல முடியும்
சென்னை:
சென்னை தி.நகர் மற்றும் ஆர்.கே.நகர் பகுதிகளில் மேம்பாலங்கள் கட்டப்பட்டு வருகின்றன. இந்த மேம்பாலங்கள் கடந்த 2 வருடங்களாக கட்டப்பட்டு வருகின்றன. இந்த 2 மேம்பாலங்களும் மே மாதம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
சென்னை சி.ஐ.டி. நகரில் தற்போது 1.2 கி.மீ நீளமுள்ள புதிய மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. மேலும் தி.நகர் ரங்கநாதன் தெரு அருகே உஸ்மான் சாலையில் போக்குவரத்து நெரிசலை சரி செய்யும் வகையில் சி.ஐ.டி. நகர் மேம்பாலத்தை, உஸ்மான் சாலை மேம்பாலத்துடன் இணைக்கும் பணி தொடங்கியுள்ளது. இதற்காக உஸ்மான் சாலையின் வடக்கு பகுதியும் விரிவாக்கம் செய்யப்படுகிறது. 2 மேம்பாலங்களும் ஒரே அகலத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக இந்த பணி நடைபெற்று வருகிறது.
இந்த மேம்பாலத்தை கடந்த டிசம்பர் மாதம் முடிக்க திட்டமிடப்பட்டது. ஆனால் சில காரணங்களால் பணிகள் தாமதம் ஆனது. மேட்லி சாலை சந்திப்புக்கு அருகே கட்டப்பட்ட புதிய மேம்பாலம், உஸ்மான் சாலை மேம்பாலத்தை விட உயரமாக இருந்தது. இதை சரி செய்ய சி.ஐ.டி. நகர் மேம்பாலம், ரங்கநாதன் தெருவுக்கு முன்பே முடிவடையும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் வாகனங்கள் தரை மட்டத்தில் 100 மீட்டர் தூரம் சென்று, பிறகு புதிய மேம்பாலத்தில் ஏற வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்து உள்ளனர்.
மேலும் பனகல் பூங்கா நோக்கி செல்லும் பொதுமக்களுக்கு ரங்கநாதன் தெருவுக்கு அருகில் ஒரு வெளியேறும் வழியும் இருக்கும். மேலும் சர்வீஸ் சாலையை உருவாக்க அருகில் உள்ள நிலத்தை கையகப்படுத்தும் பணியிலும் அதிகாரிகள் ஈடுபட்டு வருகிறார்கள். தி.நகர் மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டதும், சி.ஐ.டி. நகரில் உள்ள அண்ணா
சாலை பகுதியில் இருந்து பனகல் பூங்காவிற்கு நேரடியாக செல்ல முடியும்.
இதேபோல் சென்னை ஆர்.கே.நகரில் கட்டப்பட்டு வரும் மேம்பால பணிகளும் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. எனவே தி.நகர் மற்றும் ஆர்.கே.நகர் மேம்பாலங்கள் மே மாதம் திறக்கப்பட உள்ளன. இதை அமைச்சர் கே.என்.நேரு சட்டசபையிலும் அறிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
- இந்தியாவின் வடமேற்கு பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் வெப்ப தாக்கம் 5 டிகிரி செல்சியஸ் வரை இருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- தென் மாநிலங்களிலும் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்ப தாக்கம் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
சென்னை:
கோடை வெயில் உக்கிரமாக தொடங்கி இருக்கும் நிலையில் இந்த ஆண்டு கோடை காலத்தில் பாதிப்பு சற்று அதிகமாக இருக்கும் என்று ஏற்கனவே வானிலை ஆய்வு மையங்கள் அறிவித்து உள்ளன.
குறிப்பாக இந்த தடவை கோடை காலத்தில் வெப்ப அலைகள் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. மதியம் நேரத்தில் உடலை சுட்டெரிக்கும் வகையில் வெப்ப அலைகள் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இன்று முதல் அடுத்த 3 அல்லது 4 நாட்களுக்கு நாடு முழுவதும் வெப்பத்தின் அளவு மிக அதிகமாக இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது. நாட்டில் சராசரியாக 2 டிகிரி செல்சியஸ் முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்ப தாக்கம் அதிகரித்து இருக்கும் என்று வானிலை ஆய்வு மைய நிபுணர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
இந்தியாவின் வடமேற்கு பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் வெப்ப தாக்கம் 5 டிகிரி செல்சியஸ் வரை இருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் அதிக வெப்ப தாக்கம் இருக்கலாம் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென் மாநிலங்களிலும் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்ப தாக்கம் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இந்த வெப்ப தாக்கத்தின் பாதிப்பை இன்று மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் மக்கள் உணர்ந்தனர்.
தமிழகத்தில் வேலூர், நாமக்கல், கரூர், திருச்சி மாவட்டங்களில் வெப்ப தாக்கம் கணிசமாக அதிகரிக்கும் என்று கூறப்பட்டு உள்ளது. சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருந்தாலும் தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் வெப்பம் அதிகமாக இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையமும் தெரிவித்துள்ளது.
சென்னை உள்பட வடமாவட்டங்களில் இன்று முதல் அடுத்த 3 நாட்களுக்கு மதியம் நேரத்தில் வெப்ப காற்று வீச வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. எனவே மதியம் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
அத்தியவாசிய பணிகளுக்கு வெளியில் செல்பவர்கள் குடை, தொப்பி போன்றவற்றை பயன்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. வயதானவர்கள் வெளியில் வருவதை தவிர்ப்பது நல்லது என்றும் வானிலை இலாகா தெரிவித்துள்ளது.
- சம்பவத்தை மாணவர்களில் ஒருவரே வீடியோவாக எடுத்து வெளியே பரப்பி விட்டுள்ளார்.
- வீடியோவை பார்த்த கல்லூரி நிர்வாகம் அதிர்ச்சி அடைந்தது.
கோவை:
கோவையில் உள்ள தனியார் கல்லூரி விடுதியில் மாணவர் ஒருவரை சக மாணவர்கள் 10-க்கும் மேற்பட்டோர் சூழ்ந்து நின்று தாக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தாக்கப்பட்ட மாணவர் சென்னை எண்ணூரைச் சேர்ந்தவர். 21 வயதான அவர் அந்த கல்லூரியில் முதுகலை கிரிமினாலஜி முதலாம் ஆண்டு படித்து வருகிறார். அவரை தாக்கியவர்கள் அதே விடுதியில் தங்கியிருக்கும் முதலாமாண்டு என்ஜினீயரிங் மாணவர்கள் ஆவர்.
என்ஜினீயரிங் மாணவர்கள் அறையில் அடிக்கடி பணம் திருட்டுப் போய் உள்ளது. ஆயிரம், ரூ.2 ஆயிரம் என தொடங்கி மொத்தம் ரூ.22 ஆயிரம் திருடு போய் இருக்கிறது.
இந்த பணத்தை முதுகலை கிரிமினாலஜி படிக்கும் மாணவர் திருடி இருக்கலாம் என என்ஜினீயரிங் மாணவர்கள் சந்தேகப்பட்டுள்ளனர். இதனால் சம்பவத்தன்று இரவு விடுதியில் இருந்த அந்த மாணவரை என்ஜினீயரிங் மாணவர்கள் சேர்ந்து சுற்றிவளைத்து தாக்கி உள்ளனர்.
சட்டை அணியாமல் இருந்த அந்த மாணவரை முட்டிப்போட வைத்தும், கைகளை மேலே தூக்கச் சொல்லியும் தாக்கி இருக்கிறார்கள். இனி இதுபோல் செய்ய மாட்டேன் என கூறி மன்னிப்பு கேள் எனவும் கூறி சரமாரியாக தாக்கினர். அந்த மாணவர் கண்ணீர் விட்டு கெஞ்சி கதறி அழுதபிறகும் அவரை விடாமல் அவர்கள் அடித்துள்ளனர்.
இந்த சம்பவத்தை மாணவர்களில் ஒருவரே வீடியோவாக எடுத்து வெளியே பரப்பி விட்டுள்ளார். இதுபற்றி பாதிக்கப்பட்ட மாணவர் கல்லூரி நிர்வாகத்திடம் புகார் செய்தார். வீடியோவை பார்த்த கல்லூரி நிர்வாகம் அதிர்ச்சி அடைந்தது.
கல்லூரி நிர்வாகம் விசாரணை நடத்தியதில் இந்த சம்பவத்தில் என்ஜினீயரிங் மாணவர்கள் 13 பேர் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 13 பேரையும் கல்லூரி நிர்வாகம் சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டது. 13 பேரும் இன்று பெற்றோருடன் கல்லூரிக்கு வர வேண்டும் எனவும் உத்தரவிட்டது.
அதன்படி இன்று மாணவர்கள், பெற்றோருடன் கல்லூரி நிர்வாகத்தினர் முன்பு ஆஜராகினர். பெற்றோர் முன்னிலையில் சம்பவம் தொடர்பாக கல்லூரி நிர்வாகத்தினர் விசாரணை நடத்தினர். பின்னர் மாணவர்களிடம் அவர்கள் விளக்க கடிதம் எழுதி வாங்கிக் கொண்டனர். இன்று 11 மாணவர்கள் பெற்றோரை அழைத்து வந்து விளக்கம் அளித்து மன்னிப்பு கோரினர். 2 மாணவர்களின் பெற்றோர் வரவில்லை. அவர்கள் நாளை வருவதாக தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே கல்லூரி தரப்பில் விடுதி வார்டன் ஒரு வீடியோ பதிவு வெளியிட்டுள்ளார். அதில் இந்த சம்பவம் ராகிங் அல்ல. பணம் எடுத்ததாக சந்தேகப்பட்டு தாக்கி உள்ளனர். சம்பவத்தில் ஈடுபட்ட மாணவர்கள் சஸ்பெண்டு செய்யப்பட்டு உள்ளனர் என கூறி உள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக கே.ஜி.சாவடி போலீசாரும் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். பாதிக்கப்பட்ட மாணவர், காயம் அடைந்துள்ளதால் சொந்த ஊரான சென்னைக்கு புறப்பட்டுச் சென்றுள்ளார். அவர் போலீசில் புகார் அளிக்கும்பட்சத்தில் சம்பந்தப்பட்ட மாணவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கெதிரான போட்டியில் ஆர்சிபி வெற்றி பெற்றது.
- பேருந்து ஓட்டுநர் ஒருவர் செல்போனில் ஐபிஎல் பார்த்துக்கொண்டே பேருந்தை இயக்கியுள்ளார்.
ஐபிஎல் 2025 சீசன் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் கலைநிகழ்ச்சியுடன் கோலாகலமாக தொடங்கியது. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கெதிராக ஆர்சிபி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் எடுத்தது. இதையடுத்து களமிறங்கிய ஆர்சிபி அணி 16.2 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுக்கு இழந்து 177 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
இந்நிலையில், மகாராஷ்டிராவில் கே.கே.ஆர்.- ஆர்.சி.பி. போட்டியை பேருந்து ஓட்டுநர் ஒருவர் செல்போனில் பார்த்துக்கொண்டே பேருந்தை இயக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஐ.பி.எல் போட்டியை பார்த்துக்கொண்டே பேருந்தை இயக்கிய ஓட்டுநரின் செயலை பயணி ஒருவர் வீடியோ எடுத்து இணையத்தில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் முதல்வர் தேவேந்திர பட்நாவிசை அவர் டேக் செய்திருந்தார். இதனையடுத்து பேருந்து ஓட்டுநர் பணிநீக்கம் செய்யப்பட்டார்.
- 40 சுங்கச்சாவடிகளின் சுங்கக்கட்டணம் வரும் ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் உயர்த்தப்படவுள்ளது.
- ஏப்ரல் மாதம் முதல் உயர்த்தப்படவுள்ள சுங்கக்கட்டணத்தின் அளவு குறைந்தபட்சம் ரூ.5 முதல் ரூ.75 வரை இருக்கும் என்று கூறப்படுகிறது.
சென்னை:
பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் ஆண்டுக்கு ஒருமுறை, இரு கட்டங்களாக, சுங்கக்கட்டணம் உயர்த்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் நடப்பாண்டில் முதற்கட்டமாக தமிழ்நாட்டில் உள்ள 78 சுங்கச்சாவடிகளில், வானகரம், செங்கல்பட்டு பரனூர், திண்டிவனம் ஆத்தூர், சூரப்பட்டு, பட்டறைப்பெரும்புதூர் உள்ளிட்ட 40 சுங்கச்சாவடிகளின் சுங்கக்கட்டணம் வரும் ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் உயர்த்தப்படவுள்ளது. மீதமுள்ள சுங்கச்சாவடிகளின் சுங்கக்கட்டணம் வரும் செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் உயர்த்தப்படும். ஏப்ரல் மாதம் முதல் உயர்த்தப்படவுள்ள சுங்கக்கட்டணத்தின் அளவு குறைந்தபட்சம் ரூ.5 முதல் ரூ.75 வரை இருக்கும் என்று கூறப்படுகிறது. இது நியாயமற்றதாகும்.
டெல்லியில் கடந்த வாரம் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய மத்திய நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி, ஏப்ரல் ஒன்றாம் தேதிக்குள் புதிய சுங்கக்கட்டணக் கொள்கை அறிவிக்கப்படும் என்றும், அதில் சாலைகளை பயன்படுத்துவோருக்கு சலுகைகள் அறிவிக்கப்படும் என்றும் கூறியிருந்தார்.
புதிய சுங்கக் கட்டணக் கொள்கை அடுத்த ஒரு வாரத்தில் அறிவிக்கப்படவுள்ள நிலையில், அதில் இடம் பெற்றுள்ள அம்சங்களை அறிந்து கொண்டு சுங்கக்கட்டண மாற்றத்தை செயல்படுத்துவது தான் சரியாக இருக்கும். புதிய சுங்கக்கட்டண கொள்கையை மத்திய அரசு அறிவிக்கும் வரை சுங்கக்கட்டண உயர்வு அறிவிப்பை தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் நிறுத்தி வைக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.






